Thursday, November 26, 2020

கல் முகவடிவங்கள் கண்டுபிடிப்பு - துருக்கி

சுபாஷிணி

நீண்டகால மனித குல நாகரித்தின் சான்றுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் துருக்கி சிறப்பு முக்கியத்துவம் பெரும் ஒரு நாடு. பண்டைய தொல் நகரமான Stratonikeia, Muğla பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் இங்கு கல்முகவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரில் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை என அறியப்படுகின்ற இந்த கல்முகவடிவங்கள் பண்டைய தெய்வ வடிவங்கள், விலங்குகள் ஆகியவற்றை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் இதுவரை இத்தகைய 43 கல்முக வடிவங்கள் கிடைத்துள்ளன.

பமுக்காலே பல்கலைக்கழகத்தின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவரும் இந்த ஆய்வு ஒரு திறந்தவெளி அரங்கப் பகுதியில் (Amphitheatre) நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த முகமூடிகள் இக்கலைக்கூடத்தின் வாயில் பகுதி தொடங்கி அமைக்கப்பட வகையில் உள்ளன. மிகப் பிரமாண்டமான முறையில் இந்த கல்முகவடிவங்கள் திகழ்கின்றன. முழுமையான செய்தி: https://www.dailysabah.com/arts/mythological-masks-unearthed-in-turkeys-ancient-city-of-stratonikeia/news?fbclid=IwAR3He9Zngri58Kd69XoVL4JOENzcEsKnJ5Tbjbl75e-4Cro22OjhNPb2kRE
Sunday, November 22, 2020

பாரி நிலையம் செல்லப்பன்

பாரி நிலையம் செல்லப்பன் 

-- கல்பனாதாசன்தமிழ் நூல் பதிப்பாளர்களுள் தலை சிறந்தவர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் சக்தி கோவிந்தன் பெயர் நிச்சயம் முதல் வரிசையில் நிற்கும்.  சக்தி கோவிந்தன்,  பாரி நிலையம் செல்லப்பன், முல்லை முத்தையா மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவரும் பர்மாவில் வாழ்ந்து தாயகம் மீண்ட தமிழர்கள். வை கோவிந்தனும் முல்லை முத்தையாவும் செல்லப்பனுக்கு இன்னொரு வகையில் முன்னோடிகள். தமிழ் நூல்கள் பதிப்பை இந்தியத் தரத்துக்கு உயர்த்திய அவர்கள் செல்லப்பனையும் தமது துறைக்கு ஈர்த்து விட்டார்கள்.

1920 இல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அடைக்கப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்த செல்லப்பன் 10 ஆம் வயதிலேயே பர்மாவில் குடியேறி விட்டார். அங்கே அவரது தந்தையார் வணிகம் செய்து கொண்டிருந்தார். தாம் படித்த  ' கம்பை தன வைசியர் கல்வி க் கழக'த்தில் தமிழ்ப்பற்றும் தேசியக் கண்ணோட்டமும் புகட்டப்பட்டார். பர்மாவில் வசித்த காலத்தில் தமிழோடு ஆங்கிலம், இந்தி, பர்மிய மொழி எனப் பன்மொழியில் தேர்ச்சி பெற்றார். 

விடுதலைப் போராட்ட ச் செம்மல்களை நேரில் தரிசிக்கும் ஆர்வத்தில் 1939 இல் செல்லப்பன், காந்தி அண்ணாமலை என்னும் நண்பருடன் பர்மாவிலிருந்து கிளம்பி இந்தியா வந்தார். வார்தாவில் காந்தி, அலகாபாத்தில் நேரு, சாந்திநிகேதனில் தாகூர், கல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் என எல்லோரையும் சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டு மீண்டும் இரங்கூன் வழி பர்மா திரும்பினார். தமிழில் கையெழுத்துப் போட்ட காந்தியார் எழுதிய வாசகம் -" நீரில் எழுத்தாகும் யாக்கை. "

பின்னர், உள் நாட்டு அரசியல் சூழலால் அகதியாக  43 பேர்களுடன் இந்தியா திரும்புமுன் தாம் நடத்திவந்த புத்தகக் கடையை அங்கிருந்த பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வர நேர்ந்தது. 43 பேரில்  கால் நடையாகவும்  பல்வேறு வாகனங்கள் மூலமும் மாறி மாறி அல்லலுற்று உணவு, உறையுள் தொடர்பான இன்னல்கள் அனுபவித்து ஒருவழியாகத் தாம் ஒருவர் மட்டுமே வெற்றிகரமாக இம்மண்ணை மிதிக்கும் பேறு பெற்றார் என்றும் அன்னார் சரிதை பதிவாகியுள்ளது. 

முல்லை முத்தையாவே செல்லப்பனைப் பதிப்பகத் துறையில் ஆற்றுப்படுத்தியவர். இருவரும் முன்பே பர்மாவில் நண்பர்கள். மண்ணடியில் காவலர் குடியிருப்புக்குப் பக்கம் ஒரு மாடிக் கட்டடத்தில் முதல் தளத்தில் இருவர் பதிப்பகங்களும் இயங்கின. முல்லைக்கும் பாரிக்கும் பெயர்ப் பொருத்தம் உண்டல்லவா. முல்லைப் பதிப்பகம், பாரி நிலையம் இரண்டும் இயல்பிலேயே நட்புக் கொண்டாடின. 

சுத்தானந்த பாரதி எழுத்துகளால் கவரப்பட்டிருந்த செல்லப்பன் பதிப்பகத்துறைக்கு  வந்ததில் வியப்பில்லை. தமிழ்ப் புத்தகாலயம்  கண  முத்தையாவுடன் இணைந்து பாரி புத்தகப் பண்ணை என்னும் கூட்டு நிறுவனத்தையும் உருவாக்கினார். அகிலன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் நூல்களை கண முத்தையா பதிப்பிக்க இவர் விற்றுக்கொடுப்பார். பிறகு தாமே பதிப்புப் பணியில் இறங்கினார். மு வரதராசனின் கள்ளோ காவியமோ தான் விற்பனை உரிமை பெற்ற முதல் நூல். நேதாஜி சொற்பொழிவுகள் அடங்கிய " டில்லியை நோக்கி " மொழியாக்க நூலையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

தொடர்ந்து மு வ நூல்கள் அவரிடமிருந்து வரவே மு வ என்றால் பாரி, பாரி என்றால் மு வ என இருவரும் ஈருடல் ஓருயிர் ஆயினர். மு வ தமது நூல்களைத் தாமே அச்சிட்டு க் கொடுக்க செல்லப்பன் விற்பனை செய்து தருவார் என்பது ஏற்பாடு. நல்லி குப்புசாமி செட்டியார் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல் இது - ' நெசவுத்தொழில் சார்ந்த பட்டுச்செல்வம் என்னும் 300 பக்க நூல் பாரி நிலையப் பதிப்பு (ஆசிரியர் கே எஸ் லட்சுமணன்) ரூ 5 விலையில் எனக்குக் கிடைத்தது. எங்கள் நட்பும் அன்றே முகிழ்த்தது. அந்த நூல் அரிய தகவல் களஞ்சியம். '

ஒரு முறை நூல்கள் வாங்கப் பாரி வந்த வேளை முன்பே மு வ மாடியில் பேசி க் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து அண்ணா படியேறி வந்து மு வ வுடன் அளவளாவ மூவரும் நெருக்கம் கொண்டனர். இதுவும் செல்லப்பனுக்கு வாய்த்த பேறுதான். அடுத்து அண்ணாவின் தம்பிக்கு கடிதங்கள் ( 21 தொகுதிகள் ) பாரி மூலம் நூல்வடிவம் கண்டன. பின்னாளில் தி மு க வரலாறு, மாநிலச் சுயாட்சி போன்ற நூல்களும் பாரி வெளியீடாயின. பரிமளம் தொகுத்த 'அண்ணா தன் வரலாறு ' நூலை நான் பாரியில் தான் வாங்கினேன். அண்ணாவின் கட்டுரைகள் வாயிலாகவே அவர் வரலாறு நிரல்பட அ ந் நூலில் வர்ணிக்கப் பட்டிருக்கும். அது ஒரு புதிய பாணி. 

பாரதி தாசன் நூல்களை முதலில் குஞ்சிதம் குருசாமி பிறகு திருச்சி ராமச்சந்திரபுரம் செந்தமிழ் நிலையம் வெளியிட்டார்கள். மூன்றாம் பதிப்பாளர் செல்லப்பனே. 'அழகின் சிரிப்பு ' தான் செல்லப்பன் மூலம் வெளிவந்த முதல் நூல். கவிஞர் பெற்ற தொகை ரூ 500. அடுத்துப் படிப்படியாக மேலும் 9 நூல்கள் தந்து ரூ 5000 பெற்றுக்கொண்டு புதுச்சேரி பெருமாள் கோவில் தெரு இல்லத்தை வாங்கினார் எனப் புதிய புத்தகம் பேசுது ( சூரிய சந்திரன் சந்திப்பு ) நேர்காணலில் குறிப்பு உண்டு. குறிஞ்சித் திட்டு, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் வரை அனைத்தும் பாரி நிலைய வெளியீடுகள். பிறகு பூம்புகார் பிரசுரம் 1970 களில் மலிவுப் பதிப்பு கொண்டுவந்தது. 

