Saturday, November 7, 2020

மானுடமும் மாற்றுப்பாலினமும்!

 மானுடமும் மாற்றுப்பாலினமும்!



சிறப்புக் கட்டுரை: 
-- முனைவர். க.சுபாஷிணி

lgbt conference.jpg

தமிழகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருவிழாவில் மாற்றுப்பாலினத்தோர் ஒன்று கூடுகின்றார்கள்.

இந்தத் திருவிழாவின்போது சித்ரா பௌர்ணமி அன்று இரவு மாற்றுப்பாலினத்தோர் அக்கோயில் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டு மறுநாள் காலை அக்கோயிலின் முக்கிய தெய்வமாகிய அரவான் களபலி கொடுக்கப்படுவது போன்ற சடங்கு நிறைவடைந்த பிறகு தன் கழுத்தில் சூட்டப்பட்ட தாலியை அறுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது வெள்ளை புடவை அணிந்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான திருநங்கையர்கள் இந்த விழாவுக்கு வருகின்றார்கள் என்ற செய்திகளைப் பார்க்கின்றோம். அதேபோன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களும் வந்து கூடுவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் திரௌபதி அம்மன் கோயில்களில் அரவான் வழிபாடு என்பது தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கின்றோம்.

lgbt conference2.jpg
புகைப்படம் நன்றி: எம்.மீனாக்‌ஷி, உதவி பேராசிரியர் (ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி)

இந்த திரௌபதி அம்மன் வழிபாடு என்பது தமிழகத்தின் வடபெண்ணையாற்றுக்குத் தெற்கே, கர்நாடகாவின் தென்பகுதிகளிலும், கேரளாவில் சில பகுதிகளிலும், வட தமிழ்நாட்டில் அதிகமாகவும், தஞ்சாவூரிலும் பரவலாக இருப்பதைக் காணமுடியும்.

திரௌபதி அம்மன் கோயில்கள் இருக்கும் இடங்களில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். பாஞ்சாலி அம்மன், தர்மராஜன் கோயில் ஆகியனவும் இதில் முக்கியத்துவம் பெறும் தெய்வங்களாக இருக்கின்றன. இத்தகைய கோயில்களில் திரௌபதி அம்மனே முக்கியக் கடவுளாக இருப்பார். துணை தெய்வங்களாக பீமன், சகாதேவன் என பாண்டவர் ஐவரின் சிலைகளும் சில கோயில்களில் வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். திரௌபதி அம்மன் கோயிலில் பொதுவாக காவல் தெய்வமாக போத்து ராஜா என்ற காவல் தெய்வம் அமைந்திருக்கும். அது ஒரு மனிதர் நடப்பது போன்ற வடிவத்தில், ஒரு கையில் வாள் ஏந்தியவாறும் ஒரு கையில் வெட்டப்பட்ட மனித தலையை வைத்திருப்பது போலும் செய்யப்பட்டிருக்கும். மனித தலைக்குப் பதிலாக மான் அல்லது வேங்கை கையில் இருப்பதாகவும் சில இடங்களில் உள்ள கோயில்களில் காணப்படுகின்றது.

lgbt conference3.jpg
செங்காடு திரௌபதி அம்மன் கோயில் கோபுரத்தில் அரவான் தலை
புகைப்படம் நன்றி: காந்தி பாலசுப்பிரமணியன்
lgbt conference5.jpg

திரௌபதி அம்மன் கோயிலில் இன்னொரு துணை தெய்வத்தையும் காணமுடியும். முத்தால ராவுத்தன் என்ற முஸ்லிம் ஒருவர் காவல் தெய்வமாக அமைக்கப்படுகின்றார். அந்தச் சிலையின் பக்கத்தில் முஸ்லிம் தர்கா சமாதி போன்ற ஒரு அமைப்பையும் வைத்திருப்பார்கள்.

