Tuesday, June 12, 2018

தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

—  முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்


ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டு மக்களின் தாய்மொழியில் வெளியிடப்பட்டால்தான் அந்நாட்டு மக்கள் அவற்றை ஆர்வத்துடன் படித்துணர முடியும். இதனையே அடிப்படைக் காரணமாகக் கொண்டு தமிழகத்தில் தோன்றிய பல தமிழ் அறிஞர்கள் தமிழர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், சமூகக்கட்டமைப்புகள், உலக மக்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவு, பண்டையகால மன்னர்கள் கப்பற்படை வலிமையால் கிழக்காசிய நாடுகளைத் தமது ஏகாதிபத்தியத்தின் கீழ் வைத்திருந்தது போன்ற தமிழர் பெருமைகளைச் சுதந்திரத்திற்குப் முன்பிருந்தே எழுதி வந்தனர். அவற்றைப் படித்த தமிழர்களிடையே எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்மை ஆள்வதா என்ற உணர்வு மக்களிடையே காட்டுத்தீ போலப் பரவக்காரணமாக இருந்தது. அதோடு மட்டுமன்றி இந்திய சுதந்திர போராட்டக் களத்தில் தமிழர்கள் உத்வேகத்துடன் குதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. 

சுதந்திரத்திற்கு  முன்பும் பிறகும் ஏராளமான தமிழ் நூல்கள் அச்சுவடிவில் வருவதற்குக் காரணம் ஐரோப்பியர்கள். இந்தியாவில் அவர்கள் அறிமுகப் படுத்திய அச்சு எந்திரம், தமிழ் எழுத்துருக்கள் போன்றவற்றின் வருகையால் பல தமிழ் நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட கட்சிகளின் எழுச்சியால் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாறு, தமிழர் வரலாறு போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களை விடத் தமிழில் எழுதப்பட்ட நூல்களுக்குத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இதனையே தமது குறிக்கோளாகக் கொண்டவர்தான் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள். வரலாற்று ஆய்வாளர்களின் பிதாமகனாக விளங்கிய இவ்வுத்தமரின் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப்பார்ப்போம்.

தி . வை. சதாசிவ பண்டாரத்தார்:
திருப்புறம்பியம் வைத்தியலிங்கம் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் ஆகஸ்டு 15 ஆம் நாள்  1892 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கம், மீனாட்சியம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை தமது சொந்த ஊரில் முடித்தார். உயர்கல்வியைக் கும்பகோணத்தில் பயின்றார். அப்போது புகழ்பெற்ற பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும், இலக்கணத்தையும் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கொடுத்த ஊக்கத்தால் பண்டையகால கல்வெட்டுக்கள் மீது சதாசிவ பண்டாரத்தாருக்கு அதிக ஆர்வம் ஏற்படலாயிற்று. தமது ஓய்வு நேரங்களில்  சொந்த ஊரில் இருக்கும் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட சாக்ஷிநாதேஸ்வரர் கோயிலுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டார். சிலமாதங்களில் இக்கோயிலில் உள்ள அத்தனை கல்வெட்டுக்களையும் சரளமாகப் படித்து அதன் உட்பொருளைத் தெரிந்து கொண்டார். இதற்கிடையே கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். பிறகு வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 25 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றினார்.         
அப்போது சதாசிவ பண்டாரத்தார்  அவர்களுக்குத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த T . A . கோபிநாதராயர் அவர்கள் எழுதிய ''சோழவமிச சரித்திரச் சுருக்கம்" என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நூல் அவருக்குத் தமிழகத்தில் ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. இதன் விளைவாகச் சோழர்கள் மீது அதிகம் ஆர்வம் ஏற்படலாயிற்று . மேலும், சோழர் சரித்திர தரவுகளை தேடிப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தாம் பிறந்த ஊரான திருப்புறம்பியத்தில் கி.பி. 880 ஆம் ஆண்டு பல்லவர், சோழர், கங்கர் ஆகிய கூட்டுப்படைகள் வரகுண பாண்டியனின் படையைத் தோற்கடித்தன என்றும், மீண்டும் சோழப் பேரரசு எழுச்சி பெறுவதற்குக் காரணமான போர்க்களமே தமது ஊர் என அறிந்த பிறகு  சோழர் சரித்திரத்தின் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.   அக்காலத்தில் சோழர் வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. எனவே இந்தியாவிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரே பேரரசு சோழப் பேரரசு அவர்களின் வரலாறு தமிழ் மொழியில் முழுமையாக எழுதப்பட்ட வேண்டும் என்று எண்ணினார். இதன் விளைவாகச் சோழர்களின் கல்வெட்டுக்கள் அத்தனையையும் படிக்க முற்பட்டார். 

