Friday, June 22, 2018

அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்

——     கோ. பாலச்சந்திரன்,​ இ. ஆ. ப. (ஓய்வு),
ஆலோசகர், தமிழ் இருக்கை அறக்கட்டளை, U.S.A.



‘அற்றைத் தமிழர் நோக்கும்
இற்றைத் தமிழர் போக்கும்’


ஒரு மனிதனோ ஒரு குழுமமோ அல்லது ஓர் இனமோ, முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டின், அதற்கு முதல்படி தன்னை அறிதல் ஆகும்.

இந்த தன்னை அறியும் முயற்சி, வாழ்ந்து கொண்டிருப்போர் தம் வரலாறு அறியும் போழ்தில் அவர்களை விழிப்புற வைக்கும்; வீழ்ந்து பட்டோமே என்று தளர்ச்சி அடைவோரை, அவர்தம் முந்தைய பெருமைகளை, பீடுநிறை மாண்புநிறை வாழ்க்கையினை நினைவு கூர்ந்து வீறு கொண்டு எழ வைக்கும்.

பல்வேறு அரசியல் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் பல புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழர் என்ற தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள பெரும்பாடு பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், அற்றைத் தமிழரின் நோக்கு என்ன, எதனால் அந்த நோக்கு உலகின்  மிகுந்த உன்னதமான ஓர் இனமாக அவர்களை வைத்திருந்தது என்பதனை ஆய்ந்தால், இற்றைத் தமிழரின் இன்றைய போக்கு என்ன, அது எந்த மாறுதல்களை ஏற்றுக் கொண்டால் அற்றைத்  தமிழர்தம் உன்னத நிலையினை அடைய முடியும் என்பதனை உணர முடியும்.

நம்மைப் பற்றி நாம் அறிவதற்கான பழந்தமிழ் இலக்கியங்கள் ஏறக்குறைய கி மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி பி மூன்றாம் நூற்றாண்டு வரையான காலகட்டங்களில் இயற்றப் பெற்ற பத்துப் பாட்டு எட்டுத் தொகை என்ற பதினெண்மேல்கணக்கு, மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்தாம். 

மேலும், நம் நாட்டு அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுக்கள் இவற்றோடு, பிற நாட்டுக் கல்வெட்டுக்களும் அகழ்வாராய்ச்சிகளும் சில ஆயிரம் ஆண்டுகளாய் தமிழர் நடத்திய கடல் பயணங்கள் மற்றும் கடல் வழி வணிகத்தினைப் பற்றிக்கூறும் தகவல்கள் ஆகும். இவையனைத்தும் அற்றைத் தமிழரின் நோக்கினையும் அந்நோக்கிற்கிணங்க நடந்த அவர்களது மாண்புமிகு வரலாற்றினையும் விரிவாக எடுத்துக் கூறும்.

கையில் உள்ள நூல்களிலிருந்து சில உதாரணங்களின் மூலம் அற்றைத்   தமிழரின் நோக்கினை - வாழ்வாங்கு வாழ்ந்த முறையினைப் பார்ப்போம்.

சங்ககால இலக்கியங்கள் காதலையும் போர்த்திறத்தையும் மட்டுமே சொல்லி இருப்பதாகப் பரவலாக உள்ள ஓர் கருத்து கற்றறிந்தவர்களால் வன்மையாக மறுத்துக்   கூறப்படவில்லை.

புறநானூற்றை மட்டுமே பார்த்தால் கூட, மனித மாட்சி, நீர் மேலாண்மை, கற்றவர் சிறப்பு, மழலையர் போற்றல், கல்வியின் மேன்மை, முறையாக அரசாளும் நெறிமுறைகள் என்ற பல கோட்பாடுகள் குறிப்பிடப் பெற்று இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாய், அனைத்துலகும் அனைத்து மானிடரும்  எம் அங்கம் என்று உணர்ந்து தெளிந்ததும் அற்றைத் தமிழர்தம் போக்காய், வாழ்வியல் நெறிமுறையாய் இருந்ததுவும் கூறப்பட்டிருக்கிறது.

