—— அருள் முனைவர் அமுதன் அடிகள்
1547ஆம் ஆண்டு தென்பாண்டி நாடு வந்தடைந்த அண்டிறீக்கிப் பாதிரியாருக்குத் (Fr. Henrique Henriques) தமிழ் மொழி அத்துணை எளிதாக இருக்கவில்லை. மொழி பெயர்ப்பாளரின் துணைகொண்டு அவர் சமயப் பணியாற்ற வேண்டியதாயிற்று. பின் புனித பிரான்சிஸ் சேவியரின் ஆணைக்கிணங்க 1548ஆம் ஆண்டில் தமிழ் கற்பதில் அவர் ஈடுபட்டார். ஐந்து திங்களுக்குள் தமிழ் பேச அவரால் முடிந்தது. ஆயினும் தமிழ் ஒலிப்பு முறை சரியாகக் கைவரப்பெறவில்லை. அடுத்த ஆண்டின் நடுவில் மொழிபெயர்ப்பாளரின் துணையின்றித் தமிழ் பேச அவரால் இயன்றது. 1575ஆம் ஆண்டில் சமயப் பொறுப்பினின்று விடுவிக்கப் பெற்று, தமிழில் கிறித்தவ நூல்கள் இயற்றும் கடமையை அவர் மேற்கொண்டார்.
தமிழ் இலக்கணம் இயற்றும் முயற்சியில் அண்டிறீக்கி 1548 ஆம் ஆண்டிலேயே ஈடுபட்டதாக (விக்கி 1948) அறிகிறோம். புதிய சமயத் தொண்டர்களுக்குப் பயன்படுவதற்காகவே அவர் இந்நூலை இயற்றினார். 1552ஆம் ஆண்டில் இலக்கண நூலை இயற்றி முடித்துவிட்டதாகக் கூறும் அவர், 1565ஆம் ஆண்டில் அதைச் செப்பம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார்.
தம் இலக்கண நூலை அண்டிறீக்கி முழுமையாக்கி நிறைவு செய்தது எப்போது என நம்மால் அறிய இயலவில்லை. அண்டிறீக்கி பாதிரியார் இயற்றிய இலக்கண நூலின் தொடக்ககாலப் படியே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக அண்மையில் இதனை வெளியிட்ட பதிப்பாசிரியர் கூறுகின்றார்.
தமது இலக்கணத்தைக் கொண்டு தமிழைக் கற்றல் எளிது என்பது அண்டிறீக்கியின் கருத்து. இலத்தீன் மொழி இலக்கணத்தின் அடிப்படையிலேயே தம் தமிழ் இலக்கணத்தை இயற்றியிருப்பதாகக் கூறும் அவர், இலத்தீன் மொழியறியாதோர், சுவாம் தெ பாரோஸ் இயற்றிய போர்த்துக்கேய இலக்கணத்தைப் படித்துக் கொள்ளலாம் என எழுதுகின்றார்.
எழுத்து முறை:
நூலாசிரியர் தம் காலத்தில் தமிழ் மொழி எழுதப்பெற்ற முறையையே தம் நூலிலும் கையாள்கின்றார். எகர, ஏகார, ஒகர, ஓகார உயிர் மெய் எழுத்துக்களில் கொம்பு வேறுபாடு இல்லை . ஊகாரம் உகரத்தை அடுத்து ளகரம் வருவதாகவே (ஊ) எழுதப்படுகின்றது. ககர வகையில் உயிர்மெய்யெழுத்துக்களை எழுதும் ஆசிரியர் கானா, காவன்னா, கீனா, கீயன்னா எனப் பேச்சுத் தமிழ் முறையைப் பயன்படுத்தி எழுதுவதை நாம் காண்கிறோம். மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றி எழுதப்பட்டுள்ளன.