ஞான பீடப் பரிசுக்குப் பாரதி தாசன் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.  தேர்வுக் குழுவில் தெ பொ மீனாட்சி சுந்தரம், சா கணேசன், பெ. தூரன் உறுப்பினர்கள். 'புதிய பார்வை'க்கு அளித்த பேட்டியில்  (ராம்குமார் சந்திப்பு) செல்லப்பன் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஈரோடு தமிழன்பனிடம் கேட்டதில் கூடுதல் விளக்கம் கிடைத்தது. "ஞானபீடப்பரிசு பற்றிப் பாரி செல்லப்பன்,என்னுடைய நெஞ்சின்நிழல் என்னும் நாவலை வெளியிடப் பாரதிதாசன் என்னை அழைத்துக்கொண்டு போனபோதுதான் முதன்முதலாகக்கூறினார்.

பாரி நிலையத்தாரிடம் யார் தம்மைப் பரிந்துரைத்தது என்பதை மட்டுமே பாரதிதாசன் கேட்டார். அவரோடு அவர் இல்லம் திரும்பும்வழியில் என்னிடம் சொன்னார்.  " ஒரு லட்சம் தானே, வரட்டுமே. வீட்டுக்கு அரிசியோ பருப்போ வாங்கிப்  போடுவேன் என்றா நினைக்கிறாய்? பெரிய அச்சுயந்திரம் வாங்கிப் போட்டு உன்புத்தகம் மற்றவன் புத்தகங்களையெல்லாம் அச்சடிச்சுப் போட்டால் தமிழ்ப்பகையே அழிந்துபோகும்" என்றார். இதுகுறித்து நான் எழுதியுள்ள பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 

"இடைப்பட்ட காலத்தில் புரட்சிக்கவிஞர் இறந்துவிடவே பரிசு கிடைக்காமல் போய்விட்டது. ஞானபீட விதிமுறைகள் படி பரிசு படைப்பாளியின் மரணத்துக்குப் பின் வழங்கப்படுவதில்லை. ஆனால் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டமைக்காக, பாரி நிலையத்துக்கு தமிழக அரசு ஒரு லட்சம் அளித்துக் கௌரவம் செய்தது. கவிஞர் மறைவுக்குப்பின் சாகித்ய அகாடமி பரிசு பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்காக வழங்கப்பட்டது. கவிஞரின் துணைவியார் பழனியம்மாள் பெற்றுக்கொண்டார்.

செல்லப்பனின் மகன் அமர்ஜோதி மேலும் சில  தகவல்கள் சொன்னார்.  பாரதிதாசன் 1964 இல் சென்னை பொதுமருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்த வேளை அன்னார் திருவுடலை புதுச்சேரி இல்லத்துக்கு எடுத்துச் செல்லவும் அடக்கம் செய்யவும் செல்லப்பன் ரூ 3000 அளித்து உதவினார். கவிஞரின் மகன் மன்னர்மன்னன் வசம் தொகை தரப்பட்டது. அண்ணா 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோதும் செல்லப்பன் நிதியுதவி செய்துள்ளார். அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் செல்லப்பனின் நெருங்கிய நண்பர். 

800 நூல்களுக்கும் மேலாக வெளியிட்ட பாரி நிலையம் அண்ணாவின் 'தம்பிக்கு கடிதங்கள்' பிரும்மாண்டமான மெரினா கடற்கரை விழாவையும், அமர்க்களமே இல்லாமல் பத்தே பேர்களுடன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட) நடைபெற்ற ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன்  வெளியீட்டு விழாவையும் நேர்காணல்களில் தவறாமல்  நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார். ராஜாஜியும் கி ஆ பெ விசுவ நாதமும் தமக்கு ராயல்டி முக்கியமில்லை, நூல்கள் மலிவு விலையில் எல்லோருக்கும் சேரவேண்டும் என்றுதான் வலியுறுத்துவார்களாம்.! 

மீ ப சோமசுந்தரம், ஆசைத்தம்பி, தென்னரசு, புலவர் குழந்தை, வ சுப மாணிக்கம், அ கி பரந்தாமனார், அ மு பரமசிவானந்தம், தனி நாயக அடிகள் எனப் பல்வேறு எழுத்தாளர்கள்  நூல்கள், புலியூர்க்கேசிகன் உரைகள் ஆகியவற்றை விட்டுவிடாமல் சேர்த்து க் கொள்வார். அவரது பதிப்பாசிரியர் குழுவில் இடம் பெற்ற மே வீ வேணுகோபாலப் பிள்ளை, புலியூர்க்கேசிகன், சண்முகம் பிள்ளை ஆகியோர் பங்களிப்பால் பிழைகளற்ற மொழிச் செம்மையை நூல்களில் கொண்டுவர முடிந்தது எனப் பெருமையுடன் குறிப்பிடுவார். 

'பதிப்பகப் பாரி' என நல்லி குப்புசாமி செட்டியாரால் வர்ணிக்கப்பட்ட செல்லப்பன் பல சொல் சொல்லாமல் சில சொல் சொல்லும் சிக்கனக்காரர். தாமுண்டு தமது பணியுண்டு என்று கருமமே கண்ணாயிருப்பவர். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் அவரிடம் உரிமை பாராட்டலாம். ஸ்டாக் ரூம் சென்று நூல்களை த் தேடவும் அலசவும் அவர்களுக்குச் சலுகை தருவார். பேச்சுக் கொடுத்தால் தயங்காமல் அவர்கள் கேட்கும் ஐய வினாக்களுக்கு உரிய பதில் தருவார். அரிதாக அவரே சில நூல்கள் பரிந்துரை செய்வதும் உண்டு. நிறைய விஷயம் தெளிந்தவர். அறிஞர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்களைப் படித்தவர். 

வெறும் நூற்படிப்போடு நில்லாமல் மனிதர்களையும் படிப்பவர். ஆனாலும் ஒருவகை அறிதுயிலில் ஆழ்பவர். அதாவது மௌனம் காப்பவர். இன்னொரு முக்கியமான செய்தி - நூலாசிரியர்கள், பிற பதிப்பாளர்களுக்குத் தரவேண்டிய ராயல்டியைப் பாக்கி வைக்காமல், தட்டி க் கழிக்காமல் காலாகாலத்தில் கணக்குத் தீர்ப்பவர். 

தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ராஜாஜி, அண்ணா, பாரதிதாசன், மு வரதராசன் ஆகியோர்தம் ஆஸ்தான பதிப்பாளர் அப்பெரியோர்தம் அன்புக்கும் நட்புக்கும் உரிய பண்பாளர் பாரி நிலையம் செல்லப்பன் நூற்றாண்டில் அப்பெருமகனை நினைவு கூர்வோம். அன்னார் வழிப் பல்கிப் பெருகிய புதிய தமிழ், எளிய தமிழ், இனிய தமிழ் உலகெங்கிலும் உள்ள தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் செழித்து நீடித்து நிலைப்பதாக என வாழ்த்தி மகிழ்வோம். 


நன்றி - தினமணி தீபாவளி மலர், 2020 

Thursday, November 19, 2020

நாயக்கர் காலத்து கல்திட்டை மற்றும் நடுகற்கள்

பெருங்கற்கால மரபின் எச்சமாக நாயக்கர் காலத்தில் கல்திட்டை மற்றும் நடுகற்கள் 

மதுரை கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலம் வடகரை புதுாரில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை கோயில் கட்டட கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: கள்ளந்திரி கால்வாய் அருகே கிழக்கு பார்த்தபடி 3 பக்கங்களும் 6 குத்து கற்கள் நட்டு மேலே பலகை கல் மூடிய கல்திட்டை உள்ளது. உள்ளே சிறு கல் ஊன்றி மாலை அம்மன் கோயில் என அப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். அருகில் 20க்கும் மேற்பட்ட தனி கற்களில் இறந்தவர் பிறப்பு, இறப்பு தேதி பொறிக்கப்பட்டுள்ளது.பெருங்கற்கால மரபின் எச்சமாகப் பல கல்திட்டைகள் நவீனக் காலத்தில் உருவாக்கியதை இங்கு காணலாம்.

b.jpg
c.jpg
a.jpg

கொங்கு நாட்டிலிருந்து விஜய நகர நாயக்கர் காலத்தில் பாண்டிய மண்டலம் வந்த ஒரு இனத்தினர் இங்கும் இறப்பு சடங்கு பின்பற்றியதை இக் கல்திட்டைகள் உணர்த்துகின்றன. திருமங்கலம் வடகரை புதுாரில் சிறு பலகை கல்லில் இரு ஆண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் இருப்பவர் இடது கையில் வளரி, வலது கையில் வாள், தலையில் கொண்டை வடிவ தலையணி அணிந்து அரை ஆடையுடன் இயக்க நிலையில் உள்ளார்.

இடதுபுறம் இருப்பவர் உயரம் குறைந்து, நீண்ட காது, அரை ஆடையுடன் வலது கையில் வாள், இடது கையில் குடுவை வைத்துள்ளார். தலைக்குப் பக்கவாட்டில் சந்திரன், சூரியன், பூ அமைப்பு உள்ளது.இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் வடகரை ஊரை உருவாக்கிய சோழ மூக்கன், நல்ல மூக்கன் என்ற சகோதரர்கள். இவர்களது வாரிசுகள் இவர்களுக்கு நடுகல் எடுத்து, இன்றும் விழா எடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் என்றனர்.


