Thursday, June 21, 2018

கண்டசாலா

கண்டசாலா
(GHANTASALA)

— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
கண்டசாலா. இந்தப்பெயரைக் கேட்டதும் இன்றைய இளைஞர்களின் நினைவில் வருவன எவை? தெரியாது. ஆனால், 1950-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்கு உடன் நினைவில் வருவது, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் பின்னணி பாடிய பாடகர் கண்டசாலாவின் பெயர் என்பதில் ஐயமில்லை. தேவதாஸ் படம் முதற்கொண்டு அவர் பாடியது நினைவுக்கு வருகிறது. அவிநாசியில், நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, நாங்கள் குடியிருந்த வீதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் என்னவென்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவர் கண்டசாலாவின் பாடல்களை அழகாகப் பாடுவார். எனவே, எங்கள் வீட்டில் அவரை கண்டசாலா என்னும் பெயரிலியே அடையாளப்படுத்திக்கொண்டோம்.

பாடகர் கண்டசாலாவின் பெயர், வழக்கமான ஒரு பெயர் அல்ல. அது, ஆந்திராவில் உள்ள ஓர் ஊரின் பெயர். பெற்றோர் தம் குழந்தைகளுக்குத் தம் சொந்த ஊரின் பெயரை அல்லது தமக்குப் பிடித்த இறைவன் எழுந்தருளியிருக்கும் ஊரின் பெயரை வைப்பது வழக்கம். அவிநாசி, சிதம்பரம், பழநி, காசி, குற்றாலம் போன்று பல பெயர்கள் உண்டு. பாடகர் கண்டசாலாவுக்கு, கண்டசாலா சொந்த ஊராயிருக்கலாம். ஆந்திராவில், கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர், மசூலிப்பட்டிணத்துக்கு அருகில் உள்ளது.

“எபிகிராபியா இண்டிகா” (EPIGRAPHIA INDICA):
இந்தியத்தொல்லியல் ஆய்வுத் துறையினரின் (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA) வெளியீடான மேலே குறித்த நூல்களில் ஏதேனும் ஒன்றை இணையவழி பார்ப்பதுண்டு. அவ்வாறு ஒரு தொகுதியைப் பார்க்கும்போது, “கண்டசாலாவில் பிராகிருதக் கல்வெட்டுகள்”  என்னும் தலைப்பு ஈர்த்தது.

பிராகிருதம்:
பிராகிருதம் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றிப் படிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் இருக்கும் ஜம்பை என்னும் ஊரில் கண்டறியப்பட்ட பிராமிக்கல்வெட்டு ஓர் அரிய கல்வெட்டு எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டின் சிறப்பு, இது சங்க இலக்கியங்கள் குறிக்கும் குறுநில மன்னர்களுள் ஒருவனான அதியமான் மரபினன் பெயரைத் தாங்கி இருப்பதாகும். கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:

ஜம்பை பிராமிக்கல்வெட்டு – பாடம்:
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்தபளி  

