Tuesday, June 12, 2018

தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

—  முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்


ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டு மக்களின் தாய்மொழியில் வெளியிடப்பட்டால்தான் அந்நாட்டு மக்கள் அவற்றை ஆர்வத்துடன் படித்துணர முடியும். இதனையே அடிப்படைக் காரணமாகக் கொண்டு தமிழகத்தில் தோன்றிய பல தமிழ் அறிஞர்கள் தமிழர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், சமூகக்கட்டமைப்புகள், உலக மக்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவு, பண்டையகால மன்னர்கள் கப்பற்படை வலிமையால் கிழக்காசிய நாடுகளைத் தமது ஏகாதிபத்தியத்தின் கீழ் வைத்திருந்தது போன்ற தமிழர் பெருமைகளைச் சுதந்திரத்திற்குப் முன்பிருந்தே எழுதி வந்தனர். அவற்றைப் படித்த தமிழர்களிடையே எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்மை ஆள்வதா என்ற உணர்வு மக்களிடையே காட்டுத்தீ போலப் பரவக்காரணமாக இருந்தது. அதோடு மட்டுமன்றி இந்திய சுதந்திர போராட்டக் களத்தில் தமிழர்கள் உத்வேகத்துடன் குதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. 

சுதந்திரத்திற்கு  முன்பும் பிறகும் ஏராளமான தமிழ் நூல்கள் அச்சுவடிவில் வருவதற்குக் காரணம் ஐரோப்பியர்கள். இந்தியாவில் அவர்கள் அறிமுகப் படுத்திய அச்சு எந்திரம், தமிழ் எழுத்துருக்கள் போன்றவற்றின் வருகையால் பல தமிழ் நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட கட்சிகளின் எழுச்சியால் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாறு, தமிழர் வரலாறு போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களை விடத் தமிழில் எழுதப்பட்ட நூல்களுக்குத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இதனையே தமது குறிக்கோளாகக் கொண்டவர்தான் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள். வரலாற்று ஆய்வாளர்களின் பிதாமகனாக விளங்கிய இவ்வுத்தமரின் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப்பார்ப்போம்.

தி . வை. சதாசிவ பண்டாரத்தார்:
திருப்புறம்பியம் வைத்தியலிங்கம் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் ஆகஸ்டு 15 ஆம் நாள்  1892 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கம், மீனாட்சியம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை தமது சொந்த ஊரில் முடித்தார். உயர்கல்வியைக் கும்பகோணத்தில் பயின்றார். அப்போது புகழ்பெற்ற பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும், இலக்கணத்தையும் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கொடுத்த ஊக்கத்தால் பண்டையகால கல்வெட்டுக்கள் மீது சதாசிவ பண்டாரத்தாருக்கு அதிக ஆர்வம் ஏற்படலாயிற்று. தமது ஓய்வு நேரங்களில்  சொந்த ஊரில் இருக்கும் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட சாக்ஷிநாதேஸ்வரர் கோயிலுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டார். சிலமாதங்களில் இக்கோயிலில் உள்ள அத்தனை கல்வெட்டுக்களையும் சரளமாகப் படித்து அதன் உட்பொருளைத் தெரிந்து கொண்டார். இதற்கிடையே கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். பிறகு வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 25 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றினார்.         
அப்போது சதாசிவ பண்டாரத்தார்  அவர்களுக்குத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த T . A . கோபிநாதராயர் அவர்கள் எழுதிய ''சோழவமிச சரித்திரச் சுருக்கம்" என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நூல் அவருக்குத் தமிழகத்தில் ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. இதன் விளைவாகச் சோழர்கள் மீது அதிகம் ஆர்வம் ஏற்படலாயிற்று . மேலும், சோழர் சரித்திர தரவுகளை தேடிப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தாம் பிறந்த ஊரான திருப்புறம்பியத்தில் கி.பி. 880 ஆம் ஆண்டு பல்லவர், சோழர், கங்கர் ஆகிய கூட்டுப்படைகள் வரகுண பாண்டியனின் படையைத் தோற்கடித்தன என்றும், மீண்டும் சோழப் பேரரசு எழுச்சி பெறுவதற்குக் காரணமான போர்க்களமே தமது ஊர் என அறிந்த பிறகு  சோழர் சரித்திரத்தின் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.   அக்காலத்தில் சோழர் வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. எனவே இந்தியாவிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரே பேரரசு சோழப் பேரரசு அவர்களின் வரலாறு தமிழ் மொழியில் முழுமையாக எழுதப்பட்ட வேண்டும் என்று எண்ணினார். இதன் விளைவாகச் சோழர்களின் கல்வெட்டுக்கள் அத்தனையையும் படிக்க முற்பட்டார். 

பண்டாரத்தாரின் முதல் நூல்:    
தமிழகத்திலும் பிற நாடுகளிலும் செங்கோல் செலுத்தி சக்கரவர்த்தியாக விளங்கிய முதற் குலோத்துங்க சோழனின் வரலாற்றை முழுமையான  தரவுகளை கொண்டு 1930 ஆம் ஆண்டு எழுதி முடித்தார்.  முதற் குலோத்துங்க சோழன்  என்ற அந்தநூல் பண்டாரத்தாரின் முதல் வரலாற்று நூலாக அமைந்தது.  இந்நூல் அக்காலகட்டத்தில் பெரும் பாராட்டுதலைப் பெற்றது. சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் இண்டர்மீடியேட் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது இந்நூலிற்குக் கிடைத்த கூடுதல் சிறப்பாகும். தமது ஓய்வு நேரங்களில் அருகாமையில் உள்ள கோயில்களுக்குச் சென்று கல்வெட்டுக்கள் படிப்பதையும் அது சம்பந்தமான கட்டுரைகள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட  "செந்தமிழ்"  என்ற மாத இதழில் சதாசிவ பண்டாரத்தார் "சோழன் கரிகாலன்" என்ற தமது முதல் கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை இவரது ஆழ்ந்த வரலாற்று மற்றும் தமிழ் புலமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது. அடுத்ததாகக் கரந்தை தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட "தமிழ் பொழில்" என்ற இதழிலும் இவரது கட்டுரைகள் இடம்பெற்று அன்றைய வளரும் தலைமுறையினர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு செந்தமிழ், தமிழ் பொழில் முதலிய இதழ்களில் மாதம் தோறும் இவரது கட்டுரைகள் வந்த வண்ணம் இருந்தன. இவரது எழுத்துக்களும் ஆய்வுகளும் இதேகாலக்கட்டத்தில் பணியாற்றி வந்த தமிழ்வித்வான் வேங்கடசாமி நாட்டார், கரந்தை தமிழ்வேள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைப் பெரிதும் கவர்ந்ததோடு அவர்களது பாராட்டுக்களையும் பெற்றன.

இராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் அழைப்பு:

தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்று வரலாற்று ஆய்வில் தேர்ச்சியுற்ற அறிஞராகத் திகழ்ந்த சதாசிவ பண்டாரத்தாரை இராஜ சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள், சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். அவ் அழைப்பினை ஏற்ற பண்டாரத்தார் 1942 ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆசிரியர் பணியினை ஏற்றார். பிறகு 1960 ஆம் ஆண்டுவரை இப்பல்கலைக் கழகத்தில் திறம்பட பணியாற்றினார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய வரலாறு (இருண்ட காலம் ) மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு (13,14, 15 ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்களை எழுதினார். இந்நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டுத்துறையினால் வெளியிடப்பட்டு பெருமை பெற்றன. 