தெரிவு: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
நன்றி: தினமலர் - நவம்பர்  19, 2020 (https://www.dinamalar.com/news_detail.asp?id=2654963)
---

Wednesday, November 18, 2020

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள்

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள் 

-- ரமேஷ் தண்டபாணி 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமம் பல்லவர்கால பல்வேறு வரலாற்றுத் தடயங்களை தன்னகத்தே கொண்ட ஊர்.  இவ்வூரிலுள்ள எம கண்டேஸ்வரர் கோயில்உள்ள சதுர வடிவம் கொண்ட ஆவுடையார், பலகைகளில் செதுக்கப்பட்ட விஷ்ணு, எழுத்து பொறிப்பு உள்ள கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தின் தொன்மையான விநாயகர், சண்டிகேசுவரர், விஷ்ணு ஆகிய சிற்பங்கள் இதனை உறுதி செய்கிறது.

a.jpg

b.jpg

c.jpg

மேலும் பிடாரி கோயில் உள்ள மிகத் தொன்மையான மூத்த தேவி பலகைகளில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட அய்யனார் குதிரை நாயுடன், இரு பெண்கள் படையல் செய்வது போன்ற அமைப்பு  ஊர் அய்யனார் இவையாவும் மன்னர் காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்றதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது இங்குள்ள சிற்பங்கள் பழமைக்கு மட்டுமல்லாது சிறந்த வேலைப்பாடு இருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை இவற்றைப் பார்வையிடுவது பராமரிப்பது பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

(குறிப்பு: தொல்லியல் ஆர்வலர் சேலம் மோகன் ஐயா, தமிழ் ஆசிரியர் திரு கமலக்கண்ணன், மருத்துவர் காளிதாஸ். மருத்துவர் நிவாஸ்,  மருத்துவர் பாபு, நண்பர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குழுவிற்கு மனமார்ந்த நன்றி.)
---


Tuesday, November 10, 2020

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம் 

-- முனைவர். பாப்பா


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30,  2020 தொடங்கி நவம்பர் 1,  2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.  இக்கருத்தரங்கம் 'கலையும் வரலாறும்', 'பண்பாடும் மானுடவியலும்' மற்றும் 'சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்' என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன.

மூன்று நாட்களும் கருத்தரங்க நிகழ்வுகளைத் தோழர் ஆனந்தி, முனைவர் பாப்பா, தோழர் மலர்விழி ஆகியோர் நெறியாள்கை செய்தனர். தோழர் மலர்விழி, முனைவர் சாந்தினிபீ, முனைவர் தேமொழி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி மூன்று நாட்களும் நோக்கவுரையாற்றினார். சமூகத்தில் தொடர்ந்து பேசப்படாத, புறக்கணிக்கப்பட்டு வருகிற மனிதர்கள் பற்றிப் பேசுவதற்கான தளத்தினை உருவாக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுவதாகக்  கூறினார். வரலாறு, இலக்கியம், வழிபாடு, கூவாகம் திருவிழா, தொல்லியல் மற்றும் பாரதக்கதை சொல்லும் மரபு போன்ற நிலைகளில் மாற்றுப்பாலினம் பற்றிய செய்திகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  

1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டது. 2014இல் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழில் உள்ளது. இவர்களுக்கெனத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அது பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலினம் பற்றிய விழிப்புணர்வு உருவாவதற்குப் பள்ளிக்கூடச் சூழலில் மாற்றம் வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு நாம் உதவவேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வெளிப்படையாகத் தம்மை மாற்றுப்பாலினம் என்று வெளிப்படுத்திக்கொண்டு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல நமது சூழலிலும் மாற்றுச்சிந்தனை தேவை என்று கூறியதோடு உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டார்.

மூன்று நாட்களும் நோக்கவுரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் புரிதலுக்காக LGBT குறித்த காணொலி ஒன்று திரையிடப்பட்டது.

மூன்று நாட்களும் நடைபெற்ற கலந்துரையாடல் பங்கேற்பாளர்களிடையே LGBT குறித்ததொரு நல்ல புரிதலையும் இதுகுறித்துப் பரந்துபட்ட மனதுடன் வெளிப்படையான பேச்சுக்கும் வழி செய்தது.

முதல் நாள் நிகழ்வு: கலையும் வரலாறும் :

1.JPG

முதல் கருத்துரை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கற்பகவள்ளி அவர்களுடையது. மீவியல்பு கொண்டவர்கள் என்று தோழர்களைக் கூறுவதில் பெருமையடைகிறேன் என்று மகிழ்வுடன் கூறினார். அலெக்சாண்டர் இவர்களுக்கு அதிக சக்தி இருப்பதாக எண்ணித் தமது ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புக் கொடுத்தது, மாலிக்கபூர், அலாவுதீனுக்கு மிடையிலான நட்பு போன்ற வரலாற்றுச் செய்திகளையும் மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துரைத்தார். இவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் குறைவு என்றாலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் (2008) மாற்றுப்பாலினத்தவர்  நலவாரியம் தொடங்கப்பட்டதையும் இவர்களுக்கென தனிக்குடும்ப அட்டை, கடனுதவி, மருத்துவக்காப்பீடுவேலைவாய்ப்புப்பயிற்சி, அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகப் பாலின அறுவை சிகிச்சை, கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு அனுமதி போன்றவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தில் மனிதராக இவர்களுக்கு மரியாதை தரவேண்டும், அவர்களது குறைகளை முதலில் கேட்கவேண்டும், இவர்கள் சமூகச்செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும், பள்ளிகளிலேயே இது பற்றிய ஆரம்ப விழிப்புணர்வுக் கல்வியைக் கொடுத்தோமானால் இவ்வயதில் இத்தோழமைகளுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் அதை நாம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவர், சமூகச் செயல்பாட்டுக்கான கேரள அரசின் விருது (2012) பெற்றவர், எழுத்தாளர் தோழர் ஷீத்தல். தமிழகத்தில் எங்களை மனிதராகப் பார்க்கிற மனது இருக்கிறது. கேரளத்தில் அது இல்லை, இப்பொழுதுதான் பெண்கள் எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தனது உரையைத் தொடங்கினார். மூன்றாம் பாலினம் என்று ஏன் எங்களைச் சொல்ல வேண்டும். முதல், இரண்டு, மூன்று என்று இடங்களை வரையறை செய்தது யார்? அதற்கான அடிப்படை எது?  ஆண், பெண் இருவரது குணங்களும் கொண்ட நாங்களே முதலிடம் என்கிற கேள்வி, கருத்து இரண்டினையும் முன்வைத்தார்.

சமூகம் மற்றும் சட்டரீதியில் இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எடுத்துரைத்தார். இவர்களும் மனிதர்களே, சமூகத்தில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு உண்டு என்று 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இவ்வாண்டில் மாற்றுப்பாலினம் குறித்த கணக்கீடு ஒன்றைத் தான் செய்தது, ‘ரெயின்போ’ என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஆய்வுத்திட்டம் தொடங்கி இத்தோழமைகளுக்காகப் போராடுவது பற்றியும் பேசினார்.

முதலில் ஆண்களுக்கு, பிள்ளைகளுக்கு இது குறித்துக் கற்றுத்தருதல் வேண்டும். நான் எப்படி வாழ வேண்டும், எனது ஆசை, கனவுக்கேற்ற வகையில் நான் வாழ வேண்டும் என்றும் எங்குமே எங்களுக்கான இடம் இல்லை. பிரச்சனைகள்தான். நாங்கள் போராடுகிறோம். நீங்களும் எங்களுடன் சேருங்கள். எங்களுக்காகப் பேசுங்கள் என்றும் கூறினார். தன்னம்பிக்கையுடன் கூடிய இவரது உரை  நமக்கும் உற்சாகத்தைத் தந்தது.

இதையடுத்து கேரளத் திருநங்கையர் பற்றித் தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் தயாரித்த ‘பறையான் மறந்த கதை’ நாடகக் காணொலி திரையிடப்பட்டது. இந்நாடகத்தில் வாழ்க்கைதான் துயரமானது, இறப்பும் துயரமா? என்று இறந்துபோன உடல்களின் ஆவிகள் கேட்பதாக இறுதிக்காட்சி அமைத்திருப்பதையும் சமீபத்தில் சென்னையில் தோழர் சங்கீதா கொடுமையாகக் கொல்லப்பட்டது குறித்தும் பேசினார்.

சமூகத்தில் தங்களைப் பற்றிய தரவுகள் கலைவழியே சொல்லப்பட்டதாகத்தான் இருக்கின்றனவே தவிர களப்பணி வழியானதாகவோ, நேரடி அனுபவங்கள் வாயிலானதாகவோ இல்லை என்றார். பதினைந்து வருடங்களாகத் தான் நடத்திவரும் ‘கட்டியக்காரி’ நாடக அமைப்பின்வழி நடத்தப்பெற்ற மிளகாய்ப்பொடி, அவமானம், பறையான் மறந்த கதை போன்ற நாடகங்களின் உருவாக்கம், பின்னணி, இதற்குப் பேரா. மங்கையின் மிகுந்த ஆதரவு கிடைத்தது பற்றியும் எடுத்துரைத்ததோடு தங்கள் வாழ்க்கையில் கலை  மூலம் முக்கியமான பணியைச் செய்து வருவதாகவும் அதேநேரம் நாடகக்கலையில் பங்கேற்கும் தோழமைகள் கூட வெளிப்படையான பகிர்தலை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு இச்சமூகத்தின் புரிதல் உள்ளது என்றும் கூறினார். கட்டியக்காரி என்கிற தனது நாடக அமைப்பின் பெயரை விளக்கும் பொழுது நாட்டில் பெயர் குறித்த பிழை திருத்தங்கள் காட்டப்படுவதுதான் அதிகம், நாங்கள் பேசுவதை, எங்கள் வலிகளை யாரும் கேட்கமாட்டார்கள் என்றும் வருந்தினார். மதுரையில் தோழர் பிரியா பாபுவால் தொடங்கப்பட்டிருக்கிற திருநங்கைகளுக்கான ஆய்வு மையத்தினைக் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று. நாடகக்கலைவழி திருநங்கைகள் வாழ்வியலைச் சமூகத்திற்குப் பறைசாற்றும் இவரது உரை கேட்பவர் மனதைக் கனக்கச் செய்தது.