திரௌபதி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை பதினெட்டு நாட்கள் திருவிழா நடத்துகின்றனர். இந்த விழாவில் மகாபாரதக் கதை தினம் தினம் சொல்லப்படும். வில்லிபாரதம் அல்லது நல்லாபிள்ளை பாரதம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் முதல் பத்து நாட்கள் சொல்லப்படும் கதைகளாகின்றன. பின் அதே கதை தெருக்கூத்து வடிவில் நடைபெறுவதும் வழக்கம்.

lgbt conference4.jpg
கூரம் செப்பேடு (புகைப்படம் நன்றி: தகவலாற்றுப்படை, தமிழக அரசு)

வரலாற்றுச் சான்றாக நாம் ஆராயும் போது, பாரதக் கதைகள் சொல்வதற்கான நிவந்தம் வழங்கப்பட்ட செய்தி கூரம் பல்லவர் செப்பேட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்சமயம் இந்தச் செப்பேடு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் கூரம். பல்லவன் முதலாம் பரமேசுவரவர்மன், கி.பி.7ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சி செய்தவன். அவன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேடு அரக்கோணம் அருகில் உள்ள பரமேஸ்வரமங்கலம் என்ற ஊரைச் சிறப்பு நகராக வடிவமைப்பதற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியிடம் தரப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இந்த நகரில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது என்றும், அதற்குத் தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றிலிருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டு நீர்மேளாண்மை நிறுவப்பட்டது என்றும் செப்பேட்டின் வழி அறியமுடிகின்றது. ஆன்மீக திருவிழாக்களின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நகரில் கோயில் எழுப்பப்பட்டது. ஊருக்கு நடுவில், மகாபாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்படி நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் கோயில்கள் செயல்பட்டன. இத்தகையைச் செய்திகளைச் சொல்லும் முக்கியச் செப்பேடு இந்தக் கூரம் செப்பேடு. ஆக கிபி.7ம் நூற்றாண்டு வாக்கில் மகாபாரதக் கதையைக் கோயிலில் சொல்லும் வழக்கம் பல்லவர்களால் கொண்டுவரப்பட்டதற்கானச் சான்றாக இச்செப்பேடு அமைகின்றது

அரவான் களபலி நாடகம்:
பாரதக் கதை சொல்லும் மரபில் ஒரு நாள் கதை அரவான் களபலி நாடகம் ஆகும். புராணக் கதையின் படி அரவான் அர்ஜுனனுக்கும் உலுப்பி என்ற நாகக்கன்னி பெண்ணுக்கும் பிறந்தவன். அரவான் வியாசபாரதத்தில் சாதாரண மன்னனாகக் காட்டப்படுகிறான். ஆனால் தமிழ் நாட்டில் அரவான் முக்கிய கடவுளாகக் கருதப்படுகிறான்.

தமிழ்நாட்டில் வீரர்கள் போர் வெற்றிக்காகக் கொற்றவைக்குத் தன்னை களபலி கொடுத்துக் கொள்வது போல மகாபாரதத்தில் அரவான் தன்னைத் தானே களபலி கொடுத்துக் கொண்டதாக வழக்குண்டு. தமிழகத்தின் பண்டைய வரலாறு கொற்றவைக்கு களபலி கொடுப்பது பற்றி கூறுகிறது. நவகண்டங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. அந்த வகையில் கொற்றவையையே அரவானாகப் பார்க்கும் ஒரு பார்வையையும் அரவான் களப்பலி சடங்கு முன்வைக்கின்றது என்றும் கூறலாம். இது ஆய்வுக்குரியது.

