Friday, May 24, 2019

ஐயனார்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்நூலின் ஆசிரியர் - திரு பொன். சந்திரன்
அய்யனார் பதிப்பகம் சென்னை
வெளியீடு 2017

          இந்நூலின் ஆசிரியர் தமிழகத்தில் கிராமங்களின் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளின் கரைகளில் கோயில் கொண்டுள்ள, பல பிரிவு மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வரும் ஐயனார் யார், அவரின் பிரிவுகள், இருப்பிடங்கள் போன்றவற்றை மேற்கோள்காட்டி இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

          ஆசீவகம் சமயத்தை உருவாக்கிய மற்கலி  கோசாலர் என்பவரே சாத்தன் என்ற முதல் ஐயனார் என்றும் இவர் சங்கப் புலவர் ஆக விளங்கியுள்ளார் என்ற விடயத்துடன் நூல் ஆரம்பமாகிறது. 

          இரண்டாவது ஐயனாராக நந்தவாச்சா என்ற சின்ன ஐயனார், பெருமுக்கல் செல்லும் பாதையில் மலைக்கு முன்பாக இவர் வீற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

          முத்தியாலீசுவரர் என்ற மூன்றாம் ஐயனாராக  பெருமுக்கல் மலையின் தென்புறச் சரிவில் வேல், ஈட்டி என கோயில் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

          மேலும் ஐயனார் வகுத்த ஒன்பது கதிர் என்பது வானியல், கோளியல் பற்றிய அறிவியலாக இருந்துள்ளது. ஆசீவக கொள்கையான ஊழ் கொள்கை மற்றும் கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, மிக வெண்மை என்ற ஆறு சாதிகளை மேற்கோள் காட்டியுள்ளார் .

          பாண்டி என்ற சொல் வெள்ளை என்றும் ஐயனாரே என்றும், ஆசீவகத்தில் வெள்ளை பிறப்பு நிலையை அடைந்த துறவியரைக் குறிப்பதாகவும், மதுரை பாண்டி  முனி கோயிலே இதற்குச் சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

          திருப்பத்தூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளில் ஐயனாரைத் திருமண் தவமுடைய ஐயனார் என பாண்டியர்கள் குறித்துள்ளார்கள் என்றும், திருமறைக்காடு சிவன் கோயிலில் ஆசீவகத்திற்குரிய அறப் பெயர் சாத்தன், பூரணம், பொற்கலை யோடு உள்ள பூரண காயபர், பார்கவ நாதர் ஆகியோரைக் கொண்ட  ஆசீவக கோவில்களாகக் காட்டுகிறார்.

          பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கையைத் தெய்வலோகத்தில் தொடங்கும் சேக்கிழார், திருப்பிடவூர் ஐயனார் கோயிலில் முடிக்கிறார். மேலும் அந்த சருக்கத்திற்கு வெள்ளானைச் சருக்கம் எனவும் வெள்ளை யானை அறப்பெயர் சாத்தனுக்கு உரியது என்றும் தெரியப்படுத்துகிறார்.

          சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் உள்ளன. அங்கு உள்ள  குகை ஓவியத்தில் உள்ள மாங்காய் கொத்து, சாத்தனோடு தொடர்பு உடையது என்றும் அழகர் மலை குகைத்தளம், திருச்சி மலைக்கோட்டை ஐயனார், கஞ்சமலை கலியபெருமாள் ஐயனார், பெரும பெட்டி 5 இலவ மரத்து ஐயனார் போன்ற கோயில்கள் ஆசீவகத்தைச் சேர்ந்தவை  என்று விளக்கியுள்ளார்.

          ஐயனாரின் பிரிவுகள், கரந்தமலை ஐயனார், ஆகாச ஐயனார், பரம ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார் என்று பல்வேறு பெயர்களுடன் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார்.

          மேலும் சான்றுகளாக, பள்ளன் கோயில் செப்பேடு, சிங்கம்புணரி கோயில், இலக்கியங்களில் பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, புறநானூறு, பெரிய புராணம், சினேந்திர மாலை மற்றும் ஐயனார் பிள்ளைத்தமிழ் போன்றவற்றை மேற்கோள் காட்டி ஆசீவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஐயனார் என்பதை வரலாற்றுச் சான்றுகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm
Saturday, May 18, 2019

மொழியியல் நோக்கில் பெண்மொழி  முனைவர் க.பசும்பொன்            இக்கட்டுரை பெண், ஆண் மொழி வேறுபாடுகளைக் கட்டமைக்க முற்படுகிறது.

            பெண்களின் போராட்டம் சமூகத்தின் சலுகைகளைப் பெற அல்ல. அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற என்ற பார்வை உறுதிப்படுத்தப்படுகிறது. தாய்மை உணர்வோடு வாழ்வதற்கும் தாய்மை கிரீடத்தைச் சுமப்பதற்கான வேறுபாட்டையும் தெளிவுபடுத்துகிறது.

            நான் சரி என்று நம்பிய வரிகளை வெட்டினார்கள். காரணம் பெண்ணுக்கென்று ஒரு மொழி உண்டு என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதில் பலருக்குச் சிக்கல் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது அவள் தானாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் சிந்தனைக்குச் சொல் வடிவம் கொடுக்க ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை அப்படியே பயன்படுத்த முடியாது அவள் உள்ளுக்குள் உறைந்து மொழியைச் செதுக்கி செதுக்கி அவளால் தான் வெளியே வடிக்க முடியும். மொழி என்பது வெறும் எழுத்துக்களால், சொற்களால் ஆனது மட்டுமில்லை. மொழிக்கு உணர்வு உண்டு. பாலின வேறுபாடுகளைச் சுட்டும் பொதுவான வழக்கமான மொழி வெளிப்பாடுகள் உடலின் பல்வேறு இயக்கங்களையே மையமாகக்  கொண்டுள்ளன. நமது உடலின் தோற்றம், ஆண், பெண் என்பதை வெளிக்காட்டும் விதமாக நாம் செய்பவை, சொல்பவை நமது உடல் சார் அனுபவங்கள் பாலுறவு, விளையாட்டும், சமயமும் கோரும் பிரத்தியேக உடல்சார் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனுபவங்கள், உடல் மீதான கட்டுப்பாடுகள், ஒழுக்கம் பற்றிய விதிமுறைகள் நியதிகள் ஆகியவற்றை மையமிட்டே பாலினம் சார்ந்த மொழியானது செயல்படுகிறது,  என்கிறார்கள் வ.கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா.

            மொழியியலில் கிளை மொழி ஆய்வுகள் ஆண் பெண் பேச்சில் வேறுபாடு இருப்பதை எடுத்துரைத்துள்ளன. இவை சாதி, சமயம், வயது, ஆண், பெண் போன்றவற்றில் பேச்சு வழக்கில் வேறுபாடுகளுள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   கடந்த ஐம்பது ஆண்டுகளாக மானிடவியல் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்கள், மற்றும் தத்துவவியல் அறிஞர்கள் ஆண், பெண் பேச்சு வேறுபாடு குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

            இலக்கண மற்றும் ஒலிப்புக் கூறுகளில் ஆண், பெண் பேச்சு வேறுபாடு இருப்பதாக ரொமன்ஸ் மொழி, யானா மொழி, குரேல்வென்ட்ரா மொழி மற்றும் மொல்க்ஜியோன் மொழிகளில் ஆதாரங்கள் இருக்கின்றன என்று (பிரான்சில் எக்கா 1972) கூறுகிறார். பெண் பேச்சில் ஆண்களிடம் வேறுபட்டு சில மொழிக் கூறுகளைப் பயன்படுத்துகின்ற தன்மை அமெரிக்க ஆங்கில மொழியில் டெராய்ட் நீக்ரோ பேசும் பேச்சு (Wolform, 1969), நியூ யார்க்  கிளைமொழி (லேபோ, 1966), இங்கிலாந்து கிளைமொழி (ஃபிசல்சர் 1958), நார்விச் கிளைமொழி (பீட்டர் டிரட்சில்) தேசிய மொழி மற்றும் கேஸ்வவுச்சர் மொழி (கேப்வெல்) ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

            கலிபோர்னியா யானா மொழியில் ஆண் பெண் பேச்சு வேறுபடுகின்றது. யானா மொழியில் இரண்டு வகையான வடிவங்கள் உண்டு. ஒன்று முழு வடிவம் (Full form) மற்றொன்று குறை வடிவம் (Reduced form) முழு வடிவம் மொழிக் கூறை ஆண்களுக்கு ஆண்களிடம் பேசும்பொழுது பயன்படுத்துகின்றனர். குறை வடிவ மொழிக்கூறை பெண்களுக்குள் பேசுகின்றனர்.

            இந்திய ஆசிய மொழியான பெங்காலியில் ஆண்கள் மொழிக்கு முதலில் வருகின்ற ‘ந’ சரத்திற்குப் பதிலாக ‘ல’கரத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். (வார்டு காப் 1986 : 304).

            தமிழகத்தில் மீனவப் பெண்களின் பேச்சு வழக்கில் ஆண்களின் பேச்சு வழக்கிலிருந்து ஒலிப்பு முறை வேறுபட்டு இருப்பதை ராஜகுமாரி (1979) குறிப்பிட்டுள்ளார்.

            ஆதிதிராவிடர் பேச்சு வழக்கிலும் ஆண், பெண் வழக்கு வேறுபாடுகள் காணப்படுவதாக ஆரோக்கியநாதன் (1986) சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் பேச்சு வழக்கில் ஒருதனியான ஒலியமுத்தமும், வாக்கிய முடிவில் ஏறி இறங்கும் ஒலியமுத்தமும் காணப்படுகின்றன.

            ‘ச’கர ஒலியைச் ‘ச்சகரமாக’ ஒலிப்பது பெண்களின் பேச்சு வழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றது. சில குறிப்பிட்ட வாக்கியங்களைப் பெண்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று ஆரோக்கியநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

            பெண்கள் மட்டுமே பேசும்மொழி – பெண்ணின் மொழி ஒன்று இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவில் பெண்கள் தங்கள் அக உணர்வுகளைப் பிற பெண்களுடன், தம் தோழியருடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கே உரிய ஒரு மொழியைப் பயன்படுத்தும் மரபு இருந்தது. இம்மொழி ஆண்களுக்குப் புரியாது. சீன நாட்டில் ஜியாங் யாங் எனும் இடத்தில் இம்மொழி உருவாயிற்று. இதை நுஷூ(Nushu) எனக் குறிப்பிடுகின்றனர்.

            பெண்களின் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ராபின் லேகாப் (1975), மொழியும் பெண்களுக்கான இடமும் என்ற நூலில் பெண்மொழி ஓர் அழுத்தம் இல்லாதது, உடன்பாட்டுக் கேள்விகளை அடிக்கடி கேட்பது, அதிகமான ஆடைகள், அதிக மரியாதைச் சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, மொழியை எளிமையாகச் சரளமாகப் பயன்படுத்த முடியாமை மற்றும் முற்றுப் பெறாத வாக்கியங்கள் அதிகம் இருப்பது போன்ற கூறுகளைக் கொண்டது எனச் சுட்டுகிறார். (எல்.இராமமூர்த்தி, பெண்ணியமும் மொழி நிர்ணயமும் ப.7).

            பேராசிரியர் மீனாட்சி முருகரத்தனம், பழமொழிகளை அதிகம் கையாளுதல், சுற்றி வளைத்துப் பேசுதல், சாடை பேசுதல் போன்றவற்றையும் பெண்ணின் மொழிக் கூறுகள் என்கிறார்.

            சங்க இலக்கியப் பாடல்களில் மூதின்முல்லை என்னும் துறையைச் சார்ந்த பாடல்கள் ஆண்பாற் புலவர்களும் பெண்பாற் புலவர்களும் பாடியுள்ளனர். மொழியியல் அடிப்படையில் இவற்றை ஆராய்ந்த இராமமூர்த்தி பால் வேறுபட்டால் மொழிக் கூறுகள் மாறுபடுகின்றன என்றார். ஆ, உ வின் முடிவுகளாகச் சில பால் பாகுபாடு காட்டும் கூறுகளையும் சுட்டுகிறார்.

சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழியில் வினைமுற்றுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஆண்பாற் புலவர்களின் மொழியில் எச்சங்களின் பயன்பாடு அதிகம் இடம் பெற்றுள்ளன. வினை முற்றுகளில்,
            கெடுக, வெல்க
            களந் தொழிந்த தன்னே
            ஆண்டு பட்டனவே
            பரவும், எய்தும்
என்னும் வியங்கோள் வினைமுற்றுகள் பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ளன. அதே போல பெண்பாற் புலவர்கள் மொழிகளில் தருதல், ஆக்குதல், கொடுத்தல், பெருக்குதல், மூதின் மகளிராதல் போன்ற தொழிற்பெயர்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பார் ரேணுகாதேவி (2013 : 155). எச்சங்கள் பொதுவாக வினையெச்சம், பெயரெச்சம் என இரு வகைப்படும். எச்சங்களின் பயன்பாட்டிலும் வேறுபாடுகள் உள்ளன. பெண் மொழியில் வினையெச்சங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்பாற் புலவர்களால் பெயரெச்சங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

            பெயரடைப் பயன்பாட்டையும் ஒருவித மொழி ஆளுமையுடன் வெளிப்பாடாகக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

            புதுச்சேரி மாநில மீனவர்களின் கிளை மொழியை கட்டுரையாளர் ஆய்வு மேற்கொண்டபோது வெட்டியான் என்ற சொல்லாட்சி பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது தரப்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல்லாகும். பறையன் என்கிற சொல்லை ஆண்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பெண்கள் இச்சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துகின்றனர்.