நூலின் பிரிவுகள்:
நூலின் முதற்பகுதி பெயர்ச் சொற்களைப் பற்றியது. ஏறக்குறைய 30 பக்கங்களைக் கொண்டது. தமிழில் வேற்றுமை உருபுகள் உண்டேயன்றி, பெயர் ஈற்றின் அடிப்படையில் சொற்களை வகைப்படுத்துதல் இல்லை. ஆனால் இலத்தீன் மொழியில் ஈற்றின் அடிப்படையில் சொற்களை வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட முறையில் வேற்றுமை உருபுகளை ஏற்கும் நிலை உண்டு. இத்தகைய இலத்தீன் இலக்கண முறையை ஆசிரியர் பயன்படுத்தித் தமிழ்ச் சொற்களை ஐந்து பெயர் விகற்பங்களாகப் பிரித்துக் கொண்டு, அவை ஒவ்வொன்றும் வேற்றுமை ஏற்பது எவ்வாறு என விளக்குகின்றார்.
தமிழில் வினைச் சொற்களை ஈற்றின் அடிப்படையில் தொகுக்கும் மரபு இல்லை. ஆனால் இலத்தீன் மொழியில் அம்மரபு உண்டு. இலத்தீன் மரபினைப் பயன்படுத்தி ஆசிரியர் தமிழிலும் ஒன்பது வினை விகற்பங்களைத் தொகுக்கின்றார். ஒவ்வொரு விகற்பமும் காலத்திற்கு ஏற்றவாறு ஈறுகளை எவ்வாறு ஏற்கின்றது என்பதை அவர் விளக்குகின்றார். இப்பகுதி நூறு பக்கங்களுக்கு மேற்பட்டதாக அமைகிறது.
பெயர் விகற்பங்கள் (Declensions of Nouns)
முதலாம் பெயர் விகற்பம்:
இது ஆண்பால் ஒருமையில் அன் விகுதியும், பன்மையில் அர் விகுதியும் கொண்டது. பெண்பால் ஒருமையில் இ விகுதியையும், பன்மையில் யர், கள் விகுதிகளையும் கொண்டது. (எ.கா. தோட்டியன் - தோட்டியர், தோட்டிச்சி - தோட்டிச்சியர், தோட்டிச்சிகள்).
இவ்விகற்பம் சாதிப் பெயர்களையும் (பிராமணன் - பிராமணத்தி), பணிப்பெயர்களையும் (கொல்லன் - கொல்லத்தி), பிற பெயர்களையும் (குருடன் - குருடி, மனிதன் - மனிச்சி) அதாவது உயர்திணைப் பெயர்களையே கொண்டது.
தமிழில் காணும் வேற்றுமை வரிசைகளை ஒதுக்கிவிட்டு ஆசிரியர் இலத்தீன் வரிசையைப் பின்பற்றி முதலாம், ஆறாம், நான்காம், இரண்டாம், எட்டாம் வேறுமைகளை வரிசைப்படுத்துகின்றார். (எ.கா. தோட்டியன், தோட்டியன் உடைய, தோட்டியனுக்கு, தோட்டியனை, தோட்டியா).
உடைமைப் பொருள் சுட்டுவதற்கு ஒருமையும் பன்மையும் எப்போதுமே 'உடைய' உருபு ஏற்கும் என்கிறார்.
இரண்டாம் பெயர் விகற்பம்:
இது ஒருமையில் இ, ஐ விகுதிகளையும், பன்மையில் யள், கள் விகுதிகளையும் கொண்டது. (எ.கா. தொப்பி - தொப்பியள், தொப்பிகள், தலை, தலைகள், தலையள்) இது முதல் வகை.
இரண்டாம் வகை ல், ன், ர் விகுதிகளை ஒருமையிலும், கள் விகுதியைப் பன்மையிலும் கொண்டது. (எ.கா. கால் - கால்கள், பீங்கான் - பீங்கான்கள், ஊர் - ஊர்கள்).
இவ்விகற்பம் அஃறிணைப் பெயர்களையே கொண்டதாக அமைந்துள்ளது.
மூன்றாம் பெயர் விகற்பம்:
அஃறிணைப் பெயர்களைக் கொண்ட இது ஒருமையில் ம் விகுதியையும், பன்மையில் கள் விகுதியையும் கொண்டது. இச்சொற்கள் வேற்றுமை ஏற்கும் போது மகர மெய்க்குப் பதிலாகத் தகர மெய் இடம் பெறும் என எழுதும் ஆசிரியர் அத்துச் சாரியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு. (எ.கா. பண்டம், பண்டமுடைய, பண்டத்துக்கு, பண்டத்தை, பண்டத்திலே, பண்டமே).
