Friday, July 22, 2022

தலையங்கம்: தமிழ் மரபின் வரலாற்று ஆய்வை மேம்படுத்துவோம்


வணக்கம்.
அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பயணம்... இந்தக் காலாண்டிதழோடு தமிழ் மரபு அறக்கட்டளையின்  30  ஆய்வுக் காலாண்டிதழ்களாக வெளிவந்துள்ளன. இந்த 30 காலாண்டிதழ்களும் தன்னுள்ளே சேகரித்து வைத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழங்கி இருக்கும் வரலாற்றுச் செய்திகள் ஏராளம்...  ஏராளம். தொடர்ச்சியாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆர்வலர்களின் ஆய்வு நாட்டமும் முயற்சியுமே இதனை சாத்தியப்படுத்தியுள்ளன.

வரலாறு, தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள், சமூகவியல் பார்வை, மானுடவியல் பார்வை, தொல்லியல் அகழாய்வுச் செய்திகள் எனப் பன்முகத்தன்மையோடு இந்த 30 காலாண்டிதழ்களும் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவை மட்டுமின்றி கவிதைகளும் இந்தக் காலாண்டிதழ்களை  அலங்கரித்திருக்கின்றன.

தொடர்ச்சியாக எந்தத் தொய்வும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளும், நாம் வெளியிட்ட அறிக்கைகளும், நமது பரிந்துரைகளும் கூட இந்த காலாண்டிதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் நடத்திய கல்வெட்டுப் பயிற்சிகள், மரபுப் பயணம் தொடர்பான செய்திகள், சமூக அக்கறையுடன் அவசர காலங்களில் தேவையுள்ளோருக்கு நாம் வழங்கிய இடர் கால உதவிகள் பற்றிய அறிக்கைகள், கருத்தரங்குகளில் நமது பங்களிப்பு, தமிழக அரசுக்கு நமது பரிந்துரைகள், நமது ஆய்வுக் காணொளிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேட்டிகள் எனத் தகவல் களஞ்சியமாக நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழின் 30 தொகுப்புகளும் திகழ்கின்றன.

இந்த 30 தொகுப்புகளையும் அதன் முதல் இதழ் தொடங்கி இன்று வரை  தொகுத்து, முறையாக அவற்றை நூல் வடிவில் வடித்து, தரமான முறையில் ஒவ்வொரு காலாண்டிதழையும் உருவாக்கி அளித்திருப்பவர் இதன் பொறுப்பாசிரியர் முனைவர் தேமொழி.  எடுத்துக்கொண்ட பணியை ஆய்வு திறத்துடனும், கடமை உணர்ச்சி சிறிதும் குறையாமலும் மேன்மேலும் காலாண்டிதழ்களின் தரத்தை உயர்த்தி சிறப்புற வடிவமைத்து வெளியிடும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த 30 காலாண்டிதழ் தொகுதியும் கொண்டிருக்கும் செய்திகள் ஆய்வு மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப் பல செய்திகளை வழங்குகின்றன. மின்னிதழ்களாக உள்ள இவற்றை அச்சு வடிவத்தில் அச்சுப்பதிப்பாக்கம் செய்து உங்கள் வீட்டு நூலகங்களில் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவை நிச்சயம் உங்கள் வாசிப்பிற்கும், ஆய்விற்கும், சிந்தனைக்கும் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய நமது கல்விச்சூழல் என்பது  ஆய்வுத் தரம் குறைந்தும், அவசரகதியிலும், சான்றிதழ் பெறுவதையே நோக்கமாகக் கொண்டும் என்பன போன்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கு தரமான ஆய்வுகள் வெளிவர உதவாது. இத்தகைய போக்கு மாற வேண்டும்.

வரலாற்றுச் செய்திகளையும் தொல்லியல் அகழாய்வுச் செய்திகளையும் ஆர்வத்துடன் வாசிக்கும் தமிழ் மக்கள் இந்த வாசிப்புக்கான எல்லையை தமிழ்நாடு என்ற நில அளவில் குறுக்கிக்கொள்ளாமல், உலகளாவிய வகையில் தங்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்த வேண்டும். அத்தகைய பார்வை மனித இனத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதில் புதிய தெளிவுகளை நிச்சயம் உருவாக்கும்.

மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆய்வுக் காலாண்டு இதழ்களான மின்தமிழ்மேடை இதழ்கள் உயர்ந்த, தரம் மிக்க பல கட்டுரைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தரவிறக்கி நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த அறிவு களஞ்சியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Thursday, July 14, 2022

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்  - ஜூன் 2022 

 -- முனைவர் மு. பாமா


இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்படும் எழுத்து வரிவடிவமான தமிழியில் அன்று பாறைகளில் செய்திகள் கீறிப் பதிந்து வைக்கப்பட்டன. அப்படிப்பட்ட தொல் தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன.  இவற்றைப் பொதுமக்களான நாமும் வாசிக்க முடியுமா என்றால், தகுந்த பயிற்சியின் வழியாக நிச்சயம் வாசிக்க முடியும்.


இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, கடிகை இணைய வழி பல்கலைக்கழகப் பிரிவின் கீழ்     2022 ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஜூம் வழியாகத்  தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தோம்.  இந்த பயிலரங்கில் மொத்தம் 78 பங்கேற்பாளர்கள்  பல்வேறு நாடுகளிலிருந்து  கலந்து கொண்டு  பயன் அடைந்தார்கள். இதில் 32 மாணவர்கள், 46 பேராசிரியர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றார்கள்.   பயிற்சிக் கட்டணமாக ரூபாய் 500க்கு பதிலாக  மாணவர்களுக்கானப் பயிற்சி  200 ரூபாய் சலுகை கட்டணத்தில் வழங்கப் பட்டது. மேலும் பத்து மாணவர்களுக்கு இலவசமாகவும்  பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிலரங்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் சுபாஷிணி, மற்றும் குந்தவை மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர்  முனைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பாடங்கள் நடத்தினர்.   ஜூம் செயலிலுள்ள எழுது பலகை கொண்டு ஒவ்வொரு தமிழி எழுத்துக்களாக முனைவர் சுபாஷிணி  அறிமுகப்படுத்தினர். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று வரிசையாக நடத்தியது மட்டும் இல்லாமல், பங்கேற்பாளர்களை அவர்களது குறிப்பு ஏட்டில்  எழுதிப் பழகவும் ஊக்கமளித்தார். இந்தப்  பாடத்தின் இறுதியில் தமிழி மொழியால்  வாக்கியங்களும் அமைத்து பங்கேற்பாளர்களை வாசிக்கச் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேரா. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமிழி கல்வெட்டு வாசிப்புப்  பயிற்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துகளின் தோற்றத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உலகம் எங்கும் உள்ள பல்வேறு சிற்ப சான்றுகளுடன் நிறுவினார். தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் காண்பித்து அவற்றை வாசிக்கவும் செய்தார். அவர்களுடைய உரையின் இறுதியாக தமிழி எழுத்துகளின் வளர்ச்சி வட்டெழுத்துக்கள் என்பதைக்  குறிப்பிட்டு, இந்த வட்டெழுத்தின் பரிணாம  வளர்ச்சிக்குச் சோழர்கள் அளித்த பங்களிப்பை  விளக்கினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக தங்களின் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.  

இந்த பயிலரங்கத்தை  திரு. எழுமாத்தூர் கார்த்திக் நெறியாள்கை செய்து வைத்து செவ்வனே நிகழ்ச்சியை நடத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக, கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா அனைவருக்கும் நன்றியுரை கூறினார். பயிலரங்கத்திற்குரிய அறிவிப்பு  பதாகையை எழுத்தோவியர் நாணா என்ற நண்பர்  திரு. நாராயணன்  செய்து தந்தார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மரபு பயணக் குழு பொறுப்பாளர் திரு. மணிவண்ணன் மற்றும்  கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா செய்தார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மின்-சான்றிதழ் அவர்களுடைய  மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் படிவம் வழியாகப் பெறப்பட்ட பின்னூட்டம் மூலம் நாம் அறிவது,  தமிழி எழுத்துகள் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் பலரையும் சென்று அடைந்துள்ளது.   தமிழி கல்வெட்டுகளை வாசிக்க மற்றும் பாதுகாக்க, வரலாற்றைப் பாதுகாக்கப் பல தன்னார்வலர்களை இந்தப்  பயிலரங்கம்  தயார் செய்துள்ளது. நம் தமிழ் மரபு வளரும் என உறுதியாக நம்புகிறோம்!  

அடுத்த பயிலரங்கம் வரும் அக்டோபர் மாதம் 29ம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

வணக்கம்
முனைவர் மு. பாமா,
பொறுப்பாளர்,
கடிகை இணைய வழி பல்கலைக்கழகம்.

Sunday, July 10, 2022

நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு !

நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு ! 


தேமொழி 



புதிய தகவலைக் கூறுவது பத்திரிக்கைகளின் நோக்கம்.  தினசரி நடைபெறும் வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்ட தகவலாக இருப்பது, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வேண்டிய, அவர்களது வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய, அவர்களுக்குப் பயன் தரக்கூடிய, அவர்களைப் பாதிக்கக் கூடிய கருத்து, அறிவிப்பு, நிகழ்ச்சி குறித்த தகவலாகவோ அது இருக்கலாம், அல்லது மக்கள் அறிய விரும்பலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இருப்பது செய்தியாக அடையாளம் காணப்படுகிறது. 

ஆனால் இவை யாவும் உண்மைத் தன்மை கொண்டவையாக இருக்கும்.  கட்டுக் கதைகளும், புனைவுகளும், ஊகங்களும்  இருந்தால் அவை செய்தியல்ல, அவை படைப்பிலக்கியம் என்ற பிரிவிற்குச்  சென்றுவிடும்.  இன்றும் பலருக்கு இந்த வேறுபாடு தெரியாமல் இருப்பதும், படிப்பவர்  செய்தியா கட்டுக்கதையா என்று விளங்கிக் கொள்ள முடியாத வகையில் எல்லாவற்றையும் கலந்து தரும் ஊடகங்களும் உள்ளன. அவர்களின் நோக்கம் வேறு, தன்னலமும் ஏமாற்றும் நோக்கம் தவிர வேறு அடிப்படை நோக்கம் இருக்க வழியில்லை. 

