Wednesday, October 30, 2019

தமிழில் அச்சேறிய முதல் நான்கு நூல்கள்

——    அருள் முனைவர் அமுதன் அடிகள்


            ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்ததை நாம் அறிவோம். செல்லரித்த ஏடுகளிலிருந்து செந்தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றி, அவற்றை அச்சேற்றும் பணியில் முனைந்து உழைத்த தமிழ் அறிஞர்களைத் தமிழகம் இன்றும் நன்றியுடன் நினைத்துப் போற்றுகிறது. அதற்கு முன்னோடியாகப் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தமிழ் அச்சகம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்டு உதவிய சான்றோர்களையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப் போற்றுவது நமது கடமை.

            இந்திய மொழிகளுள் முதன் முதல் அச்சேறியவை தமிழ் நூல்களே என்பதைத் தனிநாயக அடிகளாரும், கேசவனும் உறுதிப்பட நிறுவியுள்ளனர். அவ்வாறு அச்சேறிய முதல் நான்கு நூல்களும் கிறித்துவ சமயம் சார்ந்த நூல்கள்.

முதல் நான்கு நூல்கள்:
            1. தம்பிரான் வணக்கம், 2. கிரீசித்தியானி வணக்கம், 3. கொம்பெசியோனாயரு, 4. அடியார் வரலாறு ஆகிய நான்கு நூல்களே பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழ் எழுத்தில் அச்சிடப்பெற்ற முதல் நூல்கள், இவற்றுள் கொம்பெசியோனாயரு தவிர்த்த பிற மூன்று நூல்களையும் பல்வேறு நூலகங்களில் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய பெருமை தனிநாயக அடிகளாருக்கு உரியது. அவற்றை ஆய்வு விளக்கங்களுடன் மறுபதிப்புச் செய்த பெருமை இராசமாணிக்கம் அடிகளாருக்கு உரியது. இந்நான்கு நூல்களையும் போர்த்துக்கேய மொழியிலிருந்து தமிழில் பெயர்த்தவர் அண்டிறீக்கிப் பாதிரியார் எனத் தம்மை அழைத்துக் கொண்ட Anrique Anriquez என்னும் யேசுசபைத் துறவி (1520–1600) ஆவார்.

முதல் ஐரோப்பியத் தமிழறிஞர்
            போர்த்துக்கல் நாட்டில் விலா விசோசா என்னும் ஊரில் 1520-ஆம் ஆண்டில் பிறந்த அண்டிறீக்கி, 1546ஆம் ஆண்டில் யேசு குருவாக இந்தியா வந்து, பெரும்பாலும் தூத்துக்குடிப் பகுதியில் தங்கி மறைப்பணி ஆற்றியவர். தமிழை முயன்று பயின்று, தமிழில் இலக்கணம், அகரமுதலி, உரைநடை நூல்கள் இயற்றுமளவுக்குப் புலமை பெற்றார். பல்வேறு நூல்களை இயற்றியதாக அவரின் மடல்கள் தெரிவித்தாலும் மேற்குறித்த நான்கு நூல்களின் அச்சுப்படியும் அவரது இலக்கணத்தின் கையெழுத்துப் படியுமே நமக்குக் கிடைத்துள்ளன.

தமிழ் எழுத்துகள் அச்சில்
            ஸ்பெயின் நாட்டு யேசுசபைத் துறவுச் சகோதரராகிய சுவாம் கொன்சால்வஸ் என்பவரே முதன் முதலாக 1577ஆம் ஆண்டில் கோவாவில் தமிழ் அச்சுகளை வடிவமைத்து வார்த்தவர். பின்னர் 1578இல் கொல்லத்தில் சுவாம் தெஃபாரியா என்னும் யேசுசபைத் துறவி மீண்டும் தமிழ் அச்சுகளை வார்த்துக் கொடுத்தார். கொல்லத்தில் வார்க்கப் பெற்ற அச்சுகளே நான்கு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேரோ லூயிஸ் என்னும் யேசுசபைத் துறவி இரு இடங்களுக்கும் சென்று அச்சுகளை உருவாக்குவதில் உதவியாக இருந்தார். இவ்வெழுத்து வடிவங்களைத் தம்பிரான் வணக்கம் நூலின் இறுதியில் காணலாம்.

1. தம்பிரான் வணக்கம்:
            தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Malauar Tamul) என்ற 16 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரே ஒரு படிதான் இன்று கிடைக்கிறது. அது 1951 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்துக்காக வாங்கப்பட்டது.

            20.10.1978 அன்று கொல்லத்தில் அச்சிடப்பட்டதாக நூலின் முகப்பில் மொழிபெயர்ப்பு ஆசிரியராக அண்டிறீக்கிப் பாதிரியார் பெயர் மட்டுமே தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூலின் இரண்டாம் பக்கத்தில் போர்த்துக்கேய மொழிக் குறிப்பில் அண்டிறீக்கியுடன் புனித பேதுரு மானுவேல் அடிகளும் இந்நூலை மொழிபெயர்த்தமை குறிக்கப்பட்டுள்ளது. மானுவேல் அடிகள் பற்றிய விவரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

            சிலுவை அடையாளம் மந்திரம், விசுவாசப் பிரமாணம், பத்துக் கற்பனைகள், திருச்சபைக் கட்டளைகள், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், மரியே வாழ்க மந்திரம், ஒப்புரவு மந்திரம், விசுவாசக் கோட்பாடுகள், திருவருட்சாதனங்கள், தலையான பாவங்கள், தலையான புண்ணியங்கள், இரக்கச் செயல்கள், தேவ சம்பந்தமான புண்ணியங்கள், ஆன்மாவின் எதிரிகள், கடைசி முடிவுகள், எட்டுப் பேறுகள் ஆகியவை தம்பிரான் வணக்கத்தில் இடம் பெற்றுள்ளன.




            முதல் பக்கத்தில் மூவொரு கடவுளைக் குருத்தோலை ஏந்திய புனிதர் கூட்டம் போற்றி வழிபடும் ஓவியம் அச்சாகியுள்ளது. அதன் மேல் பகுதியில் மலபார் தமிழ் மொழியில் கிறித்துவக் கோட்பாடு எனப் பொருள்படும் போர்துக்கேயச் சொற்களும் கீழ்ப்பகுதியில் 'கொமஞ்ஞிய தெ சேசூ வகையிலண்டிறீக்கி பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்' என்னும் தொடரும் அமைந்துள்ளன. நூலின் இரண்டாம் பக்கம் முதல் 15ஆம் பக்கம் வரையில் மேற்குறித்த மந்திரங்கள் அச்சிடப்பெற்றுள்ளன.

2. கிரீசித்தியானி வணக்கம்:
            அண்டிறீக்கிப் பாதிரியாரின் இரண்டாவது படைப்பாகிய இந்நூல் 122 பக்கம் கொண்டது. 14.11.1579 அன்று கொச்சியில் அச்சிடப் பெற்றது. மேலட்டையின் மேல் பகுதியில் DOCTRINA CHRISTAM எனப் போர்த்துக்கேயத்திலும், கீழ்ப்பகுதியில் கிரீசித்தியானி வணக்கம் எனத் தமிழிலும் நூற்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூல நூலின் ஆசிரியர் மார்க்கொசு சொரிசி (Marcos Jorge) பாதிரியார் எனவும், நூல் அச்சிடப்பெற்ற இடம் நாள் பற்றிய விவரங்களும், மூன்றாம் பக்கத்தில் தமிழிலும் நான்காம் பக்கத்தில் போர்த்துக்கேயத்திலும் அச்சிடப்பெற்றுள்ளன. இந்நூலில் தமிழ் அல்லாத சொற்களைப் பயன்படுத்தும்போது அச்சொற்களின் முன்னும் பின்னும் T என்னும் குறி அச்சிடப்பட்டுள்ள குறிப்பும் தரப்பட்டுள்ளது.

            5-6 பக்கங்களில் நூலின் முகவுரை தமிழில் அமைந்துள்ளது. இளமைப் பருவத்திலேயே மறையுண்மைகளைக் கற்பிப்பதன் தேவையையும் நன்மையையும் விளக்கும் இம்முகவுரை பல நூல்களை அச்சிடுவதற்காகத் தூத்துக்குடிப் பகுதிக் கத்தோலிக்கக் கிறித்துவர் தாராளமாக நிதியுதவி வழங்கினர் என்னும் செய்தியையும், இதனை மொழி பெயர்த்த அண்டிறீக்கி தமிழறிந்த சிலரிடம் நூலைக் காட்டித் திருத்தங்கள் பெற்ற செய்தியையும் நமக்குத் தருகிறது.

            இன்று காணக் கிடைக்கும் ஒரே படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் போத்லெயன் நூலகத்தில் உள்ளது. 1979ஆம் ஆண்டு போத்லெயன் நூலகத்தில் கிரஹாம் ஷா என்னும் ஆய்வாளர் கொம்பெசியோனாயரு, கிரீசித்தியானி வணக்கம் ஆகிய இரு நூல்களும் ஒரே கட்டாகத் தைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆகவே இன்று கிடைத்துள்ள கிரீசித்தியானி வணக்கம் நூலின் ஒரே படி இதுவே.

உள்ளடக்கம்
            12 அதிகாரங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ள இந்நூல் முதல் அதிகாரத்தில் கிரீசித்தியானி (கிறித்துவர்) என்பவர் யாரென விளக்கிய பின் இரண்டாம் அதிகாரத்திலிருந்து ஆறாம் அதிகாரம் வரை சிலுவை அடையாள மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், விசுவாச மந்திரம் போன்றவற்றுக்கு விளக்கம் அளிக்கின்றது. ஏழாம் அதிகாரம் விசுவாசத்தின் பிரிவுகள் பற்றியும் எட்டாம் ஒன்பதாம் அதிகாரங்கள் பத்துக் கற்பனைகள் திருச்சபைக் கட்டளைகள் பற்றியும், பத்தாம் பதினொன்றாம் அதிகாரங்கள் தலையான பாவங்கள் திருவருட்சாதனங்கள் பற்றியும் விரித்துரைக்கின்றன. பன்னிரண்டாம் அதிகாரத்தில் இரக்கச் செயல்பாடுகள், புண்ணியங்கள், எட்டுப்பேறுகள் பற்றி எடுத்துரைத்து ஒப்புரவு மந்திரத்தோடு நூல் நிறைவு பெறுகின்றது.

            ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நடைபெறும் உரையாடலாக வினாவிடையாக நூல் முழுவதும் அமைந்துள்ளது.



பதிப்பு முறை
            நூலிலுள்ள எழுத்துக்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளன. ஒவ்வோர் அதிகாரத்தின் முதலெழுத்தும் பிற எழுத்துக்களை விடப் பன்மடங்கு பெரியதாகவும் கோலமிட்ட கட்டத்தினுள் இருக்குமாறும் அச்சிடப்பெற்றுள்ளது. நூலிலுள்ள மந்திரங்களைக் குழந்தைகள் மனப்பாடமாகக் கற்பதற்கு உதவியாக ஒவ்வொரு மந்திரமும் நிறுத்தக் குறியினால் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளது. ஆசிரியருக்குத் தேவையான விளக்கங்கள் கோலக் கரைக்குள் அமைந்துள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் விளக்கும் பொருள் எது எனத் தமிழிலும் போர்த்துக்கேயத்திலும் தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்தின் இறுதி வரியாக அடுத்த பக்கத்தின் இரு தொடக்க எழுத்துக்களும் அச்சிடப்பெற்றுள்ளன.

            பிழை திருத்தப் பகுதியும் உள்ளடக்கப் பகுதியும் இந்நூலில் அமைந்துள்ளமை சிறப்பாகக் குறிப்பிடுதற்குரியது.

3. கொம்பெசியோனாயரு:
            இந்நூல் நீண்ட காலம் அறியப்படாமலிருந்தது. தனிநாயக அடிகளாருக்கோ இராசமாணிக்கம் அடிகளாருக்கோ கூட இந்நூல் கிடைக்கவில்லை. 1979-இல் கிரஹாம் ஷா கண்டுபிடித்த பின்னரே இந்நூல்பற்றி நம்மால் அறிய முடிகிறது.

            முதல் இரு நூல்களுக்கும் தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம் எனப் பெயரிட்ட அண்டிறீக்கிப் பாதிரியாரால் இந்நூலுக்குத் தக்க தமிழ்ப்பெயர் இட முடியவில்லை. போர்த்துக்கேயப் பெயரையே அவர் பயன் படுத்த வேண்டியதாயிற்று. அவ்வாறே வேறு பல கலைச் சொற்களுக்கும் தக்க தமிழ்ச் சொற்கள் அன்று கிடைக்கவில்லை.

            கொம்பசியெனொயரு என்பதை ஒப்புரவு அருட்சாதன விளக்கம் எனத் தமிழில் வழங்கலாம். மேலட்டையின் மேற்பகுதியில் CONFESSIONARIO எனப் போர்த்துக்கேயத்திலும், கீழ்ப்பகுதியில் கொம்பெசியோனாயரு எனத் தமிழிலும் நூற்பெயர் அச்சிடப்பெற்றுள்ளது.

            இது 31.05.1580 அன்று கொச்சியில் அச்சிடப்பெற்றது. 214 பக்கங்களைக் கொண்டது. ஒப்புரவு அருட்சாதனம் பெறும் கிறித்துவர்கள் தங்கள் பாவங்களை நன்றாக நினைத்துப் பார்த்து வெளிப்படுத்தவும், பாவங்களைத் தவிர்த்து இறைவன் திருவுளப்படி ஒழுகவும் தேவையான விளக்கங்களையும் நெறிமுறைகளையும் கொண்டது இந்நூல்.

நூல் அமைப்பு
            ஒவ்வோர் அதிகாரத்தின் தலைப்பிலும் அவ்வதிகாரத்தில் விளக்கப்படும் பொருள் பற்றிய சுருக்கமான முன்னுரை தமிழில் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் முதலெழுத்து பன்மடங்கு பெரிதாக ஒரு கட்டத்துக்குள் அச்சிடப்பட்டுள்ளது.

            தம்பிரான் வணக்கத்திலும் கிரீசித்தியானி வணக்கத்திலும் தலைப்புகள் போர்த்துக்கேய மொழியிலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. ஆனால் கொம்பெசியோனாயரு நூலில் முகப்பட்டையைத் தவிர வேறு எங்குமே போர்த்துக்கேய மொழியை நாம் காண இயலாது. ஆகவே, முழுமையாகத் தமிழ் எழுத்தில் அச்சிடப்பெற்ற நூல் இது என நாம் பெருமை கொள்ளலாம்.

4. அடியார் வரலாறு
            அண்டிறீக்கிப் பாதிரியார் மொழிபெயர்த்து அச்சிட்ட இந்நூல் 668 பக்கங்களைக் கொண்டது. இந்நூலுக்கு ஆசிரியர் என்ன பெயரிட்டார் என அறிய இயலவில்லை. ஏனெனில் நூலின் பெயரும் அச்சிடப்பெற்ற இடம், நாள் பற்றிய விவரங்களும் அடங்கிய பக்கங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்விவரங்கள் இல்லாத - ஆனால் நூலின் உள்ளுறையைப் பொறுத்த அளவில் முழுமையான படிவத்திற்கான நூலொன்று  நூலகத்தில் இருப்பதைத் தனிநாயக அடிகள் கண்டுபிடித்துத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்பானிஷ் மொழியில் கையெழுத்தில் ஆசிரியரின் பெயரால் அமைந்த ஒரு முன்னுரை இப்பிரதியில் உள்ளது. அது நூலாசிரியரின் கையெழுத்து அல்ல. இப்புனிதர்கள் வரலாறு 1586 ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்றதாக அம்முன்னுரையில் குறிக்கப்பட்டுள்ளது.

            நூலின் மற்றொரு பிரதி கோபன்ஹேகன் நகரிலுள்ள மன்னர் நூலகத்தில் (The King's Library, Copenhagen / Det Kongelige Bibliotek - The Royal Library) உள்ளது. அதிலும் அச்சிடப்பட்ட இடம், நாள் பற்றிய விவரங்கள் இல்லை. வாத்திக்கான் (Vatican City) பிரதியிலுள்ள கையெழுத்து முன்னுரையும் இதில் இல்லை.

            புனிதர்கள் வரலாறுகளைக் கூறும் நூல் ஐரோப்பியரால் FLOS SANTORUM எனப் பொதுவாக வழங்கப்பட்டது. இந்நூலை  முழுமையாக ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் மறுபதிப்பாக வெளியிட்ட இராசமாணிக்கம் அடிகளார் இந்நூலுக்கு அடியார் வரலாறு எனப் பெயரிட்டு அச்சிட்டார். அப்பெயரே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.

            மூன்று மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை மொழிபெயர்த்து, அத்துடன் கிறித்தவர்களுக்குப் பயன்படுமெனத் தாம் கருதும் சிலவற்றைச் சேர்த்து இந்நூலை இயற்றியதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சிடப்பட்ட ஊர்
            அடியார் வரலாறு நூலின் முன்னுரைப் பகுதி கிடைக்காததால் நூல் அச்சிடப்பட்ட ஊர் பற்றிய உறுதியான சான்று இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை. 1679-ஆம் ஆண்டில் அம்பலக்காட்டில் அச்சிடப்பெற்ற தமது தமிழ்-போர்த்துக்கேய அகரமுதலியின் முன்னுரையில் அடியார் வரலாறு தூத்துக்குடிப் பகுதியில் அச்சிடப்பெற்றதாக அந்த்தாம் தெ புரோயென்சா அடிகள் குறிப்பிடுகின்றார். இது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயல் என்னும் ஊரில் அச்சிடப்பெற்றிருக்க வேண்டும் எனப் போத்லெயன் நூலகப் பொறுப்பாளர் சி.ஆர்.பாக்சர் கூறுவார். புன்னைக்காயல் அல்லது தூத்துக்குடி என நூல் அச்சிடப்பெற்ற ஊரைக் குறிப்பிடுவார் தனிநாயக அடிகள். புன்னைக்காயலில் இந்நூல் அச்சிடப்பட்டதாக வரலாற்றறிஞர் யோசப் விக்கி எழுதுகின்றார்.

            மரபுவழிச் செய்தியை நோக்கும் போது, தங்கள் ஊரில் தமிழ் அச்சகம் இருந்ததாக இன்றளவும் புன்னைக்காயல் மக்கள் பெருமை பாராட்டுகின்றனர்.

            ஆகவே அடியார் வரலாறு அச்சிடப்பெற்ற ஊர் புன்னைக்காயலே என நாம் துணியலாம்.

அண்டிறீக்கியின் மொழிபெயர்ப்பு
            ஐரோப்பியருள் முதன்முதலாகத் தமிழ்மொழியை நன்றாகப் பயின்று அதில் உரையாடவும் நூல் எழுதவும் திறமை பெற்றவர் அண்டிறீக்கிப் பாதிரியாரே. தாம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களைத் தமிழில் எழுதிட அவர் ஆற்றல் பெற்றிருந்தார் என்பதற்கு அவரின் நான்கு நூல்களுமே தக்க சான்று. ஆனால் கிறித்தவ சமயத்துக்கே உரியப் பல கலைச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்க அவரால் இயலவில்லை. அதைத் தம் நூல்களின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகின்றார்.

            அவரால் மொழிபெயர்க்க இயலாத சில சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளை இங்கே காண்போம். இன்று திருவருட்சாதனம் என வழங்கப்படும் சொல் அண்டிறீக்கி அறியாதது. இப்பொருள் குறிக்கும் Sacramento என்னும் போர்த்துக்கேயச் சொல்லை அவர் 'சக்கிறமெந்து' என்று வழங்குகின்றார் அவ்வாறே பல சொற்களை மொழிபெயர்க்க இயலாமல் போர்த்துக்கேயச் சொற்களைத் தமிழ் ஒலிக்கு ஏற்ப மாற்றி 'வவுத்தீசுமு' (Baptismo - திருமுழுக்கு), 'சாந்து சக்கிறமேந்து' (Santo sacramento - தேவ நற்கருணை), 'மந்திரிமோனியு' (Matrimonio - திருமணம்), 'ஓடுதேன்' (Ordem - குருத்துவம்) என்பது போலப் பயன்படுத்துகின்றார். 'கிராசை' (Graca - அருள்), 'எகிரேசை' (Egreja - திருச்சபை), 'விடுத்தூதைகள்' (Virtudes - புண்ணியங்கள்), 'சசெடுதோத்தி' (Sacerdote - குரு), 'ஆஞ்சு' (Ange - வானவன்) போன்ற சொற்களையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

            அதே வேளையில் உடுகூறை (ஆடை), மிடியர் (வறியோர்), தம்பிரான் (இறைவன்), தமையன் (அண்ணன்), காணாமல் படித்தல் (மனப்பாடம் செய்தல்), பிழை, கட்டவிழ்த்தல், வணக்கம், திருமகன், சுவை, திருவுள்ளம் போன்ற நல்ல தமிழ்ச்சொற்களும் இவரின் நூல்களில் பயின்று வரக் காணலாம்.

