Tuesday, November 10, 2020

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம் 

-- முனைவர். பாப்பா


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30,  2020 தொடங்கி நவம்பர் 1,  2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.  இக்கருத்தரங்கம் 'கலையும் வரலாறும்', 'பண்பாடும் மானுடவியலும்' மற்றும் 'சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்' என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன.

மூன்று நாட்களும் கருத்தரங்க நிகழ்வுகளைத் தோழர் ஆனந்தி, முனைவர் பாப்பா, தோழர் மலர்விழி ஆகியோர் நெறியாள்கை செய்தனர். தோழர் மலர்விழி, முனைவர் சாந்தினிபீ, முனைவர் தேமொழி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி மூன்று நாட்களும் நோக்கவுரையாற்றினார். சமூகத்தில் தொடர்ந்து பேசப்படாத, புறக்கணிக்கப்பட்டு வருகிற மனிதர்கள் பற்றிப் பேசுவதற்கான தளத்தினை உருவாக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுவதாகக்  கூறினார். வரலாறு, இலக்கியம், வழிபாடு, கூவாகம் திருவிழா, தொல்லியல் மற்றும் பாரதக்கதை சொல்லும் மரபு போன்ற நிலைகளில் மாற்றுப்பாலினம் பற்றிய செய்திகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  

1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டது. 2014இல் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழில் உள்ளது. இவர்களுக்கெனத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அது பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலினம் பற்றிய விழிப்புணர்வு உருவாவதற்குப் பள்ளிக்கூடச் சூழலில் மாற்றம் வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு நாம் உதவவேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வெளிப்படையாகத் தம்மை மாற்றுப்பாலினம் என்று வெளிப்படுத்திக்கொண்டு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல நமது சூழலிலும் மாற்றுச்சிந்தனை தேவை என்று கூறியதோடு உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டார்.

மூன்று நாட்களும் நோக்கவுரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் புரிதலுக்காக LGBT குறித்த காணொலி ஒன்று திரையிடப்பட்டது.

மூன்று நாட்களும் நடைபெற்ற கலந்துரையாடல் பங்கேற்பாளர்களிடையே LGBT குறித்ததொரு நல்ல புரிதலையும் இதுகுறித்துப் பரந்துபட்ட மனதுடன் வெளிப்படையான பேச்சுக்கும் வழி செய்தது.

முதல் நாள் நிகழ்வு: கலையும் வரலாறும் :

1.JPG

முதல் கருத்துரை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கற்பகவள்ளி அவர்களுடையது. மீவியல்பு கொண்டவர்கள் என்று தோழர்களைக் கூறுவதில் பெருமையடைகிறேன் என்று மகிழ்வுடன் கூறினார். அலெக்சாண்டர் இவர்களுக்கு அதிக சக்தி இருப்பதாக எண்ணித் தமது ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புக் கொடுத்தது, மாலிக்கபூர், அலாவுதீனுக்கு மிடையிலான நட்பு போன்ற வரலாற்றுச் செய்திகளையும் மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துரைத்தார். இவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் குறைவு என்றாலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் (2008) மாற்றுப்பாலினத்தவர்  நலவாரியம் தொடங்கப்பட்டதையும் இவர்களுக்கென தனிக்குடும்ப அட்டை, கடனுதவி, மருத்துவக்காப்பீடுவேலைவாய்ப்புப்பயிற்சி, அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகப் பாலின அறுவை சிகிச்சை, கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு அனுமதி போன்றவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தில் மனிதராக இவர்களுக்கு மரியாதை தரவேண்டும், அவர்களது குறைகளை முதலில் கேட்கவேண்டும், இவர்கள் சமூகச்செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும், பள்ளிகளிலேயே இது பற்றிய ஆரம்ப விழிப்புணர்வுக் கல்வியைக் கொடுத்தோமானால் இவ்வயதில் இத்தோழமைகளுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் அதை நாம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவர், சமூகச் செயல்பாட்டுக்கான கேரள அரசின் விருது (2012) பெற்றவர், எழுத்தாளர் தோழர் ஷீத்தல். தமிழகத்தில் எங்களை மனிதராகப் பார்க்கிற மனது இருக்கிறது. கேரளத்தில் அது இல்லை, இப்பொழுதுதான் பெண்கள் எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தனது உரையைத் தொடங்கினார். மூன்றாம் பாலினம் என்று ஏன் எங்களைச் சொல்ல வேண்டும். முதல், இரண்டு, மூன்று என்று இடங்களை வரையறை செய்தது யார்? அதற்கான அடிப்படை எது?  ஆண், பெண் இருவரது குணங்களும் கொண்ட நாங்களே முதலிடம் என்கிற கேள்வி, கருத்து இரண்டினையும் முன்வைத்தார்.

