Saturday, November 7, 2020

கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

 கலைஞர் எனும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு 

-- தேமொழி 



எழுத்தாளர் வாசந்தி எழுதி, செப்டெம்பர் 2020இல்  ஜகர்னாட் பதிப்பகம் மூலம்  "கருணாநிதி: தி டெஃபினிட்டிவ் பயோகிராஃபி"(Karunanidhi: The Definitive Biography) என்ற தலைப்பில்,   முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவிற்குப் பின்னர்  ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள அவரது வாழ்க்கை வரலாற்று  நூலின் மீதான திறனாய்வே  இக்கட்டுரை. வாருங்கள் படிப்போம் - நூல் திறனாய்வுக் குழுவின் நிகழ்வில் அக்டோபர் 31, 2020 அன்று இத்திறனாய்வு உரை  வழங்கப்பட்டது. 

---

வாசந்தி  அவர்களின் நூல் தலைப்புகளின் தேர்வு தனித்தன்மையுடன் வியக்க வைக்கும் தன்மை கொண்டவை;  "துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள்" என்பது போல.  துரத்தும் நினைவுகளையும் அழைக்கும் கனவுகளையும்   கொண்டதுதானே நமது வாழ்க்கையாகவே   இருக்கிறது.  திறனாய்வுக்கு உள்ளாகும் 'கருணாநிதி: தி டெஃபினிட்டிவ் பயோகிராஃபி' என்ற இந்த நூலின் அத்தியாயங்களின் தலைப்பும் அவ்வாறே கவனத்தைக் கவரும் வகையில் உள்ளன.  வாசந்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை "கலைஞர் எனும் கருணாநிதி" என்ற தலைப்பில் முன்னர் தமிழிலும்  2018 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.   இப்பொழுது ஆங்கிலத்திலும் நீண்ட நெடிய, பல திருப்பங்களைக் கொண்ட கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை 20 தலைப்புகளில்,  ஒருபாற் கோடாத நடுவுநிலை நின்று கருணாநிதியின் பிறப்பில் தொடங்கி மறைவு வரை 250 பக்கங்கள் கொண்ட நூலாக வடித்துள்ளார்.  

தமிழர்களுக்கு 1980கள் முதற்கொண்டு  நன்கு அறிமுகமானவரும்;  புதினம், கதைகள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என 50க்கும்  மேலான நூல்களை எழுதிய எழுத்தாளரும், இந்தியா டுடே இதழ் தமிழ்ப் பதிப்பின் முன்னாள் ஆசிரியராகவும் பணியாற்றியவர் எழுத்தாளர் வாசந்தி. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்மணி இவர்.  மிஜோரம், நேபாளம், பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளைப் பின்புலமாக வைத்து வாசந்தி   எழுதிய புதினங்கள் - மூங்கில் பூக்கள், ஆர்த்திக்கு முகம் சிவந்தது, மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை.   மெளனப்புயல் என்ற நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாடமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள்'  ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேச சாகித்ய சம்மான் விருது கிடைத்தது.  மேலும் "வாசந்தி சிறுகதைகள்" என்ற தொகுப்பிற்குத் தமிழக அரசின் சிறந்த நூல்  என்ற   விருதும் கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக இவர் எழுதியுள்ளார்.  அந்நூல்களில் 'அம்மா' என்ற நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வெளியாகியது. இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'Cut-outs, Caste and Cine Stars' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 

"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே" என்று அவர் அழைப்பதைக் கேட்டாலே   ஆர்ப்பரிக்கும் தமிழக மக்கள் கூட்டத்தைத்  தன்பால் கவர்ந்து வைத்திருந்த கலைஞர் என்று அறியப்பட்ட, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதிக்குத் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் தனியிடம் உண்டு. அவ்வாறே இந்திய வரலாற்றிலும் தனி முத்திரை பதித்துச் சென்றவர் கருணாநிதி.    

கருணாநிதி வேறு தமிழக அரசியல் வேறு என்று பிரிக்க முடியாத வகையில்,  கடந்த நூற்றாண்டு தமிழக வரலாற்றையே ஒரு மீள்பார்வை செய்வதாக அமைந்துவிட்ட நூல் இது. இந்த நூல் வாயிலாகக்  கருணாநிதியைப் பற்றி அறிந்து கொள்கையில், குறைகளும் நிறைகளும் கொண்ட கருணாநிதி அரசியல் வாழ்வு மூலம் எதைச் சாதிப்பதைத் தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.  அதைக் கருணாநிதியே இந்திய அளவில் அரசியல் பங்களிப்பில்  அவரால் செயல்படுத்த முடிந்த குறிப்பிடத் தக்கப்  பங்களிப்பாகவும்  கூறிச் சென்றுள்ளார். 

பிற்காலத்தில் கருணாநிதியைப் பற்றி ஏதும் நேரடியாக அறிந்திராத, ஆனால் கிடைக்கும் பலவகைப் பதிவுகள் மூலம் மட்டுமே கருணாநிதியின்  அரசியல் வாழ்வை அறியக்கூடிய ஒரு நிலையில் இருக்கும் வருங்காலத் தலைமுறையும் அவரது ஆட்சியின் செயல்பாடுகளை எடை போட்டு அதையே அவரது பங்களிப்பாக, கருணாநிதியின் அடையாளமாக  முடிவு செய்ய வேண்டியிருக்கும். 

இந்த நூலின் நான்கைந்து  அத்தியாயங்கள் குறித்த சற்று விரிவான அலசலுடனும், மற்ற அத்தியாயங்கள்; அதாவது  வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும், ஆனால் யாவரும் அறிந்த கருணாநிதி குறித்த வரலாற்றுப் பின்னணிகள் மேலோட்டமாகவும் குறிப்பிட்டுவிட்டுக் கடந்து செல்வோம். ஏனெனில்,  கருணாநிதி அரசியல்வாதியாகத் தமிழகம்   மற்றும்  இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மட்டும் சொல்வதே சமூக அளவில் கருணாநிதியின் பங்களிப்பைக் காட்டும்  என்பது எனது கருத்து. 

மேலும், கருணாநிதி எழுதிய தன்வரலாற்று  நூலாகிய புகழ்பெற்ற 'நெஞ்சுக்கு நீதி' என்ற நூலின் 6 தொகுப்புகளையும் படித்தவருக்கும், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் 1950 களுக்குப் பிறகு பிறந்து தமிழகத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய எவருக்குமே நூலில் எதுவும் புதிய செய்திகளாக இருக்க வாய்ப்பில்லை.  ஆனால் நெஞ்சுக்கு நீதி  6 நூல்களின் செய்தியையும் அதன் பிறகு கருணாநிதியால் முடிக்கப் படாமல் விட்டுப்போன பிற்கால  நிகழ்வுகளையும் சேர்த்து 250 பக்கங்களில் விறுவிறுப்பாகத் தொய்வின்றி சுருக்கமாகச் சொல்லிச் சென்ற வாசந்தியின் திறமை பாராட்டிற்குரியது.  எத்தனை முறை  ஆனாலும் முன்னர்  பார்த்த 'பராசக்தி' திரைப்படத்தையே நம்மால் மீண்டும் மீண்டும் பார்க்க முடிவது போல, கருணாநிதியின் தாக்கத்திற்கு உள்ளான தமிழக வரலாற்றையும் இந்த நூலின் வழி நினைவு கூர்ந்து அசை போட முடியும். 

அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழகத்தின் ஒரு முன்னணிக் கட்சியின் தலைவராக, ஐந்து  முறை  முதல்வராகப் பொறுப்பு வகித்த,  எந்த தேர்தலிலும் தோல்வியுறாத ஒரு அரசியல்வாதியாகவே நூல் அவரைக் காட்டிச் செல்கிறது.  அவரது இளமைக் காலம், கலையுலக வாழ்க்கை போன்றவை நூலில் மிகக் குறைவாகவே உள்ளன. எதன் மூலம் மக்கள் மத்தியில் கருணாநிதி பெரும்பான்மையாக அறியப்பட்டாரோ அந்த கலையுலக பங்களிப்பு என்பது இறுதியில் அவரது மறைவு குறித்துக்   கூறப்படும் அத்தியாயத்தில் சிறிய அளவில் சற்றே இடம் பிடிக்கிறது.  தேவையான அளவு இளமைக் கால, கலையுலக வாழ்க்கையுடன் அவரது அரசியல் வாழ்வு  குறித்து நூலில் விவரிக்கப்படுகிறது. 

1934இல் பத்து வயது சிறுவனாகத் திருக்குவளை வீட்டில் தனது தந்தை முத்துவேலர் வாசிக்கும் நாதஸ்வர இசையைத் தன்னை மறந்து கேட்டுக்  கொண்டிருந்த கருணாநிதிக்குச் சாதி பேதத்தின் முதல் பட்டறிவு  கிட்டுகிறது.  திறமையான இசைக்கலைஞரும் கல்வி அறிவு கொண்டவரான தனது  தந்தை மிராசுதார் அழைப்பின் பேரில் அவர் வீட்டிற்குச் சென்று  இடுப்பில் துண்டுடன் கூனிக் குறுகி அவர் முன்  நிற்க வேண்டிய நிலைக்குச் சாதி அமைப்புதான் காரணம் என்று புரிந்து கொண்ட துவக்கம் அது. பின்னர் அதுவே அவர் பிற்காலத்தில் யாராக உருவெடுக்கிறார் என்பதற்கான காரணம் என்று  'Born to Rebel' என்ற தலைப்பில்   நூலைத் துவக்குகிறார் வாசந்தி. பள்ளியில் நீதிக் கட்சியின் பனகல் அரசர் குறித்துப்  படித்த நூலின் மூலம் சமூக நீதி பற்றி அவர் அறிந்து கொண்டது அவரது  வாழ்வைச்  சமத்துவக் கொள்கைப் பாதைக்குத் திருப்ப மேலும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.  ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்க முழக்கங்களும், அவரது தளபதி சி.என்.அண்ணாதுரையின்  அருமைத் தமிழில் அமைந்த திராவிடக் கொள்கைப் பரப்புரைகளும் கருணாநிதியை 14 வயதிலேயே 'மாணவ நேசன்' என்று கையெழுத்துப்  பத்திரிக்கையைத்  துவக்கி வெளியிடும் இதழாளராகவும் மாற்றியது. அத்துடன் அவரை  இந்தி திணிப்பு கொள்கையின் ஒரு  எதிர்ப்பாளராக மாற்றிவிட்டது.  இதற்கு நீதிக் கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு 1937இல்  ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதலமைச்சர் ராஜாஜி பள்ளியில் இந்தியை நுழைக்க முற்பட்டதுதான் திருப்புமுனை. 

தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத சில திருப்புமுனைகள் உள்ளன. அந்த திருப்புமுனைகள் நிகழக் காரணம் ஆட்சியில் இருப்பவர் செய்த தவறான கணிப்புகளின் விளைவுகளும், எடுத்த அல்லது எடுக்கத் தவறிய நடவடிக்கைகளின் விளைவுகளாகவே அமைந்திருந்தன என்பது மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. 

பள்ளி வாழ்க்கை முடிந்து இளைஞரான  பின்னர் திருமண வாழ்க்கை, தொடர்ந்து நாடகத் துறையில் நுழைந்தது, ஈ.வெ.ராவின்  குடிஅரசு இதழில் துணை ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தது, அங்கிருந்து ஜூபிடர் பிலிம்ஸ் மூலம் திரைத்துறையில் கதை வசனம் எழுதச் சென்றது, அங்கு நடிகராக இருந்த எம்.ஜி.ஆருடன்  ஏற்பட்ட நெருங்கிய நட்பு என்பது வரை ஒரு தனிப்பட்ட இலக்கிய ஆர்வமுள்ள முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு. 

இதன் பிறகு  திமுகவும் அதனுடன் கருணாநிதியும் இணைந்து பயணித்த வரலாற்றின் துவக்கம்.  ஈ.வெ.ராவின் திராவிட கழகத்திலிருந்தவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு அரசாட்சியில் பங்கேற்க விரும்பி அண்ணாதுரையின் தலைமையில் துவக்கிய திமுக என்று அறியப்படும்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம், அந்தக்  கட்சியின் கொள்கை பரப்பும்  பொறுப்பேற்று  முக்கியமான ஒரு  உறுப்பினராகக் கருணாநிதி அரசியலில்  பயணித்தது,  1950 மற்றும் 1960களில் இந்தி திணிப்பு எதிர்ப்பில் தீவிரமாகப்  பங்கேற்றது,  டால்மியாபுரம் - என்பதைக்  கல்லக்குடி எனப்   பெயர் மாற்றம் கோரிய  போராட்டத்தில் புகைவண்டி மறியல், தண்டவாளத்தில் படுத்துப்  போராட்டம் செய்து கருணாநிதி சிறைக்குச் சென்றது,  இவ்வாறாக எதிர்பாராத வகையில் கருணாநிதி  நடத்திய  இந்த   அதிரடி செயலால் அண்ணாதுரையின்  மனவருத்தத்திற்கு ஆளானது,  குளித்தலையில் போட்டியிட்டு 1957இல் சட்டசபைத் தேர்தலில்  வென்றது, தொடர்ந்து முரசொலி நாளிதழில் உடன்பிறப்புக்களுக்குக் கடிதம் எழுதி கட்சி உறுப்பினர்களுடன் ஒரு  வலுவான தொடர்பை வளர்த்துக் கொண்டது  ஆகியன  நாம்  விரைவில் பார்த்துக் கடக்கக் கூடிய திமுகவின் கட்சி உறுப்பினராகக் கருணாநிதியின் ஆரம்பக்கால அரசியல் வாழ்க்கைச் சுருக்கம். 

