Saturday, December 14, 2019

சிலப்பதிகாரத்தில் ‘புனல்வாயில் வஞ்சியும்’, ‘புல்லிலை வஞ்சியும்'

சிலப்பதிகாரத்தில் ‘புனல்வாயில் வஞ்சியும்’, ‘புல்லிலை வஞ்சியும்'

—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
          சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியம் சொல்லும் ‘புனல்வாயில் வஞ்சி’, ‘புல்லிலை வஞ்சி’ ஆகிய இரண்டு வஞ்சிகளும் பற்றிய குறிப்புகள் உள்ளனவா? என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

          பதிற்றுப்பத்து, புறநானூற்றுச் செய்திகளோடு சிலப்பதிகாரச் செய்திகளை ஒப்பிட அவையே முதல்நிலைத் தரவுகளாம். பிற தொகைநூற் செய்திகளும், கல்வெட்டு ஆதாரங்களும், ஆய்வாளர் கருத்துக்களும் இரண்டாம்நிலைத் தரவுகளாம்.

          உதியன் மரபு, இரும்பொறை மரபு என இருவம்சத்தினர்; ஒரே கால கட்டத்தில் முறையே; மேற்கரைப்பகுதியையும், கொங்குப்பகுதியையும் ஆண்டு வந்தமையைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது. (கா.கோவிந்தன்- சங்ககால அரசர் வரிசை- ப.- 4; அ.மு.பரமசிவானந்தம்- தமிழக வரலாறு- ப.- 130; C.S. செலுவ ஐயர்- Annals Of Oriental Research-ப.- 113). சேரமன்னரின் தலைநகர் வஞ்சி எனும் பொதுப்பெயர் பெற்றது. சங்கஇலக்கியமும், சிலப்பதிகாரமும்; மேற்கரை வஞ்சியையும், கொங்கு வஞ்சியையும் விதந்து பேசுகின்றன.    

          மேற்கரை வஞ்சி நானிலவளம் பொருந்தியது. ‘மூதூர்’ என்றும் பெயர்  பெற்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பதிற்.- 15), அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (பதிற்.- 30), மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற்.- 53), செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்- வஞ்சிக் காண்டம்) ஆகியோர் இருந்து ஆண்டதாகும்

          மூதூரின் நானில வளம்; ஞாழல் பூக்கள் சிதறிக் கிடக்கும் கரை; மணிக்கலம் போன்ற நெய்தலின் இலைகளைத் துழாவிக் குருகுகள் மீன்வேட்டையாடிப் பசியாறி வெள்ளிய பூங்கொத்துக்களுடைய புன்னைக்  கிளைகளில் இனிதுறையும் கானல்; ஓங்கிய மணல்மேட்டில் தாழ்ந்து இருக்கும் அடும்பினை அலை மோத ஒதுங்கிய கடற்சங்குகளின்  ஒலி; முத்தும் பவளக்கொடியும் சேர்க்கும் மக்கள் வாழும் குளிர்ந்த நெய்தலும், காந்தள் சூடிய வில்வேட்டுவர் ஆமானிறைச்சியோடு யானைத்தந்தங்கள்  தந்து; பண்டமாற்றாக வடித்த கள்ளைப் பெறும் பொன்மலி ஆவணத்து  ஊர்களுடைய குறிஞ்சியும், வெண்மையாக நுரைத்து வந்த சிவந்த ஆற்றுவெள்ளத்தால் பூத்துத் தேன்சிந்திய மருதமரம் அடியோடு சாய; வைக்கோற் புரிகளுடன் மணல்மேடிட்டு அணை கட்டிய மக்களின்  ஆரவாரம்; காலமல்லாத காலத்திலும் கரும்பறுத்தொழியாது அரிகாலும் அகழ்ந்து; பல பூக்களோடு; முழவு முழங்கும் திருவிழாக் கண்டு மீளும் மக்கள்மிகு வளமான மருதமும், தினைக்கொல்லை உழவரது வரகுத்தாள் வேய்ந்த மனையில்; மெல்லிய தினைமாவால் விருந்து  புறந்தரும் புன்செயுடைய முல்லையும் என வருணிக்கப்படுகிறது (பதிற்.- 30).

