Sunday, November 22, 2020

பாரி நிலையம் செல்லப்பன்

பாரி நிலையம் செல்லப்பன் 

-- கல்பனாதாசன்



தமிழ் நூல் பதிப்பாளர்களுள் தலை சிறந்தவர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் சக்தி கோவிந்தன் பெயர் நிச்சயம் முதல் வரிசையில் நிற்கும்.  சக்தி கோவிந்தன்,  பாரி நிலையம் செல்லப்பன், முல்லை முத்தையா மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவரும் பர்மாவில் வாழ்ந்து தாயகம் மீண்ட தமிழர்கள். வை கோவிந்தனும் முல்லை முத்தையாவும் செல்லப்பனுக்கு இன்னொரு வகையில் முன்னோடிகள். தமிழ் நூல்கள் பதிப்பை இந்தியத் தரத்துக்கு உயர்த்திய அவர்கள் செல்லப்பனையும் தமது துறைக்கு ஈர்த்து விட்டார்கள்.

1920 இல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அடைக்கப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்த செல்லப்பன் 10 ஆம் வயதிலேயே பர்மாவில் குடியேறி விட்டார். அங்கே அவரது தந்தையார் வணிகம் செய்து கொண்டிருந்தார். தாம் படித்த  ' கம்பை தன வைசியர் கல்வி க் கழக'த்தில் தமிழ்ப்பற்றும் தேசியக் கண்ணோட்டமும் புகட்டப்பட்டார். பர்மாவில் வசித்த காலத்தில் தமிழோடு ஆங்கிலம், இந்தி, பர்மிய மொழி எனப் பன்மொழியில் தேர்ச்சி பெற்றார். 

விடுதலைப் போராட்ட ச் செம்மல்களை நேரில் தரிசிக்கும் ஆர்வத்தில் 1939 இல் செல்லப்பன், காந்தி அண்ணாமலை என்னும் நண்பருடன் பர்மாவிலிருந்து கிளம்பி இந்தியா வந்தார். வார்தாவில் காந்தி, அலகாபாத்தில் நேரு, சாந்திநிகேதனில் தாகூர், கல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் என எல்லோரையும் சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டு மீண்டும் இரங்கூன் வழி பர்மா திரும்பினார். தமிழில் கையெழுத்துப் போட்ட காந்தியார் எழுதிய வாசகம் -" நீரில் எழுத்தாகும் யாக்கை. "

பின்னர், உள் நாட்டு அரசியல் சூழலால் அகதியாக  43 பேர்களுடன் இந்தியா திரும்புமுன் தாம் நடத்திவந்த புத்தகக் கடையை அங்கிருந்த பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வர நேர்ந்தது. 43 பேரில்  கால் நடையாகவும்  பல்வேறு வாகனங்கள் மூலமும் மாறி மாறி அல்லலுற்று உணவு, உறையுள் தொடர்பான இன்னல்கள் அனுபவித்து ஒருவழியாகத் தாம் ஒருவர் மட்டுமே வெற்றிகரமாக இம்மண்ணை மிதிக்கும் பேறு பெற்றார் என்றும் அன்னார் சரிதை பதிவாகியுள்ளது. 

முல்லை முத்தையாவே செல்லப்பனைப் பதிப்பகத் துறையில் ஆற்றுப்படுத்தியவர். இருவரும் முன்பே பர்மாவில் நண்பர்கள். மண்ணடியில் காவலர் குடியிருப்புக்குப் பக்கம் ஒரு மாடிக் கட்டடத்தில் முதல் தளத்தில் இருவர் பதிப்பகங்களும் இயங்கின. முல்லைக்கும் பாரிக்கும் பெயர்ப் பொருத்தம் உண்டல்லவா. முல்லைப் பதிப்பகம், பாரி நிலையம் இரண்டும் இயல்பிலேயே நட்புக் கொண்டாடின. 

சுத்தானந்த பாரதி எழுத்துகளால் கவரப்பட்டிருந்த செல்லப்பன் பதிப்பகத்துறைக்கு  வந்ததில் வியப்பில்லை. தமிழ்ப் புத்தகாலயம்  கண  முத்தையாவுடன் இணைந்து பாரி புத்தகப் பண்ணை என்னும் கூட்டு நிறுவனத்தையும் உருவாக்கினார். அகிலன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் நூல்களை கண முத்தையா பதிப்பிக்க இவர் விற்றுக்கொடுப்பார். பிறகு தாமே பதிப்புப் பணியில் இறங்கினார். மு வரதராசனின் கள்ளோ காவியமோ தான் விற்பனை உரிமை பெற்ற முதல் நூல். நேதாஜி சொற்பொழிவுகள் அடங்கிய " டில்லியை நோக்கி " மொழியாக்க நூலையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