தமிழ் அச்சேறிய  பொழுது நூல்கள் அச்சாக்கம் பெற்று மக்களைச் சென்றடையத் துவங்கிய காலத்தில்,  நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பல செய்தி இதழ்களும் துவக்கப் பட்டன.  இவை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றின,  அத்துடன் சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின.  பெரும்பாலான வெகுமக்களைச் சென்றடைய உருவாக்கப்பட்ட செய்தி நாளிதழ்கள் போலவே, சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தேவைக்காக பற்பல சிறிய சிறப்பு இதழ்களாகப்  பல மாற்று இதழ்களும் வெளியாகின.  நாட்டின் சுதந்திரம், சமூக சுதந்திரம், தொழில்நுட்ப வளர்ச்சி, வணிகம்  மற்றும் பொருளாதாரம், காந்திய சித்தாந்தங்கள், இலக்கியம், பெண்ணுரிமை, மதம் முதலிய  பல செய்திகள் மற்றும் கருத்துக்களை பல்வேறு மாற்றுத் தமிழ் இதழ்கள் தேவையானவர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளன. 

பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்பட்ட, பெண்ணுரிமையைக் குறிக்கோளாகக் கொண்ட இதழ்களை மாற்று  இதழ்களுக்கான எடுத்துக் காட்டாகக் காட்டலாம்.   மாதர் மறுமணம் (1936), சிந்தாமணி (1923), தமிழ் மாது (1926), தமிழ் மகள் (1926),  மகளிர் குரல் (1926), சக்கரவர்த்தினி (1926), கிருகலக்ஷ்மி (1936) போன்ற இதழ்கள் சில சான்றுகள். இவை யாவும்  பெண்களின் முன்னேற்றத்திற்கான  நோக்கில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ்கள். 

மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை செய்திகள் ஆகும். "இன்றைய செய்திகள் நாளைய வரலாறு" என்ற வழக்காறு உள்ளதை நாம் அறிவோம்.  நடைமுறைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட புதுமையான நிகழ்ச்சிகள் செய்தியாகின்றன என்பதை அடிப்படை வரையறையாகக் கொண்டு; 
"நாய் மனிதனைக் கடித்தால், அது செய்தி அல்ல, 
ஆனால் மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி" 
என்ற நகைச்சுவை விளக்கமும் செய்தி என்பதற்குக் கொடுக்கப்படும். 

பத்திரிக்கையின் தாக்கத்தைக் கவிதையில் வடித்த கவிஞர்களும் உள்ளனர். 
        "உலகம் இதிலே அடங்குது
        உண்மையும் பொய்யும் விளங்குது
        கலகம் வருது தீருது
        அச்சுக் கலையால் நிலைமை மாறுது"
என்று இதை விளக்கிய கவியரசர் கண்ணதாசனும் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவரே.   

பத்திரிக்கை குறித்து அனைவருக்கும் நினைவில் நிற்கும்  மற்றொரு கவிதை பாரதிதாசனுடையது.  செய்தித்தாள்  பேராற்றலைக் கொண்டது என்பது பாரதிதாசனின் கருத்து, இதை, 
        "காரிருள் அகத்தில் நல்ல
                கதிரொளி நீதான்! இந்தப்
        பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
                பாய்ந்திடும் எழுச்சி நீதான்
        ஊரினை நாட்டை இந்த
                உலகினை ஒன்று சேர்க்கப்
        பேரறிவாளர் நெஞ்சில்
                பிறந்த பத்திரிகைப் பெண்ணே"
என்றார் பாரதிதாசன். அவரும் குயில், பொன்னி, முல்லை, புதுவை முரசு, தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, துய்ப்ளேக்ஸ்  ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்தாம். கண்ணதாசனின் பாடல் 1963ஆம் ஆண்டு வெளியான 'குலமகள் ராதை' என்ற படத்திலும், பாரதிதாசனின் பாடலின் ஒரு பகுதி 1966ஆம் ஆண்டு வெளியான சந்திரோதயம் படத்திலும் இடம் பெற்றது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியா காலகட்டமான 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  அதாவது 1940ஆம் ஆண்டை ஒரு கால எல்லையாக நாம் வகுத்துக் கொண்டால், அக்காலத்தில் வெளியான,  பொதுமக்களை அடையும் நோக்கில் நடத்தப்பட்ட, புகழ் பெற்ற  நாளேடுகளான  இந்து, சுதேசமித்திரன் போன்றவற்றைத் தவிர்த்து சமூகத்தின் ஒரு சில பிரிவினரை மட்டும்  குறிவைத்துத்  துவக்கப்பட்ட சிறப்புச் சிற்றிதழ்களான மாற்று இதழ்கள் மூலமும், அவை பதிவு செய்த செய்திகளின் மூலமும் 20 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியின் வரலாற்றை  நாம் அறியலாம்.  பெரிய அளவில் வெகுமக்களை அணுகுவதில் இருந்து மாறுபட்டு, ஒரு குறுகிய வாசிப்பு வட்டத்தை அணுகும் குறிக்கோளுடனும்,  அப்பிரிவினர்க்குச்  செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் எல்லையை வகுத்துக் கொண்டு வெளியான மாற்று இதழ்களும் சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.  அவை கொண்டு சேர்த்த செய்திகளுக்கும், அச் செய்திகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கும் கூட வரலாற்றில் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.  

அச்சு இதழ்கள் இக்கால கட்டத்தில் செய்திகள் பகிர ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது.  அச்சு இதழ்கள் பரவலான ஆரம்பக் காலத்தில் தமிழில் தோன்றிய இவ்வாறான சிறப்புப் பத்திரிக்கைகளின் இயக்கம் ஆங்கிலத்தில் 'Early alternate Tamil magazine movement' என்று கூறப்படுகிறது.  ஆரம்பக் கால மாற்றுப் பத்திரிக்கைகளைக் குறித்த துறையில் பலகாலமாக ஈடுபட்டிருப்பவராகவும், அவற்றை ஆவணப்படுத்துவதும், ஆய்வு செய்வதுமாக அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் வீ.அரசு அவர்கள், இத்தகைய இதழ்களைப் படிப்பதன் மூலம் பல அரிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடிவதாகக் கூறியுள்ளார். 

அன்றைய செய்தி இன்றைய வரலாறுதானே !!!

சிறப்பு நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மாற்றுப் பத்திரிக்கைகளும் பொது இதழ்களைப் போன்றே  நாள், வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை, அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை என மாதம் மும்முறையாக  வெளியான இதழ்கள், மாத இதழ்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை என வெளியான காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள், ஆண்டு மலர் என்ற பலவேறு கால இடைவெளிகளிலும் வெளியாயின.  சில இதழ்கள் காலப்போக்கில் தேவைக்கு ஏற்ப வெளியிடும் கால இடைவெளிகளையும் மாற்றிக் கொண்டன.  இது போன்று வெளியான இதழ்களின் நோக்கங்களை  அவற்றின் தலைப்புகளின்  மூலமே நம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சில பத்திரிக்கைகள் அன்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தன.  முதல் தமிழ் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர் 1923இல் ‘லேபர் கிசான் கெசட்’ என்ற மாதமிருமுறை வெளியான ஆங்கில ஏட்டையும், வார ஏடாக 'தொழிலாளன்' என்ற தமிழ் ஏட்டையும் நடத்தினார். 

ஊடகங்கள் என எடுத்துக் கொண்டால், திரைப்படங்களின் போக்கு ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மாறுவது போலவே பத்திரிக்கைத் துறையும் காலப் போக்கில் மாறித்தான் வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு சமூகச்  சூழலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் காரணமாக அமைந்திருக்கின்றன.  என் பார்வையில், ஒரு 60 ஆண்டுகளில்  கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்படும் எழுத்து நடை, சமூகம் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள், செய்திகள் மக்களைச் சென்றடையும் தொழில் நுட்பம் ஆகியன முற்றிலும் மாறிவிடுவதாகத் தெரிகிறது.  

1940ஆம் ஆண்டுக்கு  முன்னர் வெளியான இதழ்கள் என்ற கால  எல்லை வகுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, விடுதலை அடையாத இந்திய மக்களின் போராட்டங்களும் வாழ்க்கைமுறையும் வேறு.  அக்காலத்தில் கல்வி கற்று எழுதப் படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும் குறைவு. ஆனால்,  அந்த குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களை அடைய விரும்பித்தான் பல பத்திரிக்கைகளும் துவக்கப் பட்டன என்பது சவால்கள்  நிறைந்த முயற்சி  என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வழியில்லை.  அத்துடன், அக்கால மக்களுக்குப் பொழுது போக்கும் வாய்ப்புகளும் குறைவு. தமிழில் முதல் பேசும் படம் என மக்களுக்குத் திரைப்படங்கள் அறிமுகமாகத் தொடங்கியிருந்த காலம் அது.  நாடகம், இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு  இவை போன்றவையே நகர மக்களுக்குக் கிடைத்தன. அவற்றின் மூலம்தான் மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.  ஆக, வெகுமக்களைக் கவரும் கலையுலகச் செய்திகள் மற்றும்  விளையாட்டுச் செய்திகளுக்குப்  பத்திரிக்கைகளில் வெற்றிடம் இருந்த காலம் அது.   இக்கால கட்டத்தில் நடத்தப்பட்ட இதழ்களின் ஆசிரியர்கள் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். 

1940 காலகட்டத்திற்குப் பிறகு தொடங்கிய இதழ்களின் ஆசிரியர்களாக உருவாகி இருந்தவர்கள் பெரும்பாலும் 20 ஆம் நூற்றாண்டின்  முற்பகுதியில் பிறந்தவர்கள்.  'திராவிட நாடு' என்கிற முழக்கம் 1940-ல்  தொடங்கி, 1940க்குப் பிறகு பத்திரிக்கைகளின் தாக்கம் திராவிட நாடு  ஆர்வலர்களின் கையில் என்ற வகையில் பத்திரிக்கைகளின் களம் மாறிவிடுகிறது. திராவிட இயக்க வழிவந்தவர்களும் எண்ணற்ற மாற்று இதழ்களை வெளியிடத் தொடங்கியிருந்தனர், விடுதலை பெற்ற இந்தியாவின் தமிழ்நாட்டில் அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருந்த காலம் இது. 