இக்கல்வெட்டில் உள்ள “ஸதியபுதோ” என்ற சொல், மௌரியப்பேரரசன் அசோகனின் கிர்னார் கல்வெட்டில் இடம்பெறுகிறது. “புத” என்பது பிராகிருதச் சொல். ”ஸதிய” என்பது “அதிய” என்பதன் தொல்திராவிட வடிவம். எனவே, ஸதியபுத என்பது அதியமானைக்குறிக்கும். ”ஸதியபுத” என்னும் பிராகிருதச் சொல் எவ்வாறு உருவானது எனப் பார்ப்போம். அதியமான் என்னும் சொல்லில் ‘அதியன்’ என்பது அரசனின் குடிப்பெயர். ”மான்’ என்னும் ஒரு பின்னொட்டு, தமிழில் மன்னர் குடிப்பெயரோடு வழங்கும் மரபு இருந்துள்ளது. சேரன், சேரமான் ஆகிறான்; தொண்டையர் குடியைச் சேர்ந்தவன் தொண்டைமான் ஆகிறான். மலையர் குடியைச் சேர்ந்தவன் மலையமான் ஆகிறான். (ஆனால், சோழர், பாண்டியர் யாருக்கும் இந்த ‘மான்’ பின்னொட்டு வழங்கவில்லை என்பது கருதத்தக்கது.) ’மான்’ என்னும் இச்சொல்லின் உண்மையான பொருள் என்ன என்பது ஆய்வுக்குரியது. ‘மான்’ என்பது ‘மகன்’ என்னும் சொல்லின் திரிபு என்பதாகப் பழங்காலத்தில் வழங்கியிருக்கலாம் என்று கருதவேண்டியுள்ளது. சொல் திரிந்திருந்தாலும், ‘மகன்’ என்னும் சொல் பின்னொட்டாக வழங்கும்போது, புதல்வன் என்னும் பொருளைக் கொண்டிராது என்று கருதலாம். பல பொருள் சுட்டும் ஒரு சொல் என்னும் தமிழ் இலக்கணப்படி, அச்சொல்லுக்குப் புதல்வன் என்னும் பொருளும் இருந்துள்ளது. பின்னொட்டுச் சொல்லான ‘மகன்’ என்பது பிழையாகப் ‘புதல்வன்’ என்னும் பொருளில் ஆளப்படும்போது அதியமான், அதியமகன் ஆகிறான். புதல்வன், பிராகிருதத்தில் “புத” என்றாகும். எனவே, அதியமகன், ஸதியபுத என்றாகிறது. அதே பொருளில், ”ஸதியபுத” என்னும் பிராகிருத ஒலியமைப்பு, சமற்கிருதத்தில் “ஸதியபுத்ர” என்றமையலாம். ஆனால், சமற்கிருதத்தில் இதைச் “ஸத்யபுத்ர” எனப்பெயர்த்திருப்பது பிழையானதே. ”ஸதிய’ என்னும் ஒருவரின் இயற்பெயர், “ஸத்ய” (சத்தியம் அல்லது உண்மை என்னும் பொருளில்) சமற்கிருதத்துக்குச் சென்றுள்ளது. அதியமான் -> ஸதியபுத என்னும் விளக்கம் தொல்லியல் துறையின் நூலில் உள்ளது. இந்த அளவில்தான் பிராகிருதம் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. எனவே, கண்டசாலா ஊர்க்கல்வெட்டு, பிராகிருதக் கல்வெட்டு என்றதால், பிராகிருதம் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம் என்ற ஆவலே மேலே குறிப்பிட்ட ஈர்ப்பை ஏற்படுத்தியது.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  மொழிபெயர்ப்பில் பொருளை உணராது பிழையான சொற்களை உருவாக்குதல் அன்று முதல் இன்று வரை நிகழ்வதுவே. எழுத்தாளர் மா.லெ. தங்கப்பா அவர்கள், நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டார்: குடமுனை(குடமூக்கு) என்னும் தமிழ்ச் சொல் குடக்கு+முனை என்பது; மேற்கு முனையைக் குறிப்பது. அதனைக் குடம்+முனை எனக்கொண்டு கும்பகோணம் என்று தவறுதலாக வடமொழியாளர்கள் குறித்தனர். இதுபோலவே, மரைக்காடு (ஒருவகை மானினம் வாழும் காடு) என்பதைப் பிழையாக மறைக்காடு எனப்பொருள் கொண்டு, வேதாரண்யம் என வடமொழியாளர்கள் குறித்தனர். விருத்தாசலத்தின் மெய்யான சொல் பழமலை (பழம்+மலை). பழங்கள் நிறைந்த மலை. பழமையான மலை அல்ல. குயில்மொழி அன்னை என்னும் இறைவியின் அழகிய தமிழ்ப்பெயர், கோகிலாம்பாள் என்றாயிற்று. மாற்றவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? அனைத்தும் திணிப்பால் நேர்ந்ததே. புகழ்பெற்ற READER's DIGEST என்னும்  ஆங்கில இதழ், “இடியாப்பம்” என்பதை ‘THUNDER CAKE‘ என மொழியாக்கம் செய்துள்ளது அறியாமையே அன்றி வேறென்ன?)