இன்றைய சிறப்புரையாளர் முனைவர் கட்டளை கைலாசம் தமது இளவயதுப் பருவத்திலும் இத்தோழமை பற்றிய அறிதலும் பகிர்தலுக்குமான வாய்ப்பு இல்லை என்று தனது உரையைத்  தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் மையத்தில் திரௌபதி வழிபாடு பற்றி விரிவான ஆய்வு செய்த ஆல்ஃப் ஹில்டபெடல் என்பவரது தொடர் சொற்பொழிவுகள் பற்றிக் கூறினார். நவம்பர் 1ஆம் தேதி திருநங்கையருக்கான மின்னிதழ் மதுரையில் பிரியா பாபு அவர்களால் தொடங்கப்படவிருப்பதையும் தெரியப்படுத்தினார். திருநங்கைகள் பற்றிய  இலக்கியத்தரங்களை மிகுதியாகப் பகிர்ந்து கொண்டார். ஆந்திராவின் ஹைதராபாத்தில் தொடங்கி தென்மாவட்டங்கள் வரையிலான திருநங்கையரின் தோற்றக்கதைகள் பற்றியும் கூவாகம் திருவிழா, வட இந்தியாவில் வாழும் இவர்களது பிரிவுகள், மொழி, உறவுமுறைகள் இவர்களது நூல்கள், இவர்களைப் பற்றிய நூல்கள் குறித்தும் விளக்கமாகக் கூறியதோடு இது குறித்த ஆழமான ஆய்வு தேவை, இன்னும் நாம் இவர்களை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். குடும்பம் பள்ளி, சமூகம் என அனைவரும் ஏற்பதோடு இவர்களை நேசிப்பதே நமது கடமை என்றும் தனது உரையை முடித்துக் கொண்டார்.


இரண்டாம் நாள் நிகழ்வு: மானுடவியலும் கலாச்சாரமும்: 

2.JPG

இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின் நிலை ஒரே மாதிரியாக, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. ஜனநாயக ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை என்பதைத் தமது ஆய்வுத்தரவுகளோடு விளக்கினார். கல்வி, பொருளாதாரத்தில் கட்டாயம் முன்னேற்றம் தேவை. அதுவே அவர்களை உயர்த்தும் வழிமுறையாகும் என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் திருப்பூர் எல். ஆர். ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்துறைப் பேராசிரியர் அமைதி அரசு அவர்கள். மாற்றுப்பாலினத் தோழமைகளுக்கான சக்தி, திறமை, ஆளுமை, கலைத்தன்மை போன்ற தனித்த வெளிக்கு நாடக உலகம் பேருதவியாக இருக்கிறது என்பதைத் தமது கூத்துப்பட்டறை அனுபவங்கள் வழித் தெளிவாக விளக்கினார்.

மூன்றாவதாகப் பேசியவர் இருபது வருடங்களுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களிடம் பணியாற்றிவரும் தோழர் கலைமாமணி சுதா அவர்கள். ஒருசில மனிதர்கள் ஓரிரு சமயங்களில் செயலாற்றுவதை மட்டும் வைத்து அவர்களைத் தவறாக எடைபோடக்கூடாது. இது திருநங்கைகளுக்கும் பொருந்தும். எங்களுடனான உங்களது நட்பு, அனுபவம் குறித்தும் அவ்வனுபவம் நல்லதாக இல்லாவிட்டாலும் பேசுங்கள், எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தனது சமூகத்திற்கான முன்னேற்றமும் மாற்றமும் இப்பொழுது அதிகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.

திருநங்கையர் கூடுமிடமாகிய ஜமாத், இவர்களது சடங்குகளான தத்தெடுத்தல், தாயாகிய சேலாபாலூற்றும் திருவிழா, இவர்களது உறவுகளுக்கிடையேயான வலிமை அதாவது இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஏதாவதொரு திருநங்கையைப் பார்த்தால் போதும் தங்குமிடம், உணவு போன்ற சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று பண்பாடு ரீதியிலான தரவுகளைத் தம் உரையாக்கினார்.

குடும்பம் எனும்போது இரண்டு ஏற்கவியலாத, வருந்தத்தக்க நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். ஒன்று – திருநங்கையாக மாறியபின் ஒருவரை அவரது குடும்பம் அவர் எவ்வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று அப்பணத்திற்காக மட்டுமே ஏற்கிறது, இரண்டு – குடும்பம் ஏற்பதைப் பெரிதாக நினைக்கும் திருநங்கையரும் சாதி, சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும்  மாற்றுப்பாலினத்தவர் தன்னைப் பற்றி அறிந்த பிறகு குடும்பத்திலிருந்து வெளியில் வருவதே சரி என்றும் இல்லையெனில் அக்குடும்பம் அவரைப் பெண்ணாகவே இருத்தி இன்னொரு ஆணுக்குத் திருமணம் செய்வித்து இருவரது வாழ்க்கையையும் பாழாக்கிவிடும் என்றார். மேலும் திருநங்கையைவிடத் திருநம்பியர் வாழ்வு இன்னும் சிக்கலானது, இது குறித்த புரிதலும் தேவை என்றும் பேசியது யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதாக இருந்தது.

சிறப்புரையாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இக்கருத்தரங்கில் என்னைப் பேசத்தான் அழைத்தார்கள், ஆனால் இரண்டு நாட்களும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று திறந்த மனதோடு பேசத் தொடங்கி சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான். சமூக உளவியல்தான் சமூகத்தை வழிநடத்துகிறது என்று கூறி அதனை மேட்டிமைத்தனமும் ஒவ்வாமையும், புறக்கணிப்பு, அவமதிப்பு, பரிவு, தோழமை என்கிற ஐந்து நிலைகளில் விளக்கினார். சுதந்திரமும் சுயமரியாதையும்தான் மனிதனுக்கு முதல் தேவை. ஒவ்வொரு மனிதனும் இதுபற்றி நினைக்கும் போதுதான் சமூகம் மாறுகிறது. சமூகத்தில் எதையுமே தரப்படுத்துதல் மற்றும் வரிசைப்படுத்துதலே தவறான ஒன்று என்றதோடு மனித உரிமைகள் குறித்த கருத்துக்களைப் பிடல் காஸ்ட்ரோவில் தொடங்கி சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்கிற புத்தர், அம்பேத்கர் கருத்துக்களுடன் முடித்தார்.

 

மூன்றாம் நாள் நிகழ்வு: சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் :

day3.jpg

ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம் பற்றிய சிந்தனையைத் தனக்குக் கொடுத்தது என்றும் கூறினார்.

இந்தியாவில் அதிகார ஒடுக்குமுறை, திருநங்கையருக்குள்ளும் ஒருவரையொருவர் ஒடுக்குதல் உள்ளது. அது போன்று இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்று கூறினாலும் இந்தியாவில் தனக்கு அநேகம்பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதற்குத் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் Jafna Transgender Network அமைப்பின்வழி சுயதொழிலுக்கான உதவியும் பயிற்சியும் வழங்குதல், இவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சிக்கல் இருப்பதால் உளவியல் ரீதியாக ஆறுதல் தருதல், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைக் கொடுத்தல் என்கிற வகையில் பணிசெய்து வருவதையும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படியொரு சமூகம் இருப்பதையும் இவர்களது சிக்கல்களையும் சொன்னால்தான் தெரிகிறது என்றும் கூறினார். இலங்கையில் இளைஞர்கள்  மத்தியில் தங்களுக்கு ஆதரவு அதிகம், தங்களோடு அவர்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

எட்டாவது கருத்துரை தென்கொரியாவில் வசித்துவரும் தோழர் சம்யுக்தா விஜயன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தச்சமூகம் பற்றிச் சிந்தித்த கணத்திலிருந்தே நான் பெண் என்று கூறும் இவர் தனது குடும்பம், பள்ளி, ஆசிரியர், நண்பர்கள் எனத் தன்னைச் சுற்றியிருந்த அனைவருடைய ஆதரவும் இருந்ததால் தனது வாழ்வில் எத்தகைய சிக்கலும் இல்லை என்று கூறினார். இந்தியாவில் இது பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. திருநங்கையர் குறித்த சொற்களின் ஆய்வினைவிடப்  புரிதல்தான் முக்கியம் என்று கூறினார்.

பாலினம் பற்றிய இவரது அறிவியல் ரீதியான விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, மிகுந்த புரிதலுடன் கூடியதாக இருந்தது. இவ்வுலகம் பகல் மற்றும் இரவால் ஆனது என்றாலும் முற்பகல், பிற்பகல், சாயுங்காலம் என்றிருப்பதைப்போல ஆண், பெண் என்பதும் முழுமையானதல்ல. இது ஒரு Spectrum. பால் (Biological sex), பாலினத்தை அடையாளப்படுத்துதல் (Gender Identity), வெளிப்படுத்துதல் (Gender Expression), பால்நிலை குறித்த பயிற்சி (Sexual Orientation) என்கிற நான்கு நிலைகளுக்குள்தான் நாம் இருப்போம் முழுமையான ஆண், பெண் என்பது இல்லை என்று விளக்கினார்.

