Sunday, November 8, 2020

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை 

-- என்.சரவணன்


ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே. (09.04.1893 – 14.04.1963)  என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்ததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.

அவர் காசியில் சமஸ்கிருதம்,அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற நாட்குறிப்புகள் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல பதிப்புகளைக் கண்ட நூல்.

1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காகப் பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையிலிருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாகக் கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையிலிருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுல்ஜியின் பங்கும் கணிசமானது.)

புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டியை ராகுல்ஜி கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாகச் சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கமிட்டியில் ராகுல்ஜி முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்குப் புறப்பட்டார்.

அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு  தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கு வந்த அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு தம்மானந்த தேரரின் கீழ் பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். பின்னர் தனது “ராம் உதார் தாஸ்” என்கிற பெயரை "ராகுல சாங்கிருத்தியாயன்" மாற்றிக்கொண்டார். அவரின் எஞ்சிய காலம் முழுவதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார். ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர்.

இலங்கையில் ராகுலுக்குத் தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியவர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க.

அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.

இலங்கையில் சிங்களத்தையும், பாளி மொழியையும் பௌத்த இலக்கியங்களைப் பற்றி ஆழமாகக் கற்றுணர்ந்தார். பௌத்த புனித நூலான “திரிபீடக” (மூன்று பீடங்கள்) எனப்படுகின்ற பௌத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந்து “திரிபீடகாச்சார்யா” என்கிற பட்டத்தையும் பெற்றார். ஒன்றரை வருடம் கழிந்து 01.12.1928 அன்று அவர் இலங்கையிலிருந்து நேபாளுக்கு பயணமானார். ஆனாலும் அவர் அதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், திபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கப்படாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாலந்தா நூலகத்திலிருந்தவை ஆகும்.

பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுல்ஜியும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இந்த இடைக்காலப்பகுதியில் அவர் தனது பெயரை ராம் உதார் தாஸ் என்று மாற்றிக்கொண்டிருந்தார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்ஜி.

வர்ணாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்கருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.

இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விவரித்து “லங்கா” தலைப்பில் ஒரு நூலை எழுதியிருப்பதை அறிய முடிந்தது. இக்கட்டுரைக்காக அந்த நூலைத் தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் இந்தி மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது இது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விவரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும். 1950லிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை. அது மட்டுமன்றி ராகுல்ஜி பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல்ஜி. வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.

அவரின் இறுதிக்காலத்தில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. அங்கே பேராசிரியராக பணியாற்றினார். இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவத்தை அவருக்குக் கொடுக்கவில்லை.

ராகுல்ஜி தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மார்க்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மார்க்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார்.

உலகின் பல எழுத்தாளர்கள் தமது இறுதிக்காலத்தில் எதிர்கொண்டிருக்கிற அதே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் என்பவற்றால் பாதிக்கப்பட்டதுடன், மிகை உழைப்பு உடலின் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதித்து நினைவாற்றலையும் இழந்து 1963இல் டார்ஜிலிங்கில் இறந்தார்.



உசாத்துணை:

1. Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)

2. பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் "ராகுல் சாங்கிருத்யாயன்" – 1986

3. Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935

4. கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)



நன்றி - அரங்கம்


No comments:

Post a Comment