மனித மாட்சி:
'மூத்தவர்களையும் சிறுவர்களையும் இலவசமாக இக்கரையிலிருந்து அக்கரை கொண்டு சேர்க்கும் ஓடம் போல்' என் பாட்டின் நாயகன் எல்லார்க்கும் உதவும் கொள்கை கொண்டவன் என்று கடும்பனூர் கிழான் பற்றிப் பாடும் போது நன்னாகனார் உரைப்பது (புறநானூறு 381) அற்றைத் தமிழரின் பண்பு நலனுக்குச் சான்று.

நீர் மேலாண்மை:
வான்சிறப்பினைப்பற்றி வள்ளுவர் பாடும் முன்பே அதனினும் ஒருபடி மேலே போய், 'மழையை மட்டும் நம்பி வாழும் புன்செய்நிலங்களில் விளைச்சல் உறுதி இல்லை; எனவே நிலைத்த நீர் வளத்தைப் பெருக்குவது மன்னனின் முதல் கடமை' என்று குட புலவியனார் பாண்டியன் நெடுச்செழியனுக்கு அறிவுறுத்துகிறார் (புறநானூறு 18).

கற்றார் சிறப்பு:
‘பகைவரிடமிருந்து என் மக்களைப் பாதுகாக்காவிடில் வரலாறு என்னை வசை பாடட்டும்’ என்று கூறிய தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அதற்கும் மேலாய், 'புலவர் பெருமக்கள் என்னைப் புகழ்ந்து பாடும் பெருமையை நான் இழப்பேனாக' என்று கூறினான். இதுதான் அற்றைத் தமிழர் கற்றோர்க்கு  அளித்த சிறப்பு. 

‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பார்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைக என் நில வரை...’
என்பது பாண்டியன் பாடல்(புறநானூறு 72).

முறையாய் வரி பெறுக; கொடுங்கோல் தவிர்க்க ‘அறுவடை செய்த நெல்லை யானைக்கு உணவாய் அளித்தால் ஒரு மா நிலத்து நெல் பல நாள் உணவாய் ஆகும் (3 மா = 1 ஏக்கர்). ஆனால் யானை வயலில் நுழைந்ததென்றால், வயலில் விளைந்த நெல்லில் யானை வாயில் சென்றதை விட, அதன் காலால் அழிவது தான் மிகுதி. முறையாய் வரி வாங்கும் மரபு தொலைத்து, பெரும் தொகை வரி பெற முயலும் அரசன் யானை கால் பட்ட நிலம்போல் அழிவான்’ என்று பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு ஆற்றும் அறிவுரை (புறநானூறு 184)  கற்றோர் வல்லமை மிக்க மன்னனுக்குத் துணிந்து அறிவுரை கூறும் மறவராய்த் திகழ்ந்த சமுதாயத்தைக் காட்டுகிறது.

கல்வியின் பெருமை:
'எப்பாடு பட்டேனும் எவ்விதச் சூழ்நிலையிலும் கற்றலைக் கைவிடல் ஆகாது.

தன் மக்களில் கற்றவனைத்தான் தாய் மதிப்பாள்; ஒரு குடியில் பிறந்தோரில், மூத்தவனை ஏற்காது, கற்றவனைத்தான் அரசு ஏற்கும்; நால் வருணங்களினுள் கீழ் நிலையிலுள்ளோர் கற்றவர் ஆயின், மேல் நிலையினரும் அவர்க்குப் பணிவார்’ என்றெல்லாம் உரைக்கும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் (புறநானூறு 183) கல்விக்கு ஆள்வோர் கொடுத்த சிறப்பினைச் செப்புகிறது.

