Tuesday, December 3, 2019

நாலாயிர திவ்விய பிரபந்தம் வழங்கும் தமிழ்ச்சுவை

நாலாயிர திவ்விய பிரபந்தம் வழங்கும் தமிழ்ச்சுவை

—  சொ.வினைதீர்த்தான்


          தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ், பைந்தமிழ், வண்தமிழ், ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வார்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான “ஞானத் தமிழ்” என்ற ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார். 

பூதத்தாழ்வாரின் ஞானச் சுடர்விளக்கு:
          பூதத்தாழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார்.

          தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார். பூதத்தாழ்வார் பாடல்கள் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் அமைந்துள்ளன. அவ்வந்தாதியின் முதல் வெண்பாவிலேயே தமிழுக்கு அடைமொழி தந்துவிடுகிறார்.
                    “அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
                    இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
                    ஞானசுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
                    ஞானத்தமிழ் புரிந்த நான்.”

          அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், உருகும் சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் இயற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான். தமிழ்மொழியை அறிந்திராவிட்டால், படித்திராவிட்டால் எனக்கு அறிவு வளர்ந்திருக்காது: ஞானச்சுடர் விளக்கை ஏற்றியிருக்க முடியாது என்பதே பூதத்தாழ்வாரின் உள்ளக் கருத்து.

          இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் ஆழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடுதூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப்பெருமையையும் இப்பாடலில் காணக்கிடைக்கின்றன.
                    “யானேதவம்செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
                    யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
                    இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
                    பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”

          “நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். தமிழிலே நல்ல பாமாலை உன் திருவடிகளிலே சூடத்தக்க தாகக் கூறினேன்” என்பதே இப்பாடலின் பொருள் அல்லவா!

          “யானே பெருந்தமிழன்; நல்லேன்” என்று ஆழ்வார் கூறும் பெருமிதம் நெஞ்சைக் கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா? தமிழர் பண்பாட்டினை மறந்தவர்கள் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியாது.

குலசேகர ஆழ்வாரின் கோதில்லாக் குறிக்கோள்:
          குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக அறிவது  குறிக்கோள்; குறிக்கோளின் மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை.
          
          எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? 

          எல்லா மதங்களும் தங்கள் இறைவன்மீது தீராத விசுவாசம் வைக்கும்படி கூறுகின்றன. அவ்விறைவனல்லாது வேறு கதியில்லை என்று ஆழ்ந்தபற்று வைக்கும்படி வலியுறுத்துகின்றன. ஒருவன் தன்னுடைய குறிக்கோள் இதுவென ஒன்றை எண்ணித் தேர்ந்தால் அதன்மீது உச்சபட்ச நம்பிக்கை கொள்ளவேண்டும்.

          குலசேகர ஆழ்வார் அரிய உவமைகள் வழியாக அசைக்கமுடியாத வகையில் திருமாலை அடைவதையும், அவனையே பற்றிக்கொள்வதையும், வேறு கதியில்லையென்று விட்டு விடாதலையும் தன்னுடைய பாசுரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். எளிய உவமை. ஆனால் வலிய அறிவுறுத்தல்!

          கதிரவன் எவ்வளவுதான் தீயைப்போல எரித்தாலும் தாமரை மலர் கதிரோனுக்கே மலரும்! சந்திரனுக்கு மலராது. திருமாலுக்கன்றி வேறெதற்கும் என் உள்ளம் குழையாது என்கிறார் ஆழ்வார். கொண்ட குறிக்கோள் எவ்வளவுதான் கடினமானதாகவும் துயரம் தருவதாகவும் இருந்தாலும் அதனையடைதலன்றி மனதிற்கு வேறெதுவும் ஒப்பாகாது என்பதனை நாம் இப்பாசுரம் மூலம் அறியலாம்.
                    “செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
                    அந்தரம்சேர் வெம்கதிரோற்கு அல்லால் அலராவால்
                    வெம்துயர் வீட்டாவிடினும் வித்துவகோட்டுட் அம்மா! உன்
                    அந்தம் இல்சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!”