1965 இல் திமுக தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச்  சிறையில் அடைத்த பிறகும் மாணவர்கள்  நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடக்குமுறையின் மூலம் ஒடுக்க நினைக்க, அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளில் தமிழகமே நிலைகுலைந்து போனது. இது   திமுகவிற்கு 1967 தேர்தலில் வெற்றி வாய்ப்பை அளித்து ஆட்சியை திமுக  கையில் கொடுத்தது.  இது திமுகவே எதிர்பார்த்திராத ஒரு வெற்றியாக அமைந்தது, சி.என்.அண்ணாதுரை முதல்வர் பொறுப்பை ஏற்றார், கருணாநிதி தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 

ஆனால் அண்ணாதுரையின் கெடுவாய்ப்பாக நோயுற்று, புற்று நோயால் 1969 இல் இயற்கை எய்தினார்.  கட்சி உறுப்பினர்களே தங்களது அடுத்த தலைமைப் பொறுப்பைத் தேர்வு செய்துகொள்வதே முறை என்று நோயுற்று  இருந்த அண்ணாதுரையும்  தனக்கு அடுத்து யார் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை.  அவர் மருத்துவமனையிலிருந்த காலத்தில்  இடைக்கால முதல்வராக இருந்தவர் திமுகவின் ஐம்பெரும் தோற்றுநர்களில் ஒருவரான,  சிறந்த கல்விமானாக,  நல்ல   பேச்சாளராக,  கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த நெடுஞ்செழியன்.  

அவரைவிட  திமுக சட்டசபை உறுப்பினர்கள் கருணாநிதியே முதல்வர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கருணாநிதியைக் கேட்டுக் கொள்ளத் தொடங்கினர்.  கருணாநிதியுடன் தமிழகமெங்கும் தொடர்பிலிருந்த திமுக கட்சி உறுப்பினர்களும்  இதையே விரும்பிய நிலையில், கருணாநிதியின் நெடுநாளைய நண்பரும் கட்சியில் முக்கியப் புள்ளியாக இருந்த எம்.ஜி.ஆரும் அதையே விரும்பி கட்சியில் மக்களாட்சி முறை அடிப்படையில் கருணாநிதியை திமுக தலைவராகவும் முதலமைச்சர் பொறுப்பிலும் தேர்வு செய்தார்கள்.  383 திமுக கவுன்சில் உறுப்பினர்களில் 300 பேர் கருணாநிதியை முதல்வர் பதவிக்கு ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.  எம்.ஜி.ஆர் தனது ராமாவாராம் தோட்ட வீட்டில் திமுக உறுப்பினர்களுடன்  கலந்துரையாடி கருணாநிதிக்கு ஆதரவு திரட்டி  கருணாநிதி முதல்வராக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.   அன்று தொடங்கி கருணாநிதி திமுகவின்  தலைமைப் பொறுப்பில் சற்றொப்ப அரை நூற்றாண்டாகப் பொறுப்பிலிருந்து பல தேர்தல் தோல்விகளுக்கும் பின்னரும், கட்சியில் ஏற்பட்ட பிளவுகளுக்குப் பின்னரும்  ஒரு உறுதியான கட்சியாக திமுகவை அவர் விட்டுச் சென்றார் என்பது ஒரு திறமையான மேலாண்மைக்குச் சான்று. 

கருணாநிதி முதல்வர் பதவி ஏற்ற பின்னர் மனுநீதி திட்டம் என்று அதிகாரிகள் மக்களிடமே சென்று குறை கேட்டு நிவர்த்தி செய்வது, பிற்படுத்தப்பட்டோர் நலவாழ்விற்காக சட்டநாதன் ஆணைக்குழு அமைத்தது,  அதன் பரிந்துரையில் இட ஒதுக்கீட்டை 49 விழுக்காட்டிற்கு உயர்த்தியது, சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் 1968 இல்  கீழவெண்மணி உழவர் படுகொலை நிகழ்ச்சியினால் உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் குறைந்த அளவு ஊதியம் என்ற முறை  கொண்டு வந்தது,  காங்கிரஸ் ஆட்சியிலிருந்த நில உச்சவரம்பை 30 இல் இருந்து 15 ஏக்கர் என்ற அளவிற்குக் குறைக்கும்  சட்ட மாறுதல் போன்றவை குறிப்பிடத்தக்க அரசியல் செயல்பாடுகள். இந்தியா சுதந்திர நாளில் மாநில முதல்வர் தேசியக் கொடியேற்றும் உரிமை, மனிதரை மனிதர் இழுக்கும் கைரிக்ஷா ஒழிப்பு போன்றவை கருணாநிதி  முதல் முறை முதல்வர் பதவி வகித்த பொழுது கொண்டு வந்த மாற்றங்கள். 

மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி கொள்கை முன்னெடுப்பு,  மத்திய -மாநில அரசுகளின் அதிகாரம் உறவு போன்றவற்றை மேம்படுத்த ராஜமன்னார் ஆணையம்  அமைத்தது என்பது அரசியல் மற்றும் ஆட்சிக் கோணத்தில்  ஒரு முற்போக்கான நடவடிக்கை.  இது இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகக் கருதப்பட்டது.  9 ஆண்டுகள் கழித்து மற்ற மாநிலங்களும் பாராட்டி இதை  நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது. 

1969 இல் காங்கிரஸ் இரண்டாகப் பழைய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் என்று உடைந்த பொழுது, மத்தியில் இந்திரா காந்தியின் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தாலும் தனது மாநில சுயாட்சி கோரிக்கையைக்  கைவிட இயலாது என்பதை வலியுறுத்த "உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்"  என்று அறிவித்து இந்திரா காந்தியின்;  வங்கிகளைப் பொதுவுடைமையாக்கும் திட்டத்தில் உதவியது, விவி கிரியை  இந்திரா காந்தியின் விருப்பப்படி தற்காலிக குடியரசுத் தலைவர்  பதவியில் அமர்த்துவது போன்றவற்றில் கருணாநிதி இந்திரா காந்திக்கு  உதவினார். 

மத்திய மாநில அரசுகளின் இடையே ஆட்சியிலிருந்தவை எதிர்க் காட்சிகளாக இருந்தாலும் உறவுச்  சிக்கல் இன்றி இருந்தது  என்பதைக்  கருணாநிதியின் ஆட்சிக் கால விளைவுகளாக  வாசந்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடாத  மேலும் சில நற்பணிகளும்  எனக்கு நினைவில் உள்ளது  குறிப்பாகக்  கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம்,  குதிரைப் பந்தய ஒழிப்பு, தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை  ஏற்பாடுகள், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்  போன்றவை. 

கட்சியில் தனக்கு இணையான அளவில் மக்கள் ஆதரவுடன் இருந்த எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை உணர்ந்தாலும் அவரது வளர்ச்சியைப் பெரிதுபடுத்த, அங்கீகரிக்க  விரும்பாத மனநிலை கருணாநிதிக்கு இருந்தது. 1971  தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்த திமுக அமைச்சரவையில் ஒரு பதவியை எதிர்பார்த்திருந்த எம்.ஜி.ஆரின் விருப்பம் நிறைவேறவில்லை.   கட்சி உறுப்பினர்களின் முடிவாக அது  காட்டப்பட்டது.  நடிப்புத் தொழிலை விட்டு வந்தால் அமைச்சரவையில் இடம் என்று கூறப்பட்டதில் மனம்  குமைந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்குப்  போட்டியாக கருணாநிதியின் மகன் மு.க.முத்துவும் 1972 இல்  திரைப்படத்துறையில்  களமிறங்கியதும் அல்லது இறக்கப்பட்டதும்  எம்.ஜி.ஆருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. 