கல்வெட்டுக்களில் முழுப்புலமை பெற்றது:
அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழாராய்ச்சித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழக கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவற்றில் தமது ஆய்வுகளை மேற் கொண்டுவந்தார். அப்போதுதான் தமிழக வரலாற்றினை எழுதுவதற்குப் பெரிதும் துணைநிற்பன கல்வெட்டுக்களேயாகும் என்பதை நன்குணர்ந்தார்.  இதுவரை சுமார் 24,000 தமிழ் கல்வெட்டுக்களும்,11,000 கன்னட கல்வெட்டுக்களும் , 5,000 தெலுங்கு கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் தான் தமிழக வரலாறு எழுதப்படுவதற்குப் பெரிதும் உதவி புரிகின்றன . எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்களைத் தடையின்றிப் படித்து, அவற்றின் முழுப் பொருளையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியாகக் கொண்டு  வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும் என்பதை தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதன் விளைவாகச் சோழர் கால கல்வெட்டுக்கள் அனைத்தையும் படிக்க முற்பட்டார். அவ்வாறு சோழர்கள் வரலாற்றினை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக விளங்கிய சுமார் 8,000 கல்வெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து படித்து முடித்தார். இந்தியத் துணைக்கண்டத்திலேயே சுமார் 399 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே பேரரசு சோழப்பேரரசு என்பதை உணர்ந்த பண்டாரத்தார்.  சோழர் சரித்திரம் குறித்த ஆய்வினை அப்போதைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் கே. பி. ரெட்டி நாயுடு அவர்களின் ஒப்புதலுடன் தொடங்கினார்.

1935 – 1937 ஆண்டுகளில் கே.ஏ. நீலகண்டசாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட சோழர் வரலாறு இரண்டு தொகுதிகளுமே ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்நூல் சாமானிய மக்களைச் சென்றடைவதில் மொழிதடையாக இருப்பதைக்கண்ட பண்டாரத்தார் சோழர் சரித்திரத்தை தூய மற்றும் எளியத் தமிழ் நடையில் எழுதத் தொடங்கினார் .

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சோழநாட்டில் அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து இரண்டு பகுதிகளாக எழுதிமுடித்தார் . அவற்றுள் முதற்பகுதி கி.பி. 846 முதல் கி.பி. 1070 வரையில் ஆட்சிபுரிந்தவர்களைப் பற்றியது. இரண்டாம் பகுதி கி.பி. 1070 முதல் கி.பி. 1279  வரையில் அரசாண்டவர்களின் வரலாற்றை தன்பாற் கொண்டது. இச் சரித்திர நூலின் மூன்றாம் பகுதி; சோழ அரசர்களின் ஆட்சி முறை, அக்காலத்துக் கல்விமுறை, கைத்தொழில், வாணிகம், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் மற்றும் அவற்றின் மதிப்புகள், சமயநிலை, படை பலன், மக்களது செல்வநிலை ஆகியவற்றைக் கொண்டது . இந்நூல் முழுவதும்  வரலாற்று வரைவியல் கோட்பாட்டின்படி எழுதப்பட்டது என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பாகும். இச்சரித்திர நூலை எழுதும் போது ஏற்படும் ஐயங்களைக் களைவதற்காக தாமே நேரடி கள ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
        
கடலூர் திருவந்திபுரம் கோயிலில் இருக்கும் மூன்றாம் இராசராச சோழனது 15 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு மிக முக்கியமான கல்வெட்டாகும். அதாவது சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கோப்பெருஞ்சிங்கனை ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன் தோற்கடித்துக் கைது செய்ய,  சோழமன்னன் மூன்றாம் இராசராச சோழன் அவனை  மீட்டு மீண்டும் சோழ அரியணையில் அமர்த்திய செய்தியை கூறுவதாகும். இக்கல்வெட்டை நேரடியாகக் காண விரும்பிய பண்டாரத்தார் கடலூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்தே திருவந்திபுரம் கோயிலுக்கு வந்து தமது ஆய்வை முடித்துச் சென்றார். அதே போன்று அருகாமையில் இருக்கும் திருமாணிக்குழி, திருவதிகை, திருநாவலூர் போன்ற ஊர்களில் இருக்கும் கோயில்களின் கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்கு வாகன வசதி இல்லாத நிலையில் கால்நடையாகவும் வழிப்போக்கர்களின் மாட்டு வண்டிகளிலும் சென்று தமது பணியினை முடித்து வந்தார். மேலும் இந்நூல் அச்சுவடிவில் வருவதற்கு முன்பாகவே அதில் உள்ள இடர்பாடுகளைச் சுத்தமாக களைந்தார். அவரது கடுமையான முயற்சியால் இந்நூல் வெளிவந்தவுடன் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இருந்தற்கு காரணம் பண்டாரத்தார் அவர்களின் எழுத்து நடையில் சான்றுகள் மட்டுமே பேசுவதாக அமைந்திருந்ததுதான்.     
              
1949 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டுத்துறையினால் வெளியிடப்பட்ட இந்நூல் கடந்த 2008 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டது. ஆயிரம் பிரதிகளை வெளியிட்டன ஆனால் வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே 700 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. தற் காலத்தில் சோழர் வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும், சரித்திர நாவல்களை எழுதுபவர்களுக்கும் இது வேத நூலாக விளங்குகிறது. சோழர் வரலாற்றில் பலர் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்நூல் தூண்டுகோலாக இருந்து வருகிறது.
             
தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கிய வளர்ச்சி  வரலாற்று ஆய்வுகள் என தமது வாழ்நாட்களைத் தமிழுக்காக அர்ப்பணித்த சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் தமது 68 வது வயதில் மறைந்தார்.  

___________________________________________________________
தொடர்பு:
முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் (sivaramanarchaeo@gmail.com)
வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் , 
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி - ஆத்தூர்

Saturday, June 2, 2018

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.முன்னுரை:
வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கிடையில் தனிக்கல் ஒன்றில் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கல்வெட்டைப் படித்துச் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலில் கல்வெட்டு பற்றிய தகவலைக் கட்டுரை ஆசிரியரிடம் (கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், கோவை) பகிர்ந்துகொண்டதில் இருவரும் 17-12-2017 அன்று தாளக்கரை நோக்கிப் பயணப்பட்டோம். காங்கயம் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வரலாற்று ஆர்வலர் ஆதிரை என்பவரும் காங்கயத்தில் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். இப்பயணம், தாளக்கரைக் கல்வெட்டை ஆய்தல் என்ற நோக்கத்துடன் மட்டுமன்றி, வழியில் காங்கயத்திலிருந்து தாளக்கரை வரையிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தடயங்களைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.