ஒன்பதாவது உரைக்குரியவர் சென்னை, தமிழ்த்திரையுலகில் இயக்கம், எழுத்து, தயாரிப்பு என்று பல பரிமாணங்களில் சாதனை படைத்து வரும் தோழர் மாலினி ஜீவரத்தினம். தான் வாசித்த நூல்கள், நண்பர்கள், பணியிடத்தில் இடத்தில் உடனிருந்தோர் ஆதரவு இவையே தன்னை வெளிப்படுத்த உதவியதாகக் கூறினார். திரையுலகில் படம் தயாரிக்க நிறைய திருநங்கையர் முன்வந்திருப்பது மாற்றத்தைக் காட்டுகிறது. நான் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் கருத்துக்களை, என்னைப் பற்றிய பேச்சுக்களை எனது படைப்புகளில் பயன்படுத்துவேன் என்றார். திரைப்படங்களில் கதாநாயகன் திருநங்கையாக வேடமிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும் வேடமிடுவதற்கும் தாங்களே நடிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார். இருபத்தொன்றாம் ஆண்டில் திருநங்கையர் பற்றிய,  இவர்கள் பணிசெய்த திரைப்படங்கள் நிறைய வெளியிடப்படவிருக்கின்றன என்று தெரிவித்தார். தமிழ்ச்சமூகத்தில் திருநங்கையருக்கான தனித்த இடம் என்பது சவாலான விசயம்தான் என்றார்.

மூன்றாம்நாள் சிறப்புரை வழக்கறிஞர் சன்னாவினுடையது. பாலியல் பாதையில் சமூக, அரசியல் நிலைப்பாடுகள் பற்றிப் பேசினார். பதினெட்டு வருடங்களுக்கு முன் புதிய கோடாங்கி இதழுக்காகத் திருநங்கையருக்குச் செய்த இலக்கியப்பயிற்சி முகாம் ஒன்று தனக்கு இவர்கள் பற்றிய அறிதலுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் முகாமிற்குப் பிறகு களப்பணி செய்து இவர்களது வாழ்வியல் மற்றும் இவர்களது படைப்புகளைக் கொண்டு சிறப்பிதழாகவே கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருநங்கையருக்குச் சட்டசபையில் தனித்த இடம் கேட்க சட்டவழி முறைகளை எடுத்துக்கூறியது. அரவாணி என்பது பெண்பால், உருவாக்கப்பட்டது – கலைஞர் கருணாநிதி ஆட்சியில்; இந்த அரவாணி என்கிற பெயர் திருநங்கை, திருநம்பி என மாற்றம் பெற்றது, தமிழ்ச்சமூகத்தில் அரசியல் ரீதியான புரிதல் இருந்ததால் இது சாத்தியமானது என்றும் நலவாரியம் அமைக்கப்பெற்றது பற்றியும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகள் மாற்றம் பெற இது போன்ற கருத்தரங்கு தேவை என்றார். மொழியைக் கட்டமைப்பவர்கள் ஆண்களே, Gender என்னும் சொல்லின் முதல் பகுதியே Gen என்னும் ஆண் மையத்தை, முதன்மையைத்தான் குறிக்கிறது. மக்களிடம் ஏற்பு கிடைத்திருப்பது கடந்த பத்து ஆண்டுகளாகச் சாதனை நிகழ்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.  மொழி ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒரு இடமாவது வேண்டும். பள்ளிக்கல்வியிலிருந்தே  பாலினச்சமத்துவம் மற்றும் மாற்றுப்பாலினம் குறித்த கல்வி வழங்கப்படவேண்டும். மனித இனத்தில் 120 பிரிவுகள் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். இவர்களது பிரிவுகளுக்குரிய பெயர்களைக் கண்டறியவேண்டும். தமிழறிஞர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


(1) LGBT - ஒரு அறிமுகம் [https://youtu.be/MsiO198Kqec]


(2) `மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு [https://youtu.be/kRwXwwuQtCk]


இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகள் 
என்ற பகுதியிலிருந்து காணலாம்.மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்
யூடியூப்  காணொளிகளாக .. .. .. 
நாள் 1 – கலையும் வரலாறும்

நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்

நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்

அறிக்கை  தயாரிப்பு: முனைவர். பாப்பா
Monday, November 9, 2020

வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்


வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்
 பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்துக் கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது.  இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.  


பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.   ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகிலிருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்காரரது உடைமையாக இருக்கும் என்று கருதினர்.  வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர்.  நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினர். 

அதன் பின்னர் எலும்புக்கூட்டின் மேல்  அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட வேதியல் சோதனைகளில்  இந்த வேட்டைக்காரர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்சமயம் அந்த வேட்டைக்காரர் ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதுவரை வேட்டையாடி சமூகம் என்பது ஆண்களே என்ற பொதுச் சிந்தனையை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கின்றது. 

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தென்னமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில்  நடத்தப்பட்ட ஆய்வுகளில்    அவர்கள் மேலும் 10 பெண் வேட்டைக்காரர்களின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.  அவர்களது அருகாமையிலேயே அவர்களது வேட்டைக்கருவிகளும் மரியாதை நிமித்தம்  வைத்துப் புதைக்கப்பட்ட செய்தியையும் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. 

இது பற்றி கருத்து கூறும் போது,  இதன் வழி பண்டைய காலத்தில், பெண்கள் வேட்டையாடிகளாகத் தொன்று தொட்டே இருந்திருக்கின்றனர் என்பதையும் உறுதி செய்யலாம் என  ஒக்லஹாமா பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் போனி பிட்பிளாடோ தெரிவிக்கின்றார். 

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 13,000 அடி உயரத்தில் இந்த வேட்டையாடி மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  ஆண்களும் பெண்களும் இணைந்தே தங்கள் உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களில் ஒரு பெண் அக்குழுவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம்.   பல பெண் வேட்டைக்குழுத்  தலைவர்களும் இருந்திருக்கலாம். இப்படிப் பல ஊகங்களுக்கும் தொடர் ஆய்வுகளுக்கும் இட்டுச் செல்லும் கண்டுபிடிப்பாகவே இது அமைகிறது.மேலதிக செய்திகளுக்கு: https://www.sciencemag.org/news/2020/11/woman-hunter-ancient-andean-remains-challenge-old-ideas-who-speared-big-game?fbclid=IwAR1vDCJG-edq4XZbOz3aB_y00xJ4p90gCa62iQkdboPmv95Kq1xudDNok7c

Sunday, November 8, 2020

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை 

-- என்.சரவணன்


ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே. (09.04.1893 – 14.04.1963)  என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்ததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.

அவர் காசியில் சமஸ்கிருதம்,அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற நாட்குறிப்புகள் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல பதிப்புகளைக் கண்ட நூல்.

1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காகப் பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையிலிருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாகக் கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையிலிருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுல்ஜியின் பங்கும் கணிசமானது.)

புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டியை ராகுல்ஜி கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாகச் சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கமிட்டியில் ராகுல்ஜி முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்குப் புறப்பட்டார்.

அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு  தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கு வந்த அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு தம்மானந்த தேரரின் கீழ் பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். பின்னர் தனது “ராம் உதார் தாஸ்” என்கிற பெயரை "ராகுல சாங்கிருத்தியாயன்" மாற்றிக்கொண்டார். அவரின் எஞ்சிய காலம் முழுவதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார். ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர்.

இலங்கையில் ராகுலுக்குத் தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியவர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க.

அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.

இலங்கையில் சிங்களத்தையும், பாளி மொழியையும் பௌத்த இலக்கியங்களைப் பற்றி ஆழமாகக் கற்றுணர்ந்தார். பௌத்த புனித நூலான “திரிபீடக” (மூன்று பீடங்கள்) எனப்படுகின்ற பௌத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந்து “திரிபீடகாச்சார்யா” என்கிற பட்டத்தையும் பெற்றார். ஒன்றரை வருடம் கழிந்து 01.12.1928 அன்று அவர் இலங்கையிலிருந்து நேபாளுக்கு பயணமானார். ஆனாலும் அவர் அதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், திபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கப்படாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாலந்தா நூலகத்திலிருந்தவை ஆகும்.

பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுல்ஜியும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இந்த இடைக்காலப்பகுதியில் அவர் தனது பெயரை ராம் உதார் தாஸ் என்று மாற்றிக்கொண்டிருந்தார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்ஜி.

வர்ணாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்கருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.

இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விவரித்து “லங்கா” தலைப்பில் ஒரு நூலை எழுதியிருப்பதை அறிய முடிந்தது. இக்கட்டுரைக்காக அந்த நூலைத் தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் இந்தி மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது இது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விவரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும். 1950லிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை. அது மட்டுமன்றி ராகுல்ஜி பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல்ஜி. வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.

அவரின் இறுதிக்காலத்தில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. அங்கே பேராசிரியராக பணியாற்றினார். இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவத்தை அவருக்குக் கொடுக்கவில்லை.

ராகுல்ஜி தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மார்க்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மார்க்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார்.