பண்டாரத்தாரின் முதல் நூல்:    
தமிழகத்திலும் பிற நாடுகளிலும் செங்கோல் செலுத்தி சக்கரவர்த்தியாக விளங்கிய முதற் குலோத்துங்க சோழனின் வரலாற்றை முழுமையான  தரவுகளை கொண்டு 1930 ஆம் ஆண்டு எழுதி முடித்தார்.  முதற் குலோத்துங்க சோழன்  என்ற அந்தநூல் பண்டாரத்தாரின் முதல் வரலாற்று நூலாக அமைந்தது.  இந்நூல் அக்காலகட்டத்தில் பெரும் பாராட்டுதலைப் பெற்றது. சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் இண்டர்மீடியேட் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது இந்நூலிற்குக் கிடைத்த கூடுதல் சிறப்பாகும். தமது ஓய்வு நேரங்களில் அருகாமையில் உள்ள கோயில்களுக்குச் சென்று கல்வெட்டுக்கள் படிப்பதையும் அது சம்பந்தமான கட்டுரைகள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட  "செந்தமிழ்"  என்ற மாத இதழில் சதாசிவ பண்டாரத்தார் "சோழன் கரிகாலன்" என்ற தமது முதல் கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை இவரது ஆழ்ந்த வரலாற்று மற்றும் தமிழ் புலமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது. அடுத்ததாகக் கரந்தை தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட "தமிழ் பொழில்" என்ற இதழிலும் இவரது கட்டுரைகள் இடம்பெற்று அன்றைய வளரும் தலைமுறையினர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு செந்தமிழ், தமிழ் பொழில் முதலிய இதழ்களில் மாதம் தோறும் இவரது கட்டுரைகள் வந்த வண்ணம் இருந்தன. இவரது எழுத்துக்களும் ஆய்வுகளும் இதேகாலக்கட்டத்தில் பணியாற்றி வந்த தமிழ்வித்வான் வேங்கடசாமி நாட்டார், கரந்தை தமிழ்வேள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைப் பெரிதும் கவர்ந்ததோடு அவர்களது பாராட்டுக்களையும் பெற்றன.

இராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் அழைப்பு:

தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்று வரலாற்று ஆய்வில் தேர்ச்சியுற்ற அறிஞராகத் திகழ்ந்த சதாசிவ பண்டாரத்தாரை இராஜ சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள், சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். அவ் அழைப்பினை ஏற்ற பண்டாரத்தார் 1942 ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆசிரியர் பணியினை ஏற்றார். பிறகு 1960 ஆம் ஆண்டுவரை இப்பல்கலைக் கழகத்தில் திறம்பட பணியாற்றினார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய வரலாறு (இருண்ட காலம் ) மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு (13,14, 15 ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்களை எழுதினார். இந்நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டுத்துறையினால் வெளியிடப்பட்டு பெருமை பெற்றன. 

கல்வெட்டுக்களில் முழுப்புலமை பெற்றது:
அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழாராய்ச்சித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழக கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவற்றில் தமது ஆய்வுகளை மேற் கொண்டுவந்தார். அப்போதுதான் தமிழக வரலாற்றினை எழுதுவதற்குப் பெரிதும் துணைநிற்பன கல்வெட்டுக்களேயாகும் என்பதை நன்குணர்ந்தார்.  இதுவரை சுமார் 24,000 தமிழ் கல்வெட்டுக்களும்,11,000 கன்னட கல்வெட்டுக்களும் , 5,000 தெலுங்கு கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் தான் தமிழக வரலாறு எழுதப்படுவதற்குப் பெரிதும் உதவி புரிகின்றன . எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்களைத் தடையின்றிப் படித்து, அவற்றின் முழுப் பொருளையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியாகக் கொண்டு  வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும் என்பதை தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதன் விளைவாகச் சோழர் கால கல்வெட்டுக்கள் அனைத்தையும் படிக்க முற்பட்டார். அவ்வாறு சோழர்கள் வரலாற்றினை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக விளங்கிய சுமார் 8,000 கல்வெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து படித்து முடித்தார். இந்தியத் துணைக்கண்டத்திலேயே சுமார் 399 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே பேரரசு சோழப்பேரரசு என்பதை உணர்ந்த பண்டாரத்தார்.  சோழர் சரித்திரம் குறித்த ஆய்வினை அப்போதைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் கே. பி. ரெட்டி நாயுடு அவர்களின் ஒப்புதலுடன் தொடங்கினார்.