மருதுபாண்டியர் வரலாறு சொல்லும் 'சிவகங்கை சீமை' திரைப்படத்தின் பாடலில் "வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது" என்றொரு வரியை கவிஞர் கண்ணதாசன் பாடலில் அமைத்தார்.   அத்துடன்,  திராவிட கழக ஆதரவு பத்திரிகைகளான 'மன்றம்', 'முரசொலி', 'நம்நாடு', 'தென்றல்' ஆகிய இதழ்களின் பெயர்களைக் குறிப்பிடும்படி,
        "மன்றம் மலரும், முரசொலி கேட்கும்
        வாழ்ந்திடும் நம்நாடு
        இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
        திராவிட திருநாடு" 
- என்றொரு பாடலும் அந்தப் படத்தில் இடம்பெற்றது. இவ்வரிகள் நுட்பமாக எழுதப் பட்டவை. 

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..கடமை அது கடமை"  என்ற வகையில் இருபொருள்பட எழுதப் பட்ட கவிஞர் வாலியின் அரசியல் குறிக்கும் வரிகள் போன்றது இந்தப் பாடலின் வரிகளும்.  தணிக்கைத் துறையினருக்குப்  பாடல்  வரிகளின் உட்பொருள் புரிந்தாலும் கவிஞர்கள் நுட்பமாக எழுதிவிட்ட காரணத்தால் தடை செய்ய வழியின்றி திணறும்படி செய்து,   தணிக்கைக்கு  உள்ளாகாமல் தப்பித்துக் கொண்ட பாடல்களைக்  கேட்கும் எவருமே புன்முறுவல் செய்வது வாடிக்கை. 

இத்தகைய இடைப்பட்ட காலமான 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு, விடுதலை பெற்ற இந்தியாவில் வெளியான பல சிறப்புச் சிற்றிதழ்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மின்னூலகம் தளத்தில் பெறலாம்.  'பருவ வெளியீடுகள்' என்ற பிரிவின் கீழ்:ஆய்விதழ்கள், இதழ்கள், தமிழக அரசின் பருவ வெளியீடுகள் என்ற பிரிவுகளில் சுமார் 15,000 இதழ்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் மின்னூலகம் தளத்தில் (https://www.tamildigitallibrary.in/) இடம் பெறுகின்றன.  இவையாவும் காலத்தின் பிரதிநிதிகளாகத் தமிழக நிகழ்வுகளை ஆவணப் படுத்தியுள்ளன.  எடுத்துக்காட்டாக மொழியியல், செந்தமிழ், திராவிட நாடு, புதுவாழ்வு, இஸ்லாம், குமரிமலர், தென்மொழி, போர் வாள் எனப் பல வேறுபட்ட தலைப்புகளில், வெவ்வேறு நோக்கத்தில் தொடங்கப்பட்ட இதழ்களை இத்தளத்தில்  காண முடிகிறது. 

அரசு சார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்னாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் சேகரிக்கப் படுபவை பயன் கொள்வதற்காகத்தான்   என்பதை மறக்காமல் இருப்பது கற்பவர் கடமை. 
இந்தக் கட்டுரையில் 
[I] தமிழ்ப் பொழில்
[II] நாடார் குல மித்திரன் 
[III] தமிழன் / ஒரு பைசாத் தமிழன் 
[IV] குடி அரசு
ஆகிய இதழ்கள் குறித்து சற்று விரிவாகக் காணலாம்.  இந்த  நான்கு செய்தி இதழ்களை இந்த உரைக்குத் தேர்வு செய்த காரணம்;  பல்வேறு இதழ்கள் வரிசையில் வகைக்கு ஒன்றாக அமைந்த இந்த இதழ்களை எடுத்துக் காட்டுகளாகக்  கொள்ளலாம் என்பதும் ஒரு காரணம். அத்துடன், ஆய்வாளர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திலும் உள்ள இந்த இதழ்கள் குறித்து அறிமுகப்படுத்தலாம் எண்பதும் மற்றொரு காரணம்.   பார்க்கப் போகும் இதழ்கள் குறித்து முதலில் இதழின் பெயருடன் அது குறித்து மேலும் சில அடிப்படைத் தகவல்களான, இதழ் துவங்கப்பட்ட நோக்கம், வெளியான காலம், வெளியீட்டின் கால இடைவெளி, இதழின் ஆசிரியர் போன்ற தகவல்களையும் இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம். 

[I] கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ்கள்:
இதழ்:  தமிழ்ப் பொழில்
நோக்கம்: தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஆய்வு, தமிழ்க்கல்வி வளர்ச்சி 
வெளியான காலம்: 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் - 1979  ஆண்டு மார்ச் வரை 
வகை: மாத இதழ் 
இதழின் ஆசிரியர்: முதல் பொழில் தொண்டராக  கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை  பொறுப்பேற்றார், அவரைத் தொடர்ந்து மேலும் பலர் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளார்கள் 



தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம் துவங்கக் காரணமாக இருந்த  த.வே. உமாமகேசுவரனார்  அவர்களின் திட்டங்களில் ஒன்று மாதம் தோறும் வெளிவரும் 'தமிழ்ப் பொழில்' என்னும் இலக்கிய இதழ் வெளியீடு செய்வது.  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் தமிழுலகத்திற்கு அறிவிக்கவும், தமிழரின் மேன்மையையும்  தமிழின் தொன்மையையும் ஓங்கி ஒலித்து உலகறியச் செய்யவும், தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் செயல்களை நியாய நெறியில்  கண்டிக்கவும்,  பிற நாட்டு இலக்கியங்களையும் கலைநூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொணரவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் சங்கத்தின் சார்பில் ஓர் இலக்கிய இதழ் தேவை என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டது தமிழ்ப் பொழில் இலக்கிய இதழ்.

இதன் வெளியீட்டு ஏற்பாடுகளை 1913 ஆம் ஆண்டில் முன்னெடுத்த  த. வே. உமாமகேசுவரன் தலைமையிலான  குழுவின் முயற்சிகள், பொருள் பற்றாக் குறை உட்படத்  தடைகள் பல கடந்து, பன்னிரு ஆண்டுகளும் கடந்த பின்னர், நன்கொடை தந்த பல தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன்  1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில்  தமிழ்ப் பொழில் என்ற பெயரில்  முதல் இதழ் வெளியீடு கண்டது. இதழின் ஆசிரியர் பொழில் தொண்டர் எனக் குறிப்பிடப்பட்டார். கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை தமிழ்ப் பொழிலின்  முதல் பொழில் தொண்டராகப் பொறுப்பேற்றவராவார். ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பொழிலின் இதழொன்று சராசரியாக 40 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.  

தஞ்சை கரந்தைத்  தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பொழில் இதழ்,  தமிழ்  இலக்கிய உலகில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.  அக்காலத்தில் தமிழ்ப் பொழிலுக்கு இணையாக 13 தமிழிலக்கிய இதழ்கள் வெளியானது. அவற்றுள் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்டு முன்னிலை வகித்த இதழ்களான மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய இதழாக 1902ஆம் ஆண்டு  முதல் வெளியிடப்பட்ட"செந்தமிழ்" என்ற இதழுடனும்; திருநெல்வேலிச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்  இலக்கிய இதழாக 1923ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட"செந்தமிழ்ச்செல்வி" என்ற இதழுடனும், இணைத்து மதிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பொழில் விளங்கியது. 

மறைமலையடிகள், ஞா. தேவநேயப்பாவாணர், வ. உ. சிதம்பரம், தி.வை. சதாசிவப் பண்டாரம், மா. இராசமாணிக்கம்,  ஔவை சு. துரைசாமி என இன்று நாம் அறியும் பல தமிழறிஞர்களின் கட்டுரைகள் தமிழ்ப் பொழிலில் வெளிவந்தன.  தமிழ்ப் பொழிலில் வெளியான இவர்களது  கட்டுரைகளை பின்னர் நூல்களாகவும் தொகுத்து இந்தத் தமிழறிஞர்கள் நமக்குத் தந்து சென்றுள்ளனர். 

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், 'மொழி மறுமலர்ச்சி இயக்கம்' தோன்றி வளரத் துவங்கிய நாட்களில் தமிழ்மொழியின் நிலையை நாம் தமிழ்ப் பொழில் இதழ்கள் மூலம் அறியலாம்.   அந்நாட்களில் தமிழ்க் கல்வி பெற்றிருந்த மதிப்பற்ற நிலையையும், தமிழாசிரியர்கள் போற்றப்படாமல் மாற்றாந்தாய் பிள்ளைகள் நிலையில் நடத்தப்பட்டதையும், சரியான பதவியும் ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்கப்பெறாமல் தமிழறிஞர்கள்  வருந்தியதையும், தமிழுக்காகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கத் தமிழார்வலர்கள் முயன்றதையும், தமிழ் வளர்க்கும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் துவக்கும் முயற்சிகளை மேற்கொண்டதையும், தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலமொழி ஆதிக்கத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்த நிலை என இவையாவற்றையும் தமிழ்ப் பொழிலின் தமிழிலக்கியப் பதிவுகளின் வழியாக, அவை தரும் செய்திகள் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.

1925 ஆம் ஆண்டு  ஏப்ரல் தொடங்கி, இடையில் தடைப்பட்டாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து 50 ஆண்டுகள் தமிழ்ப் பொழில்  இலக்கிய திங்களிதழ் வெளிவந்தது,  1979  ஆண்டு மார்ச் மாதத்துடன்  தமிழ்ப் பொழிலின் வெளியீடு  நிறுத்திக் கொள்ளப் பட்டது.  அதுவரை, கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் தமிழகம், தமிழினம், தமிழ்மொழி உயர தமிழ்க் கல்வியின் வளர்ச்சி இன்றியமையாதது என்று தெளிவாக உணர்ந்து கொண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் குரலொலியாக வெளியிடப்பட்டது தமிழ்ப் பொழில். தமிழியல் ஆய்விலும், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு ஆலோசனையும், பரிந்துரையும், நெறிப்படுத்துதலையும்  தமிழ்ப் பொழில் கட்டுரைகள் வழியே கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் செய்து வந்தனர்.  

இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம்.  தமிழறிஞர் பின்னங்குடி சுப்பிரமணிய சாஸ்திரியின் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு நூலை சென்னை பல்கலைக்கழகத்தின்  தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாகப் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனால், கருத்துப் பிழைகள் மலிந்த நூலாக இந்நூலைத் தமிழ் அறிஞர்கள் கருதினர்.   பாடநூலாக வைக்கத் தகுதியற்றது இந்தநூல் என்ற எதிர்ப்புக் குரலுடன், 'பின்னங்குடி சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ஜூலை 1931 தமிழ்ப் பொழிலில் துவங்கிய மறுப்புரை கட்டுரைகள் ஜூன் 1937 இதழ் வரை 6 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.  மறுப்புரைகளும் அந்த மறுப்புரைகளுக்கு மறுப்புரைகளும் விளக்கங்களும் என 35 கட்டுரைகள் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு நூலைக் குறித்து எழுதப்பட்டன. இவற்றில் 29 கட்டுரைகளை ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டுமே எழுதியுள்ளார்.

