Saturday, June 2, 2018

மூதுரை காட்டும் நெறி - ஆசீவகம்

——   நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்



முன்னுரை :
அருந்தமிழ் பெண்பாற் புலவர் ஒளவையார் ஆக்கிய நீதி நெறி நூல்களுள் ஒன்று மூதுரை. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படும் இந்நூல் 1906 ஆம் ஆண்டு  பண்டிதமித்திர யந்திரசாலையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.ந .மு .வேங்கடசாமி 1927 இல் இதற்கு உரை எழுதியுள்ளார்.


பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூத்த + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று தொடங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் முப்பது வெண்பாப்பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.  தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான  நச்சினார்க்கினியரால் மூதுரை எடுத்துக்காட்டப்பட்டிருப்பது இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.


பாடல்களின் சுருக்க உரை :
கடவுள் வாழ்த்து : 
தும்பிக்கையான் பாதம் பணிந்தவருக்கு நல்ல சொல்வன்மையும் ,நல்ல சிந்தனையும் உண்டாகும் .  பெருமை பொருந்திய மலரில் அமர்ந்தவள் அருள் பார்வை கிடைக்கும். உடம்பு பிணிகளால் வாட்டமுறாது.

பாடல் 1:
ஒருவனுக்கு உதவி செய்தால் அவ்வுதவியை அவன் என்று செய்வான் என ஐயுற வேண்டியதில்லை.

பாடல் 2:
நல்லவருக்குச்  செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும். தீயவருக்குச்செய்த உபகாரம் நீர் மேல் எழுத்து போன்றது.

பாடல் 3:
வறுமைக் காலத்து இளமையும், முதுமைக்காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன.

பாடல் 4:
மேலோர் வறுமையுற்றாலும் மேலோர்:கீழோர் கலந்து பழகினும் நண்பராகார்.

பாடல் 5:
அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் முடியும் காலம் வராமல் மேற்கொண்ட காரியங்கள் முடியாது.

பாடல் 6:
மானமுடையவர் ஆபத்து வந்த போது உயிரை விடினும் விடுவாரேயன்றி மானத்தைவிடார்.

பாடல் 7:
ஒருவருக்கு நுண்ணறிவு, கற்ற நூலின் அளவாகவும், செல்வம்  தவத்தின் அளவாகவும், குணம் குலத்தின் அளவாகவும் இருக்கும்.

பாடல் 8:
நல்லவரைப் பார்ப்பதும், அவர் சொல்லக் கேட்டலும், அவர் குணங்களைப் பேசுதலும், அவரோடு கூடி இருத்தலும்  நன்று.

பாடல் 9:
தீயவரைப் பார்ப்பதும், அவர் சொல்லக் கேட்டலும், அவர் குணங்களைப் பேசுதலும், அவரோடு கூடி இருத்தலும்  தீது.

பாடல் 10:
நல்லார் ஒருவர் இருப்பாயின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பயன் உண்டாகும்.

பாடல் 11:
மிக்க வல்லமை உடையவருக்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கத் துணை வேண்டும்.

பாடல் 12:
உருவத்தின் பெரியவர் குணத்தில் சிறியவராதலும், உருவத்தில் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு.

பாடல் 13:
கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் காட்டிலுள்ள  மரத்தினும் கடையாவர்.

பாடல் 14:
கல்லாதவன் கற்றவனைப் போல நடித்தாலும் கற்றவன் ஆகான்.

பாடல் 15:
தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும்.

பாடல் 16:
அடக்கமுடையவரது வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் .

பாடல் 17:
வறுமை வந்த பொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உண்மையான உறவினராவர்.

பாடல் 18:
மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார், கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராவார்.

பாடல் 19:
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும் விதிப்பயன் இன்றி அனுபவிக்க இயலாது.

பாடல் 20:
உடன் பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு.

பாடல் 21:
நற்குண நற் செய்கைகளையுடைய மனைவி இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு: இல்லையேல் காடாகும்.

பாடல் 22:
செய்தொழில்கள் ஊழின்படியின்றி அவரவர் நினைத்தபடி முடியா.

பாடல் 23
கோபத்தினால் பிரிந்த கீழோர் எக்காலத்தும் கூடார். சான்றோர் அப்பொழுதே கூடுவர்.

பாடல் 24:
கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்பு செய்வர்.

பாடல் 25:
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட ஒழுகுவர்.

பாடல் 26:
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு, மன்னனைவிட கசடறக் கற்றவன் சிறப்புடையவன்.

பாடல் 27:
கல்லாதவர்க்கு கற்றவர் சொல்லும், பாவிகளுக்கு அறத்தினாலும், கணவனுக்குப் பொருத்தமில்லா மனைவியாலும் துன்பம் உண்டாகும்.

பாடல் 28:
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனவலிமை குன்றார்.

பாடல் 29:
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையானவையல்ல.

பாடல் 30:
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர்.