ஊதியூர் – சிவன் கோயில்:
காங்கயத்திலிருந்து தாராபுரம் சாலையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஊதியூர் என்னும் ஊரை அடைந்தோம். ஊதியூரில், மலைக்கோவில் ஒன்றுள்ளதை அறிந்திருந்தோம். எனவே, அதைப்பார்க்கும் எண்ணத்தில் ஊதியூரில் ஒரு நிறுத்தம். ஊருக்குள் ஒரு சிவன் கோயில். கைலாசநாதர் கோயில் என்னும் பெயருடையது. முகப்பில் கருட கம்பம் என்று  வழங்கும் விளக்குத்தூண் உள்ளது. இந்த விளக்குத் தூணை நிறுவியவர் பெயரைக் கல்வெட்டாக ஒரு தூணின் சதுரப் பரப்பில் பொறித்து வைத்திருக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டுக் கட்டுமானம் (1851-ஆம் ஆண்டு) என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஊதியூர் கைலாசநாதர் கோயில்தூண் கல்வெட்டு 
கல்வெட்டுப் பாடம் – தூணின் மேற்பகுதிச் சதுரம்


1         கலியுக
2         சகார்த்
3         தம் 4
4         950
5         (ர்)

கல்வெட்டுப் பாடம் – தூணின் கீழ்ப்பகுதிச் சதுரம்

1         விரோ
2         தி கிரிதி
3         வரு. உள்
4         ளூருக்க
5         வுண்டன்
6         மகன் ந
7         ல்ல குமா
8         ரக் கவுண்
9                ய
10     டன் உபம்

மேற்சதுரக் கல்வெட்டில், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துக்களால் குறிக்கப்பெற்றுள்ளது.  கலியுக ஆண்டு 4950 என்பது வரை தெளிவான குறியீடுகள்; இறுதியில் ஒரு குறியீடு தெளிவாயில்லை. கலியாண்டு 4950-க்கு இணையான பொது ஆண்டு கி.பி. 1849 ஆகும். அடுத்து, கீழ்ச்சதுரத்தில், அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டுகளின் வியாழ வட்டத்தில் அமைந்த விரோதிகிருது ஆண்டு குறிக்கப்படுகிறது. கல்வெட்டில், சற்றுப்பிழையாக “விரோதிகிரிதி”  என உள்ளது. (கல்வெட்டின் இறுதி வரியில், “உபயம்” என்பதைப் பிழையாக “உபம்” என்று எழுதிவிட்டுப் பின்னர் விடுபட்ட “ய” எழுத்தை “ம்” எழுத்துக்கு மேலே சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க) விரோதிகிருது ஆண்டு, கி.பி. 1851-ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாதத்தில் பிறக்கிறது. கலியாண்டுக் குறிப்பில் இருக்கும் இறுதிக் குறியீட்டை “2”  எனக்கொண்டால் கி.பி. 1851, விரோதிகிருது ஆகிய இரண்டும் பொருந்தி வருகின்றன. எனவே, உள்ளூரான ஊதியூரில் நல்ல குமாரக் கவுண்டன் இந்த விளக்குத் தூணை நூற்று அறுபத்தாறு (166) ஆண்டுகளுக்கு முன் கட்டுவித்தார் எனலாம். பயணத்தின் தொடக்கத்திலேயே நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்வெட்டு கிடைத்த மகிழ்ச்சி.

சிவன் கோயில், கல் கட்டுமானக் கோயிலாக இருந்தாலும் அதிட்டானத்தில் கல்வெட்டுகள் எவையும் காணப்படவில்லை. கருவறை, அர்த்தமண்டபச் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களும் கோட்டங்களும் அழகுற அமைந்துள்ளன. கருவறைச் சுவரில் கல் கட்டுமானத்தை மறைத்தவாறு தென்முகக் கடவுளுக்கு ஒரு கோட்டத்தைத் தற்காலம் எழுப்பிக் கோயிலின் தோற்றத்தை மாற்றியுள்ளனர். ஆனால், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திச் சிற்பம் அழகாகவே அமைந்துள்ளது.

தட்சிணாமூர்த்திச் சிற்பம்


ஊதியூர் – முருகன் கோயில்:
அடுத்து, மலைக்கோயிலுக்கு எங்கள் பயணம். மலையின்மீது ஏறப் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள். படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில், மயிலுக்கு மேடையும் மண்டபமும் அமைத்திருக்கிறார்கள். ஒரு பத்து நிமிடக் காலத்தில் மலைக்கோயிலை அடைந்தோம். 

மலைக்கோயிலுக்கான படிகள்

மலைக்கோயில்

பிள்ளையார் பாறைச் சிற்பம்


மலை ஏறுகையில், பாறையில் ஒரு பிள்ளையார் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அருகிலேயே, இடும்பனுக்குத் தனிக்கோயில் ஒன்றும் உள்ளது. மலைக்கோயிலில், மயிலுக்கு ஒரு மண்டபம் உண்டு. மலைக்கோயிலில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் பெயரில் எழுந்தருளியிருக்கிறார். கோயில், கல் கட்டுமானம் கொண்டது. ஆனால், இங்கும் கல்வெட்டுகள் காணப்படவில்லை. கோயிலின் சுவர்க் கோட்டங்களின் தலைப்பகுதியில் அமைந்துள்ள சிங்கமுகத் தோரணத்துடன் கூடிய பகுதியில் நடுவில் மனிதமுகம் அமைந்திருக்கிறது, இந்த மனித முக அமைப்பைப் பேரூர், அவிநாசி, இடிகரை, பரஞ்சேர்வழி ஆகிய பல கோயில்களில் காணலாம்.. 

கோட்டத்தில் தோரணம்-மனித முகத்துடன்


பரஞ்சேர்வழிக் கோயிலில் தோரணத்து முகம்


மயில் மண்டபத்தின் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் பாடம் கீழ்க்காணுமாறு:

தூண் கல்வெட்டு
ஒரு தூணின் மேற்சதுரம்

1  கலியுக சகா
2  ப்தம் 49
3  68
4  துன்முகி வரு. சித்தி


இரண்டாவது தூணின் மேற்சதுரம்  

1  றை மாசம்
2  13 தேதி னா
3  கரச நல்லூ
4  ரு செம்பூற்றா
5  திபன் சிவன்


இரண்டாவது தூணின் மேற்சதுரம், கீழ்ச்சதுரம் இரண்டினுக்கும் இடைப்பகுதி

1  மலை
2  க்கவு
3  ண்டர்


இரண்டாவது தூணின் கீழ்ச்சதுரம்  

1  குமார
2  ன் றா
3  ம சாமிக் கவுண்
4  டன் மயில்வா
5  கனக் குரடு
6  உபயம்

இந்தக் கல்வெட்டிலும், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துக்களால் குறிக்கப்பெற்றுள்ளது. கலியுக ஆண்டு 4998, பொது ஆண்டான கி.பி. 1897-ஆம் ஆண்டில் அமைகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் தமிழ் வட்ட ஆண்டான துன்முகி ஆண்டு, ஆங்கில ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, 1897-ஆம் ஆண்டு துன்முகி, சித்திரை மாதம் 13-ஆம் நாள் நாகரச நல்லூரைச் சேர்ந்த செம்பூற்றுக் குலத்தலைவராகிய சிவன் மலைக்கவுண்டர் மகன் இராமசாமிக் கவுண்டர் மயில்வாகனக் குறடு கட்டுவித்தார் என்பது கல்வெட்டுச் செய்தி. கோயிலின் நுழைவாயிலில் இருக்கும் திண்ணை அமைப்பினைக் குறடு என்று குறிப்பிடுவர். இங்கே, மயில் வாகனத்துக்கு மேடையுடன் கூடிய மண்டபமும் குறடு என்னும் பெயர் பெற்றது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நாகரச நல்லூர் என்னும் ஊர் ஊதியூரைச் சுற்றியுள்ள பகுதியில் எங்காவது இருக்கலாம். அல்லது, ஊதியூரின் பழம்பெயரே நாகரச நல்லூர் ஆக இருக்கலாம். சான்றுகள் தேவை. இணையத்தில் தேடுகையில் நாகரச நல்லூர் என்னும் பெயரில் ஊர்க் குறிப்பு கிட்டவில்லை. 