கண்டசாலா:
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கண்டசாலா, ஆந்திராவில், கிருஷ்ணா மாவட்டத்தில் மசூலிப்பட்டிணத்துக்கு அருகில் அமைந்துள்ள ஊர்.  கி.பி. 12-ஆம் நூற்றாண்டில், சோழர் ஆட்சியின் கீழ், இவ்வூர் சோழபாண்டியபுரம் என்னும் சிறப்புப் பெயரையும் கொண்டிருந்தது. இங்குள்ள ஜலதீசுவரசுவாமி கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன. கல்வெட்டுகள் தெலுங்கு மொழியில் அமைந்துள்ளன. ஒன்று கி.பி.1144-ஆம் ஆண்டையும், மற்றொன்று கி.பி.1159-ஆம் ஆண்டையும் சேர்ந்தவை. முதல் கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்கன் காலம்; மற்றது இரண்டாம் இராசராசன் காலம்.

கண்டசாலா ஊரில் பௌத்தத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டு அங்கு ஒரு பௌத்த மையம் இருந்துள்ளது. தூபி ஒன்றும், அதைச்சுற்றிலும் அரண் போன்ற அமைப்பொன்றும் அமராவதியில் இருந்தது போல இங்கும் இருந்துள்ளது. பாஸ்வல் (BOSWEL) என்பவர் கண்டசாலாவின் தொல்லியல் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். 1870-71-இல் அலக்சாண்டர் ரே (ALEXANDER REA) இங்கு அகழாய்வு செய்து தூபிக் கட்டுமானத்தை வெளிப்படுத்தினார். தற்போது 70 அடி உயரமுள்ள, புத்தரின் மகாபரிநிர்வாணத் தோற்றத்தில் ஒரு நினைவுக்கட்டிடம் எழுப்பப்படுகிறது.

கண்டசாலா -  அகழாய்வுப் புலம்

கண்டசாலா -  அகழாய்வுப் புலம் - சுற்றுலாத்தலமாக

கண்டசாலா-அகழாய்வில் கிடைத்த புத்தர் சிலை


கண்டசாலா பிராகிருதக்கல்வெட்டு:
அழிந்துபட்ட நிலையில் எஞ்சியிருந்த ஒரு பௌத்த சேதியத்தில் (CHAITYA) கிடைத்துள்ள ஒரு தூண் கல்வெட்டே நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இக்கல்வெட்டைத் தொல்லியல் துறை அறிஞரான டாக்டர். சாப்ரா (Dr. B. Ch. CHHABRA)  என்பவர் 1947-48 கால கட்டத்தில் கண்டறிந்தார். கல்வெட்டின் பாடம் பின்வருமாறு :

கல்வெட்டின் பாடம்:
1         சித4ம் உக2ஸிரிவத4மாநே க1ண்ட1க1ஸோல வத2வேந
2         த4ம்ம வாநிய பு1தே1ந பு3தி4ஸிரி க3ஹபதி1நா (இமாம்)
3         ஸேல மண்ட3போ1ஸ-க3ந்த4கு1டி1 வேதி1க1 தோ1ரணோ கா1ரிதோ1தி1

இதன் விளக்கம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டவாறு:
Success.   At ukhasiriva(d)dhamana  the stone mandapa with a gandhakuti , a railing (vetika) and a torana was caused to be made by the householder Bu(d)dhisiri, the son of Dhamma vaniya  a resident of kantakasola.