உலகின் பல எழுத்தாளர்கள் தமது இறுதிக்காலத்தில் எதிர்கொண்டிருக்கிற அதே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் என்பவற்றால் பாதிக்கப்பட்டதுடன், மிகை உழைப்பு உடலின் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதித்து நினைவாற்றலையும் இழந்து 1963இல் டார்ஜிலிங்கில் இறந்தார்.உசாத்துணை:

1. Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)

2. பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் "ராகுல் சாங்கிருத்யாயன்" – 1986

3. Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935

4. கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)நன்றி - அரங்கம்


Saturday, November 7, 2020

மானுடமும் மாற்றுப்பாலினமும்!

 மானுடமும் மாற்றுப்பாலினமும்!சிறப்புக் கட்டுரை: 
-- முனைவர். க.சுபாஷிணி

lgbt conference.jpg

தமிழகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருவிழாவில் மாற்றுப்பாலினத்தோர் ஒன்று கூடுகின்றார்கள்.

இந்தத் திருவிழாவின்போது சித்ரா பௌர்ணமி அன்று இரவு மாற்றுப்பாலினத்தோர் அக்கோயில் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டு மறுநாள் காலை அக்கோயிலின் முக்கிய தெய்வமாகிய அரவான் களபலி கொடுக்கப்படுவது போன்ற சடங்கு நிறைவடைந்த பிறகு தன் கழுத்தில் சூட்டப்பட்ட தாலியை அறுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது வெள்ளை புடவை அணிந்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான திருநங்கையர்கள் இந்த விழாவுக்கு வருகின்றார்கள் என்ற செய்திகளைப் பார்க்கின்றோம். அதேபோன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களும் வந்து கூடுவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் திரௌபதி அம்மன் கோயில்களில் அரவான் வழிபாடு என்பது தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கின்றோம்.

lgbt conference2.jpg
புகைப்படம் நன்றி: எம்.மீனாக்‌ஷி, உதவி பேராசிரியர் (ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி)

இந்த திரௌபதி அம்மன் வழிபாடு என்பது தமிழகத்தின் வடபெண்ணையாற்றுக்குத் தெற்கே, கர்நாடகாவின் தென்பகுதிகளிலும், கேரளாவில் சில பகுதிகளிலும், வட தமிழ்நாட்டில் அதிகமாகவும், தஞ்சாவூரிலும் பரவலாக இருப்பதைக் காணமுடியும்.

திரௌபதி அம்மன் கோயில்கள் இருக்கும் இடங்களில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். பாஞ்சாலி அம்மன், தர்மராஜன் கோயில் ஆகியனவும் இதில் முக்கியத்துவம் பெறும் தெய்வங்களாக இருக்கின்றன. இத்தகைய கோயில்களில் திரௌபதி அம்மனே முக்கியக் கடவுளாக இருப்பார். துணை தெய்வங்களாக பீமன், சகாதேவன் என பாண்டவர் ஐவரின் சிலைகளும் சில கோயில்களில் வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். திரௌபதி அம்மன் கோயிலில் பொதுவாக காவல் தெய்வமாக போத்து ராஜா என்ற காவல் தெய்வம் அமைந்திருக்கும். அது ஒரு மனிதர் நடப்பது போன்ற வடிவத்தில், ஒரு கையில் வாள் ஏந்தியவாறும் ஒரு கையில் வெட்டப்பட்ட மனித தலையை வைத்திருப்பது போலும் செய்யப்பட்டிருக்கும். மனித தலைக்குப் பதிலாக மான் அல்லது வேங்கை கையில் இருப்பதாகவும் சில இடங்களில் உள்ள கோயில்களில் காணப்படுகின்றது.

lgbt conference3.jpg
செங்காடு திரௌபதி அம்மன் கோயில் கோபுரத்தில் அரவான் தலை
புகைப்படம் நன்றி: காந்தி பாலசுப்பிரமணியன்
lgbt conference5.jpg

திரௌபதி அம்மன் கோயிலில் இன்னொரு துணை தெய்வத்தையும் காணமுடியும். முத்தால ராவுத்தன் என்ற முஸ்லிம் ஒருவர் காவல் தெய்வமாக அமைக்கப்படுகின்றார். அந்தச் சிலையின் பக்கத்தில் முஸ்லிம் தர்கா சமாதி போன்ற ஒரு அமைப்பையும் வைத்திருப்பார்கள்.

திரௌபதி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை பதினெட்டு நாட்கள் திருவிழா நடத்துகின்றனர். இந்த விழாவில் மகாபாரதக் கதை தினம் தினம் சொல்லப்படும். வில்லிபாரதம் அல்லது நல்லாபிள்ளை பாரதம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் முதல் பத்து நாட்கள் சொல்லப்படும் கதைகளாகின்றன. பின் அதே கதை தெருக்கூத்து வடிவில் நடைபெறுவதும் வழக்கம்.

lgbt conference4.jpg
கூரம் செப்பேடு (புகைப்படம் நன்றி: தகவலாற்றுப்படை, தமிழக அரசு)

வரலாற்றுச் சான்றாக நாம் ஆராயும் போது, பாரதக் கதைகள் சொல்வதற்கான நிவந்தம் வழங்கப்பட்ட செய்தி கூரம் பல்லவர் செப்பேட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்சமயம் இந்தச் செப்பேடு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் கூரம். பல்லவன் முதலாம் பரமேசுவரவர்மன், கி.பி.7ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சி செய்தவன். அவன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேடு அரக்கோணம் அருகில் உள்ள பரமேஸ்வரமங்கலம் என்ற ஊரைச் சிறப்பு நகராக வடிவமைப்பதற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியிடம் தரப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இந்த நகரில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது என்றும், அதற்குத் தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றிலிருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டு நீர்மேளாண்மை நிறுவப்பட்டது என்றும் செப்பேட்டின் வழி அறியமுடிகின்றது. ஆன்மீக திருவிழாக்களின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நகரில் கோயில் எழுப்பப்பட்டது. ஊருக்கு நடுவில், மகாபாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்படி நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் கோயில்கள் செயல்பட்டன. இத்தகையைச் செய்திகளைச் சொல்லும் முக்கியச் செப்பேடு இந்தக் கூரம் செப்பேடு. ஆக கிபி.7ம் நூற்றாண்டு வாக்கில் மகாபாரதக் கதையைக் கோயிலில் சொல்லும் வழக்கம் பல்லவர்களால் கொண்டுவரப்பட்டதற்கானச் சான்றாக இச்செப்பேடு அமைகின்றது

அரவான் களபலி நாடகம்:
பாரதக் கதை சொல்லும் மரபில் ஒரு நாள் கதை அரவான் களபலி நாடகம் ஆகும். புராணக் கதையின் படி அரவான் அர்ஜுனனுக்கும் உலுப்பி என்ற நாகக்கன்னி பெண்ணுக்கும் பிறந்தவன். அரவான் வியாசபாரதத்தில் சாதாரண மன்னனாகக் காட்டப்படுகிறான். ஆனால் தமிழ் நாட்டில் அரவான் முக்கிய கடவுளாகக் கருதப்படுகிறான்.

தமிழ்நாட்டில் வீரர்கள் போர் வெற்றிக்காகக் கொற்றவைக்குத் தன்னை களபலி கொடுத்துக் கொள்வது போல மகாபாரதத்தில் அரவான் தன்னைத் தானே களபலி கொடுத்துக் கொண்டதாக வழக்குண்டு. தமிழகத்தின் பண்டைய வரலாறு கொற்றவைக்கு களபலி கொடுப்பது பற்றி கூறுகிறது. நவகண்டங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. அந்த வகையில் கொற்றவையையே அரவானாகப் பார்க்கும் ஒரு பார்வையையும் அரவான் களப்பலி சடங்கு முன்வைக்கின்றது என்றும் கூறலாம். இது ஆய்வுக்குரியது.

மகாபாரதப்போரில் வெற்றி பெறுவதற்கு முன்னர் சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஒரு நல்ல வீரனைப் பலி கொடுத்தல் வெற்றியை அளிக்கும் என்று சகாதேவன் கூற அவ்வகையில் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன், அர்ஜுனன், அரவான் ஆகிய மூவரும் தான் என அவர்கள் அறிந்து கொள்கின்றனர். கண்ணனும் அர்ஜுனனும் கடமைகள் கொண்டிருப்பதால் அரவானை களபலி ஏற்றுக் கொள்ள தருமர் கேட்டுக் கொள்ள அவனை களபலி கொடுக்க அவன் சம்மதிக்கிறான். போர் முடியும் வரை தான் முழுமையாகப் போரைக் காண வேண்டும் எனவும், தனக்குத் திருமணம் ஆகாததால் ஒரு நாள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் இரண்டு வரங்களை அரவான் கேட்கிறான். கிருஷ்ணன் வரங்களை அளிக்கின்றார். மறுநாள் இறக்கப்போகும் ஒருவனை மணக்க வேறு பெண்கள் முன்வராததால் தானே மோகினியாக வடிவம் ஏற்று கிருஷ்ணன் அரவானுடன் கூடி ஒரு நாள் வாழ்வதாகப் புராணம் சொல்கிறது. இதனையே அரவான் நாட்டுப்புறக் கூத்துக் கலையும் கூத்தாண்டவர் விழாவும் பிரதி பலிக்கின்றன.