செட்டித்தம்பிரான் சித்தர் கோயில்:
மலைக்கோயிலிலிருந்து ஒரு பதினைந்து நிமிடப்பயணத்தில் அமைந்துள்ளது செட்டித்தம்பிரான் ஜீவ ஜோதி என்னும் பெயரமைந்த கோயில். இவர், கொங்கணச் சித்தரின் சீடர் என்று கருதப்படுகிறது. கொங்கணச் சித்தர், இந்த ஊதியூர் மலைக் குகைகளில் தங்கியிருந்துள்ளார் என்றும், செட்டித்தம்பிரானும் இவரது சீடராக இங்கே தங்கியிருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கொங்கணச் சித்தர் இங்கு, களிமண்ணைக் கொண்டு குழாய்கள் செய்து அவற்றின் மேல் மூலிகைச் சாற்றினைப் பூசித் தம் வாயால் ஊதி எடுக்கும்போது அக்குழாய்கள் பொன்னாக மாறிவிட்டிருக்கும் என்பது மக்களிடையே வழங்கும் தொன்மப் புனைவு. இதனாலேயே, இந்த மலைக்குப் பொன் ஊதி மலை என்று பெயர் வழங்குவதாயிற்று என்பர். செட்டித்தம்பிரான் கோயில், இயற்கையாய் அமைந்த ஒரு கோயில். மிகப்பெரிதாய் இரண்டு பாறைகள்-உருண்டை வடிவிலானவை- ஒன்றன்மேலொன்று சாய்ந்து நிற்கையில் இடையே உருவான இயற்கைத் தரைத்தளமே கோயிலாக மாறியுள்ளது. முன்புறத்தே பாறைகள் ஏற்படுத்திய நுழைவுப்பகுதியில் நுழைந்து உள்ளே சென்றால் பெரிய அறைபோல் விளங்குமாறு உட்புறப் பாறைப்பகுதியைச் சிறிய உயரமுள்ள சுவர் கொண்டு இணைத்திருக்கிறார்கள். பீடம் ஒன்று அமைத்து அதன்மேல் சித்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு முன்புறம், வாலாம்பிகை என்னும் பெயர் கொண்ட பெண் தெய்வச் சிற்பம் ஒன்று உள்ளது. மற்றொரு பீடத்தில் சிறியதொரு லிங்கச் சிற்பமும் உண்டு. அருகில் சீரடி சாய்பாபா உருவச் சிலையும் காணப்படுகிறது. ஒரு பெண்மணியின் கனவில் சொல்லப்பட்ட அடையாளங்களைக்கொண்டு, இந்த மலைப்பகுதியில் தேடிக் கண்டெடுத்து நிறுவப்பட்டதே இந்த வாலாம்பிகைப் பெண் தெய்வம் என்று ஒரு வழக்கு.

செட்டித் தம்பிரான் சித்தர் கோயில் 

செட்டித் தம்பிரான் சித்தர் கோயில் உட்புறத்தோற்றம்


செட்டித்தம்பிரான் தியானக்குடில்:
தம்பிரான் சிற்பம் வணங்கப்படும் பாறைக்கூட்டின் அருகில் இன்னொரு பாறைக்கூடு. அங்கு அமைந்த சிறிய குகைத் தளம், தம்பிரான் சித்தர் தியானம் செய்த இடமாகக் கூறப்படுகிறது.

தியானக்குடில்


கொங்கணச் சித்தர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும்:
செட்டித்தம்பிரான் கோயிலுக்கும் மேலே மலை உச்சிக்குச் சென்றால் அங்கே கொங்கணச் சித்தரின் கோயிலும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளன. நேரக்குறைவு கருதி நாங்கள் மலை உச்சி ஏறவில்லை. ஆனால், அங்கு போகும் வழியில், சில சிற்பங்களும், நடுகற்களும் காணப்பட்டன என்று இணையப் பதிவு ஒன்று குறிப்பிடுகிறது (travel.bhusahvali.com).

ஊதிமலையும் ஆஞ்சனேயரும்:
இராமயணக்கதையில், இராவணனால் தாக்குண்டு உயிர் போகின்ற நிலையில் இருந்த இலக்குவனைக் காப்பாற்ற ஆஞ்சனேயர் சஞ்சீவி மூலிகையுள்ள சஞ்சீவி மலையைக் கயிலாயத்திலிருந்து இலங்கைக்கு தூக்கிச் சென்ற பாதையில் ஓரிரு இடங்களில் சஞ்சீவி மலையின் துண்டுகள் கீழே விழுந்தன என்றும், அவ்வாறு விழுந்த இடங்களில் இந்த ஊதி மலையும் ஒன்று என்பதும், அதன் காரணமாகவே இம்மலை சஞ்சீவி என்னும் பெயரையும் பெற்றிருக்கிறது என்பதும் செவிவழிக்கதைகள்.

தாளக்கரை நோக்கி:
அடுத்து நாங்கள் தாளக்கரை நோக்கிப் பயணமானோம். காங்கயம் – தாராபுரம் சாலையில் ஒரு பிரிவுச் சாலை வழி சென்றால் தாளக்கரை. வழியில் நல்லி மடம் என்று ஓர் ஊர். தாளக்கரையில், அமராவதி ஆறும், உப்பாறும் கூடுமிடத்தில் உப்பாற்றுப் பாலம் உள்ளது. பயணம் இங்கு முடிந்தது. பாலத்திற்கப்பால், வயல்வெளியில் வரப்புகளினூடே நடந்து சென்றோம்.

வயல்வரப்புகளினூடே பயணம்


வயல்வெளியில் ஒரு கல்வெட்டு:
வயல்வெளியில் ஐந்து, ஐந்தரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும், ஓரடிப் பருமனும் உள்ள கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்லின் அனைத்துப் பக்கங்களிலும் எழுத்துகள் இருந்தன. நண்பர் சதாசிவம் ஏற்கெனவே ஒரு பக்கத்துக் கல்வெட்டினை ஒளிப்படம் எடுத்து வைத்திருந்தார். இன்று நாங்கள் பார்க்கையில் கல் புரட்டப்பெற்ற நிலையில் படிக்கப்படாத மற்றொரு பக்கம் மேல் பகுதியாய் உள்ளவாறு கல், வயல் தரையில் கிடத்தப்பட்டிருந்தது. இயல்பு நிலையில் எழுத்துகளைப்படிக்க இயலவில்லையாதலால், எழுத்துப்பரப்பின் மாவு பூசிப்படித்தோம்.