            மேளம் (மோளம்), மேடு (மோடு), திண்ணு (துண்ணு), பிள்ளை (புள்ளே) போன்றவை தரப்படுத்தப்பட்ட சொற்கள், அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்கள் தரப்படுத்தப்படாத சொற்கள், மீனவப் பெண்கள் ஆண்களைவிட மேற்குறிப்பிட்ட தரப்படுத்தப்பட்ட சொற்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

            தொள்ளாயிரம் (தூளயிரம்), நல்லவரு (நெல்லவரு), சரியில்லெ (செரியில்லே), கொத்தனாரு (கொலுத்துகாரு), தொடப்பம் (தொடப்பக்கட்டே), மண்ணென்ன (மரஎண்ணெ), அதிகமாகவே (மிச்சமாவே) ஆகிய சொற்கள் தரப்படுத்தப்பட்ட சொற்கள், அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்கள் தரப்படுத்தப்படாத சொற்கள். அடைப்புக் குறிக்கு வெளியே உள்ள சொற்களைப் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

            தரப்படுத்தப்பட்ட சித்தப்பா என்ற சொல்லை பெண்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் நயினா என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

            உண்மெ, அர்சி, ரசம், விவசாயம், குடிசெ, வரிச்செ, தலகானி, பாணகொம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கொம்பேரி மூக்கன், சூரியன், வியாழன், பொதன், சாப்டு போன்ற தரப்படுத்தப்பட்ட சொற்களை ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். தரப்படுத்தப்பட்ட சொற்களைப் பெண்கள் பேசுகின்றனர் என்ற கருத்தை லெபோ (1966), டிரட்சில் (1974), பொய்தோன் (1989). யுரோவா ; (1989), ஏசுதாசன் (1977) போன்றோர் ஆதரிக்கின்றார்கள்.

            பெண்கள் தரப்படுத்தப்பட்ட சொற்களை 70.59 விழுக்காடும் ஆண்கள் 29.41விழுக்காடும் பயன்படுத்துகின்றனர்.

            பெண்கள் தரப்படுத்தப்பட்ட சொற்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு சமூகச் சூழலில் சொல்லின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.  மீன் விற்பதால் மற்ற சாதியினரோடு பழகும் சூழல் உருவாகிறது. அதனால் தரப்படுத்தப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

            முடிவாக, ஆண், பெண் பேச்சில் ஒலிப்பில், இலக்கணத்தில், வாக்கியத்தில் வேறுபாடு உள்ளதை அறிய முடிகிறது.பார்வை நூல்கள்:
1. பஞ்சாங்கம், க., பெண்-மொழி-புனைவு, காவ்யா, பெங்களூர், 1999.
2. பிரேமா, இரா., பெண்ணியம் சொற்பொருள்விளக்கம், ஷான்வி புக்ஸ், பெங்களூர், 2015.
3. ரேணுகாதேவி, வீ, சங்கப் பெண்பாற்புலவர்களின் மொழிநடை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012.
4. Bodine, Ann, Sex Differentiation in Language. In Barrie Thorne and Nancy Henley. (eds.) Language and Sex: Difference andDominance. 130-151 Rowley, Mass: Newbury House Publishers, 1975.
5. Brouwer, Dedede, Gender Variation in Dutch : A Sociolinguistic Study of Amsterdam Speech. Dordrecht: Foris Publications. 1989.
6. Brouwer, D.M. Gerritsen and D.Dehaan, Speech Differences between Woman and Men: On the Wrong Track? Language in  Society 8:33-50.1979
7. Capell, Studies in Sociolinguistics, Paris, The Hague: Mounton, 1966.
8. Fischer, J.L., Social Influences in the Choice of a Linguistic  Variant, Word 14: 47-56, 1958.
9. Francis, Ekka, Men’s and Women’s Speech in Kurukh, Linguistics, 14:47, 1972.
10. Lonov, W. The Social Stratification of English in New York City,  Washington, D.C., Cal, 1966.
11. ______, Some Sources of Reading Problems for Negro Speakers  of Non-Standard English (Mino). Chicago: Spring Institute of on New Directions in Elementary English, 1966.
12. Mary, R.Hass, Man’s and Woman’s Speech in Koasati. In Dell  Hymns (ed.) Language, Culture and Society. 228. New York:  Harper and Row, 1964.
13. Poynton, Cate, Language and Gender: Making the Difference, Oxford : Oxford University Press, 1989.
14. Trudgill, Peter, Sex Covert Prestige and Linguistic Change in Urban British English Norwich, Language and Society I: 179-195,  1972.
15. Trudgill, P., The Social Differentiation of English in Norwich.  Cambridge: Cambridge University Press, 1974.
16. ______, Sociolinguistics: An Introduction. Haramondsworth:  Penguin, 1974.
17. Vasantha Kumari, T., The Standard Spoken Tamil, In  B.Gopinathan Nair (Ed.) Studies in Dialectology 1, 1. Trivandrum:  Department of Linguistics (Mimeo), 1976.
18. Warhaugh, Ronald. An Introduction to Sociolinguistics, Oxford  Basil Blackwell, 1990 (1986).
19. Wolfram, W., A Sociolinguistic Description of Detroit Negro  Speech. Washington, DC : Centre for Applied Linguistics, 1969.
20. Yesudhason, C., “Tamil Dialects of Kanyakumari District (with  reference to Vilavankodu Taluk)”, Unpublished Ph.D. Dissertation,  Annamalai Nagar : Annamalai University, 1977நன்றி:  உலகத்தமிழ் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 


முனைவர் க. பசும்பொன்
மேனாள் இயக்குநர், உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
விளக்குமாறாகும் தாவரங்கள்


 — ஆ.சிவசுப்பிரமணியன்


          தான் வாழும் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது மனித குலத்தின் இயல்பு. வசிக்கும் இடத்தின் தரையில் படியும் தூசி, தண்ணீர், உண்ணும்போது சிதறிய உணவுத் துண்டுகள் ஆகியனவற்றை அகற்றும் பணியை அவன் மேற்கொண்டு வாழ்ந்துள்ளான். இது உயிரினங்களின் இறைச்சியை உண்டு குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனலாம். தான் வேட்டையாடி உணவாகக் கொண்ட உயிரினங்களின் இறைச்சித் துணுக்குகளையும், எலும்புத் துண்டுகளையும் தான் வசித்த குகைக்குள் அவன் போடவில்லை. அவற்றையெல்லாம் குகைக்கு வெளியில்தான் குவித்து வைத்துள்ளான். இக்குவியலை 'அடிசிலறைக் கழிவுகள்' (கிச்சன் மிட்டன்ஸ்) என்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர். இப்பணியை மேற்கொள்ள ஏதேனும் ஒரு கருவியை உருவாக்கி அவன் பயன்படுத்தியிருக்கும் வாய்ப்பு உள்ளது.

          தன் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவன் உருவாக்கிப் பயன்டுத்திய கருவி, அவனது பொருள்சார் பண்பாட்டியல் (மெட்டீரியல் கல்சர்) வரலாற்றில் ஓர் இடத்தைப் பெறுகிறது.தமிழரது பொருள்சார் பண்பாட்டு வரலாற்றில், இருப்பிடத்தை தூய்மைப்படுத்தப் பயன்பட்ட கருவி ‘விளக்குமாறு’ என்று பொதுவாக அறியப்படுகிறது. இது தவிர ‘துடைப்பம்’, ‘வாரியல்’, ‘பெருக்குமாறு’ என்று வட்டாரத் தன்மை கொண்ட பெயர்களாலும் விளக்குமாறு அழைக்கப்படுகிறது. தமிழ் நிகண்டு நூல்களிலும் விளக்குமாறைக் குறிக்கும் சொற்கள் சில இடம் பெற்றுள்ளன.

          கி.பி. எட்டாவது அல்லது பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் பிங்கல நிகண்டு (6:587) ‘துடைப்பம், சோதனி மாறு, அலகு வாருகோல்’ என்ற பெயர்களால் துடைப்பத்தைக் குறிப்பிடுகிறது. கி.பி. எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திவாகர நிகண்டு (6:199) ‘சோதினி, மாறு துடைப்பம்’  ஆகும் என்கிறது. இவ்விரு நிகண்டுகளுக்கும் காலத்தால் பிந்தைய சூடாமணி நிகண்டு (7:57) ‘சோதனி, மாறு’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இவற்றுள் அலகு என்ற சொல் கல்வெட்டுகளில் இடம்பெறுவதுடன் கோவில் பணிகளுடன் தொடர்புடையதாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. அலகு என்ற பெயருடைய விளக்குமாறால் கோவிலைத் தூய்மை செய்வதை அலகிடல் என்று குறிப்பிடும் இடைக்காலக் கல்வெட்டுக்கள், இப்பணி மேற்கொள்வோரை அலகிடுவார் என்றழைக்கின்றன.

          இறைப்பணியின் ஓர் அங்கமாக அலகிடல் இருந்துள்ளது. சைவ சமயத்தில், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகையான நெறிகள் உண்டு. இவற்றுள் சரியை என்பது, ‘உடம்பின் தொழில்களாக நிகழ்வது’ என்று வெள்ளைவாரணார் (2002:724) விளக்கம் தருவார். இதற்கு எடுத்துக் காட்டாக, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் (631:3) ஒன்றைக் குறிப்பிடுகிறார். (மேலது, 725). அப்பதிகத்தில்  ‘...எம்பிரானுடைய கோயில் புக்கும், புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. பொழுது புலரும் முன் கோயிலை அலகிடல் என்பது, அலகு என்றழைக்கப்படும் துடைப்பத்தால் கோயிலைப் பெருக்கி தூய்மைப்படுத்துவதைக் குறிப்பிடுகிறது.

          கோவிலுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் பொருட்களையும் ‘திரு’ என்ற அடைமொழியிட்டு அழைப்பது மரபு. இதன் அடிப்படையில் அலகு என்பதை திரு அலகு என்று குறிப்பிடும் மரபும் உண்டு. பெருக்குமாறால் (துடைப்பத்தால்) ஒருவனை அடி என்பதை ‘திரு அலகு எடுத்து திருச்சாத்து சாத்து’ என்று பகடியாகக் கூறுவது இம்மரபை அடிப்படையாகக் கொண்டதுதான். மூத்த பெண் தெய்வம் என்ற பொருளில் ஜோஸ்டாதேவி (சேட்டை) என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பெண் தெய்வம் ஒன்றுண்டு. மூத்ததேவி என்பதே மூதேவி என்றாயிற்று என்பர். தொடக்கத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வமாக இருந்து பின்னர் தூக்கம் சோம்பல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு இழிவான தெய்வமாக இதுமாற்றப்பட்டுள்ளது. மூத்தவள் என்ற பொருளைத்தரும் ‘தவ்வை’ என்ற சொல்லால் திருக்குறள் (167;2) இத்தெய்வத்தைக் குறிப்பிடும். தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள் சிலவற்றில் இத்தெய்வத்தின் சிலை இடம் பெற்றுள்ளது. இத்தெய்வத்தின் படைக்கலனாக, பெருக்குமாறு அமைந்துள்ளது. ‘வன்படை துடைப்பம்’ என்று பிங்கல நிகண்டு (2:97) குறிப்பிடுகிறது.

இழிவு:
          இப்படித் தொன்மையான எழுத்துப் பதிவுகள் இருப்பினும் இழிவான அடையாளமே விளக்குமாறுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாய்மொழி வழக்காறுகளிலும், மக்களிடையே வழக்கிலுள்ள நம்பிக்கைகளிலும் இது பதிவாகியுள்ளது. தகுதியற்ற ஒருவனுக்குச் செய்யப்படும் சிறப்பைக் குறிப்பிடும்போது ‘வாரியக்(ல்) கொண்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரி’ என்ற சொலவடையைப் பயன்படுத்துவதுண்டு. வாய்ச்சண்டையின்போது ‘உன்னை வாரியலால அடிப்பேன்’ என்று சூளுரைப்பதுண்டு. சிலர் வாரியல் என்ற சொல்லுக்கு முன்பாக ‘பழ’ என்ற அடைமொழியைப் பயன்படுத்துவதுண்டு. இங்கு பழ என்ற சொல் ‘பயன்படுத்திய’ என்ற பொருளை வெளிப்படுத்தும். ஆங்கிலக்காலனிய ஆட்சியின்போது அரசு அலுவலங்களைக் கச்சேரி என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகையில் காவல்நிலையமும் கச்சேரி எனப்பட்டது. காவல்நிலையத்தின் அழைப்பாணையின் பேரில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அங்குசெல்பவன் படும்பாட்டை

கச்சேரிக்குப் போவானேன்கையக்கட்டி நிற்பானேன்
வாக்குமூலம் கொடுப்பானேன் / சொல்வானேன்
வாரியப்(ல்) பூசை படுவானேன்

என்று சிறுவர் விளையாட்டுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறுது. இப்பாடல் பாடப்பட்ட காலத்தின் சமூக நடப்பியலை இதன் வாயிலாக அறியமுடிகிறது.விளக்குமாறைத் தொட்ட கையைக் கழுவாமல் குழந்தைகளைத் தொடக்கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது. அப்படித் தொட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படையில் விளக்குமாறைப் பயன்படுத்திய பின்னர் கையைக் கழுவிவிட்டே குழந்தையைத் தொடுவர். அடைமழைக் காலங்களில் விடாது மழை பெய்து, மக்கள் தொல்லைக்கு ஆளாகும்போது மழையை நிறுத்தும் வழிமுறையாக விளக்குமாறை எடுத்து வந்து வானத்தை நோக்கி காட்டுவர். அதுபோல, முருங்கை, மா போன்ற மரங்களில் கண்ணேறு படுவதைத் தடுக்கும் வழிமுறையாகச் செருப்புடன் விளக்குமாறையும் கட்டித் தொங்கவிடுவதுண்டு.