சமூகம் மற்றும் சட்டரீதியில் இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எடுத்துரைத்தார். இவர்களும் மனிதர்களே, சமூகத்தில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு உண்டு என்று 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இவ்வாண்டில் மாற்றுப்பாலினம் குறித்த கணக்கீடு ஒன்றைத் தான் செய்தது, ‘ரெயின்போ’ என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஆய்வுத்திட்டம் தொடங்கி இத்தோழமைகளுக்காகப் போராடுவது பற்றியும் பேசினார்.

முதலில் ஆண்களுக்கு, பிள்ளைகளுக்கு இது குறித்துக் கற்றுத்தருதல் வேண்டும். நான் எப்படி வாழ வேண்டும், எனது ஆசை, கனவுக்கேற்ற வகையில் நான் வாழ வேண்டும் என்றும் எங்குமே எங்களுக்கான இடம் இல்லை. பிரச்சனைகள்தான். நாங்கள் போராடுகிறோம். நீங்களும் எங்களுடன் சேருங்கள். எங்களுக்காகப் பேசுங்கள் என்றும் கூறினார். தன்னம்பிக்கையுடன் கூடிய இவரது உரை  நமக்கும் உற்சாகத்தைத் தந்தது.

இதையடுத்து கேரளத் திருநங்கையர் பற்றித் தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் தயாரித்த ‘பறையான் மறந்த கதை’ நாடகக் காணொலி திரையிடப்பட்டது. இந்நாடகத்தில் வாழ்க்கைதான் துயரமானது, இறப்பும் துயரமா? என்று இறந்துபோன உடல்களின் ஆவிகள் கேட்பதாக இறுதிக்காட்சி அமைத்திருப்பதையும் சமீபத்தில் சென்னையில் தோழர் சங்கீதா கொடுமையாகக் கொல்லப்பட்டது குறித்தும் பேசினார்.

சமூகத்தில் தங்களைப் பற்றிய தரவுகள் கலைவழியே சொல்லப்பட்டதாகத்தான் இருக்கின்றனவே தவிர களப்பணி வழியானதாகவோ, நேரடி அனுபவங்கள் வாயிலானதாகவோ இல்லை என்றார். பதினைந்து வருடங்களாகத் தான் நடத்திவரும் ‘கட்டியக்காரி’ நாடக அமைப்பின்வழி நடத்தப்பெற்ற மிளகாய்ப்பொடி, அவமானம், பறையான் மறந்த கதை போன்ற நாடகங்களின் உருவாக்கம், பின்னணி, இதற்குப் பேரா. மங்கையின் மிகுந்த ஆதரவு கிடைத்தது பற்றியும் எடுத்துரைத்ததோடு தங்கள் வாழ்க்கையில் கலை  மூலம் முக்கியமான பணியைச் செய்து வருவதாகவும் அதேநேரம் நாடகக்கலையில் பங்கேற்கும் தோழமைகள் கூட வெளிப்படையான பகிர்தலை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு இச்சமூகத்தின் புரிதல் உள்ளது என்றும் கூறினார். கட்டியக்காரி என்கிற தனது நாடக அமைப்பின் பெயரை விளக்கும் பொழுது நாட்டில் பெயர் குறித்த பிழை திருத்தங்கள் காட்டப்படுவதுதான் அதிகம், நாங்கள் பேசுவதை, எங்கள் வலிகளை யாரும் கேட்கமாட்டார்கள் என்றும் வருந்தினார். மதுரையில் தோழர் பிரியா பாபுவால் தொடங்கப்பட்டிருக்கிற திருநங்கைகளுக்கான ஆய்வு மையத்தினைக் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று. நாடகக்கலைவழி திருநங்கைகள் வாழ்வியலைச் சமூகத்திற்குப் பறைசாற்றும் இவரது உரை கேட்பவர் மனதைக் கனக்கச் செய்தது.