கல்வெட்டின் எழுத்துகள் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுளதைக் காண்க
கல்வெட்டின் பார்வைப்படி (EYE COPY) - கட்டுரை ஆசிரியர் விளம்பியது


விளக்கங்கள்:
கல்வெட்டு சித்3த4ம் என்று தொடங்குகிறது. கல்வெட்டுகள், மங்கலச் சொற்களுடன் தொடங்குவது மரபு. தமிழகக் கல்வெட்டுகளில் பெரும்பாலும் “ஸ்வஸ்திஸ்ரீ’ என்னும் தொடக்கச் சொல்லைக் காணலாம். இச்சொல், ஸ்வஸ்திக, ஸ்ரீவத்ஸ என்னும் இரு சின்னங்களின் கூட்டுச் சொல். தமிழ்க்கல்வெட்டுகள் சிலவற்றில், “நன்மங்கலம் சிறக்க” என்று காணப்படுவதும் உண்டு. வடமொழிச் சார்புடைய கல்வெட்டுகளில், ஸ்வஸ்திஸ்ரீ, சித்தம், ஜிதம்பகவத, திருஷ்டம் ஆகிய பல சொற்கள் இடம்பெறும். சித்தம் என்பதற்கு வெற்றி என்பது பொருள்.

உகசிரி வத்தமான(ம்) என்னும் இந்த இடத்தில் வேதிகை, தோரணம் ஆகிய அமைப்புகளோடு கூடிய  கல் மண்டபம் கட்டப்பட்டது. இதை, கண்டகசோலா என்னும் ஊரைச் சேர்ந்த தம்ம வாநிய(ன்) என்பவனது மகன் புத்திசிரி என்பவன் செய்வித்தான் என்பது இக்கல்வெட்டு கூறும் செய்தி. ஸேல மண்ட3போ1ஸ என்பது கல் மண்டபம் என்பதைக் குறிக்கும். “சிலா”  என்னும் சமற்கிருத வடிவம்; ”ஸேல’  என்பது பிராகிருத வடிவம்; சமற்கிருதச் சொல்லை அதே ஒலிப்புடன் தமிழ்ச் சொல் போல நாம் “சிலை’ என வழங்குகிறோம். சில் - > சிலை; சில் - . சிற்பம். தமிழகக் கல்வெட்டுகளிலும், “சிலா லேகை” என்னும் சொல்லாட்சி உண்டு. கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகளைக் குறிக்கவந்தது.

சித்தம், வத்தமான, புத்திசிரி  ஆகிய சொற்களில் “த்”3  எழுத்து, பொறிக்கப்படாமல்  விடப்பட்டுள்ளது. வர்த்3த4மான(ம்) என்பது ஊரைக்குறிக்கும் ஒரு சொல்; வர்த்தமான என்பது பிராகிருதத்தில் “ர’கர ஒலி இழந்து நிற்கும். இங்கு உகஸிரிவத்தமான என்பது ஊர்ப்பெயர். இது கண்டசாலா ஊரின் பழம்பெயர். கண்டசாலா என்னும் பெயரின் பழமையான ஒலிப்பும் கண்டகசோல என்பது. எனவே, உக2ஸிரிவத4மாநே க1ண்ட1க1ஸோல என்பது ஊரின் முழுப்பெயரையும் குறித்தது. அடுத்து, இந்த ஊரில் வாழ்கின்ற தம்ம வாநியன். வாழ்கின்ற என்பது வசிக்கின்ற, வதிகின்ற என வேற்று வடிவங்களையும் பெறும். இதைக் குறிக்க வத2வேந என்னும் பிராகிருதச் சொல் வந்துள்ளது. தம்ம வாநியனின் மகன் புத்திசிரி என்பவன்; இது,  த4ம்ம வாநிய பு1தே1ந பு3தி4ஸிரி என்று குறிப்பிடப்படுகிறது. க3ஹபதி1 என்பது the householder என்று பெயர்க்கப்பட்டுள்ளது. க3ந்த4கு1டி1 வேதி1க1 தோ1ரணோ என்பன கட்டிடக் கலைச்சொற்கள். கா1ரிதோ1தி1 என்பது ’செய்வித்தான்’ ஆகலாம்.