நான்காம் பெயர் விகற்பம்:
பெரும்பாலும் உயர்திணைப் பெயர்களைக் கொண்ட இவ்விகற்பம் ஒருமையில் ஆ விகுதியும், பன்மையில் க்கள் விகுதியும் கொண்டது. (எ.கா. பிதா- பிதாக்கள்).
ஐந்தாம் பெயர் விகற்பம்:
பெரும்பாலும் அஃறிணைப் பெயர்களைக் கொண்ட இது ஒருமையில் உ விகுதியும், பன்மையில் கள், க்கள் விகுதிகளையும் கொண்டது. இவ்விகற்பத்தில் மூன்று வகை உண்டு (எ.கா. கம்பு - கம்புக்கு, உரு- உருவுக்கு, வீடு - வீட்டுக்கு).
ஐந்தாம் விகற்பத்தின் மூன்றாம் வகை டு, று என்னும் எழுத்துக்களை ஈற்றில் கொண்டிருப்பதால் ஒருமையில் உருபேற்குமுன் ஒற்று இரட்டித்து வரும் எனக்கூறும் ஆசிரியர், பன்மையில் ஒற்று இரட்டிக்காமல் கள் விகுதியேற்று (கம்புகள் போலவே) உருபேற்கும் என்கிறார் (எ.கா. வீடு - வீட்டுக்கு, சோறு - சோற்றுக்கு, வீடுகள் - வீடுகளுக்கு, சோறுகள் - சோறுகளுக்கு).
ஒருமையில் ஒற்று இரட்டிக்காமல் செவிக்கு நன்றாக ஒலிக்காது என்பதை அவர் காரணமாகக் குறிக்கின்றார்.
பெயர்ச்சொல் பற்றிய பிற குறிப்புகள்:
கிளவனார், துப்பாசியார், தம்பிரானார், கிளவியார், பாதிரியார் போன்ற சில உயர்திணைச் சொற்கள் மதிப்புப் பன்மையாக ஆர் விகுதி பெற்று வருவதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
உயர்திணை, அஃறிணை ஆகிய இலக்கணச் சொற்களை அறியாத ஆசிரியர் பணம், தலை, தொப்பி போன்ற (அஃறிணை) சொற்கள் பன்மையில் கள் விகுதியின்றி ஒருமை வடிவத்தில் (பால்பகா அஃறிணை) வருமென்பதைச்சுட்டுகிறார்.
இரண்டாம் வேற்றுமைத் தொகை பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (எ.கா. பணம் கொண்டு வா).
சுத்தம் என்பது போன்ற பண்புப் பெயர் சுத்தமான எனப் பண்பு அடைச் சொல்லாகி (adjective) வன், வள், து விகுதி பெற்றுச் சுத்தமானவன், சுத்தமானவள், சுத்தமானது எனப் பால் விகுதி பெற்று வருவதையும் ஆசிரியர் குறிக்கின்றார். நான், நீ, அவன் போன்ற மூவிடப் பெயர்கள் வேற்றுமை உருபு பெறுதலையும் ஆசிரியர் விளக்குகின்றார்.
வினை விகற்பங்கள்:
ஐந்து பெயர் விகற்பங்களை விளக்கிய ஆசிரியர் வினை விகற்பங்களை (conjugations) ஒன்பது என வகுக்கின்றார். இதுவும் தமிழுக்குப் புறம்பானது எனினும் இலத்தீன் இலக்கண அடிப்படையில் ஆசிரியர் இவ்வாறு வகுத்துள்ளார்.
முதல் மூன்று வினை விகற்பங்கள் க்கிறேன் என்னும் ஈற்றினையும், அடுத்த மூன்று விகற்பங்கள் றேன் என்னும் ஈற்றினையும், எஞ்சிய மூன்றும் கிறேன் என்னும் ஈற்றினையும் கொண்டுள்ளதாக ஆசிரியர் விளக்குகின்றார். இவை, தன்மை ஒருமை நிகழ்கால ஈறுகள் என்பது நினைவு கூரத்தக்கன. கிறு, கின்று, ஆநின்று என்பவையே நிகழ்கால இடைநிலைகள் என்னும் இலக்கணத்தை அறிந்துள்ள நமக்கு இது ஒவ்வாததாகத் தோன்றலாம். ஆனால் தமிழ் இலக்கணத்தை அறவே அறியாத ஆசிரியர், தாமாகவே பயின்ற பேச்சுத் தமிழை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய இலக்கணத்தைப் படைக்க எடுத்த முயற்சி இது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
முதல் வினைவிகற்பம் பெரும்பான்மை இக்கிறேன் என்னும் விகுதியையும், சிறுபான்மை ஐக்கிறேன், உக்கிறேன் என்னும் விகுதிகளையும் கொண்டது. இறந்தகால ஈறு சேன், எதிர்கால ஈறு பேன், செய என்னும் எச்ச வடிவம் (infinitive) க எனவும் அமையும்.
