Showing posts with label திருத்தம் பொன்.சரவணன். Show all posts
Showing posts with label திருத்தம் பொன்.சரவணன். Show all posts

Sunday, February 14, 2021

அசுணம் /அசுணமா என்றால் என்ன?


-- திருத்தம் பொன்.சரவணன்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில்  நாய், கழுதை, பூனை, கரடி, மான், குரங்கு, யானை, புலி, குதிரை, எருமை, பன்றி ஆகிய பதினொரு விலங்குகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விரிவான செய்திகள் படங்களுடன் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற நூலாக 2018 ஆம் ஆண்டில் அச்சில் வெளிவந்தது. அதனை அடுத்து, ஆடு மற்றும் கழுது என்ற விலங்குகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில், அசுணம் அல்லது அசுணமா என்று அழைக்கப்படுவதான விலங்கினைப் பற்றிய விரிவான ஆய்வினை இக் கட்டுரையில் காணலாம்.

அசுணம் பற்றி நிலவும் கருத்துக்கள்:
அசுணம் / அசுணமா பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லும்முன் அதைப்பற்றித் தற்போது நிலவிவருகின்ற கருத்துக்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1.   அசுணம் - ஒரு கற்பனை விலங்கு:
அசுணம் என்பது இசையை அறியக்கூடிய ஒரு விலங்கு என்றும் அப்படி ஒரு விலங்கு இவ் உலகில் வாழவே இல்லை என்றும் அது புலவர்களால் கற்பனையாகப் படைக்கப்பட்ட ஒரு விலங்கு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

2.   அசுணம் - ஒருவகைப் பறவை:
அசுணம் என்பது இசையை அறியக் கூடிய ஓர் உயிரி தான் என்றும் ஆனால் அது ஒரு விலங்கு அல்ல என்றும் அது ஒருவகைப் பறவை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

3.   அசுணம் - ஒருவகைப் பாம்பு:
அசுணம் என்பது இசையை அறியக் கூடிய விலங்கு தான் என்றும் அது ஒருவகையான பாம்பினையே குறிக்கும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

தற்போதைய கருத்துக்கள் சரியா?
ஆராய்ந்து பார்த்ததில், மேலே கண்ட மூன்று கருத்துக்களிலும் தவறு இருப்பதாகவே பட்டது. எனவே முதலில் இக் கருத்துக்கள் சரியா தவறா என்று கீழே காணலாம்.

அசுணம் என்பது ஒரு கற்பனை விலங்கு என்னும் கருத்திற்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப் படவில்லை. “ இன்று உயிருடன் இல்லை “ என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த உயிரினம் பூமியில் வாழவே இல்லை என்று முடிவுசெய்வது அறிவியல் முறைப்படி தவறானது ஆகும். ஏனென்றால், எத்தனையோ வகையான உயிரினங்கள் காலந்தோறும் மண்ணில் வாழ்ந்து மடிந்து இருந்த தடம் தெரியாமல் போய் இருக்கின்றன. மேலும், அசுணம் ஒரு கற்பனை விலங்கு என்றால் அதைப்பற்றிக் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டுமே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறின்றி, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் அசுணமாவைப் பற்றி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து அசுணம் என்பது உண்மையிலேயே இவ் உலகில் வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தான் என்றும் அதுவொரு கற்பனை விலங்கு அல்ல என்றும் முடிவு செய்யலாம்.

அடுத்ததாக, அசுணம் என்பது ஒரு பறவையைக் குறிக்கும் என்ற கூற்றைப் பார்க்கலாம். அசுணம் என்பது ஒரு பறவை என்பதற்குச் சான்றாக கூர்மபுராணத்தில் இருந்து கீழ்க்காணும் பாடல்வரி முன்வைக்கப் பட்டுள்ளது.
“ .... முரசொலி கேட்ட அசுண மென்புள் மூச்சவிந்து ..”
                    (இராமன் வனம் புகு படலம்)
மேற்காணும் பாடல்வரிக்குப் பொருள் கொள்கையில், அசுணம் + என் + புள் என்று பிரித்து அசுணம் என்னும் பறவை என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இது தவறான விளக்கமாகும். அசுணம் + என்பு + உள் என்பதே சரியான பிரிப்பாகும். இங்கே என்பு என்பது உடலைக் குறிக்கும். இதன் பொருளானது "முரசொலியைக் கேட்ட அசுணமானது உடலுக்குள் உயிர் அடங்கி" என்பதாகும். இப் பாடல்வரியில் பறவை என்ற பொருளே இல்லை என்பதால் இப்பாடல் வரியை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட “ அசுணம் ஒரு பறவை “ என்ற கருத்து பொருந்தாமல் போனது.

இறுதியாக, அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்ற கூற்றைப் பார்க்கலாம். .பொதுவாகப் பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை ஆகும். அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்றால் அசுணத்திற்கும் காதுகள் இல்லை என்றுதான் பொருள் கொள்ளப்படும். மாறாக, அசுணத்திற்கு நீண்ட காதுகள் இருந்தன என்று சூளாமணியின் கீழ்க்காணும் பாடல்வரி குறிப்பிடுகிறது.
“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)
மேற்காணும் பாடல்வரியில் வரும் உலவு என்பது காதைக் குறிப்பதாகும். இது உளவு என்பதன் போலியாகும். உளவு என்ற சொல் கேட்டு அறிதல் என்ற பொருளில் இன்றும் பயன்பட்டு வருவதாகும். கேட்டு அறியும் வினைக்கு உதவும் கருவியாக காதே விளங்குவதால் காதையும் உளவு என்ற சொல்லால் குறித்தார் எனலாம். அவ்வகையில், உலவு நீள் அசுணமா என்பது காது நீண்ட அசுணம் என்று பொருள் பெறுகிறது. அசுணத்திற்கு நீண்ட காதுகள் உண்டு என்று மேற்காணும் பாடல் கூறுவதால் அசுணம் என்பது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இலக்கியங்களில் அசுணம்:
அசுணம் என்பது கற்பனை விலங்கு அல்ல என்றும் பறவையும் அல்ல என்றும் பாம்பும் அல்ல என்றும் மேலே கண்டோம். என்றால், அசுணம் என்பது எதைத்தான் குறிக்கிறது என்ற கேள்வி முன் நிற்கிறது. இக் கேள்விக்கான விடையைக் காணும்முன் இலக்கியங்களில் அசுணமாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கீழே தொகுத்துக் காணலாம்.

அசுணமும் மெல்லிசையும்:
அசுணம் என்பது பறவையோ பாம்போ அல்ல என்னும் கருத்து உறுதியாகி விட்ட நிலையில் அது இசையை அறிந்து அனுபவிக்கின்ற ஒரு விலங்குதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அசுணமானது மென்மையான இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்த மற்றும் உறங்கிய செய்திகளைக் கூறும் பாடல்வரிகளைக் கீழே காணலாம்.

 மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்
மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

 கடாம் இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ்செத்து
இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

இன் அளி கேட்ட அசுணமா அன்னளாய் மகிழ்வு .. சிந்தா. 1402

மேற்பாடல் வரிகளில் இருந்து, வண்டுகள் இசைக்கும் யாழிசை போன்ற மெல்லிசையை அசுணங்கள் கேட்டு மகிழ்ந்தன என்ற செய்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புல்லாங்குழலின் இனிமையான மெல்லோசையும் பெண்கள் பாடிய குறிஞ்சிப்பண்ணும் கூட அசுணத்திற்கு மிக விருப்பமானது என்று இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழைகளின் துளைதொறும் கால்பரந்து இசைக்கின்ற ஏழிசைக்கு
உளமுருகி மெய் புளகெழ இரைகொளும் அசுணங்கள் ... வில்லி. 9/20

கொடிச்சியர் எடுத்த இன்குறிஞ்சி கனிந்த பாடல்கேட்டு
அசுணமா வருவன காணாய் ... கம்ப. அயோத். 10/24

அசுணமும் பறையோசையும்:
யாழோசை, புல்லாங்குழல் ஓசை, குறிஞ்சிப்பண் போன்ற மெல்லிசைகளை விரும்பிக் கேட்டு மகிழ்ந்த அசுணங்களைப் பறையோசை, முரசொலி போன்ற வலிய ஓசைகள் படுத்திய பாட்டினைக் கீழே பார்க்கலாம்.
முரசொலி கேட்ட அசுணம் என்புள் மூச்சவிந்து .. கூர்ம.இரா.வ.பு.படலம்