தொடர்ந்து மு வ நூல்கள் அவரிடமிருந்து வரவே மு வ என்றால் பாரி, பாரி என்றால் மு வ என இருவரும் ஈருடல் ஓருயிர் ஆயினர். மு வ தமது நூல்களைத் தாமே அச்சிட்டு க் கொடுக்க செல்லப்பன் விற்பனை செய்து தருவார் என்பது ஏற்பாடு. நல்லி குப்புசாமி செட்டியார் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல் இது - ' நெசவுத்தொழில் சார்ந்த பட்டுச்செல்வம் என்னும் 300 பக்க நூல் பாரி நிலையப் பதிப்பு (ஆசிரியர் கே எஸ் லட்சுமணன்) ரூ 5 விலையில் எனக்குக் கிடைத்தது. எங்கள் நட்பும் அன்றே முகிழ்த்தது. அந்த நூல் அரிய தகவல் களஞ்சியம். '

ஒரு முறை நூல்கள் வாங்கப் பாரி வந்த வேளை முன்பே மு வ மாடியில் பேசி க் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து அண்ணா படியேறி வந்து மு வ வுடன் அளவளாவ மூவரும் நெருக்கம் கொண்டனர். இதுவும் செல்லப்பனுக்கு வாய்த்த பேறுதான். அடுத்து அண்ணாவின் தம்பிக்கு கடிதங்கள் ( 21 தொகுதிகள் ) பாரி மூலம் நூல்வடிவம் கண்டன. பின்னாளில் தி மு க வரலாறு, மாநிலச் சுயாட்சி போன்ற நூல்களும் பாரி வெளியீடாயின. பரிமளம் தொகுத்த 'அண்ணா தன் வரலாறு ' நூலை நான் பாரியில் தான் வாங்கினேன். அண்ணாவின் கட்டுரைகள் வாயிலாகவே அவர் வரலாறு நிரல்பட அ ந் நூலில் வர்ணிக்கப் பட்டிருக்கும். அது ஒரு புதிய பாணி. 

பாரதி தாசன் நூல்களை முதலில் குஞ்சிதம் குருசாமி பிறகு திருச்சி ராமச்சந்திரபுரம் செந்தமிழ் நிலையம் வெளியிட்டார்கள். மூன்றாம் பதிப்பாளர் செல்லப்பனே. 'அழகின் சிரிப்பு ' தான் செல்லப்பன் மூலம் வெளிவந்த முதல் நூல். கவிஞர் பெற்ற தொகை ரூ 500. அடுத்துப் படிப்படியாக மேலும் 9 நூல்கள் தந்து ரூ 5000 பெற்றுக்கொண்டு புதுச்சேரி பெருமாள் கோவில் தெரு இல்லத்தை வாங்கினார் எனப் புதிய புத்தகம் பேசுது ( சூரிய சந்திரன் சந்திப்பு ) நேர்காணலில் குறிப்பு உண்டு. குறிஞ்சித் திட்டு, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் வரை அனைத்தும் பாரி நிலைய வெளியீடுகள். பிறகு பூம்புகார் பிரசுரம் 1970 களில் மலிவுப் பதிப்பு கொண்டுவந்தது. 

ஞான பீடப் பரிசுக்குப் பாரதி தாசன் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.  தேர்வுக் குழுவில் தெ பொ மீனாட்சி சுந்தரம், சா கணேசன், பெ. தூரன் உறுப்பினர்கள். 'புதிய பார்வை'க்கு அளித்த பேட்டியில்  (ராம்குமார் சந்திப்பு) செல்லப்பன் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஈரோடு தமிழன்பனிடம் கேட்டதில் கூடுதல் விளக்கம் கிடைத்தது. "ஞானபீடப்பரிசு பற்றிப் பாரி செல்லப்பன்,என்னுடைய நெஞ்சின்நிழல் என்னும் நாவலை வெளியிடப் பாரதிதாசன் என்னை அழைத்துக்கொண்டு போனபோதுதான் முதன்முதலாகக்கூறினார்.

பாரி நிலையத்தாரிடம் யார் தம்மைப் பரிந்துரைத்தது என்பதை மட்டுமே பாரதிதாசன் கேட்டார். அவரோடு அவர் இல்லம் திரும்பும்வழியில் என்னிடம் சொன்னார்.  " ஒரு லட்சம் தானே, வரட்டுமே. வீட்டுக்கு அரிசியோ பருப்போ வாங்கிப்  போடுவேன் என்றா நினைக்கிறாய்? பெரிய அச்சுயந்திரம் வாங்கிப் போட்டு உன்புத்தகம் மற்றவன் புத்தகங்களையெல்லாம் அச்சடிச்சுப் போட்டால் தமிழ்ப்பகையே அழிந்துபோகும்" என்றார். இதுகுறித்து நான் எழுதியுள்ள பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 

"இடைப்பட்ட காலத்தில் புரட்சிக்கவிஞர் இறந்துவிடவே பரிசு கிடைக்காமல் போய்விட்டது. ஞானபீட விதிமுறைகள் படி பரிசு படைப்பாளியின் மரணத்துக்குப் பின் வழங்கப்படுவதில்லை. ஆனால் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டமைக்காக, பாரி நிலையத்துக்கு தமிழக அரசு ஒரு லட்சம் அளித்துக் கௌரவம் செய்தது. கவிஞர் மறைவுக்குப்பின் சாகித்ய அகாடமி பரிசு பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்காக வழங்கப்பட்டது. கவிஞரின் துணைவியார் பழனியம்மாள் பெற்றுக்கொண்டார்.