கல்வெட்டுச் செய்திகள்:
இன்றுள்ள பவானிசாகர் அணைப்பகுதி முன்பு டணாயக்கன் கோட்டையாக இருந்தது. அங்கு, ஹொய்சள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் காலத்தில், அவன் சார்பாகக் கொங்குப்பகுதிக்கு ஆளுநராக இருந்த வீர சிக்கைய தண்டநாயக்கன், டணாயக்கன் கோட்டையில் அமைந்திருந்த மாதவப்பெருமாள் கோயிலுக்கு அரசன் சார்பாக அஞ்சாத நல்லூர் என்னும் ஊரைக் கொடையாக அளித்தான். இந்தக் கொடையை உறுதி செய்து நரையனூர் நாட்டவர் கல்லில் வெட்டிவைத்துள்ளனர். கல்வெட்டின் காலம், கல்வெட்டில் குறித்தபடி கி.பி. 1326-1327 ஆகும். ஏறக்குறைய எழுநூறு (700) ஆண்டுகள் பழமையான கல்வெட்டு. கல்வெட்டின் பாடம் மற்றும் கல்வெட்டு மூலம் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளை விரிவாகத் தனிக்கட்டுரையில் காணலாம். (கட்டுரையின் பெயர்: தாளக்கரை வயல் கல்வெட்டில் டணாயக்கன்கோட்டை)

கொளத்துப்பாளையம் ஏரியும் மதகும்:
தாளக்கரைக் கல்வெட்டைப் பார்த்துப் படித்துத் திரும்பும் வழியில், கொளத்துப்பாளையம் என்னும் ஊரில் கல்லாலான ஒரு பழங்கால மதகினைக் கண்டோம். சாலையினின்றும் உள்ளடங்கிய நிலையில், வயல்களுக்கிடையே மதகு இருந்தது. மீண்டும் வயல் வரப்பினூடே நடந்து சென்று மதகை அடைந்தோம். மதகில் கல்வெட்டு எதுவுமில்லை. சற்று ஏமாற்றமே. இருப்பினும், களப்பணியில் பழங்கால மதகு ஒன்றைக் கண்டறிந்தது எங்களின் வரலாற்றுத் தேடலில் ஒரு வரவு என்று நிறைவுகொண்டோம். சாலையோரம் ஒரு சிறிய பழங்கோயில் இருந்தது. எளிமையாகத் தோற்றமளித்த அக்கோயிலைப் பற்றி அங்கிருந்த முதியவர் ஒருவரிடம் கேட்டபோது, அவர், அக்கோயில், ஏரிக்கருப்பன் கோயில் என்றார். ஒரு காலத்தில் இங்கு ஏரி இருந்தமைக்கு ஏரிக்கருப்பன் கோயிலும் மதகுமே சான்றுகள் என்பது உறுதியாயிற்று. கொளத்துப்பாளையம் ஊரின் பெயர்க்காரணமும் விளக்கமுற்றது. ஏரி காணாமல்போய் தற்போது வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.

மதகு


ஏரிக்கருப்பன் கோயில் 


பழங்காலச் சத்திரம்:
கொளத்துப்பாளையத்திலிருந்து சற்றுத் தொலைவு பயணத்தில், சாலையின் ஒரு புறம் பழங்கால மண்டபம் ஒன்றைக் கண்ணுற்றோம். சாலையை அடுத்து ஒரு சோளக்காட்டுக்குள் காணப்பட்ட அந்த மண்டபம் பாழடைந்த நிலையில், அணுகவே அச்சம் தரும் நிலையில் இருந்தது. இருப்பினும் நண்பர் தந்த ஊக்கத்தில் சோளப்பயிர்களினூடே சிறு சிறு காட்டுச் செடிகளுக்கிடையில் தடம் பதித்து (காலுக்கடியில் பாம்புகள் கூடத் தட்டுப்படலாம் என்னும் அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன்) நடந்தோம். மண்டபத்தைச் சுற்றிலும் செடிகள் மண்டிக்கிடந்தன. மண்டபத்தின் உள்ளே தரைப் பகுதியில் புற்றும் வளர்ந்திருந்தது. பழங்காலப் பெருவழிகளில் ஒன்றாக இப்பகுதி இருந்திருக்கவேண்டும். இந்த மண்டபம் ஒரு சத்திரமாக இயங்கியிருக்கவேண்டும். நண்பர் மண்டபத்தைச் சுற்றியும் வந்து ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்துவிட்டார். மண்டபச் சுவரின் கட்டுமானத்தில் ஒரு கல்லில் எழுத்துப் பொறிப்பு இருந்தது. எழுத்தமைதியும் கல்வெட்டில் இருந்த சொற்றொடரும் கல்வெட்டு, 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உணர்த்திற்று. வேறெங்கேயோ ஓரிடத்தில் கோயிலில் இருந்த கற்களை இங்கு கொணர்ந்து மண்டபத்தை எழுப்பியுள்ளனர் என்று கருதலாம். அவற்றில், கல்வெட்டுடன் கூடிய ஒரு கல் எங்களுக்குக் கிட்டியது தொல்லியல் தடயங்களின் எங்கள் தேடலுக்கு இன்னொரு வரவு என்பதில் ஐயமில்லை. மண்டபம் தற்போது சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வசம் இருப்பதாகத் தெரிகிறது.

பாழடைந்த சத்திர மண்டபம் 


கல்வெட்டுள்ள   துண்டுக்கல்
(சிவப்பு வளையத்துள் கல்வெட்டு)கல்வெட்டு


கல்வெட்டின் பாடம்:
1  ற்கு யாண்டு மூன்
2  (உ)மைச்சியேந் ஆளு
3  ழுந்தரு(ளி)விச்ச (இ)வற்கு
4  நன்றாக வைச்ச விளக்கு

பெரும்பாலும் கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் மிகுதியாக உள்ள இப்பகுதியில், கல்வெட்டுகளில் அரசனையும் அரசனின் ஆட்சியாண்டையும்  குறிக்கும் தொடர் “தேவற்கு யாண்டு ...ஆவது”  என அமைவது வழக்கம். இந்தக் கல்வெட்டிலும் அவ்வகைத் தொடர் காணப்படுகிறது. அரசனின் ஆட்சியாண்டு மூன்று என்பது தெளிவு. ”ஆளு”  என்னும் முழுமை பெறாத சொல் “ஆளுடையார்” என்பதன் குறைப்பகுதியாகும். இத்தொடர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறிக்கும் தொடராகும். எனவே, ஒரு கோயிலைப் பற்றிய குறிப்பு பெறப்படுகிறது. மூன்றாவது வரியில் உள்ள ”ழுந்தரு(ளி)விச்ச (இ)வற்கு”  என்னும் தொடர் கோயிலில் ஒரு தெய்வத்துக்குச் சன்னதி ஏற்படுத்திய செய்தியைக் குறிக்கும். சிவன் கோயில் ஒன்றில் ஒரு பிள்ளையாரையோ, இளைய பிள்ளையாரையோ (முருகன்), க்ஷேத்திரபாலப் பிள்ளையாரையோ எழுந்தருளுவித்தல் வழக்கம். அவ்வாறான ஒரு கடவுளை எழுந்தருளுவித்ததை மேற்படி தொடர் குறிக்கிறது. நன்றாக என்னும் சொல் ஒருவர் நலனுக்காக என்று பொருள் தரும். வைச்ச விளக்கு என்னும் தொடர், கோயிலுக்கு நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. கொடையாளியின் பெயர் ‘உமை’  (உமைச்சி) என்பதாகலாம். எனவே, உமை என்பவர், தமக்கு உறவான வேறொருவரின் நலனுக்காகக் கோயிலின் ஒரு சன்னதிக்கு விளக்குக் கொடையை அளித்துள்ளார் என்பது கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.