பறைபட வாழா அசுணமா... -. நான்மணி – 2

 சீறியாழ் இன்னிசை கேட்ட அசுண நல்மா அந்நிலைக் கண்ணே
பறையொலி கேட்டுத் தன்படி மறந்தது போல்.... பெருங். உஞ்சை. 47/242

 மேற்காணும் பாடல்களில் இருந்து, பறையோசை மற்றும் முரசொலியைக் கேட்ட அசுணங்கள் வெய்துயிர்த்துத் தன்னிலை மறந்தன என்ற செய்தியும் உடலில் மூச்சடங்கி இறந்தன என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

அசுணங்களின் வாழ்விடம்:
அசுணங்களின் வாழ்விடம் பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் ... – நற். 244
இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

மேற்காணும் பாடல்களில் இருந்து, அசுணங்கள் மலைகளில் காணப்பட்ட பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன என்பதை அறியலாம். அசுணமாக்கள் மலைகளில் மட்டுமின்றி மனிதர்களின் குடியிருப்புகளுக்கு  அருகிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் இசைத்த யாழோசை, புல்லாங்குழல் ஓசை, பறையோசை, முரசொலி முதலானவற்றைக் கேட்டிருக்க இயலும் அல்லவா?. 

அசுணமும் மனிதர்களும்:
அசுணங்கள் மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று மேலே கண்டோம். உண்மையில், அசுணங்களை மனிதர்கள் வீட்டு விலங்குகளாகவும் வளர்த்து இருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறிய முடிகிறது.

.... அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே ... – நற். 304

அசுணங்களை வளர்த்த மனிதர்கள் தமது கைகளாலேயே அவற்றைக் கொலை செய்வதைப் பற்றித்தான் மேற்பாடல் கூறுகிறது. காதலரின் மார்பு சேரும்போதும் பிரியும்போதும் தனக்குத் தரக்கூடிய இன்பமும் துன்பமும் எப்படிப்பட்டது என்றால் அசுணங்களுக்குத் தனது கைகளால் உணவளித்து அன்பு காட்டியவர்கள் திடீரென்று தனது கைகளாலேயே அவற்றைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்று மேற்பாடலில் கூறுகிறாள் காதலி. கோழி, ஆடு, மாடு, பன்றி, எருமை போன்ற விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு உணவுக்காகக் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகக் கூறப்படாத நிலையில், அசுணங்களைக் கொல்வது மட்டும் கொடிய செயலாகக் கருதப்பட்டது என்பதனை இப்பாடலின் வழியாக அறிய முடிகிறது, இதிலிருந்து, அசுணங்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் அன்பு காட்டப்படும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டன என்று அறியலாம்.

அசுணங்களின் உடலமைப்பு:
அசுணங்களின் உடலமைப்பு பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கனியிசை கள்ளினால் தூமமேனி
அசுணம் துயில்வுறும் ........ கம்ப. கிட்.. 13/14

அசுணத்தின் உடலானது தூமம் அதாவது புகையைப் போல வெண்ணிறத்தில் பொங்கிப் பொலிந்த நிலையில் காணப்பட்டது என்ற செய்தியை மேற்பாடல் கூறுகிறது. இதிலிருந்து, அதன் உடல் முழுவதும் வெண்ணிற மயிர் புசுபுசுவென்று பொலிந்து இருந்ததை அறியலாம். அசுணமாவிற்கு நீண்ட காதுகள் இருந்தன என்ற செய்தியைப் பற்றி ஏற்கெனவே மேலே கண்டோம்.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

அசுணம் என்பது எதைக் குறிக்கிறது?
அசுணம் பற்றிப் பல்வேறு இலக்கியங்கள் கூறிய செய்திகளை மேலே கண்டோம். இனி அவற்றைக் கீழே தொகுத்துப் பார்க்கலாம்.

1.   அசுணங்கள் மலைப்பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன.
2.   அசுணங்களை மனிதர்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்த்தார்கள்.
3.   அசுணங்கள் மனிதர்கள் இசைத்த மெல்லிசையைக் கேட்டு மகிழ்ந்தன. வல்லிசையைக் கேட்டு மடிந்தன / துன்புற்றன.
4.   அசுணத்தின் உடலில் வெண்ணிற மயிர் புசுபுசு என்று இருக்கும். அதன் காதுகள் நீண்டு இருக்கும்.
மேற்கண்ட தகவல்களைத் தொகுத்துப் பார்த்ததில், அசுணம் / அசுணமா என்பது கீழ்க்காணும் விலங்காகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

அசுணம் / அசுணமா = பூனை.

அசுணம் – பெயர் விளக்கம் என்ன?:
அசுணம் என்பது பூனை என்றால், பூனையைக் குறிக்கும் பூசை, பிள்ளை, வெருகு போன்ற சொற்களைக் கூறாமல் அசுணம் என்ற புதிய சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

அசை என்ற வினைச்சொல்லுக்குப் பாடுதல், இசைத்தல், ஒலித்தல் என்ற பொருட்களுண்டு. உண்ணு என்ற வினைச்சொல்லுக்கு அனுபவித்தல், உட்கொள்ளுதல் என்ற பொருட்களுண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவானதே அசுணம் ஆகும்.

அசை (=பாடு, ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் = அசுணம் = இசையினை அனுபவிப்பது.

இசையை அனுபவிப்பது என்ற பொருளில் பூனையைக் குறிக்க உருவாக்கப்பட்டதே அசுணம் என்ற சொல்லாகும்.

மேலதிக சான்றுகள்:
இலக்கியங்கள் கூறியுள்ள செய்திகளில் இருந்து அசுணம் என்பது பூனையைக் குறிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கீழ்க்காணும் மேலதிக சான்றுகள் மூலம் இக் கருத்துக்கு மேலும் வலுவூட்டலாம்.

மனிதர்கள் மற்றும் நாய்களைக் காட்டிலும் பூனைகளுக்கு அதிகக் கேட்புத் திறன் உள்ளதென்று அறிவியல் கூறுகிறது. பூனைகளால் சிறுசிறு ஒலிகளைக் கூடத் தெளிவாகக் கேட்டு இருட்டிலும் இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூனை தனது காதுமடல்களை 180 டிகிரி கோணத்தில் தனித்தனியாக திருப்பும் திறன் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, வீணை, கிடார், யாழ், புல்லாங்குழல் போன்ற கருவிகளில் இருந்து எழும் மெல்லிசைகளை மிகவும் விரும்பிக் கேட்பதாகவும் பறைகளை முழக்கும்போது பூனையின் கேட்புத்திறன் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் பெருத்த மாற்றம் உண்டாகுவதாகவும் பூனைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கூறுவதை இணையங்களில் பார்க்க முடிகிறது. திடீரென ஒலிக்கும் இடியோசையால் பூனைகள் சுருண்டு விழுந்த செய்திகளும் அதில் உள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும் பூனைகள் ஒலியினால் அதிகம் பாதிப்பு அடைவதன் காரணம் அதன் செவியமைப்பு தான். சிறிய ஒலியைக் கூட பலமடங்காகப் பெருக்கித்தரும் ஒலிபெருக்கியாக அவற்றின் காதுகள் செயல்படுவதே இந்த மோசமான விளைவுகளுக்குக் காரணம் என்று விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர் விலங்குகளுக்கு “அசிணோ” என்ற ஒட்டுச்சொல்லுடன் கூடியதாக, அசிணோனிக்சு, மிராசிணோனிக்சு போன்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை:
இதுவரை கண்டவற்றில் இருந்து, அசுணம் அல்லது அசுணமா என்பது பூனையைக் குறித்தே இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

பூனைகளுக்கு வண்டோசை, யாழோசை, குழலோசை போன்ற மெல்லிசைகள் தான் பிடிக்கும் என்று இப்போதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறியும் நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இச் செய்திகளை இலக்கியங்களில் பதிவுசெய்து விட்டுச்சென்ற நம் முன்னோரின் அறிவுத் திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா?





Saturday, November 2, 2019

தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?

தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?

— திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
          தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?. – இக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையை எழுதுவதற்கான காரணத்தை முதலில் சொல்லி விடலாம். சகடம், சக்கரம், சமையல், சிப்பி, சிறகு என்று எந்தவொரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக சகரம் வந்தாலும் அது தமிழ்ச் சொல் அல்ல; சமக்கிருதச் சொல் என்றே பலரும் நம்புகின்றனர்; சிலர் நம்பாவிட்டாலும் அப்படியும் இருக்குமோ? என்று அயிர்க்கின்றனர்.

          இவர்களது நம்பிக்கைக்கும் அயிர்ப்புக்கும் அடிப்படையான ஆதாரமாக இவர்கள் காட்டுவது தொல்காப்பியத்தில் வருகின்ற ஒரு நூற்பா ஆகும். தமிழ்மொழியில் உள்ள சொற்களின் கட்டமைப்பினையே கேள்விக் குறியாக்கி ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இந்த நூற்பா ஒரு இடைச்செருகல் தான் என்றும் தொல்காப்பியர் இந்த நூற்பாவை எழுதியிருக்க மாட்டார் என்றும் பல சான்றுகளுடன் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தொல்காப்பிய நூற்பாக்கள்:
          தொல்காப்பியத்தில் எழுத்து அதிகாரத்தில் மொழிமரபில் கீழ்க்காணும் நூற்பாக்கள் வருகின்றன.

                    க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும்
                    எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - 28
பொருள்: க, த, ந, ப, ம ஆகிய ஐந்து மெய் எழுத்துக்களும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுடனும் கூடி சொல்லின் முதலாக வரும்.

                    சகர கிளவியும் அவற்று ஓரற்றே
                    அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே - 29
பொருள்: சகர மெய்யெழுத்துக்கும் மேற்சொன்னவை பொருந்தும்; ஆனால், அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிர் எழுத்துக்களுடன் மட்டும் சேர்ந்து சொல்லுக்கு முதலாக வராது.

மொழிமரபு நூற்பா -29 பற்றிய சான்றோர் கருத்துக்கள்:
          சகர முதல் பற்றி வருவதான நூற்பா 29 ஐப் பற்றிய ஆய்வுகளும் கருத்துரைகளும் பன்னெடுங்காலமாகவே நடந்து வந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தை மட்டும் இங்கே காணலாம்.

          தொல்காப்பிய எழுத்து அதிகாரத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் இந்த நூற்பாவினை இடைச்செருகலாக எண்ணவில்லை. மாறாக, சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் சகரமுதல் சொற்களை ஆரியச் சிதைவாகவோ கடிசொல்லாகவோ கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பெரும்பாலான உரையாசிரியர்கள் இவரது கருத்துக்களை அடியொட்டியே தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில் சகர முதல் சொற்கள் இருந்திருக்காது என்றும் மயிலைநாதர் போன்றோர் கருதுகின்றனர்.

          இவர்கள் அனைவருமே அந்த நூற்பாவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் முதன்முதலாக, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரே அந்த நூற்பாவிற்கு ஒரு பாடவேறுபாடு காட்டுகிறார். “ அவை ஔ என்னும் ஒன்று அலங்கடையே “ என்று அந்த நூற்பாவின் இரண்டாம் அடிக்குப் பாடவேறுபாடு காட்டுகிறார். அதாவது, சௌ என்னும் ஒரேயொரு எழுத்தைக் கொண்டு மட்டுமே தமிழ்ச் சொற்கள் தொடங்காது என்பதே தொல்காப்பியர் கூற்றென்று தனது கருத்தை முன்வைக்கிறார். 

          மொழிமரபு நூற்பா – 29 இடைச்செருகலே !!!

          இடைச்செருகல் இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களோ இலக்கணங்களோ இல்லை என்றே கூறலாம். காரணம், பழந்தமிழ் நூல்கள் யாவும் ஓலைச் சுவடிகளாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து பின்னர் பலரால் பல காலங்களில் படியெடுக்கப்பட்டுப் பின்னர் அச்சிடப் பெற்றவை. இந்த காலகட்டங்களில் பாடவேறுபாடுகள், இடைச்செருகல்கள், அச்சுப்பிழைகள் போன்ற பலவும் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக, இருப்பதிலேயே மிகவும் பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பல்வேறு இடைச்செருகல்கள் இருப்பதாகப் பல ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் கூறி வருகின்றனர்.

          இந்நிலையில், மேற்காணும் மொழிமரபு நூற்பா – 29 ம் ஒரு இடைச்செருகலாகத் தான் இருக்க முடியும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நூற்பா இடைச்செருகல் தான் என்பதனைக் கீழ்க்காணும் இரண்டு வழிமுறைகளால் உறுதி செய்துகொள்ளலாம்.
1.   தொல்காப்பிய நூற்பா கொண்டு நிறுவுதல்
2.   இலக்கியப் பயன்பாடுகள் கொண்டு நிறுவுதல்

1.   தொல்காப்பிய நூற்பா கொண்டு நிறுவுதல்:
          சகர முதல் எழுத்துக்கள் பற்றிக் கூறும் மொழிமரபு நூற்பா 29 ஒரு இடைச்செருகல் தான் என்பதனைத் தொல்காப்பிய மொழிமரபில் இந்த நூற்பாவை அடுத்துவரும் 30, 31, 32 ஆம் நூற்பாக்களைக் கொண்டே நிறுவலாம்.

                    உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
                    வ என் எழுத்தொடு வருதல் இல்லை - 30
                    ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய - 31
                    ஆவொடு அல்லது யகரம் முதலாது - 32
மேற்காணும் மூன்று நூற்பாக்களில், வகர, ஞகர, யகர மெய்களுடன் எந்தெந்த உயிர் எழுத்துக்கள் இணைந்து சொல்லுக்கு முதலாக வரும் / வராது என்று கூறுகிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் ஏன் இவ்வாறு கூறவேண்டும்?. அவர் இவ்வாறு கூறுவதற்கு ஏதும் சரியான காரணங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்ததின் விளைவாகவே மொழிமரபு நூற்பா – 29 ஒரு இடைச்செருகல் தான் என்பது உறுதியானது.

வகர உயிர்மெய் முதல் எழுத்துக்கள்:
          நூற்பா 30 ல் வகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, வு, வூ, வொ, வோ என்ற நான்கு உயிர்மெய் எழுத்துக்கள் மட்டும் சொல்லுக்கு முதலில் வராது என்கிறார். காரணம், இந்த எழுத்துக்களுக்குப் பதிலாக, உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துக்களே போதுமானது என்பதே அவரது உட்கருத்தாகும். உண்மையில், வு, வூ, வொ, வோ என்ற உயிர்மெய் எழுத்துக்களும் உ, ஊ, ஒ, ஓ என்ற உயிர் எழுத்துக்களும் ஒரே மாதிரியான ஒலிப்பினைக் கொண்ட ஒலிப்புப் போலிகள் ஆகும். சான்றாக, உலகம் என்றாலும் வுலகம் என்றாலும் ஒரே மாதிரித்தான் ஒலிக்கும். வோலம் என்றாலும் ஓலம் என்றாலும் ஒரே மாதிரித்தான் ஒலிக்கும். இவையனைத்தும் ஒரே மாதிரி ஒலிப்பதனை நாம் நடைமுறையில் ஒலித்தும் தெளிந்து கொள்ளலாம். அதேசமயம், எட்டு என்பதும் வெட்டு என்பதும் ஒரேமாதிரி ஒலிக்காது; ஆட்டு என்பதும் வாட்டு என்பதும் ஒரேமாதிரி ஒலிக்காது.