1935 – 1937 ஆண்டுகளில் கே.ஏ. நீலகண்டசாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட சோழர் வரலாறு இரண்டு தொகுதிகளுமே ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்நூல் சாமானிய மக்களைச் சென்றடைவதில் மொழிதடையாக இருப்பதைக்கண்ட பண்டாரத்தார் சோழர் சரித்திரத்தை தூய மற்றும் எளியத் தமிழ் நடையில் எழுதத் தொடங்கினார் .

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சோழநாட்டில் அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து இரண்டு பகுதிகளாக எழுதிமுடித்தார் . அவற்றுள் முதற்பகுதி கி.பி. 846 முதல் கி.பி. 1070 வரையில் ஆட்சிபுரிந்தவர்களைப் பற்றியது. இரண்டாம் பகுதி கி.பி. 1070 முதல் கி.பி. 1279  வரையில் அரசாண்டவர்களின் வரலாற்றை தன்பாற் கொண்டது. இச் சரித்திர நூலின் மூன்றாம் பகுதி; சோழ அரசர்களின் ஆட்சி முறை, அக்காலத்துக் கல்விமுறை, கைத்தொழில், வாணிகம், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் மற்றும் அவற்றின் மதிப்புகள், சமயநிலை, படை பலன், மக்களது செல்வநிலை ஆகியவற்றைக் கொண்டது . இந்நூல் முழுவதும்  வரலாற்று வரைவியல் கோட்பாட்டின்படி எழுதப்பட்டது என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பாகும். இச்சரித்திர நூலை எழுதும் போது ஏற்படும் ஐயங்களைக் களைவதற்காக தாமே நேரடி கள ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
        
கடலூர் திருவந்திபுரம் கோயிலில் இருக்கும் மூன்றாம் இராசராச சோழனது 15 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு மிக முக்கியமான கல்வெட்டாகும். அதாவது சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கோப்பெருஞ்சிங்கனை ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன் தோற்கடித்துக் கைது செய்ய,  சோழமன்னன் மூன்றாம் இராசராச சோழன் அவனை  மீட்டு மீண்டும் சோழ அரியணையில் அமர்த்திய செய்தியை கூறுவதாகும். இக்கல்வெட்டை நேரடியாகக் காண விரும்பிய பண்டாரத்தார் கடலூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்தே திருவந்திபுரம் கோயிலுக்கு வந்து தமது ஆய்வை முடித்துச் சென்றார். அதே போன்று அருகாமையில் இருக்கும் திருமாணிக்குழி, திருவதிகை, திருநாவலூர் போன்ற ஊர்களில் இருக்கும் கோயில்களின் கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்கு வாகன வசதி இல்லாத நிலையில் கால்நடையாகவும் வழிப்போக்கர்களின் மாட்டு வண்டிகளிலும் சென்று தமது பணியினை முடித்து வந்தார். மேலும் இந்நூல் அச்சுவடிவில் வருவதற்கு முன்பாகவே அதில் உள்ள இடர்பாடுகளைச் சுத்தமாக களைந்தார். அவரது கடுமையான முயற்சியால் இந்நூல் வெளிவந்தவுடன் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இருந்தற்கு காரணம் பண்டாரத்தார் அவர்களின் எழுத்து நடையில் சான்றுகள் மட்டுமே பேசுவதாக அமைந்திருந்ததுதான்.     
              
1949 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டுத்துறையினால் வெளியிடப்பட்ட இந்நூல் கடந்த 2008 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டது. ஆயிரம் பிரதிகளை வெளியிட்டன ஆனால் வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே 700 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. தற் காலத்தில் சோழர் வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும், சரித்திர நாவல்களை எழுதுபவர்களுக்கும் இது வேத நூலாக விளங்குகிறது. சோழர் வரலாற்றில் பலர் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்நூல் தூண்டுகோலாக இருந்து வருகிறது.
             
தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கிய வளர்ச்சி  வரலாற்று ஆய்வுகள் என தமது வாழ்நாட்களைத் தமிழுக்காக அர்ப்பணித்த சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் தமது 68 வது வயதில் மறைந்தார்.  





___________________________________________________________
தொடர்பு:
முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் (sivaramanarchaeo@gmail.com)
வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் , 
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி - ஆத்தூர்





No comments:

Post a Comment