நீலம்பூர் காளியம்மன் கோயில்


ஊர் திரும்பும் இறுதிக்கட்டத்தில் நீலம்பூர் காளியம்மன் கோயிலுக்குச் சென்றோம். பிற்காலக் கல்வெட்டு (நூறாண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் கல்வெட்டு) ஏதேனும் கிடைக்கலாம் என்று பார்வையிட்டோம். ஆனால், கல்வெட்டு கிடைக்கவில்லை. கோயில் கற்றளியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பலர் கொடையளித்த தற்காலக் கல்வெட்டுகள் காணப்பட்டன. அவற்றில், ஈஞ்ச குலம், நீல குலம், சேரன் குலம் ஆகிய குலங்களைச் சேர்ந்த வெள்ளாளக் கவுண்டர்கள் கொடை அளித்த செய்திகள் உள்ளன. கொங்குப்பகுதியில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகளில் வெள்ளாளர் கொடை பற்றிய செய்திகள் நிறையக் காணப்படுகின்றன. அவற்றில் குலப்பெயர்கள் தவறாது இடம்பெறுவதைக் காண்கிறோம். மேலும், அக்கல்வெட்டுகளில் “காணியுடைய” என்று பயில்வதைக் காணலாம். அது போன்ற, ”காணியாளர்” என்னும் ஒரு தொடரும்   தற்போதைய கல்வெட்டொன்றில் காணப்பட்டது. பழைய மரபு தற்போதும் தொடர்கிறது எனலாம்.

உவச்சர்:
சோழர் காலக் கல்வெட்டுகளில், உவச்சர் என்போர் பற்றி நிறையக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மத்தளம், காளம் முதலிய இசைக்கருவிகளைக் கோயிலில் இசைக்கும் இசைக்கலைஞர்கள் உவச்சர் எனப்பட்டனர். கல்வெட்டுகளில் இசை என்பது கொட்டு என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவர்களின் இசைப்பணியைக் கல்வெட்டுகள் “உவச்சு, உவச்சுப்பணி”  என்று குறிப்பிடுகின்றன. உவச்சர்களுக்குக் கோயில் சார்பாக நிலம் மானியமாகக் கொடுக்கப்பட்டது. இதை “உவச்ச விருத்தி”, “உவச்சுப்புறம்”  ஆகிய கல்வெட்டுச் சொற்கள் சுட்டுகின்றன. உவச்சர், பின்னாளில் பூசையாளராகவும் பணியாற்றியுள்ளனர். உவச்சர் என்னும் பழைய மரபுப் பெயர் இக்காலத்தும் தொடர்கிறது. இன்றும் உவச்சர் என்னும் சமுதாயப் பிரிவினர் உள்ளனர். அவ்வாறான உவச்சர் ஒருவர் இக்கோயிலில் பூசையாளராக இருப்பதை அறிந்தோம். பல தலைமுறைகளாகப் பூசைத் தொழிலை மரபாகக் கொண்டுள்ள உவச்சப்பூசையாளர்கள் இக்கோயிலில் பணி செய்கின்றனர். அவர்கள் இக்கோயிலில் அங்காள பரமேசுவரி திருக்கோயிலை எடுப்பித்தார்கள் என்னும் செய்தியை ஒரு கல்வெட்டு தாங்கி நிற்கிறது.

உவச்சர் பற்றிய கல்வெட்டு


முடிவுரை:
வளமான ஆற்றங்கரைப் பகுதிகளில் நகரம், நாகரிகம், கோயில்கள், வேளாண்மை ஆகிய பல்வேறு பின்புலங்களில் வரலாற்றுத் தடயங்கள் நிறையக் காணப்படும். அவ்வகையில், அமராவதி ஆற்றினை ஒட்டித் தொல்லியல் தடயங்கள் இருப்பது மிக இயல்பு. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இன்றளவில், எங்கள் தேடுதலிலும் சில தடயங்கள் கிட்டியுள்ளன. ஒரு கோயிலுக்குத் தொலைவில் அமைந்துள்ள ஊரின் வளமான நிலம் அக்கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டது, ஏரிகளும் குளங்களும் அமைத்து வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தமை, அந்த ஏரி குளங்களைப் பாதுகாப்பதில் மக்கள் இறை நம்பிக்கையும் பங்குபெற்ற நாட்டார் மரபு, இடைக்காலச் சூழலில் நிலவிய சமுதாய மரபுகளான காணியுடைமை, உவச்சுப்பணி ஆகியன இன்றளவும் தொடரும் நிலை ஆகியன எமது தேடல் பயணத்தில் அறிய வந்தன. பழங்கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் ஆகியனவற்றைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறை முனைப்புக் காட்டவேண்டும். தாளக்கரையில் உள்ள போசளர் காலத்துக் கல்வெட்டினை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.
முகநூல்


——    திருத்தம் பொன். சரவணன்


முகநூலில் முகம்புதைத்து 
அகம்தொலைக்கும் அன்பர்களே
கடந்தோடும் காலமதில்
கணப்பொழுதே கேளுங்களேன்.

நொடிக்குவொரு அஞ்சல்
உடனுக்குடன் பகிர்தல்
உவக்குமாறு கெஞ்சல்
உவப்புகண்டு மகிழ்தல்

எதுமெய்? எதுபொய்?
அறியவேண்டாமா உண்மை?
எதுசரி? எதுதவறு?
அலசவேண்டாமா நன்மை?

சாதிக்கொரு சங்கமுண்டு
வீதிக்கொரு மன்றமுண்டு
பாதிக்கப்பட்ட மக்களின்
நீதிக்கொரு இடமுண்டா?
நாதியற்ற ஏழைகளின்
வேதனையைப் பகிர்வோமே.

அரசியல் பேசினாலும்
ஆன்மீகம் பேசினாலும்
சீர்கெட்டுப் போகாமல்
நேர்படவே பேசிடுவோம்
சாதீயம் போற்றாமல்
சாதனைகள் பகிர்வோமே.

முகிலென்றால் மழைபொழியும்
முகமென்றால் அன்புமொழியும்
முகநூலில் முகம்புதைத்து 
அகமதனைத் தொலைக்காமல்
முகநூலில் அகம்விதைத்து
முகம்மலரச் செய்வோமே. 

(குறிப்பு: அகம் = அன்பு )


________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/

மூதுரை காட்டும் நெறி - ஆசீவகம்

——   நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்முன்னுரை :
அருந்தமிழ் பெண்பாற் புலவர் ஒளவையார் ஆக்கிய நீதி நெறி நூல்களுள் ஒன்று மூதுரை. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படும் இந்நூல் 1906 ஆம் ஆண்டு  பண்டிதமித்திர யந்திரசாலையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.ந .மு .வேங்கடசாமி 1927 இல் இதற்கு உரை எழுதியுள்ளார்.


பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூத்த + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று தொடங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் முப்பது வெண்பாப்பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.  தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான  நச்சினார்க்கினியரால் மூதுரை எடுத்துக்காட்டப்பட்டிருப்பது இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.


பாடல்களின் சுருக்க உரை :
கடவுள் வாழ்த்து : 
தும்பிக்கையான் பாதம் பணிந்தவருக்கு நல்ல சொல்வன்மையும் ,நல்ல சிந்தனையும் உண்டாகும் .  பெருமை பொருந்திய மலரில் அமர்ந்தவள் அருள் பார்வை கிடைக்கும். உடம்பு பிணிகளால் வாட்டமுறாது.

பாடல் 1:
ஒருவனுக்கு உதவி செய்தால் அவ்வுதவியை அவன் என்று செய்வான் என ஐயுற வேண்டியதில்லை.

பாடல் 2:
நல்லவருக்குச்  செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும். தீயவருக்குச்செய்த உபகாரம் நீர் மேல் எழுத்து போன்றது.

பாடல் 3:
வறுமைக் காலத்து இளமையும், முதுமைக்காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன.

பாடல் 4:
மேலோர் வறுமையுற்றாலும் மேலோர்:கீழோர் கலந்து பழகினும் நண்பராகார்.

பாடல் 5:
அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் முடியும் காலம் வராமல் மேற்கொண்ட காரியங்கள் முடியாது.