இன்றைய சிறப்புரையாளர் முனைவர் கட்டளை கைலாசம் தமது இளவயதுப் பருவத்திலும் இத்தோழமை பற்றிய அறிதலும் பகிர்தலுக்குமான வாய்ப்பு இல்லை என்று தனது உரையைத்  தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் மையத்தில் திரௌபதி வழிபாடு பற்றி விரிவான ஆய்வு செய்த ஆல்ஃப் ஹில்டபெடல் என்பவரது தொடர் சொற்பொழிவுகள் பற்றிக் கூறினார். நவம்பர் 1ஆம் தேதி திருநங்கையருக்கான மின்னிதழ் மதுரையில் பிரியா பாபு அவர்களால் தொடங்கப்படவிருப்பதையும் தெரியப்படுத்தினார். திருநங்கைகள் பற்றிய  இலக்கியத்தரங்களை மிகுதியாகப் பகிர்ந்து கொண்டார். ஆந்திராவின் ஹைதராபாத்தில் தொடங்கி தென்மாவட்டங்கள் வரையிலான திருநங்கையரின் தோற்றக்கதைகள் பற்றியும் கூவாகம் திருவிழா, வட இந்தியாவில் வாழும் இவர்களது பிரிவுகள், மொழி, உறவுமுறைகள் இவர்களது நூல்கள், இவர்களைப் பற்றிய நூல்கள் குறித்தும் விளக்கமாகக் கூறியதோடு இது குறித்த ஆழமான ஆய்வு தேவை, இன்னும் நாம் இவர்களை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். குடும்பம் பள்ளி, சமூகம் என அனைவரும் ஏற்பதோடு இவர்களை நேசிப்பதே நமது கடமை என்றும் தனது உரையை முடித்துக் கொண்டார்.


இரண்டாம் நாள் நிகழ்வு: மானுடவியலும் கலாச்சாரமும்: 

2.JPG

இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின் நிலை ஒரே மாதிரியாக, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. ஜனநாயக ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை என்பதைத் தமது ஆய்வுத்தரவுகளோடு விளக்கினார். கல்வி, பொருளாதாரத்தில் கட்டாயம் முன்னேற்றம் தேவை. அதுவே அவர்களை உயர்த்தும் வழிமுறையாகும் என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் திருப்பூர் எல். ஆர். ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்துறைப் பேராசிரியர் அமைதி அரசு அவர்கள். மாற்றுப்பாலினத் தோழமைகளுக்கான சக்தி, திறமை, ஆளுமை, கலைத்தன்மை போன்ற தனித்த வெளிக்கு நாடக உலகம் பேருதவியாக இருக்கிறது என்பதைத் தமது கூத்துப்பட்டறை அனுபவங்கள் வழித் தெளிவாக விளக்கினார்.

மூன்றாவதாகப் பேசியவர் இருபது வருடங்களுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களிடம் பணியாற்றிவரும் தோழர் கலைமாமணி சுதா அவர்கள். ஒருசில மனிதர்கள் ஓரிரு சமயங்களில் செயலாற்றுவதை மட்டும் வைத்து அவர்களைத் தவறாக எடைபோடக்கூடாது. இது திருநங்கைகளுக்கும் பொருந்தும். எங்களுடனான உங்களது நட்பு, அனுபவம் குறித்தும் அவ்வனுபவம் நல்லதாக இல்லாவிட்டாலும் பேசுங்கள், எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தனது சமூகத்திற்கான முன்னேற்றமும் மாற்றமும் இப்பொழுது அதிகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.

திருநங்கையர் கூடுமிடமாகிய ஜமாத், இவர்களது சடங்குகளான தத்தெடுத்தல், தாயாகிய சேலாபாலூற்றும் திருவிழா, இவர்களது உறவுகளுக்கிடையேயான வலிமை அதாவது இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஏதாவதொரு திருநங்கையைப் பார்த்தால் போதும் தங்குமிடம், உணவு போன்ற சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று பண்பாடு ரீதியிலான தரவுகளைத் தம் உரையாக்கினார்.

குடும்பம் எனும்போது இரண்டு ஏற்கவியலாத, வருந்தத்தக்க நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். ஒன்று – திருநங்கையாக மாறியபின் ஒருவரை அவரது குடும்பம் அவர் எவ்வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று அப்பணத்திற்காக மட்டுமே ஏற்கிறது, இரண்டு – குடும்பம் ஏற்பதைப் பெரிதாக நினைக்கும் திருநங்கையரும் சாதி, சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும்  மாற்றுப்பாலினத்தவர் தன்னைப் பற்றி அறிந்த பிறகு குடும்பத்திலிருந்து வெளியில் வருவதே சரி என்றும் இல்லையெனில் அக்குடும்பம் அவரைப் பெண்ணாகவே இருத்தி இன்னொரு ஆணுக்குத் திருமணம் செய்வித்து இருவரது வாழ்க்கையையும் பாழாக்கிவிடும் என்றார். மேலும் திருநங்கையைவிடத் திருநம்பியர் வாழ்வு இன்னும் சிக்கலானது, இது குறித்த புரிதலும் தேவை என்றும் பேசியது யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதாக இருந்தது.