ஒப்புமைப்பாடல்கள்:  
நான்மணிக்கடிகை:
பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான  நான்மணிக்கடிகையின் ஒருபாடல் மூதுரை பாடலுடன் முழுவதும்  ஒன்று படுகின்றது;
   
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்
நான்மணிக்கடிகை-பாடல் 85
           
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்
மூதுரை-பாடல் 27

புறநானூறு:
சங்ககால  ஒளவையார்  அதியமான் மீது கோபம் கொண்டு எழுதிய புறநானூற்றுப் பாடல் மூதுரையின் 26 ம் பாடலுடன் ஒப்புமை பொருளாக அமைந்துள்ளது;

...மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.
புறநானூறு-பாடல் 206

மன்னனு  மாசறக்  கற்றோனுஞ்  சீர்தூக்கின்
மன்னனிற்  கற்றோன்  சிறப்புடையன்  -  மன்னற்குத்
தன்தேச  மல்லாற்  சிறப்பில்லை  கற்றோற்குச்
சென்றஇட  மெல்லாம்  சிறப்பு.
மூதுரை-பாடல் 26

திருக்குறள்:
திருக்குறளின் பொறையுடைமை குறள், மூதுரையின் 30ம் பாடலின் கருத்துக்கு இசைவாக அமைந்துள்ளது;

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள்-151

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
மூதுரை-பாடல் 30

வெற்றிவேற்கை: 
வெற்றிவேற்கை  (நறுந்தொகை) பாடலின் வரிகளின் கருத்தும் மூதுரை 4ம் பாடல் கருத்தை  ஒட்டி அமைந்துள்ளது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
வெற்றிவேற்கை  பாடல் (23-27)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
மூதுரை-பாடல் 04

மூதுரை காட்டும் நெறி:
பொதுவாக கடவுள் வாழ்த்துப் பாடலில் நூலின் ஆசிரியரின் சமயம் அறியப்படும். ஆனால் சில நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பவரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் விநாயகக் கடவுளை வணங்குவதாக இதுகாரும் அறியப்பட்டு வந்துள்ளது.   ஆனால் தும்பிக்கையான் என்ற ஒரு சொல்லைக் கொண்டு இந்நூல் சமயத்தைக் காண இயலாது. ஒளவையார் எழுதியதாக அமைந்துள்ள விநாயகர் அகவல் அத்தகைய எண்ணத்தை விதைக்கின்றது.

பிற பாடல்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியரின் உண்மை நெறி அறியப்பட வேண்டும். மூதுரையின் பாடல்கள் உலகப்பொதுமறை போல் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளைப் போதிக்கின்றது.
ஆயினும்;

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

மேற்காட்டிய 4 பாடல்கள் ஆசீவகர்களின் வினை விதிக்கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது .

வாழ்வில் ஒருவன் ஒரு பொருளைப் பெறுவதோ, ஒரு பொருளை இழப்பதோ, வாழ்வில் எதிர் கொள்ளப்படும் இடையூறுகளோ, சேர வேண்டிய இடத்தைச் சேருவதோ, வாழ்வில் வரும் துக்கங்களோ, சுகங்களோ, இவை மனிதனை விட்டு நீங்குவதோ, பிறப்பதோ, சாவதோ எல்லாம் முன்னரே நியமிக்கப்பட்டபடி தான் நடக்கும். அதை வேறெந்த வழியிலும் மாற்ற முடியாது. விதியின் வலுவான தாக்கம் மனித வாழ்வில் இருப்பதால், எந்த நிகழ்வுமே மனிதனைப் பாதிக்கக் கூடாது என்பது ஆசீவிகர் கொள்கையாகும் எனும்  முனைவர்  ர. விஜயலக்ஷ்மி அவர்களின் விளக்கம் மூதுரையின் பாடல்களோடு பொருந்தி வருகின்றது.

ஆசீவகம் குறித்து ஆய்வு செய்த முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் ஆதிசங்கரன் திருநிலை மற்றும் அறப்பெயர் சாத்தன் குறித்த விளக்கங்கள் மூதுரையின் கடவுள் வாழ்த்து பாடலுடன் பொருந்திப் பார்க்க வேண்டியதாகும்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மாமலராள் - திருநிலை: 



ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  எனும் நூலில் ஆதி. சங்கரன்  பின்வரும் விளக்கம் அளிக்கின்றார்;
ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண்ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும். மூதுரையில் வழங்கப்பெறும்  மாமலராள், திருவிடந்தை எனும் சொற்கள் மாதங்கியைக் குறிக்க வாய்ப்பு உண்டு. 

தும்பிக்கையான்:



அறப்பெயர் சாத்தன் எனும் அய்யனார் தான் மற்கலி கோசளர் என்பது  முனைவர் க. நெடுஞ்செழியன் "  ஆசீவகமும் ஐயனார் வரலாறும்"   எனும் நூலின் முடிவாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் தும்பிக்கையான் என்பது யானையை வாகனமாய் கொண்ட சாத்தனைக் குறிக்க வாய்ப்பு உண்டு.

முடிவுரை:
ஆசீவகரின் வினைவிதிக்கொள்கையை பின்பற்றி வரும் பாடல்கள் இடம்பெற்று இருந்தாலும் மூதுரை திருக்குறள் போன்று  பொதுவான அறநெறி நூலாகும் .



சான்றாதாரங்கள்: 
1)  ஒளவையார் அருளிய மூதுரை ந.மு .வேங்கடசாமி நாட்டார்
2)  தமிழ் இணையக் கல்விக் கழகம் - http://www.tamilvu.org/
3)  வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும், முனைவர் ர. விஜயலக்ஷ்மி
4)  ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  ஆதி. சங்கரன்
5)  ஆசீவகமும் ஐயனார் வரலாறும்  முனைவர் க. நெடுஞ்செழியன்


________________________________________________________________________
தொடர்பு: நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார்  (jaisureshkumar@gmail.com)



1 comment:

  1. ஔவையாரும் ஆசீவகர் என்பதில் மாற்று கருத்தில்லை.

    ReplyDelete