முடிவுரை
            16 பக்க அளவில் அமைந்த தம்பிரான் வணக்கத்தில் தொடங்கி 668 பக்கங்கள் கொண்ட அடியார் வரலாறு வரையில் அண்டிறீக்கிப் பாதிரியாரின் எழுத்துப்பணி தொடர்ந்ததை நாம் மலைப்புடன் நோக்குகின்றோம். பல்வேறு சமயப் பணிகளுக்கிடையிலும் உடல் நலக்குறைவுக்கிடையிலும் வாழ்க்கைமுறை மாற்றத்துக்கிடையிலும் அவர் அயராது இப்பணியில் ஈடுபட்டமை வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். இந்திய மொழிகளுள் முதன்முதலாக அச்சேறிய பெருமையைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த அண்டிறீக்கிப் பாதிரியாரின் அளப்பரிய பணியை நன்றியோடு நினைந்து போற்றுவது நம் கடமை.




தொடர்பு:  
அருள் முனைவர் அமுதன் அடிகள் (amudhantls1943@gmail.com)







Monday, October 28, 2019

சுஜித் என்றொரு சிறுவன்


 ——    கவிஞர் அமீர்



இறைவா...
"மாபெரும் சபையினில் நீ நடந்தால் 
உனக்கு மாலைகள் விழவேண்டும்" 
என்ற கனவு சுஜித்தின் தாய்க்கும் உண்டு...

நடுக்காட்டுப்பட்டி மக்களின்
ரத்தத்தில் தோய்ந்து வருவதுதான்
உயிர்ப்பிச்சை கேட்கும் விண்ணப்பம்

இறைவா...
உன் பெயர் சொல்லி
உன்னைப்போல் என்று சொல்லி
ஊர் வளைப்பாரெல்லாம்
உற்ற துணையோடு
உறங்கச் சென்று விட்டார்கள்...
 
கோவணங்களின் கஷ்டங்களைத்
தீர்க்காதவர்கள் தான்
இங்கு ஆவணங்களை 
ஆள்வோராக இருக்கிறார்கள்...

காவலுக்குக் கட்டிவிட்ட வேலிகளே
வெள்ளாமையை விற்கிறார்கள்...
அந்த துரோகங்களால் 
இப்படி தினக்கூலிகளே மடிகிறார்கள்...

முதலைக்கண்ணீரைப் பார்த்த நமக்குத்
துக்கத்தில் சிந்தும்
கண்ணீரையே சில முதலைகள் 
முதலாக்குகிறார்கள்...
 
நிலவைத் தொட்டுக்காட்டி 
சாதனை என்கிறார்கள்...
நூறடி ஆழத்தில் ஊசலாடும் உயிரை
என்னவென்பார்கள்...
வாய் நாறுவதை மறந்து
வெறும் புகழ் பாடுகிறார்கள்...

இறைவா...
இங்கு
நடப்பதெல்லாம் கண்கெட்டபின்னே
நடக்கும் சூரிய நமஸ்காரங்கள்...

நடந்தகதை முடிந்தகதை  எனக்
கடந்த காலத்தைத் திருப்பினால்
ஆண்டுக்கு சில சுஜித்கள் 
அஞ்சலி கண்ணீரில்...



தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




Saturday, October 26, 2019

திருவண்ணாமலை தீபம் நம் அண்ணாமலை அரசர்

——    முனைவர். கோ. வல்லரசி




திருவண்ணாமலை தீபம் நம் அண்ணாமலை அரசர்


அண்ணாமலை அரசே!
அண்ணாமலை தீபம் நீ! 
திருவண்ணாமலை தீபம்!
அறியாமை இருளகற்றும் 
அன்றாடக் கார்த்திகைதீபம் நீ!

ஊருணி நீரே, உலகின் பழுமரமே, 
பேரறிவாளன் திருவே,
பெறற்கரிய கல்விக்கோர் கற்பகத்தருவே, 
அள்ளக் குறையா அமுத சுரபியே,
என் சொல்லி  வாழ்த்துவேன்‌ உன்னை! 

தமிழுக்குத் தனி பல்கலைக் கழகம் 
தந்தவன் நீ! 
அதில் தமிழிசையை அலங்கரித்து 
மகிழ்ந்தவன் நீ! 
அறம்செய விரும்பென்ற ஔவையின்‌ 
மூத்த‌புதல்வன் நீ !

அறக் கொடை வள்ளலே! 
நீ கடையேழு வள்ளல்களைக் 
கடந்த கல்வி வள்ளல். 
இன்று, இந்தியாவின் 
மாணவக் கொடிகள் எளிதாகப் 
படர் கல்விக்கழகமாம் 
தேர்தந்த அண்ணாமலைப் பாரி நீ!

தீ கூட தென்றலானது 
உனது கொடை திறத்தால்.
உலகம்‌ வியக்கும் வள்ளலாய் 
வாழ்ந்தாய் ஆனால் 
ஒரு நிமிடம்கூட நீ உன்திறம் 
எண்ணி வியந்ததில்லை.

நாணல் போல் கவிழ்ந்த‌ 
நல்லவன் நீ!
உயர்வில்‌ நாணல் போல் 
கவிழ்ந்த நல்லவன் நீ!!
வாழையடி வாழையாய் தழைக்கிறது 
உன் கல்வித் தொண்டு 
தாழையின் மணமாய் 
உலகெங்கும் மணக்கிறது 
தொலைதூரக் கல்வித் துறை,
கலைத்துறை,
அறிவியல் துறை,
மருத்துவத்துறை,
பொறியியல் துறை, 
தொழில்நுட்பத்துறை,
விவசாயத்துறை,
இசைத்துறை,
நாடகத்துறை, 
திரைத்துறை ...
அப்பா! எத்தனைத் துறைகள்!!! 
உன் பல்கலைக் கழகக் கடலுக்கு 
அத்தனைத் துறைகட்கும் ‌
நீ ஒன்றுதானே கலங்கரை‌விளக்கம்!!!

குடி உயரக் கோன் உயரும் 
என்றது புறநானூறு.
கோனே! நீ உயர்ந்து குடிகளை‌உயர்த்தினாய்.
என்னே நின் தனித்திறம்.
என்னே நின் தனித்திறம்.

எத்துணைப் பட்டங்களை 
அள்ளித் தந்தது ஆங்கில அரசு 
அத்தனைப் பட்டங்கட்கும் 
உன் கடின உழைப்பு 
ஒன்றுதானே காரணம்.
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ 
என்பது தான்‌ உன்‌தாரக மந்திரமோ? 

துணிவும் நம்பிக்கையும்‌‌(With courage and faith)  
என்ற பல்கலைக் கழக இலட்சணைக்கு‌‌ 
உன் வாழ்க்கை ஒன்றே நல்ல எடுத்துக்காட்டு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் 
வானுறையும் தெய்வமென்றார்.
வானுறையும்‌ தெய்வமொன்று‌ 
வையத்திற்கு‌வந்து உன் வடிவில் 
வாழ்வாங்கு‌ வாழ்ந்ததென்பேன்.
வாழ்கின்றதென்பேன்.
வாழுமென்பேன்.

எத்தனையோ‌ பல்கலைக்‌கழகங்கள் 
நாட்டிலுண்டு‌ என்றாலும்‌‌ ‌
அத்தனைக்கும்‌ இமயம் நீ தந்த‌ 
அண்ணாமலைப் பல்கலைக் கழகமன்றோ?
ஔவைக்குத் தமிழ்‌வளர்க்க 
அதியன் கொடுத்தான் நெல்லிக்கனி.
அறிஞர்கள் தமிழ் வளர்க்க 
அரசே‌ நீ கொடுத்தாய்  நன்னிதிக்கனி.

எத்தனை மாணவக்கிளிகள்‌ 
உன் பல்கலைக் ‌கழக‌ ஆலமரத்தில் பயின்று 
ஆலோலம் பாடுகின்றன தெரியுமா? 
ஏட்டுக் கல்விச்சாலை மட்டுமன்று நீ நிறுவியது 
வாழ்க்கைக் கல்விச் சாலையும் தான்.
பொது வாழ்வில் ஈடுபடுவோர்க்கு‌ 
உன்  பல்கலைக் கழகமோர் போதிமரம்.
சிந்தனைச் சிற்பிகட்கோர் கற்பகத்தரு.

அண்ணாமலை அரசே ! 
உன்னால் உருவான கலைக்கழகம் 
ஓர் அறிவுப் பாசறை மட்டுமன்று 
பாசப் பாசறையும் தான்.
இவ்வுலகம் உள்ளவரை நின் புகழ் வாழும்.
நின் புகழ் உள்ளவரை இவ்வுலகம் வாழும்.





முனைவர். கோ. வல்லரசி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி.,
மேனாள் தமிழ் இணைப் பேராசிரியர் / தொடர்பு அலுவலர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்க இணைப் பேராசிரியர், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.






Friday, October 25, 2019

முதல் பேச்சுத்தமிழ் இலக்கணம்

——    அருள் முனைவர் அமுதன் அடிகள்



            1547ஆம் ஆண்டு தென்பாண்டி நாடு வந்தடைந்த அண்டிறீக்கிப் பாதிரியாருக்குத் (Fr. Henrique Henriques)   தமிழ் மொழி அத்துணை எளிதாக இருக்கவில்லை. மொழி பெயர்ப்பாளரின் துணைகொண்டு அவர் சமயப் பணியாற்ற வேண்டியதாயிற்று. பின் புனித பிரான்சிஸ் சேவியரின் ஆணைக்கிணங்க 1548ஆம் ஆண்டில் தமிழ் கற்பதில் அவர் ஈடுபட்டார். ஐந்து திங்களுக்குள் தமிழ் பேச அவரால் முடிந்தது. ஆயினும் தமிழ் ஒலிப்பு முறை சரியாகக் கைவரப்பெறவில்லை. அடுத்த ஆண்டின் நடுவில் மொழிபெயர்ப்பாளரின் துணையின்றித் தமிழ் பேச அவரால் இயன்றது. 1575ஆம் ஆண்டில் சமயப் பொறுப்பினின்று விடுவிக்கப் பெற்று, தமிழில் கிறித்தவ நூல்கள் இயற்றும் கடமையை அவர் மேற்கொண்டார்.

