Sunday, July 15, 2018

உலகமெங்கும் தமிழுக்குத் திருவிழாக்கள்





வணக்கம்.

2018ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்து மறுபாதி ஆண்டில் பயணத்தைத் தொடர்கின்றோம். உலகளாவிய தமிழர்களின் செயல்பாடுகளாகத் தமிழ் ஆய்வுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கடந்த சில வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகளாக இரண்டு நிகழ்வுகளைக் காண்கின்றோம்.


முதலில், இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க சியாம் ரீப் அங்கோர் பகுதியில் முதலாம் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. இங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களா என வந்தோரை வியப்பில் ஆழ்த்தி, வியட்நாம், பாப்புவா நியூகினி, பிலிப்பைன்ஸ், பர்மா, தாய்லாந்து, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் கம்போடிய அரசின் பிரதிநிதிகளும் கம்போடியப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஆண்டுதோறும் தமிழர் ஒன்று கூடும் ஒரு ஆய்வுத்தளத்தை அமைக்கும் முயற்சியாக இந்த மாநாடு திகழ்ந்தது.

அடுத்த நிகழ்வாக நாம் காண்பது இந்த ஆண்டின் மாபெரும் தமிழர் திருவிழாவாகக் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழா. ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்ட இந்த மாபெரும் விழா மூன்று நாட்கள் வர்த்தகம், தமிழர் வாழ்வியல், ஆய்வு, வரலாறு, கலை எனப் பல பரிமாணங்களில் பல்வேறு அரங்குகளில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டு நிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. முதல் நாள் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் சான்றாக இது அமைந்தது.

மாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் எனத் தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, பாஸ்டன், ஹூஸ்டன் எனத் தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. உலகின் பல பாகங்களில் திடமான தமிழ் ஆய்வுகள் தொடர இது வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை இது உறுதி செய்தது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் ஒரு அங்கமாக இவ்விழாவில் அமைந்தது. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் எனப் பொறுப்பாளர் பேரா.மருதநாயகம் கூறியது வரவேற்கத்தக்க ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு அரசியல் தலைமையை அழைத்தால் தான் மாநாடு சிறக்கும் என்ற பார்வையை உடைத்து, இனி தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் பெறுக வேண்டும்.

நெசவாளர்களின் மனிதக்குலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள், தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம், எனத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்புக்களுக்கு பேரவை வாய்ப்பு வழங்கியிருந்தது.

தமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த முயற்சிகள் மேன்மேலும் வளர வேண்டும்; தமிழின் வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி






படம் உதவி: FeTNA FACEBOOK PAGE

No comments:

Post a Comment