          எழுத்தளவில் வேறுபாடு இருந்தாலும் ஒலிப்பளவில் ஒற்றுமை கொண்டிருக்கும் காரணத்தினால் தான் சொல்லுக்கு முதலாக வரும் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு ஒலிகளுக்கு மாற்றாக, உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துக்களையே ஒலிப்புப் போலிகளாக இலக்கியங்களில் பயன்படுத்தினர். தொல்காப்பியர் காலத்தில் அதுவே மொழிமரபாக இருந்ததாலும் மொழிமுதலாக வு, வூ, வொ, வோ ஆகிய எழுத்துக்களின் பயன்பாடின்மை / தேவையின்மை காரணம் பற்றியே தொல்காப்பியரும் இந்த நான்கு எழுத்துக்களும் சொல்லுக்கு முதலாக வராது என்றார். ஆனால் இந்த விதி சொல்லின் முதலாக வரும் வு, வூ, வொ, வோ ஆகிய ஒலிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

ஞகர உயிர்மெய் முதல் எழுத்துக்கள்:
          நூற்பா 31 ல் ஞகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துக்கள் மட்டுமே சொல்லுக்கு முதலில் வரும் என்று கூறுகிறார். காரணம், ஞகர உயிர்மெய் எழுத்துக்களைத் தனியாக ஒலிப்பதில் உள்ள கடின முயற்சியும் நகர, னகர ஒலிப்புப் போலிகளுமே எனலாம். அதாவது, சொல்லுக்கு முதலில் வரும் ஞகர உயிர்மெய்களானவை நகர உயிர்மெய்ப் போலிகளால் மாற்றப்பட்டு விடுகின்றன. சான்றாக, ஞாயிறு என்பது நாயிறு என்றும் ஞாயில் என்பது நாயில் என்றும் மாறிவிடுகின்றது.

          சொல்லுக்கு முதலில் மட்டுமின்றி சொல்லுக்கு இடையில் வரும் ஞகர உயிர்மெய்கள் கூட னகர எழுத்துக்களால் மாற்றப்பட்டு விடுகின்றன. சான்றாக, அஞ்ஞை என்பது அன்னை என்றும் முஞ்ஞை என்பது முன்னை என்றும் மாறிவிடுகிறது. ஙகர உயிர்மெய் எழுத்துக்கள் தனியாக ஒலிப்பதற்குக் கடினமாக இருப்பதால்தான் அவற்றில் எதுவும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. இவற்றைப் போலவே ஞகர உயிர்மெய்களின் தனித்த ஒலிப்புகள் கடினமாக உள்ளதாலும் நகர னகரப் போலிகளால் மாற்றப்படுவதாலும் இவ் எழுத்துக்களின் பயன்பாடின்மை / தேவையின்மை கருதியே தொல்காப்பியர் இந்த நூற்பாவை இயற்றினார் எனலாம்.

யகர உயிர்மெய் முதல் எழுத்துக்கள்:
          நூற்பா 32 ல் யகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, யா என்ற ஒரேயொரு எழுத்து மட்டுமே சொல்லுக்கு முதலாக வரும் என்று கூறுகிறார் தொல்காப்பியர். காரணம், யகர உயிர்மெய்களின் அனைத்து ஒலிப்புக்களையும் உயிர் எழுத்துக்களைக் கொண்டு ஒலிப்புப் போலிகளாக மாற்றிவிட முடிவதே. இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

                    ய விற்குப் போலியாக அ வும்
                    யா விற்குப் போலியாக ஆ வும்
                    யி க்குப் போலியாக இ யும்
                    யீ க்குப் போலியாக ஈ யும்
                    யு க்குப் போலியாக உ வும்
                    யூ க்குப் போலியாக ஊ வும்
                    யெ க்குப் போலியாக எ வும்
                    யே க்குப் போலியாக ஏ வும்
                    யை க்குப் போலியாக ஐ யும்
                    யொ க்குப் போலியாக ஒ வும்
                    யோ க்குப் போலியாக ஓ வும்
                    யௌ க்குப் போலியாக ஔ வும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. சான்றாக, யானை என்பதை ஆனை என்றும் யாறு என்பதை ஆறு என்றும் யூகம் என்பதனை ஊகம் என்றும் யோகம் என்பதை ஓகம் என்றும் கூறுகிறோம்.

          மேலே கண்டபடி, யகர உயிர்மெய்கள் அனைத்தையுமே உயிர் ஒலிப்புப் போலிகளால் மாற்றிவிட முடியும் என்பதால், அவ் எழுத்துக்கள் சொல்முதலாகத் தேவையற்றுப் பயனற்றுப் போகின்றன. ஆக, இங்கும் இந்த எழுத்துக்களின் தேவையின்மை / பயனின்மை காரணம் பற்றியே தொல்காப்பியர் இந்த நூற்பாவினை இயற்றினார் எனலாம். யா எழுத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளித்த காரணம், அவரது காலத்தில் யா முதல் சொற்கள் மட்டும் இருந்திருக்கக் கூடும்.

சகர முதல் வாராது என்பதற்குக் காரணம் உண்டா?
          வகர உயிர்மெய்களில் வு, வூ, வொ, வோ ஆகியவை சொல்லுக்கு முதலாக வாரா என்பதற்கு உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர்ப்போலிகளே காரணம் என்று மேலே கண்டோம். அதைப்போல, ஞகர உயிர்மெய்களில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று மட்டுமே வரும் என்பதற்கு ஞகர உயிர்மெய்களின் கடின ஒலிப்பும் நகர னகர மெய்ப்போலிகளுமே காரணம் என்று கண்டோம். இறுதியாக, யகர உயிர்மெய்களில் யா மட்டுமே சொல்லுக்கு முதலில் வரும் என்பதற்கும் உயிர்ப்போலிகளே காரணம் என்று மேலே கண்டோம்.

          இவ்வாறு வகர ஞகர யகர உயிர்மெய் எழுத்துக்களில் எவையெவை சொல்லுக்கு முதலில் வரும் / வராது என்பதற்குச் சொல்முதலாக அந்தந்த எழுத்துக்களின் தேவையின்மை / பயனின்மை போன்ற காரணங்கள் தெளிவாக இருக்க, சகர சைகார சௌகார எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வாரா என்பதற்கு எவ்வித காரணமும் அறியக் கூடவில்லை. மேலும் இந்த எழுத்துக்களுக்கு மாற்றாக எவ்விதமான உயிர் / மெய்ப் போலிகளும் இல்லை; இவற்றை ஒலிப்பதிலும் எவ்விதக் கடினமும் இல்லை. இந்நிலையில், மேலே கண்ட மற்ற எழுத்துக்களைப் போல, சொல்லுக்கு முதலாக சகர எழுத்துக்கள் தேவையில்லை என்றோ வந்தாலும் பயனில்லை என்றோ கூற முடியாது.

          இப்படி எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் ஏன் இந்த மூன்று உயிர்மெய் எழுத்துக்களை மட்டும் நூற்பா 29 ல் விதிவிலக்காக அறிவிக்க வேண்டும்?. சரியான காரணம் காட்டப்படாத நிலையில், இந்த நூற்பா 29 வானது தொல்காப்பியரால் இயற்றப்பட்டிருக்காது என்பதனையும் உறுதியாக இது ஒரு இடைச்செருகலே என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

2.   இலக்கியப் பயன்பாடுகள் கொண்டு நிறுவுதல்:
          சகர உயிர்மெய் முதல் எழுத்துக்கள் பற்றிக் கூறும் மொழிமரபு நூற்பா 29 ஒரு இடைச்செருகல் தான் என்பதை இலக்கியச் சான்றுகள் கொண்டும் நிறுவலாம். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

          தொல்காப்பியத்தை அடுத்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் சகர முதல் சொற்கள் பலவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. சகடம், சங்கம், சடை, சண்பகம், சதுக்கம், சந்தம், சந்தனம், சந்தி, சந்து, சமம், சமழ்ப்பு, சமன், சமைப்பு, சரணம், சருமம், சலம், சலதாரி, சவட்டு, சனம், சையம் என இருபது சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சக்கரம், சகடம், சகோடன், சங்கு, சத்தம், சத்தி, சந்தனம், சபை, சம்பிரதம், சமத்தன், சமம், சமயம், சமழ்மை, சமன், சலம், சலவர், சலி, சவட்டு, சவை, சனம் என்ற இருபது சொற்கள் சங்க மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