இவ்வாறாகக் கட்சிக்கு எதிராகத் தனது  மனக்குறையை  வெளிப்படையாகக் காட்ட இயலாத  நிலையிலிருந்த எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியால் வருமானவரி குறித்த ஆய்வு என்ற சிக்கலில் சிக்க வைக்கப்பட்டார். இதற்காக  எம்.ஜி.ஆர். டெல்லி சென்று வந்த பின்பு ஒரு  புதிய மனிதராக மாறினார் என்பது கருணாநிதியின் கருத்து.  தேர்தல் கூட்டணியில் காங்கிரசுக்குச் சரியான பிரிவினை  கொடுக்கப் படவில்லை  என்று கருணாநிதி மீது குறைபாட்டுடன் இருந்த இந்திராகாந்தி திமுகவினை சிதைக்க எம்.ஜி. ஆரைப் பயன்படுத்தி, கட்சிக்குள் மறைமுகமாகப் பிளவு ஏற்படுத்தினார். இவற்றைக்  கண்ணன்  எழுதிய எம்.ஜி.ஆர். நூலிலிருந்து மேற்கோள் கொடுக்கிறார் வாசந்தி. இதன் பிறகு கட்சியின் விதிமுறைகளையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்காமல் கட்சியின் நிதி நிலை  கணக்கு கேட்டு பொதுவில்  வெளிப்படையாக எம் ஜி ஆர் குற்றம் சாட்டிய  பொழுது,  எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து கருணாநிதியே எதிர்பார்க்காத முறையில் வெளியேற்றக் காரணமான நடவடிக்கை எடுத்தவர்  எம்.ஜி.ஆரால் கருணாநிதியிடம் முதல்வர் பதவியை இழந்த நெடுஞ்செழியன். 

அதன் பிறகு துக்ளக்  ஆசிரியர் சோ  கணித்தது போல  திமுகவின் வாக்குகள் எம்.ஜி.ஆருடனும் கட்சி கருணாநிதியிடம் சென்றுவிட்டது. அரசில் ஊழல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததன் எதிரொலியாக கருணாநிதி அரசு முன்னெடுத்த பொதுப்பணியாளர்கள் ஊழல்களைக் கட்டுப்படுத்த  வரையப்பட்ட சட்ட மசோதா  எம்.ஜி.ஆரால் ஏமாற்று வேலை என்று கூறி முறியடிக்கப் பட்டது. கச்சத்தீவு இந்திய அரசால்  இலங்கைக்கு அளிக்கப்பட்ட பொழுது மறுப்பு  தெரிவித்த கருணாநிதியின் மீது எம் ஜி ஆரால் அன்றும்,  அவர் கட்சியினரால்  இன்றும் கருணாநிதி அதைத் தடுக்கவில்லை என்ற குற்றம் சாட்டப்படுகிறது.

கருணாநிதி இந்திரா காந்திக்கு  மத்தியில் ஆதரவு அளித்தாலும், இந்திராகாந்தி நெருக்கடி நிலை அறிவித்த போது (1975-1977 ஆண்டில்) மனித உரிமைகளை மதிக்காத, மக்களாட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம் என்று  கண்டித்தார் கருணாநிதி.  அதனால் அவர் ஆட்சி 1976 இல் எம்.ஜி.ஆர். உதவியுடன் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கவிழ்க்கப்பட்டு கருணாநிதியின் மகன் மு.க. மகன் ஸ்டாலின் உட்பட திமுக கட்சி உறுப்பினர்கள் சிறை சென்றனர். சர்க்காரியா ஆணையக்குழு ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ற பரபரப்புகளினாலும்,   எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி துவங்கி விட்டதாலும்  1977 இல் ஆட்சியைப் பிடித்தார் எம். ஜி ஆர்.  அதன் பிறகு 13 ஆண்டுகளுக்கு,  அதாவது எம்.ஜி.ஆர். மறையும் வரை, கருணாநிதியால் முதல்வர் ஆக இயலவில்லை. 1989 இல் மீண்டும் முதல்வர் ஆனார்.  அதன் பிறகு எம்.ஜி.ஆரின் ஆட்சி வாரிசான ஜெயலலிதாவுடன் கருணாநிதியின் போராட்டம் தொடர்ந்தது. 1989 இல் வி.பி.சிங்,   மண்டல் ஆணைக்குழு / மண்டல்  கமிஷன்  பரிந்துரையின்படி இட ஒதுக்கீட்டை  49.5 விழுக்காட்டிற்கு உயர்த்த  உறுதுணையாக இருந்தது கருணாநிதி இக்காலத்தில் இந்திய அரசியலில் பங்களித்த முக்கிய செயல்பாடு. 

1990-91இல் ஈழப் போராட்டத்திற்கு கருணாநிதி அளித்த ஆதரவில், தமிழகத்தில் ஈழப் போராளிகளுக்குக் கட்டுப்பாடுகள் காட்டாத நிலையில் போராளிகளுக்குள்ளேயே போராட்டம்.  புலிகளைக் கருணாநிதி கட்டுப்படுத்துவதில் தோற்றதில் கே.பத்மநாபா கொலை என்று தொடங்கி ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி  கொலையில் அது  முடிந்தது. தமிழகமும் இந்தியாவும் அதிர்ச்சிக்கு உள்ளானது. அதனால்  தேசியப் பாதுகாப்பில் தவறியதாகப்  பழியைச் சுமக்க நேரிட்ட கருணாநிதியின்  ஆட்சி 1991 இல் கவிழ்க்கப்பட்டது, குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று  1991 இல் ஜெயலலிதா முதல்வரானார்.  அவரது ஆட்சி ஊழல்  மலிந்தது என்று பெயர் வாங்க அவரும் தொடர்ந்து வந்த தேர்தலில் 1996  இல் பதவியை  இழந்தார். 

1996 இல் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். பிறகு  கருணாநிதி 1996  இல்  இருந்து 2014 வரை மத்திய அரசின் அரசியலில் ஆணித்தரமாக இடம் பிடித்து, மத்தியில் மூன்றாம் அணியின் சார்பில் பிரதமராகக்  கிடைத்த வாய்ப்பை என் உயரம் எனக்குத் தெரியும் என்று கூறி மறுத்தார். அப்பொழுது  மத்தியில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அவரது பங்களிப்பு இன்றி அமையாததாக இருந்தது. 

கட்சி என்ன சங்கரமடமா வாரிசு முறையில் நடத்துவதற்கு என்று கூறிய கருணாநிதி  அதை மறந்தார்.  ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று தனது பிள்ளைகளும், உறவினர்  மாறன்களும் கட்சியிலும் ஆட்சியிலும் இடம் பெறச் செய்தார். அதற்காகக் கட்சியில் வைக்கோ போன்று வளர்ந்து வருபவர்களை வெளியேற்றியது  போன்ற செயல்பாடுகள்  திமுக என்பதை  ஒரு குடும்ப அரசியல் கட்சி என்ற நிலைக்குக் கொண்டு சென்றது.  