            தமிழ் இலக்கணம் இயற்றும் முயற்சியில் அண்டிறீக்கி 1548 ஆம் ஆண்டிலேயே ஈடுபட்டதாக (விக்கி 1948) அறிகிறோம். புதிய சமயத் தொண்டர்களுக்குப் பயன்படுவதற்காகவே அவர் இந்நூலை இயற்றினார். 1552ஆம் ஆண்டில் இலக்கண நூலை இயற்றி முடித்துவிட்டதாகக் கூறும் அவர், 1565ஆம் ஆண்டில் அதைச் செப்பம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார்.

            தம் இலக்கண நூலை அண்டிறீக்கி முழுமையாக்கி நிறைவு செய்தது எப்போது என நம்மால் அறிய இயலவில்லை. அண்டிறீக்கி பாதிரியார் இயற்றிய இலக்கண நூலின் தொடக்ககாலப் படியே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக அண்மையில் இதனை வெளியிட்ட பதிப்பாசிரியர் கூறுகின்றார்.

            தமது இலக்கணத்தைக் கொண்டு தமிழைக் கற்றல் எளிது என்பது அண்டிறீக்கியின் கருத்து. இலத்தீன் மொழி இலக்கணத்தின் அடிப்படையிலேயே தம் தமிழ் இலக்கணத்தை இயற்றியிருப்பதாகக் கூறும் அவர், இலத்தீன் மொழியறியாதோர், சுவாம் தெ பாரோஸ் இயற்றிய போர்த்துக்கேய இலக்கணத்தைப் படித்துக் கொள்ளலாம் என எழுதுகின்றார்.

எழுத்து முறை:
            நூலாசிரியர் தம் காலத்தில் தமிழ் மொழி எழுதப்பெற்ற முறையையே தம் நூலிலும் கையாள்கின்றார். எகர, ஏகார, ஒகர, ஓகார உயிர் மெய் எழுத்துக்களில் கொம்பு வேறுபாடு இல்லை . ஊகாரம் உகரத்தை அடுத்து ளகரம் வருவதாகவே (ஊ) எழுதப்படுகின்றது. ககர வகையில் உயிர்மெய்யெழுத்துக்களை எழுதும் ஆசிரியர் கானா, காவன்னா, கீனா, கீயன்னா எனப் பேச்சுத் தமிழ் முறையைப் பயன்படுத்தி எழுதுவதை நாம் காண்கிறோம். மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றி எழுதப்பட்டுள்ளன.

நூலின் பிரிவுகள்:
            நூலின் முதற்பகுதி பெயர்ச் சொற்களைப் பற்றியது. ஏறக்குறைய 30 பக்கங்களைக் கொண்டது. தமிழில் வேற்றுமை உருபுகள் உண்டேயன்றி, பெயர் ஈற்றின் அடிப்படையில் சொற்களை வகைப்படுத்துதல் இல்லை. ஆனால் இலத்தீன் மொழியில் ஈற்றின் அடிப்படையில் சொற்களை வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட முறையில் வேற்றுமை உருபுகளை ஏற்கும் நிலை உண்டு. இத்தகைய இலத்தீன் இலக்கண முறையை ஆசிரியர் பயன்படுத்தித் தமிழ்ச் சொற்களை ஐந்து பெயர் விகற்பங்களாகப் பிரித்துக் கொண்டு, அவை ஒவ்வொன்றும் வேற்றுமை ஏற்பது எவ்வாறு என விளக்குகின்றார்.

            தமிழில் வினைச் சொற்களை ஈற்றின் அடிப்படையில் தொகுக்கும் மரபு இல்லை. ஆனால் இலத்தீன் மொழியில் அம்மரபு உண்டு. இலத்தீன் மரபினைப் பயன்படுத்தி ஆசிரியர் தமிழிலும் ஒன்பது வினை விகற்பங்களைத் தொகுக்கின்றார். ஒவ்வொரு விகற்பமும் காலத்திற்கு ஏற்றவாறு ஈறுகளை எவ்வாறு ஏற்கின்றது என்பதை அவர் விளக்குகின்றார். இப்பகுதி நூறு பக்கங்களுக்கு மேற்பட்டதாக அமைகிறது.

பெயர் விகற்பங்கள் (Declensions of Nouns) 
முதலாம் பெயர் விகற்பம்:
            இது ஆண்பால் ஒருமையில் அன் விகுதியும், பன்மையில் அர் விகுதியும் கொண்டது. பெண்பால் ஒருமையில் இ விகுதியையும், பன்மையில் யர், கள் விகுதிகளையும் கொண்டது. (எ.கா. தோட்டியன் - தோட்டியர், தோட்டிச்சி - தோட்டிச்சியர், தோட்டிச்சிகள்).

            இவ்விகற்பம் சாதிப் பெயர்களையும் (பிராமணன் - பிராமணத்தி), பணிப்பெயர்களையும் (கொல்லன் - கொல்லத்தி), பிற பெயர்களையும் (குருடன் - குருடி, மனிதன் - மனிச்சி) அதாவது உயர்திணைப் பெயர்களையே கொண்டது.

            தமிழில் காணும் வேற்றுமை வரிசைகளை ஒதுக்கிவிட்டு ஆசிரியர் இலத்தீன் வரிசையைப் பின்பற்றி முதலாம், ஆறாம், நான்காம், இரண்டாம், எட்டாம் வேறுமைகளை வரிசைப்படுத்துகின்றார். (எ.கா. தோட்டியன், தோட்டியன் உடைய, தோட்டியனுக்கு, தோட்டியனை, தோட்டியா).

            உடைமைப் பொருள் சுட்டுவதற்கு ஒருமையும் பன்மையும் எப்போதுமே 'உடைய' உருபு ஏற்கும் என்கிறார்.

இரண்டாம் பெயர் விகற்பம்:
            இது ஒருமையில் இ, ஐ விகுதிகளையும், பன்மையில் யள், கள் விகுதிகளையும் கொண்டது. (எ.கா. தொப்பி - தொப்பியள், தொப்பிகள், தலை, தலைகள், தலையள்) இது முதல் வகை.

            இரண்டாம் வகை ல், ன், ர் விகுதிகளை ஒருமையிலும், கள் விகுதியைப் பன்மையிலும் கொண்டது. (எ.கா. கால் - கால்கள், பீங்கான் - பீங்கான்கள், ஊர் - ஊர்கள்).  

            இவ்விகற்பம் அஃறிணைப் பெயர்களையே கொண்டதாக அமைந்துள்ளது.

மூன்றாம் பெயர் விகற்பம்:
            அஃறிணைப் பெயர்களைக் கொண்ட இது ஒருமையில் ம் விகுதியையும், பன்மையில் கள் விகுதியையும் கொண்டது. இச்சொற்கள் வேற்றுமை ஏற்கும் போது மகர மெய்க்குப் பதிலாகத் தகர மெய் இடம் பெறும் என எழுதும் ஆசிரியர் அத்துச் சாரியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு. (எ.கா. பண்டம், பண்டமுடைய, பண்டத்துக்கு, பண்டத்தை, பண்டத்திலே, பண்டமே).

நான்காம் பெயர் விகற்பம்:
            பெரும்பாலும் உயர்திணைப் பெயர்களைக் கொண்ட இவ்விகற்பம் ஒருமையில் ஆ விகுதியும், பன்மையில் க்கள் விகுதியும் கொண்டது. (எ.கா. பிதா- பிதாக்கள்).

ஐந்தாம் பெயர் விகற்பம்:
            பெரும்பாலும் அஃறிணைப் பெயர்களைக் கொண்ட இது ஒருமையில் உ விகுதியும், பன்மையில் கள், க்கள் விகுதிகளையும் கொண்டது. இவ்விகற்பத்தில் மூன்று வகை உண்டு (எ.கா. கம்பு - கம்புக்கு, உரு- உருவுக்கு, வீடு - வீட்டுக்கு).

            ஐந்தாம் விகற்பத்தின் மூன்றாம் வகை டு, று என்னும் எழுத்துக்களை ஈற்றில் கொண்டிருப்பதால் ஒருமையில் உருபேற்குமுன் ஒற்று இரட்டித்து வரும் எனக்கூறும் ஆசிரியர், பன்மையில் ஒற்று இரட்டிக்காமல் கள் விகுதியேற்று (கம்புகள் போலவே) உருபேற்கும் என்கிறார் (எ.கா. வீடு - வீட்டுக்கு, சோறு - சோற்றுக்கு, வீடுகள் - வீடுகளுக்கு, சோறுகள் - சோறுகளுக்கு).

            ஒருமையில் ஒற்று இரட்டிக்காமல் செவிக்கு நன்றாக ஒலிக்காது என்பதை அவர் காரணமாகக் குறிக்கின்றார்.

பெயர்ச்சொல் பற்றிய பிற குறிப்புகள்:
            கிளவனார், துப்பாசியார், தம்பிரானார், கிளவியார், பாதிரியார் போன்ற சில உயர்திணைச் சொற்கள் மதிப்புப் பன்மையாக ஆர் விகுதி பெற்று வருவதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

            உயர்திணை, அஃறிணை ஆகிய இலக்கணச் சொற்களை அறியாத ஆசிரியர் பணம், தலை, தொப்பி போன்ற (அஃறிணை) சொற்கள் பன்மையில் கள் விகுதியின்றி ஒருமை வடிவத்தில் (பால்பகா அஃறிணை) வருமென்பதைச்சுட்டுகிறார்.

            இரண்டாம் வேற்றுமைத் தொகை பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (எ.கா. பணம் கொண்டு வா).

            சுத்தம் என்பது போன்ற பண்புப் பெயர் சுத்தமான எனப் பண்பு அடைச் சொல்லாகி (adjective) வன், வள், து விகுதி பெற்றுச் சுத்தமானவன், சுத்தமானவள், சுத்தமானது எனப் பால் விகுதி பெற்று வருவதையும் ஆசிரியர் குறிக்கின்றார். நான், நீ, அவன் போன்ற மூவிடப் பெயர்கள் வேற்றுமை உருபு பெறுதலையும் ஆசிரியர் விளக்குகின்றார்.