          சிலப்பதிகாரம் காட்டும் செங்குட்டுவன் வஞ்சியும் நானில வளம் பொருந்தியது. அவன் மனைவி நானிலப் பண்களையும் ஒருங்கே கேட்டு இருந்தாள் (நீர்ப்படை காதை- அடி.- 215-251). கோவலர் தம் ஆநிரைகளைத் தண்ணான் பொருநையில் விட்டுத் தாழைக்கோட்டின் மேல் ஏறியிருந்து முல்லைப்பண் பாடிக் குழலூதினர். முற்றிய தேறலைப் பருகிக்  கானவன் கவண்கல் வீசும் காவலைக் கைவிடப் புனத்தினை மேய வந்த யானை தூங்கும்படியாகப் பரண் மேலிருந்து குறத்தி குறிஞ்சிப்பண் பாடினாள். நாளை மன்னனின் பிறந்தநாளாகையால்; நுகம் பூண்டு உழவேண்டியது  இல்லை என்ற உழவரோதை; மருதப்பண்ணாகக் கேட்டது. வெள்ளலை மோதும் மணற்குன்றை அடுத்திருந்த அடைகரையின் புன்னைநிழலில் வலம்புரி ஈன்ற முத்துக்களை எடுத்துக் கழங்காடும் மகளிர் சேரனைப் புகழ்ந்து நெய்தற்பண் பாடினர்.

          வரந்தருகாதையின் முடிவில் இடம்பெறும் கட்டுரை செங்குட்டுவன் வஞ்சியைப் “பழவிறல் மூதூர்”- (அடி- 5) என்றே குறிப்பிடுகிறது.                

          சிறுபாணாற்றுப்படை புனல்வாயில் வஞ்சியை வருணிக்கும் போது; ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை; பரந்து விரிந்த கழி; எருமை தன் அகன்ற வாயால் வளவிய கழுநீர்ப் பூக்களை மேய்தல்; அடியெடுத்து வைக்கும்போது கழியுள் கொழுத்த மீன்கள் சிதைதல்; காட்டுமல்லிப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் கரையில் மிளகுக்கொடி படர்ந்த பலா மரம்; அங்கு தங்கி; கழுநீர்ப் பூக்களுள் இருந்த தேன் மணக்க அசை போடும் எருமையின் மயிர்நிறைந்த முதுகை மஞ்சளின் மெல்லிலை உராய்தல் என நானில வளங்களும் இடம்பெற்றுள்ளன (அடி.- 41-50).

மேற்கரை வஞ்சியின் கோட்டை:
          ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம் காக்கைப்பாடினியார்; 'நீ யானை மேலேறி நேராகக் கோட்டைவாசலுக்குப் போனால் உன் யானை பழக்க தோஷத்தால் அதை முட்டிக் குத்தித் தகர்த்துவிடும். உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்த கோட்டைக்கு இயற்கையாக அமைந்த காட்டரண் வழியே வளைந்து வளைந்தேனும் சென்று ஊருக்குள் நுழைவாயாக.’ என்கிறார். ‘கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறு’ என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள். மூதூர் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டிலிருந்தது. அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் (ம.பசுவலிங்கம்- சங்ககால வஞ்சி- ப- 134). ஆதலால் அப்படிக் கட்டியிருக்க வேண்டும் (பதிற்.- 53).
          சிலப்பதிகாரம் மேற்கரை வஞ்சிக்கோட்டையின்; மேற்சுட்டிய தனித் தன்மை புலப்படும்படிக் கூறும் வருணனை குறிப்பிடத்தக்கது. வடநாட்டுப் போருக்குக் கிளம்பிய படை கோட்டைவாசல் வழியாக வெளியேறாமல்;
                    “வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத”ச் 
சென்றன  என்பதால் (கால்கோட்காதை- அடி- 81); ஆற்றின் சங்கமத்துறை, கடற்கழி முதலியவற்றுடன் தொடங்கும் பயணப்பாதை விளக்கம் பெறுகிறது.