தமிழ்ப் பொழில் காட்டிய இத்தகைய விடாத தொடர் முயற்சியானது பிழையுள்ள பாடங்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற முனைப்பின்  அடிப்படையில் இருந்துள்ளது  தெளிவாகிறது.  இந்த நிகழ்ச்சி குறித்து  "பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூல்கள் தரம் குறித்து படிப்பினை தரும் சென்ற நூற்றாண்டு நிகழ்வுகள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விளக்கும்.  

[II] திரு.சூ.ஆ.முத்து நாடாரின் நாடார் குல மித்திரன் இதழ்கள்:
இதழ்:  நாடார் குல மித்திரன்
நோக்கம்: நாடார் குல மக்கள் வாழ்வில் முன்னேற்றம், சமவுரிமை 
வெளியான காலம்: 1919-செப்டம்பர் முதல் 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் வெளி வந்தது
வகை: வார இதழாக திங்கட் கிழமைகளில் வெளியிடப்பட்டன  
இதழின் ஆசிரியர்: அருப்புக்கோட்டை திரு.சூ.ஆ.முத்து நாடார்; உதவி ஆசிரியர் திரு.சொக்கலிங்க பாண்டியன் 


20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சாதி குல இதழ்கள் தோன்றுவதற்குக்  காரணம் பிரிட்டிஷ் அரசு துவக்கிய சென்சஸ் என்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை.  இந்திய மக்களின் நிலையை, அவர்கள் இடையே நிலவும் சாதி இன பேதங்களால் அவர்கள் எதிர்கொண்ட உயர்வு தாழ்வு நிலைகளை சென்சஸ் தரவுகள் தெளிவாகக் காட்டிய பின்னரே மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்பட்டது. ஒடுக்கு முறையால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குலத்திலிருந்தும் அக்குலத்தில் தோன்றி இருந்த கற்றறிந்த சான்றோர்கள் தங்கள் குலத்தை மேம்படுத்தப் பல முயற்சிகளை முன்னெடுத்தனர். 

தங்கள் குல மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக  அவர்களுக்கான பத்திரிகையை உருவாக்கி, அவர்களின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கான  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவர்களின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.  உரிமை, சமத்துவக் குரல்கள் ஒலிப்பதாக அந்த இதழ்கள் அமைந்தன.  எடுத்துக் காட்டாக;  நாடார் குல மித்திரன் (1919), விஸ்வகர்மம் (1913),  வைசியன் (1923), யாதவமித்திரன் (1929), செட்டியார் குல மித்திரன்(1935),  கிராமணி குலம்(1936) போன்றவை அவ்வாறாக வெளிவந்த குல முன்னேற்றக் குறிக்கோள் கொண்ட இதழ்கள். அவற்றில் நாடார் குல மித்திரனுக்குச் சிறப்பிடம் உண்டு. 

நாடார் குல மித்திரன் இதழ்  1919-செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது மாதம் தோறும் வெளிவரும் இதழாக இருந்தது. பின்னர் மாதம் இரு முறை என்ற இதழாக ஒவ்வொரு மாதமும்  1, 15 தேதிகளில் வெளிவரும் இதழாக மாறியது. அப்போது  பத்திரிக்கையின் தோற்றத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. செய்தித்தாள் வடிவத்திற்கு மாறியது.  அதன் பிறகு 1, 11, 21 தேதிகளில் வெளியீடு என மாதம் மும்முறை வெளியாகும் நிலைக்கு மாறியது, ஐந்தாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும் வார இதழாக வெளியீடு கண்டு வார இதழ்களாக 1931ம் ஆண்டு வரை வெளியானது.  12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது நாடார் குல மித்திரன் இதழ்.  இதழின் பக்க எண்ணிக்கை 8 பக்கங்கள் என்ற அளவிலும்,  சிறப்பு இதழ்களாக வெளிவருகையில் மேலும் பல  இணைப்புகளுடன் பக்க எண்ணிக்கை அதிகரித்தும் இதழ்கள் வெளிவந்தன. 

திராவிட இயக்க ஆய்வாளராகவும், ‘சிந்தனையாளன்’ இதழின் ஆசிரியராகவும் இருந்த வே.ஆனைமுத்து அவர்கள் 'பெரியாருடைய சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்' என்று ஆய்வை மேற்கொண்டவர். பெரியார் ஈ.வெ.ரா. தொடங்கிய ‘குடியரசு’ பத்திரிகையில் வெளியானவை, ‘குடியரசு’க்கு முன்னால் வந்த ஆவணங்கள் என எல்லாவற்றையும் தொகுப்பதில் ஆனைமுத்து ஈடுபட்டிருந்தார்.  ஜூன் 2010 அன்று அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் வே. ஆனைமுத்து அவர்கள், அருப்புக்கோட்டை முத்துநாடார் குடும்பத்தில் இருந்து கிடைத்த நாடார் குல மித்திரன் இதழ்களைத் தனது பெரியாரின் செயல்பாடுகள் குறித்த வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.  ஒருமுறை ஆனைமுத்து அவர்கள் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களிடம் தரவுகள் வேண்டி நேர்காணலுக்குச் சென்றபொழுது காமராஜரும் அவரிடம் பெரியாரும் முத்து நாடாரும் நெடுநாள்  நண்பர்கள்,  முத்துநாடார் குடும்பத்தில் தடயங்கள் கிடைக்கலாம் என்று வழிகாட்டியதாகவும் ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார். 

பெரியார் ஈ.வெ.ரா.வும், முத்து நாடார் அவர்களும் அன்றைய காங்கிரசில் இணைந்து நாட்டின் விடுதலைக்கானப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள்.  இறுதிவரை  நண்பர்களாக இருந்தவர்கள்.   ஈ.வெ.ரா. தனது சுயமரியாதை  இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல குடியரசு இதழைத் துவக்கிய ஆண்டுக்கும் ஆறாண்டுகளுக்கு முன்னரே முத்து நாடார், நாடார் குல மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாடார் குல மித்திரன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி விட்டிருந்தார்.    ஈ.வெ.ரா. குறித்த பல செய்திகள், அவரது உரைகள் போன்ற குறிப்புகளை ‘நாடார் குல மித்திரன்’ இதழ்களிலிருந்து பெற்றிருக்கிறார் ஆனைமுத்து.  பெரியாரைப் பற்றி அச்சில் கிடைக்கும் முதல் கட்டுரை, இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பெரியாரின் நேர்காணல் ஒன்று. அருப்புக்கோட்டையை அடுத்த பாளையம்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு அக்டோபர் 31, 1922இல் நடைபெற்றது. அம்மாநாட்டின் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.  மாநாடு நடந்த அன்று அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சில  நாடார் இளைஞர்கள் அவரிடம் 15 கேள்விகளை எழுப்பி ஒரு நேர்காணல் செய்தார்கள். இந்த நேர்காணல்,  அடுத்து வெளியான நவம்பர் 11, 1922 ஆம் ஆண்டு நாடார் குல  மித்திரன் இதழின் 2 ஆம் பக்கத்தில் வெளியானது.   தனது  ஆய்வுக்கு உட்பட்ட வரையில், முதன் முதல் அச்சில் பதிப்பாகி வெளி வந்த பெரியாரின் பேட்டி இதுதான் என்றும்,  இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட்டி என்றும்  வே. ஆனைமுத்து  கூறியுள்ளார்.  


இந்தப் பேட்டியில்  காங்கிரஸ் கட்சியில் செயலாளராகப் பொறுப்பிலிருந்த பெரியாரின் கவனத்திற்கு நாடார் குல மக்கள்  கொண்டு சென்ற ஒரு முக்கியக் கோரிக்கை நாடார் குல மக்களின் கோவில் நுழைவு உரிமை பற்றியது.  அவர்களிடம் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவேன் என்று பெரியார் உறுதி அளிக்கிறார்.   அடுத்த இரண்டு மாதத்தில் திருப்பூர் நகரில் தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடந்த பொழுது, மாநாட்டில் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறார் ஈ. வெ. ரா.  ஆனால், காங்கிரஸ் கட்சியின் பெரும் பதவிகளிலிருந்த பார்ப்பனர்கள் இது மத சம்பந்தமானது, காங்கிரஸ் கட்சி அரசியல் சார்ந்தது, கோவில் நுழைவு உரிமை போன்ற கோரிக்கைகள் நமது கொள்கைக்கு அப்பாற்பட்டது  என்ற காரணம் சொல்லி மறுத்துவிடுகிறார்கள்.  அன்று மாலை நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தின் தீர்மான விளக்க நிகழ்ச்சியில்தான், மனித உரிமையை மதிக்காத மனுநீதியைக்  கொளுத்த வேண்டும்,  இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று  ஈ. வெ. ரா. முதன் முறையாக கருத்துரைக்க ஆரம்பித்தார் என்கிறார் வே. ஆனைமுத்து.   பிப்ரவரி  25,1929 அன்று வெளியான தனது நாடார் குல மித்திரன் இதழில், “ஈ.வெ. ராம சகாப்தம் 4” எனத் தலையங்கப் பகுதியில் பதிவு செய்தார் அருப்புக்கோட்டை சூரிய. ஆறுமுக. முத்து நாடார் என வே.ஆனைமுத்து குறிப்பிடுகிறார்.  

உரிமை இழந்தவர்களாகத் தமிழகத்தின் கோவில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் போராட்டங்கள் குறித்து இந்த இதழ்களில் வெளியான செய்திகள் மூலம் அறியலாம்.  காந்தியின் சத்திய சோதனை, அன்றைய இந்திய, தமிழக அரசியல் களம், போன்றவற்றையும் அறிய நாடார் குல  மித்திரன் பதிவுகள் உதவும். பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்ந்த அன்றைய  அயலகத் தமிழர்கள் குறித்தும் செய்திகள் பதிவாகியுள்ளன. 