          தொல்காப்பியத்தில் இந்த நூற்பா 29 ஐ தொல்காப்பியர் தான் உண்மையிலேயே எழுதியிருந்தார் என்றால் தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதனை அடியொட்டி எழுந்த சங்க இலக்கியங்களிலும் சங்க மருவிய இலக்கியங்களிலும் சகர முதல் சொற்கள் எவையும் வந்திருக்காது அல்லவா?. ஆனால், இந்த இரண்டு இலக்கியங்களிலும் சேர்த்து ஏறத்தாழ நாற்பது சகர முதல் சொற்கள் பயின்று வந்துள்ளதைக் கண்டோம். அதுமட்டுமின்றி, இவற்றில் எதுவுமே சமக்கிருதச் சொற்களோ பிறமொழிச் சொற்களோ அல்ல; அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள் தான். இப்படி ஏராளமான சகர முதல் தமிழ்ச் சொற்களைப் புலவர்கள் பாடலில் பயன்படுத்தி உள்ளதிலிருந்து தொல்காப்பிய மொழிமரபு நூற்பா 29 ஐ தொல்காப்பியர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்பதும் அதுவொரு இடைச்செருகலே என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவுரை:
          இதுவரை கண்டவற்றிலிருந்து, சகர, சைகார, சௌகார எழுத்துக்கள் சொல்லுக்கு முதலாக வாரா என்பதாகக் கூறுகின்ற மொழிமரபு நூற்பா 29 ஆனது தொல்காப்பியத்தில் ஒரு இடைச்செருகலே என்பது பல சான்றுகளுடன் உறுதிசெய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, சங்க / சங்க மருவிய காலத்து இலக்கியங்களில் பயிலும் சகர முதல் சொற்கள் எவையும் ஆரியச் சிதைவுகளோ கடியப்பட வேண்டிய சொற்களோ அல்ல என்பதும் தெளிவுசெய்யப் பட்டது. இந்த நூற்பா ஒரு இடைச்செருகல் என்பதனால் தான், சங்க மருவிய காலத்துக்குப் பின்னர் ஏராளமான சகர முதல் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுத் தற்போது புழக்கத்திலிருந்து வருகின்றன. அப்படி வழங்கப்படும் சொற்களில் சில: சட்டை, சட்டி, சடுதி, சரம், சரவணம், சயனம், சரிதை, சம்பளம், சல்லி, சத்து, சப்பு, ….

          இறுதியாக இங்கே கூறப்படுவது: இந்த மொழிமரபு நூற்பா 29 உண்மையாக இருக்குமோ என்று பலரும் அயிர்ப்பதற்கான காரணம், தமிழ்ச் சொற்களில் உள்ள சகர ஒலிகளைத் தமிழர்கள் சரியாக ஒலிக்காமல் கிரந்த ஒலிகளைப் போல ஒலிக்கத் தொடங்கியதும் அதன் விளைவாக அச்சொற்கள் எல்லாம் தமிழ் அல்ல; சமக்கிருதமே என்று ஒருசாரார் பரப்பத் தொடங்கியதுமே எனலாம். இனிமேலாவது தமிழ்ச் சொற்களைக் கிரந்த ஒலி கலந்து பேசாமலும் கிரந்த எழுத்து கலந்து எழுதாமலும் இருந்தால் இப்பூவுலகில் தமிழ் என்றென்றும் வாழும்; வளரும்.  






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/










Monday, October 21, 2019

திருக்குறளின் முன்னோடி நூல் எது?

 ——  திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
            உலகப் பொதுமறை என்று பல சமயத்தாராலும் புகழப்பெற்று பரந்த இவ்வுலகெங்கும் வாழ்கின்ற தமிழர்க்கெல்லாம் பெருமை தேடித் தந்திருப்பது திருக்குறள் ஆகும். இரண்டே இரண்டு வரிகளில் அருமையான கருத்துக்களைப் பொதித்து வைத்திருக்கும் பெரும் புதையல் திருக்குறள் என்றால் மிகையில்லை.

            திருக்குறள் தோன்றிய காலத்திற்கு முற்பட்டு எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் நான்கு அடிகள் முதல் வெவ்வேறு எண்ணிக்கையிலான அடிகள் வரையிலும் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருவள்ளுவருக்கு மட்டும் இரண்டே இரண்டு அடிகளில் கருத்தைச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உண்டானது? சங்க இலக்கியத்தின் எந்த நூலின் தாக்கத்தினால் இப்படி ஒரு கருத்து அவருக்குள் முகிழ்த்திருக்கக் கூடும்? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இக் கட்டுரை ஆகும்.

புறநானூறும் திருக்குறளும்:
            ஆராய்ந்து பார்த்ததில், சங்க இலக்கியத்தின் புறத்திணை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களே திருவள்ளுவருக்கு ஒரு பெரும் உந்துதலாய் விளங்கி இருந்துள்ளது என்று உறுதியானது.

            புறநானூற்றுப் பாடல்களில் வரும் போர் முறைகள், வீரர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வள்ளுவரும் படைமாட்சி, படைச்செருக்கு போன்ற அதிகாரங்களில் எடுத்தாள்வதைப் பார்க்கலாம்.

            அதுமட்டுமின்றி, புறநானூற்றுப் பாடல்களில் வரும் கருத்துக்களை எடுத்தாளும்போது, சில  பாடல்களின் ஈற்றிலிருந்த இரண்டு அடிகள் வள்ளுவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். அந்த இரண்டு அடிகளில் புலவர்கள் கூறியிருந்த கருத்துக்கள் பொதுவுடைமை சார்ந்தவையாய் மக்களுக்கு அறிவூட்டுவதாய் இருப்பதை அறிந்தார். அதுமட்டுமின்றி, அந்த இரண்டு அடிகளிலிருந்த சொற்களை ஏழு சீர்களாய்ப் பிரிக்க முடிவதையும் கண்டறிந்தார். இவற்றின் அடிப்படையில், இரண்டு அடிகளில் ஏழு சீர்களை அமைத்துப் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கூற விரும்பினார். அப்படி அவர் முனைந்து இயற்றியதே இன்று நாம் அனைவரும் கொண்டாடும் திருக்குறள் ஆகும்.

புறக்குறள்:
            புறநானூற்றுப் பாடல்களில் குறள் வடிவத்தில் காணப்படுவதால் இந்தப் பாடல்களைப் புறக்குறள் என்று அழைக்கலாம். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றுவதற்குப் புறநானூற்றின் சில பாடல்களில் கடைசி இரண்டு அடிகளிலிருந்த இந்த புறக்குறள்களே உந்துதலாய் இருந்தது என்று மேலே கண்டோம். பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்ட அந்த புறக்குறள்கள் பெரும்பாலும் பாடலின் கடைசியிலிருந்தாலும் சில பாடல்களில் மட்டும் பாடலின் இடையிலும் இருக்கின்றன. புறநானூற்றிலிருந்து இதுவரை அறியப்பட்ட புறக்குறள்களும் அவற்றின் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

            நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
            அல்லது செய்தலோம் புமின் - புறம். 195
பொருள்: பிறருக்கு ஒருபோதும் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்வதை எப்போதும் தவிர்த்து விடுங்கள்.

            இன்னா தம்மவிவ் வுலகம் இனிய
            காண்கவிதன் இயல்புணர்ந் தோரே - புறம். 194
பொருள்: இந்த உலகம் துன்பங்களால் நிறைந்தது தான்; இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே இதில் இன்பங்களையும் காண்கிறார்கள்.

            பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்
            ஆருயிர் முறைவழிப் படூஉம் - புறம். 192
பொருள்: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் போக்கில் செல்லும் படகினைப் போல உயிர்கள் விதி வசப்பட்டு அதன் வழிதான் செல்லும்.

            செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம்
            எனினே தப்புந பலவே - புறம். 189
பொருள்: பிறர்க்குக் கொடுத்து உதவுவதே செல்வத்தால் விளையும் உண்மையான பயனாகும். முழுவதையும் தாமே அனுபவிப்போம் என்று முயன்றால் பலவற்றை இழக்க நேரிடும்.

            எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
            நல்லை வாழிய நிலனே - புறம். 187
பொருள்: ஒரு நாட்டின் அரசன் நல்ல வழியைப் பின்பற்றினால் அந்த நாட்டு மக்களும் நல்லவர்களாய் வாழ்வார்கள். (ஆடு = வெற்றி. ஆடவர் = வெற்றியாளர் = அரசர்.)

            யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு
            தானை வேந்தற்கு கடனே - புறம். 186
பொருள்: குடிமக்களுக்குத் தானே உயிர் என்று அறிந்து அதன்படி ஒழுக வேண்டியது வெற்றியைத் தரும் படையினைக் கொண்ட அரசனது கடமையாகும். (வேல் = வெற்றி)

            கீழ்ப்பால் ஒருவன்  கற்பின் மேல்பால்
            ஒருவனும் அவன்கண் படுமே - புறம். 183
பொருள்: கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்கும் போது மேல்நிலையில் உள்ள ஒருவனும் அவனிடம் நட்பு கொள்வான். (கல்வி கற்பிக்கும் இடங்களில் கீழ் மேல் என்ற பாகுபாடு இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பதை இது விளக்குகிறது.)

            தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென
            முயலுநர் உண்மை யானே - புறம். 182
பொருள்: தன்னலத்திற்காக இன்றிப் பிறர்நலத்திற்காக உழைப்பவர்கள் இவ் உலகில் இன்னும் இருப்பது உண்மைதான். (அதனால்தான் இவ் உலகமே நிலைபெற்று உள்ளது.)

            தம்இசை நட்டு தீதுஇல் யாக்கை
            யொடுமாய் தல்தவத் தலையே - புறம். 214
பொருள்: வாழும்போதே தம் புகழை நிறுவிப் பிறர்க்குத் தீங்கு செய்யாத யாக்கையராய் வாழ்ந்து மடிதலே தலைசிறந்த தவமாகும்.

            ஈயெனவிரத் தலிழிந்தன் றதனெதிர் ஈயேன்
            என்றலதனி னுமிழிந் தன்று - புறம். 204
பொருள்: தா என்று ஒருவரிடம் பிச்சை கேட்பது இழிவான செயலாகும். மாறாக, தரமாட்டேன் என்று சொல்வது அதைவிட இழிவான செயலாகும்.

            கொள்ளெனக் கொடுத்தலுயர்ந் தன்றதனெதிர் கொள்ளேன்
            என்றலதனி னுமுயர்ந் தன்று  - புறம். 204
பொருள்: வாங்கிக்கொள் என்று கூறி ஒருவருக்குக் கொடுப்பது உயர்வான செயலாகும். மாறாக, வாங்கமாட்டேன் என்று கூறி மறுப்பது அதைவிட உயர்வான செயலாகும்.

            சான்றோர் சான்றோர் பாலராப சாலார்
            சாலார் பாலரா குபவே - புறம். 218
பொருள்: நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களுடன் மட்டுமே பழகுவர். அதைப்போல, கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களுடன் தான் சேர்வர்.

            வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்
            காலைப் புணைபிறி தில்லை - புறம். 367
பொருள்: பிறர்க்கு நன்மை செய்து அவர்களை வாழச்செய்த புண்ணியமே துன்பக் கடலில் மூழ்கும் ஒருவருக்குக் கரையேற உதவும் தெப்பம் ஆகும். 
முடிவுரை:
            மேற்கண்ட புறக்குறள்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட திருவள்ளுவரும் அப்படியே தனது திருக்குறள்களில் வேறு சொற்களால் எடுத்தாண்டிருப்பதை அறியலாம். பொதுவாக, முன்னோர்கள் இயற்றிய பாடல்களைக் கூர்ந்து ஆராய்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டே பின்வருவோர் பாடல்கள் இயற்றுவர். இதற்கொரு சான்றாகத் திருக்குறள் விளங்கும் நிலையில், அந்தாதித் தொடையையும் ஒன்பதாம் தொடையினையும் கூட சான்றுகளாகக் கூறலாம். 

            ஐங்குறுநூற்றின் சில பாடல்களிலிருந்த அந்தாதி அமைப்பே பின்னாளில் தனியாக அந்தாதித் தொடையாக உருவெடுத்தது. அதைப்போல, பல சங்க இலக்கியப் பாடல்களில் எண் பெயர்களைக் கொண்டு பயின்றுவந்த தொடை அமைப்பே சரவெண் தொடை என்னும் ஒன்பதாம் தொடையாக உருவெடுத்தது. 






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் ( vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/







Thursday, August 8, 2019

சங்க இலக்கியத்தில் யானைமலை

— திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
          யானைமலை - மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இம்மலை அமைந்துள்ளது. இதன் நீளம் சுமார் 4000 மீ; அகலம் 1200 மீ; உயரம் 400 மீ. இம்மலையை சற்று தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போலத் தோன்றுவதால் இது யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மலைக்கு நரசிங்கமங்கலம் என்ற பெயரும் உண்டு. இம்மலையின் உச்சியில் குகைத் தளம் காணப்படுகிறது. இக்குகைத் தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. 


          யானைமலையில் நரசிங்கப் பெருமாளின் திருவுருவம் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முருகப் பெருமானுக்கு இலாடன் கோயில் எனும் குடைவரை கோவிலும் இங்கு உள்ளது. இக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் எனக் கூறுகிறது. கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விசயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டில் யானைமலையை "கசகிரி" என்று சமற்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச் செய்திகளை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் காணமுடிகிறது. ஆனால், சங்க காலத்திலேயே அதாவது ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இம்மலையானது சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.. சங்க இலக்கியத்தில் இம்மலையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இலக்கியத்தில் யானைமலை:
          பல்வேறு கல்வெட்டுக்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதனை மேலே கண்டோம். கல்வெட்டுக்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். இனி, சங்க இலக்கியங்களில் யானைமலையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்பட்டுள்ளன என்று காணலாம்.

சங்க இலக்கியங்களில் யானைமலை:
          சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          சங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண்யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச் சொற்றொடர்களின் பொருளாகும். இனி, இப்பாடல்கள் கூறும் செய்திகளை விளக்கத்துடன் காணலாம்.

அகநானூற்றுப் பாடல்கள்:
          மதுரை மருதன் இளநாகனார் இயற்றிய அகப்பாடல் 269 ல் யானைமலை பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

          யானைமலைப் பகுதியானது சங்ககாலத்தில் முல்லைநிலமாக விளங்கியது. இப் பகுதியில் முல்லைநில மக்களாகிய ஆயர் / கோவலர் வாழ்ந்தனர். ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவாக யானைமலையைச் சுற்றிலும் பரந்த பசும் புல்வெளி இருந்திருக்க வேண்டும் அல்லவா?. இப்படிப்பட்ட பரந்த பசும் புல்வெளிகளை இன்றும் கூட யானைமலையைச் சுற்றிலும் காணலாம். 



          ஆயர்களின் ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்து செல்வதும் ஆயர்கள் கள்வருடன் போர்செய்து அவற்றை மீட்டு வருவதும் சங்ககாலத் தமிழரின் நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறை ஒன்றினைத் தான் இப்பாடல் விரிவாகக் கூறுகிறது. தங்களது ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்துசெல்ல, அவற்றை மீட்பதற்காகத் தலையில் சிவந்த கரந்தைப் பூமாலையினையும் கால்களில் கழல்களையும் அணிந்து கையில் கூரிய வேல் தாங்கி வீரர்கள் தயாராயினர். கரந்தைப் போருக்குக் கிளம்பும் முன்னர், வீரமரணம் எய்திய முன்னோர்களின் நடுகல்லை வழிபட்டனர். இந்த நடுகல்லானது செயற்கையாக நடப்படாமல் நட்டதைப்போலவே இயற்கையாக அகலமாகவும் உயரமாகவும் விளங்கியதொரு கல்லாகும். இதற்கு முன்னால் கரந்தைப் போருக்குச் சென்று வீரமரணம் எய்திய முன்னோர்கள் அனைவரின் பெயரும் இக் கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. இக் கல்லானது படுத்திருக்கும் யானையைப் போலவே தோன்றுகின்ற யானைமலையை ஒட்டியே அமைந்திருந்தது. முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அக்கல்லினை நீரால் கழுவி ஈரமஞ்சளைப் பூசி வழிபட்டனர். இச் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் …… அகம். 269

          மேற்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது மதுரையில் இருக்கும் யானைமலை தானா இல்லை வேறு ஏதாவதொரு மலையா என்ற ஐயப்பாட்டினை இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் ஊர் ஆகிய மதுரை என்ற பெயர் தெளிவாக்கி விடுகிறது.