மூவிடங்களுக்கும் நிகழ்கால வினை கீழ்க்கண்டவாறு அமையும்.
விச்சுவதிக்கிறேன் - விச்சுவதிக்கிறோம்
விச்சுவதிக்கிறாய் - விச்சுவதிக்கிறீர், விச்சுவதிக்கிறீயல்
விச்சுவதிக்கிறான் - விச்சுவதிக்கிறார்
விச்சுவதிக்கிறாள் - விச்சுவதிக்கிறார்கள்
முதல் விகற்ப நிகழ்காலத்தில் விச்சுவதிக்கிறேனே, விச்சுவதிக்கிறானே போன்ற வடிவங்கள் பற்றியும் ஆசிரியர் கூறுகின்றார். "பகவதியை விச்சுவதிக்கிறானே அவனை இங்கே கூட்டிக் கொண்டு வா" என அவர் தரும் எடுத்துக்காட்டின் உதவியால், வினையாலணையும் பெயரை இலத்தீன் முறையில் அவர் விளக்க எடுத்துக் கொண்ட முயற்சியே இது என நாம் தெளியலாம்.
விச்சுவதிக்கிறேனாகில், விச்சுவதிக்கிறானாகில் போன்ற சார்பு நிலை வினை வடிவத்தையும் (conditional verb) ஆசிரியர் விளக்குகிறார்.
விச்சுவதிக்கிற என்னும் பெயரெச்சத்துடன் வன், வள் ஈறு சேர்ந்தால் விச்சுவதிக்கிறவன், விச்சுவதிக்கிறவள், விச்சுவதிக்கிறது என்னும் வடிவம் (participle) கிடைக்கும் என்பது ஆசிரியரின் கருத்து.
முதல் விகற்பம் விச்சுவதித்தேன், விச்சுவதிச்சேன் எனச் சேன் ஈறு பெற்று இறந்த காலமாகும் என்பார் ஆசிரியர். விச்சுவதித்தேன், விச்சுவதித்தாய், விச்சுவதித்தீயல், விச்சுவதித்தான், விச்சுவதித்தார்கள் என மூவிட ஒருமை, பன்மை வடிவங்களைத் தொகுக்கின்றார் அவர்.
விச்சுவதித்தேனே, விச்சுவதித்தேனாகில், விச்சுவதித்தால், விச்சுவதித்தவன், விச்சுவதித்து இருக்கச் சொல, விச்சுவதித்துக் கொண்டு (கொண்டே), விச்சுவதித்ததினாலே, விச்சுவதித்த பொழுது (போது), விச்சுவதித்த நேரம், விச்சுவதித்த உடனே முதலிய பல வகையான இறந்த கால வடிவங்களை ஆசிரியர் குறிக்கின்றார்.
விச்சுவதிப்பேன், விச்சுவதிப்பாய், விச்சுவதிப்பான், விச்சுவதிப்போம், விச்சுவதிப்பியல், விச்சுவதிப்பார்கள் என எதிர்கால வடிவங்களை எடுத்துரைக்கும் ஆசிரியர் விச்சுவதிப்பானாகில், விச்சுவதிப்பது (தொழிற்பெயர்) போன்ற வடிவங்களையும் பற்றி எழுதுகின்றார்.
செய்கிறேன் - செய்விக்கிறேன், விழுகிறேன் - விழுவிக்கிறேன் போன்ற தன்வினை, பிறவினை வடிவங்களைப் பற்றியும் ஆசிரியர் கூறுகின்றார்.
