Tuesday, March 29, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்


-- முனைவர் க. சுபாஷிணி 
 

அறிமுகம்

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் பௌத்த சமயம் பரப்பும் பணியில் முக்கியப் பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானதாகும்.  சீனா, ஜப்பான் கொரியா, என நீண்ட தூரம் தமிழ் நிலத்திலிருந்து பயணித்திருக்கின்றார்கள்.  இத்தகைய பயணங்கள் கிழக்காசிய நாடுகளிலும் தூரக் கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தம் ஆழ வேரூன்றி வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தது.

ஸ்ரீவிஜயா போன்ற மிகப்பெரிய பேரரசு, மிகப்பெரிய பௌத்த அடிப்படை கொண்ட நாடாக இருந்த இந்தோனீசியா கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக இஸ்லாமிய மதத்தை உள்வாங்கிக்கொண்டு இஸ்லாமிய நாடாக மாறத் தொடங்கியது. மலாயா கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் இதே அரசியல் சமய மாற்றத்தை அடையத் தொடங்கி இவை இரண்டும் இன்று கிழக்காசிய நாடுகளில் இஸ்லாமிய மதத்தை அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. ஏனைய கிழக்காசிய,  தூரக்கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து பௌத்த சமயத்தைத் தங்கள் அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன.


மலேசியாவின் பல பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கெடா மாநிலத்தில் ஏராளமான பௌத்த விகாரைகள் இருக்கின்றன என்பதை எனது இந்தப் பயணத்தில் தான் நான் அறிந்து கொண்டேன். பண்டைய பௌத்த சமய ஆதிக்கத்தின் தொடர்ச்சி முழுமையாக அழிந்து விடாமல் பலபகுதிகளில் அதிலும் குறிப்பான கெடா மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

கெடா மாநிலத்தின் சிக், ஜெனியாங் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே உள்ள பௌத்த விகாரைகளுக்குச் சென்று வருவோம் என புறப்பட்டபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறக்குறைய 12 பௌத்த விகாரைகளை நான் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.  பெரும்பாலானவை தாய்லாந்து பௌத்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளாக அமைந்திருக்கின்றன. 


வாட் காலாய் பௌத்த விகாரை (Wat Kalai):


கெடா மாநிலத்தின் ஜெனியாங் பகுதியில் இருக்கின்றது வாட் காலாய் (Wat Kalai) என்ற பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை. செழிப்பான வளமான மலைப் பகுதியில் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வகையில் அமைந்த பகுதியில் இந்தப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. சாலையிலிருந்து மிக எளிதாக இந்த விகாரையை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் பௌத்த விகாரைக்குப் பின்புறம் காட்டாறு ஒன்று மிக வேகமான நீர் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் நம் மனதைக் கவர்கிறது. மிகப்பெரிய வளாகத்தில் பல்வேறு சிறு சிறு சன்னதிகளாக புத்தரின் வடிவங்கள், தாய்லாந்து பௌத்த சின்னங்கள், போதிசத்துவர் சிற்பம், தியான மண்டபம், பிக்குகள் தங்கும் வீடு என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


இக்கோயிலின் மிகச் சிறப்பான ஒரு சிற்பம் என்றால் அது 21 மீட்டர் உயரம் கொண்ட புத்தரின் சிலை எனலாம். புத்தரின் சிலைக்குக் கீழ் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அதனுள் சிறுசிறு பெட்டிகள் போல் அமைக்கப்பட்ட அலமாரிக்குள் இறந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் சாம்பல் குடுவைகளில் வைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.  இக்கோயில் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த பழைய கட்டுமானத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சில ஓரிரு இடங்களில் தென்படுகின்றன.

ஒரு பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரது சிலை வைக்கப்பட்டு அதன் பின் பாம்புப் புற்று ஒன்று வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. சீனர்களின் வழிபாட்டில் அமைந்திருக்கக் கூடிய 12 மாதங்களுக்கான 12 விலங்குகளின் சிறிய அளவிலான சிற்பங்கள் வைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்திருக்கின்றது. தாமரைக்குளம் மீன் குளம் ஆகியவையும் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

இப்போது இருக்கின்ற கட்டுமானம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பழமையானவை என்ற தகவல் கிடைக்கின்றது. தாய்லாந்து அதாவது சயாமிய பௌத்த அடிப்படையில் அமைந்த கோயில் இது. கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் வசிக்கின்ற மக்களும் குறிப்பாக சீன, தாய்லாந்து இன மக்களும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

இந்த பௌத்த விகாரை முகவரி:
Wat Kalai
Mk Jenari, Jeniang, Gurun, Kedah


வாட் சாரோக் பாடாங் - Wat Charok Padang (Glass bottle temple):


வாட் சாரோக் பாடாங் எனப் பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை கண்ணாடி பாட்டில் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பௌத்த விகாரை தாய்லாந்து பௌத்த கட்டுமானக் கலை அமைப்புடன் அமைந்தது. இது கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் அமைந்திருக்கின்றது.  அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் நேர்த்தியாக அமைந்திருக்கும் கிராமத்துச் சாலையிலிருந்து சற்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் வழியில் இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கின்றது.


இதன்   சிறப்பு வியக்கத்தக்க வகையில் ஒன்றுள்ளது. அதாவது, இங்குள்ள ஒரு விகாரையின் கூரைப் பகுதி ஒரு லட்சம் (100,000) பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கூரை அமைப்புடன் அமைந்துள்ளது. (இதனை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்) தாய்லாந்திலும் இதேபோல கண்ணாடி பாட்டில்களில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தச் சிறிய கண்ணாடி பாட்டில் கூரை அமைப்பு கொண்ட விகாரை மட்டுமன்றி விரிவான பெரிய 2 மாடிக் கட்டிடம் ஒன்றும் அதோடு சிறிய சிறிய வழிபாட்டுப் பகுதிகளும், போதிசத்துவர் சிலையும், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உருவச் சிலைகளும் இந்த பௌத்த விகாரை உள்ள வளாகத்திற்குள் அமைந்துள்ளன.  இந்த ஆலயத்திற்கு உள்ளே மிகப் பழமையான  உடைந்த படகு ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. அதன் சிறப்பு என்ன என்ற தகவல் தெரியவில்லை.

இந்த வளாகத்திற்குள் சீன நாட்காட்டியில் இடம்பெறுகின்ற 12 விலங்குகளின் சிறிய உருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குளத்தில் ஆமைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கும் பகுதியின் முகவரி:
Kampung Charok Padang, 08200 Sik, Kedah


தம்ம ஸ்ரீ வரராம் பௌத்த விகாரை - Wat Thammasirivararam (Wat Kura/wat Ruesee Kura):


இது கெடா மாநிலத்தின் சிக் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மேலும் ஒரு பவுத்த விகாரையாகும்.  முதலில் பார்த்த இரண்டு பவுத்த விகாரைகளிலிருந்து மாறுபட்ட வகையில் இந்த பௌத்த விகாரை அமைந்துள்ளது. ஆமையின் வடிவம் கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறது. விகாரையின் உள்ளே செல்லும்போது வாசலில் இரண்டு பெரிய ஆமை உருவங்கள் நிற்கின்றன.  உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆமை உருவங்கள் பொன் வண்ணத்தால் வர்ணம் பூசப்பட்ட வகையில் காட்சி அளிக்கின்றன.

இந்த பௌத்த விகாரை கடந்த 200 ஆண்டு  காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஆயினும் இந்தப் பகுதியில் பழைய கட்டுமானங்களில் சிதிலமடைந்த பகுதிகள் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றன. பௌத்த விகாரையில் புத்தரின் சிலை என்பதைவிட ஓர் அவலோகிதரின் பொன் வண்ணச் சிலை பிரமாண்டமான வகையில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பௌத்த விகாரைகளில் தென்படும் சிறிய சிறிய பௌத்த விகாரைகள் இந்தக் கோவில் வளாகத்திலும் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அறைக்குள் இளம் வயது புத்தர் நடப்பது போன்ற அழகிய பளிங்கு நிறச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


ஆமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பௌத்த விகாரை தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது. இந்த விகாரை அமைந்திருக்கும் ஒரு பகுதியும் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது.  முற்காலத்தில் மலைகள் நிறைந்த இப்பகுதியில் தியானம் செய்வதற்காகவும் பௌத்த நெறிகளைக் கற்பதற்காகவும் பௌத்தர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக இது அமைந்திருக்கலாம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பெரிய கல்லூரி போன்ற ஒரு கட்டடம் ஒன்றும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kura
08210, Jeniang Kedah


வாட் புக்கிட் பேராக் பவுத்த விகாரை  ( Wat Bukit Perak / Samnak Ratchakhiri) :



இப்பகுதியில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்,  இது மலைப்பாங்கான ஒரு பகுதிதான். சாலையை ஒட்டியவாறு 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த பௌத்த விகாரை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.



தாய்லாந்து வகை பவுத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த பௌத்த விகாரை. இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் தாய்லாந்து மட்டுமன்றி குறிப்பாகக் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் வசிக்கின்ற சீன மக்கள் என்று அங்கு பேசிய போது அறிந்து கொண்டேன்.  வளாகம் அமைந்திருப்பது காட்டுப் பகுதி என்றாலும் சீர்படுத்தி தோட்டங்கள் உருவாக்கி அதற்குள் ஆங்காங்கே சிறிய சிறிய சன்னதி போல பௌத்த விகாரைகளை அமைத்திருக்கின்றார்கள்.