[III]பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் இதழ்கள்:
இதழ்:  ஒரு பைசாத்தமிழன் மற்றும் தமிழன்
நோக்கம்:  தமிழரிடையே சமத்துவம், சமநீதி, பகுத்தறிவு, முன்னேற்றம், பௌத்தக் கருத்துகள் பரப்புரை 
வெளியான காலம்:  1907ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1914 ஆண்டுவரை வெளி வந்தது 
வகை: வார இதழ், புதன்கிழமைகளில் வெளியிடப்பட்டன  
இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர். 





அயோத்திதாசர் ரெவரெண்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 1885இல் 'திராவிடப்பாண்டியன்' என்ற இதழையும் தமிழன் இதழுக்கு முன்னர் நடத்தியுள்ளார்.  19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி 'சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943' என்ற தலைப்பில் ஜெ.பாலசுப்பிரமணியம் நூல் வெளியிட்டுள்ளார்.  இந்த 42 தலித் பத்திரிக்கைகள் அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்று அவர் நூலில்  குறிப்பிட்டுள்ளார்.    சூரியோதயம் என்ற இதழ்  திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. பஞ்சமன்(1871), சுகிர்தவசனி (1872), இந்துமத சீர்திருத்தி (1883), ஆன்றோர் மித்திரன்(1886), மஹாவிகடதூதன் (1886), இரட்டைமலை சீனிவாசன்  அவர்களால்  வெளியிடப்பட்ட பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903) என சில இதழ்களின் பெயர்களை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. 

பண்டிதர் அயோத்திதாசரின்  "ஒரு பைசாத் தமிழன்"  இதழ் சென்னை இராயப்பேட்டையில் இருந்து ஜூன் 19, 1907 முதல் புதன் கிழமை தோறும் வெளியானது, அன்றைய விலை காலணா, இதழின் பக்க எண்ணிக்கை  நான்கு.  பின்னர் மக்களின் வேண்டுகோளை ஏற்று,  மறு ஆண்டு முதல் "தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார் அயோத்திதாசர்.  இதழ் வெளியிடுவதன் நோக்கம் குறித்து: "உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டிருக்கிறோம்" என்று அறிவித்திருந்தார் அயோத்திதாசர். தாமரை மலரின் இதழ்களில், பத்திரிக்கையின் பெயர் குறிக்கப்பட்டு, இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்களம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர்க் கொத்துகளுடன் உள்ள ஓர் அழகிய சின்னம் இதழின் முகப்பை  அலங்கரித்தது.  

சமூக மேம்பாட்டுக் கருத்தாடல்களாக;  மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் குறித்தும்,   பிராமணிய மேலாதிக்கம் பற்றியும்  விரிவாக எழுதினார் அயோத்திதாசர். வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி, சமூக மதிப்பீடுகள், விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் போன்ற பல கருத்துக்கள் இதழில் தொடர்ந்து வெளியாயின. 

அரசியல் கருத்தாடல்களாக; அதிகாரத்தில் பங்கு, பிரதிநிதித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற கருத்துகளை வெளியிட்டு வந்தார். 

பெண்ணியம் சார்ந்த செய்திகளாக;  மகளிர் பகுதியில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் தமிழன் இதழ்களில் இடம் பெற்றன. 

பூய்வத்தமிழொளி  என்ற தலைப்பில் அரசியல் தொடர்,  வர்த்தமானங்கள் என்ற தலைப்பில் நாட்டு நடப்புச் செய்திகள்,  சித்த மருத்துவ குறிப்புகள் போன்றவை இதழில் தொடர்ந்து வெளியாயின.  பொதுச் செய்தி பகுதியில் வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள், அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் மதிப்புரைகள் போன்றவை இடம்பெற்றன.

கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வசித்த  பகுதிகளிலும் அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் விற்பனையானது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்களுடன் வெளியான இதழ்களுக்கு எல்லாம் முன்னோடி  பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் என்ற சிறப்பு இந்த இதழுக்கு உரியது. 

[IV]பெரியாரின் குடி அரசு:
இதழ்: குடி அரசு
நோக்கம்: தமிழரிடையே சுயமரியாதைக் கருத்துக்கள், பகுத்தறிவு, சமத்துவம், சமநீதி, முன்னேற்றக் கருத்துகளைப் பரப்புதல் 
தொடக்கம்: மே 2,  1925 ஆம் ஆண்டு 
வகை: வார இதழ் 
இதழின் ஆசிரியர்: பெரியார் மற்றும் பல சுயமரியாதை இயக்க எழுத்தாளர்கள் 


அறிஞர் அண்ணாதுரை, சிங்காரவேலர் போன்றவர்களும்  ஆசிரியர் பொறுப்பில் இருந்துள்ளனர்.  குடியரசில் சிங்காரவேலர் தொடர்ந்து பல பொதுவுடைமைக் கொள்கைக் கட்டுரைகள் எழுதினார். அந்தக் கட்டுரைகள் சுயமரியாதை இயக்கத்தினரிடம் கம்யூனிசக் கருத்துகள் பரவ உதவின.

இப்பத்திரிக்கை ஆரம்பிக்கும் நோக்கம் குறித்து பிப்ரவரி 5, 1925 இதழில்; "தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடை உணர்த்துவதற்கே யாம். ஏனைய பத்திரிக்கைகள் பலவிருந்து, அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்ராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்" என்று பெரியார் ஈ. வெ. ரா. குறிப்பிட்டிருந்தார். 

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடுகளிலிருந்து  குறிப்பாக; சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பட்ட ஆரம்பக் காலமான 1925ஆம் ஆண்டு  முதல் 1938 ஆண்டு வரையிலான பதிவுகள்,  "பெரியாரின் எழுத்தும் பேச்சும்" என்ற தலைப்பில் குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகளின்  27 தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டு வெளியாயின. 1925 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை உள்ள  கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிட  "பெரியார் திராவிடர் கழகம்"  எடுத்த முயற்சியில் உருவானவை இத்தொகுப்புகள்.  சென்ற நூற்றாண்டு தமிழகத்தின் சமூக மாற்றங்களை அறிய உதவும் கருவூலமாகவும் விளங்கும் இத் தொகுப்புகள்.  சமத்துவம், சீர்திருத்தம், பகுத்தறிவு ஆகியவற்றினை குறிக்கோள்களாகக் கொண்டு சமூக மாற்றங்களில் தீவிர செயல்பாடுகளை இயக்கம் முன்னெடுத்த காலத்தில்   வெளியானவை இத்தொகுப்புகளில் இருக்கும் பதிவுகள்.   

இவற்றிலிருந்து,    பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செய்த பரப்புரைகளின் நோக்கம் என்ன, எவற்றை நோக்கி அந்த இயக்கம் பாடுபட்டது, அக்கலாச் சூழ்நிலை (environment) என்ன? அரசியல் சூழமைவு (context) என்ன? என்பதையெல்லாம் அறியத் தரும் பதிவுகள் நிரம்பியதாக இத்தொகுப்புகள் அமைந்திருக்கும். பெரியாரின் கருத்துகள் போலவே அவர் சமூகச் சூழலில் நிகழ்ந்தவற்றுக்கு  அவர் ஆற்றிய எதிர்வினைகளும்  முக்கியத்துவம் பெற்றவை. இவை அக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்ன, அவற்றுக்குப் பெரியாரும் அவரது இயக்கமும் எவ்வாறு எதிர்வினையாற்றியது,   எவ்வாறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை மக்களிடம் இயக்கத்தின் தொண்டர்கள் கொண்டு சென்றனர் போன்றவற்றையும் அறிய மிக உதவும் ஆவணமாக விளங்குகிறது.   அத்துடன், பெரியாரின்  செயல்பாடுகள் மூலம் அக்காலத்தின் தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் புரிந்து கொள்ள குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகள் மிக உதவும். 

நிறைவாக; 
தமிழ் அச்சேறிய  பொழுது,  நூல்கள் அச்சாக்கம் பெற்று மக்களைச் சென்றடையத் துவக்கிய காலத்தில்  நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல செய்தி இதழ்களும் துவக்கப் பட்டன.  இவை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றின,  சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின என்பதை அறிய முடிகிறது.   தமிழகத்துத் தமிழ்ச் செய்தி ஏடுகளும், அத்தோடு தமிழர் குடியேறிய, வாழும் மலேசிய சிங்கை இலங்கை, தென்னாப்பிரிக்கா என எந்த ஒரு நாட்டில் வெளியான தமிழ்ச் செய்தி ஏடுகளும், காலம் தோறும் தமிழர்களின் வாழ்வையும்  வளர்ச்சியையும் பதிவு செய்து  வந்துள்ளன.   

இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்று அறியப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வெளியான ஒரு நூலின் அல்லது இதழின் உள்ளடக்கச் செய்திகளை  ஆராயும் பொழுது, அவை தரும் தகவல்கள் அடிப்படையிலேயே பிற்காலத்தில்  நூலின் காலத்தின் இருந்த சூழ்நிலையை நாம் அறிய முடிகிறது.   இவ்வாறு தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் செய்தி இதழ்களை  ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் படிப்பதன் மூலமும், தாங்கள்  அறிந்தவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் பதிவு செய்வதன் மூலமும் நாம் நம் வரலாற்றை அறிந்து  எதிர்கால வளர்ச்சியை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. History repeats itself - வரலாறு திரும்பும்  என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி.  


நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு !
காணொளியாக 
— முனைவர் தேமொழி



----------------------------------------------
உதவிய வெளியீடுகள்:
The Tamil written word and its mass appealhttps://www.newindianexpress.com/cities/chennai/2018/aug/25/the-tamil-written-word-and-its-mass-appeal-1862286.html

தமிழ் மரபு அறக்கட்டளை - மின்னூல்கள் https://tamilheritage.org/

பருவ வெளியீடுகள் தமிழிணையம் - மின்னூலகம்: (தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு) http://www.tamildigitallibrary.in/

பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூல்கள் தரம் குறித்து படிப்பினை தரும் சென்ற நூற்றாண்டு நிகழ்வுகள், தேமொழி Journal of Tamil Peraivu, Vol. 6 No. 1 (2017) https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/12945

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943; நூல் விமர்சனம்
முனைவர்.க.சுபாஷிணி, மின்தமிழ்மேடை: காட்சி 13 [ஏப்ரல் 2018]

மின்தமிழ் கூகுள் குழும உரையாடல்கள்:  
- mintamil thread - nadar kulamithran [2013] - https://groups.google.com/g/mintamil/c/X6VR9tdwfI8/m/dSqVFTEWZLAJ 
- mintamil thread - kudi arsu [2014] - https://groups.google.com/g/mintamil/c/KaGEGuTY2sk/m/7TK2IVfgQfkJ 
- mintamil thread - thamizhan [2015] - https://groups.google.com/g/mintamil/c/PrOJv0VAY6U/m/Z6wMF0sWAgAJ 
- mintamil thread - tamil pozhil [2016] - https://groups.google.com/g/mintamil/c/T9FebJbKPLA/m/xk8LqxRkAQAJ





தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை

தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை


பேரா. முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
அண்ணாமலைக் கனடா,
(அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்தும் கல்வித் திட்டம்)
ரொறொண்டோ, கனடா


சங்ககாலத்தில், ஆண், பெண் இருபாலரும் நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதற்குத் தமக்குப் புலனான சமூக ஒழுங்கு முறைகளையே நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். அந்தச் சமூகத்தில் ஆள்பவன், ஆளப்பட்டவன் என்ற பாகுபாட்டிற்கே இடமிருந்ததாகத் தெரியவில்லை. காலப்போக்கில் இந்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதும், சங்க கால மகளிர் நிலையை இக் காலத்தவர் விளங்கிக் கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம் என்பதும் இவ் ஆய்வின் கருதுகோளாகும். ஆய்வுப் பரப்பெங்கும் இக் கருதுகோள் உள்நுழைந்து அதற்கான விடையைக் காண முயன்றிருக்கிறது. இவ்வாய்வு, கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 

1. தொல்காப்பியம், கி. மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்னையது. சங்கத் தொகை நூல்கள் வெவ்வேறு காலப்பகுதியில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியர் காலத்திற்கும் சங்க இலக்கியங்களின் காலத்திற்கும் இடையில் ஆகக் குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கவேண்டும். இந்த 200 ஆண்டுகள் கால இடைவெளியில், வாழ்வியல் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவில், நடை பெற்றிருப்பது அறியக் கிடக்கிறது.

2. பொருளதிகாரம் சமூகத்தில் மிகக் குறைந்த தொகையினரான (5% இலும் குறைவான) உயர்குடி மக்களின் வாழ்வியலைப் பெரிதும் காட்டிநிற்கிறது. உயர்குடித் தலைவன் தலைவியரது வாழ்வியலை அளவுகோலாகக் கொண்டு ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அளவிடமுடியாது. தொல்காப்பியம், பொருளதிகாரத்திலும், சங்க இலக்கியங்களிலும், மேல்மட்டக் குடிகளின் வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டவை, கூறப்படாதவை, மௌனம் காத்தவை, அணிகளில் ஆங்காங்கே கூறப்பட்ட தகவல்கள் முதலியவற்றிலிருந்து பொதுமக்களின் வாழ்வியல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

3. அகத்திணை இலக்கணமும் இலக்கியமும் காட்டும் பெண்களை உழைக்கும் வருக்கத்தினர், உயர்குடியினர் என இரு வகையாகப் பிரித்துக் காணலாம். மேற்கண்ட அடிப்படையில், தொல்காப்பியம் - பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலையின் முடிவுரை, அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகம் என்னும் அடிப்படையில் தரப்படுகிறது. வரலாற்றில் பெண் அரசாண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படினும் பெண் அரசாண்டமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், அரசுரிமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை என்று ஊகிக்கக்கிடக்கிறது. 

பெண் அரசு செய்ததற்கான வலுவான சான்றுகள் இல்லாதபோதும், சேர நாட்டில், சங்ககாலத்தில் நிலவிய பெண்ணின் அதிகார நிலையை, சொத்துரிமையை, எடுத்துக் காட்டுவதாக மருமக்கள் தாயமுறை ஆட்சி வழக்கில் இருந்திருக்கிறது. இது, தாய்த் தலைமையின் எச்சம் என்று கொள்ளலாம். ஆனால் இது பெருவழக்காக இருந்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில், கல்வி தொடர்பாகப் பொது மக்களிடையே காணப்பட்ட விழிப்புணர்வும், கல்வி கற்பதில் காட்டிய ஆர்வமும் உயரியது. வறிய மாணாக்கர்கள், ஊர்விட்டு ஊர் சென்று பொது மன்றுகளில் தங்கி, வீடுகளில் விருந்தினராக நுழைந்து தமது ஏழ்மை நிலையிலும் கல்வி கற்றிருக்கிறார்கள். பாணர் குடியினர், தம்முள் ஒரு கல்விமுறையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். 

பெரும்பாலான சங்கப்புலவர்கள், வசதி வாய்ப்பற்ற பொதுமக்களே. பெண்பாற் புலவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்களே. 473 சங்கப் புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 45 பேர் என்றும், அவர்கள் பாடிய பாடல்கள் 196 என்றும் அறிகிறோம். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலச் சூழலில்; 10 விழுக்காடு பெண்கள் கவி பாடியதே அதிகம். பாடியோர் எண்ணிக்கையை விடப் பாடல் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சங்க காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் புலவர்களாகவும் துணிச்சல் காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடமும் மன்னரிடமும் பெருமதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. அவர்களை யாரும் அடக்கியாளவில்லை என்பதும் அவர்கள் பெண் என்ற முறையில் எங்கும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படவில்லை என்பதும் எந்த ஆணுக்கும் அவர்கள் எந்த வகையிலும் தம்மைக் குறைத்துக் கணக்கிட்டது கிடையாது என்பதும் நிரூபிக்கப்பட்டது. வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவது ஆண்மகன் கடமை என்று கூறும் ஒரு சமுதாய அமைப்பையே தொல்காப்பியர் காட்டுகிறார். 

உயர்குடிச் சமூகத்தில் பெண் வீட்டு நிருவாகம் செய்வதைக் கூறிய அவருக்குச் சராசரிப் பெண், வீட்டுத் தேவைகளுக்காக தன்பங்கிற்குச் சிறுகச் சிறுகத் தொழிலும் வியாபாரமும் செய்திருக்கிறாள் என்பதைக் கூறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சங்க இலக்கியங்கள் அவற்றைக் கூறத் தவறவில்லை. உயர்குடிப் பெண் கணவனோடு இருக்கும் வரை கணவனின் சொத்து அவள் சொத்து என்னும் நிலைப்பாடே அக்காலத்தில் நிலவியிருக்க வேண்டும். கணவனை விட்டு அவள் விலகிய நிலையில் அவளுக்குச் சொத்தும் இல்லை, காப்புமில்லை என்ற அளவில் அவள் கணவனைச் சார்ந்தே இருக்கிறாள். கணவன் ஊரில் இல்லாத வேளைகளில் மனைவி தன்விருப்பப்படி புலவர்களுக்குப் பரிசில் வழங்கியிருக்கிறாள் என்ற அளவில் அவளுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருந்திருக்கிறது. 

ஒரு சராசரிப் பெண்ணுக்குச் சொத்துரிமை என்று ஒன்று தனியாக இருக்கவில்லை. ஆணுடன் சேர்ந்து தொழில் செய்பவளுக்கு கணவனுடையது எல்லாம் அவளுடையதே; 

தந்தையோ தமையனோ கணவனோ கடலிலிருந்து கொண்டு வரும் மீன், கொண்டு வரும் வரை தான் ஆணின் சொத்து. அதனைக் கூடையில் ஏற்றி விலைப் பொருளாக்குவதும் உப்புப் போட்டுக் கருவாடாக்குவதும் பெண்ணின் கடமையாக இருந்திருக்கிறது. அப்படியானால் மீன் யார் சொத்து? 

நெல் விற்று எருது வாங்கி வரும் பெண், இந்த எருதை யார் பெயரில் சொத்தாக எழுதிக் கொள்ளுவாள்?

வண்டியில் உப்பை ஏற்றி, நெடுஞ்சாலையில் ஓட்டி, உப்பு வணிகத்தில் பெரும் பங்கு கொள்ளும் பெண்ணுக்கு இவ்வாணிபத்தில் பங்கு என்ன? 

ஆணுக்குச் சமமாக வயலில் வேலை செய்கிறாள் பெண். விளைபொருளுக்குச் சொந்தக்காரர் யார்? 
இவ்வாறு தொழிலைச் சமமாகப் பங்கு போட்டுச் செய்யும் சமூகத்தில்; சொத்துரிமை ஒரு சிக்கலாக இருக்கவில்லை. 

அகவிலக்கியத்தில் தலைவியே முக்கிய பாத்திரம் என்பது புள்ளிவிவர அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. தலைவியின் வாழ்வின் பிற்கூறு இப்படித்தான் இருக்கும் என்பதை நற்றாயைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தந்தையிடமும், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தாயிடமும் இருந்திருக்கிறது. ஆனால், தந்தையைத் தனது முடிவிற்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் தாயிடம் இருந்திருக்கிறது. எனவே இறுதித் தீர்மானங்கள் பெண்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆண், பெண் கடமைகள் சமமானவையாகத் தொல்காப்பியம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் உடலமைப்பில் ஒத்தவர்கள் போலக் காணப்பட்டாலும் அடிப்படையில் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டவர்கள். உடல் சார்ந்த தொழிற்பாடுகளை ஆணால் திறமையாக ஆற்ற முடியும். பெண் இனப் பெருக்கத்திற்குக் காரணமானவள், மென்மையானவள், உள்ளம் சார்ந்த செயல்களில் திறமைசாலி. உலகோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அணுகுமுறையிலும் ஆணிலும் பல வழிகளில் வேறானவள். அவர்கள், தமது தன்மைகளுக்கு ஏற்ற முறையில், தம்மிடையே ஏற்படுத்திக் கொண்ட எழுதா ஒப்பந்தத்தின்படி தொழிற்பாடுகளைப் பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை ஆராயும் நாம் அதனைப் புரிந்து கொள்வதற்குத் தற்கால நடைமுறைகளை அளவுகோலாகக் கொண்டிருக்கின்றோம். 

மகளிர், மொழிவழி அல்லாத மறைமுகத் தொடர்பியலே பெரும்பாலும் கொள்கின்றனர் என்பது தொல்காப்பியர் மீது சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு. இது தொடர்பான நூற்பாக்களும் விளக்கங்களும் அவற்றிற்கு எதிரான கருத்துக்களும் ஆராயப்பட்டன. ‘தொடர்பாடல்’ என்னும் சொல் விரிவாக ஆராயப்பட்டு, அதன்வழி தொல்காப்பியம் பெண்ணிற்குக் கூறியிருக்கும் தொடர்பாடல் இரட்டைத் தொடர்பாடலே என்பதும் களவிலும் கற்பிலும் அவளது தொடர்பாடல் அவளது இணையான தலைவனது தொடர்பாடலுக்கு எந்த வகையிலும் மாறுபட்டதோ, தாழ்வு பட்டதோ அல்ல என்பதும் நிறுவப்பட்டுள்ளது. பெண் ஆணின் விருப்பத்திற்கு ஏற்பக் கற்பிக்கப்பட்டவளாகக் கூறப்படுகிறது. 