மகாபாரதப்போரில் வெற்றி பெறுவதற்கு முன்னர் சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஒரு நல்ல வீரனைப் பலி கொடுத்தல் வெற்றியை அளிக்கும் என்று சகாதேவன் கூற அவ்வகையில் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன், அர்ஜுனன், அரவான் ஆகிய மூவரும் தான் என அவர்கள் அறிந்து கொள்கின்றனர். கண்ணனும் அர்ஜுனனும் கடமைகள் கொண்டிருப்பதால் அரவானை களபலி ஏற்றுக் கொள்ள தருமர் கேட்டுக் கொள்ள அவனை களபலி கொடுக்க அவன் சம்மதிக்கிறான். போர் முடியும் வரை தான் முழுமையாகப் போரைக் காண வேண்டும் எனவும், தனக்குத் திருமணம் ஆகாததால் ஒரு நாள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் இரண்டு வரங்களை அரவான் கேட்கிறான். கிருஷ்ணன் வரங்களை அளிக்கின்றார். மறுநாள் இறக்கப்போகும் ஒருவனை மணக்க வேறு பெண்கள் முன்வராததால் தானே மோகினியாக வடிவம் ஏற்று கிருஷ்ணன் அரவானுடன் கூடி ஒரு நாள் வாழ்வதாகப் புராணம் சொல்கிறது. இதனையே அரவான் நாட்டுப்புறக் கூத்துக் கலையும் கூத்தாண்டவர் விழாவும் பிரதி பலிக்கின்றன.

சடங்குகளும் மாற்றுப்பாலினத்தவர்களும்:
மாற்றுப்பாலினத்தோர், மாற்று பாலீர்ப்பு கொண்டோர் என்னும் சமூகத்தை இந்தப் புராணக் கதைக்குள் மட்டுமே குறுக்கி வைத்துப் பார்ப்பது நமது சமூகத்தில் இருக்கும் ஒரு குறை. புராணக் கதைகள் நம் சமூகச் சிந்தனையில் ஏற்படுத்தியிருக்கும் அழுக்குகள் என்பது மிக அதிகம். இதில் ஒன்றாகவே இதனையும் காண வேண்டியிருக்கின்றது.

ஒரு வகையில் பண்பாட்டு விழுமியமாக மக்கள் வழக்கத்தில் இத்தகைய சடங்குகள் இருந்தாலும் இன்று நாம் கவனிக்க வேண்டியது மாற்றுப்பாலினத்தோர், மாற்று பாலீர்ப்பு கொண்டோருக்கான அடிப்படை மனித உரிமைகளுக்கான தேவைகளைத்தான்.

ஆண் பெண் என்ற இரண்டு வெவ்வேறு கோணங்கள் (Binary classifications), இதுதான் இயல்பு என்று நம்மைப் பிரித்துப் பார்க்கப் பழக்கியுள்ளன. ஆண் அல்லது பெண் என்ற இரு வகைகளுக்குள் வகைப்படுத்தப்படமுடியாத ஒன்று இயல்பற்ற ஒன்று என்றும் காணும் போக்கு நீண்ட காலமாக நமது மனதிற்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. அந்தத் திணிப்பு நடவடிக்கையில் மிக முக்கிய பங்களிப்பு சமயங்களுக்கு இருக்கின்றது. ஆண் என்பவன் யார் என்பதையும் பெண் என்பவள் எப்படிப்பட்டவள், அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், இவை இரண்டிற்குள் இடம்பெறாதவற்றை இயல்புக்கு மாறானது என்றும் வலிந்து உருவாக்கி வைக்கப்பட்டுள்ள சூழலிலேயே நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். இதுதான் சரி, இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நம் பண்பாடு, இதுதான் நமக்கு நல்லது எனச் சொல்லி, சொல்லி, அடிப்படை பண்பான மானுடத்தை இழந்தவர்களாக நாம் இன்று இருக்கின்றோம்.

மாற்றுப் பாலினத்தவர் எதிர்நோக்குகின்ற சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் பொதுப்படையாகப் பச்சாதாபத்துடன் பேசுவதைத் தவிர்த்து அவர்கள் நொடிக்கு நொடி சந்திக்கின்ற பிரச்சினையின் மூல காரணத்தை ஆராய வேண்டியது அடிப்படை அவசியமாகின்றது. அப்படி பிரச்சினைகளை அலசும் போது மூன்று வகையில் இந்த பிரச்சனைகளை நாம் பட்டியலிடலாம்.

மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகள். மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகள் மற்றும் அவமானங்கள். மாற்றுப் பாலினத்தோரது அன்றாட வாழ்க்கை நிலை.