சாய்ந்து உறங்கும் நிலையில் அமைந்த புத்தரின் சிலை மற்றும் ஒரு சிறிய கோயிலில் தாரா தேவியின் சீன வடிவச் சிற்பம், ஆங்காங்கே புத்தரின் சிற்பம் மற்றும் நின்ற நிலையில் அமைந்திருக்கும் சிற்பங்கள் இங்கு அமைத்திருக்கின்றார்கள்.  உள்ளே பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் அமர்ந்து தியானம் செய்யும் வகையிலும் தியான மண்டபமும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

பௌத்த பிக்குகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஏனைய பௌத்த விகாரைகளில் இருப்பது போல யானை, புலி போன்ற வடிவங்களுடன் குரங்கின் சிற்பமும் இங்கே புத்தர் சிலைகளோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
K556, Kampung Gajah Putih, 08210 Sik, Kedah, Malaysia


வாட் விசுத்திப்ரதராம் (Wat Visuthipradittharam) பௌத்த விகாரை:



இந்த பௌத்த விகாரையின் வரலாற்றைப் பற்றி இணையத்திலும் கோவில் வளாகத்திலும் தேடிப்பார்த்தேன். ஆனால் தகவல்கள் கிட்டவில்லை. ஓர் ஆய்வுக் கட்டுரை மட்டும் கெடா மாநில பௌத்த விகாரைகளின் பட்டியலில் இந்த விகாரையின் பெயரையும் இணைத்து வழங்கியிருக்கிறது. மேலும் ஒரு கட்டுரை இந்த பௌத்த விகாரை கெடாவில் இருக்கும் அனைத்துப் பௌத்த விகாரைகளிலும் மிகப்பெரியது என்று குறிப்பிடுகிறது. விகாரையின் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ஆனால் இந்த விகாரை அமைந்திருக்கும் நிலப்பகுதியின் சுற்றளவு  நான் நேரில் சென்று பார்த்த ஏனைய விகாரைகளுடன் ஒப்பிடும்போது பள்ளி  அமைந்திருக்கும் நிலப்பகுதி அவ்வளவு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தோன்றியது.


கோயிலின் அமைப்பு தாய்லாந்து பவுத்த விகாரை கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. பௌத்த பள்ளியின் சன்னிதிகள், மைய விகாரையைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பௌத்த விகாரையில் தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதற்குச் சான்றாக ஆங்காங்கே பவுத்த பிக்குகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நான் சென்றிருந்த நேரம் நன்பகல் 12:00 மணி என்பதால் பௌத்த பிக்குகள் மதிய உணவிற்காக அவர்கள் இருப்பிடம் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பௌத்த பிக்கு நான் கோயில் பகுதிக்குச் செல்லும் பொழுது எனக்கு கோயிலின் கதவைத் திறந்து விட்டு மலாய் மொழியில் உள்ளே சென்று என்னை வழிபடச்  சொல்லிவிட்டு அவர் தங்குமிடம் சென்றுவிட்டார்.

இந்தப் பௌத்த விகாரையில் மிகப் பெரிய வடிவிலான நாக வடிவம் வாயில் பகுதியில் இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தலைகள் மற்றும் ஏழு தலைகள் கொண்ட நாகத்தின் வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளன. இதே வகை உருவ அமைப்பில் புத்தரின் தலைப் பகுதியைச் சுற்றி பாதுகாக்கும் வகையில் ஏழு தலை நாகம் இருக்கும் சிற்பங்களை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் நான் பல பௌத்த விகாரைகளில் பார்த்திருக்கின்றேன்.


புத்தர் தனது அரசைத் துறந்து ஞானம் பெற பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற போது அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் நாகர்கள் என்ற கருத்து உண்டு. நாகர்கள் இனம் பண்டைய இந்தியாவின் பூர்வ குடி இனம் என்பது மட்டுமன்றி இலங்கையின் பூர்வ குடி இனம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதில் குறிப்பாக ஏழு தலை நாகம் எனும் உருவ அமைப்பு நாகர்களில் ஏழு வகை குழுக்கள் புத்தருக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கிறது. நாகர்கள் இனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏழு தலை நாகம் என்ற உருவகம் நாளடைவில் புத்தர் சிலைகளில் இணைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த உருவ அமைப்பை மானுடவியல் பார்வையில் வரலாற்றுக் கோணத்தில் ஆய்வு செய்வது தேவையாகின்றது.

இந்தப் பௌத்த விகாரையின் நுழைவாயில், சன்னதிகள், மையக் கோயில் என அனைத்துமே பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கெடா மாநிலத்தின் இன்றும் வழிபாட்டில் இருக்கக்கூடிய முக்கிய பௌத்த விகாரையின் பட்டியலில் இந்தக் கோயிலும் இடம் பெறுகின்றது.


இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Wat Visuthipradittharam
Kg.Titi Akar Mk.Padang, Kerbau Jln Sg. Tiang Pendang, Kedah


வாட் சுக்தோர்ப்ரன்சாராம் பௌத்த விகாரை (Wat Sukthornprakcharam): 



பௌத்த விகாரை மற்றும் பள்ளி அமைந்திருக்கும் வளாகம். இது ஒரு கலைப் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் நேர்த்தியாகக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.  மலாய் மொழியில் Selamat Datang, அதாவது நல்வரவு என்று எழுதப்பட்டு அதன் கீழ் பௌத்த விகாரையின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்து வளாகத்தின் உள்ளே செல்லும்போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழு கிழமைகளுக்கும் ஏழுவகை புத்தரின் சிற்பங்கள். திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் ஓர் உருவத்தை அமைத்திருக்கின்றார்கள்.  ஒரு குன்றின் மேல் அமைந்தது போல இந்தக் கோவில் வளாகம் இருக்கின்றது. படிகளில் ஏறிச் சென்றால் வலது புறமும் இடது புறமும் எனச் சிறிய சிறிய சன்னிதிகள் உள்ளன.  ஒரு பகுதியில் 4 தலைகளுடன் பிரம்மாவின் உருவம் அமைக்கப்பட்ட சிற்பம் உள்ளது. மற்றும் ஒரு சன்னிதியில் போதிசத்துவருக்கான உருவச்சிலை அமைந்திருக்கின்றது. ஏனைய சன்னிதிகளில் புத்தரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கடந்து குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே சாய்ந்த நிலையில் சயன புத்தரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு உருவச்சிலை, ஆனால் மிகப் பிரம்மாண்டமான வகையில் பினாங்கு மாநிலத்தில் இருக்கின்றது.


இந்தப் பகுதியிலிருந்து இறங்கி இடது புறமாக மேலும் நடந்தால் அங்குப் பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  முதலில் வருவது மிக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இதில் புத்தர் தனது சீடர்களுக்கு ஞானம் வழங்குவது போலும், கீழே தரையில் சீடர்கள் அமர்ந்திருப்பது போலும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் அனைவரையும் இங்கே  அமர்ந்திருந்து தியானம் செய்யும் வகையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்து வரும்போது ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் தென்படுகின்றன. அதற்கடுத்து கீழே வரும்போது அழகான ஒரு குளத்தின் நடுவே தாராதேவி நின்ற நிலையில் அருள்பாலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே வரும்போது புத்தரின் அன்னை மற்றும் அவரது தோழியர் சூழ நிற்கும் சிற்ப வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வடிவங்கள் சேலை அணிந்த வகையில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக நாம் காண்பது ஒரு சிற்பம். இது குதிரை ஒன்று பின்புறத்தில் நிற்க புத்தர் தனது தலைமுடியை இழுத்து கத்தியால்  வெட்டுவது போல ஒரு காட்சி.


இவற்றையெல்லாம் கடந்து வந்தால் பவுத்த பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வரலாம். இப்பகுதி வழிபாடுகளும், தியான நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பௌத்த விகாரைக்கு வாசல் புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெயரைக் குறிப்பிட்டு நான் இணையத்தில் தகவல் தேடியபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த பௌத்த விகாரை மட்டுமல்ல... மேலும் சில பௌத்த விகாரைகளின் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் வகையில் இல்லை. நேரடியாகச் சென்று அவற்றைக் காணும் போதுதான் இத்தனை பௌத்த விகாரைகள்  இந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kg. Tong Prok, Mk, 06750 Pendang, Kedah, Malaysia.


முடிவுரை



வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்குக் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் வரலாறு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அடங்கவில்லை. உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக, கிழக்காசிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த, இருக்கின்ற தொடர்புகள் என்பவை மிக முக்கியமானவை.  மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பௌத்த விகாரைகளைப் பற்றி புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தேன். இணையத்தில் மேலும் தேடியபோது கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலும் சில செய்திகள் கிட்டின.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய 37 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று என்பதோடு பண்டைய ஸ்ரீவிஜயப் பேரரசு அதன் தலைநகராகக் கடாரத்தைக் கொண்டிருந்த ஒரு நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மிக முக்கியம் வாய்ந்த துறைமுகப் பகுதியாகவும் பண்டைய காலத்தில் இருந்தது.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடல் வழிப் பயணம் செய்து கிழக்காசிய நாடுகளுக்கு வந்த பௌத்த பிக்குகளும், பௌத்தத்தைத் தழுவிய வணிகர்களும் இப்பகுதிகளில் பௌத்தம் மிக ஆழமாக வேரூன்றி வளர அடிப்படையை உருவாக்கியிருந்தனர்.

காலப்போக்கில் அரசியல், சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களை விட சீனர்களும், தாய்லாந்து சயாமிய மக்களும் இப்பகுதியில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக அமைகின்றனர்.

இன்று கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைந்துள்ளது. ஆயினும் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும்போது தாய்லாந்து, அதாவது பண்டைய சயாம் நாட்டுடன் நீண்ட தொடர்பு கொண்ட நிலப்பகுதியாக அமைந்தது என்று கூற வேண்டும்.  இப்பகுதியில் ஆட்சி அமைத்திருந்த பண்டைய பேரரசனான பூஃனான், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் ஆகும். இவற்றின் காலம் கிபி 11 வரை எனக் கூறலாம். இதன் பின்னர் ராஜேந்திர சோழனின் படை எடுப்பு இப்பகுதியில் நிகழ்ந்த பின்னர் மலாய் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.