வினை விகற்பங்கள்:
            ஐந்து பெயர் விகற்பங்களை விளக்கிய ஆசிரியர் வினை விகற்பங்களை (conjugations) ஒன்பது என வகுக்கின்றார். இதுவும் தமிழுக்குப் புறம்பானது எனினும் இலத்தீன் இலக்கண அடிப்படையில் ஆசிரியர் இவ்வாறு வகுத்துள்ளார்.

            முதல் மூன்று வினை விகற்பங்கள் க்கிறேன் என்னும் ஈற்றினையும், அடுத்த மூன்று விகற்பங்கள் றேன் என்னும் ஈற்றினையும், எஞ்சிய மூன்றும் கிறேன் என்னும் ஈற்றினையும் கொண்டுள்ளதாக ஆசிரியர் விளக்குகின்றார். இவை, தன்மை ஒருமை நிகழ்கால ஈறுகள் என்பது நினைவு கூரத்தக்கன. கிறு, கின்று, ஆநின்று என்பவையே நிகழ்கால இடைநிலைகள் என்னும் இலக்கணத்தை அறிந்துள்ள நமக்கு இது ஒவ்வாததாகத் தோன்றலாம். ஆனால் தமிழ் இலக்கணத்தை அறவே அறியாத ஆசிரியர், தாமாகவே பயின்ற பேச்சுத் தமிழை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய இலக்கணத்தைப் படைக்க எடுத்த முயற்சி இது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

            முதல் வினைவிகற்பம் பெரும்பான்மை இக்கிறேன் என்னும் விகுதியையும், சிறுபான்மை ஐக்கிறேன், உக்கிறேன் என்னும் விகுதிகளையும் கொண்டது. இறந்தகால ஈறு சேன், எதிர்கால ஈறு பேன், செய என்னும் எச்ச வடிவம் (infinitive) க எனவும் அமையும்.

            மூவிடங்களுக்கும் நிகழ்கால வினை கீழ்க்கண்டவாறு அமையும்.
            விச்சுவதிக்கிறேன்  -  விச்சுவதிக்கிறோம்
            விச்சுவதிக்கிறாய்  -  விச்சுவதிக்கிறீர், விச்சுவதிக்கிறீயல்
            விச்சுவதிக்கிறான்  -  விச்சுவதிக்கிறார்
            விச்சுவதிக்கிறாள்  -  விச்சுவதிக்கிறார்கள்

            முதல் விகற்ப நிகழ்காலத்தில் விச்சுவதிக்கிறேனே, விச்சுவதிக்கிறானே போன்ற வடிவங்கள் பற்றியும் ஆசிரியர் கூறுகின்றார். "பகவதியை விச்சுவதிக்கிறானே அவனை இங்கே கூட்டிக் கொண்டு வா"  என அவர் தரும் எடுத்துக்காட்டின் உதவியால், வினையாலணையும் பெயரை இலத்தீன் முறையில் அவர் விளக்க எடுத்துக் கொண்ட முயற்சியே இது என நாம் தெளியலாம்.

            விச்சுவதிக்கிறேனாகில், விச்சுவதிக்கிறானாகில் போன்ற சார்பு நிலை வினை வடிவத்தையும் (conditional verb) ஆசிரியர் விளக்குகிறார்.

            விச்சுவதிக்கிற என்னும் பெயரெச்சத்துடன் வன், வள் ஈறு சேர்ந்தால் விச்சுவதிக்கிறவன், விச்சுவதிக்கிறவள், விச்சுவதிக்கிறது என்னும் வடிவம் (participle) கிடைக்கும் என்பது ஆசிரியரின் கருத்து.

            முதல் விகற்பம் விச்சுவதித்தேன், விச்சுவதிச்சேன் எனச் சேன் ஈறு பெற்று இறந்த காலமாகும் என்பார் ஆசிரியர். விச்சுவதித்தேன், விச்சுவதித்தாய், விச்சுவதித்தீயல், விச்சுவதித்தான், விச்சுவதித்தார்கள் என மூவிட ஒருமை, பன்மை வடிவங்களைத் தொகுக்கின்றார் அவர்.

            விச்சுவதித்தேனே, விச்சுவதித்தேனாகில், விச்சுவதித்தால், விச்சுவதித்தவன், விச்சுவதித்து இருக்கச் சொல, விச்சுவதித்துக் கொண்டு (கொண்டே), விச்சுவதித்ததினாலே, விச்சுவதித்த பொழுது (போது), விச்சுவதித்த நேரம், விச்சுவதித்த உடனே முதலிய பல வகையான இறந்த கால வடிவங்களை ஆசிரியர் குறிக்கின்றார்.

            விச்சுவதிப்பேன், விச்சுவதிப்பாய், விச்சுவதிப்பான், விச்சுவதிப்போம், விச்சுவதிப்பியல், விச்சுவதிப்பார்கள் என எதிர்கால வடிவங்களை எடுத்துரைக்கும் ஆசிரியர் விச்சுவதிப்பானாகில், விச்சுவதிப்பது (தொழிற்பெயர்) போன்ற வடிவங்களையும் பற்றி எழுதுகின்றார்.

            செய்கிறேன் - செய்விக்கிறேன், விழுகிறேன் - விழுவிக்கிறேன் போன்ற தன்வினை, பிறவினை வடிவங்களைப் பற்றியும் ஆசிரியர் கூறுகின்றார்.

            அவ்வாறே விச்சுவதி - விச்சுவதியாதே, விச்சுவதியுங்கோ -  விச்சுவதியாதேயுங்கோ போன்ற ஏவல் வியங்கோள் வடிவங்களையும் பற்றி இந்நூல் சுருங்கக் கூறுகிறது. விச்சுவதியேன் போன்ற எதிர்கால எதிர்மறை வினையையும் ஆசிரியர் குறிக்கின்றார். விச்சுவதியாவிட்டால், விச்சுவதியாமல், விச்சுவதியாதிருக்கில் (லும்), விச்சுவதியாதிருந்தால் (லும்), போன்ற வினை வடிவங்களையும் ஆசிரியர் குறிக்கின்றார். நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், எதிர்கால எதிர் மறை, ஏவல் - வியங்கோள், செய எனும் வினையெச்சம் போன்ற சிலவற்றைப் போர்த்துக்கேய மொழியில் பெயர் குறித்துக் கூறும் ஆசிரியர் ஏனைய வடிவங்களைப் பெயரின்றியே குறிக்கின்றார்.

            வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினை வடிவம் தமிழில் செய என்னும் எச்ச வடிவாக அமையும். இதை ஐரோப்பிய மொழிகளில் Infinitive என அழைப்பர். இவ்வடிவம் பற்றியும் ஆசிரியர் எழுதுகின்றார்.

            இரண்டாம் வினைவிகற்பம் அக்கிறேன் (நிகழ்காலம்), அந்தேன் (இறந்தகாலம்), அப்பேன் (எதிர்காலம்) என்னும் ஈறுகளைக் கொண்டு முடிகிறது. பிளக்கிறேன், பிளந்தேன், பிளப்பேன், பிளக்கிறவாகு, பிளக்கிறாப்போலே, பிளக்கிறது, பிளக்கிறபொழுது (போது), பிளந்தானாகில், பிளந்தானில்லையாகில், பிளந்தது கொண்டு, பிளந்தவுடனே, பிளந்ததினாலே, பிளப்பிக்கிறேன், பிள, பிளவுங்கோ , பிளவேன் எனப் பல வினை வடிவங்களை ஆசிரியர் விளக்குகின்றார்.

            மூன்றாம் வினை விகற்பம் ட்கிறேன், ர்க்கிறேன், ற்கிறேன் (நிகழ்காலம்), ட்டேன், ற்றேன், ன்றேன் (இறந்தகாலம்), பேன் (எதிர்காலம்) என்னும் ஈறுகளைக் கொண்டு முடிகிறது. கேட்கிறேன், விற்கிறேன், நிற்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் சுட்டுகிறார்.

            நான்காம் வினைவிகற்பம் றேன், னேன், வேன் என்னும் (எ.கா. போறேன், போனேன், போவேன்) ஈறுகளை உடையது. எண்ணிறேன், எறிறேன், அறிறேன், களத்திறேன், பாடிறேன், உதவிறேன், நீக்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் தருகிறார்.

            பருமாறுகிறேன், மன்றாடுகிறேன் போன்ற சில வினைச் சொற்கள் கிறேன் என்னும் ஈற்றைக் கொண்டிருக்கும். இவை பருமாறினேன், மன்றாடினேன் என இறந்தகால வடிவமும், பருமாறுவேன், மன்றாடுவேன் என எதிர்கால வடிவமும் ஏற்கும்.

            ஐந்தாம் வினைவிகற்பம் ளிறேன், உறேன் என்னும் இருவகை ஈறுகளைக் கொண்டது. 

            முதல்வகை கொள்ளிறேன் (கொள்கிறேன்) போன்ற சொற்களைக் கொண்டது. இது இறந்த காலத்தில் கொண்டேன் எனவும், எதிர் காலத்தில் கொள்ளுவேன் எனவும் வடிவம் பெறும். ஆனால் சொல்லிறேன் (சொல்கிறேன்) போன்ற சொற்கள் சொன்னேன், சொல்லுவேன் என வடிவம் பெறும்.

            இரண்டாம் வகை புதுறேன் (புகுகிறேன்) போன்ற சொற்களைக் கொண்டது. இது இறந்த காலத்தில் பூந்தேன் எனவும், எதிர்காலத்தில் புதுவேன் எனவும் வடிவம் கொள்ளும் என்பர் ஆசிரியர். தாரேன் (தருகிறேன்), வாறேன் (வருகிறேன்) போன்ற வினைகளையும் ஆசிரியர் இவ்விகற்பத்தில் அடக்குகின்றார்.

            ஆறாம் விகற்பன் ய்றேன், ய்தேன், உவேன் என்னும் ஈறுகளைக் கொண்டது. (எ.கா. எய்றேன், எய்தேன், எய்யுவேன்).

            ஏழாம் வினைவிகற்பம் டுகிறேன், டுறேன் என்னும் நிகழ்கால ஈறுகளையும், ட்டேன் என்னும் இறந்தகால ஈற்றையும், டுவேன் என்னும் எதிர்கால ஈற்றையும் கொண்டது. இடுகிறேன், போடுகிறேன் போன்ற சொற்கள் இட்டேன், போட்டேன் (இறந்த காலம்), இடுவேன், போடுவேன் (எதிர்காலம்) என மாறிவரும்.