மழலையர் போற்றல்:
அதியமான் நெடுமான் அஞ்சி தன் கவிதையை ரசிப்பதை தன்னடக்கமாய்க் கூற வந்த  ஒளவையார், ‘குழந்தையின் மழலையில் யாழிசையின் இன்பம் இல்லை; காலத் தெளிவில்லை; பொருள் ஏதுமில்லை; ஆனாலும் அவையனைத்தினையும் விடப் பெரிதாய் அது மழலையின் தந்தைக்குத் தருவது பேரின்பம். அதுபோல்தான் அதியமான் என் கவிதையில் கட்டுண்டு கிடப்பதும்’ என்ற பாடல் (புறநானூறு 92) அற்றைத் தமிழர் மழலையரை நேசித்த மாண்புதனைக் காட்டுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கில் சிலம்பையும் குறளையும் மட்டுமே நோக்கினால் கூட அற்றைத் தமிழரின் ஆயிரம் ஆயிரம் நெறிமுறைகள் காணக் கிடக்கின்றன. காவியத்தின் துவக்கத்திலேயே இளங்கோவடிகள் இயற்கையின் கொடைகளும் நாம் வாழும் நகரமுமே நாம் போற்ற வேண்டிய முதன்மைகள் என்பதைக் கோடிடுகிறார்:

‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்’.

வள்ளுவம் ஆயிரம் ஆயிரம் நெறிமுறைகளைச் சுட்டிக் காட்டுகிறது:

‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
‘இரந்து உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
​கெடுக உலகி யற்றியான்’
‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை’
‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்’
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’
இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் கூறலாம்.

அற்றைத் தமிழரின் நோக்கின் சாரம் கணியன் பூங்குன்றன் ஒருவனின் பாடலில் மிளிர்கிறது (புறநானூறு 192):
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரல் வாரா...
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’.
எனவே அற்றைத் தமிழர் கடல் கடந்து சென்று பொருள் சேர்த்தனர்; அதற்கும் மேலாய் மாண்புமிகு புகழ் சேர்த்தனர்.

      ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
       ஊதியம் இல்லை உயிர்க்கு’
என்ற வள்ளுவ இலக்கணத்தைப் பின்பற்றிய இலக்கியமாய் அவர்தம் வாழ்வு அமைந்திருந்தது. மனித நேயம் மனித மாண்பினைப் போற்றுதல் மானிடத்தை முன்வைத்தல் அவர்தம் ஆதி சுருதியாய் ஆதி நாதமாய் விளங்கியது. 

அதன்பின் மானிடத்தைப் பாடிய, மனித நேயத்துக்கும் மேலாய் பிரபஞ்ச நேயத்தைக் கூறிய சான்றோர் தோன்ற ஏறத்தாழ 2000 ஆண்டுகள் தேவைப் பட்டன.

தமிழுக்கு இனிமையும் செழுமையும் சேர்த்த கம்பரும் மூவர் உள்ளடக்கிய நாயன்மாரும் ஆண்டாள் உள்ளடக்கிய ஆழ்வார்களும் இறைவனை முன்னிலைப் படுத்தியவர்கள்.

ஆம். அற்றைத் தமிழரின் தொடர்ச்சி பாரதியும் வள்ளலாரும் மட்டுமே ஆவர்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் மனிதன் அடைய வேண்டிய மேன்மையை உணர்த்தினார்.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்’
என்று முழங்கிய பாரதி, அற்றைத் தமிழர் போல் இற்றைத் தமிழரும் பொருட் செல்வத்தில் உயர வேண்டியது இன்றியமையாதது என்றும் உரைத்தான்:
‘கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’
தமிழர் வரலாற்றில் மிகக் கொடுமையான ஒரு தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இற்றைத் தமிழர் தாய்வீட்டிலும் தாம் அனாதைகளாக்கப் படும் சூழ்நிலைகள் உருவாகி உரம் பெறுவதை முழுவதும் உணரா அறிவிலிகளாய் இருக்கின்றார்கள்.

தமிழர்க்கென இருக்கும் மிகப் பெரிய அடையாளம் அவர்தம் மொழி. அம்மொழிக்கு ஊறு விளைவிக்க ஊரார் தேவையில்லை; இவரே போதும் என்ற அளவிற்குத் தமிழை மழலையர் பள்ளி துவங்கி முதுகலைப் படிப்புவரை ஒதுக்கி வைக்கும் அவலம் நடைபெறுகிறது. இற்றைத் தமிழரின் போக்கு வழியறியாப் போக்காய்  சென்று கொண்டிருக்கிறது.

