Thursday, May 25, 2017

பொருள் பொதிந்த பழமைகள்

-- பழமைபேசி 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
 7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
 8. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
 9. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.  மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
 10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
 11. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
 12. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
 13. கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
 14. சில்லறைக் கடன் சீரழிக்கும்.
 15. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
 16. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
 17. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
 18. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது! (எல்லாம் காலத்தின் கோலம்!)
 19. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான். (அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
 20. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள். (இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
 21. இறுகினால் களி. இளகினால் கூழ்.
 22. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. (யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
 23. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு. (பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
 24. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
 25. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
 26. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். (நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாகத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
 27. காற்றில்லாமல் தூசி பறக்காது. (நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
 28. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். (நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
 29. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. (துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
 30. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது. (பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
 31. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது. (விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
 32. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான். (தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது).
 33. வாங்குகிற கை அலுக்காது. (வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
 34. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும். (என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
 35. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
 36. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
 37. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
 38. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
 39. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.  ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
 40. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,  அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
 41. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
 42. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
 43. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
 44. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
 45. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
 46. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது. படம்: இணையத்திலிருந்து 
_________________________________________________________ 
பழமைபேசி
pazamaipesi@gmail.com
_________________________________________________________
சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் கல்வெட்டு


-- யுவராஜ் அமிர்தபாண்டியன்


இடைக்கால சோழர்கள் தலையெடுக்கக் காரணமானவன் பரகேசரி விசயாலய சோழன். இவனது மகன் ஆதித்த சோழன் மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான். இவனைப் போலவே இவனது மகன்  பராந்தகனும் சைவப்பணியாக கற்றளிகள் உருவாக்கியவன்.  சோழர்காலக் கோயில்களுள் ஒன்று திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில்  எனக் கல்வெட்டுக்கள் குறிக்கும் கோயில்.  தற்போது இக்கோயில் சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.  இக்கோயிலின் காலம்   முதலாம் பராந்தகனின் காலம் என்றும், அவனது தந்தை ஆதித்தனின் காலம் என்றும்  இரு வேறு கருத்துகள்  தொல்லியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.
திருச்சி சேலம் சாலையில் முசிறி தாண்டியதும் வரும் சிறிய அழகான காவேரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். முக்கிய சாலையிலிருந்து சற்று ஒதுங்கி நிற்கும் குரங்கநாதர் கோயில் பராந்தக சோழர் காலத்துக் கலைக் கருவூலம்.  இது தமிழகத்திலுள்ள சோழர்கால கோயில்களுள் சிறப்பான வேலைப்பாடுகள் அமைந்துள்ள சிறிய சோழர் கால கட்டுமானம்.

இக்கோயிலில் காணும் கல்வெட்டின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இது  பிற்கால குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டா? அல்லது பராந்தக  சோழன் காலத்துக் கல்வெட்டா என்று திரு. துரை சுந்தரம் ஐயா படித்துக்கூறினால் நலமாயிருக்கும்.
 
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை: 

 கல்வெட்டின் முதல் நான்கு வரிகள் படிக்க இயலவில்லை. மற்ற வரிகளிலும் பல இடங்களில் எழுத்துகள் புலப்படவில்லை. முதல்  நான்கு வரிகள் முதன்மையானவை. அவற்றில்தாம் அரசன் பெயர், ஊர்ப்பெயர், கோயில் பெயர், காலக்குறிப்பு ஆகியன இருக்கும்.

எனவே, இச்செய்திகள் இல்லாமலே படிக்கப்பட்ட மற்ற வரிகளின் பாடம் கீழ் உள்ளவாறு:

5 ...........மங்கலத்து மூலபருடையார்க்குச் சொல்ல் இம்மூலபருடையாரும் 
6 ........பணித்து வாரிகம் வைத்து வைய்க்கப்பட்ட வாரிகரும் கணக்கு(ம்)
7..............இறையிலி தேவதானமாக நிலங்களை நிவந்தஞ்செய்தபடி 
திரு
8 ............நானாழியா.............பத்தெட்டுக்கு...........மூன்று பொன் ..க்கு
நிசதம் அரிசி 
9 நானாழியினுக்கு நிலன் ஆலஞ்செய் நான்கு மாவும் எல்லை ஒரு
மா நிலன் 
10 ........நஞ்செய் ஒரு மாவரையும் நெய்யமுது.......ஆழாக்காக நிசதம் 
11 .....காழாக்கினுக்கு நிலன் நாவற..... செய் இரண்டு மாவும் செம்புணி
12  ............மாவும் திருவாராதினை செய்யும் ப்ராஹ்மணன் ஒருவனுக்கு கணத்தார்
13  .....(நஞ்)செய் எட்டுமாவில் மேக்கடைய ... வரை முந்திரிகைய்
14 ...(கு) நிசதம் பதினெட்டுக்கு நிசதம் எண்ணை உழக்காழாக்கினுக்கு... 
15  மூன்று மாக்காணி அரைக்காணி முந்திரிகையும் அர்ச்சநாபோகம்
16 .............பணி செய்ய நிலன் செம்புணி வாரம் நான்கு மாவும் 
மருதஞ்செய் 
17 ...........மாவும் நிகளிகனொட்டைக் கூறு இரண்டு மாவில் தெற்கடைய
18  ஸ்ரீபலி எழுந்தருளும்போது பிடிவிளக்கினுக்கு எண்ணை உழக்கினுக்கு
19 .......கூறு இரண்டு மாவில் வடக்கடைய ஒரு மாவும் உவச்சு
மத்தளி மூ
20  ன்றும் கரடிகை ஒன்றும் தாளம் ஓரணையும் .....ஒன்றும் 
சேகண்டிகை ஒன்றும் 
21  ஆக எழாள் கொண்டு முட்டாமேய் கொட்ட கொடுங்கொடு 
இட்டேரிக்கு மேக்கும் ஆற்றுக்
22  குலைக்கு வடக்கும் வாத்தலைக்கு கிழக்கும் பெருவாய்க்காலுக்குத்
தெற்கும் 
23  ஆக இந்நடுவுபட்ட நிலன் உண்ணிலமொழிவின்றியும் இதனொடு
மடைந்த ..
24  ..............ஒரு மாவும் தென்னூர் மூன்று மாவும் காளம் இரண்டு ஊத 
குரங்
25  கன் வசக்கல் காலும் அரசங்கல் ஒரு மாவரையும்


குறிப்பு:
சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

வரி 5 -    மங்கலம் என்று வரும் சொல் “மகேந்திர மங்கலம்” என்ற சொல்லின் பகுதியாக இருக்கலாம்.
மூலபருடையார் என்பார் கோயில் நிருவாக சபையினர் ஆவர். சதுர்வேதி மங்கலத்துச் சபையார், பெருங்குறி என்று அழைக்கப்பட்டதைப் போன்று சதுர்வேதிமங்கலத்துக் கோயில் சபையினர் மூலபருடையார் என அழைக்கப் பெற்றிருக்கலாம். மூலபருடை என்பது ”மூல பரிஷத்”என்னும் சமற்கிருதச் சொல்லின் தமிழ் வடிவமாகலாம். (பரிடை என்றும் திரிந்து வழங்கும்).
வரி 6 -   பணித்து - ஆணையிட்டு.  வாரிகம்=வாரியம். (குழு).வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு வாரியங்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.
வரி 12 -  திருவாராதினை=திருவாராதனை. பூசை.கணத்தார் என்பார் கிராம சபைகளில் ஒன்று.
வரி 15 - அர்ச்சநாபோகம் - கோயில் பூசைச் செலவுக்காக விடப்படும் நிலம்.
வரி 18 - ஸ்ரீபலி = விக்கிரகங்களுக்கு நாள்தோறும் வைக்கும் உணவு.  பிடி விளக்கு-பிடியை உடைய விளக்கு.
வரி 19 - உவச்சு-  கோயிலில் மத்தளம் முதலியன கொட்டும் இசைக்கலைஞர்கள் உவச்சர் என அழைக்கப்பட்டனர். அவர்தம்  பணி உவச்சுப்பணி ஆயிற்று.
வரிகள் 19,20,24 - சில இசைக்கருவிகளின் பெயர்கள் வருகின்றன. மத்தளி, கரடிகை, தாளம், சேகண்டிகை, காளம். (சேகண்டிகை இன்றும் உள்ளது. தாளம், இரு கைகளில் இரு தட்டுகள் கொண்டு ஒலிக்கப்படும் கைத்தாள்ம். இன்றும் உள்ளது. ஓரணை என்பது இணையைக் குறிக்கும்.)
வரி 21, 22 - ஆற்றுக்குலை-ஆற்றின் கரை. வாத்தலை - வாய்த்தலை என்பதன் திரிபு.தலை மதகில் இருந்து தொடங்கும் வாய்க்காலைக் குறிக்கும்.
வரி 25 - வசக்கல் - வயக்கல் என்பதன் இன்னொரு வடிவம்.    பண்படுத்திய (திருத்திய) நிலத்தைக் குறிக்கும்.       
                                   