          விளக்குமாறு என்ற சொல்லை மையமாகக் கொண்டு தமிழ் ஆசிரியர்களிடம் வாய்மொழி வழக்காறு ஒன்று வழக்கிலுள்ளது. அது வருமாறு:
          ‘பரிதிமாற் கலைஞர்’ என்று அழைக்கப்படும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் மாணர்வகளுக்கு தமிழ் யாப்பிலக்கணம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். யாப்பு (செய்யுள்) உறுப்புக்களாக எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனக் கூறிமுடித்தார். உடனே குறும்புக்கார மாணவன் ஒருவன் எழுந்து மிக அடக்கத்துடன், ‘அய்யா தொடைக்கு மேல் என்னவோ?’ என்று வினவினான். அதற்கு ‘விளக்குமாற்றால் விளக்குதும்’ என்று அவர் விடையிறுத்தாராம். இவ்விடையானது, ‘விளக்கும் முறையில் விளக்குவோம்’ என்றும், ‘விளக்குமாறு என்ற வீடு பெருக்கும் கருவியால் அடித்து விளக்குவோம்’ என்றும் இருபொருள் தருவதாய் அமைந்து நகைப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்த ஆய்வு ஒருபுறமிருக்க, விளக்குமாறால் அடிப்பதன் இழிவு குறித்த நம்பிக்கையை இது வெளிப்படுத்தி நிற்கிறது.

காணிக்கைப்பொருள்:
          இப்படி இழிவின் அடையாளமாகக் குறிப்பிடப்படும் விளக்குமாறு வழிபாட்டுக்குரிய ஆலயங்களில் காணிக்கைப் பொருளாகவும் இடம் பெறுகிறது. தமிழ்நாட்டின் சைவ வைணவக் கோவில்களில் இவ்வழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வடஇந்தியாவில் ஆக்ரா நகரின் நெடுஞ் சாலையில் உள்ள பாடலேஸ்வரர் சிவன்கோவிலில், விளக்குமாறைக் காணிக்கைப் பொருளாக வழங்கும் வழக்கம் நிலவுகிறது. 150 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு காணிக்கையாக, விளக்குமாறு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தொடர்பாகப் பின்வரும் புராணக்கதை கூறப்படுகிறது:
          இக்கோயிலுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிக்காரி தாஸ் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். செல்வவளம் மிக்க இவர் தோல் நோயால் பாதிக்கப் பட்டார். அவர் உடல் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி உடல்நோவைத் தந்தன. இந்நோய்க்கு சிகிச்சை பெற ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றார். அவ்வாறு செல்லும்போது தாகம் மீதுற, அதைப் போக்கிக் கொள்ள வழியில் உள்ள ஆசிரமத்திற்குள் சென்றார். அவர் நுழைந்தபோது அங்கிருந்த துறவி ஒருவர் விளக்குமாறால் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த விளக்குமாறானது தவறுதலாக வணிகரின் மீதுபட்டுவிட்டது. உடனே வணிகரின் தோல்நோயும் உடல் வலியும் மறைந்து போயின. இதனால் ஆச்சரியமுற்ற வணிகர் இதற்கான காரணத்தை அவரிடம் வினவினார். தான் தீவிரமான சிவனடியார் என்றும் அவருடைய அருளால் இது நிகழ்ந்திருக்கும் என்றும் அவர் விடையிறுக்க, தங்கக்காசுகள் நிரம்பிய பையொன்றை அவருக்கு வழங்க வணிகர் முன்வந்தார். ஆனால் அந்த எளிய துறவி அதை ஏற்க மறுத்து, அதற்கு மாறாக சிவன்கோவில் ஒன்றைக் கட்டித் தரும்படி வேண்டினார். அதை ஏற்று சிவன் கோவில் ஒன்றை வணிகர் கட்டித் தந்தார்.

          துறவியின் துடைப்பம் பட்டு அவரது தோல் நோய் குணமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் உருவாகி இன்று வரை அது தொடர்கிறது. தோல் நோயாளிகள் அதைப் போக்கும் வழிமுறையாக இக்காணிக்கை வழங்கலை மேற்கொள்கிறார்கள். (விக்கிப்பீடியா).

          இவ்வழக்கம் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளதா என்பது தெரியவில்லை. இது இருந்திருக்க வேண்டும் என்று கருதும் வகையில் தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் நிகழ்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்ற நகரமானது, வடகரை, தென்கரை என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இதில் வடகரையில் உள்ள ‘பத்திரிசையார்’ (புனித பேட்ரிக்) தேவாலயத்துடன் இணைந்த துணைக்கோவிலாக, புனிதவனத்து அந்தோணியார் ஆலயம் தென்கரைப் பகுதியில் உள்ளது. 1920- இல் கட்டப்பட்டு அகஸ்தினார் என்ற ஆயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இவ்வாலயத்தின் திருவிழா தை மாதம் நிகழும். உடலில் தோன்றும், பாலுண்ணி மரு, கட்டி என்பனவற்றைக் குணப்படுத்தும் மந்திர சிகிச்சை முறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் வழக்கம் இங்கு நிலவுகிறது.

          குறிப்பிட்ட வகைத் துடைப்பம் என்றில்லாமல் அனைத்து வகையான துடைப்பங்களும் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. காணிக்கைப் பொருளாகப் புதிய துடைப்பத்துடன் வந்து, கோவில் நுழைவாயில் கதவின் அருகில் அதை வைத்துவிட்டு: அந்தோணியாரை வணங்கிச் செல்வர். வீட்டுத் தேவைக்காகத் துடைப்பம் தேவைப்படும்போது, காணிக்கையாக வைக்கப்பட்ட துடைப்பத்தை எடுத்துச்செல்வோரும் உண்டு. இவ்வாறு எடுத்துச் செல்வோர் உரிய விலையைத் தாமாகவே முன்வந்து கோவில் உண்டியலில் போடுவர். சிலர் சந்தை விலையைவிடக் கூடுதலான தொகையைப் போடுவதும் உண்டு. (வின்சென்ட் டிபால், எஃபி, பாஸ்டின், நெல்சன் பெரியகுளம்).

          திண்டுக்கல் அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பங்கைச் சேர்ந்த தாமஸ்புரம் தேவாலயத்தில் ஏப்ரலில் நிகழும் தோமையார் திருவிழாவின்போது நீண்ட வரிசையில் நின்று காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்குகிறார்கள். சமய வேறுபாடின்றி நிகழும் இந்நிகழ்வில் இக்கோவிலைச் சுற்றியுள்ள பேகம்பூர், நத்தம், குட்டியாம்பட்டி, பித்தளைப்பட்டி, மரியநாதபுரம், ஏ.வெள்ளோடு ஆகிய ஊர்களில் இருந்து திரளான மக்கள் இதில் பங்கேற்கிறார்கள். தரையில் உள்ள குப்பையை விளக்குமாறு பெருக்கித் தள்ளுவது போன்று மனிதர்களின் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்த இக்காணிக்கை உதவும் என்ற நம்பிக்கை இங்கு வருவோரிடம் உள்ளது. (பணி. ர.ஜார்ஜ், சே.ச.,) தமிழகத்தில் கத்தோலிக்கம் பரவத் தொடங்கியபோது இங்குள்ள சமயம் சார்ந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் தழுவிக்கொண்டது. தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், முளைப்பாரி வளர்த்தல், உப்பும் மிளகும் கலந்து காணிக்கைப் பொருளாக வைத்தல், உலோகம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட உடல் உறுப்புக்களைக் காணிக்கையாக வழங்கி குறிப்பிட்ட உடல் உறுப்பில் ஏற்பட்ட நோயைப் போக்கிக் கொள்ளலாம் என்று நம்புதல், தென்னை மரக்கன்றைக் காணிக்கையாக வழங்கல், கால்நடையாகக் குறிப்பிட்ட தலங்களுக்குப் பயணித்தல் என அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அவர்களது பழைய சமயவாழ்வின் தாக்கத்திற்கு ஆட்பட்டவைதாம். இவ்வாறு பண்பாட்டு வாழ்வில் இருவேறு பண்பாடுகள் இணைவதை பண்பாடு ஏற்றல் (Inpulpration) என்று மானிடவியலாளர் குறிப்பர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் தோல் நோயைப் போக்கிக் கொள்ளும் வழிமுறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் செயலானது, தம் முந்தைய சமய வாழ்வின் எச்சமாக இப்பண்பாடு ஏற்றலை அவர்கள் பின்பற்றி வருவதாகக் கருத இடம் தருகிறது.

விளக்குமாறு வகைகள்:


          இருப்பிடத்தைத் தூய்மைப்படுத்த உதவும் கருவியான விளக்குமாறு ஒரே தன்மைத்தது அல்ல, பயன்படும் வட்டாரத்திற்கு ஏற்ப இதில் வேறுபாடுகள் உண்டு. இது நாட்டார் தொழில்நுட்பத்தின் பொதுக்கூறு. இவ்வேறுபாடு ஒருபக்கம் இருக்க, விளக்குமாறுகள் பலவகையாய் அமைவதன் அடிப்படைக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
          1. தூய்மைப்படுத்த வேண்டிய இடத்தின் இயல்பு
          2. அதன் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டிய பொருட்களின் இயல்பு
          3. அப்பகுதியில் பரவலாகக் கிடைக்கும் தாவரம்.

          திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் இக்காரணங்களின் அடிப்படையில் பயன் படுத்தப்படும் துடைப்பங்கள் தாவரங்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தாவரங்களை இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்கள், மனிதர்கள் பயிர்செய்து வளர்க்கும் தாவரங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களில் இருந்து புல்லுவாரியல், ஒட்டுப்புல் வாரியல் என இரு துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் பேணி வளர்க்கும் தென்னை மரத்தின் ஓலையில் காணப்படும் தென்னை ஈர்க்கு, பனைமரத்தின் குருத்தோலையுடன் இணைந்து காணப்படும், பனை ஈர்க்கு, பனையின் உச்சிப்பகுதியில் இடம் பெற்றுள்ள பீலி என்னும் உறுப்பு ஆகியனவற்றால் துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. பயன்பாடு முடிந்த பருத்திச் செடியின் தண்டுப்பகுதி, கத்தரிச் செடியின் தண்டுப்பகுதி, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் சிறிய கிளைகள் என்பன விற்பனை நோக்கில் இன்றி பயன்பாட்டு நோக்கில் அவ்வப்போது துடைப்பங்களாக உருவாக்கப்படுகின்றன.

புல்லுவாரியல்:
          புல்லுமாறு என்றும் இதைக் கூறுவர். கரிசல் நிலப்பகுதியில் அறுகம் புல்லைப் போன்று தரையில் படரும் களைச் செடியைப் பிடுங்கிச் செய்யப்படுவதால் இது புல்லுவாரியல் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்புல்லை வாரியப்புல் என்றும் கூறுவர். போக்குவரத்து இல்லாத காலத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் இப்புல்லைச் சேகரித்துத் துடைப்பமாக ஆக்குவர். சிறார் முதல் முதியோர் வரை இதன் உருவாக்கத்தில் பங்கு பெறுவர். கரிசல் நிலப்பகுதியில் விளையும், கம்பு கேழ்வரகு, சாமை, சோளம், வரகு ஆகிய தானியங்களுக்குப் பண்டமாற்றாக இதை வழங்குவர். மண் தரைகளாலான வீடுகளில் பயன்படுத்த இது உதவும் தன்மையது. இதைப் பயன்படுத்தி தரையைக் கூட்டும்போது சாணியால் மெழுகப்பட்ட மண் தரை கிளறப்படுவதில்லை. உணவருந்தும்போது சிதறிய உணவுப் பொருட்கள் நைந்துபோய், தரையுடன் ஒட்டிக்கொள்வதில்லை. தண்ணீர் தேங்கியுள்ள செங்கல் தரைகளில் இதைப் பயன்படுத்துவது கிடையாது.

ஒட்டுப்புல் துடைப்பம்:          
          மூன்று அல்லது நான்கடி உயரத்திற்கு மெல்லிய தண்டுடன் குப்பைமேடுகளிலும், ஊருக்கு வெளிப் பகுதியிலும் வளரும் புல்வகை ஒன்றுண்டு. இதன் மேல் பகுதியில் குத்தும் தன்மை கொண்ட மெல்லிய மலர் போன்ற ஒரு உறுப்பு உண்டு. இது மனிதர்களின் ஆடையிலும் உயிரினங்களின் தோலிலும் ஒட்டிக்கொண்டு குத்தும் தன்மையது. சீலைப்புல் என்றும் இப்புல்லை அழைப்பர். இது காற்றில் பரவி இப்புல்லின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இப்புல்லை அறுத்துக் காயவைத்து துடைப்பம் உருவாக்கப்படுகிறது. இப்புல்லின் அடிப்பகுதி துடைப்பத்தின் அடிப்பகுதியாக அமைய உச்சிப்பகுதி துடைப்பத்தின் நுனிப்பகுதியாக அமையும். நுனிப்பகுதி மென்மையாக இருப்பதால் செங்கல் பதிக்கப்பட்ட தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தரைகளிலும் படியும் தூசியை நன்கு அப்புறப்படுத்தும் தன்மையது. இதைப் பயன்படுத்தத் தொடங்கும்போது உச்சிப்பகுதியில் உள்ள மலர் போன்ற அமைப்பு தரையில் உதிர்வதுடன், மனிதர்களின் ஆடையில் ஒட்டிக்கொண்டு குத்தி வருத்தும். சற்றுப் பயன்படுத்திய பின்னரே இத்தொல்லையில் இருந்து விடுபட முடியும். ஈரம் படிந்த தரையில் இதைப் பயன்படுத்த முடியாது. தூசியை அப்புறப்படுத்த இது நன்கு உதவும்.