சிறப்புரையாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இக்கருத்தரங்கில் என்னைப் பேசத்தான் அழைத்தார்கள், ஆனால் இரண்டு நாட்களும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று திறந்த மனதோடு பேசத் தொடங்கி சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான். சமூக உளவியல்தான் சமூகத்தை வழிநடத்துகிறது என்று கூறி அதனை மேட்டிமைத்தனமும் ஒவ்வாமையும், புறக்கணிப்பு, அவமதிப்பு, பரிவு, தோழமை என்கிற ஐந்து நிலைகளில் விளக்கினார். சுதந்திரமும் சுயமரியாதையும்தான் மனிதனுக்கு முதல் தேவை. ஒவ்வொரு மனிதனும் இதுபற்றி நினைக்கும் போதுதான் சமூகம் மாறுகிறது. சமூகத்தில் எதையுமே தரப்படுத்துதல் மற்றும் வரிசைப்படுத்துதலே தவறான ஒன்று என்றதோடு மனித உரிமைகள் குறித்த கருத்துக்களைப் பிடல் காஸ்ட்ரோவில் தொடங்கி சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்கிற புத்தர், அம்பேத்கர் கருத்துக்களுடன் முடித்தார்.

 

மூன்றாம் நாள் நிகழ்வு: சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் :

day3.jpg

ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம் பற்றிய சிந்தனையைத் தனக்குக் கொடுத்தது என்றும் கூறினார்.

இந்தியாவில் அதிகார ஒடுக்குமுறை, திருநங்கையருக்குள்ளும் ஒருவரையொருவர் ஒடுக்குதல் உள்ளது. அது போன்று இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்று கூறினாலும் இந்தியாவில் தனக்கு அநேகம்பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதற்குத் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் Jafna Transgender Network அமைப்பின்வழி சுயதொழிலுக்கான உதவியும் பயிற்சியும் வழங்குதல், இவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சிக்கல் இருப்பதால் உளவியல் ரீதியாக ஆறுதல் தருதல், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைக் கொடுத்தல் என்கிற வகையில் பணிசெய்து வருவதையும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படியொரு சமூகம் இருப்பதையும் இவர்களது சிக்கல்களையும் சொன்னால்தான் தெரிகிறது என்றும் கூறினார். இலங்கையில் இளைஞர்கள்  மத்தியில் தங்களுக்கு ஆதரவு அதிகம், தங்களோடு அவர்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

எட்டாவது கருத்துரை தென்கொரியாவில் வசித்துவரும் தோழர் சம்யுக்தா விஜயன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தச்சமூகம் பற்றிச் சிந்தித்த கணத்திலிருந்தே நான் பெண் என்று கூறும் இவர் தனது குடும்பம், பள்ளி, ஆசிரியர், நண்பர்கள் எனத் தன்னைச் சுற்றியிருந்த அனைவருடைய ஆதரவும் இருந்ததால் தனது வாழ்வில் எத்தகைய சிக்கலும் இல்லை என்று கூறினார். இந்தியாவில் இது பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. திருநங்கையர் குறித்த சொற்களின் ஆய்வினைவிடப்  புரிதல்தான் முக்கியம் என்று கூறினார்.

பாலினம் பற்றிய இவரது அறிவியல் ரீதியான விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, மிகுந்த புரிதலுடன் கூடியதாக இருந்தது. இவ்வுலகம் பகல் மற்றும் இரவால் ஆனது என்றாலும் முற்பகல், பிற்பகல், சாயுங்காலம் என்றிருப்பதைப்போல ஆண், பெண் என்பதும் முழுமையானதல்ல. இது ஒரு Spectrum. பால் (Biological sex), பாலினத்தை அடையாளப்படுத்துதல் (Gender Identity), வெளிப்படுத்துதல் (Gender Expression), பால்நிலை குறித்த பயிற்சி (Sexual Orientation) என்கிற நான்கு நிலைகளுக்குள்தான் நாம் இருப்போம் முழுமையான ஆண், பெண் என்பது இல்லை என்று விளக்கினார்.