            எட்டாம் வினைவிகற்பம் உகிறேன், உதேன், உவேன் என்னும் கால ஈறுகளைக் கொண்டது (எ.கா. அழுகிறேன், அழுதேன், அழுவேன்).

            ஒன்பதாம் வினைவிகற்பம் ன்கிறேன், ன்றேன் (அல்லது ண்டேன்) ன்பேன் என்னும் ஈறுகளை உடையது. உண்கிறேன், தின்கிறேன், என்கிறேன், களவாங்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் தருகின்றார்.

            செயப்பாட்டுவினை எனத் தலைப்பிட்டு எழுதத் தொடங்கும் ஆசிரியர் செயப்பாட்டு வினை என முறையாக அழைக்கப்படத்தக்க வினை இம்மொழியில் இல்லை என எழுதிவிட்டு, ஆயினும் சில வினை விகற்பங்களில் ஏறக்குறைய செயப்பாட்டுப் பொருள் தரும் வினைகளைக் காணலாம் என்று தொடர்கிறார்.

            ஆனால் செயப்பாட்டு வினை வடிவம் என ஆசிரியர் தருவது ஒன்றன்பால் வினையாக இருப்பதைக் காணலாம் (எ.கா. சட்டி உடைஞ்சிது, சட்டி உடைஞ்சி போச்சு, கதவு அடைச்சு கிடந்தது, சிலவிலியுது, மரம் பிளந்தது, நெல்லு விற்கிறது).

            வாக்கிய அமைப்புப் பற்றி நூலின் இறுதிப் பகுதியில் ஆசிரியர் எழுதுகின்றார். வாக்கியத்தின் தொடக்கத்தில் எழுவாயும், இறுதியில் வினைச் சொல்லும் அமையும். வாக்கியத்தின் இடையில் நான்காம் வேற்றுமை முதலிலும் இரண்டாம் வேற்றுமை அதன் பின்னரும் வரும் (எ.கா. நீ சொவானிக்கு நாலு பணம் கொடு).

            வினையெச்சம் வினைமுற்றுக்கு முன்னர் வரும் (எ.கா. நான் புன்னைக்காயலுக்கு சல்திக்கு போக இருக்கிறேன்).

            பண்பு அடைச்சொல் பெயருக்கு முன் வரும் (எ.கா. நீ எனக்கு நல்ல பொத்தகம் தா).

            எதிர்மறை உருபு வினைச்சொல்லை அடுத்து வரும் (எ.கா. நான் கோயிலுக்குப் போனேன் இல்லை).

ஆய்வுக் குறிப்புகள்
            பேச்சுத் தமிழைக் கற்ற ஆசிரியர் தாம் கேட்டவாறே தமிழ்ச் சொற்களை எழுதக் காண்கிறோம் (எ.கா. வாறேன், தாறேன், வரச்சொல்ல, போடுறேன், திரிய்றேன், படியுங்கோ , படிச்ச, விச்சுவதிக்கிறீயல்).

            எனினும் அவர் திருத்தமான தமிழை அறிந்தவர் என்பதையும் காண்கிறோம். விளக்கவும் செய்தேன், விச்சுவதிக்கிறேனாகில், பாடுகிறேன், படியேன், பெற்றேன், கொண்டேன் போன்ற திருத்தமான சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது.

            நூலாசிரியர் தமிழை முறையாகப் படித்ததாகத் தெரியவில்லையெனினும் அவர் உயிர், மெய் எழுத்து வரிசையைச் சரியான முறையில் எழுதியிருப்பதைக் கண்டு நாம் வியக்கிறோம். ல, ள, ழ, ர, ற போன்ற எழுத்துக்களிடையே உள்ள ஒலி வேற்றுமையையும் அவர் அறிந்திருந்தார்.

            காலம் காட்டும் இடைநிலை பற்றி அவர் அறிந்திருக்கவே இல்லை. ஆகவேதான் வினையீறுகளைக் கொண்டு அவர் வினைச் சொற்களைப் பிரிக்கின்றார்.

            விச்சுவதிக்காவிட்டால், வந்தான் இல்லை, விச்சுவதிக்க இல்லை போன்ற எதிர்மறை வினை வடிவங்களை நூலாசிரியர் கூறினாலும், துணை வினையாக அன்றி வினைச் சொல்லின் அகத்தே அமைந்து எதிர்மறைப் பொருள்தரும் அறியேன், படியேன், விச்சுவதியேன் போன்ற எதிர்கால எதிர்மறை வினையினை ஆசிரியர் சிறப்பாக எடுத்தோதுகின்றார்.  Non என்னும் தனிச்சொல் எதிர்மறைப் பொருளைத்தரும் இலத்தீன் வழக்காற்றினின்று வேறுபட்ட தமிழ் எதிர்மறை ஆசிரியரின் கவனத்திற்கு உரியதாயிற்று என நாம் உணரலாம்.

            இலத்தீன் மொழியைப் போலவே தமிழிலும் மூன்று காலங்கள் இருந்தாலும், இம்மூன்று காலங்களோடு தொடர்புடைய பிறவினை வடிவங்களையும் தொகுத்துக் காட்ட ஆசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சி வியப்புக்குரியது. ஏறக்குறைய 97 வினை வடிவங்களை அவர் தொகுத்துள்ளார். விச்சுவதிக்கிறேன், விச்சுவதிக்கிறேனாகில், விச்சுவதிக்கிற, விச்சுவதிக்கிறவாகு, விச்சுவதிக்கிறாப் போலே, விச்சுவதிக்கிறவன், விச்சுவதித்து இருக்கச் சொலே, விச்சுவதித்தாலும், விச்சுவதித்துக் கொண்டு, விச்சுவதித்த உடனே, விச்சுவதித்ததனாலே, விச்சுவதித்த நேரம், விச்சுவதித்ததுக்கு, விச்சுவதிப்பயே, விச்சுவதிப்பாயாம், விச்சுவதிப்பது, விச்சுவதி, விச்சுவதியேன், விச்சுவதியாதே, விச்சுவதியாமல், விச்சுவதிக்க, விச்சுவதியாத, விச்சுவதிக்காவிட்டால், விச்சுவதிக்கலாம், விச்சுவதிக்காம்காட்டி, விச்சுவதிக்கா முன்னே, விச்சுவதிக்கில் போன்ற வினை வடிவங்களை ஏதோ ஒரு வகையில் மூன்று காலங்களுக்குள்ளோ, செய என்னும் வாய்பாட்டு வினையுள்ளோ, எச்ச வினையுள்ளோ அடக்கிவிட அவர் பெரிதும் முயன்றுள்ளார்.




Bibliography:
Vermeer, Hans J., 1982. The first European Tamil Grammar, A Critical edition by --, English version by Angelika Morath, Julius Groos Verlag, Heidelberg.

Hein, Jeanne (†) and V. S. Rajam, 2013. The Earliest Missionary Grammar of Tamil. Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History and Analysis. Harvard Oriental Series (v. 76), Harvard University Press, Cambridge, Massachusetts and London, England.




தொடர்பு:  
அருள் முனைவர் அமுதன் அடிகள் (amudhantls1943@gmail.com)








Tuesday, October 22, 2019

இலங்கை மலையக ஊவா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் - அரசாணை

இலங்கை மலையக ஊவா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் - அரசாணை


            இலங்கை மலையகத்தில் உள்ள மாநிலங்களில் ஊவா மாகாணமும் ஒன்று. இம்மாநிலத்தில் 167 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள 140 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள் சிங்களத்திலேயே அமைந்துள்ளன. மீதமுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் அப்பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை இங்கே சிங்களப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள், இசுலாமியப் பள்ளிகள் என்ற மூன்று வகை பள்ளிக்கூடங்கள் உள்ளன.

            இன்னிலையில், இம்மாநில கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வந்தார்; தமிழ் மொழியினை அசலான வகையில் நிலைநிறுத்துவதற்கான பணிகளையும் தொடங்கியிருந்தார். இக்கட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆவணப்படுத்துதல் தொடர்பான பணிகளை அங்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் முக்கியமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டிருந்த சிங்களப்பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்பதும் ஒன்று. இந்த கருப்பொருள் உடனடியாக ஊவா மாநில சட்டமன்றத்தில் வழங்கப்பட்டு விவாதப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஊவா மாநிலத்தின் அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் கம்பன், வள்ளுவன், செம்மொழி, மலைமகள், பெரியார், இளங்கோ, மாணிக்கவாசகர், திருக்குமரன், கலைமகள் என புதிய பெயர்களைப் பெறுகின்றன.

            இந்த அரசாணை இதுகாறும் சிங்கள மொழிப் பெயர்களாக இருந்த 140 தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் அமைவதை சட்டப்படி நிறுவும் அரசாணையாகும் மேலும் இம்மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத சில தமிழ்ப்பள்ளிகளும் இந்த அரசாணையின் படி அங்கீகாரம் பெறுகின்றன.








            இலங்கைக்கான 1964 சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளும் வித்தியாலயா என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்தச் சமஸ்கிருத சொல் சிங்களச் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. மேலும் பள்ளிகளின் பெயர்களும் சிங்களம் மற்றும் எஸ்டேட்களின் பெயரைச் சார்ந்து ஆங்கிலத்திலும் அமைந்துள்ளதைக் கல்வி அமைச்சு அங்கீகரித்திருக்கின்றது. இந்த அடிப்படையில் ஊவா மாகாண தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள் தமிழில் தான் அமைய வேண்டும் என்ற கருத்தில் இவற்றைத் தமிழ்ப்படுத்திக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இம்மாநில கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் முன்னெடுத்த செயல்பாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனைகளும் இணைந்தது. 

            தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கிய 60 பெயர்கள் கொண்ட பெயர் பட்டியலையும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த பெயர் பட்டியலையும் இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்களிடம் வழங்கி அவர்கள் விரும்பும் தமிழ்ப்பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கினார். அது மட்டுமன்றி தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்திருந்த பெயர்களையும் அவர்களின் தேர்வுக்கு அனுமதித்தார். இதன் அடிப்படையில் 140 தமிழ்ப்பள்ளிகள் இன்று தமிழ்ப்பெயர்களுக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதிது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு என்பதில் ஐயமில்லை.