களவில் தலைவியின் இயக்கத்தில் தலைவன் ஒழுகினானே தவிரத் தலைவனின் இயக்கத்தில் தலைவி இயங்கவில்லை. தலைவி, யாருடைய ஆலோசனையோ அனுமதியோ இன்றித் தோழிக்கும் தெரியாமல், தலைவனைத் தெரிந்தெடுக்கிறாள். பெண்ணை, ஆண் கட்டாயப்படுத்தி எதையும் சாதித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. சங்ககாலப் பெண், தனது மனத்துக்குப் பிடித்தவனைக் கணவனாகத் தெரிந்தெடுக்கும் மனத் துணிவையும் சுதந்திரத்தையும் அக்காலச் சமூகம் அவளுக்குக் கொடுத்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் களவில் மெய்யுறுபுணர்ச்சி நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒத்த குணவியல்புகளும் ஆளுமையும் கொண்ட தலைவியின் சம்மதமின்றித் தலைவனுக்கு எதுவும் சாத்தியமில்லை என்பது தெளிவு. தொல்காப்பியர் இலக்கணப்படி ‘கற்பு’ என்பது ‘கன்னித்தன்மை’ யுடன் தொடர்புடைய பொருளில் ஆளப்படவில்லை. திருமணத்தின் முக்கிய நிகழ்வான புணர்ச்சி திருமணத்திற்கு முன்னமே நடந்து முடிந்து விட்டது. எனவே புணர்ச்சிக்கும் கற்புக்கும் தொடர்பில்லை. காட்டலாகாப் பொருளான ‘கற்பு’ என்பது நிறை என்னும் உள்ளத்து உணர்வு. துணைக்கு யாருமற்ற நிலையில் மதுரைத் தெருக்களில் நின்று நீதி கேட்ட வணிகர் குடிப்பிறந்த கண்ணகி தனது கற்பு வழித் தீர்வு கண்டாள். ஒரு சராசரிப் பெண்ணுக்கு இதுவும் சாத்தியமே. 

தொல்காப்பியர் காலத்தில், நிறை என்னும் பொருளில் ஆளப்பட்ட கற்புக்குப் பிற்கால ஆய்வாளர்கள், தம் காலக் கருத்தைப் புகுத்திப் பொருள் காண விழைவது பொருந்துவதாக இல்லை. தலைமுறை இடைவெளியைத் தாண்டிப் பொருள் காணவேண்டும். 

பெண் உடைமைப் பொருள் என்று கூறப்படுகிறது. மகட்பாற்காஞ்சி போன்ற துறைகள் பெண்ணை உடைமைப் பொருளாகக் காட்டுகின்றன. பிற்காலத்தில் பாடல்களுக்குத் துறைகள் அமைத்தலில் சில  தவறுகள் நேர்ந்திருக்கின்றன. புறநானூற்றில், மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் பெண் காரணமாக எழுந்த போரைக் குறிப்பிடவில்லை. சீறூர்த் தலைவரின் வீரமும் குடிச்சிறப்பும் மான மாண்பும் புகழ்வதற்குப் புலவர்கள் மேற்கொண்ட புனைவு நெறியே மகட்பாற்காஞ்சியாகும். சங்ககாலத்தில், பெண் உடன்கட்டை ஏறும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. ‘சதி’ என்னும் கட்டாய வழக்கம் சங்ககாலத்தின் பின் சிறிது சிறிதாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. மனைவி இறந்த கணவனுக்கு, காதலியை இழந்த ‘தபுதார நிலை’ மட்டும் ஒரு புறநடையாகும். அதுவும் வருந்தி நிற்பது மட்டும் தான். பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் மனைவி உயிரோடு இருக்கும் போதே கணவன் வேறொருத்தியை மணந்து கொள்ளும் இருதாரமணம் சங்ககாலத்தில் இருந்திருக்கிறது. 

சங்ககாலப் பெண்களும் காலத்தைப் பிரதிபலிப்பவர்களாக, மறக்குடி மரபிற்கேற்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பும்  வீரத்தாயாகவும், தன் கணவன் போர்க்களத்தில் இறந்தான் என்பதை அறிந்து தானும் உயிர் நீக்கும் பதிவிரதையாகவும், தன் கணவன் உயிர் குடித்தவனைக் கொன்று பழி தீர்த்த பின் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்; மறக்குடி மகளாகவும், மாண்ட தலைவனின் தலையை அணைத்தபடி உயிர்விடும் வீரத்தலைவியாகவும் தமிழ் மறக்குடி மகள் காட்டப்படுகிறாள். 

மறக்குடி மாதருக்குத் தமிழர் வரலாற்றில் தனியிடம் தரப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணத்தாலேயே பெண்ணுக்குக் கடல் பயணம் மறுக்கப்பட்டது. சங்க காலத் தமிழர் பண்பாட்டில் பெண்கள் மடலேறியிருக்கமுடியாது என்பது நிறுவப்பட்டது. பாசறைக்குப் பெண்கள், தொழில் தொடர்பாகப் போயிருக்கிறார்கள் என்பதும் எவரும் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்பதும் நிறுவப்பட்டது. எனவே, மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டவை யாவும் நன்நோக்குடனேயே மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால் அல்ல. 

கலை வளர்த்த ஒரு குடிக்கும் பணமும் அதிகாரமும் வாய்ப்பும் மிக்க உயர்குடி மக்களுக்குமிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் உருவானவர்களே பரத்தையர் குலம். எனலாம். கலைமக்களாக இருந்த விறலியரை விலைமகளாக்கியதில் பாணரது பங்கும் பெரியது. தமது வாழ்வாதாயத்தின் பொருட்டுத் தம் குலப் பெண்டிரைப் பொருளுக்கு விற்றனர் என்பது தான் உண்மை. போரின் விளைவாக ஆண் பெண் சமநிலை அற்றுப் போனதும், போரில் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட மகளிருக்கும் இதுவே தொழிலாக ஆக்கப்பட்டதும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் தமிழர் போற்றி வந்தமையும் சங்ககால இறுதிப் பகுதியில் பரத்தையர் பெருக்கத்திற்கான வேறு காரணங்களாக அமைந்தன எனலாம். பரத்தையருக்குக் குழந்தைகள் பிறந்திராவிட்டால் பரத்தையர் குடி அருகி இல்லாமற் போயிருக்கவேண்டும். மாறாகப் பரத்தையர் எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது. இது, பரத்தையரது மகப்பேறு, தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தவிர்க்கப் பட்டிருக்கிறது என்ற கருத்தை உறுதி செய்கிறது.

தலைவன் பரத்தையிற் பிரிதலை ஒரு சாதாரண நிகழ்வாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. சுவை கருதிப் பரத்தையர் ஒழுக்கம் அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. பரத்தையிடம் ஆண் செல்வது அவனது பலவீனம். இதுவே தலைவியின் பலமாகவும் ஆகிவிடுகிறது. தலைவிக்குத் தலைவனின் பரத்தைமையைப் பொறுத்துப் போகும் பண்பு கூறப்படுகிறது. இது, தலைவி, தலைவனின் பரத்தமையை ஏற்று நடக்காவிட்டால், அவள் ஒதுக்கப்படக்கூடியதொரு நிலை உருவாகும் என்று அச்சுறுத்துவது போல இருக்கிறது. 

கற்பு வாழ்க்கையில் கணவனின் பரத்தைமை ஒழுக்கம் அவளுக்கு ஒரு தலையிடியாக இருந்ததே ஒழிய அது அவள் வாழ்க்கையைத் தகர்க்கும் ஒழுக்கமாக இருக்கவில்லை. அவள் அதனை அக்கால வாழ்க்கை நெறியின் ஒரு அம்சமாகக் கொண்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையே காணப்பட்டிருக்கிறது. தலைவன் தலைவியரிடையே புலவியும் ஊடலும் ஏற்படுவதற்குத் தலைவனின் பரத்தைமை தவிர வேறு காரணம் உள்ளதாகப் பாடல் இல்லை. கணவனை ஊடியும் கூடியும் ஏசியும் பணிந்தும் நயந்தும் கடிந்தும் அவனது தவறுகளை எடுத்துக் கூறும் உரிமையும் தகுதியும் கடமையும் பெற்றவள் தலைவி ஒருத்தியே. 

பரத்தை, தலைவன் மேல் உண்மையான அன்பு கொண்ட நிலையிலும் கூட, பிற்கால மாதவி போன்று, தலைவன் வாழ்க்கையில், தனக்கென நிலையான ஒரு இடத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தவள். சங்க காலப் பிற்பகுதியில் தனக்கும் தலைவன் மேல் உரிமை உண்டு என்பதைத் தலைவி, தோழி, உற்றார் காணப் பொது இடத்தில் உரிமை கோரிக் கொள்ளும் நிலை உருவாகியிருந்தது. காலமும் சமூகமும் பரத்தைக்கு இழைத்த அநீதி பல நூற்றாண்டு காலத்திற்குச் சமூகத்தைப் பழிவாங்கத் தவறவில்லை. மிக அண்மைக் காலம் வரை இதன் கொடுமை நீடித்திருந்திருக்கிறது. பெண் சமூகத்தின் ஒரு பகுதி, பரத்தை என்னும் பெயரால், பல நூற்றாண்டுகளாக மீளமுடியாத ஒரு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது என்பது மறுக்கமுடியாத ஒரு விடயமாகும்.

தொல்காப்பியம் ஆணாதிக்க சமூகத்தைப் பிரதிபலித்தபோதிலும், பெண்ணுக்கு முழுச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது, பெண்ணை உயரிய இடத்தில் வைத்துப் பாராட்டத் தவறவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் சார்ந்து வாழவேண்டியதன் தேவையைக் காட்டி நிற்கிறது பாரிமகளிர் வரலாறு. இளம்பெண் ஒருத்தி, வீட்டிற்கும் ஊருக்கும் அஞ்ச வேண்டிய ஒரு பண்பாட்டுக்குக் கட்டுப்பட்டிருந்ததையும் நக்கண்ணையார் பாடல்கள் காட்டி நிற்கின்றன. சமூகம், குடும்பம் என்னும் தாபனங்கள் ஆரோக்கியமாக இயங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் அத்தியாவசியமானவை. சங்ககாலத்தில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமூக அமைப்பையே நாம் காணக்கூடியதாக உள்ளது. 