அரேபிய இஸ்லாமிய வணிகர்களின் வருகை இப்பகுதியில் படிப்படியாக இஸ்லாமிய மதம் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கி.பி. 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்பகுதி தொடக்கம், மலாக்கா, தீபகற்ப மலேசியா ஆகிய பகுதிகள் முழுமையாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய வகையில் இஸ்லாமிய நாடாக சமய அடிப்படையில் மாற்றம் பெற்றது.  இத்தகைய சமய பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த போதிலும் கூட கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள தொடர்பு என்பது இன்றும் தொடர்கின்றது. கெடா மாநிலத்தின் ஒரு பகுதி தாய்லாந்தில் எல்லையாகவும் அமைகிறது.

1909ஆம் ஆண்டு Anglo-Siam Treaty என்ற ஒப்பந்தத்தின்  அடிப்படையில் இன்று நாம் காண்கின்ற பிரித்தானிய மலாயாவிற்கும் தாய்லாந்து நாட்டிற்குமான எல்லை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. Satun பகுதி மலையாவிற்கும், Patani பகுதி சயாம் நாட்டிற்கும் எனப் பிரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் வாழ்ந்த சயாமிய மக்கள் தனித்துவத்துடன் கூடிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்களாகத் தொடர்கின்றனர்.

இன்றும் கூட தாய்மொழியை(தாய்லாந்து மொழி) இப்பகுதி மக்கள் ஓரளவிற்கு இயல்பாகப் பேசுகின்றனர். தாய் மொழியைப் பேசுகின்ற இம்மக்களை சாம்சாம்ஸ் (The Samsams) என்று அழைக்கின்றனர். இவர்களில் சிலர் இஸ்லாமியர்களாகவும் பெரும்பான்மையோர் பௌத்தத்தைத்  தொடர்ந்து சமயமாகக் கொண்டிருப்பவர்களாகவும், அதிலும் குறிப்பாக,  தேரவாத பௌத்தத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகின்றனர். இந்த சாம்சாம்ஸ் இனத்தவர்கள் பற்றிய எண்ணிக்கை தகவல்கள் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The Siamese in Kedah under nation state making (Keiko Kuruda, Kagoshima University) என்ற கட்டுரை 1892 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அன்றைய கெடா மாநில சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களது கடிதங்களின் வழி பென்டாங் பகுதியில் 13 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் அதில் வாட் லம்டின் விகாரையில் மட்டும் 22 பௌத்த பிக்குகள் பதிவு செய்திருந்தார்கள் என்ற தகவலையும் வழங்குகிறது.  இதே கட்டுரை 1974-ஆம் ஆண்டு அறிக்கையின்படி கெடா மாநிலத்தில் மட்டுமே 26 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் 27 கிராமங்கள் இருந்ததாகவும், அதில் ஏறக்குறைய 3500 குடும்பத்தினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

கெடா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பவுத்த விகாரைகள் இன்று புதிய கட்டிடங்களில் அழகுறத் திகழ்கின்றன. ஆனால் இவை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இவை. பண்டைய பேரரசுகளின் அரச சமயமாக பௌத்தம் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட விகாரைகளின் எச்சத்தின் தொடர்ச்சி. பழைய கட்டுமானப் பகுதி சிதிலம் அடையும்போது புதிய கட்டுமானங்களை உருவாக்கி வழிபாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

கெடா மாநிலத்து சயாம் பௌத்த பின்னணி கொண்ட மக்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்திலும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முக்கிய ஆண்டு விழாக்கள், பண்டிகைகள் நிகழும்போது பினாங்கிலிருந்து பெருவாரியாக மக்கள் வழிபாட்டிற்கு வருகிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

பௌத்தம் கி.பி. 1, 2 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்தும் கடல்வழி பயணித்த வணிகர்கள் மற்றும் பௌத்த பிக்குகளின் முயற்சிகளினால் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. புதிதாகப் பரவிய நிலத்தில் அவை மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு வழிபாடுகளில் மேலும் சில புதுமைகளைப் புகுத்திக் கொண்ட வகையில் மாற்றம் கண்டன. மாற்றங்கள் உட்புகுந்தன என்றாலும்கூட பழமையான  பௌத்தப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வழிவழியாக வழிபாடு செய்யப்பட்ட பகுதிகளில் வழிபாடுகள் தொடர்வதைக் கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் காணமுடிகிறது.

மலாயா மலேசியாவாக மாறிய பின்னரும் கூட அரச சமயமாக இஸ்லாமிய சமயம் முக்கியத்துவம் பெற்ற பின்னரும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிறைந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது. பௌத்த விகாரைகள் சீனர்களுக்கும் தாய்லாந்து மக்களுக்கும் உரிய வழிபாட்டுத்தலங்கள் தானே என ஒதுக்கி விடாமல் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி என்ற ரீதியில் இவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து அவற்றின் வரலாற்றுப் பின்னணிகளைத் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய தேடுதல்கள் நமக்கு மேலும் சில புதிய தரவுகளை வழங்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

முற்றும்

தம்பி நான் ஏது செய்வேனடா – பரலி சு. நெல்லையப்பர்



  --  ரெங்கையா முருகன்


பாரதிக்காக வாழ்ந்த மூவரில் தலைமகனாக கருதப்படுபவர் பரலி சு. நெல்லையப்பர். பாரதி பாடல்களின் நுட்பத்தை அறிந்த காரணத்தால் இந்திய மக்களிடையே பல்வேறு பத்திரிகைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளைப் பரப்பியவர் நெல்லையப்பர். வீரக்கனல் சுப்பிரமணிய சிவாவையும் சுதேசி பிழம்பு வ.உ.சிதம்பரனாரையும் இணைத்து வைத்த பெருமைக்குரியவர் நெல்லையப்பரின் தமையனார் சண்முக சுந்தரம் பிள்ளை. 1907 ம் ஆண்டு நெல்லையப்பர் வ.உ.சி. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்க, பாரதியார்  நெல்லையப்பரின் கையை பற்றி,  “என்ன ஓய்! எழுதுகிறீர்? எழுதியது போதும்” என்று உரிமையோடு அழைத்தார்.  முன் பின் பார்த்தறியாத ஒருவர்  தம் கையை பற்றி இழுக்கிறாரே என்று நெல்லையப்பர் அவருடன் உலவச் சென்று விட்டார். பாரதிக்கு உற்ற நண்பராக மாறிய  இவரே, பிற்காலத்தில்  அவரது கவிதைகளை வெளியிடும் பதிப்பாளராக திகழ்ந்தார்  என பாரதிக்கும் தெரியாது.


வ.உ.சி.க்கு வெள்ளையர் அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த பிறகு வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மையாரும் , பரலி சு. நெல்லையப்பரும் தண்டனை குறைப்பு மேலீட்டிற்காக சென்னை வந்து பல வக்கீல்களைச் சந்தித்துப் பேசிய போது அனைவரும் மேல்முறையீடு செய்ய இடமில்லை என்று கையை விரித்து விட்டனர். இச் செய்தியை சிறையிலிருந்த வ.உ.சி.க்கு நெல்லையப்பர் தெரிவித்த போது,  வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்” என்று சோகம் ததும்பும் வெண்பா பாடல்களை நெல்லையப்பருக்கு வ.உ.சி. எழுதி அனுப்பினார். வ.உ.சி.க்கு சிறையில் இழைக்கப்பட்ட செக்கிழுத்தல், கல்லுடைத்தல் போன்ற துன்பங்களைக் கண்டு வருந்தி  பாரதியின் இந்தியா பத்திரிக்கையில் 28.01.1908 ல் “துன்பம் சகியான்’ என்ற புனை பெயரில் எழுதி வெளி உலகுக்குக் கொண்டு வந்தவர் பரலி. சு. நெல்லையப்பர். இந்தியாவில் வந்த இவருடைய முதல் கட்டுரையும் இதுவே. 

“தேசபக்தரான ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை ராஜத்துரோக  ஜாதித்துவேஷக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆறு வருடம் தீவாந்திர சீஷை விதிக்கப்பட்டிருக்கிறார். தற்சமயம்  சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம் போல் எண்ணெய் ஆட்டும் செக்கு இழுக்கும்படி செய்திருக்கிறாராம்.  அந்தோ! இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போது நெஞ்சு உருகுகின்றதே. இங்கு எழுதும் போதே நடுங்குகின்றதே! அக் கொடும் துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்கனமோ? கடவுளே அறிவார்".  கைதிகட்கு எத்தனையோ விதமான வேலை இருக்க, இத்தேச பக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் இயந்திரம் சுழற்றும் வேலையையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்கட்கு விலங்கிடுவதேனோ? என்று நெஞ்சுருக எழுதுகிறார்.

கோவைச் சிறையில் வ.உ.சி. இருந்த போது கலெக்டர் ஆஷ் சுடப்படுகிறார்.   அச் சமயம் நெல்லையப்பரையும் சந்தேகத்தின் பேரில் பிரிட்டிசார் தேடிவருகின்றனர். நெல்லையப்பரோ மாறுவேடத்தில் கோவை சென்று பாரதியார் தந்த கவிதைகளை வ.உ.சி.யிடம் இரகசியமாக சேர்க்கும் பணிகளைச் செய்கிறார். கோவை வழக்கறிஞர் , பெரியபுராண  உரையாசிரியர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் உதவியுடன் கோவை பேரூர் அருகே ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொண்டு சாமியார் போல் செயல்பட்டு சிறையிலிருந்த வ.உ.சி.க்கு பல உதவிகளைச் செய்தவர்.  நெல்லையப்பர் வேண்டுகோளுக்கிணங்க வ.உ.சி. தனது சுயசரிதையை அகவற்பாவில் எழுதினார். இதனை வ.உ.சி. குறிப்பிடுகையில்,
”பூவுலகமதனைப் பொருத்தி நின்று
தேவுலகதனிற் சிறந்த உலகின்
நினைவோடு நிற்கும் நெல்லையப்பர்” 
என்று எழுதியுள்ளார்.