மாற்றுப்பாலினத்தவர்களும் சக மனிதர்களே:
பாகுபாடுகள், கொடுமைகள் எனும்போது மாற்றுப் பாலினத்தோருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களின் மதிப்பீடு என்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. அல்லது மாற்றுப் பாலினத்தவர் சந்திக்கும் கொடுமைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற அளவுக்குச் சிந்தனை செதுக்கப்பட்டவர்களாக நம் சிந்தனை போக்கு அமைந்திருக்கின்றது.

மாற்றுப் பாலினத்தோருக்கு எதிராக இழைக்கப்படுகின்ற வன்கொடுமைகளுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களை சரியாக அலசுகின்றோமா..? அதற்கான தீர்வுகளைச் சரியாக முன்னெடுக்கின்றோமா..? என்பதும் ஒரு கேள்வியாகவே அமைகின்றது.

பொது வெளியில்.. பள்ளிக்கூடங்களில்.. அலுவலக வெளிகளில்.. மாற்றுப் பாலினத்தவர் மிக இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார்களா என்பதையும் நாம் கேள்வியாக முன் வைக்க வேண்டி இருக்கின்றது.

நமது இயல்பான சிந்தனைப் போக்கை நாம் பொதுவாகவே கேள்வி எழுப்புவதில்லை. இதுதான் மரபு.. இதுதான் சடங்கு.. பெரியவர்கள் சொன்னார்கள்.. என்று இயந்திரங்கள் போலச் சொல்லிக் கொண்டு சமூகத்தில் நிகழ்கின்ற அநீதிகளை அலசிப் பார்க்காமல் பெரும்பாலானோர் சென்று விடுகின்றோம். நம் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டுள்ள அழுக்கு மூட்டைகளை அலசிப் பார்க்கும் போது தான் நாம் ஏனைய சக மனிதர்களை எவ்வகையில் அணுகுகின்றோம் என்பதை அறியக்கூடும்.

அடிப்படை உரிமைகள்:
நாம் நம் ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டுக் கொள்ளும் போதுதான் நம் சிந்தனைப் போக்கை அலசி ஆராயவும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள நாம் விரும்புவதில்லை. நம் சிந்தனையில் நமக்குத் திறந்த மனப்பக்குவமும் மிக மிகக் குறைவு. மாற்றுச் சிந்தனையை எதிர்நோக்க நமக்குத் தைரியமும் இல்லை. இப்படிச் சில உதாரணங்களாகச் சொல்வதென்றால் சாதிப் பிரிவினையும் அதனையொட்டி எழுகின்ற பல்வேறு வகையான அநீதிகளையும் தினம் தினம் நாம் வாசித்தாலும் கூட நொடிக்கு நொடி சாதிப்பெருமை பேசும் மனப்பாங்கிலிருந்து கற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் கூட தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப்போலவே, மாற்றுப் பாலினத்தோரை ஒரு குற்ற உணர்வுடனேயே குடும்பத்திலும் சுற்றுச்சூழலிலும் பொது வெளியிலும் நாம் காண்கின்ற மனப்பான்மை அமைகிறது. எப்படி நாம் நம் மாற்றுப்பாலின உறவுகளை இயல்பாக நம் சூழலில் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற சிந்தனையும், அவர்களுக்கு சமூகத்தில் நிகழ்கின்ற அநீதிகளையும் பெரும்பாலும் நமது கண்கள் பார்க்கத் தவிர்த்து விடுகின்றன. கேளிக்கைகளிலே நமது மனதைச் செலுத்துவதில் பொதுவாக நாம் விரும்புகிறோம். இதுதான் அடிப்படையாக நமக்கு அமைய வேண்டிய சமூகத்தின் பால் விழிப்புணர்வு என்பது நமக்கு ஏற்படாததற்குக் காரணமாக அமைகின்றது.

மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பற்றி (The Universal Declaration of Human Rights) ஐக்கிய நாடுகள் சபை 10.12.1948ம் ஆண்டு பாரீசில் நடந்த மாநாட்டில் ஆய்வறிக்கை தயாரித்து பிரகடனப்படுத்தியது. தமிழ் உட்பட 500 மொழிகளில் இன்று இந்தப் பிரகடனம் வாசிக்கக் கிடைக்கின்றது.

lgbt conference6.jpg
பிரகடனம் 1: எல்லா மனிதர்களும் சுதந்திரமாக, சமமான கௌரவத்தோடும், உரிமைகளோடும் பிறந்தவர்கள். ( Article 1. All human beings are born free, and equal in dignity and rights.)