பாடல் 6:
மானமுடையவர் ஆபத்து வந்த போது உயிரை விடினும் விடுவாரேயன்றி மானத்தைவிடார்.

பாடல் 7:
ஒருவருக்கு நுண்ணறிவு, கற்ற நூலின் அளவாகவும், செல்வம்  தவத்தின் அளவாகவும், குணம் குலத்தின் அளவாகவும் இருக்கும்.

பாடல் 8:
நல்லவரைப் பார்ப்பதும், அவர் சொல்லக் கேட்டலும், அவர் குணங்களைப் பேசுதலும், அவரோடு கூடி இருத்தலும்  நன்று.

பாடல் 9:
தீயவரைப் பார்ப்பதும், அவர் சொல்லக் கேட்டலும், அவர் குணங்களைப் பேசுதலும், அவரோடு கூடி இருத்தலும்  தீது.

பாடல் 10:
நல்லார் ஒருவர் இருப்பாயின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பயன் உண்டாகும்.

பாடல் 11:
மிக்க வல்லமை உடையவருக்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கத் துணை வேண்டும்.

பாடல் 12:
உருவத்தின் பெரியவர் குணத்தில் சிறியவராதலும், உருவத்தில் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு.

பாடல் 13:
கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் காட்டிலுள்ள  மரத்தினும் கடையாவர்.

பாடல் 14:
கல்லாதவன் கற்றவனைப் போல நடித்தாலும் கற்றவன் ஆகான்.

பாடல் 15:
தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும்.

பாடல் 16:
அடக்கமுடையவரது வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் .

பாடல் 17:
வறுமை வந்த பொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உண்மையான உறவினராவர்.

பாடல் 18:
மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார், கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராவார்.

பாடல் 19:
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும் விதிப்பயன் இன்றி அனுபவிக்க இயலாது.

பாடல் 20:
உடன் பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு.

பாடல் 21:
நற்குண நற் செய்கைகளையுடைய மனைவி இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு: இல்லையேல் காடாகும்.

பாடல் 22:
செய்தொழில்கள் ஊழின்படியின்றி அவரவர் நினைத்தபடி முடியா.

பாடல் 23
கோபத்தினால் பிரிந்த கீழோர் எக்காலத்தும் கூடார். சான்றோர் அப்பொழுதே கூடுவர்.

பாடல் 24:
கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்பு செய்வர்.

பாடல் 25:
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட ஒழுகுவர்.

பாடல் 26:
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு, மன்னனைவிட கசடறக் கற்றவன் சிறப்புடையவன்.

பாடல் 27:
கல்லாதவர்க்கு கற்றவர் சொல்லும், பாவிகளுக்கு அறத்தினாலும், கணவனுக்குப் பொருத்தமில்லா மனைவியாலும் துன்பம் உண்டாகும்.

பாடல் 28:
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனவலிமை குன்றார்.

பாடல் 29:
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையானவையல்ல.

பாடல் 30:
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர்.

ஒப்புமைப்பாடல்கள்:  
நான்மணிக்கடிகை:
பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான  நான்மணிக்கடிகையின் ஒருபாடல் மூதுரை பாடலுடன் முழுவதும்  ஒன்று படுகின்றது;
   
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்
நான்மணிக்கடிகை-பாடல் 85
           
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்
மூதுரை-பாடல் 27

புறநானூறு:
சங்ககால  ஒளவையார்  அதியமான் மீது கோபம் கொண்டு எழுதிய புறநானூற்றுப் பாடல் மூதுரையின் 26 ம் பாடலுடன் ஒப்புமை பொருளாக அமைந்துள்ளது;

...மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.
புறநானூறு-பாடல் 206

மன்னனு  மாசறக்  கற்றோனுஞ்  சீர்தூக்கின்
மன்னனிற்  கற்றோன்  சிறப்புடையன்  -  மன்னற்குத்
தன்தேச  மல்லாற்  சிறப்பில்லை  கற்றோற்குச்
சென்றஇட  மெல்லாம்  சிறப்பு.
மூதுரை-பாடல் 26

திருக்குறள்:
திருக்குறளின் பொறையுடைமை குறள், மூதுரையின் 30ம் பாடலின் கருத்துக்கு இசைவாக அமைந்துள்ளது;

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள்-151

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
மூதுரை-பாடல் 30

வெற்றிவேற்கை: 
வெற்றிவேற்கை  (நறுந்தொகை) பாடலின் வரிகளின் கருத்தும் மூதுரை 4ம் பாடல் கருத்தை  ஒட்டி அமைந்துள்ளது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
வெற்றிவேற்கை  பாடல் (23-27)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
மூதுரை-பாடல் 04

மூதுரை காட்டும் நெறி:
பொதுவாக கடவுள் வாழ்த்துப் பாடலில் நூலின் ஆசிரியரின் சமயம் அறியப்படும். ஆனால் சில நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பவரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் விநாயகக் கடவுளை வணங்குவதாக இதுகாரும் அறியப்பட்டு வந்துள்ளது.   ஆனால் தும்பிக்கையான் என்ற ஒரு சொல்லைக் கொண்டு இந்நூல் சமயத்தைக் காண இயலாது. ஒளவையார் எழுதியதாக அமைந்துள்ள விநாயகர் அகவல் அத்தகைய எண்ணத்தை விதைக்கின்றது.

பிற பாடல்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியரின் உண்மை நெறி அறியப்பட வேண்டும். மூதுரையின் பாடல்கள் உலகப்பொதுமறை போல் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளைப் போதிக்கின்றது.
ஆயினும்;

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

மேற்காட்டிய 4 பாடல்கள் ஆசீவகர்களின் வினை விதிக்கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது .

வாழ்வில் ஒருவன் ஒரு பொருளைப் பெறுவதோ, ஒரு பொருளை இழப்பதோ, வாழ்வில் எதிர் கொள்ளப்படும் இடையூறுகளோ, சேர வேண்டிய இடத்தைச் சேருவதோ, வாழ்வில் வரும் துக்கங்களோ, சுகங்களோ, இவை மனிதனை விட்டு நீங்குவதோ, பிறப்பதோ, சாவதோ எல்லாம் முன்னரே நியமிக்கப்பட்டபடி தான் நடக்கும். அதை வேறெந்த வழியிலும் மாற்ற முடியாது. விதியின் வலுவான தாக்கம் மனித வாழ்வில் இருப்பதால், எந்த நிகழ்வுமே மனிதனைப் பாதிக்கக் கூடாது என்பது ஆசீவிகர் கொள்கையாகும் எனும்  முனைவர்  ர. விஜயலக்ஷ்மி அவர்களின் விளக்கம் மூதுரையின் பாடல்களோடு பொருந்தி வருகின்றது.

ஆசீவகம் குறித்து ஆய்வு செய்த முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் ஆதிசங்கரன் திருநிலை மற்றும் அறப்பெயர் சாத்தன் குறித்த விளக்கங்கள் மூதுரையின் கடவுள் வாழ்த்து பாடலுடன் பொருந்திப் பார்க்க வேண்டியதாகும்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மாமலராள் - திருநிலை: ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  எனும் நூலில் ஆதி. சங்கரன்  பின்வரும் விளக்கம் அளிக்கின்றார்;
ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண்ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும். மூதுரையில் வழங்கப்பெறும்  மாமலராள், திருவிடந்தை எனும் சொற்கள் மாதங்கியைக் குறிக்க வாய்ப்பு உண்டு. 