          பெற்றதாய் விலக்கினாலும் குழந்தை விலகிவிடுவதில்லை என்பதனை “அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவேபோன்று இருந்தேனே” என்று வித்துவக்கோடு என்னும் திருத்தலப்பெருமானிடம் உரைக்கிறார் குலசேகர ஆழ்வார். 

          மேலும் “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” என்ற அற்புத உவமை காட்டுகிறார். கொண்டவன் வேறுபட்டாலும் குலமகள் அவனையன்றி வேறொருவனை நினைப்பதில்லை. அதுபோல குறிக்கோளடைய எவ்வளவு தடைவந்தாலும் அக்குறிக்கோளன்றி வேறொன்றிற்குத் தாவியவர்கள் என்றும் வெற்றி கண்டதில்லை.

          மேலும் அடையும் வழி பெருந்துயர் தந்தாலும் குறிக்கோளை அடைதல் உவக்கும் என்பதனை மிகச்சிறந்த உவமையைக்கொண்டு பின்வரும் பாடலிலும் குலசேகரப்பெருமான் உணர்த்துகிறார்.
                    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவர் பால்
                    மாளாக் காதல் நோயாளன்போல், மாயத்தால்
                    மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மாநீ
                    ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.”

          குறிக்கோளை அடைவது மிகக்கடினம் தான்! வழியில் பல இடையூறுகள், தடைகள், சிக்கல்கள் எழலாம். அவையனைத்தும் தன்னைத் தகுதி வளர்த்துக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பு; தன்னிடமுள்ள குறையை நீக்கிக்கொண்டு புடம்போட்ட மாசற்ற தங்கமென மிளிர வாய்த்த சந்தர்ப்பமென்று மேலே முயன்றவர்கள் எல்லாம் பெருவெற்றி அடைந்திருக்கிறார்கள்.

          பக்தர் மனம் பருகும் நீரிலும் உண்ணும் வெற்றிலையிலும் பரந்தாமனையே எண்ணி நிற்கும். அதுபோல குறிக்கோளில் பற்றுடையவர்கள் எந்தவொரு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனம் குறிக்கோளையே சுற்றிச்சுற்றி வரும். ஆழ்வார் "பாய்மரக்கலத்தில்" சிக்கிக்கொண்ட பறவை உவமை சுட்டுகிறார். 

          பரந்த கடல் நடுவில் பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பல். அக்கப்பலில் ஒரு உயரமான கொம்பு. அக்கொம்பின் மேலே கப்பல் பயணிக்கும் முன்பாக வந்தமர்ந்திருந்தது ஒரு பறவை. இப்போது கப்பலோ நடுக்கடலில். பறவை அங்குமிங்கும் பறந்தாலும் கரைகாணாது அக்கப்பலையே வந்தடைந்தாக வேண்டும்.

          “இணையடியே அடையல் அல்லால் எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின்(கப்பலின்) கூம்பேறும் மாப்பறவை”  என்ற ஆழ்வார் மனம் புகலிடமாகக்கொள்வது கண்ணன் கழலினையே. வெற்றியாளர் எண்ணமெல்லாம் கொண்ட குறிக்கோளே!

தொண்டரடிப்பொடியாழ்வாரின் மாசற்றார் மனத்துளான்:
          தொண்டரடிப்பொடியாழ்வார் பக்திசெய்ய அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து பக்தியின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார்.
                    “மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
                    சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா
                    புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
                    எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே”
மனந்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று ஓதுதலாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப் பக்தி வசப்படாது என்கிறார் ஆழ்வார்.

          “யாவர்க்குமாம் இன்னுரை” என்றது திருமந்திரம். "வாய் கோபுரவாசல்" என்றார்கள். கோபுரவாசலில் அசிங்கம் செய்யலாமா? மனதினில் தூய்மையில்லாவிடில் வாக்கினிலே எப்படி இனிமையுண்டாகும்? உள்ளம் தூய்மையற்றது என்றால் அங்கு கோபம் தன்னாலே குடிகொள்ளும். வாயிலிருந்து வெளிவருவது கடுஞ்சொல் அன்றி வேறாக இருக்க முடியுமா? "சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி" என்றது வள்ளுவம். சினம் கொன்ற பிணத்திற்குத் திருமால் அருளுவதென்பதேது?