பகுத்தறியும் பாங்கினை இழந்து மொழிப் பற்றினை விட மொழி உணர்ச்சியே அதிகம் உள்ள ஒரு கூட்டமாய் தமிழினம் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மறைக்கப்பட்டது வேதம்; அதனால்தான் அதை ‘மறை’ என்று பெயரிட்டனர் தமிழர். திறந்த நூலாய்த் திகழ்வது திருக்குறள். அதனை ‘உலகப் பொது மறை’ என்று எவரோ சொல்ல, இன்று வரை அதைக் கிளிப்பிள்ளைகளாய் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழ்க்குடி.

பதினெண்மேல்கணக்கில் உள்ள ஒரு நூலால் பாடப் பெற்ற சேரன் செங்குட்டுவனுக்கு, அந்த நூலிலிருந்து காலத்தால் சில நூற்றாண்டுகள் பிந்திய சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ உடன் பிறப்பாய் இருக்க இயலுமோ?

அமராவதி அம்பிகாபதி கதை போல் உள்ள இந்த கர்ண பரம்பரைக் கதையையும் வரலாறாய் எண்ணி இன்றும் வழிமொழிவது இற்றைத் தமிழர் போக்கு.

கடல் கடந்து கண்டங்கள் பல சென்று தம் வணிகத் திறத்தால் உலக வணிகத்தில் உன்னதம் பெற்ற தமிழர், இந்தியா என்ற நாடு உருவானபின் உள்நாட்டிலேயே  ஒரு துளியாய் ஒடுங்கி விட்ட நிலைகண்டு கொதித்த பாரதிதாசனின் நெருப்புதான்,
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’
என்ற இறவா வரம் பெற்ற வரிகள்.

இன்று தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் நிறைந்த காலகட்டத்தில்
‘எங்கள் வாழ்வால் எங்கள் வளத்தால் இனி
என்றென்றும் மங்காது எம் தமிழ்’
என்ற புது மொழி பயின்றாலன்றி;
அப்புது மொழியை நடைமுறைப் படுத்தினால் அன்றி;
உலக நேயம் கற்பித்த அற்றைத் தமிழராய் வாழ்வோம்; உள்ளூரிலேயே உருவாகும் வேற்றுமைகளைக் களைவோம்  அல்லது தவிர்ப்போம் அல்லது ஒதுக்குவோம் என்று உறுதி பூண்டாலன்றி,
அற்றைத்  தமிழர்  நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும் எதிர்த் திசைப் பயணமாகி விடும்.
 
ஒன்று படுவோம்; நம் முன்னோர் சொன்ன வழி நடப்போம்; தமிழராய் வாழ்வோம்; தமிழை வளர்ப்போம்; நம் அனைவருக்கும் நமக்குள் வேற்றுமை  இலாப் பெருஞ் சொத்து தமிழ் என்பதை உணர்ந்து தமிழர் என்ற உணர்வை ஓர் உணர்வாக்குவோம்.

21 - ஆம் நூற்றாண்டு தமிழர்க்கு தமிழுக்கு புது யுகமாய், புவனியில் தமிழர்தம் புகழ் வளர்க்கும் யுகமாய் மலரும் - நாம் மனது வைத்தால்; நம் போக்கை ஒற்றுமைப் போக்காய் உருவாக்கி அதை, நீடித்து நிலைக்க வைத்தால்.
‘வீரத் தமிழன் வெறி கொண்டெழுந்தான்
உரக்கக் கேட்டான் ‘உயிரோ நம் தமிழ்?’
அகிலம் கிழிய ‘ஆமாம்’ என்றனர்
‘ஒற்றுமை’ என்றான் ‘நற்றேன்’ என்றனர்’
சொன்னவன் பாரதிதாசன். அதன் வழி நடக்க வேண்டிய காலக்கடமையினை உணர வேண்டியவன் இற்றைத் தமிழன்.






No comments:

Post a Comment