வெ. சாமிநாத சர்மா நெல்லையப்பரின் கோவை வாசத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:  “கப்பலோட்டிய தமிழன் வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருந்த இடம் கோயமுத்தூர் சிறை. சிறைக்கு வெளியே சிதம்பரனாருக்கு உற்ற துணை நெல்லையப்பர். ஆனால் அவருக்கோ தலைமறைவு வாசம். எப்படிச் சிறைச்சாலைச் சுவர்களைக் கடந்து உள்ளே போய் வெளியே வருவாரோ? சிதம்பரனாரைப் பேட்டி காண்பார். சிறு சிறு காகிதத் துண்டுகளில் அவர் குறித்துக் கொடுக்கும் செய்திகளைப் பெற்றுக் கொள்வார். அவற்றின்படி வெளியே வந்து செயலாற்றி வ.உ.சி.யின் திட்டங்களை நிறைவேற்றுவார்.இப்படி ஒரு வருட காலம் நடந்தது". 1910 ம் ஆண்டு கர்மயோகி இதழில் “ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையின் சந்திப்பு" என்ற கட்டுரையை  வ.உ.சி. சிறையிலிருந்த போது எழுதினார். வெள்ளைக்கார கப்பல் கம்பெனி சுதேசி கப்பல் கம்பெனியை சீரழிக்கத் தொடங்கிய போது நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்தாருடன் உறுதுணையாக நின்று சுதேசி கப்பல் கம்பெனி சொத்துக்களைப் பரிபாலிக்க உதவி செய்தவர். வ.உ.சி. நெல்லையப்பர் குறித்து எழுதிய பாடல்கள் இருபதுக்கும் மேலாகும். ஒரு பாடலை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
”அப்பனும் நீ ஐயனும் நீ ஆதியும் நீ யாவையும் நீ
செப்பமுடன் செப்பியதைச் செய்வாயேல்  தப்பில்
மனையாள் தன் மாதாவை மன்னிநிற்க மாயேன்
மனையெய்தும் மாதம் வரை."
இந்தப் பாடல் மூலம் நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்துடன் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்று புரிய வருகிறது.

நெல்லையப்பர் தனக்காக வாழாமல் வ.உ.சிக்கும், பாரதிக்காகவும் வாழ்ந்தவர் என்பார் சாமிநாத சர்மா. வ.உ.சி.யினுடைய சரித்திரத்தை நெல்லையப்பர் எழுத வேண்டி பலரும் விரும்ப அதற்கிசைந்து 1944 ஆம் ஆண்டு திரு.வி. க. முன்னுரையுடன் வ.உ.சி. சரித்திரத்தை வெளியிட்டார். வ.உ.சி.யைக் கலகக்காரராகவும், சுப்பிரமணிய சிவாவை பைத்தியக்காரனாகவும், பாரதியாரை பிழைக்கத் தெரியாதவராகவும் தமிழக மக்கள் கருதி வந்த காலத்தில் பாரதியாருடைய வந்தேமாதரப் பாடல்களை ஓசை படாமல் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு தமிழகத்தில் சுதந்திர தாகத்தைப் பரப்ப வழி செய்தவர் நெல்லையப்பர். வெள்ளையர்களின் கண்களின் மண்ணைத் தூவி பாரதியின் பாடல்களை வந்தேமாதரம் பாடல்கள் என்று தலைப்பிட்டு வெளியிட்டால் பிரிட்டிசாரின் தணிக்கைக்கு உட்படும் என்று நினைத்து நாட்டுப் பாடல் என்ற தலைப்பில் வெளியிட்டார். 1917 ம் ஆண்டு பாரதியின் பாடல்களைத் தொகுத்து கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு நெல்லையப்பரின் தன்னடக்கமான முன்னுரையுடன் வெளியிட்டார். 

நெல்லையப்பருக்கு 19-07-1917 ம் ஆண்டு பாரதியார் புகழ்மிக்க கடிதம் ஒன்றை எழுதினார். ”எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக! என்று ஆரம்பித்து தம்பி- நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது.  தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியை காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதை கண்டால் என் மனம் புண்படுகிறது! என்ற பாரதியார் எழுதிய மாபெரும் மடலுக்கு உரியவராக இருந்தார் என்றால் பரலி சு. நெல்லையப்பருக்கு இதைவிட என்ன பேறு கிட்டும்.  

பாரதியார் ஒரு தடவை சோர்ந்த முகத்துடன் வந்து நெல்லையப்பரைத் தனியாக அழைத்துச் சென்று  ‘ஏதாவது பணம் இருக்கிறதா? என்று கேட்க, அப்பொழுது தன்னிடமிருந்த ஒரு ரூபாயை பாரதியிடம் கொடுத்தார். அந்த அளவுக்கு பாரதி நெல்லையப்பரைத் தம்பியாகவே மதித்து உரிமையுடன் உதவி கோருவார். 1921 ம் ஆண்டு பாரதியார் மறைந்த கடைசி நாளில் அவருடைய கடைசி நிமிடத்தில் உடனிருந்து அவரது பொன்னுடலைச் சுமக்கும் பேறு பெற்றவர் நெல்லையப்பர். சூரியோதயம், விஜயா,கர்மயோகி, லோகோபகாரி, தேசபக்தன் போன்ற பல்வேறு இதழ்களில் முத்தாய்ப்பான பங்களித்தவர்.  அடிசன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாரண துரைக்கண்ணனை பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்தியவர்.  ஜீவா என்றழைக்கப்படும் நாரண துரைக்கண்ணன்மாஜினி என்றழைக்கப்படும் ர.ரங்கசாமி போன்றோருக்குப் பத்திரிக்கை வழிகாட்டி இவரே.  விகடன் பெயருக்குப் பொருத்தமாய் நகைச்சுவையாய் யாரேனும் எழுதமாட்டார்களா என்று எஸ்.எஸ். வாசன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கல்கியை வாசனுக்கு அறிமுகப்படுத்தியவர் நெல்லையப்பர். 

சைதாப்பேட்டை காரணீசுவரர்  கோவில் தெருவில் கு. மகாலிங்கம் என்பவரால் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் காந்தி வாசக சாலை என்னும் நூலக வாசக சாலையை தொடங்கி வைத்தவர் நெல்லையப்பர். 1954 ம் ஆண்டு பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி அன்றைய தமிழக முதல்வர் காமராசரை சந்தித்து எனது  தந்தைக்கு ஒப்பான நெல்லையப்பர் குரோம்பேட்டை ராஜாஜி தெருவில்  குடிசையில் தங்கி வறுமையில் வாடுகிறார் என்று கூறி அவருக்கு உதவி செய்ய வேண்டிக் கேட்க , உடனடியாக குரோம்பேட்டை நெமிலிச்சேரி புறம்போக்கில் 3ஏக்கர் 18 செண்ட் கொண்ட நிலத்தை காமராசர் ஒதுக்கிக் கொடுத்தார்.  அந்த நிலத்தின் ஒரு பகுதியை,   குரோம்பேட்டை பகுதியில் வசிக்கின்ற ஏழைக் குழந்தைகள் படித்துப் பயன் பெறும்வகையில் இரண்டு கிரவுண்டு இடத்தை (29.11.1967 ல்) இனாமாக கொடுத்து,  பரலி சு. நெல்லையப்பர் நினைவாக அமைக்கப்பட்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் கடந்த 20 வருடங்களாக பள்ளிக்கூடம் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பாரதிபுரம் 2வது தெருவில் இயங்கி வந்தது.

பரலி.சு.நெல்லையப்பர் எழுதிய நூல்கள்:
1.  பாரதியார் சரித்திரம்
2. வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்
3. பாரதி வாழ்த்து
4. நெல்லைத் தென்றல்
5. உய்யும் வழி
6. தமிழ்த் திருமண முறை
7. ராதா ராணி (மொழிபெயர்ப்பு)
8. ஜோடி மோதிரம் (மொழிபெயர்ப்பு)
9. சுவர்ணலதா (மொழிபெயர்ப்பு)
10. மகாத்மா காந்தியின் சுயராஜ்யம் (மொழி பெயர்ப்பு)
11. சிவானநந்தர் உபதேசமாலை

பதிப்பித்த நூல்கள்:
1.  பாரதியின் கண்ணன் பாட்டு
2.  நாட்டுப்பாட்டு
3.  பாப்பா பாட்டு,முரசு பாட்டு, குயில்பாட்டு, ராஜாஜியின் ஆத்மசோதனை, பி.பி.சுப்பையாவின் மாதர் கடமை, திருவாசகம் (மலிவுப்பதிப்பு) போன்றவை.

பெரியவர் வ.உ.சி.க்கு 21.12.1939ல் சிலை வைத்த போது பஞ்சகம் பாடினார்.
"ஊக்கமும் வலிவும் குன்றி
 ஒளி இழந் துலகில் நீண்ட
தூக்கத்தில் வீழ்ந்த நாட்டைத்
துயிலெழச் செய்தாய் ஐய!
பாக்கியம் பெருகி நாட்டார்
பாரினில் உயரும் வண்ணம்
தூக்கிய வினைகள் செய்தாய்!
துணிவு மிக்குடைய கோவே!
பொற்சிலை வைத்திங் குன்னைப்
போற்றிட விரும்புகின்றோம்!
கற்சிலை நாட்டி இன்று
காண்கிறோம்! கலைவல் லோனே!
நற்செயல் பெரிதும் செய்தாய்
நாட்டினை அகத்திற் கொண்டு உன்
நற்பெயர் நிலவி நிற்கும்
ஞாலமுள்ளளவும் வாழி!"