          அறம் இழுக்கு என்று கூறிய அழுக்காறு, அவாவுள்ள உள்ளம், இன்னாச்சொல், வெகுளி இவற்றை மாற்றிக்கொண்டால் தான் இறைவன் அருளுவான் என்பதனை அழுத்தம் திருத்தமாக ஆழவார் இங்கு உரைக்கிறார். ஒழுக்கத்துடன் இயைந்த பக்தியே கதி!  இக்கருத்தினையே மேலும் வலியுறுத்துகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
                    “பேசிற்றே பேசலல்லால் பெருமை ஒன்றஉணரல் ஆகாது
                    ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்;
                    மாசற்றார் மனத்துளானை வணங்கிநாம் இருப்பதல்லால்
                    பேசத்தான் ஆவதுஉண்டோ பேதைநெஞ்சே நீ சொல்லாய்”
          இறைவன் விரும்பி உறையும் பாற்கடலும், வைகுந்தமும், அரங்க மாநகரும் மாசற்றார் மனமே என்கிறார் ஆழ்வார். உள்ளத்தினாலும், சொற்களினாலும்,செயல்களாலும் குற்றமிழைக்காதவர்களால்தான் இறைவனை அடையமுடியும் என்பது ஆழ்வார்கள் கருத்து.

ஆண்டாள் நாச்சியாரின் திருமொழி:
          ஆண்டாள் நாச்சியாரின் திருமொழியில் எண்ணிப்பார்க்கத்தக்கப் பாடல்.
                    “மதயானை போல்எழுந்த  மாமுகில்காள்! வேங்கடத்தைப்
                    பதியாக வாழ்வீர்காள்! பாம்பு அணையான் வார்த்தைஎன்னே!
                    கதியென்றும் தான்ஆவான்; கருதாது ஓர் பெண்கொடியை
                    வதை செய்தான் என்னும் சொல் வையத்தார் மதியாரே!”
இச்செய்யுளில் ‘ஓர் பெண்கொடியை வதைசெய்தான் எனும் சொல்’ என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. தமிழர் நெறியை உணர்த்துவது. பெண்ணுக்குத் துன்பம் விளைத்தல் பெரும் குற்றமாகச் சமுதாயம் கருதியதைத் தெரிவிப்பது. பெண் வதை தவிர்ப்பு, ஆழ்வாரின் அகப்பாடல் காட்டும் சமுதாய நெறி!

          “திருவேங்கடத்தானிடம் தூதுசெல்லும் மேகங்களிடம் அவளுக்குக் கருணைபுரியும் நல்ல செய்தியொன்றும் அவன் கூறாதிருந்தால் அது அவனுக்கே பழியுண்டாக்கும். தன்னையே நம்பியிருக்கும் ஒரு “பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல்” பிறந்துவிடும். இதைவிட வேறு “பழிச்சொல் இல்லை” என்கிறாள் தலைவி. பிரிவாற்றாமை காரணங்களைத் தேடி அலைகிறது. சமுதாயம் முன்பாக நாணவேண்டிய நிலை தன் அன்புக்குரியவனுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பும் வெளிப்படுகிறது.

          தமிழ்ச்சமுதாயம் மதித்தது என்னவென்றும், வெறுத்து ஒதுக்கியது என்னவென்றும் பாடல் மூலம் அறியலாம். பெண் போற்றப்படவேண்டியவள்; கொண்டாடத்தக்கவள். அவளுக்கொரு தீங்கென்றால் சமுதாயம் பொறுத்துக்கொள்ளாது; மதிக்காது. அவ்வாறு துன்பம் விளைப்பது தீராப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிடும்! அகப்பாடல் உணர்த்தும் எண்ணிப்பார்த்து உணர வேண்டிய சமுதாயக் கருத்து.

          மேலான திருமாலியநெறியைக் காட்டித்தருகிற பாடல்களில் தேடினால்  வேண்டுவார்க்கு வேண்டுவன நல்கும் கற்பகத் தரு ஆழ்வார்களின் அமுதத் தமிழ்! திருமால் நெறியோடு இப்பாடல்கள் நமக்குத் தருகின்ற அறிவுரைகள்: “தமிழை விரும்பிப்படியுங்கள்: அறிவு பெறலாம்! தமிழர் பண்பை மறவாதீர்கள்; நல்ல தமிழர்களாகவும் வாழலாம்!” என்பதே.