கல்வெட்டின் சிறப்புகள்:
கல்வெட்டு கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிஞர் பூலர் (Dr. BUHLER) கருதுகின்றார்.  கல்வெட்டின் எழுத்துகள், ஆந்திராவின் நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்ய பேட்டை ஆகிய இடங்களில் உள்ள, இக்‌ஷ்வாகு அரச மரபினரின் காலக் கல்வெட்டுகளின் எழுத்துகளை ஒத்துள்ளன. கல்வெட்டில் சிங்க உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனாவிலும் இதுபோன்ற சிங்க உருவம் காணப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டின் எழுத்துகள், மிக மிக அழகான வடிவத்துடன் எழுதப்பட்டுள்ளன.  ’க’, ‘ர’, ‘ல’ ஆகிய எழுத்துகள், நீள் கோடுகளைக் கொண்டுள்ளன. அறிஞர் பூலர் (Dr. BUHLER), இக்கல்வெட்டு, “WRITTEN IN A VERY ORNAMENTAL KIND OF WRITING“ எனக் குறிப்பிடுகிறார்.

வர்த்தமான என்பது ஊர்ப்பெயரைக்குறிக்கவும், அல்லது ஊரின்பெயருடன் இணைந்தும் வரக்கூடிய ஒரு சொல். வங்காளத்தில், ப3ர்த்3வான் என்று வழங்கும். வரலாற்று ஆசிரியர் தாலமியின் (PTOLEMY) குறிப்பிலும் ப3ர்த3மான என்று காணப்படுகிறது.

கண்டசாலாவின் பழம்பெயர் கண்டகசோல என்று குறிப்பிட்டோம். இதே பெயரைத் தாலமி,  KANTAKOSSYLA என்று குறிப்பிடுகிறார்.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு:
கண்டசாலாக் கல்வெட்டு எழுத்துகள், அசோகன் காலத்து வட இந்தியப் பிராமி எழுத்துகள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டளவில் வளர்ச்சியுற்ற வடிவத்தைக்கொண்டுள்ளன. இக்கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் சாயலைப் பல்லவர் காலக் கல்வெட்டுகளில் காணலாம். அழகான வடிவமைப்பும், நீள் கோடுகளும் பல்லவர் கல்வெட்டுகளிலும் உள்ளன. பல்லவர், வடபுலப்பின்னணியிலிருந்து தமிழகம் வந்தவராதலால், தமிழ் எழுத்துகளையும் வடபுலச் சாயலில் எழுதியிருப்பதாகக் கொள்ளலாம்.

வடபுலச் சாயல் எழுத்துகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

 பட்டதக்கல் விரூபாக்‌ஷர் கோயில் கல்வெட்டு

(இணையதளப்படம்)

பல்லவர் கல்வெட்டுகளில் வடபுலச் சாயல் இருப்பதற்கு எடுத்துக்காட்டாக, வல்லம் கல்வெட்டையும், திருக்கழுக்குன்றம் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு, தமிழ் எழுத்துகளில் கிடைத்த முதல் கல்வெட்டு எனக் கருதப்படுகிறது. மகேந்திர பல்லவனின் காலம் கி.பி.500-530. பல்லவ கிரந்தத்தையும் வடபுலச் சாயலில் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு

 (இணையதளப்படம்)

நரசிம்ம பல்லவனின் திருக்கழுக்குன்றம் கல்வெட்டு(பார்வைப்படி)

பல்லவ கிரந்தம்

(இணையதளப்படம்) 

பிராமி எழுத்து கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்தமையும், பின்னர் அது வளர்ச்சியுற்ற நிலையில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் போது வட இந்தியப் பகுதியிலும், தமிழகத்திலும் (தமிழில்) இருந்தமையும் ஓர் ஒப்பீட்டிற்காகக் கீழே தரப்பட்டுள்ளன. வட இந்திய வடிவின் மாற்றம் தமிழகத்தின் வடிவிலிருந்து பெருமளவில் மாறுபட்டுள்ளதைக் காணலாம். 500 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் இது.



துணை நின்றவை:
1. EPIGRAPHIA INDICA - Vol-27.
2. INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS - By C.SIVARAMAMURTI, M.A.
3. ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY-YEAR 1918.
4. THE HINDU-Dt. AUGUST 21, 2017.-VIJAYAWADA EDITION.-ARTICLE by P.SUJATHA VARMA.
5. இணையதளப் படங்கள் 





___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.

No comments:

Post a Comment