சிறார் இலக்கியம்: அழகான புனைவும் அபத்தமான பொய்யும்
-- குமரேசன்
புத்தகக் கடையில் குழந்தை இலக்கிய அலமாரிகள் உள்ள பகுதிக்குச் செல்கிறபோது வியப்பாகத்தான் இருக்கிறது. குழந்தைகளுக்காக இத்தனை புத்தகங்கள் வருகின்றனவா! இத்தனை பேர் எழுதுகிறார்களா! தமிழில் இப்படியொரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா!
முன்பு குழந்தைகள் படிக்கவென்றே ‘கண்ணன்’, ‘அம்புலிமாமா ’ எனப் பல பத்திரிகைகள் வந்துகொண்டிருந்தன. இன்று அத்தகைய பத்திரிகைகள் வெகுவாகக் குறைந்துவிட்டது சோகம். ஆயினும், இணையத் தளத்தில் இன்று சில குழந்தை ஏடுகள் விரிந்திருப்பது சுகம். நாளேடுகளில் வாரந்தோறும் குழந்தைகளுக்கான இணைப்புகள் இடம்பெறுகின்றன. அச்சிதழ்களின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி வளர்ந்துகொண்டே இருக்கிற நிலையில், குழந்தைகளுக்கான மின்-இதழ்கள் தவழத் தொடங்கியுள்ளன. அவற்றில் எழுத்துகளோடு, குரல்வழி வசனம், பின்னணி இசை என ஒலியையும் இணைக்கிற தொழில்நுட்பம் புதியதொரு அனுபவத்தை வழங்குகிறது.
கொண்டாட்டக் காலம்?
குழந்தை இலக்கியக் கொண்டாட்டக் காலம் கனிந்துவிட்டதோ என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஆனாலும், அவ்வப்போது அதிகமாகப் பேசப்படுகிற, ஆனால் எப்போதும் ஓர் அளவோடு நிற்கிற ஒன்றாகவே குழந்தை இலக்கியம் இருக்கிறது.
தமிழ் எழுத்தில் அவ்வையின் ஆத்திச்சூடி, அதிவீரராமபாண்டியன் கதைகள் என்றொரு பாரம்பரியம் இருக்கிறது. பிற்காலத்தில் பாரதியும் கவிமணியும் என்று தொடங்கி அழ.வள்ளியப்பாவைத் தொடர்ந்து இன்றும் பல படைப்பாளிகள் குழந்தைகளோடு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் ராயவரம் பகுதியிலிருந்து குழந்தைகளுக்காக எழுதுவோர் வரிசையாகப் புறப்பட்டதை ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. முனைவர் பூவண்ணன் எழுதிய ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்ற நூல் வந்திருப்பதை அறிய முடிகிறது. வேறு சில ஆக்கங்களும் வந்திருக்கக்கூடும்.
2018ம் ஆண்டில் மலேசியாவில் உலகத் தமிழ் குழந்தை இலக்கிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் தமுஎகச முனைப்புகள் உள்ளிட்ட தனி முகாம்கள், விவாதங்கள் நடந்திருக்கின்றன. இத்தனை பசுமையான காட்சி புலப்பட்டாலும் இதிலே ஒரு வறட்சி உணரப்படுவது ஏன்?
காலத்தின் முக்கியத்துவம்:
புதிய தலைமுறைகளை ஒரே மாதிரியாக வார்ப்பதற்கான முயற்சிகள் ஒரு மூர்க்கத்தோடு முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிகாரம், மதவாதம், சாதியம் என்ற வாய்ப்புகளோடு, பாரம்பரியப் பெருமை, கலாச்சார மகிமை என்ற ஒப்பனைகளோடு அந்த வார்ப்பட அரசியல் வேலைகள் நடத்தப்படுகின்றன. போதனைக் கதைகளோடு வரும் பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், அசையும் படத்தொகுப்புகள், நேரலை இணையத்தொடர்புகள் என நவீனங்களைப் பயன்படுத்தியே பழமைவாதத்திற்குள் நிறுத்துகிற உத்திகள் கையாளப்படுகின்றன. குழந்தைகள் “ஒழுக்கமாக” வளர்வதற்கு உதவுகின்றன என்று நம்புகிற பெற்றோர்களின் மனமுவந்த ஒப்புதலோடு இவை தொடர்கின்றன.
இந்நிலையில் குழந்தைகளின் முதன்மையான உரிமையாகிய அவர்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அந்தச் சுதந்திர உணர்வைத் தக்கவைக்கவும் குழந்தை இலக்கியப் படைப்புகள் முன்வரிசைக்கு வந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு மனந்திறந்த விவாத வெளியைத் திறந்தாக வேண்டியிருக்கிறது.
இதற்கே ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. வயதுக்கேற்ற புத்தகங்கள் தயாரிக்கப் படுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தைகளை நேசிப்பது ஒருபுறமிருக்க, அவர்களை மதித்துச் சமதளத்தில் உரையாடும் பக்குவம் தலையாயதாகிறது . மொழி சார்ந்த அறிவோடு ஆர்வத்தை வளர்க்கும் தேவையும் முன்னுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான இலக்கியம் போலவே சிறார் இலக்கியத்தையும் அணுகுவது முக்கியத்துவம் பெறுகிறது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைந்ததாகச் சிறார் இதழ்களை வெளியிடுவது அழகாக முளைவிட்டிருக்கிறது .