தென்னை ஈர்க்குத் துடைப்பம்:
          தென்னை ஓலையின் நடுவில் உள்ள சிறுகுச்சி போன்ற பகுதி ஈர்க்கு எனப்படும் ஈர்க்கினால் இது உருவாக்கப்படுகிறது. சொரசொரப்பான கல் பதிக்கப்பட்ட தரைகளைப் பெருக்குவதற்கு இது நன்கு உதவும். கல்தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களிலும், குப்பையை அகற்ற மட்டுமின்றி தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவவும் மரப்பொருட்களைத் தண்ணீர் ஊற்றிக் கழுவவும் இது நன்கு பயன்படும். விறகு அடுப்புகள் பயன்பாடு மிகுந்திருந்த பழைய காலத்தில் அடுப்பங்கரைச் சுவர்களும், புகைக்கூண்டின் உட்பகுதியும் புகைபடிந்து கருநிறமாகக் காட்சியளிக்கும். இதன் மீது நீரை ஊற்றி இத்துடைப்பத்தால் அழுத்தித் தேய்த்து கருநிறத்தைப் போக்குவர். ஈரம் காய்ந்த பின்னரே வெள்ளையடிப்பு நிகழும். வீடுகளின் சுவர்களில் இடம்பெறும் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகளின் வலை இவற்றை அகற்றவும், இதன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று. அதிக உயரத்தில் இதைப் பயன்படுத்த நீண்ட கம்பின் நுனியில் இதை இறுக்கிக்கட்டி ஒட்டடை குச்சியாகப் பயன்படுத்துவதுண்டு. இன்றும் கூட இது வழக்கில் உள்ளது.

பனை ஈர்க்குத் துடைப்பம்:
          பனையின் உச்சிப்பகுதியில் உருவாகும் வெண் நிறமான குருத்தோலை வளர்ச்சியுற்று பச்சை நிற ஓலையாக மாறும். இந்நிலையில் அதைச் சாரோலை என்பர். தென்னை ஓலையைப் போன்று சாரோலை நடுப்பகுதியில் ஈர்க்கு உருவாகும். சாரேலையின் அகலத் தன்மையைக் குறைத்து ஓலையையும் ஈர்க்கையும் பிரிக்காது துடைப்பம் செய்வர். இதனால் இதில் ஓலையும் ஈர்க்கும் இணைந்து காணப்படும். ஒட்டுப்புல் துடைப்பத்தைப் போன்று தூசி அகற்ற இது பயன்படும். ஆனால் அதைவிட ஓரளவுக்கு ஈரத்தரையில் பயன்படுத்தலாம். என்றாலும் தென்னை ஈர்க்குத் துடைப்பம் போன்று ஈரத்தரையில் பயன்படுத்த முடியாது.

பீலித் துடைப்பம்:
          ஆண் பனையின் உச்சியில் மட்டைகளுக்கு இடையில் பாளை என்ற உறுப்பு உருவாகும். இதைச் சீவியே கள்/பதநீர் எடுப்பர். பாளையின் பாதுகாப்பக் கவசம் போன்று பீலி என்றழைக்கப்படும் ஓர் உறுப்பு உண்டு. இதைக் கொண்டும் துடைப்பம் செய்வர் ‘வாரியப் புல்’ துடைப்பம் போன்று இதன் பயன்பாடு அமையும்.

பிற துடைப்பங்கள்:
          சரளைக்கற்கள் உள்ள நிலப்பகுதியிலும் மாட்டுத்தொழுவங்களிலும் பயன்படுத்த மேற்கூறிய துடைப்பங்கள் பயன்படாது. இந்நிலையில் பருத்தி, கத்திரி ஆகிய செடிகளின் பயன்பாடு முடிந்த நிலையில் அவற்றைப் பிடுங்கி வெயிலில் காயவைத்து, வைக்கோலைப் போன்று சேகரித்து வைப்பர். இவை உயிரினங்களுக்கும் உணவாகப் பயன்படாது. எரிபொருளாக மட்டுமே பயன்படும். இவற்றைக் கொண்டு துடைப்பம் போல் உருவாக்கி சரளைக்கற்களை அகற்றவும் மாட்டுத் தொழுவங்களில் சேரும் சாணம், தீவனக் கழிவுகளை அகற்றவும் பயன்படுத்துவர். இதே பணிகளுக்காக, சோளத்தட்டை, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் கிளைகள், நொச்சி செடியின் கிளைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்துவதுண்டு. நீர்வளம் மிக்க பகுதிகளில் வளரும் சிலவகையான நீர்க்கோரைகளை அறுத்துக் காயவைத்து துடைப்பம் செய்வதும் உண்டு.


          மொத்தத்தில் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் துடைப்பங்கள், பயன்படுத்தும் தளம், அகற்றப்பட வேண்டிய கழிவுகள் அவ்வப்பகுதிக்குரிய தாவரங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு வட்டாரத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் பயன்பாடு முடிந்த பின்னர், மண்ணில் மக்கி உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. சுற்றுப்புறச் சூழலைச் சீர்குலைப்பதில்லை.

நன்றி: 
உயிர் - மார்ச்-ஏப்ரல் 2019
நாட்டார் வழக்காறு

ஒளிப்படங்கள்:
சோ.தர்மன், முனைவர் ராமர் ரபெல் மத்வெட், பா.வெங்கடேசன், சு.உமாசங்கர், விக்கிபீடியா


Thursday, May 9, 2019

இளமையே வளமைக்கு வழிகாட்டி

— முனைவர் ச. கண்மணி கணேசன்


          "இளமையே வளமைக்கு வழிகாட்டி" இதைத்தான் விளையும் பயிர் முளையிலே" என்று முன்னோர் கூறினர். 

          முளைவிடும் பயிரின் வேகத்தையும், வீரியத்தையும் கண்டு போற்றிப் பாதுகாத்தால்; விளைச்சலின் அளவும் தரமும் மேம்படும். ஆரோக்கியமாக முளைவிடும் பயிருக்குத் தேவையான நீரும், காற்றும், சூரிய ஒளியும், மணிச்சத்தும், தழைச்சத்தும் கொடுத்தால் தான் அது தக்க பலனைக் கொடுக்கும். ஒரு போகம் முடிந்து அடுத்த போகத்திற்குத் தேவையான விதைகளும் கிடைக்கும். இதற்கிடையில் களைகள் நீக்கப்பட வேண்டும். இந்தப் பயிர்ப் பாதுகாப்பு நடைமுறை உண்மை மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். 

          இரண்டு வயது முதல் பன்னிரண்டு வயதிற்குள் முழு வளர்ச்சி அடையும் மூளையின் வேகத்திற்குள்; எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்கிறோமோ அத்தனையளவு எதிர்காலத்தில் முன்னேறும் வழிவகைகள் மிகுதியாகும். 

          பிள்ளைப்பருவம் என்று சொல்லப்படுகின்ற இக்கால கட்டத்தின் உணவுமுறை ஒரு மனிதனின் தேக ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்.  இளமையில் தாய் நமக்குப் பழக்கப்படுத்தும் நாக்குருசி; அதாவது உணவுமுறை வளமான வாழ்விற்கு பிள்ளையார் சுழி ஆகும்.   

          குழந்தைப் பருவத்தில் பின்பற்றும் ஒழுக்க முறைகளே வாலிபப் பருவத்தின் வாழ்க்கையை வடிவமைக்கும். அதனால்தான் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர் நம் முன்னோர். 

          இளமையில் பெற்றோர் வரையறுக்கும் பழக்க வழக்கங்களே பின்னாளில் போட்டி மிகுந்த உலகில் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகின்றன. 

          இளமையில் தாத்தாவும் பாட்டியும் கொடுக்கும் உலகாயத உண்மை அறிவே வளரிளம் பருவத்துப் பேதை மனதின் சலனங்களைச் சமாளித்து எதிர்கொள்ள ஏதுவாகும். 

          இளமையில் கிடைக்கும் நட்புவட்டாரம் தான் வயோதிகத்தை அர்த்தமுள்ளதாக்கி இன்பத்தை அசைபோட வைக்கும். 

          ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று கேள்வி கேட்டு இளமை வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள் நம் முன்னோர். 

          இளமை நடவடிக்கைகள்தாம் வளர்ந்தபின் நம் வெற்றிக்குரிய படிக்கட்டுகளாய் அமையும். 

இன்று குளத்தைத் தூர் வாரி வைத்தால் நாளை மழைவெள்ளத்தின் போது தேக்கிவைக்க உதவும்; நிலத்தடி நீர் பெருகும். 
இன்று தென்னை பயிரிட்டால் இறப்பிற்குள் தேங்காயும், இளநீரும் உண்ண வழியுண்டு. 
இன்று பனை வைத்தால் அடுத்த சந்ததிக்கு பலன் கிடைப்பதை உறுதி செய்து விடலாம். 
இன்று களை எடுத்தால் நாளை மகசூல் மிகுதியாகும்.
இன்று சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் நாளை நம்வாழ்க்கை மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறையும் நன்மை அடையும். 
இன்று படித்தால் நாளை தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். 
இன்று சோம்பேறித்தனத்தை விட்டால் நாளை நாம் மட்டுமின்றி நம் சமுதாயமே பயனடையும். 

"எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ; 
நீ எந்த எட்டில் இருக்கிறேனு புரிஞ்சுக்கோ 
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல; 
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல"
என்ற திரையிசைப் பாட்டு ஒரு மனிதன் இளமையிலேயே தேகஆரோக்கியத்திற்கும், கல்விக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைச் சுட்டுகிறது.  

          ஒன்று செய்; நன்றே செய்; இன்றே செய் என்ற வழிகாட்டல் வளமைக்குரியது; இளமைக்குரியது   

          கட்டுமான உறுதிக்கு அடித்தளம் அடிப்படையாய் அமைவது போல; வளமான வாழ்விற்கு இளமை அடிப்படை ஆகிறது.

தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)
Tuesday, May 7, 2019

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 7

*பகுதி 7 - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

-முனைவர் க.சுபாஷிணி

          இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்தில் சூரிய வம்சத்தைச் சார்ந்த ஒரு இளவரசன் கொழும்புக்கு வந்தான் என சூளவம்சம் குறிப்பிடுகிறது. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற குறிப்பு ஏதுமில்லை. அவன் சூரியவம்சத்தைச் சார்ந்தவன் என்பது மாத்திரம் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவன் கொழும்பில் தங்காமல் இந்தியாவின் கோவாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு பின் மீண்டும் இலங்கைக்கு வந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. இராஜசிங்கன் இறந்ததும் இந்த இளவரசன் ஸ்ரீ வர்த்தனா நகரத்தில் விமலதர்மசூரியன் என்ற அரச பெயருடன் அரியணை ஏறினான். கண்டி நகரைச் சுற்றி பெரிய உயரமான மதில்களை அமைத்து 18 கோபுரங்களையும் அமைத்து பெரிய அரண்மனை அமைத்து அதில் அவன் வசித்து வந்தான். அதுமட்டுமன்றி லபுஜகம (டெலிகம) என்ற கிராமத்திலிருந்த புனித தந்ததாதுவைத் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து தனது அரண்மனைக்குப்பக்கத்தில் ஒரு கோயிலை அமைத்து அங்கே புனித தந்ததாதுவை வைத்துப் பாதுகாத்தான் என சூளவம்சம் சொல்கிறது..

          அவனுக்குப் பின்னர் செனரத்ன என்பவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்த சமயத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். சூளவம்சம் சரியாக எந்த ஆண்டு என்பதைக் குறிப்பிடவில்லை. போர்த்துக்கீசியர்கள் பற்றி சொல்லும்போது சக்தி வாய்ந்த சில வர்த்தகர்கள் என்று குறிப்பிடுகின்றது. இந்த பரங்கியர்கள் குரூரமான மனம் கொண்டவர்கள் என்றும், சிங்கள மக்களுக்குத் தொல்லை தருபவர்கள் என்றும், பெண்களின் கற்பை சூறையாடுபவர்கள் என்றும், சிங்கள மக்களின் வீடுகளைக் கொள்ளையிடுபவர்களாகவும், கிராமங்களை அழிப்பவர்களாகவும் விளங்கியதாக சூளவம்சம் கூறுகின்றது. இவர்கள் சில பாதுகாப்பான கோட்டைகளை ஆங்காங்கு அமைத்துக் கொண்டனர் என்ற செய்தியும் இடம் பெறுகின்றது.

          செனரத்ன பரங்கியர் நாசமாக்கிவிடாதவாறு புனித தந்ததாதுவைக் காடுகளில் மிகப் பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவன் தனக்கும் தனது தமையனின் மகன்களுக்கும் இலங்கை ராஜ்யத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று மூன்று பனை ஓலைகளில் எழுதி தந்த பேழைக்குள் வைத்தான். மலைநாட்டின் பொறுப்பை தன் மகனுக்கு அளித்து இலங்கையின் அரசனாக முடி சூட்டி விட்டு இறந்தான்.