          அடுத்ததாக, பரணர் இயற்றிய அகப்பாடல் எண் 178 ஐக் காணலாம். யானைமலையின் அருகில் நீர் ஊறுகின்ற மிகப்பெரிய சுனை ஒன்று இருந்தது. யானைமலையில் பெய்யும் மழைநீரெல்லாம் கீழே இறங்கி கடலில் பல ஆறுகள் கலப்பதைப் போல இந்த சுனையில் ஒன்று சேர்ந்தன. வயிரம் போல ஒளிர்ந்த கூரிய பற்களையும் மூங்கில் வேர்போன்ற மயிரினையும் கொண்ட காட்டுப்பன்றி ஒன்று சேப்பங் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்டபின்னர் அருகிலிருந்த சுனைநீரைப் பருகியது. பின்னர், அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கு இடையில் காட்டுப்பன்றி புகுந்து சென்றபோது வெண் கூதாள மலர்களின்மேல் அதன் உடல் உரசவும், அம்மலர்களிலிருந்து பொன்னிறத் தாதுக்கள் பன்றியின் உடல்மேல் உதிர்ந்தன. அந்நிலையில் அப்பன்றியைப் பார்ப்பதற்குப் பொன் துகள்கள் ஒட்டியிருக்கும் கட்டளைக் கல்லைப் போலத் தோன்றியதாகப் புலவர் பாடுகிறார்.



          இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பிடி மடிந்தன்ன கல்” என்பது யானைமலையினையும் “ஊறுநீர்ப் படார்” என்பது நீர்ச் சுனையினையும் குறிப்பதாகும். இச் சுனையினை யானைமலையின் கீழே இன்றும் காணலாம். யானைமலையின் கீழே இருக்கும் இச்சுனையானது ஏனைய குளம் குட்டைகளைப் போன்றதல்ல. இது நீர் ஊறும் பள்ளமாக விளங்கியதால் தான் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் வற்றிப் போகாமல் உள்ளது. இச் சுனையானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேற்காணும் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
….. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர ….. - அகம். 178

கலித்தொகைப் பாடல்:
          கலித்தொகையின் 108 ஆம் பாடலிலும் யானைமலை பற்றிய செய்திகள் உள்ளன. யானைமலையானது முல்லைநில மக்கள் ஆகிய ஆயர் / கோவலர் வாழ்ந்த பகுதியாக விளங்கியது என்று முன்னர் கண்டோம். கலித்தொகையின் 108 ஆவது பாடலும் முல்லைநில மக்களைப் பற்றியே கூறுகின்றது.



          பெண்யானை ஒன்று படுத்திருப்பதனைப் போலவே தோன்றும் யானைமலையைச் சுற்றிலும் இயற்கையானது செழிப்புடன் விளங்கியதைக் கலித்தொகைப் பாடலின் மூலம் அறிய முடிகிறது. மாடுகளை மேய்த்துக்கொண்டு கோலுடன் செல்லும் ஆயன் மகன் ஒருவன் வழியில் ஒரு ஆயர்குலப் பெண்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை விரும்புவதாகக் கூறி அவளது அழகைப் புகழ்கிறான். அவளோ அவனது காதலை ஏற்க மறுத்து வீடு செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டுக்கு விரைவதைத் தடுக்கும் ஆயனோ வெயில் அதிகமாக இருப்பதால் குளுமை மிக்க யானைமலைக்குச் செல்லலாம் என்றும் அங்கே சுனைநீரில் விளையாடியும் மலர்களைப் பறித்துச் சூடியும் சோலையில் தங்கிப் பொழுதைக் கழித்தும் மாலையில் வீடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறான். மிக நீளமான அப்பாடலிலிருந்து குறிப்பிட்ட சில வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

…….. வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு ….. – கலி. 108

          மேற்காணும் பாடல் வரிகளிலிருந்து யானைமலையைப் பற்றிய சுவையான சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வெட்டப்பட்ட நுங்கின் கண்களைப் போலத் தோன்றும் சிறிய பல நீர்ச்சுனைகள் யானைமலையின் மேலே இருந்தன என்றும் தளவம், முல்லை, காயா போன்ற பலவித மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் யானைமலையைச் சூழ இருந்தன என்றும் ஆயர்கள் தமது வீடுகளில் வெண்ணெய் கடையும் ஓசையானது எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டே இருந்தது என்றும் இப்பாடலின் வரிகள் மூலம் தெரிய வருகிறது. யானைமலையின் மேல் இருந்த சுனைகளையே பின்னாளில் வந்த சமணர்கள் தமக்கான படுக்கைகளாகச் செதுக்கி மாற்றியிருக்கக் கூடும்.

நரசிம்மர் குடைவரை:
          மேற்காணும் கலித்தொகைப் பாடலிலிருந்து அறியப் பெறுவதும் சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் நிலைபெற்று மக்களால் வணங்கப்பட்டு வருவதுமாகிய நரசிம்மர் குடைவரை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்த நரசிம்மர் குடைவரையானது யானைமலையில் உள்ள கல்லின்மேல் செதுக்கப்பட்ட திருமால் வடிவமாகும்.



          முல்லைநில மக்களின் தெய்வமாகிய திருமாலின் வடிவத்தைச் சங்க காலத்திலேயே யானைமலையில் செதுக்கி வைத்து வழிபட்ட செய்தியை மேற்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவது வியப்பூட்டுவதாக உள்ளது. அச் செய்தியினைக் கூறும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் …. கலி.108

          தன்னை நம்பாத ஆயர்குலப் பெண்ணிடம் நம்பிக்கையை உண்டாக்கி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, திருமாலின் அடியினைத் தனது தலையால் தொட்டு ஆயன் மகன் சூள் உரைப்பதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் “ மலையொடு மார்பு அமைந்த செல்வன் “ என்பது “ மலையுடன் தனது மார்பு / உடல் அமையப்பெற்ற செல்வன் “ என்ற பொருளைத் தருவதாகும். அனைத்துச் செல்வங்களையும் உடையவன் / தருபவன் என்ற பொருளில் கடவுளரைச் செல்வன் என்ற பெயரால் பொதுவாகக் குறிப்பிடுவது சங்ககால வழக்கம் ஆகும். சான்றாக, சிவபெருமானை ஆலமர்செல்வன் என்று சங்க இலக்கியம் சுட்டுகிறது. மேற்காணும் பாடலில், ஆயன் தனது தலையினால் செல்வனின் திருவடிகளைத் தொட்டு வணங்கிச் சூள் உரைப்பதாகக் கூறுவதால் அச்செல்வன் வேறு யாருமல்ல திருமால் தான் என்பது உறுதியாகிறது.

முடிவுரை:
          இதுவரை மேலே கண்ட பல சான்றுகளிலிருந்து சங்க காலத்திலேயே யானைமலை விரிவாகப் பேசப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். யானைமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கரந்தைப் போர்கள் நடந்திருக்கும் என்பதால் போரில் மரணம் அடைந்தோரின் உடல்கள் அப்பகுதியில் தான் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். யானைமலையைச் சுற்றிலும் அகழ்வாய்வு செய்வதன் மூலம் புதைந்துபோன அந்த நடுகல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சங்ககாலம் பற்றியும் தமிழரது தொன்மை பற்றியும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் பல தொல்பொருள் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு இப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளானது இக் கட்டுரையின் மூலம் தமிழக அரசுக்குப் பணிவுடன் முன்வைக்கப் படுகிறது.  




தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/





Sunday, August 4, 2019

தமிழ் மொழி போதுமே தா



 ——    திருத்தம் பொன்.சரவணன்



இமிழ்திரைக் கடல்சூழ் உலகம் முழுவதும் 
இமையெனக் காத்திடும் உமையொரு பாக
அமிழ்தெனக் களிப்பினும் அகமகிழ் வில்லை
தமிழ்மொழி போதுமே தா.


தொடர்பு:  திருத்தம் பொன்.சரவணன் (vaendhan@gmail.com)





---

Sunday, February 28, 2016

குறுந்தொகையில் புதுக்கவிதை படைக்கலாம்

 --திருத்தம் பொன்.சரவணன்.


இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே
-- குறுந்தொகை 123


நீ வரல, அவிங்கெ வந்துட்டாய்ங்கெ

நடுராத்திரி இருட்டு மாதிரி ஒரு நெழலு
நெலாவே காயறமாதிரி வெள்ள மணலு
புன்னமரச் சோலையில பூத்திருக்கு உன்ரோசா
அண்ணனுங்க வாராய்ங்க படகுல வெரசா
இன்னமும் நீஏன் வரல என்ராசா?




பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122


எப்போது விடியும்?