சடங்குகளும் மாற்றுப்பாலினத்தவர்களும்:
மாற்றுப்பாலினத்தோர், மாற்று பாலீர்ப்பு கொண்டோர் என்னும் சமூகத்தை இந்தப் புராணக் கதைக்குள் மட்டுமே குறுக்கி வைத்துப் பார்ப்பது நமது சமூகத்தில் இருக்கும் ஒரு குறை. புராணக் கதைகள் நம் சமூகச் சிந்தனையில் ஏற்படுத்தியிருக்கும் அழுக்குகள் என்பது மிக அதிகம். இதில் ஒன்றாகவே இதனையும் காண வேண்டியிருக்கின்றது.

ஒரு வகையில் பண்பாட்டு விழுமியமாக மக்கள் வழக்கத்தில் இத்தகைய சடங்குகள் இருந்தாலும் இன்று நாம் கவனிக்க வேண்டியது மாற்றுப்பாலினத்தோர், மாற்று பாலீர்ப்பு கொண்டோருக்கான அடிப்படை மனித உரிமைகளுக்கான தேவைகளைத்தான்.

ஆண் பெண் என்ற இரண்டு வெவ்வேறு கோணங்கள் (Binary classifications), இதுதான் இயல்பு என்று நம்மைப் பிரித்துப் பார்க்கப் பழக்கியுள்ளன. ஆண் அல்லது பெண் என்ற இரு வகைகளுக்குள் வகைப்படுத்தப்படமுடியாத ஒன்று இயல்பற்ற ஒன்று என்றும் காணும் போக்கு நீண்ட காலமாக நமது மனதிற்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. அந்தத் திணிப்பு நடவடிக்கையில் மிக முக்கிய பங்களிப்பு சமயங்களுக்கு இருக்கின்றது. ஆண் என்பவன் யார் என்பதையும் பெண் என்பவள் எப்படிப்பட்டவள், அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், இவை இரண்டிற்குள் இடம்பெறாதவற்றை இயல்புக்கு மாறானது என்றும் வலிந்து உருவாக்கி வைக்கப்பட்டுள்ள சூழலிலேயே நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். இதுதான் சரி, இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நம் பண்பாடு, இதுதான் நமக்கு நல்லது எனச் சொல்லி, சொல்லி, அடிப்படை பண்பான மானுடத்தை இழந்தவர்களாக நாம் இன்று இருக்கின்றோம்.

மாற்றுப் பாலினத்தவர் எதிர்நோக்குகின்ற சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் பொதுப்படையாகப் பச்சாதாபத்துடன் பேசுவதைத் தவிர்த்து அவர்கள் நொடிக்கு நொடி சந்திக்கின்ற பிரச்சினையின் மூல காரணத்தை ஆராய வேண்டியது அடிப்படை அவசியமாகின்றது. அப்படி பிரச்சினைகளை அலசும் போது மூன்று வகையில் இந்த பிரச்சனைகளை நாம் பட்டியலிடலாம்.

மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகள். மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகள் மற்றும் அவமானங்கள். மாற்றுப் பாலினத்தோரது அன்றாட வாழ்க்கை நிலை.

மாற்றுப்பாலினத்தவர்களும் சக மனிதர்களே:
பாகுபாடுகள், கொடுமைகள் எனும்போது மாற்றுப் பாலினத்தோருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களின் மதிப்பீடு என்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. அல்லது மாற்றுப் பாலினத்தவர் சந்திக்கும் கொடுமைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற அளவுக்குச் சிந்தனை செதுக்கப்பட்டவர்களாக நம் சிந்தனை போக்கு அமைந்திருக்கின்றது.

மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படுகின்ற வன்கொடுமைகளுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களை சரியாக அலசுகின்றோமா..? அதற்கான தீர்வுகளைச் சரியாக முன்னெடுக்கின்றோமா..? என்பதும் ஒரு கேள்வியாகவே அமைகின்றது.

பொது வெளியில்.. பள்ளிக்கூடங்களில்.. அலுவலக வெளிகளில்.. மாற்றுப் பாலினத்தவர் மிக இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார்களா என்பதையும் நாம் கேள்வியாக முன் வைக்க வேண்டி இருக்கின்றது.

நமது இயல்பான சிந்தனைப் போக்கை நாம் பொதுவாகவே கேள்வி எழுப்புவதில்லை. இதுதான் மரபு.. இதுதான் சடங்கு.. பெரியவர்கள் சொன்னார்கள்.. என்று இயந்திரங்கள் போலச் சொல்லிக் கொண்டு சமூகத்தில் நிகழ்கின்ற அநீதிகளை அலசிப் பார்க்காமல் பெரும்பாலானோர் சென்று விடுகின்றோம். நம் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டுள்ள அழுக்கு மூட்டைகளை அலசிப் பார்க்கும் போது தான் நாம் ஏனைய சக மனிதர்களை எவ்வகையில் அணுகுகின்றோம் என்பதை அறியக்கூடும்.

அடிப்படை உரிமைகள்:
நாம் நம் ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டுக் கொள்ளும் போதுதான் நம் சிந்தனைப் போக்கை அலசி ஆராயவும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள நாம் விரும்புவதில்லை. நம் சிந்தனையில் நமக்குத் திறந்த மனப்பக்குவமும் மிக மிகக் குறைவு. மாற்றுச் சிந்தனையை எதிர்நோக்க நமக்குத் தைரியமும் இல்லை. இப்படிச் சில உதாரணங்களாகச் சொல்வதென்றால் சாதிப் பிரிவினையும் அதனையொட்டி எழுகின்ற பல்வேறு வகையான அநீதிகளையும் தினம் தினம் நாம் வாசித்தாலும் கூட நொடிக்கு நொடி சாதிப்பெருமை பேசும் மனப்பாங்கிலிருந்து கற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் கூட தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப்போலவே, மாற்றுப் பாலினத்தோரை ஒரு குற்ற உணர்வுடனேயே குடும்பத்திலும் சுற்றுச்சூழலிலும் பொது வெளியிலும் நாம் காண்கின்ற மனப்பான்மை அமைகிறது. எப்படி நாம் நம் மாற்றுப்பாலின உறவுகளை இயல்பாக நம் சூழலில் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற சிந்தனையும், அவர்களுக்கு சமூகத்தில் நிகழ்கின்ற அநீதிகளையும் பெரும்பாலும் நமது கண்கள் பார்க்கத் தவிர்த்து விடுகின்றன. கேளிக்கைகளிலே நமது மனதைச் செலுத்துவதில் பொதுவாக நாம் விரும்புகிறோம். இதுதான் அடிப்படையாக நமக்கு அமைய வேண்டிய சமூகத்தின் பால் விழிப்புணர்வு என்பது நமக்கு ஏற்படாததற்குக் காரணமாக அமைகின்றது.

மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பற்றி (The Universal Declaration of Human Rights) ஐக்கிய நாடுகள் சபை 10.12.1948ம் ஆண்டு பாரீசில் நடந்த மாநாட்டில் ஆய்வறிக்கை தயாரித்து பிரகடனப்படுத்தியது. தமிழ் உட்பட 500 மொழிகளில் இன்று இந்தப் பிரகடனம் வாசிக்கக் கிடைக்கின்றது.

lgbt conference6.jpg
பிரகடனம் 1: எல்லா மனிதர்களும் சுதந்திரமாக, சமமான கௌரவத்தோடும், உரிமைகளோடும் பிறந்தவர்கள். ( Article 1. All human beings are born free, and equal in dignity and rights.)

பிரகடனம் 2: ஒவ்வொருவரும் இன, நிற, பால், மொழி, அரசியல் அல்லது கருத்து வேறுபாடு, தேசிய அல்லது சமூக அடிப்படை, சொத்துக்களால் அல்லது பிறப்பாலான அந்தஸ்து என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி இப்பிரகடனத்தின் உள் அடக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உரித்தாகின்றார்கள். (Article 2 -Everyone is entitled to all the rights and freedoms set forth in this declaration, without distinction of any kind such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status.)

பிரகடனம் 6: ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் எல்லா இடங்களிலும் மானிடத்தில் ஒருவராக அங்கீகரிக்கப்படுதல் அவரது அடிப்படை உரிமையாகும். (Article 6 - Everyone has the right to recognition everywhere, as a person before the law.)

lgbt conference0.jpg
(குறிப்பு: ஐக்கிய நாடுகளின் சபை The Universal Declaration of Human Rights என்ற பெயரில் வெளியிட்ட இப்பிரகடனத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் திரு.தா.தேச இலங்கை மன்னன்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளை அலசிப்பார்க்கும் போது மிக ஆழமாக மாற்றுப்பாலினத்தோர் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது. அந்த வகையில் 7.3.2012ல் Sexual Orientation and Gender Identity என்ற பொருளில் பால்வேறுபாடுகள் பற்றிய புரிதல் மற்றும் பால் வேறுபாட்டின் அடையாளம் தொடர்பான பிரச்சனைகளைப் பேச ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் ஒன்று கூடியது. அதில் வரையறுக்கப்பட்ட தீர்மானங்கள் 17/19, முதல் முறையாக மாற்றுப்பாலினத்தோர், மற்றும் மாற்றுப்பாலீர்ப்பு கொண்டோருக்கான தேவைகளைச் சிறப்புக் கவனத்துடன் அலசியது.

lgbt conference8.jpg
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு மாற்றுப்பாலினத்தோர் நலனுக்காக 2011ம் ஆண்டில் ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. 'Discrimination on grounds of sexual orientation and gender identity' என்ற பெயரிலான அறிக்கை அது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்ற 47 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன. 2014ம் ஆண்டில் “A boy or a girl or a person – intersex people lack recognition in Europe” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு திறந்த மனப்போக்கிற்கான சிந்தனையை ஆழமாக ஐரோப்பிய மக்களிடையே கொண்டு சென்றது ஐக்கிய நாடுகள் சபை. 2015ம் ஆண்டில் மாற்றுப்பாலினத்தோர் நலனை முன் வைத்துச் செய்யப்பட்ட விரிவான ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை வெளியிட்டது. ஆங்கிலம், பிரஞ்சு என இரு மொழிகளில் இந்த அறிக்கை கிடைக்கின்றது.