அவ்வாறே விச்சுவதி - விச்சுவதியாதே, விச்சுவதியுங்கோ - விச்சுவதியாதேயுங்கோ போன்ற ஏவல் வியங்கோள் வடிவங்களையும் பற்றி இந்நூல் சுருங்கக் கூறுகிறது. விச்சுவதியேன் போன்ற எதிர்கால எதிர்மறை வினையையும் ஆசிரியர் குறிக்கின்றார். விச்சுவதியாவிட்டால், விச்சுவதியாமல், விச்சுவதியாதிருக்கில் (லும்), விச்சுவதியாதிருந்தால் (லும்), போன்ற வினை வடிவங்களையும் ஆசிரியர் குறிக்கின்றார். நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், எதிர்கால எதிர் மறை, ஏவல் - வியங்கோள், செய எனும் வினையெச்சம் போன்ற சிலவற்றைப் போர்த்துக்கேய மொழியில் பெயர் குறித்துக் கூறும் ஆசிரியர் ஏனைய வடிவங்களைப் பெயரின்றியே குறிக்கின்றார்.
வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினை வடிவம் தமிழில் செய என்னும் எச்ச வடிவாக அமையும். இதை ஐரோப்பிய மொழிகளில் Infinitive என அழைப்பர். இவ்வடிவம் பற்றியும் ஆசிரியர் எழுதுகின்றார்.
இரண்டாம் வினைவிகற்பம் அக்கிறேன் (நிகழ்காலம்), அந்தேன் (இறந்தகாலம்), அப்பேன் (எதிர்காலம்) என்னும் ஈறுகளைக் கொண்டு முடிகிறது. பிளக்கிறேன், பிளந்தேன், பிளப்பேன், பிளக்கிறவாகு, பிளக்கிறாப்போலே, பிளக்கிறது, பிளக்கிறபொழுது (போது), பிளந்தானாகில், பிளந்தானில்லையாகில், பிளந்தது கொண்டு, பிளந்தவுடனே, பிளந்ததினாலே, பிளப்பிக்கிறேன், பிள, பிளவுங்கோ , பிளவேன் எனப் பல வினை வடிவங்களை ஆசிரியர் விளக்குகின்றார்.
மூன்றாம் வினை விகற்பம் ட்கிறேன், ர்க்கிறேன், ற்கிறேன் (நிகழ்காலம்), ட்டேன், ற்றேன், ன்றேன் (இறந்தகாலம்), பேன் (எதிர்காலம்) என்னும் ஈறுகளைக் கொண்டு முடிகிறது. கேட்கிறேன், விற்கிறேன், நிற்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் சுட்டுகிறார்.
நான்காம் வினைவிகற்பம் றேன், னேன், வேன் என்னும் (எ.கா. போறேன், போனேன், போவேன்) ஈறுகளை உடையது. எண்ணிறேன், எறிறேன், அறிறேன், களத்திறேன், பாடிறேன், உதவிறேன், நீக்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் தருகிறார்.
பருமாறுகிறேன், மன்றாடுகிறேன் போன்ற சில வினைச் சொற்கள் கிறேன் என்னும் ஈற்றைக் கொண்டிருக்கும். இவை பருமாறினேன், மன்றாடினேன் என இறந்தகால வடிவமும், பருமாறுவேன், மன்றாடுவேன் என எதிர்கால வடிவமும் ஏற்கும்.
ஐந்தாம் வினைவிகற்பம் ளிறேன், உறேன் என்னும் இருவகை ஈறுகளைக் கொண்டது.
முதல்வகை கொள்ளிறேன் (கொள்கிறேன்) போன்ற சொற்களைக் கொண்டது. இது இறந்த காலத்தில் கொண்டேன் எனவும், எதிர் காலத்தில் கொள்ளுவேன் எனவும் வடிவம் பெறும். ஆனால் சொல்லிறேன் (சொல்கிறேன்) போன்ற சொற்கள் சொன்னேன், சொல்லுவேன் என வடிவம் பெறும்.
இரண்டாம் வகை புதுறேன் (புகுகிறேன்) போன்ற சொற்களைக் கொண்டது. இது இறந்த காலத்தில் பூந்தேன் எனவும், எதிர்காலத்தில் புதுவேன் எனவும் வடிவம் கொள்ளும் என்பர் ஆசிரியர். தாரேன் (தருகிறேன்), வாறேன் (வருகிறேன்) போன்ற வினைகளையும் ஆசிரியர் இவ்விகற்பத்தில் அடக்குகின்றார்.
