Saturday, December 7, 2019

சங்க இலக்கியத்தில் மாமை

சங்க இலக்கியத்தில் மாமை

—   முனைவர்.ப.பாண்டியராஜா


          இந்த மாமை என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

          காதலன் பிரிந்து வெளியூர் சென்றால், பிரிவுத்துயரால் வாடிய காதலியின் மேனியில் பசலை படரும் என்றும், இந்தப் பசலை பீர்க்கம் பூவைப்போலப் பொன்னிறம் உடையது என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தப் பசலை என்பது பிரிவு ஏக்கத்தால் உடல் மெலிந்து உடலின் நிறம் மாறி, வெளுத்துப் போவதைக் குறிக்கும் என்று இன்றைய உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதனை ஓர் அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.
                    காடு இறந்தனரே காதலர் மாமை
                    அரி நுண் பசலை பாஅய் பீரத்து
                    எழில் மலர் புரைதல் வேண்டும் - அகம் 45/6-8

இதன் பொருள்:
காதலர் வறண்ட நிலத்தைக் கடந்துதான் சென்றிருக்கிறார், எனது மாமையோ
மெல்லிய நுண்ணிய பசலை படர்ந்ததால், பீர்க்கங்கொடியின்
அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது.

          எனவே, மாமை என்பது மேனியின் நிறம் என்பது தெளிவாகிறது. பொதுவாக, மாமை என்பதை மாந்தளிர் நிறம் என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் இப்போது மாநிறம் என்கிறோம். இருப்பினும் சில அகராதிகள் இதனைக் கருமை நிறம் (black) என்று குறிப்பிடுகின்றன. எனவே, இந்த மாமை என்பது என்ன நிறம் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலம் தெளிவாகக் காண்பதே இக்  கட்டுரையின் நோக்கம்.

(1)
                    நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
                    களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
                    வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - மலை 35-37

இதன் பொருள்:
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பெரிய யாழை

          இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

          ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம். இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி’ என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். எனவே ’மாமை களங்கனி’ என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.



(2)
                    வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
                    மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை - குறு 147/1,2

இதன் பொருள்:
வேனிற்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்

          பாதிரியில் மூன்று வகை உண்டு;  அவை 1. பழுப்பு நிறம் (purple) 2. வெள்ளைநிறம் 3. பொன் நிறம்.

          இவற்றில் இங்கு புலவர் குறிப்பிடுவது பழுப்பு வகைப் பாதிரியே. அதுவே மாமை நிறத்தை ஒட்டி உள்ளது.



(3)
                    கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
                    நீர் மலி கதழ் பெயல் தலைஇய
                    ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே - நற் 205/9-11

இதன் பொருள்:
வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே

          பொதுவாக, தளிர்கள் இளம் பச்சைநிறத்திலோ, மாநிறத்திலோ தான் இருக்கும். கருமையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே ஈங்கையின் தளிரும் மாநிறத்ததுவே எனக் கொள்ளலாம்.



(4)
                    நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
                    நார் உரித்து அன்ன மதன் இல் மாமை - நற் 6/1,2

இதன் பொருள்:
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,

                    அம்ம வாழி தோழி நம் ஊர்
                    பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
                    நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
                    இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35

இதன் பொருள்:
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

          ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.

          எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும் இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.


          ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப் பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். சங்கப் புலவர்கள் மிகப்பெரும்பாலும் கற்பனையாக எதையும் சொல்வதில்லை.



(5)
                    மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்
                    தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன
                    அம் கலுழ் மாமை கிளைஇய
                    நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:
மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள
தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல
சிறிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் கிழத்தி

          இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில் தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் ச.வே.சு

                    திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1
இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் ச.வே.சு

(6)
                    மணி மிடை பொன்னின் மாமை சாய என்
                    அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:
நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்
அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.

          இங்கே, மணி - பொன், மாமை - பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக் கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது.

          ஆனால் ஔவை.சு.து. அவர்களின் உரை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என் அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும் என்று விளக்கமாகக் கூறுகிறது. இதனை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன.

          ஆனால், மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல், பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம். பதித்த மணி பொன்னின் அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.

(7)
          இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.

                    பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
                    பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ - கலி 48/16,17

இதன் பொருள்:
பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) - நச்சினார்க்கினியர் உரை.

          மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை என்று இங்குக் காண்கிறோம்.

          பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும், மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.

          பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மாநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது.

          ஆனால், இவ்வுரைக்கு விளக்கம் எழுதிய பெருமழைப்புலவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?

          எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம் காணவேண்டும். முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.

          ’பொன் உரை மணி அன்ன மாமை’ என்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்த’ என்று நச். உரை காண, புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.

          செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறது’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.

          எனவே இங்கு மணி பொன்னில் பொதிந்தது அல்லது மணி பொன்னில் பதிக்கப்பட்டது என்று கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது

          அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம். அவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.

இப்போது,
          திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/8

என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள், அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள் என்று பொருள் கொள்கிறார். அத்துடன், மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.

          ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே, பெருமழைப்புலவர் மணி - நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் மணி, ஈண்டுச் செம்மணி என்ற விளக்கத்தை இங்குக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

எனவே,
          பொன் உரை மணி அன்ன மாமைக்கண் - கலி 48/16,17

என்ற அடிக்கு, பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையைப் பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.

(8)
                    எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
                    நறிய கமழும் துறைவற்கு
                    இனிய மன்ற என் மாமை கவினே - ஐங் 146

இதன் பொருள்:
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.

          ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது. எத்தனையோ மலர்கள் இருக்க, இந்தப் புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.

          ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.

                    செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1

என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.


          சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?

          இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.

                    அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
                    ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
                    இவட்கு அமைந்தனனால் தானே
                    தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே - ஐங் 103

இதன் பொருள்:
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.

                    எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்
                    தனி குருகு உறங்கும் துறைவற்கு
                    இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 144

இதன் பொருள்:
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.

          பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.


          மாந்தளிரை நிறையப்பேர் பார்த்திருக்கமாட்டீர்கள். இதோ, இதுதான் மாமை எனப்படும் மாந்தளிர் நிறம்.





தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/













2 comments:

  1. அருமை. தங்கள் தமிழறிவும். மாமை என்ற நிறத்தை புலவர்கள் பயன்படுத்திய பேரறிவும். தமிழ் வளம் நிறைந்த மொழி என்பதை நிறுவும் கட்டுரை. வாழ்க🙏

    ReplyDelete
  2. அருமையான தெளிந்த விளக்கம்.பயனுள்ளதா அமைந்தது.மிக்க நன்றி.🙏🙏🙏

    ReplyDelete