—— முனைவர் ச.கண்மணி கணேசன்.
இன்று ஜூலை 15...கல்வித் திருநாள் .
பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள்.
என் பிள்ளைமைப் பருவத்தில் ....
அன்று நான் படித்த பள்ளியில் ஆண்டு விழா.
முத்து வெள்ளையும் ரோஸ் பவுடரும் கலந்து கிலிசெரின் உடன்சேர்த்து முகமெல்லாம் பூசிவிட்டு; கண்மைப்பூச்சு ,உதட்டுச் சாயம் எல்லாம் தடவிவிட்டு ஆசிரியர் சென்றுவிட்டார். "யாரும் வெளியே வரக்கூடாது." இந்த ஆணையை மீற அந்தக்காலம் எங்களில் யாருக்கும் துணிவு கிடையாது.
பூட்டிய கதவுகளுக்குள் இருந்துகொண்டே தான் எங்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம். கிரீன் ரூமின் ஜன்னல் வழியாக விழா மைதானத்தைப் பார்த்தோம். அந்தக் கருத்த மனிதருடன் ஒரே ஒரு காக்கிச்சட்டை; கையில் கோலுடன். பக்கத்தில் பள்ளிப் பெரிய டீச்சர் ,நிர்வாக உறுப்பினர்கள் மூன்று பேர். புதிதாகக் கட்டிய விடுதியைப் பார்வையிட்டு வரும் அவர்களுக்குப் பின்னால் ..........
கறுப்புப் பூனைப் படையோ ;போலீஸ் பாதுகாப்போ எதுவுமில்லை.
மலர்க் கிரீடம் இல்லை
மேடை அலங்காரம் இல்லை
கட் அவுட் தட்டிகள் எதுவும் இல்லை.
பறக்கும் பலூனில் பெயர் போடவில்லை
அலங்கார வளைவு ஒன்று கூடக் காணவில்லை.
நடக்கும் பாதையில் பூமெத்தையும் போடவில்லை .
பாதையில் வண்டி வாகனம் எதுவும் தடுக்கப்படவில்லை .
வெள்ளைக்கார்களை வேண்டிக்கேட்டு சாரிசரியாய் முன்னும் பின்னும் ஓடவிட்டுச் சாதிக்கவும் இல்லை.
பாதுகாப்பு கேட்டு ஸ்டண்ட் செய்யாத அரசியல்வாதி
பதவி ஏற்றவுடன் ஃ பாரின் மருத்துவமனைக்குப் பறக்காதவர்
இருண்டு கிடந்த கிராமங்களில் எல்லாம் ஒளி விளக்கு ஏற்றியவர்.
உள்ளக்கோட்டம் அற்ற உண்மைத் தலைவர்.
தன்னலம் பேணாத தருமத்தின் காவலர்
கண்ணியம் மாறாத கடமை வீரர்
காந்திவழி நின்ற கதராடை மனிதர்
மதிய உணவு என்னும் மகத்தான திட்டத்தை மாணவர் உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
ஓராசிரியர் பள்ளியேனும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒருங்கு திறந்து வைத்தவர்
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இளைய சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்று பள்ளிச்சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்த செயல்வீரர்.
இவர் இருந்தபோதும் சரி; இறந்த போதும் சரி; இவர் குடும்பத்தில் சொத்துச் சண்டையே இல்லை. ஏனென்றால் பினாமியே இல்லை.
இப்படி ஒரு தலைவர் இருந்தார் என்று சொன்னால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் யாரும் நம்புவார்களா?ஐயம் தான்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. ஆனால் எல்லாப் பள்ளிகளும் பாடம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. விடுமுறை விட்டால் தான் கொண்டாட்டமென்ற நிலை மாறி வகுப்பு நடத்திக் கொண்டாடுகின்றனர். வரவேற்கத் தகுந்த மனமாற்றம்.
நீ பிறந்த வீடும் சரி; அந்தத் தெருவும் சரி; இன்றும் என்றும் அமைதியில் மூழ்கித்தான் மூச்சடக்கி இருக்கிறது.
ஆண்டுவிழா மேடையில் நீ அமர்ந்த அந்த ராஜா சேர் ;அதற்கு நீல நிறத்தில் ஒரு சட்டை தைத்து கைகள், சாய்மானம், இருக்கை எல்லாம் மூடித்தான் பக்குவமாக வைத்து இருந்தார் தையல் டீச்சர். எங்கள் குழந்தைப்பருவத்து ஆசை ....ஆசிரியர் பார்க்காத நேரத்தில் ஒரு நொடி அந்த சேரில் அமர்ந்து எழுந்து பெரிய்ய்ய்ய சாதனை புரிந்த மகிழ்ச்சியில் பூரித்து மகிழ்ந்தோம்.
________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)
No comments:
Post a Comment