இந்த நூல் வெளியான பிறகு  இந்துஸ்தான் டைம்ஸ், 2 ஜி ஊழல் குறித்து இடம் பெறும்  'The ‘Mother of All Scams’ என்ற தலைப்பில் உள்ள 17வது அத்தியாயத்தின் பகுதியை Book  Excerpt என்று வெளியிட்டிருக்கிறது. நூலின்  13  ஆவது அத்தியாயம் 'Administrator Par Excellence' என்று கருணாநிதியின் ஆட்சியில் அவரது பங்களிப்பு என்ன என்று விவரிக்கும்.  இப்பகுதியில்  1996-2001; 2006-2011 கால கட்டங்களில் கருணாநிதி செயல்படுத்திய  திட்டங்களை மிக விரிவாக வாசந்தி அலசுகிறார். இந்த அத்தியாயமும் ஆசிரியரின் அனுமதி பெற்று  அவ்வாறு வெளியிடத்  தகுதியான ஒரு பகுதியே.  இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்,   சமூகநீதி பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினால் தமிழகத்தை முன்னணி மாநிலமாக,    வளர்ச்சியடைந்த ஒரு  மாநிலமாக நிறுத்தி,  தமிழகத்தைத்  தனித்து நிற்கச் செய்ததில் ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி அரசின்  பங்களிப்பும் மக்கள் நலத் திட்டங்களும் காரணம் என்பதை முன்னுரையிலேயே சுருக்கமாகக் குறிப்பிட்டு விடுகிறார் வாசந்தி. 

இந்த அத்தியாயம் அவற்றை மிக விரிவாக அலசுகிறது. பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, கிராமப்புற மின்வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, நியாயவிலைக்கடையின் உணவுப் பொருட்கள் விநியோகம் மேம்பட்டது, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை உயர்த்தியது, தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பாடு,  சமத்துவ புரம், உழவர் சந்தை போன்ற கருணாநிதியின் கனவுத் திட்டங்கள் என இந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு பத்தியிலும் கருணாநிதி அரசின்  மக்கள் நலத் திட்டங்கள் குறித்துத் தொடர்ந்து பல தகவல்கள் நிரம்பியுள்ளன.   

மற்ற அத்தியாயங்கள் தனிப்பட்ட ஒரு மனிதர் அரசியலில் நுழைந்து ஆட்சியில் அமர்ந்து பிறகு அதை இழந்து மறைந்த வரலாற்றைக் கூறும்.  ஆனால், இந்த  அத்தியாயம்  கருணாநிதியின் ஆட்சியின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம், மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப்  பட்டியல் இட்டுச் செல்கிறது.  இத்திட்டங்கள் தமிழக மக்களுக்கானது என்ற பொது நோக்கில் பார்க்கப்பட்டாலும்,  திட்டங்களின் அடிப்படை சீர்திருத்தம், சமநீதி போன்றவற்றைக் கருத்தில் கொண்டதாக இருப்பதைக் காணலாம். 

The ‘Mother of All Scams’  2G spectrum   -  What was once the 2G spectrum tale? என்று 2G ஸ்பெக்ட்ரம் குறித்து 17 ஆம் அத்தியாயத்தில் சுருக்கமான தெளிவான விளக்கம் நூலில் கொடுக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய  5G புழக்கத்தில் இது  மீள்பார்வை செய்யப்பட வேண்டிய ஒரு பழங்கதை. ஆனால் மக்களுக்குப் படிப்பினை தரும் ஒரு கதை. ஒரு மத்திய அமைச்சருக்கு இதற்கான ஆணை பிறப்பிப்பதில்,  முடிவெடுப்பதில் உள்ள அதிகாரநிலை ஊழலுக்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதா ? என்பது தீவிரமான ஆய்வுக்கு உள்ளாக்கப் படவேண்டியதே.  ஆனால் அந்த ஆய்வின் விளைவு என்ன என்பதோ மற்றொரு  கோணம்.  

2 ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிப்பதில்  இதுவரை இருந்த முறை மாற்றப்பட்டது,  முறையற்ற வகையில் குளறுபடி நடந்துள்ளது என்று கேள்விப்படுகிறேனே, என்று தொலைபேசியில் அமைச்சர் ராஜாவை அழைத்துக் கேட்ட கருணாநிதியின் கலக்கம்  நிறைந்த குரலும், அவர்   என் பெயரைக் கெடுத்துடாதே என்று கவலையுடன் ராஜாவிடம் சொன்னதும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அமைச்சர் ராஜா கருணாநிதிக்கு விளக்கம் அளித்த பொழுது, இது வதந்தியாகத் துவங்கிய பொழுது கவலையுடன் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு வந்த, கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய  இந்து ஆசிரியர் என்.ராமிடம் நடந்ததை விவரிக்குமாறு சொல்லியிருக்கிறார் கருணாநிதி.  

2G ஸ்பெக்ட்ரம் விநியோகிப்பதில் வழக்கமாக நடைமுறையிலிருந்த,  ஏலம் விட்டு அதிக தொகை சொல்பவருக்கு விநியோக உரிமை வழங்கும் முறையைக் கைவிட்டு, விருப்பம் தெரிவித்து வரிசைப்படி கோரிக்கை வைத்தவர்களுக்கு அந்த வரிசைப்படி வழங்கியதால் இந்திய அரசிற்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி (1,76,000 கோடி)   இழப்பு ஏற்படுத்திய ஊழலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.  உரிமம் வழங்குவதில் ஊழல் என  அமைச்சர் ராஜா மீது சுப்பிரமணியம்  சாமி முன்னெடுப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் ராஜா குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றது கருணாநிதியின் கைமீறிய  செயலாக இருந்தது கருணாநிதிக்கு  ஒரு அதிர்ச்சி.  இதை எதிர்க்கட்சியின் வாய்ப்பாகப் பயன்படுத்தி ஜெயலலிதா 2011 தேர்தலில் நான்காவது முறை  ஆட்சியைக் கைப்பற்றியதும், தொடர்ந்து 2G வர்த்தகத்  தொடர்பாகக் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் பொறுப்பிலிருந்த அவரது மகள் கனிமொழி திகார் சிறையில் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டதும் 87 வயது கருணாநிதிக்குத் தொடர்ந்து கிடைத்த பேரிடிகள். ஆனால், 2017 இல், அதாவது  7 ஆண்டுகள் கழித்து ஊழல் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை, ஐயத்தின்  பேரில் தொடரப்பட்ட வழக்கு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது என்றாலும் இடைப்பட்ட காலத்தில் எண்ணிறைந்த இழப்பு கருணாநிதிக்கும் அவரது  திமுக கட்சிக்கும், அவர் பொறுப்பிலிருந்த திமுகவின் அரசுக்கும். இதனால்  தமிழகத்தின் வளர்ச்சியும்  மக்கள் நலத் திட்டங்களும் 

எந்த அளவுக்கு பின்னடைந்தன என்பதை மக்கள் மீள்பார்வை செய்யும் தேவையும் உள்ளது.