சிறார் இலக்கியத்தைப் பெரியதொரு இடத்திற்குக் கொண்டு செல்ல, இது தொடர்பான ஆழ்ந்த அக்கறையுள்ள, கூர்மையான விமர்சன அணுகுமுறை தேவை என்று இதில் அக்கறையோடு ஈடுபட்டிருக்கிறவர்கள் வலியுறுத்துகிறார்கள். குழந்தைகளுக்காக என வெளியாகும் புத்தகங்களைப் பாராட்டி அறிமுகப்படுத்தும் பதிவுகள் வருகிற அளவுக்கு விமர்சனக் கண்ணோட்டத்துடனான பகிர்வுகள் வருவதில்லை. சிறார் இலக்கிய விமர்சன மேடை தவிர்க்கப்பட்டு வந்திருப்பதில் தொடர்வது அக்கறையின்மை மட்டும்தானா, அல்லது இப்படிப்பட்ட நுட்பங்களைக் குழந்தைகள் புரிந்துகொள்ளத் தேவையில்லை என்ற அக்கறையும்தானா?
சிறார் இலக்கியப் பறவையின் இறக்கைகள் கனவுச் சுகமும் கற்பனைப் பரவசமும்தான். அதில் கால்நடைகளும் பறவைகளும் மீன்களும் பூச்சிகளும் மட்டுமல்ல, மரம் செடி கொடிகளும் பேசும். மேகம் இறங்கிவந்து விளையாடும். வானவில் ஏணியாக நிமிரும். அதேவேளையில், இந்தக் கற்பனை உலகமே அவர்களுக்குப் போதுமென்று அறிவியல் உலகக் கதவுகளை அடைத்துவிடலாமா?
சூழலியல், இயற்கைச் சமநிலை, உயிரினங்களின் புவியுரிமை உள்ளிட்ட சிந்தனைகள் நவீன கால வரவுகள். அவை இன்று உலகளாவிய இயக்கங்களாகவும் உருவெடுத்து, அடிப்படை மாற்றங்களுக்கான எழுச்சிகளோடும் இணைகின்றன. இந்த வளர்ச்சிப் போக்கில், இன்னமும் விலங்குகளுக்கு மனிதர்களின் சுயநலம், அதிகாரப் போட்டி, பொறாமை, தந்திரம், சந்தர்ப்பவாதம் போன்ற குணங்களை ஏற்றிச் சொல்வது காலப்பொருத்தம் உடையதுதானா? சில விலங்குகளை அன்புக்கும், சில விலங்குகளைக் கொடூரத்திற்கும், சிலவற்றை அழகுக்கும், வேறு சிலவற்றை அருவருப்புக்கும் உருவகப்படுத்துவது சரியா?
அடிப்படையிலேயே, மனிதர்களின் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், கனவுகள் என மனிதத் தேவைகளுக்காகவே கதைகள் புனையப்படுகின்றன - கடவுள் கதைகள் உள்பட. கற்பனையான கடவுள்களுக்கு மனித குணங்களை ஏற்றிக் கதை செய்யலாம் என்றால், நனவாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற விலங்குகளையும் அதேபோல் கதாபாத்திரங்களாக ஆக்குவதில் தவறு இல்லைதான்.
ஆனால், இன்னமும் காட்டுக்கு ராஜா சிங்கம்தான் என்றும், அதற்கான “நுழைவுத் தேர்வுகள்” பலவிதமாக நடத்தப்படுவதில் “தகுதியற்ற” விலங்குகள் தோற்பதாகவும் கதைத்துக்கொண்டிருப்பது, உலகளாவிய ஜனநாயக சிந்தனைகள் ஆழமாக வேர் பிடிக்க வேண்டிய சமகாலத்தில் பொருத்தம்தானா?
அறிவியல் உண்மைகளைக் கற்பனை உலகத்தோடு பொருத்தி எழுதவே முடியாது என்று மறுப்பது சவாலை எதிர்கொள்ள முடியாத இயலாமையிலிருந்து வருகிறதா, அல்லது அறிவியலை ஏற்காமையிலிருந்து வருகிறதா என்றும் ஆராயலாம். உங்கள் எழுத்தில் அறிவியல் உண்மைகளைத்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை, ஆனால் அறிவியல் உண்மைகளுக்கு நேரெதிராக எழுத வேண்டாமே என்று இப்போதைக்குக் கேட்டுக்கொள்ளலாம். அழகான புனைவு வேறு, அபத்தமான பொய் வேறு இல்லையா?
குழந்தை இலக்கியம் என்றால் கதை மட்டும்தானா, பாட்டு, கவிதை, நாடகம், கட்டுரை என்றெல்லாம் குழந்தை இலக்கியத்தில் இருப்பது பற்றியும் விவாதிக்க வேண்டாமா? இன்றைய கணினி வரைவியல் கலையின் மிகப்பெரும் வளர்ச்சியாக முப்பரிமாண உயிரூட்ட ஓவியக் கதைகள் திரையின் முன்னால் எல்லா வயதினரையும் இழுத்து உட்கார வைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கலையை வசப்படுத்துவது புதிய சவால்களை வெல்வதில் ஒரு தலையாய பங்களிப்பாக அமையாதா? தமிழில் அத்தகைய தயாரிப்புகள் இல்லாததற்குக் காரணம் வெறும் முதலீட்டுத் தடைகள் மட்டும்தானா, அல்லது தட்டையான புரிதலின் தடைகளும்தானா?
குழந்தை வளர்வது போல குழந்தை இலக்கியத்திற்கான விவாதமும் வளர்வது ஆரோக்கியமானது. அந்த வளர்ச்சியை ஊட்டமும் உயிரோட்டமும் உள்ளதாக்க, முக்கியமானதொரு தரப்பாரிடமும் உரையாடியாக வேண்டும் – ஆம், குழந்தைகளிடம்தான்.
நன்றி: ‘செம்மலர்’ நவம்பர், 2020
No comments:
Post a Comment