வீரச் சிதம்பரம் விதைத்து, பாரதி பாட்டிற் பழுத்த பரலி சு. நெல்லையப்பரின் தியாகத்தை நினைவு  கூர்வோம்.



உதவிய நூல்கள்:
அ.மகாதேவன் எழுதிய தியாக ஒளி அமரர் பரலி சு.நெல்லையப்பர்.
பெ.சு.மணி எழுதிய கட்டுரைகள்.

Friday, March 11, 2022

பெண்களாய் வாழ்வதே சாதனை தான்



தொலைந்து போன பால்யம் 
தூக்கி எறியப்பட்ட கனவுகள்
இளமையில் துரத்திய வறுமை
விதியென வாய்த்த வாழ்க்கை 
உரிமை இல்லா உறவுகள் 
உண்மை இல்லா உணர்வுகள்
புரிதல் இல்லா புணர்வுகள்
அடைகாக்கும் சமையலறை
அடுத்த சிறையாய் படுக்கையறை
அலுவலகத்தில் அசடுகள்
அங்கும் அக்னி பரீட்சை தான்
உடல்மொழி தனிக்கதை
உளவியலானது விடுகதை
பிள்ளை வளர்ப்பு பெருங்கதை
 குடும்பமது போர்க்களம்
சுயம் மறந்து நாட்களாக 
நட்புகள் ஏது சிந்தையில் 
பெரியாரும் பாரதியும்
பெருமூச்சிறைக்கச் செய்ய 
வாசிக்கப் பழகியவள் 
எழுதத் தொடங்கினாள் 
எழுத்துகள் தந்தது விடுதலை எண்ணங்களில் எழுச்சி
 வேர்களைத்தேடிய எழுத்தில் 
அவளை அவளே கண்டெடுத்தாள் 
ஆறாம் விரலாய் அவள் பேனாவும்
 அஞ்சாத அறமுறைத்தது.
பெண்களாய் வாழ்வதே சாதனை தான்
அனுதினம் உன்னை நீ கொண்டாடு

-- தீபிகா  சுரேஷ்

Wednesday, March 9, 2022

ஓர் உள்ளூர் வணிகவழி



  ஆ.சிவசுப்பிரமணியன்


ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியில் குறிப்பாக அதன் பொருளியல் பண்பாட்டு வளர்ச்சியில் வாணிபத்தின் பங்களிப்பு அளப்பரியது. வாணிபத்தின் வளர்ச்சியானது வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை முறையை. நெருக்கமாக்கி உழுகுடிகள், கைவினைஞர்கள், நுகர்வோர் என்ற முத்திறத்தாரையும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது.  இதன் வளர்ச்சி நிலையே ஒரு நாட்டில் நகரங்களின் எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும். வணிகர் களைத் தனி மனிதர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விடுவித்து வணிகக் குழுக்களாக மாற்றி அமைக்கும். அத்துடன் நகர நாகரிகம் என்ற அடைமொழி உருவாக்கித் தரும்.

நகரங்கள் என்பன உள்நாட்டு நிலப்பகுதியில் மட்டுமின்றி கடற்கரைகளிலும் உருவாகி கடல்கடந்த நாடுகளுடனும் வாணிப இணைப்பை உருவாக்கும். இம்முயற்சியில் நிகழும் வாணிபமானது ஏற்றுமதி வாணிபம் இறக்குமதி வாணிபம் என இருதரத்தது. இவை இரண்டும் வளர்ச்சியுற கடற்கரை நகரங்களும், உள்நாட்டு நகரங்களும், பரந்துபட்ட உள்நாட்டுப் பகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியமான ஒன்று. ஏன் எனில் வாணிபத்திற்கான உற்பத்திப் பொருளையும், கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களையும் வழங்க உள்நாட்டுப் பகுதியின் பங்களிப்பு மிகவும் தேவை. இதுபோல் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் வாழும் தளமாகவும் உள்நாட்டுப் பகுதி விளங்கியது.

இவ்வாறு நகரம், உள்நாட்டுப்பகுதி என்ற இரண்டின் இணைப்பு தமிழர்தம் வரலாற்றில் தொன்மையான ஒன்றாக விளங்கியுள்ளது. 'மதுரைக்காஞ்சி' 'பட்டினப்பாலை என்ற இரு சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இடம் பெற்றுள்ள 'ஊர்காண் காதை'யும் பண்டைத் தமிழரின் வாணிபச் சிறப்பிற்குச் சான்று பகர்கின்றன.

வாணிபமும் சாலையும் :
வாணிபச் செயல்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமைவது பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதாகும். தொடக்கத்தில் விலங்குகளும் பின்னர் விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகளும் சுமைகளைக் கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் வாணிபப் பொருட்களைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

இவை கடந்து செல்லப் பாதைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. வாணிபத்திற்காக மட்டுமின்றி, மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள், கலைஞர்களின் கலைப்பயணம், பண்ணியத் தலயாத்திரை என்பனவற்றிற்கும் இவை  பயன்பட்டன என்றாலும், வாணிபப் பயன்பாடே இவற்றின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே வாணிபப் பெருவழி (Trade Route) என்று அழைக்கப்பட்டன. சாலைகளின் வளர்ச்சி ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மோதிசந்திரர் (1907), 'நாட்டில் சாலையமைப்புகளின் வளர்ச்சிஅந்தநாட்டின் நாகரிக வளர்ச்சியின் அளவு கோலாகும். நெடுஞ்சாலைகளில் இருந்து கிளைச்சாலைகள் பெருகப் பெருக நாகரிகமும் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கியது.' என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கல்வெட்டுக்களில் இத்தகைய வணிகப் பெருவழிகள் குறித்த பதிவுகள் உள்ளன. இவை குறித்த, புதிய கண்டு பிடிப்புகளைத் தொல்லியல் அறிஞர்கள் செ. இராசு,  ர.  பூங்குன்றன்,  ந. அதியமான்,  கா. இராஜன்,  வெ. வேதாச்சலம் ஆகியோர் வெளிப்படுத்தி உள்ளனர்.  பாவெல் பாரதி வைகைப் பெருவழி தொடர்பான செய்திகளைத் தமது இரு கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்.

இவர்களது ஆய்வின் அடிப்படை ஆதாரங்களாகக் கல்வெட்டுக்கள் அமைத்துள்ளன. ஆனால் இக்கட்டுரை கல்வெட்டுச் சான்றுகள் இன்றி வாய்மொழிச் சான்றுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் திகழ்ந்த பண்டமாற்று வாணிபம் குறித்த வாய்மொழி வழக்காறுகளை அடிப்படைச் சான்றுகளாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வகையில் உள்ளூர் வரலாறு (local history) என்ற வரலாற்று வகைமைக்குள் அடங்கும் தன்மைத்தது.

உள்ளூர் வரலாறு:
உள்ளூர் வரலாறு என்பது ஒரு கிராமத்தையோ அல்லது சில கிராமங்களையோ மையமாகக் கொண்டது. துறைமுக நகரம்,  தலை நகரம் என்பனவற்றில் இருந்து தொலைவில் உள்ள சிறிய அல்லது நடுத்தர நகரமும் பொதுவான புவியியல் அமைப்பை விடச் சிறிய நில அமைப்பைக் கொண்ட நிர்வாகப் பகுதியும் உள்ளூர் வரலாற்று வரைவுக்கான களமாகும் என்பது பியர் கூபர் (1915- 2012) என்ற பிரஞ்சு வரலாற்றுப் பேராசிரியரின் கருத்தாகும்.

இவரது இவ் வரையறையை மையமாகக் கொண்டு கருப்புக்கட்டி என்றழைக்கப்படும் பனைவெல்லம் உற்பத்தி செய்வோர் நிழத்திய பண்டமாற்று வாணிபம், பயன்படுத்திய பாதை, சுமைகளைக் கொண்டு செல்ல உதவிய வாகனம் விலங்கு என்பன குறித்த செய்திகளை வாய்மொழித் தரவுகளாகத் திரட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாய்மொழி வரலாறு (Oral History) என்ற வகைமைக்குள்ளும் இக்கட்டுரை அடங்குகிறது.

வாய்மொழி வரலாறு:
வாய்மொழி வரலாறு என்ற வரலாற்றியல் கலைச்சொல் 1948 ஆவது ஆண்டில் ஆலம் நீவின் என்ற கொலம்பியாப் பல்கலைக் கழகப் பேராசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வாய்மொழி வரலாறு என்பது குறித்துப் பல்வேறு வரையறைகள் வரலாற்றியலிர்களிடம் உள்ளன. வாய்மொழியாக வழங்கப்படும் வழக்காறுகளின் தொகுப்பே வாய்மொழி வரலாறு என்று எளிதாக, வரையறை செய்வது இதை மலினப்படுத்தும் செயலாகும்.

ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் பங்கு கொண்டோரின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துதலே வாய்மொழி வரலாறு என்று சுகோவ் என்பவர் குறிப்பிடுகிறார். ஜான் வான்சினா என்பவரோ ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை நேரில் கண்டவர்களின் கூற்றை வாய்மொழி மரபாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது கருத்துப்படி அதைக் கண்டறியாத ஒருவர் செவிவழியாகக் கேட்டறிந்ததைக் கூறுவதுதான் வாய்மொழி மரபாகும். இதன்படி வாய்மொழிப் பரவல் (Oral Transmission) முக்கியத்துவம் பெறுகிறது. லுமிஸ் என்பவர் வரலாற்றின் ஒரு வகைமையாக வாய்மொழி வரலாற்றைக் கருதவில்லை . அவரது கருத்துப்படி இது ஒரு வரலாற்று முறையியல் (Methodology) ஆகும்.