இதற்கிடையில்  2G ஸ்பெக்ட்ரம்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவரும் குற்றவாளிகள் இல்லை என்று எதிரணியினரை நீதிமன்றம்  விடுவித்த தீர்ப்பையும்,  அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கின்  தீர்ப்பின்படி  ஜெயலலிதா ஒரு குற்றவாளி  என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதையும் அறியாமலே, அடுத்தவரின் மீது ஊழல் குற்றம் பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவும்  மறைந்து விட்டிருந்தார். 

காலம் கடந்து வழங்கப்படும்  நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் (Justice delayed is justice denied) என்பது ஒரு சட்ட அறம்.  அது சமுதாயத்தைப் பாதிக்கும்.

கருணாநிதி தனது தனிப்பட்ட வகையிலும், அரசியலிலும் செய்த சில தவறான கணிப்புகளினால் அவர் அரசியல் வாழ்வு சறுக்கல்களுக்கு உள்ளானதைத் தெளிவாகவே நூல் காட்டுகிறது.  தமிழார்வலராகவும் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் இருந்தவர் கருணாநிதி.   அதனால்  தான் என்றும்  தமிழினத்தின் ஒரு தலைவராக,  பாதுகாவலராக இருக்க வேண்டும், சமய சார்பற்ற கொள்கை கொண்டவராக மக்கள்  மனதில் இடம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உலாவிய ஈழப் போராளிகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதிலும், கோவை இஸ்லாமியர் தொடர்பான குண்டுவெடிப்புகளில் கடுமையான கட்டுப்பாட்டைக் காட்டத் தவறிய பிழைகளால் இருமுறை கருணாநிதியின்  அரசியல் வாழ்வு கவிழ்ந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் வாசந்தி;  அவரது தமிழ்க் காவலர், சமயசார்பற்றவர் போன்ற அடையாள விருப்பங்களைக் கருணாநிதியின் பலவீனங்களாகப்  பார்க்கிறார்.  

அவ்வாறே   கட்சி நெருக்கடிக் காலத்தில்  இன்னல்களை எதிர்கொண்ட நாளிலிருந்தே கட்சிப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களை வளர்த்துவிட்டது,   அவர்களுக்கும் மத்திய அரசு வரை பதவி பெற்றுத்தர முற்பட்டது,  தீவிரவாதத்தில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களைக்  கண்டிக்க முடியாத பாசத்தில் சிக்கிக் கொண்டது,  சட்டத்தை மதிக்காது குற்றங்கள் புரிந்த கட்சி  உறுப்பினர்களைத்  தண்டிக்காதது யாவும் அவரது  சறுக்கல்கள்  என்று மிகத் தெளிவாகவே வாசந்தி சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் அரசியலில் நுழைய  விரும்பும் பிறர் கருணாநிதியின் வாழ்க்கையிலிருந்து  கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.  

இந்தியாவில் தொடர்ந்து கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை இனி எதிர்காலத்திலாவது மாற வேண்டும். 

கவிஞர்  வாலி,   தான் எழுதிய ஒரு புதுக் கவிதையில் .. 

நீ தடியில்லாத பெரியார்

பொடியில்லாத அண்ணா

இருவரும் உன் வடிவில் 

இருக்கிறார் ஒன்னா

என்று முத்தாய்ப்பாக  கருணாநிதியைப் பற்றிக் கூறியிருப்பார். அது சரியான எடை  போடுதலே. 

சமூக நீதிக்கான ஈ.வெ.ராவின் கொள்கைகளையும் போராட்டக் குணங்களையும்; சி.என்.அண்ணாதுரையின் தமிழ் ஆளுமையும்,  மக்களைக்  கவரும் பேச்சுத் திறமையையும்,  அரசியல் திறமைகளையும் தக்க விகிதத்தில் கலந்தவராகக் கருணாநிதி இருந்ததால் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றும்  எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதி திட்டங்கள், பெண்களுக்குச் சம உரிமை, சாதி ஒழிப்பு நடவடிக்கைகள் என்று  சீர்திருத்தக் கோணத்தில் பல திட்டங்களை வகுத்தவராகா  பிற்காலத்தில் அவரது ஆட்சிக் காலத்தைப்  பிறருடைய ஆட்சிகளுடன் ஒப்பிடும் அரசியல் ஆய்வாளர்கள் அடையாளம் காணுவார்கள் என்பது உறுதி.  

தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ அரசு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் "கல்விக் கொடை தந்த காமராஜர்" என்பது காமராஜர்  தமிழ்நாட்டிற்கு அளித்த பங்களிப்பாகவே அறியப்படுவது என்பது யாவரும் அறிந்த உண்மை.  அது போல, கருணாநிதியின் பங்களிப்புகள் வழி அவரது ஆட்சியை எடை போட்டால்  சமத்துவம் - சமூகநீதி  மேம்பாடு என்பதுடன்  அவர் அடையாளம் காணப்படுவார்.    

இன்று கருணாநிதி தமிழர் அல்ல ஒரு தெலுங்கர் என்று கூறப்படும் கருத்தை வாசந்தி தனது நூலில் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி, இலங்கையில் பிறந்தவர் என்ற செய்திகள் எம்.ஜி.ஆர் பற்றி குறிப்பிடுகையில் அதையும் குறிப்பிட வாசந்திக்கு வாய்ப்பு இருந்திருக்கிறது.  அதையும் அவர் பதிவு செய்து வைத்திருக்கலாம்.  இறுதியில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மருத்துவ மனையில் தனியாக அடைபட்டுவிட யாருமற்ற தனிமையில் அவர்கள் எண்ணங்கள் எவ்வாறு இருந்திருக்கும், கருணாநிதியின் மீது பற்று கொண்ட ஒரு பெரிய குடும்பமே அவருக்கு இருக்க, பணத்திற்காக மட்டுமே ஜெயலலிதாவைச்  சுற்றி அவரைப் பயன்படுத்தி உறிஞ்சி எடுத்த கூட்டம் மட்டும் இருந்த நிலையில், தனிமையில்,  அவரது மனநிலை  எப்படி இருந்திருக்கும் என்று ஒப்பிட்டு வியக்கையில் வாசந்தி வரலாற்று ஆசிரியர் என்பதிலிருந்து நழுவி ஒரு  கற்பனைப் படைப்புகளைத் தரும் எழுத்தாளராகப் பயணித்துப் பார்க்கிறார்.  