          அவனுக்குப் பின்னர் மூன்று இளவரசர்களும் பரங்கியர்களுக்கு எதிராகப் போரிட்டனர். மூன்றாவது இளவரசனான ராஜசிங்கன் இலங்கை முழுவதற்கும் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இராஜசிங்கனை கொல்வதற்குப் பல முயற்சிகள் நடைபெற்றன. போர்த்துக்கீசியர்களை எதிர்த்து தொடர்ச்சியாக ராஜசிங்கன் போர் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் கரையோரத்தில் டச்சுக்காரர்கள் வந்து தங்கி இருப்பதை அவன் கேள்விப்பட்டான். தனது மந்திரிகள் இருவரை டச்சுக்காரர்களிடம் தூது அனுப்பி ஏராளமான கப்பலுடன் தன் நாட்டிற்கு வந்து தன்னைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டான். போர்த்துக்கீசியர்களை டச்சுக்காரர்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். இலங்கையை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை ஒல்லாந்தரிடம், அதாவது டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தான். பின்னர் மதுரையிலிருந்து இளவரசி ஒருத்தியை வரவழைத்து அவளைப் பட்டத்து ராணியாக ஆக்கிக் கொண்டான். அதன் பின்னர் 52 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          அவனுக்குப் பின்னர் ராஜசிங்கனின் மகனான விமலதர்மசூரியன் ஆட்சியைக் கையில் எடுத்தான். அவனும் மதுரையிலிருந்து ஒரு அரசகுமாரியை வரவழைத்து திருமணம் செய்து கொண்டு பட்டத்துராணி ஆக்கிக் கொண்டான். இவன் மூன்று அடுக்கில் ஒரு கோயிலைக் கட்டி (தலதா மாளிகை) அதில் தந்த தாதுவைப் பிரதிஷ்டை செய்தான். ஆண்டுதோறும் புனித தந்த தாதுவிற்கு விழா எடுத்தான். பிக்குகளைப் பராமரித்தான். இவன் 22 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் தலதா மாளிகையே இன்று கண்டியில் நாம் காணும் புனித மாளிகை. இங்குதான் கௌதம புத்தரின் பல் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆக, இது கட்டப்பட்ட காலத்தை நோக்கும் போது அனேகமாக இந்த மன்னனின் ஆட்சி கி.பி 16ம் நூற்றாண்டு என உறுதியாகக் கூறலாம்.

          அதற்குப் பின்னர் அவனது மகனான வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிபீடம் ஏறினான். அவனும் மதுரையிலிருந்து இளவரசிகளை வரவேற்று மணந்து கொண்டான். இவனும் பௌத்த நெறிகளைப் போற்றி பாதுகாத்தான். தங்க தாது இருந்த மாளிகையின் சுவர்களில் 32 ஜாதக கதைகளையும் ஓவியமாக வரைய வைத்தான்.

          விமலதர்ம சூரியனுக்குப் பின்னர் அவனது இளைய சகோதரன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் அரசனானான். அவனும் மதுரையிலிருந்து அரச குலப் பெண் ஒருத்தியை அழைத்து வந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கிக்கொண்டான். இவனும் பௌத்த சமயத்தைச் சிறப்புடன் பேணிவந்தான். இவன் மனைவியைப் பற்றிச் சொல்லும்போது ”பிறப்பிலிருந்து பொய்யான சமயத்தைப் பின்பற்றி வந்த மகாராணியும் நேர்மையான சமயத்திற்கு மாறினார்” என்று குறிப்பிடுகிறது. அதாவது, அனேகமாக சைவ சமயத்தில் மகாராணி இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறினார் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

          அந்தச் சமயத்தில் பரங்கியர்கள், அதாவது போர்த்துக்கீசியர்கள், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி அவர்கள் பணத்தாசைக் காட்டி பொதுமக்களைத் தங்களது சமயத்திற்கு மாற்றினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது, போர்த்துக்கீசியர்கள் கத்தோலிக்க கிறித்தவ சமயத்திற்கு இலங்கை மக்களை மாற்றினார்கள் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

          ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறந்த பிறகு அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் அரசனானான். அந்தக் காலகட்டத்தில் டச்சுக்காரர்களும் தங்களது கிருத்துவ மதத்தை இலங்கை மக்களிடையே பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிகின்றது. அதனால் டச்சுக்காரர்களை அடக்கி வைக்க வேண்டுமென்று அவன் முயற்சி மேற்கொண்டான். அவனது படையினர் டச்சுக்காரர்களின் கோட்டைகளையும் வீடுகளையும் கைப்பற்றி அழித்தனர். ஆனால் டச்சுக்காரர்கள் இதற்குச் சளைக்காமல் தமது போர் வீரர்களுடன் மலாய்க்காரர்களைச் சேர்த்துக்கொண்டு மன்னனின் படைகளைத் தாக்கினர். மன்னன் தன் மனைவி, இளவரசர்கள், ஏராளமான சொத்துக்கள் ஆகியவற்றுடன் காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்தான். பிறகு டச்சுக்காரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு மீண்டும் ஆட்சியை நடத்தினான். தந்த தாதுவைக் கோயிலில் வைத்து பௌத்த சமயத்தைப் பாதுகாத்தான். ஒல்லாந்தர் மன்னனுடன் அவன் சமாதானம் செய்து கொண்டான்.

          கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் மரணத்திற்குப் பிறகு அவனது இளைய சகோதரனான ராஜாதி ராஜ சிங்கன் அரசனானான். அவன் காலத்தில் தாய்லாந்திலிருந்து உபாலி என்ற தேரரின் தலைமையில் இலங்கைக்குப் பிக்குகள் சிறிவர்த்தன நகருக்கு அருகில் வந்து தங்கி இருந்ததாக சூளவம்சம் கூறுகின்றது. இந்த மன்னனுக்குப் பிறகு அவனது சகோதரியின் மகனான ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கன் என்பவன் அரசன் ஆனான்..அவனே சூளவம்சத்தின் வரலாறு கூறும் மன்னர்கள் பட்டியலில் இறுதியானவன். அவன் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்களோடு நட்புறவு பாராட்டினான் என்றும், அமைச்சர்கள் பலரையும் சிரச்சேதம் செய்தான் என்றும், இரக்கமில்லாத கொள்ளையனாக இவன் இயங்கினான் என்றும், மக்கள் இதனால் பாடுபட்டனர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாகக் கொழும்பு மக்களால் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்றும், அதன் பின்னர் இலங்கை ராஜ்யம் ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்டது என்றும் சூளவம்சம் கூறி நிறைவு செய்கிறது.

          சூளவம்சம் கூறும் செய்திகள் வரலாற்று ரீதியாகப் பல தகவல்களை விவரிப்பதாக இருந்தாலும், ஆங்காங்கே செய்திகள் திரிக்கப்பட்டும், தகவல்களை மிகைப்படுத்தி சார்புத்தன்மையுடன் எழுதப்பட்டும் இருப்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது. உதாரணமாக, இறுதியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் டச்சுக்காரர்களால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்ற செய்தி சூளவம்சத்தில் இல்லை. மாறாக மக்கள் நாடு கடத்தினர் என்று செய்தி குறிப்பிடப்படுகிறது. ஆக சூளவம்சம் கூறும் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை ஆராயும்போது, சமகாலத்து ஆவணங்கள் பலவற்றையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து காலங்களை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாது, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையையும் சோதிக்க வேண்டியது அவசியமாகின்றது. எதுவாகினும், இன்று நமக்குக் கிடைக்கின்ற முக்கிய இலங்கை பற்றிய ஆவணங்களில் சூளவம்சம் மிகமுக்கியமானதொரு வரலாற்றுக் களஞ்சியம் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை..

          உலகெங்கிலும் நிகழ்ந்த பண்டைய அரசுகளின் வரலாற்றை வாசிக்கும் போது இரத்தக் கறை படிந்த அரச வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே மன்னர்களின் வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். துரோகம், கடும் தண்டனைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், மக்கள் அரசுகளால் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் என்றே வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இவை அனைத்தும் பெரும்பாலும் மதங்களின் பெயர்களாலேயே மன்னர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் நாம் ஒதுக்கி விடமுடியாது. இலங்கையின் வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல.

          இலங்கையின் பௌத்தம் வைதீக சாத்திரத்தின் ஒன்றாகிய மனு நீதியை உள்வாங்கிக் கொண்ட பௌத்தமாகவே அரசர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதை சூளவம்சம் தெளிவுடன் வெளிப்படுத்துகின்றது.

          இலங்கை இனக்குழுக்களிடையே தொடர்ச்சியான சண்டைகளையும், போர்களையும், கொடூரமான வாழ்க்கை நிலையையும் சந்தித்து வந்த நாடு. துரதிருஷ்டவசமாக அது இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது!

(புகைப்படக் குறிப்பு - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி. (கி.பி. 1798 - 1815) - வேங்கட ரங்கஜம்மாள் தேவி பாண்டிய மன்னர் பரம்பரை சார்ந்த தெலுங்கு இளவரசி, கடந்த அக்டோபர் 2018 நான் யாழ்ப்பாணத்தில் யாழ் அருங்காட்சியகத்தில் பதிந்த புகைப்படம்)


-  முனைவர் க. சுபாஷிணி

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 6

*பகுதி 6  - தொடர்கின்றது.* 

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


-முனைவர் க.சுபாஷிணி

          இலங்கையின் மன்னர்கள் வரலாற்றில் மகா பராக்கிரமபாகுவின் காலம் பொற்காலமாகும். நாட்டின் இயற்கை வளம் மேம்பட்டதுடன் விவசாயம் அபரிதமான வளர்ச்சியை இம்மன்னனின் காலத்தில் கண்டது. இலங்கையின் செல்வச்செழிப்பும் கலை வளர்ச்சியும் இம்மன்னனின் காலத்தில்தான் விரிவாக்கம் கண்டது.  அத்துடன் இலங்கையிலிருந்து கிழக்காசிய நாடுகள் பலவற்றிற்கும் பௌத்த பிக்குகள் பலர் சென்று பௌத்தம் வளர்த்தனர்.   கிழக்காசிய நாடுகளில் இலங்கையைச் சார்ந்த பௌத்த பிக்குகளின் தாக்கம் என்பது இன்றளவும் மிகத் தெளிவாக நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

          மகா பராக்கிரமபாகுவின் மறைவுக்குப் பின்னர் பல அரசர்கள்  இலங்கையின் ஆட்சியைத் தொடர்ந்தனர். நிலையான ஆட்சி என்பது தொடரவில்லை. அந்தக் காலகட்டத்தில், கலிங்க தேசத்தை, அதாவது இன்றைய ஒடிசா மாநிலத்திலிருந்து  கொடூர மனம் கொண்ட இளவரசன் மாகன் என்பவன் 20,000  போர் வீரர்களுடன் இலங்கைக்கு வந்து போரிட்டு இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் புத்தவிகாரைகளை சேதப்படுத்தினான் என்றும் , இந்த கலிங்க மன்னன் தமிழன் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          இந்தக் கலிங்க தமிழ் அரசனான மாகன்,  அந்த சமயம் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனைக் கைது செய்து, அவனது கண்களைப் பிடுங்கி,  சொத்துக்களை அபகரித்து கொள்ளையிட்டான் என்றும் ,அதன் பின்னர் அவன் புலத்தி நகரில் முடி சூடிக் கொண்டு 21 வருடங்கள் கொடுங்கோலாட்சி நடத்தினான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          அவனது ஆட்சியின்போது சிங்கள அரசர்கள் சிலர் ஆங்காங்கே சிறிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஸ்ரீ சங்கபோதி, அதற்குப் பின்னர் பராக்கிரமபாகு, என ஆட்சி  தொடர்ந்தது. 

          அதற்குப் பின்னர் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகின்றது.  எல்லாளன் பற்றி சூளவம்சம் விரிவாக வேறு எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. துட்டகாமினி என்ற   பெயர் கொண்ட மன்னன்  எல்லாளனுடன் போரிட்டு இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பிறகு வட்டகாமினி என்பவன் நாட்டை கைப்பற்றி ஆண்டான். ஆனால் பின்னர் ஐந்து தமிழ் ஆக்கிரமிப்பாளர்களிடம் அவன் நாட்டை பறிகொடுத்தான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் தாதுசேனன் என்பவன் நாட்டைக் கைப்பற்றி சில காலம் ஆண்டுவந்தான். அந்தச் சமயம் ஆறு தமிழ் மன்னர்கள் போரிட்டு நாட்டை மீண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்களை விரட்டிவிட்டு விஜயபாகு என்பவன் நாட்டை ஆட்சி செய்தான்.

          அதன்பின்னர் மாகன், ஜயவாகு என்ற இரண்டு தமிழ் மன்னர்களின் தலைமையில் 40 ஆயிரம் தமிழ் வீரர்களும் கேரள வீரர்களும் இருந்து மன்னர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது. இந்த மன்னர்கள் ஆட்சியில்   நாட்டின் பல இடங்களில் மேம்பாடுகளை உருவாக்கினர் என்றும் சூளவம்சம் செல்கிறது

          ஆச்சரியமாக இன்னொரு செய்தியையும் சூளவம்சம் பதிவு செய்கிறது. 

          இக்காலகட்டத்தில்  இரண்டாம் பராக்கிரமபாகு என்பவன் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இந்த பராக்கிரமபாகுவின் 11வது ஆண்டுக் காலத்தில் மலாயா நாட்டைச் சார்ந்த சந்திரபானு என்ற ஒரு இளவரசன் இலங்கை மீது படையெடுத்தான் என்றும்,  ”நாங்களும் பௌத்தர்கள்” என அறிவித்துப் பேரிட்டான் என்றும், ஆனால் அவன் பராக்கிரமபாகுவின் வீரர்களால் துரத்தி அடிக்கப்பட்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இது ஏறக்குறைய கிபி 12ஆம் நூற்றாண்டு கால கட்டமாக இருக்கலாம். தோற்று ஓடிப்போன சந்திரபானு சும்மா இருக்கவில்லை.  சந்திரபானு மலாய் வீரர்களையும் பாண்டிய சோழ தமிழ் போர் வீரர்களையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கை மீது போர் தொடுத்தான். ஆனால் வெற்றி பெற முடியாமல் அவன் துரத்தி அடிக்கப்பட்டான். பராக்கிரமபாகுவின் ஆட்சி தொடர்ந்தது. இவன் 35 வருடங்கள் ஆட்சி நடத்தினான். அதன்பிறகு அவனது மூத்த மகன் விஜயபாகு அரியணை ஏறினான்.