இக்கட்டுரை வாய்மொழி வரலாறு தொடர்பான இவ்விவாதங்களுக்குள் நுழையாது ஜான்வான் சினாவின் வரையறையை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊரில் ஓடும் பொருநை ஆற்றின் தென்கரைப் பகுதியில் உள்ள தேரிக்காடு என்றழைக்கப்படும் பனைமரக்காடுளில் வாழ்ந்தோர் ஆங்கில ஆட்சியின்போது நிகழ்த்திய பண்டமாற்று வாணிபம் இக்கட்டுரையின் மையப் பொருளாகும். இவ்வகையில் வாய்மொழிச் செய்திகளின் துணையுடன் எழுதப்பட்ட உள்ளூர் வணிக வரலாறு எனலாம்.

தேரிக்காடு:
இன்றையத் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள நாங்குனேரிஇராதாபுரம் வட்டங்களும் செம்மண் மேடுகளையும் சிறிய பள்ளத்தாக்குகளையும் கொண்டவை. இந்நிலப்பகுதி தேரி என்று குறிப்பிடப்படுகிறது. மேடான நிலப்பகுதியைக் குறிக்க, தெற்றி என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஒருவேளை தேரி என்ற சொல் தெற்றி என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இதன் ஆங்கில ஒலிமொழி பெயர்ப்பாகவே Teri என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது. தேரி நிலப்பகுதியில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் பனை மரங்களை அடிப்படையாகக்கொண்டு பனைமரக்காடு என்ற பொருளைத்தரும் ஆங்கிலச் சொல்லை ஆங்கில அதிகாரிகளும், கிறித்தவ மறைப்பணியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கில ஆட்சியின்போது திருச்செந்தூர் வட்டம் 'பனைமரத் தாலுகா' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. 

தேரியின் பொருளாதாரம்:


தமிழ்நாட்டின் பெருவாரியான கிராமங்களைப் போன்றே தேரிநிலப் பகுதியும் காலனிய ஆட்சியின்போது வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது. இப்பகுதியின் பொருளாதாரத்தில் பனைமரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. பனைமரத்தில் இருந்து நேரடியாகப் பெறும் நொங்கு, கள், பதநீர், ஓலை என்ற நேரடியான பொருள்கள் மட்டுமின்றி அவற்றின் துணைத் தயாரிப்பான, பலவகைக் கருப்புக்கட்டிகள் (பனை வெல்லம்), கற்கண்டு, பனங்கிழங்கு என்பன முக்கிய விற்பனைப் பொருட்களாயின. இவற்றுள் கருப்புக்கட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு என்பன தவிர ஏனையவை இருப்பு வைத்து விற்கமுடியாத பொருட்களாகும். இவை தவிர கட்டிடங்களுக்குத் தேவையான பனைச் சட்டங்கள், ஓலைகள், பனை நார், ஈர்க்கு, கருக்கு மட்டை என்பனவும் விற்பனைப் பொருட்களாயின. இவை  அனைத்தும் இன்றுவரை விற்பனைப் பொருள்களாகத் தொடர்கின்றன.


ஆனால் இவை தவிர வேறுவகையான வேளாண் பொருள்களும் தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் இடம் பெற்றிருந்தன. தேரிக்காட்டு மக்களின் கடந்தகாலப் பாண்டமாற்று வாணிபத்தில் இவை முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன.  தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் பனைபடு பொருள்களும் வேளாண் உற்பத்திப்பொருட்களும் இடம் பெற்றிருந்தது என்பதை மேலோட்டமாகப்  பார்த்தோம். அடுத்து,  இவை வாணிபப்பொருளாக விளங்கியமை குறித்த செய்திகளைக் காண்போம்.

கருப்புக்கட்டி:


பனைமரத்தில் இருந்து பெறும் பதநீரைக் காய்ச்சி உருவாக்கப்படும் கருப்புக்கட்டியானது இனிப்புப் பொருளாக மட்டுமின்றி. நம் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுண்மையை., வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறையில் அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் அறிந்திருந்தனர் - பொ.ஆ.1511-1662 வரையிலான காலத்தில் அவர்கள் அறிந்திருந்த நம்பாரம்பரிய மருத்துவமுறைகள் குறித்துத் தமது நூல் ஒன்றில் பேரா.ஜெய சில ஸ்டீபன் (2015:358-361) குறிப்பிட்டுள்ளார். அதில் சளித்தொல்லைக்கான மருந்தாக சுக்கும் கருப்புக்கட்டியும் கலந்த மருந்து இடம் பெற்றுள்ளது. சுக்குடன் அதைவிட ஐந்துமடங்கு அளவு கருப்புக்கட்டி இம் மருந்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமது மற்றொருநூல் ஒன்றில் (1999: 124) தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள பழையகாயல் துறைமுகத்தில் நிகழ்ந்த கருப்புக்கட்டி ஏற்றுமதி குறித்த செய்தி ஒன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி வாஸ்கோடாகாமாவின் மகனான மானுவல்காமா ஒரு பலம் ஏழு ரூபாய் என்ற விலையில் கருப்புக்கட்டி வாங்கி 1525 மார்ச் 7இல் போர்ச்சுக்கலுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இச் செய்திக்கும் மேலே குறிப்பிட்ட மருந்துக்கும் இடையே ஓர் இயைபு இருக்க வாய்ப்புள்ளது. எப்படியோ கருப்புக்கட்டி ஏற்றுமதிப் பொருளாக விளங்கியுள்ளது என்பது உண்மை. 

நாசரேத் என்ற தேரிக்காட்டு ஊரைத் தம் பூர்வீக ஊராகக்கொண்ட டாக்டர். சசிகரன் தங்கையா தாம் எழுதிய நாசரேத் வரலாறு குறித்த நூலில் (2012: 112) நாசரேத்தில் இருந்து கருப்புக்கட்டி ஏற்றுமதி ஆனதாகக் குறிப்பிட்டுள்ளார். நாசரேத் ஊரைச் சுற்றியுள்ள தேரிக்காட்டுப் பகுதிகளில் இருந்து இவை சேகரிக்கப் பட்டிருக்கலாம்.

வேளாண்மை உற்பத்தி: 
கருப்புக்கட்டி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சொற்ப அளவிலேயே தேரிக்காட்டுப் பகுதியில் முன்னர் வேளாண்மை நிகழ்ந்துள்ளது. இன்று இப்பகுதியில் நிலவும் வேளாண் தொழிலுடன் ஆங்கில ஆட்சியின் போது நிகழ்ந்த  வேளாண் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பனைமரக்காடுகளாகவே தேரிப்பகுதி இருந்துள்ளது. இதனை ஊடறுத்துச் செல்லும் வண்டித்தடங்கள், ஒற்றையடிப்பாதைகள் வாயிலாகவே பயணங்கள் திகழ்ந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் புதியவர்கள் தடம் மாறி வழிதப்பிப் போகும் வாய்ப்பிருந்தமையால் வழிகாட்டிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

வழிகாட்டிகளுக்கு ஊதியம் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. தேரிக்காட்டுப் பகுதியில் 19 ஆவது நூற்றாண்டுக் காலத்தில் உபதேசியாராகப் பணியாற்றிய சவரிராயபிள்ளை (1901-1834) என்பவர் 1805 செப்டம்பர் 25 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் நாசரேத் ஊரில் முதல்நாள் இரவில் தங்கிவிட்டு அதிகாலையில் புறப்பட்டுச் சென்றதைபரஞ்சோதி யென்றவனைக் கூடப்போய் வழி பிசகாமல் கொண்டுவந்துவிட அனுப்பினார்.  ...... அவன் வராவிட்டால் பலப்பல வழிகளில் அலைந்தும் விடிய மட்டும் வருத்தப்பட நேரிடும்' என்று எழுதி உள்ளார். மற்றொரு குறிப்பில் 22-2 விடியக்காலம் புறப்படத் துணையாள் சம்பளத்துக்குக் கிடைக்கவில்லை' என்று எழுதியுள்ளார்.

இவ்வாறு சரியானசாலைகள் இல்லாதது மட்டுமின்றி,  கிணறு குளம் என நேரடி நீர்ப்பாசன வசதிக்குறைவும் பல பகுதிகளில் இருந்துள்ளது. இருப்பினும் பனை மரங்களுக்கு ஊடாக வேளாண்மையும் திகழ்ந்துள்ளது.

பதநீர் இறக்கும் பருவம் தேரிக்காட்டுப் பகுதிகளில் பிப்ரவரித் திங்களில் தொடங்கி மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கம் முடிவடையும். பதநீர் இறக்கும் இப்பருவத்தில்தான் கருப்புக்கட்டித் தயாரிப்பும் நிகழும். இப்பருவகாலத் தயாரிப்பு மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக அமையவில்லை. துணைத் தொழிலாக வேளாண்மையும் இருந்துள்ளது. 

ஒப்பீட்டு அளவில் தோக்கும் போது பனங்காட்டு வேளாண்மையைப் புன்செய் வேளாண்மை எனலாம். ஏனெனில் இரண்டும் நேரடிப்பாசனமின்றி "வானம் பார்த்த விவசாயம்" (மழையை எதிர் நோக்கி நிகழும் விவசாயம்) இது பின் வரும் முறையில் நிகழும். 

பனங்காட்டு வேளாண்மை:
பனைமரம் செழித்து வளர்ந்துள்ள தேரிநிலப்பகுதி சமதளமாக இல்லாது மேடும்பள்ளமுமாக அமைந்தது. வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கும் நீரே இதற்கு ஆதாரம் என்ற நிலையில் இதில் பெய்யும் மழைநீரினை அதிக அளவில் நிலத்தில் சேமிப்பதும் உரச்சத்தைப் பனைகளுக்குத் தருதலும் அவசியம். இவை இரண்டு பயன்களுக்காக வ.கி. பருவமழை தொடங்கும் முன்னர் பனங்காட்டை பத்து முறை உழுவர். இதில் முதல் உழவு முடிந்ததும் ஆட்டுக்கிடை (பட்டி)  போடுவர். கிடைபோட்டு முடிந்த பின்னர் நன்றாக உழுது விடுவர். இதற்கடுத்து வரும் உழவில் (ஒன்பது அல்லது பத்தாவது)  விதைகளைத் தூவி உழுதுவிடுவர்.