தனிப்பட்ட முறையில், பத்திரிகைக்காரர்கள், மக்கள் அணுகும் வகையிலிருந்த ஒரு  முதல்வராகக் கருணாநிதி இருந்தது வாசந்தியைக் கவர்ந்ததாகத் தெரிகிறது.  இதற்கு எதிர்மாறாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் ஒப்பிடாமல் ஆசிரியரால்  இருக்க முடியவில்லை.  ஊடகத் துறையினரை எம்.ஜி.ஆர். தாக்கியது, அரசு அதிகாரிகளே அணுக இயலாமல் இருந்த ஜெயலலிதா ஆட்சியையும், ஊடகத் துறையினரை அவர் எதிரிகள்  போல நடத்தியதையும் சுட்டிச் செல்கிறார்.  கருணாநிதியின் இந்த செயலுக்கு அவரும் பத்திரிக்கைத் துறையிலிருந்ததுதான் காரணம் என்பது ஆசிரியரின் முடிவு.  வாசந்தியும் இந்தியா டுடே ஆசிரியராக இருக்கையில் கருணாநிதியின் நேர்காணல்  கிடைக்காமலிருந்த நிலையில்,  நேரே அவர் கருணாநிதியின் முரசொலி அலுவலக  வாசலுக்கே,  அவர் வரும் நேரத்தைக் கணக்கிட்டுச் சென்றுவிட,  அலுவலகத்தின்  உள் நுழைந்த காரில் இருந்த கருணாநிதி காரை நிறுத்தச் சொல்லி என்ன வேணும் என்று கேட்டு, நேர்காணலுக்கு  வீட்டிற்கு வருமாறு கூறி நேரம் குறிப்பிட்டுவிட்டுச்  சென்றதை முன்னுரையில் நினைவு கூர்கிறார் ஆசிரியர். இது எப்பொழுது என்றால்  'கருணாநிதியின்  பெண்கள்' - Karunanithi's Women என்ற தலைப்பில்  இந்தியா டுடே இதழில் கருணாநிதியின் மீது ஒரு இகழ்வுக் கட்டுரை வெளியாகிய பின்னர், அதற்கு முரசொலி இதழும்  கண்டனம் வெளியிட்டு வாசந்தி என்பதை வாந்தி என்று திட்டி வெளியிட்ட  பதிவிற்குப் பிறகு நடந்த நிகழ்வு. கருணாநிதி கூறியதை மறுத்து அது குறித்த தனது மாற்றுக் கருத்தை நேரடியாகக்   கருணாநிதியின் முகத்துக்கு எதிரே சொல்ல  முடிந்ததையும் குறிப்பிடும் வாசந்தி  அது இப்பொழுது தனக்கு  வியப்பளிப்பதாகவும்  கூறுகிறார். கருணாநிதியை நேரில் சந்தித்த பொழுது உங்களைக்  கடுமையாக விமர்சித்துப்  பல கட்டுரைகள் நான் வெளியிட்டாலும் உங்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு என்று கருணாநிதியிடம் வாசந்தி கூறியபொழுது   அது எனக்குத் தெரியாதா எனக் கருணாநிதி புன்னகைத்தாராம்.  

கருணாநிதி எவ்வளவுதான்  பத்திரிக்கை ஊடகத்தை மதித்தாலும் ஊடகம் அவரை கடுமையாகவே விமர்சித்தது என்கிறார் வாசந்தி.  கருணாநிதி  மீது குற்றம் சாட்டுபவர்களும்,  குற்றம் சாட்டும் கட்சியினரும்  மாறிக் கொண்டே இருந்தாலும் தொடர்ந்து  குற்றம் சாட்டப்படுவது நிற்கவில்லை. அவர்  குணமற்றவர், நடத்தை சரியல்லாதவர், சின்னவீடு வைத்திருப்பவர் என்று 1968 முதலே காங்கிரஸ் கருணாநிதி மீது குற்றச்சாட்டுகளைத் தொடங்கியது.  ராஜாத்தி என்பவர் யார் என்று சட்டசபையில் கேள்வி எழுப்ப,  கருணாநிதி எனது மகள் கனிமொழியின் தாய் என்று உண்மையைச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து அவர் எனது துணைவி  என்று ஒப்புக் கொண்டார். இது போன்ற தனிப்பட்ட வாழ்வு குறித்த  விவகாரங்களில் எம்.ஜி.ஆர். தப்பித்துக் கொண்டார் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பின்னர் விஞ்ஞானம் முறையில் ஊழல் என  70களில் குற்றச் சாட்டு துவங்கி கருணாநிதி மீது தொடர்ந்த ஊழல் புகாருக்கு முடிவில்லாது போய்க் கொண்டிருந்தது.  ஆனால்  அவை எதுவும் நிரூபிக்கப் பட்டதில்லை.  இதே போன்ற குற்றச் சாட்டுகள் எம்.ஜி.ஆர் மீதும், ஜெயலலிதா மீதும்  வந்த பொழுது அவற்றைக் குறித்து யாரும் பெரிதாகப் பேச எண்ணியதில்லை. குறிப்பாக ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அவற்றை எவரும் பொருட்படுத்துவதில்லை, பொதுமக்கள் உட்பட என்பது வாசந்திக்கும் வியப்பளிக்கிறது. கருணாநிதியும் அது குறித்து  வியந்துள்ளதாகத் தெரிகிறது.  அதற்குத்  தனது  பிறப்பு  மக்களின் இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டுக்குக் காரணம்  என்று கருணாநிதி எண்ணியுள்ளதும் தெரிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அவரது எளிமையான பிறப்பு வளர்ப்பில் துவங்கி, தமிழார்வத்தில் சமூகநீதி கொள்கைகளில் ஊறிப்போன மாறுபட்ட ஒருவரின் வாழ்க்கைப்பாதை.  அவர் பங்கேற்ற  தமிழகத்தின்  அரைநூற்றாண்டு  அரசியலிலும் 1995க்கு பிறகு அவர்  இந்திய அரசியலில் ஏற்படுத்திய  தாக்கத்தையும்  எவராலும் மறுக்க இயலாது. 

கருணாநிதி யார், அவர் கருணாநிதியாக மாற யார் காரணம், அவர் செயல்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும் என்ன காரணம் எவை எவை காரணம் என்று விளக்கும் நோக்கில் நூலில் 1910களின் நீதிக் கட்சியில் துவங்கி, ஈ.வெ.ரா., காமராஜர், அண்ணாதுரை, இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா என அனைவர் குறித்தும், அவர்களின் தாக்கம் குறித்தும், இந்தியா அரசியல் சூழ்நிலை குறித்தும்  தேவையான பின்புலம்  கொடுக்க வேண்டிய காரணத்தினால், ஆசிரியர்  அவர்கள் குறித்தும் குறிப்பிட  வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இருப்பினும், தேவையான அளவுக்கு,  படிப்பவர் வரலாற்றைப்  புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு வாசந்தி அவற்றைச்  சொல்லிச் செல்கிறார் என்றே சொல்லலாம்.  சொல்லப் போனால் கருணாநிதி, எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோர்  பற்றி தனித்தனியாக எழுத நேர்ந்தாலும்  மூவரும் எல்லாவற்றிலும் இடம் பிடிப்பார்கள் என்பதும், அத்துடன் திராவிட கழகத்தின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லிச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அவர்கள் வாழ்ந்த காலத்தின் ஒரு  கட்டாயம்.  75  ஆண்டுகளுக்கும் மேலாக தினம் தினம் எழுதுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ஒருவரின் வாழ்வை,  அந்த வாழ்வில் பலதிருப்பங்களும்  கொண்ட பன்முகத் தன்மையும்  கொண்டிருந்த ஒரு   அரசியல் ஆளுமையின் வழக்கை வரலாற்றை 250 பக்கங்களில் கொடுக்க முடிந்தது வாசந்தியின் சாதனைதான். 

பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த கருணாநிதியின் ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட பயணம் அது. அசாதாரணமான ஏற்றங்களும் சரிவுகளும் கொண்ட கருணாநிதியின் வாழ்வியக்கத்தைச் சார்பற்றும் புரிதலுணர்வுடனும் இந்நூலில் ஆராய்கிறார் வாசந்தி. திருக்குவளையில் எளிய இசைக்குடும்பத்தில் பிறந்து, திரைத்துறை, இதழியல், மேடைப் பேச்சு, அரசியல் நிர்வாகம் ஆகியவற்றில் மிளிர்ந்த பன்முக ஆளுமையான கருணாநிதியின் பெரு வாழ்வை அவரது இறுதிக்காலம்வரை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறது இந்நூல் என்று நூல் குறித்த சில மதிப்புரைகள் சொல்வது உண்மைதான்.  அந்த மதிப்புரைகள் இந்த நூலுக்கு முற்றிலும் பொருந்தும்  என்பது எனது முடிவு.  

இந்த நூலைப் படித்த பிறகு தமிழக அரசியலையும், அரசின் செயல் பாடுகளையும் மேலும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அறிந்து கொள்ள 

  • எஸ். நாராயண்  எழுதிய The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu   என்று  2018ஆம் ஆண்டு வெளிவந்த நூலையும்; 
  • சந்தியா ரவிசங்கர்  எழுதிய Karunanidhi: A Life in Politics என்று  2018ஆம் ஆண்டு வெளிவந்த நூலையும்; 
  • வாசந்தி எழுதிய Cut-outs, Caste and Cine Stars  என்று  2008ஆம் ஆண்டு வெளிவந்த நூலையும்; 
  • வாசந்தி எழுதிய The Lone Empress: A Portrait of Jayalalithaa என்று  2019ஆம் ஆண்டு வெளிவந்த நூலையும்; 
  • எம். எஸ்.எஸ். பாண்டியன்  எழுதிய  The Image Trap என்று  1992 ஆம் ஆண்டு வெளிவந்த நூலையும் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. 

நூலைப் படித்து முடித்த பிறகு அது காட்டும் இந்திய அரசியல் சூழ்நிலை மிகுந்த ஆற்றாமையைத் தருகிறது.  அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த பிறகு, இந்திய அடிப்படையும் தெரிந்திருப்பதால் இந்த இரண்டு நாடுகளுக்கும் உள்ள வேற்றுமை தெளிவாகவே தெரிகிறது.  அமெரிக்க இலினாய்ஸ் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ராட் பிளாகோஜெவிச் என்பவர் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆன பிறகு அவர் விட்டுச் சென்ற மாநிலச் சட்டசபையின் உறுப்பினர் பதவியில் மற்றொருவரை அமர்த்துவதில்  ஊழல் செய்தார்.  அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பதவியிலிருந்து நீக்கப்பட்டு இனி அந்த மாநில அரசில் எந்த ஒரு பதவியிலும் இருக்கவியலாது என்ற தீர்ப்புடன் சிறைக்கும் சென்றார். ஒபாமா இருமுறை பதவியிலிருந்து,  பிறகு இப்பொழுது டிரம்ப்  ஒருமுறை அதிபர் கால பதவி முடிந்து அடுத்த சுற்றிற்கும் போட்டியிடும் 2020 ஆம் ஆண்டுதான் டிரம்பிடம் சிறையில் அவரது நன்னடத்தை காரணமாகத் தண்டனையைக்  குறைத்து விடுதலை தருமாறு கோரினார்.  டிரம்ப்  அவரது குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது, ஆனால் முன்னராகவே விடுதலை செய்கிறேன் என்று விடுதலை செய்துள்ளார். 

இந்த நூல் மூலம் அறிய முடிவது; இந்தியாவில் சட்டமும், நீதித்துறையும், காவல்துறையும் அரசு எந்திரங்களால் வளைக்கப்படுவதால் பொறுப்புடன் நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும் ஏதேனும் குற்றம் குறை கூறி மத்திய அரசின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல்வாதிகளின் மனதில் ஊறிப் போயிருப்பது தெரிகிறது. 

ஜெயலலிதா வழக்கில் குற்றவாளி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற நீதி மன்றத் தீர்ப்பை, தடையுத்தரவை, வேட்பாளரும் மதிப்பதில்லை, தேர்தல் துறையும் மதிப்பதில்லை என்பது போன்ற நேர்மையற்ற நிலை இருந்தாலும்; வாக்காளர்களாகிய மக்களும் பொறுப்பின்றி தடையை மீறித் தேர்தலில் நிற்பவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதும்,  அவ்வாறு வெற்றி பெற்றவரை  நீதிபதி பதவியிலிருந்த ஒரு ஆளுநரே ஆட்சி அமைக்க அழைப்பதும் இந்தியாவில் மட்டுமே நடக்கக் கூடிய வியப்பிற்குரிய நிலைப்பாடுகள்.  

மக்கள் தங்கள் வாக்கு மூலம்  சரியான தீர்ப்பைச் சரியான நேரத்தில் கொடுக்காமல் இருப்பதும், புனையப்பட்ட பொய் வழக்குகளை அடையாளம்  கண்டு உண்மை அறிய  முயலாமல் இருப்பதும், உணர்வுப் பூர்வமாக முடிவெடுப்பதும் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொள்ளும் தீமை.  மக்கள் நலனுக்காக நல்ல பல திட்டங்களைச்  செய்பவர்கள் ஆட்சியைப் பாராட்டி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்து தங்கள் நிலையை, வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள தங்களுக்குக்  கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை  மக்கள் நழுவ விடுவது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் வியக்க வைக்கிறது என்பதுதான் உண்மை . 

ஒருவரின் முயற்சியில் விளைந்த நன்மைகள் யாவை, மக்களின் இழப்பு என்ன என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஊடகங்கள் செயல் படாமல் தங்களின் வருமானம் உயர,  தங்கள் மதிப்பீட்டு-அளவு எண்ணை உயர்த்த என்று கவைக்கு உதவாத வாதங்களில் மக்களை ஈடுபடச் செய்து மிக முக்கியமான செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லாமல்  தவறுவதும்  மக்கள் ஆட்சியின் நான்காவது தூணாக மதிக்கப்படும் ஊடகத் துறையினரின் பொறுப்பற்ற செயல்.  மக்களுக்கு விரல் நுனியில் கைபேசிகள் வழியே தேவையான அனைத்துச் செய்திகள் கிடைப்பதும், இந்நாட்களில் அதிக அளவில் கல்வி கற்ற நிலையில் அவர்களின் நிலை உயர்ந்து இருப்பதும்,  எந்தவகையில் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனை  வளர்த்துள்ளது  என்பதை எண்ணி ஏக்கமும் வருகிறது. 

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற நோக்கில் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்காவிட்டால் இழப்பு மக்களுக்குத்தான்.


காணொளியாக - https://youtu.be/NbGxigV4j1g

-----------




No comments:

Post a Comment