பிரகடனம் 2: ஒவ்வொருவரும் இன, நிற, பால், மொழி, அரசியல் அல்லது கருத்து வேறுபாடு, தேசிய அல்லது சமூக அடிப்படை, சொத்துக்களால் அல்லது பிறப்பாலான அந்தஸ்து என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி இப்பிரகடனத்தின் உள் அடக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உரித்தாகின்றார்கள். (Article 2 -Everyone is entitled to all the rights and freedoms set forth in this declaration, without distinction of any kind such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status.)

பிரகடனம் 6: ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் எல்லா இடங்களிலும் மானிடத்தில் ஒருவராக அங்கீகரிக்கப்படுதல் அவரது அடிப்படை உரிமையாகும். (Article 6 - Everyone has the right to recognition everywhere, as a person before the law.)

lgbt conference0.jpg
(குறிப்பு: ஐக்கிய நாடுகளின் சபை The Universal Declaration of Human Rights என்ற பெயரில் வெளியிட்ட இப்பிரகடனத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் திரு.தா.தேச இலங்கை மன்னன்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளை அலசிப்பார்க்கும் போது மிக ஆழமாக மாற்றுப்பாலினத்தோர் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது. அந்த வகையில் 7.3.2012ல் Sexual Orientation and Gender Identity என்ற பொருளில் பால்வேறுபாடுகள் பற்றிய புரிதல் மற்றும் பால் வேறுபாட்டின் அடையாளம் தொடர்பான பிரச்சனைகளைப் பேச ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் ஒன்று கூடியது. அதில் வரையறுக்கப்பட்ட தீர்மானங்கள் 17/19, முதல் முறையாக மாற்றுப்பாலினத்தோர், மற்றும் மாற்றுப்பாலீர்ப்பு கொண்டோருக்கான தேவைகளைச் சிறப்புக் கவனத்துடன் அலசியது.

lgbt conference8.jpg
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு மாற்றுப்பாலினத்தோர் நலனுக்காக 2011ம் ஆண்டில் ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. 'Discrimination on grounds of sexual orientation and gender identity' என்ற பெயரிலான அறிக்கை அது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்ற 47 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன. 2014ம் ஆண்டில் “A boy or a girl or a person – intersex people lack recognition in Europe” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு திறந்த மனப்போக்கிற்கான சிந்தனையை ஆழமாக ஐரோப்பிய மக்களிடையே கொண்டு சென்றது ஐக்கிய நாடுகள் சபை. 2015ம் ஆண்டில் மாற்றுப்பாலினத்தோர் நலனை முன் வைத்துச் செய்யப்பட்ட விரிவான ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை வெளியிட்டது. ஆங்கிலம், பிரஞ்சு என இரு மொழிகளில் இந்த அறிக்கை கிடைக்கின்றது.

மாற்றுப்பாலினத்தவர் திருமணம்:
மாற்றுப்பாலினத்தோரிடையே செய்துகொள்ளப்படும் திருமணத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகளாக இன்று 28 நாடுகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. அப்பட்டியலில் முதலாவதாக இடம்பெற்று மானுடத்திற்குப் பெருமை தேடிக்கொள்கின்றது நெதர்லாந்து. 1.4.2001ல் மாற்றுப்பாலினத்தோரிடையேயான திருமணத்தை நெதர்லாந்து அரசு அங்கீகரித்தது. இதனையடுத்து பெல்ஜியம் மற்றும் தொடர்ச்சியாக ஏனைய ஐரோப்பிய நாடுகள் இவ்வரிசையில் இடம்பிடிக்கின்றன.