தும்பிக்கையான்:அறப்பெயர் சாத்தன் எனும் அய்யனார் தான் மற்கலி கோசளர் என்பது  முனைவர் க. நெடுஞ்செழியன் "  ஆசீவகமும் ஐயனார் வரலாறும்"   எனும் நூலின் முடிவாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் தும்பிக்கையான் என்பது யானையை வாகனமாய் கொண்ட சாத்தனைக் குறிக்க வாய்ப்பு உண்டு.

முடிவுரை:
ஆசீவகரின் வினைவிதிக்கொள்கையை பின்பற்றி வரும் பாடல்கள் இடம்பெற்று இருந்தாலும் மூதுரை திருக்குறள் போன்று  பொதுவான அறநெறி நூலாகும் .சான்றாதாரங்கள்: 
1)  ஒளவையார் அருளிய மூதுரை ந.மு .வேங்கடசாமி நாட்டார்
2)  தமிழ் இணையக் கல்விக் கழகம் - http://www.tamilvu.org/
3)  வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும், முனைவர் ர. விஜயலக்ஷ்மி
4)  ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  ஆதி. சங்கரன்
5)  ஆசீவகமும் ஐயனார் வரலாறும்  முனைவர் க. நெடுஞ்செழியன்


________________________________________________________________________
தொடர்பு: நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்  (jaisureshkumar@gmail.com)தனுஷ்கோடி – அரிச்சல் முனை

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்


தனுஷ் என்றால் வில். கோடி என்றால் முனை.இராமேஸ்வரம் தீவு, மேல் நோக்கிக் குவிந்து வில் போல் வளைந்திருப்பதால் இந்தத்தீவு ஒரு வில்; வில்லின் தென்கிழக்குக்  கோடியில்  இருப்பதால் இந்த ஊர் தனுஷ்கோடி.  இந்த தனுஷ்கோடிக்கு  செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கனவு. 1964 டிசம்பரில் பெரும் புயல் ஒன்று  தனுஷ்கோடியைப் புரட்டிப் போட்டது.  இந்த ஊர் உருக் குலைந்து அழிந்து போனது. இந்தத் தீவின் படங்களைச்  செய்தித்தாள்களில் பார்த்த போது சிறுவனான எனக்கு, ஒருமுறை இங்கே சென்று இந்தத் தீவினை பார்க்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் இராமேஸ்வரம் சென்றபோது அங்கிருந்து 25 கி.மீ. பயணித்தால்தான் முனைக்குச் செல்ல முடியும் என்றார்கள். போகலாம் என்றேன். இங்கிருந்து 15 கி.மீ.யில் உள்ள முகுந்தராயன் பட்டிணம் வரைதான் சாலை வசதி உள்ளது. அதற்கு மேல் FOUR-WHEEL  drive உள்ள ஜீப்பில்தான் போக முடியும். அதவும் முழுமையாகப்  போக முடியாது. மழை பெய்தால் சிக்கல் என்று வேன்காரர் கையை விரித்துவிட்டார். ஏமாந்து திரும்பினேன்.


ஆனால் தற்போது  ஆட்டோ கூட முனைக்கு செல்கிறது, சென்ற ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவகத்தைத் திறக்க வந்த பிரதமர்  இந்த சாலையையும் திறந்த வைத்திருக்கிறார். முகுந்தராயன் பட்டினத்திற்கும் கடைக்கோடி முனைக்கும் ஒன்பதரை கி.மீ. தூரம்தான். ஆனால் எழுபத்து ஐந்து கோடி ரூபாய் செலவு பிடித்திருக்கிறது. அருமையான சாலை. அழிந்துபோன சாலையின் மேல் இருந்த மணலை அகற்றி புதியதாக மேடிட்டு அருமையாக அமைத்திருக்கிறார்கள். சாலை நெடுகிலும் இருபுறமும் கேபியன் சுவர் (CABION BOX)  அமைத்திருக்கிறார்கள். இந்த சுவர் பூமிக்கு அடியில் ஒரு மீ. ஆழம் செல்கிறது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பாறைகளை அடுக்கி அவற்றை GEOTEXTILE எனப்படும் இழைகளால் பிணைத்திருக்கிறார்கள். உயர் ஓதங்களின் போதும் சூறாவளிக் காற்றின் போதும்  கடல் நீர் உட்புகாமல் தடுக்கவும், அப்படி மீறி உட்புகும் நீர் சாலையை அரிக்காமல் வழிந்தோடவும் இந்த ஏற்பாடு.தனுஷ்கோடியிலேயே  சாலையின் இருபுறமும் சற்று தொலைவில் கடல் தெரிய ஆரம்பித்து விடுகிறது. இங்கிருந்து முனை ஐந்து கி.மீ.. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தக தக வென மின்னும் பொன்னிற மணல் திட்டுகள். முனையை நெருங்க நெருங்க இருபுறமும்  சாலையை நெருங்கி வரும் கடல் முனையை அடைந்தவுடன் சேர்ந்து நம் கண்முன்னே பெரும் நீர்பரப்பாய் விரிகிறது.

இந்த முனைக்கு அரிச்சல் முனை என்று பெயர். கடல் நீரால் அரிக்கப்பட்ட முனை- ஆதலின் அரித்த முனை - அரிச்ச முனை – அரிச்சல் முனை. இது ஒரு யூகம்தான். நம் நாட்டின் எல்லை இந்த  முனை என்பதால் இங்கே இந்திய தேசிய சின்னம் ஏந்திய தூண் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வெறும் 15 கி.மீ. தான்.அரிச்சல் முனையிலிருந்து பார்க்கும் போது இடதுபுறம் அமைதியாக ஓர் ஏரியைப்போல்  காட்சி அளிக்கும் வங்கக்கடலின் பாக் நீரிணை.  வலதுபுறம்  ஆர்ப்பரிக்கும் இந்துமாக்கடலின் மன்னார் வளைகுடா.இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அரிச்சல் முனைக்கும் படையெடுக்கத் துவங்கி விட்டார்கள். மாலை ஐந்து மணிக்குமேல் கடற்கரைப் பகுதியில் மக்களை அனுமதிப்பதில்லை, இன்னும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்காததால் கடற்கரை தூய்மையாக அழகாக இருக்கிறது. போய் பார்த்துவிட்டு வாருங்களேன்.


படம் உதவி:  
சாலை குறித்த படங்கள், இராஜ வன்னியன் என்பாரின் “தனுஷ்கோடி உன்னைத்தேடி” எனும் வலைத்தளத்தில் எடுக்கப்பட்டவை________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)மதுரைக் காதல்

——    திருத்தம் பொன். சரவணன்

கடாஅம் கமழும் களிமத யானைக்
காலுறக் கவ்விய கடுப்புடைக் கராஅம்
மேந்தோல் அன்ன பாகல் செழுங்கனி
மேவர மொசிக்கும் முயிற்றினம் போல
பெருஞ்சோறு அருந்தி பரிசிலும் பெறீஇயர்
பொருநர் பாணரொடு கூத்தரும் வரிப்ப
ஆனாது அளித்த அடிசில் நறுநெய்
நாகம் அசைந்தென நெடுவழி ஒடும்
தேனார் பூம்பொழில் மதுரை யதனில்
வானார் மதியின் காய்வெண் ணிலவில்
பூணாகம் பெறும் பெருங்கல் நாட
பொருள்வயின் எமைநீர் பிரிந்தே செல்விரேல்
வரும்வரை தாங்குமோ தெய்ய ?
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
மறுகியே மாளும் என்னுயிரே!________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html