புல்லிலை வஞ்சி:
          செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை என்ற பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளஞ்சேரலிரும்பொறை என்ற இளங்- கடுங்கோ மூவரும் ஆண்டது கொங்குவஞ்சி. இவ்வூரின் அருகே புகளூரில் கிடைத்திருக்கும் கல்வெட்டு மூவரின் பெயரையும் ஒருசேரச் சுட்டுவது  மூவரும் அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்பதைத் தெரிவிக்கிறது (நடன.காசிநாதன்& கு.தாமோதரன்- கல்வெட்டு- ஓர் அறிமுகம்- ப.- 34). இவர்களைப் பற்றிய பாடல்கள் கொங்குவஞ்சியை வஞ்சி என்னும் தாவரத்தோடும் தண்பொருநை ஆற்றோடும் தொடர்பு படுத்துகின்றன.
அலைக்கும் இலையில்லாத வஞ்சி எனும் பொருள்பட;
                    “புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் 
                    கல்லென் பொருநை”- (புறம்.- 387) 
என்று; ஆற்றோடும், வஞ்சித்தாவரத்தோடும் தொடர்புறுத்திப்  பாடப்பட்டுள்ளது. 

                    “தண்பொருநைப் புனல்பாயும் 
                    விண்பொரு புகழ் விறல்வஞ்சி”- (புறம்.- 11) 
என; ஆறும் ஊரும் ஒருங்கு பேசப்படுகின்றன. சோழன் நலங்கிள்ளி;

                    “பூவா வஞ்சியும்”- (புறம்.- 32) நல்கக்கூடிய பெருமை 
                    பொருந்தியவன் என்னும்போதும் வஞ்சி தாவரத்துடன் தொடர்புறுகிறது. 
                    சோழியஏனாதி திருக்குட்டுவனையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடும்போதும்; 
“வாடா வஞ்சி”- (புறம்.-39& 394) எனத் தாவரத்தோடு தொடர்புறுத்துவது நோக்கற்குரியது.
சிலப்பதிகாரம் நாட்டார் வழக்காற்றுப் பாடலில் கொங்கு வஞ்சியைக் குறிப்பிடுகிறது. வாழ்த்துக்காதையில் மகளிர்;
                    “வாழியரோ வாழி வருபுனல்நீரத் தண்பொருநை
                    சூழ்தரும் வஞ்சியார் கோமான்தன் தொல்குலமே”-(பா- 14)
என; அம்மானை ஆடத்தொடங்குமுன் மூவேந்தரை வாழ்த்துங்கால் வஞ்சி  தண்பொருநை ஆற்றினால் புரக்கப்படுவதைப் பாடுகின்றனர். 

          இன்றைய அமராவதி நதியே தண்பொருநை ஆகும். பாலக்காட்டுக்   கணவாய்க்குத்  தெற்கே இருந்த மேற்குமலைத் தொடர் பொருப்பு என்று பெயர் பெறும் (S.கணபதிராமன் -பொருநை நாடு -ப.- 34). பொருப்பில் தோன்றிய நதிகள் பொருநை எனும் பொதுப்பெயரைப் பெற்றன (ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை -பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு - ப.- 20). கிழக்கு நோக்கி ஓடுபவை பெண்நதிகள்; மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ‘ஆன்’ எனும் முன்னொட்டைப் பெறும் (கழகத் தமிழகராதி-ப.- 93- ஆன்=பெற்றம்; ப.- 704- பெற்றம்=இடபம்; S.கிருஷ்ண சாமி ஐயங்கார்- சேரன் வஞ்சி -ப.- 41&42). பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் ‘தண்’எனும் முன்னொட்டு மட்டும் பெற்றன (தண்பொருநை> தாமிரபரணி). அதுபோல கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநை 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது.