          விஜயபாகுவின் காலத்தில் இந்தியாவிலிருந்து பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் தனது மந்திரியையும்   தளபதிகளையும் அனுப்பி இலங்கையின் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகள் இலங்கையின் பல பகுதிகளைப் பாழாக்கி   புனித தந்ததாதுவையும் ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தமிழ் நாடு திரும்பியது.

          சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜயபாகுவின் மகன் பராக்கிரமபாகு பாண்டிய நாடு சென்று மன்னனிடம் பேசி புனித சின்னங்களை இலங்கைக்கு மீட்டு வந்தான். அவற்றைப் பொலநருவ நகரில் புனித தந்ததாது கோயிலில் பிரதிஷ்டை செய்தான். சில ஆண்டுகள் ஆட்சி செய்து பின் இறந்தான். அதன் பின்னர் மீண்டும் அடுத்தடுத்து சில மன்னர்கள் ஆட்சியிலிருந்தனர்.

          இலங்கையை ஆண்ட மன்னர்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களே. ஒரு சில சிங்கள மன்னர்கள் மட்டுமே சைவ நெறியையும் ஆதரித்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக ராஜசிங்கன் என்பவனைப் பற்றிக் குறிப்பிடலாம். இவன் மாயாதுன்னை என்பவனின் மகன். ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது தந்தையைக் கொன்று ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் தன் தந்தையைக் கொலை செய்து விட்டோமே என்று பயந்து, அந்த பாவத்தை எப்படி போக்குவது என்று பௌத்த முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கூறிய எந்த பரிகாரமும் அவனுக்குத் திருப்தி அளிக்காத நிலையில், சிவனை வழிபடுகின்ற சைவர்களிடம் பரிகாரம் கேட்க, அவர்கள் சொன்ன பரிகாரம் அவனுக்கு மனதிற்குப் பிடிக்கவே,   அவன் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டான். உடல் முழுவதும் திருநீறு பூசி சைவனாகி சிவ வழிபாடு செய்யத் தொடங்கினான்.  அதன் பின்னர் பிக்குகள் சிலரைக் கொன்றான். புனிதமான பௌத்த நூல்கள் பலவற்றை எரியூட்டினான்; பௌத்த விகாரைகளை இடித்துத் தள்ளினான்;  பௌத்த பிக்குகள் பலர் பயத்தினால் தங்கள் சின்னங்களைக்  கலைத்து விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்றனர்.  பழி பாவத்துக்கு அஞ்சாத ராஜசிங்கன் பௌத்த மதத்தை இவ்வாறு சீரழித்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது.


-  முனைவர் க. சுபாஷிணி
சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 5

*பகுதி 5  - தொடர்கின்றது.* 
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

-முனைவர் க.சுபாஷிணி

          சிற்றரசனான மானவர்மனுக்கு மகனாக பராக்கிரமபாகு பிறந்தான். தனக்கு மகன் பிறந்த   செய்தியை இலங்கை மன்னன் விக்கிரமபாகுவிற்குத் தூதுவர் மூலம் அறிவித்தான் மானவர்மன். விக்கிரமபாகுவின் தங்கைதான் மானவர்மனின் மனைவி. தன் தங்கையைப் போல நல்ல குணங்களுடன் பராக்கிரமபாகு வளரவேண்டும் என்று எண்ணி விக்ரமபாகு, தன் மருமகனைத் தன்னிடம் கொடுத்து வளர்க்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான்.  ஆனால் மானவர்மன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பராக்கிரமபாகு ஒரு அரசனுக்குத் தேவையான எல்லா கலைகளையும் கற்று வளர்ந்து வந்தான்.

          சூளவம்சத்தின் இந்தப் பகுதியில் ஒரு உரையாடலின் போது "கலிங்க மரபில் வந்த விஜய மன்னன் இத்தீவில் வசித்த இயக்கர்களை அழைத்து இத்தீவை மக்கள் வாழ உகந்ததாக ஆக்கினான். அன்றிலிருந்து கலிங்க மரபு மன்னர் வழி வருகின்றது" என்று ஒரு அரசி கூறும் ஒரு செய்தியும் இடம் பெறுகின்றது. இதனை நோக்கும்போது சூளவம்சம் கூறும் செய்திகளின் அடிப்படையில், இலங்கை மன்னர்கள் பரம்பரை என்பது கலிங்க நாட்டு மன்னர் பரம்பரையினரின் தொடர்ச்சி என்பதாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது.

          பராக்கிரமபாகு ஏனைய அரசர்களை விட மாறுபட்ட வகையில் சிந்திக்கும் திறன் உடையவனாக இருந்தான். தானே பல ஊர்களுக்குப் பயணம் செய்து கிராமங்களை நேரில் கண்டு சில இடங்களில் போரிட்டு, அங்கு தனது வீரத்தைவெளிப்படுத்தி, தனது புகழை வளர்த்துக் கொண்டு வந்தான். அவனுக்கு இலங்கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்கள் தனித்தனியாக ஆட்சி செய்வது மனதிற்கு ஒவ்வாததாக இருந்தது.  இலங்கையின் முழு பகுதியையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். அந்த ஆட்சிக்கு தானே தலைமை தாங்க வேண்டும், என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல. இலங்கைத்தீவு சிறியதான ஒரு தீவாக இருந்தாலும் கூட, பௌத்த நெறிக்கு மிக முக்கியமான ஒரு நாடாக இருப்பதை அவன் மிக முக்கிய காரணமாகக் கருதினான். "புத்தரின் கேசம், தோள் எலும்பு, கழுத்து எலும்பு, பல், பிச்சைப்பாத்திரம்,  பாத அடையாளம்,  போதி மரத்தின் கிளை ஆகியவை இலங்கையில் தான் இருக்கின்றது" என்று அவன் கூறுவதாக ஒரு வாக்கியம் சூளவம்சத்தில் இடம்பெறுகின்றது.

          இளவரசனாக சுகங்களை மட்டும் அனுபவித்துக் கொண்டிராமல் இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து, சீர்குலைந்து கிடந்த கிராமங்களைத் தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சில ஆண்டுகளில் தக்ஷிணதேசத்தில் அரசனாக அரியணை ஏறினான் பராக்கிரமபாகு.  அது மட்டும் போதாது. இலங்கை முழுவதையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டான். "பொழியும் மழை நீரில் ஒரு துளி கூட சமுத்திரத்தில் கலக்கக்கூடாது. அவை அனைத்தும் விவசாயத்திற்குப் பயன்படவேண்டும்" என்று நீர்ப்பாசனத் திட்டங்களை இலங்கை முழுவதும் திட்டமிட்டான்,  செயல்படுத்தினான். நெல் வயல்களின் பரப்பினை அதிகரித்தான். நாட்டை நெற்களஞ்சியமாக்கினான். முந்தைய அரசர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை யுத்தங்களில் செலவிட்டு நாட்டை பாழ்படுத்தினர். யுத்தத்தை விட்டு நாட்டினையும் சமயத்தையும் அவர்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லை. ஆகவே பௌத்த தர்மத்தை முன்னெடுக்கவும், இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்குப் போர்ப் பயிற்சி பெறவும்,  எல்லா மாவட்டங்களிலும் சிறந்த நிர்வாகம் செயல்படவும், நாடு முழுவதும் திட்டங்களை வகுத்து செயல்படத் தொடங்கினான் பராக்கிரமபாகு.

          இவனது ஆட்சியின் கீழ் தமிழ்ப்படை ஒன்று இருந்தமையும், அதற்குத் தளபதியாக மலைராஜா என்ற ஒருவனை நியமித்தமையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. பலம் பொருந்திய படையினை  உருவாக்கி இலங்கை முழுவதும் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் பராக்கிரமபாகு.

          இலங்கை முழுமைக்கும்  மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். மகா பராக்கிரமபாகு என்று அழைக்கப்பட்டான். முந்தைய ஆட்சியாளர்கள் விதித்திருந்த வரிச் சுமைகளைக் குறைத்தான்.  பௌத்தத்திலிருந்த மூன்று மதப் பிரிவுகளையும் சேர்ந்த பிக்குகளை அழைத்து அவர்களிடம் சமரசத்தை உருவாக்க முயற்சித்தான்.  பௌத்த பிக்குகளுக்கு நிறையச் சலுகைகளை வழங்கினான்.  வழிப்போக்கர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அன்னசத்திரங்கள் அமைத்தான். தானியங்கள் சேகரித்து வைக்கக் களஞ்சியங்களை அமைப்பித்தான். நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளை நிறுவினான். திறன் வாய்ந்த வைத்தியர்களை ஒருங்கிணைத்து சிறந்த வைத்தியசாலைகளை உருவாக்கினான்.  மாதத்தில் நான்கு நாட்களைப்  பௌத்த உபதேச நாட்களாக அறிவித்தான். பிராமணர்கள் தமது சடங்கு, கிரியைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஒரு தங்கமாளிகை உருவாக்கித் தந்தான். பிராமணர்கள் மந்திரச் சடங்குகள் ஆற்றுவதற்கு விஷ்ணுவுக்கு ஒரு கோயில் அமைத்தான்.  புனித நூல்கள் வழங்குவதற்குரிய மாளிகைகளையும் அமைத்தான். 

          பராக்கிரமபாகுவின் பட்டத்து ராணியாக ரூபவதி என்பவள் இருந்தாள்.  அவளைத் தவிர நூற்றுக்கணக்கான மகளிர் அரண்மனையிலிருந்தார்கள். ரூபவதி பௌத்த மத நம்பிக்கை கொண்டவள். அவள் பௌத்த சமயத் தொண்டினைத் தொடர்ந்து ஆற்றி வந்தாள்.  பராக்கிரமபாகு மூன்று தேவாலயங்களைக்  கட்டுவித்தான் என்ற செய்தியையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          மகா பராக்கிரமபாகு சோழர்களால் சேதமாக்கப்பட்ட புராதன அரச நகரான அனுராதபுரத்தைப் புனரமைக்கவும்,  போதி மரத்தையும், புனித சின்னங்களையும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தான்.  இவன் காலத்திலேயே பௌத்தப் புனித சின்னங்கள் மீட்கப்பட்டன. அவை பொலநருவ நகருக்குக் கொண்டுவரப்பட்டன. மகா பராக்கிரமபாகு அந்தப் புனித சின்னங்களைத் தனது தலையில் தாங்கி ஊர்வலம் வந்து விழா எடுத்துக் கொண்டாடி ஆலயத்தில் வைத்தான்.

          சூளவம்சத்தில் மற்றொரு செய்தியும் இடம் பெறுகிறது. அதாவது, பராக்கிரமபாகு காம்போஜ மன்னனுக்கு  நட்புறவு நிமித்தமாக இலங்கை இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்விக்க அனுப்பியதாகவும், அவள் சென்ற அந்தக் கப்பலை பர்மிய மன்னன் இடையில் தாக்கி கைப்பற்றி அவளைக் கொண்டு சென்றதாகவும், இதனால் கோபமடைந்த மகா பராக்கிரமபாகு தமிழ்த் தளபதி ஒருவரை அழைத்து பர்மா மீது போர் தொடுக்கக் கட்டளையிட்டான் என்றும்,  பர்மா வந்து இறங்கிய தமிழ் தளபதி  ஆதித்தன் அவர்களுடன் சண்டையிட்டு பர்மிய மன்னனைச் சிறைபிடித்து  இளவரசியை மீட்டான் என்றும் இச்செய்தி குறிப்பிடுகிறது.  அதோடு மட்டுமன்றி, பர்மாவின் மன்னன் இலங்கைக்குத் திறை செலுத்தும் மன்னனாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு திறை செலுத்தினான் என்ற செய்தியும் கிடைக்கின்றது.

          அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனைத் தாக்கி மற்றொரு இளவரசனான குலசேகரன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். குலசேகர பாண்டியனைத் தாக்கி தனது ஆட்சியை மீட்டுக் கொடுக்கும்படி பராக்கிரம பாண்டியன், மகா பராக்கிரமபாகுவின் உதவி கேட்டு தூது அனுப்பினான். தனது படைத் தளபதியை அழைத்து குலசேகரனைத் தாக்கி கைப்பற்றி மீண்டும்   பராக்கிரம பாண்டியனுக்கே அரசை ஒப்படைக்கும்படி கட்டளையிட்டான் மகா பராக்கிரமபாகு.  தளபதி தண்டநாயக்கன் முதலில் ராமேஸ்வரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அப்பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்களைத் தாக்கிச் சிறைப்பிடித்து இலங்கைக்கு அனுப்பினான்.  அவர்களைக் கொண்டு முன்னர் இலங்கையில் தமிழ் படைகள் ஏற்படுத்திய சேதங்களைத் திருத்தவும், பழுதடைந்த கோவில்களைப்  புதுப்பிக்கும் பணிக்கும் அவர்களை அனுப்பினான். இந்த தண்டநாயக்கன் தென்னிந்தியாவில் குண்டுக்கல் என்ற இடத்தில் தனக்கு ஒரு கோட்டை நிறுவி அதற்கு பராக்கிரமபுரம் என்றும் பெயரிட்டான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. குலசேகரனுக்கும் பாண்டியன் பராக்கிரமனுக்கும் நடைபெற்ற சண்டையின்போது பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான்.  ஆயினும் தண்டநாயக்கனின் படைகள்  பராக்கிரம பாண்டியனின் குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு தொடர்ச்சியாகப் போர் செய்து வந்தது. தமிழகத்தின் பொன்னமராவதியில் நடந்த புரட்சியை முற்றுமாக அடக்கி, அங்கிருந்த பாண்டியனின் மூன்று அடுக்கு மாளிகையைத் தீக்கிரையாக்கியது இலங்கை படை. பாண்டியன் பராக்கிரமன் மகனான வீரபாண்டியனுக்கு முடிசூடி விட்டு பின்னர் நாடு திரும்பியது இலங்கை படை. இலங்கை படையோடு போர் தொடுக்கும் வகையில் குலசேகரன் சோழமன்னர்களின் உதவியை நாடினான். தமிழகத்தில் பெரும் போர் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். குலசேகரன் அனைத்தையும் இழந்து ஓடினான். இலங்கை மன்னனின் தளபதி நாட்டை வீரபாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு, "இந்த ராஜ்ஜியத்தில் பராக்கிரமபாகுவின் தலைச் சின்னம் பொறித்த காசு பணம் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்து, பாண்டிய சோழ கைதிகளோடு இலங்கைக்குக் திரும்பினான். இந்த வெற்றியைக் கொண்டாடி பராக்கிரமபாகு இலங்கையில் "பாண்டி விஜயம்" என்ற பெயரில் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அக்கிராமத்தில் பிராமணர்கள் வளமாக வாழ நிலங்களை நன்கொடையாக வழங்கினான் மகா பராக்கிரமபாகு என்று சொல்கிறது சூளவம்சம்.