ஆறாம் விகற்பன் ய்றேன், ய்தேன், உவேன் என்னும் ஈறுகளைக் கொண்டது. (எ.கா. எய்றேன், எய்தேன், எய்யுவேன்).
ஏழாம் வினைவிகற்பம் டுகிறேன், டுறேன் என்னும் நிகழ்கால ஈறுகளையும், ட்டேன் என்னும் இறந்தகால ஈற்றையும், டுவேன் என்னும் எதிர்கால ஈற்றையும் கொண்டது. இடுகிறேன், போடுகிறேன் போன்ற சொற்கள் இட்டேன், போட்டேன் (இறந்த காலம்), இடுவேன், போடுவேன் (எதிர்காலம்) என மாறிவரும்.
எட்டாம் வினைவிகற்பம் உகிறேன், உதேன், உவேன் என்னும் கால ஈறுகளைக் கொண்டது (எ.கா. அழுகிறேன், அழுதேன், அழுவேன்).
ஒன்பதாம் வினைவிகற்பம் ன்கிறேன், ன்றேன் (அல்லது ண்டேன்) ன்பேன் என்னும் ஈறுகளை உடையது. உண்கிறேன், தின்கிறேன், என்கிறேன், களவாங்கிறேன் போன்ற எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் தருகின்றார்.
செயப்பாட்டுவினை எனத் தலைப்பிட்டு எழுதத் தொடங்கும் ஆசிரியர் செயப்பாட்டு வினை என முறையாக அழைக்கப்படத்தக்க வினை இம்மொழியில் இல்லை என எழுதிவிட்டு, ஆயினும் சில வினை விகற்பங்களில் ஏறக்குறைய செயப்பாட்டுப் பொருள் தரும் வினைகளைக் காணலாம் என்று தொடர்கிறார்.
ஆனால் செயப்பாட்டு வினை வடிவம் என ஆசிரியர் தருவது ஒன்றன்பால் வினையாக இருப்பதைக் காணலாம் (எ.கா. சட்டி உடைஞ்சிது, சட்டி உடைஞ்சி போச்சு, கதவு அடைச்சு கிடந்தது, சிலவிலியுது, மரம் பிளந்தது, நெல்லு விற்கிறது).
வாக்கிய அமைப்புப் பற்றி நூலின் இறுதிப் பகுதியில் ஆசிரியர் எழுதுகின்றார். வாக்கியத்தின் தொடக்கத்தில் எழுவாயும், இறுதியில் வினைச் சொல்லும் அமையும். வாக்கியத்தின் இடையில் நான்காம் வேற்றுமை முதலிலும் இரண்டாம் வேற்றுமை அதன் பின்னரும் வரும் (எ.கா. நீ சொவானிக்கு நாலு பணம் கொடு).
வினையெச்சம் வினைமுற்றுக்கு முன்னர் வரும் (எ.கா. நான் புன்னைக்காயலுக்கு சல்திக்கு போக இருக்கிறேன்).
பண்பு அடைச்சொல் பெயருக்கு முன் வரும் (எ.கா. நீ எனக்கு நல்ல பொத்தகம் தா).
எதிர்மறை உருபு வினைச்சொல்லை அடுத்து வரும் (எ.கா. நான் கோயிலுக்குப் போனேன் இல்லை).
ஆய்வுக் குறிப்புகள்
பேச்சுத் தமிழைக் கற்ற ஆசிரியர் தாம் கேட்டவாறே தமிழ்ச் சொற்களை எழுதக் காண்கிறோம் (எ.கா. வாறேன், தாறேன், வரச்சொல்ல, போடுறேன், திரிய்றேன், படியுங்கோ , படிச்ச, விச்சுவதிக்கிறீயல்).
எனினும் அவர் திருத்தமான தமிழை அறிந்தவர் என்பதையும் காண்கிறோம். விளக்கவும் செய்தேன், விச்சுவதிக்கிறேனாகில், பாடுகிறேன், படியேன், பெற்றேன், கொண்டேன் போன்ற திருத்தமான சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது.