செல்லப்பனின் மகன் அமர்ஜோதி மேலும் சில  தகவல்கள் சொன்னார்.  பாரதிதாசன் 1964 இல் சென்னை பொதுமருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்த வேளை அன்னார் திருவுடலை புதுச்சேரி இல்லத்துக்கு எடுத்துச் செல்லவும் அடக்கம் செய்யவும் செல்லப்பன் ரூ 3000 அளித்து உதவினார். கவிஞரின் மகன் மன்னர்மன்னன் வசம் தொகை தரப்பட்டது. அண்ணா 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோதும் செல்லப்பன் நிதியுதவி செய்துள்ளார். அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் செல்லப்பனின் நெருங்கிய நண்பர். 

800 நூல்களுக்கும் மேலாக வெளியிட்ட பாரி நிலையம் அண்ணாவின் 'தம்பிக்கு கடிதங்கள்' பிரும்மாண்டமான மெரினா கடற்கரை விழாவையும், அமர்க்களமே இல்லாமல் பத்தே பேர்களுடன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட) நடைபெற்ற ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன்  வெளியீட்டு விழாவையும் நேர்காணல்களில் தவறாமல்  நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார். ராஜாஜியும் கி ஆ பெ விசுவ நாதமும் தமக்கு ராயல்டி முக்கியமில்லை, நூல்கள் மலிவு விலையில் எல்லோருக்கும் சேரவேண்டும் என்றுதான் வலியுறுத்துவார்களாம்.! 

மீ ப சோமசுந்தரம், ஆசைத்தம்பி, தென்னரசு, புலவர் குழந்தை, வ சுப மாணிக்கம், அ கி பரந்தாமனார், அ மு பரமசிவானந்தம், தனி நாயக அடிகள் எனப் பல்வேறு எழுத்தாளர்கள்  நூல்கள், புலியூர்க்கேசிகன் உரைகள் ஆகியவற்றை விட்டுவிடாமல் சேர்த்து க் கொள்வார். அவரது பதிப்பாசிரியர் குழுவில் இடம் பெற்ற மே வீ வேணுகோபாலப் பிள்ளை, புலியூர்க்கேசிகன், சண்முகம் பிள்ளை ஆகியோர் பங்களிப்பால் பிழைகளற்ற மொழிச் செம்மையை நூல்களில் கொண்டுவர முடிந்தது எனப் பெருமையுடன் குறிப்பிடுவார். 

'பதிப்பகப் பாரி' என நல்லி குப்புசாமி செட்டியாரால் வர்ணிக்கப்பட்ட செல்லப்பன் பல சொல் சொல்லாமல் சில சொல் சொல்லும் சிக்கனக்காரர். தாமுண்டு தமது பணியுண்டு என்று கருமமே கண்ணாயிருப்பவர். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் அவரிடம் உரிமை பாராட்டலாம். ஸ்டாக் ரூம் சென்று நூல்களை த் தேடவும் அலசவும் அவர்களுக்குச் சலுகை தருவார். பேச்சுக் கொடுத்தால் தயங்காமல் அவர்கள் கேட்கும் ஐய வினாக்களுக்கு உரிய பதில் தருவார். அரிதாக அவரே சில நூல்கள் பரிந்துரை செய்வதும் உண்டு. நிறைய விஷயம் தெளிந்தவர். அறிஞர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்களைப் படித்தவர். 

வெறும் நூற்படிப்போடு நில்லாமல் மனிதர்களையும் படிப்பவர். ஆனாலும் ஒருவகை அறிதுயிலில் ஆழ்பவர். அதாவது மௌனம் காப்பவர். இன்னொரு முக்கியமான செய்தி - நூலாசிரியர்கள், பிற பதிப்பாளர்களுக்குத் தரவேண்டிய ராயல்டியைப் பாக்கி வைக்காமல், தட்டி க் கழிக்காமல் காலாகாலத்தில் கணக்குத் தீர்ப்பவர். 

தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ராஜாஜி, அண்ணா, பாரதிதாசன், மு வரதராசன் ஆகியோர்தம் ஆஸ்தான பதிப்பாளர் அப்பெரியோர்தம் அன்புக்கும் நட்புக்கும் உரிய பண்பாளர் பாரி நிலையம் செல்லப்பன் நூற்றாண்டில் அப்பெருமகனை நினைவு கூர்வோம். அன்னார் வழிப் பல்கிப் பெருகிய புதிய தமிழ், எளிய தமிழ், இனிய தமிழ் உலகெங்கிலும் உள்ள தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் செழித்து நீடித்து நிலைப்பதாக என வாழ்த்தி மகிழ்வோம். 


நன்றி - தினமணி தீபாவளி மலர், 2020 





No comments:

Post a Comment