மாற்றுப்பாலினத்தவர் திருமணம்:
மாற்றுப்பாலினத்தோரிடையே செய்துகொள்ளப்படும் திருமணத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகளாக இன்று 28 நாடுகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. அப்பட்டியலில் முதலாவதாக இடம்பெற்று மானுடத்திற்குப் பெருமை தேடிக்கொள்கின்றது நெதர்லாந்து. 1.4.2001ல் மாற்றுப்பாலினத்தோரிடையேயான திருமணத்தை நெதர்லாந்து அரசு அங்கீகரித்தது. இதனையடுத்து பெல்ஜியம் மற்றும் தொடர்ச்சியாக ஏனைய ஐரோப்பிய நாடுகள் இவ்வரிசையில் இடம்பிடிக்கின்றன.

lgbt conference10.jpg

மாற்றுப்பாலினத்தோரிடையே திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கலாமா என்ற கருத்துக் கணிப்பு உலகெங்கும் நிகழ்த்தப்பட்டது. அதில் 92% மக்கள் இது இயல்பானது தான் என்றும் தேவையானதும் கூட என்றும் கூறியிருப்பது சுவீடன் நாட்டில். சுவீடனுக்கு அடுத்து நெதர்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்பெயின், லுக்ஸம்பெர்க், இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், சுவிஸர்லாந்து, பிரான்சு, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முதல் பட்டியலில் மாற்றுப்பாலினத்தோரிடையே திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்து வரவேற்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

மாற்றுப்பாலினத்தவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் ஆரம்பப் புள்ளியாக அமைவது அவர்களது குடும்பம் மற்றும் அவர்கள் பிறந்து வளர்கின்ற சூழல் தான். சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலும், அறிவியல் அடிப்படையில் மனித உடல் மற்றும் பால் வேறுபாடுகள், உடலிலுள்ள வேறுபாடுகளைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினாலும் சக மனிதர்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மாற்றுப்பாலினத்தவர் பலர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. சர்வசாதாரணமாக மாற்றுப்பாலினத்தவர்களைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிப் போவதிலிருந்து, பாலியல் வன்கொடுமை, கொடூரமான கொலைகள் என்பதுவரை, பல்வேறு கொடுமைகள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டுமிருக்கின்றன.

ஆனாலும் கூட, கடும் சொற்களையும் புறக்கணிப்புக்களையும் கடந்து சக மனிதர்கள் கொடுக்கின்ற தாக்குதல்களையும் வலிகளையும் ஏற்றுக்கொண்டு துவண்டுவிடாமல் தங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொண்டு தங்கள் சக மாற்றுப் பாலின உறவுகளுக்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் அயராது உழைக்கும் தோழர்கள் சிலர் நம்மிடையே இன்று உருவாகியிருக்கின்றார்கள். மாற்றுப் பாலினத்தவர்களும் சமூகத்தில் ஒரு அங்கமே என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடுகளை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

மிக முக்கியமாக நம் சமூகத்தில் சுயபரிசோதனை, மற்றும் விழிப்புணர்வு என்பது நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

நட்பும், விழிப்புணர்வும்:
பெற்றோரும் ஆசிரியரும் மாற்றுப் பாலின குழந்தைகளிடம் அவர்கள் மனதில் வேதனையையும் குற்ற உணர்வையும் விதைக்காமல் அவர்கள் இயல்பாக தங்களை அறிந்து கொள்ளவும், கல்வியில் உயர்ந்து தரமான பொருளாதார சூழலை அவர்கள் எட்டவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. நமது நட்பு வட்டத்தில் மாற்றுப் பாலின உறவுகளையும் நாம் எந்த தயக்கமுமின்றி இணைத்து அரவணைத்து இயங்க வேண்டும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் புராணங்களும் சமயங்களும் சொல்கின்ற பொருளற்ற வரையறைகளை ஒதுக்கி மானுட பண்பை வளர்க்கும் வகையில் நமது செயல்பாடுகளை நாம் கூர்மையாக்கிச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். ஏனெனில், மிக நீண்டகாலமாக சமயங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் புராணங்களும் நமது மனதில் மனிதகுலத்துக்கு எதிரான பல விஷயங்களை ஆழமாக விதைத்து விட்டன. அவற்றைக் களைய வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை.

குடும்பத்தில் அங்கீகாரம், சமூகத்தில் அங்கீகாரம் என்பதோடு அரசியல் தளத்திலும் மாற்றுப்பாலினத்தோருக்கான அங்கீகாரம் என்பது தேவை. ஐரோப்பிய நாடுகளில் விரிவாகவும் வட அமெரிக்காவில் சில இடங்களிலும், இன்று உலக அளவில் அரசியல் தளங்களில் இயங்கும் மாற்றுப்பாலின அரசியல் தலைவர்கள் சிலர் தென்படுகின்றனர்.

வெளிப்படையாகத் தன்னை ஒரு மாற்றுப்பாலின அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொண்டவர் பட்டியலில் முதலிடம் பெறுபவர் ஜெர்மனியைச் சார்ந்த கிறிஸ்டியான் ஷென்க் என்பவர். நாடாளுமன்ற உறுப்பினராக 1990ம் ஆண்டில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் இவர் செயல்பட்டிருக்கின்றார்.

அதனை அடுத்து வட அமெரிக்காவின் ஆல்த்தியா கேரிசன் மேசசூசட்ஸ் சட்டமன்றத்தில் 1992ல் செயல்பட்டிருக்கின்றார். கமிலி காப்ரியல் பிரான்சின் கவுன்சில் உறுப்பினராக 2001ம் ஆண்டில் செயல்பட்டிருக்கின்றார். 2002ல் இங்கிலாந்தில் ஜென்னி பெய்லி என்பவர் கேம்பிரிட்ஜ் நகர கவுன்சிலராகச் செயல்பட்டிருக்கின்றார். 2006ம் ஆண்டில் இத்தாலியைச் சார்ந்த விலாடிமியர் லுக்சுரியா என்பவர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் செயல்பட்டிருக்கின்றார்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது மாற்றுப்பாலினத்தோர் நலன்களை முன்னெடுக்க மிக முக்கியத் தேவையாகின்றது. இந்தத் தேவைகளை சமூகத்தில் வலியுறுத்த வேண்டிய கடமையும் சமூகப்பொதுநல அமைப்புக்களது கடமையுமாகின்றது.

நமது சூழலில், மாற்றுப்பாலினத்தோர், மற்றும் மாற்று பாலீர்ப்பு கொண்டோர் பற்றிய நமது சிந்தனையில் ஏராளமான மறு ஆய்வுகள் தேவைப்படுகின்றது. பண்பாட்டு ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நாம் எல்லோரும் சமம் என்ற தெளிவுடன் நாம் மாற்றுப்பாலினத்தோரை அரவணைத்துச் செல்ல வேண்டியது மானுடத்தின் அவசியம்.

மாற்றுப்பாலினத்தோர் மற்றும் மாற்று பாலீர்ப்பு கொண்டோர் என்ற பெயர் கூட பொருந்துமா என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலத்தில் LGBTQI - lesbian, gay, bisexual, transgender, queer and intersexed community என வேறுபாடுகளின் தனித்துவத்தை மதிப்பளித்து சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழில் இன்றும் அரவாணிகள், மாற்றுப்பாலினத்தோர், திருநங்கை, திருநம்பி என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொச்சை மொழிகளில் மாற்றுப்பாலினத்தோரை வசை மொழியாகவும் கேலியாகவும் பேசும் தரம் தாழ்ந்த போக்கும் நமது சமூகத்தில் ஆழ வேரூன்றிப் போயுள்ளது. திரைத்துறை கலாச்சாரம் இதனை மேலும் நம்மிடையே விரிவாக்கியுள்ளது. இவற்றை மாற்றவேண்டும், மனிதத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், மொழிவழி அடையாளம், சமூக அங்கீகாரம், இயல்பான பிரச்சனைகளுக்கான தீர்வு காணுதல், கல்வி, தொழில் மேம்பாடு என்பதோடு மாற்றுப்பாலினத்தோருக்கான அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30,  2020 தொடங்கி நவம்பர் 1,  2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கட்டுரையாசிரியரின் கருத்தரங்க நோக்கவுரை. இந்த 3 நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வையத்தலைமை கொள் பிரிவு இரண்டு காணொளிகளை வெளியிட்டது.

(1) LGBT - ஒரு அறிமுகம் [https://youtu.be/MsiO198Kqec]
(2) `மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு [https://youtu.be/kRwXwwuQtCk]
என்ற பகுதியிலிருந்து காணலாம்.
இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகள் [https://ruletheworld.tamilheritage.org/category/2020-lgbtq-conference/]
என்ற பகுதியிலிருந்து காணலாம்.

கட்டுரையாளர் குறிப்பு:    
lgbt conference9.jpg
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுநர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

நன்றி:  மின்னம்பலம் (நவம்பர் 8, 2020)
---