          மகா பராக்கிரமபாகுவின் ஆட்சி 33 ஆண்டுகள் நீடித்தன. இவனது ஆட்சி இலங்கை வரலாற்றில் இலங்கைக்குப் பெரும் வளத்தையும் புகழையும் தேடித் தந்த ஆட்சி   என்று ஐயமின்றி  குறிப்பிடலாம். பராக்கிரமபாகுவின் மறைவிற்குப் பிறகு அவனது சகோதரியின் மகனான விஜயபாகு என்பவன் அரியணை ஏறினான். அவன் கவிஞன் - அதோடு மனுநீதியை உயர்வாகக் கருதி அவன் மக்களை மனு நீதியின் கட்டளைப்படி நான்கு ஒழுக்கங்களைப் பின்பற்றி நடக்குமாறு பணித்தான் என்றும், அவன் ஆட்சி ஒரு ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது என்றும், அவனுக்குப் பின் மகிந்தன் என்பவன் ஆட்சியை எடுத்துக்கொண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          மீண்டும் பல குழப்பங்கள் இலங்கை அரச குடும்பத்தில் ஏற்பட்டன. மகா பராக்கிரமபாகுவின் மனைவியருள் ஒருத்தியான லீலாவதியை இடைக்காலத்தில் அரியணையில் ஏற்றினார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பராக்கிரம பாண்டியன் என்பவன் பெரும்படையுடன் வந்து லீலாவதியையும் அவள் தளபதியையும் கொன்று இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனைக் குறிப்பிடும் போது சூளவம்சம் இக்காலகட்டத்தில் மனு நீதி தவறிய ஆட்சி மூன்று ஆண்டுகள் புலத்தி நகரில்  நிலவியது, அதாவது பொலநருவ நகரில் நிலவியது என்று குறிப்பிடுகிறது. 

          சூளவம்சத்தின் அடிப்படையில் மனுநீதியே உயர்ந்த தர்மமாகக் கொள்ளப்பட்டது என்பதை அறிகின்றோம். ஆக, பௌத்த சமயத்தை அரச சமயமாக ஏற்ற இலங்கை சிங்கள மன்னர்கள், பௌத்த தத்துவங்களின் அடிப்படைகளுக்கு நேர்மாறான மனு நீதியை எவ்வாறு  ஏற்றுக் கொண்டனர் என்பதுவும், மனு நீதி சிங்கள ஆட்சியில் எப்போது உட்புகுந்தது என்பதும், அது எவ்வாறு ஆட்சியில் உள்ளோருக்குத் துணை புரிந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் யாவை என்பதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே!-  முனைவர் க. சுபாஷிணி

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 4

*பகுதி 4 - தொடர்கின்றது.*
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா
பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

-முனைவர் க.சுபாஷிணி 
          சேனன் இலங்கை மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சோழ மன்னன் வல்லபன் இலங்கையின் நாக தீபத்திற்கு, அதாவது வட பகுதியில் உத்தர தேசம் என்ற பெயர் கொண்ட ஒரு பகுதி, அதனை அவன்  போரிட்டுக் கைப்பற்றிக்கொண்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனன் மீண்டும் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து சோழன் வல்லபன் மீண்டும் போர் செய்து வாகை சூடியதாகவும், பின் மீண்டும் நடந்த போரில் தோல்வி கண்டு வல்லபன் நட்புறவுக்கு வந்ததாகவும், இதனால் இலங்கை மன்னனின் புகழ் இந்தியாவிலும் பரவியது என்றும் மேலும் குறிப்பிடுகிறது. சூளவம்சம் குறிப்பிடும் சோழன் வல்லபன் யார் என்பது ஆய்விற்குரியது.

          இதற்கு அடுத்த 16 வருடங்கள் சேனன் மன்னனாக ஆட்சியைத் தொடர்ந்தான். அதற்குப்பின் மகிந்தன். அவனுக்குப் பின்னர் அவனது கலிங்க ராணியின் மகன் சேனன் கி.பி 972 லிருந்து 982 வரை ஆட்சி செய்து கொண்டிருந்தான். இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் சிற்றரசர்களிடையே குழப்பம் அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில் இளம் வயது மன்னனான சேனன் தனது சேனாதிபதியாக சேனன் என்ற இன்னொருவனை அழைத்து பதவியை ஒப்படைத்துவிட்டு பொலநருவ நகருக்குச் சென்று தங்கிவிட்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனாதிபதி முறையாக ஆட்சியைப் பாதுகாக்காமையினால் தமிழர்கள் பெரும் பலம் கொண்டு செயல்பட்டதாகவும், ராட்சதர்கள் போல நாட்டை நாசமாக்கினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் சேனனின் மரணம் நிகழ்கின்றது. அவனது இளைய சகோதரன் மஹிந்தன் கிபி 982லிருந்து அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்தக் காலகட்டத்தில் அரசாட்சி சரியாக அமையாமல் உள்ளூரில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன.

          அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குதிரைகள் விற்க வந்த ஒரு வியாபாரி, இலங்கையில் உள்ள நிலையற்ற ஆட்சித்தன்மை பற்றி அப்போதைய சோழ மன்னன் ராஜராஜனுக்குக் குறிப்பிடவே, மாமன்னன் ராஜராஜ சோழன் (கி.பி 985 முதல் கி.பி 1014) இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியதாகவும், சோழர் படைகள் இலங்கை வந்து அங்குப் பல கிராமங்களைத் தாக்கி இலங்கையின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும்,. இலங்கை மகாராணி மற்றும் அவளது அனைத்து தங்க ஆபரணங்கள், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், முறியாத வாள், பதக்கங்கள் ஆகிய அனைத்தையும் சோழப் படைகள் கவர்ந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்தன என்றும், இலங்கையின் பௌத்த சின்னமாகிய தந்ததாது இருந்த கோயிலையும் சோழர் படைகள் அழித்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. விகாரைகளில் இருந்த தங்க வைர ஆபரணங்களையும் சூறையாடி அனுராதபுரத்துச் செல்வங்களையும் கொள்ளையிட்டு அங்கிருந்த விலைமதிப்பில்லா பொருட்களைத் தமிழகம் கொண்டு வந்ததாக சூளவம்சம் மேலும் குறிப்பிடுகிறது. இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக்கொண்ட ராஜராஜனின் படைகள் அனுராதபுரத்தை விட்டு பொலநருவ நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டன. அந்த வேளை இளவரசனாக இருந்த இலங்கை மன்னனின் மகன் காசியப்பன், சோழ மன்னன் ராஜராஜனின் படைகளின் கண்களில் படாமல் மறைந்திருந்தான். அவன் விக்கிரமபாகு என்ற சிம்மாசனப் பெயரோடு ஒரு பகுதியில் முடி சூடிக் கொண்டு தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். இடைக்கிடையே விக்கிரமபாகுவின் படைகளை வெல்வதற்குத் தமிழர்கள் படை முயற்சி செய்து கொண்டே இருந்தது. அதற்குப் பின்னர் மற்றொரு விக்கிரமபாகு என்பவன் ஆட்சியைத் தொடர்ந்ததாகவும், அதற்குப் பின்னர் லோகேஸ்வரன் என்ற சிங்கள ராணுவத் தலைவன் சோழர்களை எதிர்க்கும் பொருட்டு ஒரு படையை ஏற்பாடு செய்ததாகவும், கதிர்காமத்தில் தனது தலைமையகத்தை நிறுவியதாகவும் அறிகிறோம். ஆனாலும் சோழர் படைகளை அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் பெரும்பகுதியைச் சோழர் படை ஆட்சி செய்ய, ஒரு சில பகுதிகளை இலங்கை மன்னர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு வந்தனர். அந்த வரிசையில் மகிந்தன் அவனுக்குப் பின்னர் புத்த ராஜா பின்னர் காசியப்பன் என்ற இலங்கை மன்னர்களின் பெயர்களைக் காண்கின்றோம்.

          சோழ மன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றி இந்த சூளவம்சம் ஏதும் குறிப்பிடவில்லை. ராஜராஜனின் பெயருக்குப் பின்னர் அடுத்து வருவது வீரராஜேந்திரனின் பெயர். இந்தியாவில் சோழநாட்டில் வீரராஜேந்திரன் பதவியேற்ற பின்னர் அக்காலகட்டத்தில் மீண்டும் இலங்கையில் இலங்கை மன்னர்களின் ஆட்சி மீண்டது என்பதை சூளவம்சம் வழி அறியமுடிகின்றது. ஆக, ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திர சோழனின் கலாத்தில் இலங்கை முழுமையும் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தமையும் அதன் பின்னர் இலங்கை சிற்றரசர்கள் படிப்படியாக பலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடிகிறது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் எழுப்பப்பட்ட கோயில்களின் சிதைந்த பகுதிகளை இன்றும் பொலநருவ நகரத்தில் காணலாம். சோழநாட்டில் வீரராஜேந்திரனின் ஆட்சிக் காலத்தில் விஜயபாகு என்ற மன்னன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை எடுக்கிறான்.

          இலங்கையிலிருந்த சோழர் படையைத் தோற்கடித்து இலங்கை மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான் இந்த விஜயபாகு. இவன் ஸ்ரீ சங்கபோதி என்ற அரச பெயரை ஏற்றுக்கொண்டான். முன்னர் போரில் சோழ மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னன் ஜெகதீசனின் மனைவியான பட்டமகிஷியின் மகள் லீலாவதி சோழ நாட்டிலிருந்து தப்பி இலங்கை வந்து வீரபாகுவுக்குத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். வீரபாகு லீலாவதியை தன் பட்டத்து ராணியாக ஏற்றுக் கொண்டான்.

          விஜயபாகுவிற்கு மித்ரா என்ற ஒரு இளைய சகோதரி இருந்ததாகவும், அப்போதைய சோழ மன்னன் அதாவது வீரராஜேந்திரன் அவளை மணந்து கொள்ள விழைந்த போது விஜயபாகு அதனை மறுத்து விட்டு பாண்டிய வம்சத்தில் வந்த இளவரசன் ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          இலங்கை மன்னன் விஜயபாகு பல சமூகப் பணிகளைச் செய்ததாகவும், பல பௌத்த விகாரைகளைச் சீரமைத்ததாகவும், தடைகளை மிக நேர்த்தியாக விரிவாக்கி நாட்டினைத் திறம்பட ஆட்சி செய்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. வீரபாகு 55 ஆண்டுகள் இலங்கை மன்னனாக ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின்னர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தனர்.

          அந்தக் காலகட்டத்தில் மானவர்மன் என்ற மன்னன் ஆட்சியிலிருந்ததாகவும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்த இளவரசனே இலங்கையின் புகழ்மிக்க மன்னன் பராக்கிரமபாகு என்பதையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.


-  முனைவர் க. சுபாஷிணி


சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 3

சூளவம்சம் - நூல் வாசிப்பு

நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


-முனைவர் க.சுபாஷிணி


          மானவர்மனுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் நரசிம்மனுக்கும் நல்ல நட்புறவு இருந்தது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மனின் மகன். இவனது ஆட்சிக்காலம் கிபி.630லிருந்து 668 வரையாகும். தனது தந்தை மகேந்திரவர்மப் பல்லவன் போலவே சிறப்புமிக்க கோயில்களைத் தமிழகத்தில் அமைத்தவன் என்பதோடு வாதாபியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியரோடு போரிட்டு வென்றவன் என்ற சிறப்பும் பெற்றவன்  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன்.

          இந்த மானவர்மன் என்பவன் முன்னர் நான் குறிப்பிட்ட இலங்கை மன்னன் காசியப்பனின் மகன். அடைக்கலம் வேண்டி இந்தியாவிற்குத் தப்பி ஓடிவந்த மானவர்மன், பல்லவமன்னன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். பல்லவ மன்னன் நரசிம்மன் மானவர்மனைத் தனது படைப் பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக நியமித்திருந்தான். மானவர்மன் திருமணம் முடித்து அவனுக்கு நான்கு புதல்வர்களும் இருந்தார்கள். பல்லவ மன்னன் நரசிம்மன்  மானவர்மனுடன் மிகுந்த நட்புறவில் இருந்தான். நரசிம்மனின் படையில் தலைமையேற்று ஒரு போரில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தான் மானவர்மன்.   வெற்றியை மானவர்மன் ஈட்டித் தந்தமைக்கு பரிசாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நரசிம்மன், ஒரு படையினை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். மானவர்மனும் உடன் சென்றான். கடுமையான போர் நடந்தது.  ஆனால் வெற்றி பெற முடியாது தப்பியோடி மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தான் மானவர்மன்.  நீண்ட காலம் கழித்து மீண்டும் பல்லவன் நரசிம்மன் மற்றொரு படையை ஏற்பாடு செய்து மானவர்மனை உடன் அனுப்பி   இலங்கையைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.  பல்லவ மன்னனின் கப்பற்படை இலங்கை நோக்கிச் சென்றது. மானவர்மனும் அப்படையில் இணைந்து சென்றான். பயங்கரமான போர் நடைபெற்றது. அதன் இறுதியில் மானவர்மனின் படை வெற்றி கண்டது. மானவர்மன் அனுராதபுரத்தின் மணிமுடியை அணிந்து கொண்டான். அதன் பின்னர் ஏறக்குறைய 35 ஆண்டுகள் மானவர்மன் தொடர்ந்து இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் ஆட்சி காலத்தில் இலங்கையின் பல பௌத்த விகாரைகளைத் திருத்தி அமைத்ததோடு விவசாயத்திற்கு நீர்ப்பாசன குளங்களையும் ஏரிகளையும் வெட்டி விவசாயத்தை வளர்ச்சியுறச் செய்தான்.