ஆழ்வார்கள் - நாடெல்லாம் ஓங்குபெரும் செல்வம்:
          நாடு நலம் வாழ வேண்டும் என்ற நோக்கம் அருளாளர் மனமெல்லாம் நிறைந்திருக்கிறது. பொழுது புலர்ந்ததும் நீராடி நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல், செய்யாதன செய்யாமல், புறம்பேசாமல் நெறியுடன் திருமாலைப் பாடிப்பரவினால் நாடெல்லாம் தீங்கின்றி மும்மாரி பெய்து நீங்காத செல்வம் நிறையும் என்பது ஆண்டாள் நாச்சியாரின் உறுதிமொழி.

          ஆலயங்கள் தோறும் பெருமாள் முன்னர் நாளும் ஒன்றுக்கு இரண்டு முறை சாற்றப்படுகிற பாசுரம்! திருப்பாவை முப்பதின் மகுடமன்ன வேண்டுதல் பாசுரம். அனைவரும் அறிந்த பாடல்!
                    "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
                    நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
                    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
                    ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
                    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
                    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
                    வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
                    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!"

          கதிர் வெடித்துப் பிழம்பு விழ, கடல் குதித்தச் சூடாற்ற, முதுமை மிகு நிலப்பரப்பின் முதற்பிறப்பு முதல் இன்று பிறந்தவர் வரையும் பால்வெளி முழுதும் பரந்த பல கதிர்கள், கோள்கள் வரையும் அனைத்தையும் உள்ளடக்கிய பேரியற்கைக் குறியீடு  ஓங்கி உலகம் அளந்த திருமால் வடிவம்!

          நெறியுடன் பேரருளைப் போற்றினால் ஆண்டாள் நாச்சியார் கிடைக்குமென்று காட்டுகிற நன்மைகள் அற்புதமானவை. ‘நாடு முழுவதும் தீங்கில்லாமல் வாழும்; மற்றாங்கே மாதம் மூன்று முறை மழைபெய்யும்; அதனால் தண்ணீர் தட்டுப்பாடே ஏற்படாது. செந்நெற்பயிர் செழித்து வளரும். அந்த வயல்களிலே நெல் பயிருக்கு இடையே மீன்கள் துள்ளித்திரியும். மலர்ந்திருக்கும் குவளை மலர்களுடைய தேனை அருந்திவிட்டு வண்டுகள் ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருக்கும். மக்களும் தம் இல்லங்களிலிருந்து தங்கள் பசுக்களைக் கறப்பார்கள். அப்பசுக்கள் குடங்குடமாகச் சுரந்தளிக்கும் வள்ளல்களாகத் திகழும்; இவ்வாறு என்றும் குறையாத செல்வம் நாட்டிலே நிறைந்திருக்கும்" என்கிறார் ஆண்டாள்.

          ‘வான் முகில் வழாது பெய்க; மலிவலம் சுரக்க; மன்னன் கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க’ என்ற சைவச் சான்றோரின் வேண்டுகோளும் நாடு வாழவேண்டும் என்றே உரைக்கிறது.
         
          எங்கள் தாயார் "நாடென்றும் வாழக் கேடு ஒன்றுமில்லை" என்பார்கள். தமக்கையார் "எல்லோரும் நல்லாருக்கணும்: எங்கும் நிலாக் காயணும்" என்று தன் வழிப்பாட்டை முடிப்பார்கள். இவ்வாறு சாதாரண மக்கள் தொடங்கி ”நாடுசெழிக்கணும்; நல்ல மழை பொழியணும் ” என்ற நம் நாட்டுப்புற பாட்டனிலிருந்து வைணவ, சைவசமயப் பெருமக்கள் வரை தமிழகச் சான்றோர் அனவருடைய வேண்டுதலெல்லாம் நாடு வாழவேண்டும், மக்கள் நல்வாழ்வு வாழவேண்டுமென மனதார விரும்பும் நெறியாகவேயுள்ளது!




தொடர்பு: சொ.வினைதீர்த்தான் (karuannam@gmail.com)







No comments:

Post a Comment