சங்க காலத்தின் பின் தொடங்கிப் படிப்படியாகக் காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆண் பெண் பாலாரிடையேயான சமனற்ற தன்மை சமூகத்தில் ஓர் அதிகாரப் படிநிலையை  உருவாக்கி இருக்கிறது. சங்ககாலத்தில் இல்லாதிருந்த இந் நிலைப்பாட்டைச் சங்ககாலத்தின் மேல் ஏற்றிப்பார்க்கும் முயற்சி வலுவற்றது. சங்க காலப் பெண் கல்வியில் உயர்நிலையில் இருந்திருக்கிறாள். வீரத்தில் போற்றப்படும் இடத்தில் இருந்திருக்கிறாள். மிகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். குடும்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இல்லத்தலைவியாக இருந்திருக்கிறாள். சமூகத்தில் அவளுக்கென்று உயரியதொரு இடம் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. 

ஆண், பெண்பாலாருக்கு இருக்கவேண்டிய பத்துப் பண்புகளில் சமநிலை தவறுவது விரும்பப்படாவிடினும் அப்படி ஒருவர் உயர்ந்திருக்கும் வேளையில் அது ஆணாக இருக்கலாம் என்னும் மரபைத் தொல்காப்பியர் கூறியிருப்பது, இந்நிலைப்பாடு சிறந்த குடும்பம் உருவாக வழி வகுக்கும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே என்று ஊகிக்கக் கிடக்கிறது. இன்றைய நவீனத்துவச் சமூதாயச் சிந்தனையாளர்கள், இன்றைய சமூகச் சிந்தனையை அளவுகோலாகக் கொண்டு, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னைய ஒரு சமூகத்தின் நிலைப்பாட்டை அளக்க முயல்வது, பொருத்தமானதல்ல. 

உயர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்னும் கொள்கைக்கு அடிப்படையாகப் பெண்மைப் பண்புகள் காக்கப்படவேண்டும் என்னும் கருத்துத் தொல்காப்பியம் எங்கனும் ஊடுருவி நிற்கிறது. இன்று, சங்ககாலத்து நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளியே காரணம் என்னும் முடிவு கொள்ள வேண்டியிருக்கிறது. 





Monday, July 4, 2022

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்


 —  முனைவர் எஸ். சாந்தினிபீ



அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் சார்ந்த நிதி முறைகேட்டுப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இப்படிப் புகார்கள் எழும்போது, அதில் அரசு தலையிட முயன்றால், கோயிலை நிர்வகிப்பவர்கள் எதிர்ப்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்கள், அந்தக் கால அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வந்ததில்லையா? அந்தக் காலத்தில் கோயில்களை அமைத்த அரசர்கள் அதற்கான நிதி நிர்வாகத்தைத் தெளிவாக முறைப்படுத்தி வைத்திருந்தனர். இதற்காக எழுதப்பட்ட செப்புப் பட்டயங்கள் இன்றும் அரசர் காலத்துச் சாட்சிகளாக உள்ளன.

கோயில் நிதியையும் நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை அக்காலம் முதல் நம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர். கோயிலைக் கட்டிய அந்தக் கால மன்னர்கள், அவற்றின் நிர்வாகத்தில் இன்றைய அரசு மற்றும் நீதித் துறைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, சோழ மன்னர்கள் காட்டிய கவனத்தில் எந்தக் குறையையும் காண முடியாது. இவர்கள் ஆழ்ந்து ஆலோசித்து, முடிந்த வரையில் தவறான பயன்பாடுகளைத் தடுக்க முயன்றுள்ளனர்.

எனினும், அவர்களாலும் கோயில்களின் நிதி நிர்வாகத்தில் நூறு சதவீதம் புகார் எழாமல் பராமரிக்க முடியவில்லை. அதே நேரம், இது சார்ந்து சோழ மன்னர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. இதற்கான ஓர் உதாரணம், அன்று கச்சிப்பேடு என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரத்து உலகளந்தப் பெருமாள் கோயிலின் செப்பேடு.   'மெட்ராஸ் மியூசியம் செப்பேடு' என்று பரவலாக அறியப்படும் ஐந்து ஏடுகளைக் கொண்ட இது.   சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியச் செய்திகள் கிடைத்தாலும் முடிவில் மட்டும் ஒன்றிரண்டு ஏடுகள் காணாமல் போயுள்ளதால், சில விஷயங்கள் கிடைக்கவில்லை.

மன்னருக்கு நினைவூட்டல்:
உத்தம சோழனின் 16வது ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 965) வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு, அவருக்குப் பின் பேரரசர் முதலாம் ராஜராஜன் அரியணையில் அமர்ந்தார். சோழ மன்னர்களுக்குப் பொதுவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று தங்கி, நிர்வாகத்தைக் கவனிக்கும் வழக்கம் உண்டு. ஒருநாள், தலைநகர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு அலுவல் நிமித்தமாக மன்னர் உத்தம சோழன் சென்றிருந்தார். அரண்மனையின் தென்புறத்தின் சித்திர மண்டபத்தில் அமர்ந்திருந்தவரிடம் ஒரு அலுவலர், காஞ்சியிலுள்ள பெருமாள் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் கடமை உள்ளதாக மன்னரிடம் நினைவூட்டினார்.

அன்று 'ஊரகப் பெருமாள் கோயில்' என அறியப்பட்டதுதான் இன்றைய காஞ்சிபுரத்தின் உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலின் வரவு செலவுக் கணக்கு, திருவிழா செலவு,  திருவிழாக் காலப் பணிப் பங்கீட்டு முறை போன்ற பல செய்திகளை இச்செப்பேடு பதிவுசெய்துள்ளது. இதன்படி பல ஊர்சபைகள் இக்கோயில் இருப்பிலிருந்து பொன்னைக் கடனாகப் பெற்று அதற்கான வருடாந்திர வட்டித் தொகை, கோயில் நிலங்களிலிருந்துவரும் வருமானம் ஆகியவை வரவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் சங்கராந்தி, சித்திரை விஷு (இன்றும் கேரளத்தில் கொண்டாடப்படுகிறது) ஆகிய இரண்டு திருவிழாச் செலவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாக்களில் இறைவனுக்கான படையல் பொருட்கள், வாசனைப் பூச்சு, காய் பழம், வெற்றிலைப் பாக்கு, விளக்குக்கான எண்ணெய் சமையலுக்கான விறகு உட்பட பலவற்றிற்குமான தொகை கூறப்பட்டுள்ளது. கலைஞர்கள், தேவரடியார்,  பல்வகை இசைக்கருவி வாசிக்கும் உவச்சர்கள் உட்பட வழக்கமான பல வகைச் செலவுகளும் சொல்லப்படுகின்றன. ஆனால், இச்செப்பேட்டில் 'கண்டழிவற்காக' என ஒரு தொகை ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவிழாக் காலத்தில் எதிர்பாராது ஏற்படும் செலவிற்கான தொகை இது.   அதாவது, இக்காலத்தில் நாம் 'இதர செலவுகள்' என்று குறிப்பிடுகிறோமே அதைத்தான் 'கண்டழிவு' என்று குறிப்பிட்டுள்ளனர். இதில், வரவு செலவுக் கணக்கு பார்க்கச் சொல்லப்பட்ட முறைதான் மிகச் சிறப்பானது.

கணக்குப் பார்ப்பது யார்?
"மாதந்தோறும் கணக்குப் பார்க்க வேண்டும்.   திருவிழாக் காலத்தில் விழா முடிந்த கையோடு கணக்குச் சரி பார்க்க வேண்டும்.  காஞ்சிபுர நகரத்தார் குழுவின் தலைவரும் ஆண்டு வாரியத்தாரும், ஏற்றுவழிச்சேரி, கஞ்சகப்பாடி குடியிருப்புகளைச் சேர்ந்தாரும் இக்கோயில் திருவிழாக்கள் முடிந்ததும் கோயில் கணக்குகளைப் பார்வையிட வேண்டும்.  கஞ்சகப்பாடியாரும் ஏற்றுவழிச்சேரியாருமே கோயிலுக்கு மெய்க்காப்பாளரை நியமிக்க வேண்டும்;  கோயில் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார், திருமெய்க்காப்பு (பாதுகாவலர்), கணக்கெழுதுவார் ஆகியோரை நகரத்தாரே தேர்ந்தெடுத்துப் பணியமர்த்த வேண்டும்.   கோயில் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால், பதினெட்டு நாட்டு அடியார்கள் மட்டுமே ஒன்றுகூடி நேர்செய்தல் வேண்டும் எனச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அதாவது, கோயில் வழிபாடு செய்யும் பூசாரிகளுக்கும் கோயிலின் சொத்து வரவு செலவுகளுக்கும் தொடர்பில்லை. வரவு செலவான நிதி நிர்வாகம் பார்ப்பவர்கள் வேறு பல ஊர்களையும் குடியிருப்புகளையும் சேர்ந்தவர்களே. இவர்களுடன் கோயில் பணி செய்பவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இவர்கள் சேர்ந்தால் ஊழல் ஏற்படும் எனக் கருதி, கோயில் பணியாளர்களையும் கணக்கு மேற்பார்வை செய்பவர்களையும் சோழர்கள் தனித்தனியே வைத்துள்ளனர். மேலும், நிதி நிர்வாகம் செய்பவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் அமர்த்தி, அதிலும் ஊழலைத் தடுக்க முயன்றுள்ளனர்.

காவிரிப்பாசன மாவட்டங்களில் உள்ள பெருங்கோயில்கள் அனைத்தும் சோழர் கால நிதி நிர்வாகப் பட்டியலைச் சேர்ந்தவைதான். இந்தப்பின்னணியில் ஒருசில கோயில்கள் மட்டும் வரவு செலவுக் கணக்கைக் காண்பிக்க மறுப்பது சரியா என்கிற கேள்வியை வரலாற்று ஆதாரங்கள் எழுப்புகின்றன.



பேராசிரியர் முனைவர் எஸ்.சாந்தினிபீ 
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
நன்றி: ஜூலை 3, 2022- இந்து இதழ்