ஒன்பதாவது உரைக்குரியவர் சென்னை, தமிழ்த்திரையுலகில் இயக்கம், எழுத்து, தயாரிப்பு என்று பல பரிமாணங்களில் சாதனை படைத்து வரும் தோழர் மாலினி ஜீவரத்தினம். தான் வாசித்த நூல்கள், நண்பர்கள், பணியிடத்தில் இடத்தில் உடனிருந்தோர் ஆதரவு இவையே தன்னை வெளிப்படுத்த உதவியதாகக் கூறினார். திரையுலகில் படம் தயாரிக்க நிறைய திருநங்கையர் முன்வந்திருப்பது மாற்றத்தைக் காட்டுகிறது. நான் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் கருத்துக்களை, என்னைப் பற்றிய பேச்சுக்களை எனது படைப்புகளில் பயன்படுத்துவேன் என்றார். திரைப்படங்களில் கதாநாயகன் திருநங்கையாக வேடமிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும் வேடமிடுவதற்கும் தாங்களே நடிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார். இருபத்தொன்றாம் ஆண்டில் திருநங்கையர் பற்றிய,  இவர்கள் பணிசெய்த திரைப்படங்கள் நிறைய வெளியிடப்படவிருக்கின்றன என்று தெரிவித்தார். தமிழ்ச்சமூகத்தில் திருநங்கையருக்கான தனித்த இடம் என்பது சவாலான விசயம்தான் என்றார்.

மூன்றாம்நாள் சிறப்புரை வழக்கறிஞர் சன்னாவினுடையது. பாலியல் பாதையில் சமூக, அரசியல் நிலைப்பாடுகள் பற்றிப் பேசினார். பதினெட்டு வருடங்களுக்கு முன் புதிய கோடாங்கி இதழுக்காகத் திருநங்கையருக்குச் செய்த இலக்கியப்பயிற்சி முகாம் ஒன்று தனக்கு இவர்கள் பற்றிய அறிதலுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் முகாமிற்குப் பிறகு களப்பணி செய்து இவர்களது வாழ்வியல் மற்றும் இவர்களது படைப்புகளைக் கொண்டு சிறப்பிதழாகவே கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருநங்கையருக்குச் சட்டசபையில் தனித்த இடம் கேட்க சட்டவழி முறைகளை எடுத்துக்கூறியது. அரவாணி என்பது பெண்பால், உருவாக்கப்பட்டது – கலைஞர் கருணாநிதி ஆட்சியில்; இந்த அரவாணி என்கிற பெயர் திருநங்கை, திருநம்பி என மாற்றம் பெற்றது, தமிழ்ச்சமூகத்தில் அரசியல் ரீதியான புரிதல் இருந்ததால் இது சாத்தியமானது என்றும் நலவாரியம் அமைக்கப்பெற்றது பற்றியும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகள் மாற்றம் பெற இது போன்ற கருத்தரங்கு தேவை என்றார். மொழியைக் கட்டமைப்பவர்கள் ஆண்களே, Gender என்னும் சொல்லின் முதல் பகுதியே Gen என்னும் ஆண் மையத்தை, முதன்மையைத்தான் குறிக்கிறது. மக்களிடம் ஏற்பு கிடைத்திருப்பது கடந்த பத்து ஆண்டுகளாகச் சாதனை நிகழ்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.  மொழி ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒரு இடமாவது வேண்டும். பள்ளிக்கல்வியிலிருந்தே  பாலினச்சமத்துவம் மற்றும் மாற்றுப்பாலினம் குறித்த கல்வி வழங்கப்படவேண்டும். மனித இனத்தில் 120 பிரிவுகள் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். இவர்களது பிரிவுகளுக்குரிய பெயர்களைக் கண்டறியவேண்டும். தமிழறிஞர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


(1) LGBT - ஒரு அறிமுகம் [https://youtu.be/MsiO198Kqec]


(2) `மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு [https://youtu.be/kRwXwwuQtCk]


இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகள் 
என்ற பகுதியிலிருந்து காணலாம்.











மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்
யூடியூப்  காணொளிகளாக .. .. .. 
நாள் 1 – கலையும் வரலாறும்

நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்

நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்





அறிக்கை  தயாரிப்பு: முனைவர். பாப்பா




No comments:

Post a Comment