கல்வெட்டுச் செய்தி:
கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்படுகிறது. இன்னின்ன நிவந்தங்களுக்காக இன்னின்ன நிலங்கள் என வரையறை செய்து ஆணை (அரசனின்?) வழங்கப்படுகிறது. ஆணையின் செய்திகள் மூலபருடையார்க்குச் சொல்லப்படுகின்றன. மூலபருடையார் அடுத்து ஆணையிடுகிறார்கள். இதை  “மூலபருடையாரும் பணித்து”  என்னும் தொடர் குறிக்கிறது. (பணித்து=கட்டளையிட்டு.). மூலபருடைச் சபையார், பல்வேறு நிவந்தப்பணிகளுக்கும் வாரியம் அமைக்கின்றனர். வாரியத்து உறுப்பினர் (வாரிகர்)  செயல்படுகிறார்கள். கொடை, கொடைச்செலவுக்கான நிலங்கள் ஆகிய குறிப்புகள் ஊர்க்கணக்கருக்கும் தரப்படுகின்றன என்று தெரிகிறது. கொடை நிலங்களின் விவரங்கள் அவற்றின் எல்லைகளோடு சொல்லப்படுகின்றன. இவ் எல்லைகளின் நடுவு பட்ட நிலம் கொடை நிலம். நிலங்களின் பரப்பு, மா, முந்திரிகை ஆகிய  அளவீடுகளால் குறிக்கப்படுகின்றன. கல்வெட்டில் (வரி-24,25) குரங்கன் வசக்கல் என்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு நிலத்தின் பெயரில் ”குரங்கு” என்னும் சொல் உள்ளது.

நிவந்தங்கள்:
1  திருவமுது -  நாள்தோறும் கோயிலில் இறைவற்குப் படைக்கும் திருவமுதுக்கு வேண்டிய செலவுக்கு நிலம் மற்றும் பொன் முதலாகிறது.
2 நெய்யமுது
3 திருவாராதனை (பூசை) செய்யும் பிராமணன் ஒருவனுக்கு உணவு.
4 கோயில் பூசை (அர்ச்சநா போகம்)
5 ஸ்ரீபலி - (இந்நிகழ்ச்சி இன்றும் கோயில்களில் நடைபெறுகிறது).
6 பிடி விளக்கினுக்கு எண்ணை.
7 உவச்சுப்பணி செய்யும் ஏழு ஆள்களுக்கு.  


Wednesday, May 24, 2017

ஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ்

ஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ்

ஆசிரியர்: செங்குட்டுவன்


19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது, விழுப்புரம் நகரத்தில் வளர்ச்சி எட்டிப் பார்த்த நேரம் என்று சொல்லலாம்.


இந்த காலக்கட்டத்தில்தான் முன்சீப் கோர்ட், தாலுகா அலுவலகம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், சிறைச்சாலை மற்றும் ரிஜிஸ்திரார் ஆபிஸ் ஆகியவை விழுப்புரத்தில் தோன்றின.


இவற்றிற்கானக் கட்டடங்கள் ஒரே வளாகத்திற்கும் அமைக்கப்பட்டன என்பதும் கூடுதல் சிறப்பாகும்.


இதில் குறிப்பிடத்தகுந்தது "சப் ரிஜிஸ்திரார்" ஆபிஸ்.


தற்போது திரு.வி.க. சாலை என்றழைக்கப்படும், அப்போதைய கச்சேரி சாலையில்  1888இல் இந்த அலுவலகம் தொடங்கப்பட்டது.


நில ஆவணங்கள் தொடர்பானப் பதிவு என்பதெல்லாம் பின்புதான் இங்கு நடந்துள்ளன. தொடக்கத்தில் இந்த அலுவலகத்தின் பணி பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்வதாகத்தான் இருந்திருக்கிறது.


இதற்கு இப்போதும் அலுவலக வாயிலின் இருபுறமும் காணப்படும் கல்வெட்டுச் சான்றாகும்.


ஒருபுறம் உள்ள கல்வெட்டில் "சப் ரிஸ்திரார் ஆபிஸ் விழுப்புரம்" என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.


இன்னொருபுறம் இருக்கும் கல்வெட்டில், "ஜனன மரண ரிஜிஸ்திரார் விழுப்புரம்" என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.


காலப்போக்கில் எவ்வளவோ மாற்றங்கள்!


பிறப்பு இறப்புப் பதிவை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.


சப் ரிஜிஸ்திரார் அலுவலகம் நில ஆவணங்களைப் பதிவு செய்தது.


விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகம் 21ஆம் நூற்றாண்டில் இணை சார் பதிவாளர் அலுவலகமாகத் தரம் உயர்ந்தது.


கட்டடத்தில் முகப்பிலும்கூட மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வெளியில் இருந்துப் பார்த்தால் ஆங்கிலேய கட்டடப் பாணி தெரியாது.