உளுந்து,  பாசிப்பயறு,  தட்டாம் பயறு (காராமணி), மொச்சை போன்ற பயறுவகைகளும் தினை, வரகு, சாமை ஆகிய புன்செய்த் தானிய வகைகளும், பருத்தியும் முக்கியப் பயிர்களாக அமைந்தன. மழை பெய்தவுடன் இவை முளைத்துவிடும்.  இடையிடையே பெய்யும் மழை இவற்றை வளர்த்துப் பலன்தரச் செய்து விடும். எள், மழையைத் தாக்குப்பிடிக்காத பயிர் என்பதால் மழைக்காலம் முடிந்தபின்னர் ஈரப்பதத்தில் உழுது விதைத்துவிடுவர். கிணற்றுநீரின் துணையால் ஆங்காங்கே நடைபெற்ற வேளாண்மையில் வெங்காயம் பயிராகி குலசேகரன் பட்டிணம் துறைமுகம்வழி இலங்கைக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

பருவமல்லாத காலத்தில் பெய்யும் மழை எள் பயிருக்கு ஆகாது என்பதால் தண்ணீர் தேங்காத சரிவான நிலப்பகுதியையே எள் பயிரிடத் தேர்வு செய்வர். (தேரிக் காட்டு ஊர் ஒன்றின் பெயர் எள்ளுவிளை என்பதாகும். விளை - தோட்டம்) பனங்காட்டில் நிகழ்ந்துவந்த கடந்தகால வேளாண்மை குறித்த இச்செய்திகள் பனைப் பொருளாதாரத்துடன் வேளாண் பொருளாதாரமும் இணைத்தே இருந்துள்ளதை உணர்த்துகின்றன. அத்துடன் தேரிக்காட்டுப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகப் பனைமட்டும் இருக்கவில்லை என்ற உண்மையும் வெளிப்படுகிறது.

பனைகளுக்கிடையே உழுவதால் உருவான சால்களில் (கலப்பையின் கொழு பதிந்து சிறு ஓடை போல் உருவாகும் பகுதி) மழை நீர் தேங்கி நிலத்துக்குள் இறங்கிவிடும். நிலத்தைவிட்டு மழைநீர் வழிந்து போகாது. அத்துடன் ஆட்டுப்புழுக்கைகள் கரைந்து மண்ணுடன் இரண்டறக் கலந்துவிடும். அத்துடன் உழும்போது பனையின் வலுவிழந்த சல்லிவேர்கள் அறுந்து போய் புதியவேர்கள் தோன்றும். ஆணிவேர் இல்லாத பனைமரம் உரிய அளவு நீரைப்பெற இப்புதிய சல்லிவேர்கள் துணை புரியும். பயறுவகைகளைப் பயிரிட்டதானது இரண்டு வகையான நன்மைகளை வழங்கியுள்ளது. பனையைச் சுற்றிலும் மழைக்காலத்தில் வளரும் முரட்டுக்களைகளின் வளரச்சியை இவ் வேளாண்மை கட்டுப்படுத்தி உள்ளது. வேர் முடிச்சுப் பயிர்களான பயறுவகைகள் தழைச்சத்தை நிலத்தில் நிறுத்தி உதவி உள்ளன.

இவ்வாறு பனைத்தொழிலுடன் இணைந்த வேளாண்மையானது ஊடுபயிர் போன்று காட்சி அளித்தாலும் ஓர் உபரிவருமானத்தை வழங்கும் தொழிலாக இது இருந்துள்ளது. பனைத்தொழில் செய்து வந்தோரைப் பணப்பயிர் வேளாண்மையின் பக்கம் திருப்பியதில் ஐரோப்பியக் காலனியவாதிகளுக்கு முக்கியப்பங்கு இருந்துள்ளது. இவர்களுள் முதலாவதாக வருபவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

16-ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறைப் பகுதியின் கடலுக்குள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். பின் 1533வாக்கில் முத்துக்குளித்துறையின் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரைப்பகுதியில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவோராக மாறினர். இவர்களுடனான மிளகு வாணியப்போட்டியில் டச்சு நாட்டினரின் கை ஓங்கியநிலையில் தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் மிளகாய், புகையிலை விதைகளை அறிமுகம் செய்ததுடன் அவற்றைத் தங்களுக்கே விற்கும்படி மக்களை வலியுறுத்தினர்.  மிளகுக்கு மாற்றாக மிளகாய் அறிமுகமான நிலையில் அதை மக்களிடையே பரவலாக அறிமுகம் செய்யும்படி இங்குப்பணிபுரிந்த கத்தோலிக்கச் சமயக்குருக்களை போப் வலியுறுத்தியுள்ளார். ஒரு கத்தோலிக்க நாடு என்பதன் அடிப்படையில் போர்ச்சுக்கல் மன்னர் போப்பிடம் வைத்த வேண்டுகோளே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே போர்ச்சுக்கீசியரின் துணையுடன் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய வீரபாண்டியன் பட்டிணம், மணப்பாடு, உவரி, விஜாயபதி, கூட்டப்புளி ஆகிய கடற்கரை ஊர்களைச் சேர்ந்த பரதவர்கள் வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுபோன்றே பனைத்தொழிலை மேற்கொண்டிருந்த கத்தோலிக்க சமயத்தைத் தழுவியிருந்த நாடார்கள் தம் உணவுத் தேவைக்காக மட்டுமே வேளாண்மையில் ஈடுபட்டு வந்த நிலைக்கு மாறாக மிளகாய், புகையிலை ஆகிய பணப்பயிர்களைப் பயிரிடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் மாற்றிவிட்டது.

இச் செய்திகளை வரலாற்றுப் பேராசிரியர் கதிர்வேல் தமது கட்டுரை ஒன்றில் (1983)குறிப்பிட்டுள்ளார். புவியியல் அடிப்படையில் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த மக்கள் பிரிவை வேளாண்மை உற்பத்தியிலும், அவ்வாறு உற்பத்திசெய்த பொருட்களை வாணிபம் செய்வதிலும் ஈடுபடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் செய்துவிட்டது.

ஆங்கிலக் காலனியம்:
தேரிக்காட்டுப்பகுதியில் நிகழ்ந்துவந்த பனங்காட்டு வேளாண்மையானது பனைமரக்காடுகளில் வாழ்ந்தோரின் சுயதேவைப் பூர்த்திக்கான ஒன்றாக இருந்து பின்னர் பண்டமாற்று வாணிபத்திற்கான மூலப்பொருளாக வளர்ச்சி அடைந்துள்ளது. வாணிபத்தில் பொருள்களின் சுழற்சி முக்கியமான ஒன்றாகும். இச் சுழற்சியில் பாரம்பரியமான நம் சந்தைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இச் சந்தைகள் குறித்த மேலோட்டமான பதிவுகளை மேலே குறிப்பிட்ட உபதேசியார் சவரிராயனின் நாட்குறிப்புகள் வழங்குகின்றன.

இச் சந்தைகளில் பொதுமக்கள் வணிகர்களிடம் இருந்து நேரடியாகத் தமக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  சந்தை நடைபெறாத நாட்களில் நுகர்வோரைத்தேடி வணிகரும் வணிகரைத்தேடி நுகர்வோரும் சென்று பொருட்களைப் பண்டமாற்று செய்துகொண்டனர் அல்லது நாணயங்களைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். இது சுருங்கிய அளவிலேயே பொருட்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவும் தன்மையது. எனவே வேளாண் உற்பத்தியும் ஒரு கட்டுக்குள்தான் இருந்தது.

ஆனால் ஆங்கிலக் காலனியம் இப்பகுதியில் அறிமுகமான பின்னர் இந்நிலை மாறத் தொடங்கியது. பனைத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்த நாடார் சமூகத்தில் சில உட்பிரிவினரே நில உரிமையாளராக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. நாடார்கள் தம் உபரியை நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது குறித்து 1947 இல் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் விவரச்சுவடி/ கெசட்டியார்) நூலில் பேட் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதன்படி, 1917க்குமுன் நடந்த நில உரிமை தொடர்பான மறு ஆய்வில் (Resettlement and Resarityதிருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாடார் சமூக நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (இவ் ஆய்வின் சிறப்பதிகாரியாகப் பணியாற்றியவரும் இவர்தான்). திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, திருச்செந்தூர் தென்காசி ஆகிய வட்டங்களில் உள்ள பனை விளைஞர்கள் தம்சேமிப்பை நிலங்களில் முதலீடு செய்ததாகவும் பேட் (1917:128) குறிப்பிட்டுள்ளார்.  இவர் குறிப்பிட்டுள்ள நாங்குநேரி, திருச்செந்தூர் வட்டங்கள் தேரிக்காட்டுப்பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

நிலங்கள் கிடைக்காவிடில், போக்குவரத்துக்கான வண்டிகள், கருப்புக்கட்டி விற்பனை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி வளர்ப்பு என்பனவற்றில் ஈடுபட்டனர். சிலர் குறைந்த அளவு கைமுதலுடன் இலங்கையின் நகரங்களுக்குச் சென்று எழுத்தர்களாகவும் சிறிய அளவிலான கடை வியாபாரிகளாகவும் செயல்பட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களின் கண்காணிகளாகவும் சிலர் பணியாற்றினர். கிறித்தவ மிஷனரிகளின் துணையால் கல்விகற்ற நாடார்கள் அரசு, ரயில்வே, வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றனர். சட்டம், இறையியல், மருத்துவம், பயின்ற கிறித்தவ சமயம் தழுவியோர் மடகாஸ்கர்நேட்டால், மொரிஷியஸ் நாடுகளுக்குக் கிறித்தவ மிஷனரிகளால் அனுப்பிவைக்கப்பட்டனர். பேட் (1917:128-129) குறிப்பிட்டுள்ள இச் செய்திகள் பொருளியல் நிலையில் உபரியை நோக்கி இச்சமூகம் பயணித்ததை நாம் அறியும்படிச் செய்கின்றன.