வெள்ளக்கொக்கு முதுகு மாதிரி ஆம்பலு
வாடுறத பாக்கையிலே நோவலு
பொழுது போயி வந்துடுச்சே சாந்தரம்
அதுவும் போயி விடிவதெப்போ சீக்கிரம்?




யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே  
-- குறுந்தொகை 40


செங்காட்டு மழத்தண்ணி

எங்கம்மாவுக்கு ஒங்கம்மா என்ன சொந்தம்னு தெரியல
எங்கப்பாவுக்கும் ஒங்கப்பாவுக்கும் என்ன பந்தம்னும் புரியல
நீ யாரோ இங்க நான் யாரோ அதுவும் தெரியல ஆனா
செங்காட்டுல பேஞ்ச மழத்தண்ணி மாதிரி சேந்து
ஒண்ணா கலந்துருச்சி நம்ம மனசு இப்பலேர்ந்து.




யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே   
-- குறுந்தொகை 54


உசுரு மிச்சமிருக்கா?


கட்ட மட்டுந்தான் இங்கிருக்கு என்ராசா தோட்டத்துல
கவட்டச் சத்தங்கேட்ட காட்டுயானை பயத்துல
கைவிட்ட மூங்கிமரம் நிமிந்தது சுருக்கா
சுண்டிவிட்ட மீன் தூண்டில் கணக்கா
கொண்டுபோனியே என்உசுர மிச்சந்தான் இருக்கா?




பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து           
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே 
-- குறுந்தொகை 57


உடம்பு ரெண்டு உசுரு ஒண்ணு


உடம்பு ரெண்டா உசுரு ஒண்ணா இருந்ததே
கடம வந்து நம்மள வேறாப் பிரிக்குதே
நீந்துறச்சே பூவொண்ணு நடுவுல வந்தாலும்
தாந்துணையக் காணாமே அன்றிலு தவிக்குமாம்
உன்ன விட ஒண்ணும் எனக்கில்ல பெருசாவே
என்ன நீ பிரிஞ்சா உசிரில்ல ராசாவே !




இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
-- குறுந்தொகை 58


என் உசிரும் போயிருமே


கரும்பாற மேலத்தான் கண்கூசுற வெயில்லதான்
காயவெச்ச வெண்ணெக் கருவாட்டுத் துண்டத்தான்
கையில்லா ஊமையன் காப்பாத்த முடியுமாலே?
என்னக் காப்பாத்த ஏங்குறஎன் நண்பர்களே
கருவாட்டுத் துண்டெல்லாம் காக்கா தின்னுருமே
காதல் நோயாலே என்உசிரும் போயிருமே !!!




கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே
-- குறுந்தொகை 103


ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்

ஆத்துத் தண்ணியில ஓடுகிற மீனத்தான்
சேத்து மண்ணுமேல நின்னுக்கிட்டு புடிக்கத்தான்
முருக்கம் பூவாட்டம் முதுகுள்ள நாரப்புள்ள
பொறுத்துக் கெடக்கையிலே பேஞ்சதடி சாரமழ
பாவம் அந்நார நடுங்குனதப் போலஎன்
ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்!!!




புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே
-- குறுந்தொகை 105


கண்ணீர் பெருகுதடி

தோட்டக் காவலுக்கு இருந்துவந்த சாமிக்கி
தெனமு படச்சிவந்த தெனயத்தான் வெளாட்டுக்கி
தின்ன மயிலொண்ணு சாமியாடி போலத்தான்
முன்னும் பின்னுமா ஆடுனதே நடுங்கித்தான்
இன்னும் இருக்குதடி அந்நெனப்பு போகலியே
கண்ணீர் பெருகுதடி காதலனக் காணலியே. !!!




குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே
-- குறுந்தொகை 107


இது என் சாபம் !

செங்காந்தள் பூப்போல கொண்டையுள்ள சேவலே
கொக்கரக்கோ என்றுநீ செய்துவிட்டாய் கூவலே
என்காதல் கணவனுடன் நானிங்கு மகிழ்ந்திருக்க
இன்பம்தான் போனதிங்கே விடிந்ததென்று நீயுரைக்க
எலியைப் பிடித்துண்ணும் பூனையின் கைகளிலே
வலுவாய் அகப்பட்டுத் துன்புறவே இரவினிலே
ஒழிவாய் இரையாகி இது என் சாபம் !




குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
-- குறுந்தொகை 127


இங்கிருந்து கெளம்புநீ

நாரஒண்ணு கெண்டமீனக் கொத்தித்தின்னப் பாத்துச்சாம்
நீருக்குள்ள கெண்டமீனு முழுகிஓடிப் போய்டிச்சாம்
போனமீனு தலையதூக்கி மேலஎட்டிப் பாத்துச்சாம்
பாத்தமீனு பக்கத்துல இருந்தவொரு தாமர
நாரமூக்கு போலிருக்க பயந்ததாம் உள்ளார
நாரபோல ஒம்பாணன் கூறுகெட்ட புளுகுணி
வேறபாணன் வேண்டாமய்யா இங்கிருந்து கெளம்புநீ.




காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே
-- குறுந்தொகை 136


கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!

காதல் ஒருநோய் என்பார் சிலர்
காதல் ஒருபேய் என்பாரு முளர்
உண்மையான காதல் இவ்விரண்டு மன்று
மென்மையான காதல் கூடிக்குறைவ தன்று
மதம்பிடித்த யானை மரத்திலையைத் தின்று
மகிழ்ந்தருகே தங்கும் காதலதைப் போன்று
கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!




அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடுஒல்லாவே. 
-- குறுந்தொகை 5


காதலொரு நோவே தான் !!!

புன்னமரக் கெளமேல ஒறங்குதடி குறுநார
மன்னவனக் காணாமே கலங்குதடி உள்ளார
கடலுதண்ணி தெறிக்குதடி புன்னமர இலமேல
கண்ணீரு வழியுதடி அந்தமர இலபோல
ராவெல்லாம் முழிச்சிருக்கேன் ராசாவக் காணத்தான்
சும்மா சொல்லலடி காதலொரு நோவேதான் !!!




நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே 
-- குறுந்தொகை 202


நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில

நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில
நெருஞ்சிப் பூவெல்லாம் அழகாத் தெரிஞ்சாலும்
நெருங்கிப் பறிக்கயிலே முள்ளு குத்திடுமாம்
நெருஞ்சிப் பூவாட்டம் எனக்கு இனிச்சவரே
நெருஞ்சி முள்ளாட்டம் நோவும் கொடுத்தாரே
நெஞ்சு நோவுதடி நெனக்காமப் போனாரே !!!




யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே
-- குறுந்தொகை 152


குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!

அடகாக்க முடியாத முட்டையப் போலத்தான்
அவிஞ்சே போயிடுமோ என்னோட காதலுந்தான்
ஆத்தா மொகம்பாத்தே வளருமடி ஆமக்குஞ்சு
அத்தான் மொகம்பாக்க ஏங்குதடி என்நெஞ்சு
குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!




காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே 
-- குறுந்தொகை 204


காதலுக்கு பேதம் கிடையாது !!!

காதலொரு நோயென்பார் பேயென்பார் அறியார்
காதலொரு விருந்தாகக் களிப்பாரே பெரியார்
கரிந்த மேட்டினிலே முளைத்த புதுப்புல்லை
கிழட்டுப் பசுநக்கித் தின்பதில் வியப்பில்லை
காதல் எப்பொழுதும் புதுப்புல் போலத்தான்
பேதம் அதற்கில்லை இடத்திலும் வயதிலுந்தான் !!!




செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
-- குறுந்தொகை 207


ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!

சொல்லிட்டுப் போனாக்க பிரிஞ்சிவர முடியாதுன்னு
சொல்லாமப் போனாரே என்ஆச ராசாக்கண்ணு
ஓம மரத்துமேல ஒத்தப் பருந்தோட
ஓச வழித்தொணயா ஒதுங்கி நடக்கையில
காலு சுட்டுடுச்சாம் காஞ்ச பூமியில
காலு சுட்டதுல கொப்புளிச்சுப் போனதால
காட்டு வழியெல்லாம் காலுவெக்க மாட்டாம
தாவிப் போனாராம் தங்கமான என்ராசா
ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!