(இணைப்பில் உள்ள கட்டடப் புகைப்படம் 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்)


ஆனால், அந்தக் காலத்தைத் தெரிந்து கொள்ள உதவும் அந்த இரண்டு கல்வெட்டுகள், இணை சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயிலில் இப்போதும் நமக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.


Saturday, May 6, 2017

பல கோடி ஆண்டுகள் பழமையான ஃபாசில் இலைகள் ... சென்னைக்கு அருகே-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்


படம் - 1

பல இலட்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் மிச்சங்களும் எச்சங்களும் அக்காலத்தே உருவான படிவப் பாறைகளில் பதிந்து கிடக்கின்றன. இவை ஆங்கிலத்தில் ஃபாசில்  (FOSSIL) எனப்படுகின்றன. தமிழில், ‘தொல்லுயிர் எச்சங்கள்’ எனலாம். எலும்புகள், பற்கள், கிளிஞ்சல்கள், சிப்பி ஓடுகள் போன்ற கடினமான பகுதிகள் மட்டுமின்றி இலைகள், தண்டுகள் போன்ற மென்மையான பகுதிகளும் ஃபாசில்களாகக் கிடைக்கின்றன (படம் - 1).

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் அவை அடங்கியுள்ள பாறைகள் உருவான காலத்தை அறியவும்,  கனிமவளங்களை கண்டறியவும் ஃபாசில்கள் பெரிதும் உதவுகின்றன.

தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் பலவற்றில் ஃபாசில்களைத் தன்னகத்தேக் கொண்ட படிவப்பாறைகள் கிடைக்கின்றன. அரியலூர் பகுதியில் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்கே காரை-தரணி பகுதியில் உள்ள திறந்தவெளி களிமண் சுரங்கங்களில்  இலை ஃபாசில்களும் கண்டறியப்பட்டுள்ளன (படம் - 2&3).
படம் - 2
படம் - 3


சென்னைக்கு அருகே, தாம்பரத்திற்கு மேற்கே, சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான  மேல் கோண்டுவானா காலத்திய படிவப்பாறைகள் சற்றேறக்குறைய  நூறு சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுகின்றன (படம் - 4).

படம் - 4

மணற்கல் பாறைகளும் , களிமண் பாறைகளும் இவற்றில் அடக்கம். இந்தப் பாறைகளில் அந்தக் காலத்தில் வாழ்ந்த சைகடோஃபைட்டா, ஃபிலிகேலஸ் வகைத் தாவரங்களின் இலைகள் ஃபாசில்களாகப்  பதிவாகியுள்ளன. இவற்றுள் சைகடோஃபைட்டா வகையைச் சேர்ந்த டீலோஃபிலம் தாவர இலைகளே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் களிமண், நீர்நிலைகளில் படியும் போது அந்த மண்ணோடு அடித்துக் கொண்டுவரப்படும்  இலைகளும் களிமண்ணோடு சேர்ந்து படிகின்றன. நாளடைவில் களிமண் இறுகி கெட்டிப்படும் போது  இலைகள் மக்கிப் போனாலும் அவை பதித்த சுவடுகள் அப்படியே இருக்கின்றன. இந்தச் சுவடுகள் பார்ப்பதற்குப் பூ போன்ற அமைப்பில் இருப்பதால், உள்ளூர் மக்கள், இலைஃபாசில் அடங்கிய கற்களை 'பூக்கல்' (படம் - 5 & 6) என்று அழகாக அழைக்கிறார்கள்.

படம் - 5


 படம் - 6

தாம்பரத்திற்கு மேற்கேயுள்ள மணிமங்கலம், சோமங்கலம், பிள்ளைப்பாக்கம், குண்டுபெரும்பேடு, அமரம்பேடு , வல்லம், வல்லக்கோட்டை, அழகூர், வட்டம்பாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்   பகுதிகளில் இலைஃபாசில்களும் தண்டுஃபாசில்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் வெண்மை மற்றும் மங்கலான வெண்மை நிறத்திலுள்ள களிமண் பாறைகளிலேயே உள்ளன.

இலைஃபாசில்கள் அதிக அளவில் கிடைக்கும் இந்தப் பகுதியில், அபூர்வமாகக் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்களும் கிடைக்கின்றன.

சென்னைப் பெருநகர், வரலாற்று முக்கியம் வாய்ந்த ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களால் சூழப்பட்ட இந்த இடத்தின் சில பகுதிகளையாவது தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துப்  பாதுகாக்க தமிழ்நாடு சுற்றுலா துறையும்,  இந்திய புவியியல் ஆய்வுத் துறையும் முன் வர வேண்டும். இல்லையெனில் இவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________