lgbt conference10.jpg

மாற்றுப்பாலினத்தோரிடையே திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கலாமா என்ற கருத்துக் கணிப்பு உலகெங்கும் நிகழ்த்தப்பட்டது. அதில் 92% மக்கள் இது இயல்பானது தான் என்றும் தேவையானதும் கூட என்றும் கூறியிருப்பது சுவீடன் நாட்டில். சுவீடனுக்கு அடுத்து நெதர்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்பெயின், லுக்ஸம்பெர்க், இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், சுவிஸர்லாந்து, பிரான்சு, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முதல் பட்டியலில் மாற்றுப்பாலினத்தோரிடையே திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்து வரவேற்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

மாற்றுப்பாலினத்தவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் ஆரம்பப் புள்ளியாக அமைவது அவர்களது குடும்பம் மற்றும் அவர்கள் பிறந்து வளர்கின்ற சூழல் தான். சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலும், அறிவியல் அடிப்படையில் மனித உடல் மற்றும் பால் வேறுபாடுகள், உடலிலுள்ள வேறுபாடுகளைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினாலும் சக மனிதர்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மாற்றுப்பாலினத்தவர் பலர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. சர்வசாதாரணமாக மாற்றுப்பாலினத்தவர்களைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிப் போவதிலிருந்து, பாலியல் வன்கொடுமை, கொடூரமான கொலைகள் என்பதுவரை, பல்வேறு கொடுமைகள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டுமிருக்கின்றன.

ஆனாலும் கூட, கடும் சொற்களையும் புறக்கணிப்புக்களையும் கடந்து சக மனிதர்கள் கொடுக்கின்ற தாக்குதல்களையும் வலிகளையும் ஏற்றுக்கொண்டு துவண்டுவிடாமல் தங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொண்டு தங்கள் சக மாற்றுப் பாலின உறவுகளுக்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் அயராது உழைக்கும் தோழர்கள் சிலர் நம்மிடையே இன்று உருவாகியிருக்கின்றார்கள். மாற்றுப் பாலினத்தவர்களும் சமூகத்தில் ஒரு அங்கமே என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடுகளை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

மிக முக்கியமாக நம் சமூகத்தில் சுயபரிசோதனை, மற்றும் விழிப்புணர்வு என்பது நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

நட்பும், விழிப்புணர்வும்:
பெற்றோரும் ஆசிரியரும் மாற்றுப் பாலின குழந்தைகளிடம் அவர்கள் மனதில் வேதனையையும் குற்ற உணர்வையும் விதைக்காமல் அவர்கள் இயல்பாக தங்களை அறிந்து கொள்ளவும், கல்வியில் உயர்ந்து தரமான பொருளாதார சூழலை அவர்கள் எட்டவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. நமது நட்பு வட்டத்தில் மாற்றுப் பாலின உறவுகளையும் நாம் எந்த தயக்கமுமின்றி இணைத்து அரவணைத்து இயங்க வேண்டும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் புராணங்களும் சமயங்களும் சொல்கின்ற பொருளற்ற வரையறைகளை ஒதுக்கி மானுட பண்பை வளர்க்கும் வகையில் நமது செயல்பாடுகளை நாம் கூர்மையாக்கிச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். ஏனெனில், மிக நீண்டகாலமாக சமயங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் புராணங்களும் நமது மனதில் மனிதகுலத்துக்கு எதிரான பல விஷயங்களை ஆழமாக விதைத்து விட்டன. அவற்றைக் களைய வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை.

குடும்பத்தில் அங்கீகாரம், சமூகத்தில் அங்கீகாரம் என்பதோடு அரசியல் தளத்திலும் மாற்றுப்பாலினத்தோருக்கான அங்கீகாரம் என்பது தேவை. ஐரோப்பிய நாடுகளில் விரிவாகவும் வட அமெரிக்காவில் சில இடங்களிலும், இன்று உலக அளவில் அரசியல் தளங்களில் இயங்கும் மாற்றுப்பாலின அரசியல் தலைவர்கள் சிலர் தென்படுகின்றனர்.