            இலங்கை சட்டப்படி School என்பது வித்யாலயா என்று வழங்கப்படுகின்றது. இதனைத் தமிழ்ப்படுத்தி பள்ளிக்கூடம், பாடசாலை, கல்விக்கூடம் ஆகிய மூன்று பெயர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பரிந்துரைத்தது. இதில் பள்ளிக்கூடம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் மத ரீதியான சொல் என்றதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு பாடசாலை என்ற பெயர் ஏற்கப்பட்டது. ஆயினும் இப்பெயர் இலங்கை கல்விச்சட்டத்தின் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தற்கால கல்விச்சட்டத்தின் அடிப்படையில் வித்தியாலயம் என்றே அழைக்கப்படும். எனினும் எதிர்காலத்தில், வெகு விரையில் சட்டத் திருத்தத்திற்கான முயற்சிகள் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

            இன்று வழங்கப்பட்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கான பெயர் பட்டியலில் சமஸ்கிருதச் சொற்களும் இடம்பெறுகின்றன. பொதுவாகவே இலங்கை மலையகத் தமிழர்களின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் மணிப்பிரவாள நடையில் அதிகமான சமஸ்கிருத சொற்கள் கலந்திருக்கின்றன. அது மட்டுமன்றி அச்சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்றே இலங்கை மலையகத் தமிழ் மக்கள் பெருவாரியாகக் கருதுகின்றனர். ஆக, பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் சமஸ்கிருத பெயர்களும் இடம்பெற்று இருப்பதைக் காண முடிகின்றது. இதனைச் சீர்செய்வது பற்றி இப்போது கலந்துரையாடத் தொடங்கியிருக்கின்றோம். இதுபடிப்படியாக அடுத்த கட்ட மேம்பாட்டுப் பணியாக முன்னெடுக்கப்பட்டு தூய தமிழ்ப் பெயர்கள் அமையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

            கடந்த ஏறக்குறைய 50 ஆண்டுக் காலத்தில் இலங்கையில் நடந்த போர் மற்றும் மலையக மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலான வாழ்வியல் நிலைப்பாடுகளில் அவர்கள் பெருவாரியாகத் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழகம் போலச் செயல்படக்கூடிய சாத்தியங்கள் நிகழவில்லை. தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கமும், திராவிட இயக்கங்களும், ஏனைய தூய தமிழ் செயல்பாட்டு அமைப்புக்களும் முன்னெடுத்த மணிப்பிரவாள நடை மாற்றம் மற்றும் தூய தமிழ் பயன்பாடு இலங்கையைப் பொறுத்தவரை நிகழாத நிலையில், இனிமேல் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாம் காண முடிகின்றது. போருக்குப் பிந்தைய மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்தத் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சி, தூய தமிழ் நடை பயன்பாடு போன்றவையும் அமைச்சர் செந்தில் தொண்டமான் போன்றோரால் முன்னெடுக்கப்படும் என்பது அவர்களது செயல்பாடுகளிலிருந்து காணக்கூடியதாக இருக்கின்றமை நம்பிக்கையளிக்கின்றது.

            இலங்கையைப் பொறுத்த அளவில் அதிலும் மலையகப் பகுதியில் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டதாரி பொறியாளர்களும் வழக்குரைஞர்களும், மருத்துவர்களும் ஏனைய திறன் படைத்தோரும் உருவாகும் காலம் இது. அங்கு மிகப் பெரிய அளவில் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகத் துரிதப்படுத்தப்பட்டுள்ள சூழ் நிலையில் இந்த தமிழ்ப்பெயர்கள் சூட்டல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வானது இலங்கை தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணியில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரிய முயற்சியை உலகத் தமிழர்கள் வரவேற்று வாழ்த்துவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு








Monday, October 21, 2019

மருத்துவம் சொல்லும் கல்வெட்டு

 ——    துரை.சுந்தரம்                                                     


            தொல்லியல் ஆர்வலரும் பள்ளி ஆசிரியருமான கிருஷ்ணகுமார், கோவை-சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள சரவணம்பட்டியில் ஒரு சிறிய கல்வெட்டு இருப்பதாகவும், எழுத்துகள் அண்மைக்காலத்தனவாக இருப்பதாகவும் அங்கு சென்று அதைப்படித்துத் தருமாறும் கேட்டிருந்தார். எனவே,  20.09.2014 அன்று காலை அங்கு சென்றிருந்தேன். ஊருக்குள் செல்லும் ஒரு சிறிய சாலையில்  மளிகைக்கடை ஒன்றின் முன்புறம் அக்கல் நிறுத்தப்பட்டிருந்தது. சாலையை விட்டுத்தள்ளியிருந்த மண் பகுதியில் பதிக்கப்பட்டிருந்தாலும் கல்லைச் சுற்றி ’சிமெண்ட்’ கொண்டு பூசப்பட்டிருந்தது. கல்லின் மேற்புறம் பூமாலை சாத்தப்பட்டிருந்தது. கல்லின் அடியில் ஓரிரு அகல் விளக்குகள் காணப்பட்டன. 

            மேற்புறம் அகன்றும் கீழ்ப்புறம் குறுகியும் காணப்பட்ட அக்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்ட பரப்பு நன்கு மட்டப்படுத்தப்படாமல் சற்றே குழியும் மேடுமாக இருந்ததாலும், எழுத்துகள் தெளிவான வடிவத்தில் வெட்டப்படாததாலும் முதல் பார்வையில் படிக்க இயலவில்லை. எனவே, கல்லைத் தண்ணீர் விட்டு  நன்கு கழுவித் தூய்மையாக்கி சுண்ணப்பொடி பூசிக் காயவைத்தபின் பார்க்கையில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன.

            கல்லில் ஐந்து வரிகளில் எழுத்துகள் இருந்தன. உச்சியில் இரு எழுத்துகளின் வடிவம் இருப்பினும் இனம் காண இயலவில்லை. ஐந்து வரிகள் முடிந்த நிலையில் ஆறாவது வரியில் ‘ம்’  என்னும் ஒற்றை எழுத்து இருந்தது. முதல் இரு வரிகள் படிக்க இயன்றது. அடுத்த இருவரிகள் படிக்க இயலவில்லை. ஐந்தாவது வரி மற்றும் இறுதியில் உள்ள ஒற்றை எழுத்தும் சேர்ந்து படிக்கமுடிந்தது. கல்வெட்டுப்பாடம் வருமாறு:



            அப்பகுதியில் சந்தித்த, அகவையில் மூத்த ஒரு சிலரிடம் இக்கல் பற்றிக்கேட்கையில் சுவையான ஒரு செய்தியைச் சொன்னார்கள். முன்பு இங்கு வாழ்ந்திருந்த வேளாளர் வகுப்பைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், இப்பகுதி மக்களின் சிறு சிறு உடல் நலக்குறைகள் நீங்க மருந்து கொடுத்தும், உடல் நலத்தில் சுணக்கம் அடைந்த  குழந்தைகளுக்கு ஓதியும் ( கொங்குப்பகுதியின் நாட்டார் வழக்கில் இதை ”மந்திரித்தல்” என்பார்கள்) மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிகிறோம். அவர், இந்தக் கல்லை நட்டுவைத்தார் என்று கூறுகிறார்கள். கால்வலி போன்ற கால் தொடர்பான துன்பங்கள் நீங்க கல்லில் ஏதோ ஒரு ஆற்றலை ஏற்றி நட்டுவைத்தார் என்றும் அவ்வாறே  இந்தக்கல்லின் மீது காலை வைத்துச் சிறிது நேரம் மனத்தில் அமைதி காத்தால் துன்பம் நீங்கும் என்னும் நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் செய்து வந்துள்ளனர் என்றும் சொன்னார்கள். பலரும் இச்செவிவழிச் செய்தியைச் சொன்னமை கல்வெட்டில் காணப்படும் சொற்றொடரோடு பொருந்திவருவதைக் காண்கிறோம். கால் கொண்டு கல்லை மிதித்தலைக் கல்வெட்டு “கால்லுதைத்து”  என்றும், நோய்த்துன்பம் அகலும் என்பதைக் கல்வெட்டு  ”நீங்கும்” என்றும் குறிப்பிடுகிறது.

            இவ்விடத்தில், ”விவேக சிந்தாமணி” என்னும் தமிழ் நூலில் காணப்படும் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. புலவர் ஒருவருக்குக் காலில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது. ஆனால், அதை மிகைப்படுத்தி ஊர் மருத்துவரிடம் சென்று பாம்புக்கடிக்கு மருத்துவம் நாடி வந்ததைப்போலத் தன் புலமையை நுழைத்து, முள் தைத்ததைப் பாடல்வழியே அவர் புலப்படுத்தினார்.

அப்பாடல் வருமாறு:
            முக்காலைக் கையில் எடுத்து
            மூவிரண்டுக்கு ஏகையிலே
            அக்காலை ஐந்துதலை நாகம்
            ஆழ்ந்து கடித்தது காண்.

மருத்துவரும் மதிநுட்பம் நிறைந்தவர். புலவரின் பாணியிலேயே அவரும் ஒரு புதிர்ப்பாடல் வழியே முள் தைத்தமைக்கு மருத்துவம் சொன்னார். மருத்துவரின் மருந்து பின் வரும் பாடலில் காண்க.

            பத்துரதன் புத்திரனின் 
            மித்திரனின் சத்துருவின் 
            பத்தினியின் கால் வாங்கித் தேய்.

            முள் தைத்ததைப் புலவர் சொன்ன பாங்கை நோக்குக. முக்கால் என்பது மூன்றாவது காலான தடி அல்லது கோல். மூவிரண்டு என்பது ஆறு. ஐந்துதலை நாகம் என்பது ஐந்து பிரிவாகப் பிரிந்த தோற்றத்தில் அமைந்துள்ள நெருஞ்சி முள். கோலை ஊன்றியவாறு ஆற்றுக்குப் போகும் வழியில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது என்பது செய்தி.

            இப்போது மருத்துவரின் மருத்துவம் என்ன என்று பாருங்கள். பத்துரதன் என்பவன் பத்து ரதங்களையுடைய தசரதன். அவனுடைய புத்திரன்(மகன்) இராமன். இராமனின் மித்திரன்(நண்பன்) சுக்கிரீவன். சுக்கிரீவனின் சத்துரு(பகைவன்) வாலி. வாலியின் பத்தினி(மனைவி) தாரை என்பாள். ”தாரை” என்பதில் காலை எடுத்துவிட்டால் ”தரை” என்றாகிறது. எனவே, முள் தைத்த காலைத் தரையில் தேய்க்க முள் அகன்றுவிடும் என்பது இதன் பொருள். என்னே புலமை தரும் இன்பம்!