மேலும் பனைமரத்தின் பயன்பாடுகளை மட்டுமே நம்பியிருந்த வாழ்க்கை முறையில் இருந்து தேரிக்காட்டு மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறத் தொடங்கியதை பேட் எழுதியுள்ள இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. இருந்தபோதிலும் போக்குவரத்திற்கான சாலைகள் தரம் குறைந்தே இருந்துள்ளன. அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வருவாய் வட்டங்களில் இம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள தென்காசி அம்பாசமுத்திரம் வட்டங்கள் நல்ல சாலைகளைக் கொண்டிருந்ததாகவும் தேரிக் காட்டுப் பகுதிகள் மோசமான சாலை அமைப்பைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் (pate 1917:240-241).தேரி நிலப்பகுதியிலும் இதனை அடுத்திருந்த மணல் நிறைந்த கடற்கரைப்பகுதியிலும் வண்டிகளுக்குப் பதிலாகப் பொதிமாடுகள் சரக்குகளைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டன. சற்று எடை குறைந்த சுமைகள் தலைச் சுமையாகவும் காவடி போல் கம்பின் இருமுனைகளிலும் கட்டப்பட்டு தோள்ச் சுமையாகவும் ஓட்டமும் நடையுமாகச் சுமை கூலிகளால் சுமந்து செல்லப்பட்டன (மேலது:241).

வாணிபப்பயணம்:
போக்குவரத்து வசதியும் நீர் வளமும் குறைந்திருந்தாலும் தேரிக்காட்டுப் பகுதியானது தன் வேளாண் பொருள் உற்பத்தியை மையமாகக்கொண்ட வாணிபத்தைக் கொண்டிருந்தது. இது குறித்து இனி இங்கு குறிப்பிடும் செய்திகள் வாய்மொழி வழக்காறுகளின் வழிப் பெறப்பட்டவை. சாத்தான்குளம் என்ற தேரிக்காட்டூர்ப் பகுதியில் இருந்து நாசரேத் வழியாக ஆழ்வார்திருநகரி ஊர் சென்று அங்கு ஓடும் பொருநை ஆற்றைக் கடந்து சென்று வாணிபம் செய்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தமை குறித்த செய்திகளைக் 'கர்ணபரம்பரையாகக்' கேட்டறிந்தவர்கள் கூறிய செய்திகளே இங்கு இடம் பெற்றுள்ளன.

தன் பெயரால் அமைந்த ஒரு வட்டத்தின் தலைநகரமாக சாத்தான்குளம் என்ற ஊர் தற்போது உள்ளது. இதைச் சுற்றி உள்ள சிறிதும் பெரிதுமான கிராமங்கள் தேரிக்காட்டுக்கே உரித்தான பனைமரங்களை மிகுதியாகக் கொண்டவையாக இருந்துள்ளன. இப்பகுதியில் இருந்து பொதி மாடுகளில் சுமை ஏற்றிச் சென்று வாணிபம் திகழ்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்வாணிபம் பொதிமாட்டு வியாபாரம் என்றழைக்கப்பட்டது. இவ் வாணிபத்தில் கருப்புக் கட்டி, தேரிக்காட்டில் பயிரிடப்பட்ட தானியங்கள் பயறுவகைகள் பருத்தி, வெங்காயம் என்பன பொதிமாடுகளின் துணையுடன் பயணித்துள்ளன.

இக் குழுவினர் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து மாலையில் புறப்பட்டு இரவு தொடங்கும் நேரத்தில் சாத்தான்குளம் வந்து சேர்வர். இங்கு இரவு தங்குவதால் குழுவினருக்கும் மாடுகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். மாடுகளில் இருந்து சுமைகளை இறக்கி ஒரே இடத்தில் வைத்துவிட்டு அதைச் சுற்றிலும் படுத்து உறங்குவர். திருடர்களிடம் இருந்து பொருளைக் காப்பாற்றும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. சிலம்புக் கம்புகளுடன் முறைபோட்டுக் காவல் காத்தலும் இருந்துள்ளது. அதிகாலையில் மூன்று அல்லது நான்கு மணி அளவில் கண்விழித்து பொழுது புலரும் முன்பே தம் பயணத்தைத் தொடங்கிவிடுவர். சாத்தான்குளத்தை விட்டு பன்னம்பாறை விலக்கு, பழங்குளம் பிடாதேரி, தைலாபுரம், ஆனந்தபுரம்சடையங்கிணறு, தோப்பூர் விலக்கு, வாழையடி ஆகிய ஊர்களைக் கடந்து நாசரேத் நோக்கி வருவர். வரும் வழியில் சிறு விவசாயிகளிடம் வேளாண் விளை பொருட்களைப் பண்டமாற்று முறையில் கொள்முதல் செய்துகொள்வதுமுண்டு - நாசரேத் ஊரைக் கடந்ததும் ஆழ்வார்திருநகரி வந்து சேர்வர்.

பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் ஆழ்வார்திருநகரி. 1838க்கு முன்னர் இது தென்கரைத் தாலுகா என்ற பெயரில் ஒரு வட்டத்தின் தலைநகராக இருந்துள்ளது. பதநீர் இறக்கும் பருவம் முடியும் மே இறுதி அல்லது ஜூன் தொடக்கக் காலத்தில் பொருநை அற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடாது. எனவே மாடுகளுடன் ஆற்றைக் கடந்து எதிர்க்கரையில் உள்ள ஆழ்வார் தோப்பை வந்தடைவர்.   அங்கு சரக்குகளை இறக்கி ஆற்றில் நீராடி, உணவு உண்டு பயணக் களைப்பைப் போக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆழவார் தோப்பிற்குக் கிழக்கே உள்ள ஏரல் என்ற ஊரை நோக்கித் தொடர்வர்.

பொருநை ஆற்றின் வடகரையில் உள்ள ஏரல் ஒரு முக்கிய வாணிபத்தளம். இங்கு சில்லறை வாணிபம் மட்டுமின்றி மொத்த வாணிபமும் நிகழும் - தாம் கொண்டுவந்த பொருட்களில் பெரும்பகுதியை இங்கு விற்றுவிட்டு சிறு பகுதியுடன் கிழக்கே உள்ள புன்னைக்காயல்பழையகாயல் என்ற கடற்கரை ஊர்களை நோக்கிப் பயணிப்பர். இங்கு பண்டமாற்றாக உப்புக் கருவாடு என்பனவற்றையும் ஏரல், ஆழவார்திருநகரி ஆகிய ஊர்களில் அரிசியையும் பெற்றுக்கொண்டு திரும்புவர். மழைக்காலம் தொடங்கும் முன் மூன்று அல்லது நான்குமுறை இவ் வாணிபப் பயணம் நிகழ்ந்துள்ளது. இவ் வாணிபம் நிகழ்ந்த காலம் குறித்து சிறிது மாறுபட்டக் கருத்துக்கள் கூறப்பட்டன. இருப்பினும் தகவலாளர்கள் கூறிய வாணிபம் நிகழ்ந்த காலமாக இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள் என்று கொள்ள முடியும். இவ் வாணிபமானது பண்டமாற்று முறையிலும் பணவடிவிலும் ஒரு சேர நிகழ்ந்துள்ளது. பனைத் தொழிலுடன் இணைந்து நடந்த வேளாண்மைப் பொருட்கள் முக்கிய வாணிபப் பொருட்களாக மாறி இருந்துள்ளன. இது உழுதொழிலையும் வாணிபத்தையும் இணைக்கும் சரடாக இருந்துள்ளது. 

எச்சங்கள்:
தேரிக்காட்டினரின் வாணிபப் பயணத்தின் போது, பாதுகாப்பு நோக்கில் சிலம்பப் பயிற்சி மேற்கொண்டதன் எச்சமாக தேரிக்காட்டுப் பகுதியில் சிலம்பம் பயின்றோரும் சிலம்ப ஆசான்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளனர். இப்பகுதி மக்கள் மத்தியதர வர்க்கமாக மாறிய பின்னரும் சிறிது காலம் வரை ஏதேனும் ஒரு பயற்றைக் காலை உணவாகக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது இது பெரும்பாலும் மறைந்துவிட்டது.


துணை நூற்கள்:
தங்கசாமி சசிகரன் (2002),  நாசரேத் வரலாறு (1880-2002). 
மோதி சந்திரர் (1970), இந்திய வணிக நெறிகள்
Jeyaseela Stephen (1998), Portguess in the Tamil Coast. 
Jeyaseela Stephen (2016), A Meeting of the Minds. 
Kadhirvel.S (1983), Portuguese Colarial Impact on Agriculture and Trade. Tamil Coast, Westem Colonial Policy. NR.Ray Ed.  
Pale.H.R. (1917), Tinnevelly District Gazetteer. 
Pierre Coubert (1972),  Local History - Historical Studies Today. Felix Gilbert Ed.


கட்டுரை:
"ஓர் உள்ளூர் வணிகவழி"
கட்டுரையாளர்: மூத்தப் பேராசிரியர்  ஆ.சிவசுப்பிரமணியன் (sivasubramanian@sivasubramanian.in)
நாட்டாரியல் ஆய்வாளர்

நன்றி - காக்கைச் சிறகினிலே: ஜனவரி - பிப்ரவரி,  2022.