நூலாசிரியர் தமிழை முறையாகப் படித்ததாகத் தெரியவில்லையெனினும் அவர் உயிர், மெய் எழுத்து வரிசையைச் சரியான முறையில் எழுதியிருப்பதைக் கண்டு நாம் வியக்கிறோம். ல, ள, ழ, ர, ற போன்ற எழுத்துக்களிடையே உள்ள ஒலி வேற்றுமையையும் அவர் அறிந்திருந்தார்.
காலம் காட்டும் இடைநிலை பற்றி அவர் அறிந்திருக்கவே இல்லை. ஆகவேதான் வினையீறுகளைக் கொண்டு அவர் வினைச் சொற்களைப் பிரிக்கின்றார்.
விச்சுவதிக்காவிட்டால், வந்தான் இல்லை, விச்சுவதிக்க இல்லை போன்ற எதிர்மறை வினை வடிவங்களை நூலாசிரியர் கூறினாலும், துணை வினையாக அன்றி வினைச் சொல்லின் அகத்தே அமைந்து எதிர்மறைப் பொருள்தரும் அறியேன், படியேன், விச்சுவதியேன் போன்ற எதிர்கால எதிர்மறை வினையினை ஆசிரியர் சிறப்பாக எடுத்தோதுகின்றார். Non என்னும் தனிச்சொல் எதிர்மறைப் பொருளைத்தரும் இலத்தீன் வழக்காற்றினின்று வேறுபட்ட தமிழ் எதிர்மறை ஆசிரியரின் கவனத்திற்கு உரியதாயிற்று என நாம் உணரலாம்.
இலத்தீன் மொழியைப் போலவே தமிழிலும் மூன்று காலங்கள் இருந்தாலும், இம்மூன்று காலங்களோடு தொடர்புடைய பிறவினை வடிவங்களையும் தொகுத்துக் காட்ட ஆசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சி வியப்புக்குரியது. ஏறக்குறைய 97 வினை வடிவங்களை அவர் தொகுத்துள்ளார். விச்சுவதிக்கிறேன், விச்சுவதிக்கிறேனாகில், விச்சுவதிக்கிற, விச்சுவதிக்கிறவாகு, விச்சுவதிக்கிறாப் போலே, விச்சுவதிக்கிறவன், விச்சுவதித்து இருக்கச் சொலே, விச்சுவதித்தாலும், விச்சுவதித்துக் கொண்டு, விச்சுவதித்த உடனே, விச்சுவதித்ததனாலே, விச்சுவதித்த நேரம், விச்சுவதித்ததுக்கு, விச்சுவதிப்பயே, விச்சுவதிப்பாயாம், விச்சுவதிப்பது, விச்சுவதி, விச்சுவதியேன், விச்சுவதியாதே, விச்சுவதியாமல், விச்சுவதிக்க, விச்சுவதியாத, விச்சுவதிக்காவிட்டால், விச்சுவதிக்கலாம், விச்சுவதிக்காம்காட்டி, விச்சுவதிக்கா முன்னே, விச்சுவதிக்கில் போன்ற வினை வடிவங்களை ஏதோ ஒரு வகையில் மூன்று காலங்களுக்குள்ளோ, செய என்னும் வாய்பாட்டு வினையுள்ளோ, எச்ச வினையுள்ளோ அடக்கிவிட அவர் பெரிதும் முயன்றுள்ளார்.
Bibliography:
Vermeer, Hans J., 1982. The first European Tamil Grammar, A Critical edition by --, English version by Angelika Morath, Julius Groos Verlag, Heidelberg.
Hein, Jeanne (†) and V. S. Rajam, 2013. The Earliest Missionary Grammar of Tamil. Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History and Analysis. Harvard Oriental Series (v. 76), Harvard University Press, Cambridge, Massachusetts and London, England.
Vermeer, Hans J., 1982. The first European Tamil Grammar, A Critical edition by --, English version by Angelika Morath, Julius Groos Verlag, Heidelberg.
Hein, Jeanne (†) and V. S. Rajam, 2013. The Earliest Missionary Grammar of Tamil. Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History and Analysis. Harvard Oriental Series (v. 76), Harvard University Press, Cambridge, Massachusetts and London, England.
தொடர்பு:
அருள் முனைவர் அமுதன் அடிகள் (amudhantls1943@gmail.com)
No comments:
Post a Comment