நன்றி : ”விவேக சிந்தாமணி”  நூலில் வரும் பாடல் குறிப்பைத் தந்து  உதவியவர் திரு. வெ.சின்னராசு, கருவம்பாளையம், திருப்பூர்.


தொடர்பு: 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.







அந்தி

—  ருத்ரா இ.பரமசிவன்



அந்திச்சிவப்பை
இதழ் பிரித்துக் காட்டுகிறாள்
வானத்து மங்கை.
புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌
காமத்துப்பாலின்
முத்தம் சொட்டுகிறது.
வருடி வருடிச்செல்லும்
கடிகார முட்களிலும்
ரோஜாவின் லாவா.
உயிர்த்துளிகளில்
ஒரு விளிம்பின் ஓவியம்
மயிர் சிலிர்த்த தூரிகையால்
இன்னும் இன்னும் 
உயிர் அமுதம் ஊட்டுகிறது.
ஒரு வடிகட்டின மடையன்
இதற்கு 
பேனாவையும் பேப்பரையும் கொண்டு
சமாதி கட்டுகிறான்




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




திருக்குறளின் முன்னோடி நூல் எது?

 ——  திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
            உலகப் பொதுமறை என்று பல சமயத்தாராலும் புகழப்பெற்று பரந்த இவ்வுலகெங்கும் வாழ்கின்ற தமிழர்க்கெல்லாம் பெருமை தேடித் தந்திருப்பது திருக்குறள் ஆகும். இரண்டே இரண்டு வரிகளில் அருமையான கருத்துக்களைப் பொதித்து வைத்திருக்கும் பெரும் புதையல் திருக்குறள் என்றால் மிகையில்லை.

            திருக்குறள் தோன்றிய காலத்திற்கு முற்பட்டு எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் நான்கு அடிகள் முதல் வெவ்வேறு எண்ணிக்கையிலான அடிகள் வரையிலும் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருவள்ளுவருக்கு மட்டும் இரண்டே இரண்டு அடிகளில் கருத்தைச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உண்டானது? சங்க இலக்கியத்தின் எந்த நூலின் தாக்கத்தினால் இப்படி ஒரு கருத்து அவருக்குள் முகிழ்த்திருக்கக் கூடும்? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இக் கட்டுரை ஆகும்.

புறநானூறும் திருக்குறளும்:
            ஆராய்ந்து பார்த்ததில், சங்க இலக்கியத்தின் புறத்திணை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களே திருவள்ளுவருக்கு ஒரு பெரும் உந்துதலாய் விளங்கி இருந்துள்ளது என்று உறுதியானது.

            புறநானூற்றுப் பாடல்களில் வரும் போர் முறைகள், வீரர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வள்ளுவரும் படைமாட்சி, படைச்செருக்கு போன்ற அதிகாரங்களில் எடுத்தாள்வதைப் பார்க்கலாம்.

            அதுமட்டுமின்றி, புறநானூற்றுப் பாடல்களில் வரும் கருத்துக்களை எடுத்தாளும்போது, சில  பாடல்களின் ஈற்றிலிருந்த இரண்டு அடிகள் வள்ளுவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். அந்த இரண்டு அடிகளில் புலவர்கள் கூறியிருந்த கருத்துக்கள் பொதுவுடைமை சார்ந்தவையாய் மக்களுக்கு அறிவூட்டுவதாய் இருப்பதை அறிந்தார். அதுமட்டுமின்றி, அந்த இரண்டு அடிகளிலிருந்த சொற்களை ஏழு சீர்களாய்ப் பிரிக்க முடிவதையும் கண்டறிந்தார். இவற்றின் அடிப்படையில், இரண்டு அடிகளில் ஏழு சீர்களை அமைத்துப் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கூற விரும்பினார். அப்படி அவர் முனைந்து இயற்றியதே இன்று நாம் அனைவரும் கொண்டாடும் திருக்குறள் ஆகும்.

புறக்குறள்:
            புறநானூற்றுப் பாடல்களில் குறள் வடிவத்தில் காணப்படுவதால் இந்தப் பாடல்களைப் புறக்குறள் என்று அழைக்கலாம். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றுவதற்குப் புறநானூற்றின் சில பாடல்களில் கடைசி இரண்டு அடிகளிலிருந்த இந்த புறக்குறள்களே உந்துதலாய் இருந்தது என்று மேலே கண்டோம். பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்ட அந்த புறக்குறள்கள் பெரும்பாலும் பாடலின் கடைசியிலிருந்தாலும் சில பாடல்களில் மட்டும் பாடலின் இடையிலும் இருக்கின்றன. புறநானூற்றிலிருந்து இதுவரை அறியப்பட்ட புறக்குறள்களும் அவற்றின் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

            நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
            அல்லது செய்தலோம் புமின் - புறம். 195
பொருள்: பிறருக்கு ஒருபோதும் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்வதை எப்போதும் தவிர்த்து விடுங்கள்.

            இன்னா தம்மவிவ் வுலகம் இனிய
            காண்கவிதன் இயல்புணர்ந் தோரே - புறம். 194
பொருள்: இந்த உலகம் துன்பங்களால் நிறைந்தது தான்; இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே இதில் இன்பங்களையும் காண்கிறார்கள்.

            பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்
            ஆருயிர் முறைவழிப் படூஉம் - புறம். 192
பொருள்: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் போக்கில் செல்லும் படகினைப் போல உயிர்கள் விதி வசப்பட்டு அதன் வழிதான் செல்லும்.

            செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம்
            எனினே தப்புந பலவே - புறம். 189
பொருள்: பிறர்க்குக் கொடுத்து உதவுவதே செல்வத்தால் விளையும் உண்மையான பயனாகும். முழுவதையும் தாமே அனுபவிப்போம் என்று முயன்றால் பலவற்றை இழக்க நேரிடும்.

            எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
            நல்லை வாழிய நிலனே - புறம். 187
பொருள்: ஒரு நாட்டின் அரசன் நல்ல வழியைப் பின்பற்றினால் அந்த நாட்டு மக்களும் நல்லவர்களாய் வாழ்வார்கள். (ஆடு = வெற்றி. ஆடவர் = வெற்றியாளர் = அரசர்.)

            யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு
            தானை வேந்தற்கு கடனே - புறம். 186
பொருள்: குடிமக்களுக்குத் தானே உயிர் என்று அறிந்து அதன்படி ஒழுக வேண்டியது வெற்றியைத் தரும் படையினைக் கொண்ட அரசனது கடமையாகும். (வேல் = வெற்றி)

            கீழ்ப்பால் ஒருவன்  கற்பின் மேல்பால்
            ஒருவனும் அவன்கண் படுமே - புறம். 183
பொருள்: கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்கும் போது மேல்நிலையில் உள்ள ஒருவனும் அவனிடம் நட்பு கொள்வான். (கல்வி கற்பிக்கும் இடங்களில் கீழ் மேல் என்ற பாகுபாடு இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பதை இது விளக்குகிறது.)

            தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென
            முயலுநர் உண்மை யானே - புறம். 182
பொருள்: தன்னலத்திற்காக இன்றிப் பிறர்நலத்திற்காக உழைப்பவர்கள் இவ் உலகில் இன்னும் இருப்பது உண்மைதான். (அதனால்தான் இவ் உலகமே நிலைபெற்று உள்ளது.)

            தம்இசை நட்டு தீதுஇல் யாக்கை
            யொடுமாய் தல்தவத் தலையே - புறம். 214
பொருள்: வாழும்போதே தம் புகழை நிறுவிப் பிறர்க்குத் தீங்கு செய்யாத யாக்கையராய் வாழ்ந்து மடிதலே தலைசிறந்த தவமாகும்.

            ஈயெனவிரத் தலிழிந்தன் றதனெதிர் ஈயேன்
            என்றலதனி னுமிழிந் தன்று - புறம். 204
பொருள்: தா என்று ஒருவரிடம் பிச்சை கேட்பது இழிவான செயலாகும். மாறாக, தரமாட்டேன் என்று சொல்வது அதைவிட இழிவான செயலாகும்.

            கொள்ளெனக் கொடுத்தலுயர்ந் தன்றதனெதிர் கொள்ளேன்
            என்றலதனி னுமுயர்ந் தன்று  - புறம். 204
பொருள்: வாங்கிக்கொள் என்று கூறி ஒருவருக்குக் கொடுப்பது உயர்வான செயலாகும். மாறாக, வாங்கமாட்டேன் என்று கூறி மறுப்பது அதைவிட உயர்வான செயலாகும்.

            சான்றோர் சான்றோர் பாலராப சாலார்
            சாலார் பாலரா குபவே - புறம். 218
பொருள்: நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களுடன் மட்டுமே பழகுவர். அதைப்போல, கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களுடன் தான் சேர்வர்.

            வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்
            காலைப் புணைபிறி தில்லை - புறம். 367
பொருள்: பிறர்க்கு நன்மை செய்து அவர்களை வாழச்செய்த புண்ணியமே துன்பக் கடலில் மூழ்கும் ஒருவருக்குக் கரையேற உதவும் தெப்பம் ஆகும். 
முடிவுரை:
            மேற்கண்ட புறக்குறள்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட திருவள்ளுவரும் அப்படியே தனது திருக்குறள்களில் வேறு சொற்களால் எடுத்தாண்டிருப்பதை அறியலாம். பொதுவாக, முன்னோர்கள் இயற்றிய பாடல்களைக் கூர்ந்து ஆராய்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டே பின்வருவோர் பாடல்கள் இயற்றுவர். இதற்கொரு சான்றாகத் திருக்குறள் விளங்கும் நிலையில், அந்தாதித் தொடையையும் ஒன்பதாம் தொடையினையும் கூட சான்றுகளாகக் கூறலாம். 

            ஐங்குறுநூற்றின் சில பாடல்களிலிருந்த அந்தாதி அமைப்பே பின்னாளில் தனியாக அந்தாதித் தொடையாக உருவெடுத்தது. அதைப்போல, பல சங்க இலக்கியப் பாடல்களில் எண் பெயர்களைக் கொண்டு பயின்றுவந்த தொடை அமைப்பே சரவெண் தொடை என்னும் ஒன்பதாம் தொடையாக உருவெடுத்தது. 






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் ( vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/