          மானவர்மனின் மறைவிற்குப்  பிறகு அவனுடைய மகன் காசியப்பன்,   அவனுக்குப் பிறகு மகிந்தன் ஆகியோர் ஆட்சி செய்ததை சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          மகிந்தன் மரணமடைந்தபோது அவனது மகன்  ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாறி மாறி பல மன்னர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். சேனன், உதயன், மகிந்தன்,  அக்கபோதி எனத் தொடர்ச்சியாக வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது இலங்கை.

          அடுத்து சேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்  (கி.பி. 815-862) பெரும்படையுடன் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தான். இலங்கையின் வடபகுதி அனைத்தையும் வெற்றி கண்டு தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்  பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்.  இலங்கையின் வடபகுதியில் மகாதாலிதகமத்தில் பாசறை அமைத்தான். தமிழ் மக்கள் பலர் அவனது ஆட்சியின் கீழ் அரசியலில் இடம் பெற்றனர். அதனால் பாண்டிய மன்னனின் படை பலம் பொருந்தியதாக ஆகியது.  அதே வேளை இலங்கையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இலங்கை மன்னர்களின் ஆட்சி தொடர்ந்தது. சேனன் அப்போது நடந்த போரில் தோல்வி கண்டு மலையகத்திற்குத் தப்பி ஓடினான்.

          பாண்டிய மன்னனின் படை படிப்படியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாண்டிய மன்னனின் படை அரண்மனையிலிருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடியதோடு, விகாரைகளில் இருந்த தங்கத்தினாலான புத்தரின் சிலைகளையும், செல்வங்களையும் சூறையாடி எடுத்துக்கொண்டது. தங்க நகைகள், வைரங்கள் தூபராமசேத்தியத்தின் பொன் கூரை, பௌத்த சமய சின்னங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பியது பாண்டியனின் படைகள். இதனால் மனம் வருந்திய சேனன்,  தான் பாண்டிய மன்னனுக்குக் கீழ் திறைதரும் மன்னனாக இருக்கச் சம்மதித்து, இரண்டு யானை அம்பாரிகளில் பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். பாண்டிய மன்னனும் இதனை ஏற்றுக்கொண்டு  சேனனை இலங்கையின்  திறை செலுத்தும் மன்னனாக  இருக்கச் சம்மதித்து,  ஆட்சியையும் கொடுக்கச்  சம்மதித்தான். சேனனின் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.

          சேனன் மரணமடைந்ததும் அடுத்ததாக, சேனன் என்ற மற்றொருவன் கிபி 853லிருந்து 887 வரை இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் காலத்தில் பாண்டிய மன்னர்களைப் பழி வாங்குவதற்காகத் திட்டமிட்டான். அப்போது தமிழகத்தில்  ஆட்சியிலிருந்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் பாண்டியனுக்கு எதிராகச் செயல்பட்ட அவனது மகனான வரகுணபாண்டியன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்து புகலிடம் தேடி இலங்கைக்கு சேனனிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அதுவே நல்ல சமயம் எனத் திட்டமிட்ட சேனன், தனது சேனாதிபதியை அழைத்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்று வரகுணனைச் சிம்மாசனத்தில் அமர்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான்.

          கடும் யுத்தம் நடந்தது. பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் போரில் கொல்லப்பட்டான். வரகுணனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி விட்டு இலங்கைக்குப் படை திரும்பியது. ஆனாலும் படையைச் சார்ந்த தளபதிகள்  சிலர் தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்றும் தெரிகிறது.  பாண்டியர்கள் இலங்கையிலிருந்து சூறையாடிச் சென்ற தங்க புத்தர் சிலைகளை மீண்டும் தமிழகத்திலிருந்து கொண்டு வந்து ஆலயங்களில் நிறுவினான் மன்னன் சேனன். இவன் தொடர்ந்து  மன்னனாக இலங்கையில் ஆட்சியிலிருந்தான். அதன் பின்னர் உதயன் என்பவன், காசியப்பன் என்பவன் என இலங்கை ஆட்சி தொடர்ந்தது.

          அடுத்து தப்புலன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனது காலம் கிபி 924லிருந்து 935 வரை. அதே சமயத்தில் தமிழகத்தில் பாண்டிய மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சோழர்களால் விரட்டப்பட்டு இலங்கைக்கு வந்து சரண் அடைந்தான். தப்புலன் பாண்டியனுக்கு   உதவி செய்ய நினைத்தாலும் அவனது அரசின் அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஆகையால் பாண்டிய மன்னன் தனது  சிம்மாசனம் மற்றும் சில அரச முத்திரை சின்னங்களையும் மன்னனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டுச் சேர நாட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தான். சேனனுக்குப் பிறகு உதயன் என்பவன் மன்னனானான். அவனுக்குப் பின் மேலும் சேனன் என்னும் மற்றொருவன் மன்னனானான். இவனது காலம் கிபி 956லிருந்து 972 வரை. இவன் கலிங்கத்து  இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டான்.

          சூளவம்சம் குறிப்பிடும் செய்திகளைக் காணும், போது பாண்டிய மன்னர்களின் அரச சின்னங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையிலிருந்ததை உறுதி செய்வதாகவே அமைகின்றது. அதுமட்டுமின்றி, சோழ மன்னர்கள் தமிழகத்தில் பலம் பெற்ற போது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.-  முனைவர் க. சுபாஷிணி

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 2

*பகுதி 2  - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


          சூளவம்சம்  கூறும் மன்னர்கள் பரம்பரை பற்றிய செய்தியில் மீண்டும் மீண்டும் சில பெயர்கள் வருவதைக் காணலாம். உதாரணமாக, காசியப்பன் அக்கபோதி, சேனன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அதேபோல பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற பெயர்களும் ஒரு முறைக்கு மேல் இடம்பெறுகின்றன.  இப்பெயர்களைக் கவனிக்கும் போது இவை சிங்கள பெயர்களா அல்லது தமிழ்ப் பெயர்களா என்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் சூளவம்சம் பொதுவாகவே சிங்கள மன்னர்களை மட்டுமே இலங்கை மன்னர்களாக எடுத்துக்கொண்டு இந்த நூலில் கையாள்கிறது. எப்போதெல்லாம் தமிழர்கள் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றினாலும் அல்லது சிங்கள படையில் பதவி வகித்தாலும், அல்லது தமிழகம் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தாலும் அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆக சூளவம்சம் முதன்மைப்படுத்துவது இலங்கை சிங்கள மன்னர் பரம்பரையையே என்பது உறுதிப்படுகிறது.

          மகாவம்சத்தில் இறுதியாக இடம் பெறும் மகாசேனனின் 27 ஆண்டு ஆட்சி, அதாவது கி.பி 361ல் அவன் ஆட்சி முடிய, அவனது மகன் ஸ்ரீ மேகவண்ணன் ஆட்சியைக் கையில் எடுக்கின்றான். அவன் முடிசூடிக்கொண்ட செய்தியிலிருந்து சூளவம்சத்தின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் அனுராதபுரம் இலங்கை அரசின் தலைநகராக விளங்கியது. அப்போது தேரவாத பௌத்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் மகாவிகாரை பிக்குகளும், மகாயான பௌத்த சிந்தனைகளைத் தொடரும் அபயகிரி விகாரை பிக்குகளும் இக்காலகட்டத்தில் சமநிலையில் இருந்திருக்கின்றன. பௌத்தத்தின் இந்த இரண்டு உட்பிரிவுகளும் பெருத்த வேறுபாடுகளுடனே அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நிலையும் தெரியவருகின்றது. இதில் மகாசேனன் மகாயான தத்துவத்தைக் கடைபிடித்தவன்.

          மகாசேனுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீ மேகவண்ணன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் தனது தந்தை புறக்கணித்த தேரவாத பௌத்தத்தை முன்னெடுத்தான். அவனுக்கு அடுத்து ஜெட்டதீசன் கிபி 331லிருந்து 339 வரை ஆட்சியிலிருந்தான். அவன் ஸ்ரீ மேகவண்ணனின் சகோதரனின் கடைசி மகன். ஒன்பது ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தனது மகன் புத்ததாசனிடம் ஆட்சியை ஒப்படைத்து அவன் மரணமடைந்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் உபதேசன் ஆட்சியை எடுத்துக் கொண்டான். நல்ல குணங்கள் கொண்ட மன்னனாக இவன் விவரிக்கப்படுகின்றான்.

          புத்ததாசனுக்குப் பின்னர் அவன் மகன் உபதேசன் அரியனை ஏறினான். உபதேசனின்  மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அவனது தம்பி மகாநாமன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்கு இரண்டு மனைவியர்- ஒருவர் சிங்களப் பெண். மற்றொருவர் தமிழ் பெண். தமிழ் பெண்ணுக்குப் பிறந்த சொத்திசேனன் என்பவன் மகாநாமனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஆனால் அன்று இரவே தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த சிங்கள வம்சாவளிப் பெண் சம்ஹாவின்  காதலனால் கொல்லப்பட்டான். அவளது காதலன் அரசனானான். பின் அவனும் இறந்து போனான். பின் தாதுசேனன் என்பவன் ஆட்சிபீடத்தை ஏற்றான்.

          அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து படையுடன் வந்த பாண்டு என்ற தமிழ் மன்னன் இலங்கையில் போர் தொடுத்து  அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டான். ஐந்து ஆண்டுகள் இந்த தமிழ் மன்னன் பாண்டுவின் கீழ் இலங்கை ஆட்சி இருந்தது. பாண்டு என்பது ஒரு பாண்டிய சிற்றரசனாக  இருக்க வேண்டும். அவன் ஐந்தாண்டுகளில் மரணமடைய அவனது மகன் பாரிந்தன் முடிசூடிக் கொண்டான். மூன்றாண்டுகளில் அவனும் மரணமடைந்தான்.  இந்தக் காலகட்டத்தில் தாதுசேனன்  பாண்டிய ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டு வந்து தாக்கினான். அதில் வெற்றியும் பெற்றான். இலங்கை முழுவதையும் கைப்பற்றிக் கொண்டு கிபி 459லிருந்து 477 வரை மன்னனாக ஆட்சி செய்தான். இக்காலகட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து இலங்கையில் விவசாயத்தைச் செழிக்க வைத்தான்.

          அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதலில் மகன் மொகல்லானன் பட்டத்துக்கு வந்தான். குடும்ப சண்டையினால் அவன் தப்பி ஓடவே இரண்டாவது மகன் காசியப்பன் மன்னனாக அரியணை ஏறினான். காசியப்பன் கி.பி 477 இலிருந்து கி.பி 495 வரை ஆட்சி செய்தான்.

          முன்னர் தப்பி ஓடிய  மொகல்லானன்  பதினெட்டு வருடம் கழித்து இந்தியாவிலிருந்து ஒரு படையையும் சேர்த்துக் கொண்டு இலங்கை திரும்பினான். போர் நடைபெற்றது. அதில் காசியப்பன் கொல்லப்பட்டு மொகல்லானன்  அரியணை ஏறினான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் குமாரதத்துசேனன் என்பவன் மன்னனானான். அதன் பிறகு அவனது மகன் கீர்த்திசேனன் அரியணை அமர்ந்தான். அவன் ஒன்பது மாதத்தில் அவனது மாமன் சிவா என்பவனால் கொலை செய்யப்பட்டான். சிவாவின் ஆட்சியும் குறுகிய காலமே இருந்தது. இப்படியே செல்கிறது இலங்கை மன்னர்களின் அடுத்த இருநூறு ஆண்டு கால வரலாறு.

          ஹத்ததாடன் என்பவன் கி.பி 659 இலிருந்து 667 வரை அரசனாக இருந்தான். அதன் பின்னர் மீண்டும் சில ஆண்டுகளில்  கலவரம்  ஏற்படவே, அதன் பின்னர் ஸ்ரீ சங்கபோதி கி.பி.667லிருந்து 683 வரை ஆட்சி செய்தான். அப்போது இலங்கை முழுவதும் பௌத்த சமயம் பரவியிருந்தது. தமிழ் சேனாதிபதி ஒருவன் பௌத்த விகாரைக்கு மண்டபங்களை அமைத்து கொடுத்தமையையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ சங்கபோதி ஆட்சிக்காலத்தில் புலத்தி (பொலநறுவை) தலைநகரமாக விளங்கியது. ஸ்ரீ சங்கபோதியின் மறைவுக்குப் பிறகு பிரதம அமைச்சராக இருந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் அதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின் அவனும் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மானவர்மன் அரியணை ஏறினான். மானவர்மன் சமகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனுடன்  நெருக்கமான உறவு கொண்டவன். -  முனைவர் க. சுபாஷிணி