முடிவுரை:
          சங்க இலக்கியத்தில் விதந்து ஓதப்பட்ட இரண்டு வஞ்சிகளும் அதே தனித்தன்மையுடன் சிலப்பதிகாரத்திலும் விதந்து ஓதப்பட்டுள்ளன.


சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
பதிற்.- பதிற்றுப்பத்து    

துணைநூற்பட்டியல்:
1.  கணபதிராமன்,S.- பொருநை நாடு- 1ம் பதிப்பு- 1966- ஸ்ரீ M.G.M. வெளியீடு, தென்காசி.
2.  கழகத் தமிழகராதி- கழகவெளியீடு-1171- 3ம் பதிப்பு-1974- சென்னை.
3.   காசிநாதன்,நடன.& தாமோதரன்,கு.- கல்வெட்டு(ஓர் அறிமுகம்)- முதற்பதிப்பு- 1973- தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு-31, சென்னை.  
4.  கிருஷ்ணசாமி ஐயங்கார்,S.- சேரன் வஞ்சி- 1946- Educational Publishing Company, சென்னை.
5.  கோவிந்தன்,கா.- சங்க கால அரசர் வரிசை- தொகுதி- l- 1ம் பதிப்பு- 1955- கழக வெளியீடு- 757- சென்னை.
6.  சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்- உ.வே. சாமிநாதையர்(ப.ஆ.)- தியாகராச விலாச வெளியீடு- 8ம் பதிப்பு- 1968
7.  துரைசாமிப்பிள்ளை,ஔவை சு.- பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு- 4ம் பதிப்பு- திருவளர் பதிப்பகம், தூத்துக்குடி.
8.  பசுவலிங்கம்,ம.- சங்ககால வஞ்சி- 1ம் பதிப்பு- 1984- சேகர் பதிப்பகம்,சென்னை. 
9.  பத்துப்பாட்டு -வர்த்தமானன் பதிப்பகம்- முதல் பதிப்பு - 1999
10.  பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்- உ.வே. சாமிநாதையர் (குறிப்புரை)- தியாகராச விலாச வெளியீடு- 6ம்பதிப்பு- 1957
11.  பரமசிவானந்தம்,அ.மு.- தமிழக வரலாறு- 3ம் பதிப்பு- 1971- தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை.
12.  புறநானூறு- பகுதி- l&ll -  ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு-438& 598- முதல்பதிப்பின் மறுபதிப்பு- 2007- கழகவெளியீடு, சென்னை.
13.  Celuva Aiyar,C.S.- "The Vanjimanagar Or The Great City Called Vanji”- ப.- (113-114)- Annals Of Oriental Research- மதுரைச்செந்தமிழ்க் கல்லூரி நூலகத்து  இந்நூல் சிதைந்துள்ளது. 
14.  பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்- உ.வே. சாமிநாதையர் (குறிப்புரை)- தியாகராச விலாச வெளியீடு- 6ம்பதிப்பு- 1957


குறிப்பு:
          ‘சிலப்பதிகாரம் காட்டும் பழந்தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்னும் பொருண்மையில், 12.12.2019 அன்று சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் இலக்கியக் கலைமன்றமும், செம்புலம் பன்னாட்டுத் தமிழாராய்ச்சிக் காலாண்டிதழை வெளியிடும் செம்மூதாய் பதிப்பகமும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில்  நடத்திய கருத்தரங்கில் வாசித்தளித்த ஆய்வுக்கட்டுரை. செம்புலம் இதழில் பதிப்பிக்கப்பட்டது.




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி




No comments:

Post a Comment