வெளிப்படையாகத் தன்னை ஒரு மாற்றுப்பாலின அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொண்டவர் பட்டியலில் முதலிடம் பெறுபவர் ஜெர்மனியைச் சார்ந்த கிறிஸ்டியான் ஷென்க் என்பவர். நாடாளுமன்ற உறுப்பினராக 1990ம் ஆண்டில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் இவர் செயல்பட்டிருக்கின்றார்.

அதனை அடுத்து வட அமெரிக்காவின் ஆல்த்தியா கேரிசன் மேசசூசட்ஸ் சட்டமன்றத்தில் 1992ல் செயல்பட்டிருக்கின்றார். கமிலி காப்ரியல் பிரான்சின் கவுன்சில் உறுப்பினராக 2001ம் ஆண்டில் செயல்பட்டிருக்கின்றார். 2002ல் இங்கிலாந்தில் ஜென்னி பெய்லி என்பவர் கேம்பிரிட்ஜ் நகர கவுன்சிலராகச் செயல்பட்டிருக்கின்றார். 2006ம் ஆண்டில் இத்தாலியைச் சார்ந்த விலாடிமியர் லுக்சுரியா என்பவர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் செயல்பட்டிருக்கின்றார்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது மாற்றுப்பாலினத்தோர் நலன்களை முன்னெடுக்க மிக முக்கியத் தேவையாகின்றது. இந்தத் தேவைகளை சமூகத்தில் வலியுறுத்த வேண்டிய கடமையும் சமூகப்பொதுநல அமைப்புக்களது கடமையுமாகின்றது.

நமது சூழலில், மாற்றுப்பாலினத்தோர், மற்றும் மாற்று பாலீர்ப்பு கொண்டோர் பற்றிய நமது சிந்தனையில் ஏராளமான மறு ஆய்வுகள் தேவைப்படுகின்றது. பண்பாட்டு ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நாம் எல்லோரும் சமம் என்ற தெளிவுடன் நாம் மாற்றுப்பாலினத்தோரை அரவணைத்துச் செல்ல வேண்டியது மானுடத்தின் அவசியம்.

மாற்றுப்பாலினத்தோர் மற்றும் மாற்று பாலீர்ப்பு கொண்டோர் என்ற பெயர் கூட பொருந்துமா என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலத்தில் LGBTQI - lesbian, gay, bisexual, transgender, queer and intersexed community என வேறுபாடுகளின் தனித்துவத்தை மதிப்பளித்து சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழில் இன்றும் அரவாணிகள், மாற்றுப்பாலினத்தோர், திருநங்கை, திருநம்பி என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொச்சை மொழிகளில் மாற்றுப்பாலினத்தோரை வசை மொழியாகவும் கேலியாகவும் பேசும் தரம் தாழ்ந்த போக்கும் நமது சமூகத்தில் ஆழ வேரூன்றிப் போயுள்ளது. திரைத்துறை கலாச்சாரம் இதனை மேலும் நம்மிடையே விரிவாக்கியுள்ளது. இவற்றை மாற்றவேண்டும், மனிதத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், மொழிவழி அடையாளம், சமூக அங்கீகாரம், இயல்பான பிரச்சனைகளுக்கான தீர்வு காணுதல், கல்வி, தொழில் மேம்பாடு என்பதோடு மாற்றுப்பாலினத்தோருக்கான அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30,  2020 தொடங்கி நவம்பர் 1,  2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கட்டுரையாசிரியரின் கருத்தரங்க நோக்கவுரை. இந்த 3 நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வையத்தலைமை கொள் பிரிவு இரண்டு காணொளிகளை வெளியிட்டது.

(1) LGBT - ஒரு அறிமுகம் [https://youtu.be/MsiO198Kqec]
(2) `மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு [https://youtu.be/kRwXwwuQtCk]
என்ற பகுதியிலிருந்து காணலாம்.
இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகள் [https://ruletheworld.tamilheritage.org/category/2020-lgbtq-conference/]
என்ற பகுதியிலிருந்து காணலாம்.

கட்டுரையாளர் குறிப்பு:    
lgbt conference9.jpg
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுநர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

நன்றி:  மின்னம்பலம் (நவம்பர் 8, 2020)
---

No comments:

Post a Comment