—— அருள் முனைவர் அமுதன் அடிகள்
ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்ததை நாம் அறிவோம். செல்லரித்த ஏடுகளிலிருந்து செந்தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றி, அவற்றை அச்சேற்றும் பணியில் முனைந்து உழைத்த தமிழ் அறிஞர்களைத் தமிழகம் இன்றும் நன்றியுடன் நினைத்துப் போற்றுகிறது. அதற்கு முன்னோடியாகப் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தமிழ் அச்சகம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்டு உதவிய சான்றோர்களையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப் போற்றுவது நமது கடமை.
இந்திய மொழிகளுள் முதன் முதல் அச்சேறியவை தமிழ் நூல்களே என்பதைத் தனிநாயக அடிகளாரும், கேசவனும் உறுதிப்பட நிறுவியுள்ளனர். அவ்வாறு அச்சேறிய முதல் நான்கு நூல்களும் கிறித்துவ சமயம் சார்ந்த நூல்கள்.
முதல் நான்கு நூல்கள்:
1. தம்பிரான் வணக்கம், 2. கிரீசித்தியானி வணக்கம், 3. கொம்பெசியோனாயரு, 4. அடியார் வரலாறு ஆகிய நான்கு நூல்களே பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழ் எழுத்தில் அச்சிடப்பெற்ற முதல் நூல்கள், இவற்றுள் கொம்பெசியோனாயரு தவிர்த்த பிற மூன்று நூல்களையும் பல்வேறு நூலகங்களில் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய பெருமை தனிநாயக அடிகளாருக்கு உரியது. அவற்றை ஆய்வு விளக்கங்களுடன் மறுபதிப்புச் செய்த பெருமை இராசமாணிக்கம் அடிகளாருக்கு உரியது. இந்நான்கு நூல்களையும் போர்த்துக்கேய மொழியிலிருந்து தமிழில் பெயர்த்தவர் அண்டிறீக்கிப் பாதிரியார் எனத் தம்மை அழைத்துக் கொண்ட Anrique Anriquez என்னும் யேசுசபைத் துறவி (1520–1600) ஆவார்.
முதல் ஐரோப்பியத் தமிழறிஞர்
போர்த்துக்கல் நாட்டில் விலா விசோசா என்னும் ஊரில் 1520-ஆம் ஆண்டில் பிறந்த அண்டிறீக்கி, 1546ஆம் ஆண்டில் யேசு குருவாக இந்தியா வந்து, பெரும்பாலும் தூத்துக்குடிப் பகுதியில் தங்கி மறைப்பணி ஆற்றியவர். தமிழை முயன்று பயின்று, தமிழில் இலக்கணம், அகரமுதலி, உரைநடை நூல்கள் இயற்றுமளவுக்குப் புலமை பெற்றார். பல்வேறு நூல்களை இயற்றியதாக அவரின் மடல்கள் தெரிவித்தாலும் மேற்குறித்த நான்கு நூல்களின் அச்சுப்படியும் அவரது இலக்கணத்தின் கையெழுத்துப் படியுமே நமக்குக் கிடைத்துள்ளன.
தமிழ் எழுத்துகள் அச்சில்
ஸ்பெயின் நாட்டு யேசுசபைத் துறவுச் சகோதரராகிய சுவாம் கொன்சால்வஸ் என்பவரே முதன் முதலாக 1577ஆம் ஆண்டில் கோவாவில் தமிழ் அச்சுகளை வடிவமைத்து வார்த்தவர். பின்னர் 1578இல் கொல்லத்தில் சுவாம் தெஃபாரியா என்னும் யேசுசபைத் துறவி மீண்டும் தமிழ் அச்சுகளை வார்த்துக் கொடுத்தார். கொல்லத்தில் வார்க்கப் பெற்ற அச்சுகளே நான்கு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேரோ லூயிஸ் என்னும் யேசுசபைத் துறவி இரு இடங்களுக்கும் சென்று அச்சுகளை உருவாக்குவதில் உதவியாக இருந்தார். இவ்வெழுத்து வடிவங்களைத் தம்பிரான் வணக்கம் நூலின் இறுதியில் காணலாம்.
1. தம்பிரான் வணக்கம்:
தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Malauar Tamul) என்ற 16 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரே ஒரு படிதான் இன்று கிடைக்கிறது. அது 1951 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நாட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்துக்காக வாங்கப்பட்டது.
20.10.1978 அன்று கொல்லத்தில் அச்சிடப்பட்டதாக நூலின் முகப்பில் மொழிபெயர்ப்பு ஆசிரியராக அண்டிறீக்கிப் பாதிரியார் பெயர் மட்டுமே தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூலின் இரண்டாம் பக்கத்தில் போர்த்துக்கேய மொழிக் குறிப்பில் அண்டிறீக்கியுடன் புனித பேதுரு மானுவேல் அடிகளும் இந்நூலை மொழிபெயர்த்தமை குறிக்கப்பட்டுள்ளது. மானுவேல் அடிகள் பற்றிய விவரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
சிலுவை அடையாளம் மந்திரம், விசுவாசப் பிரமாணம், பத்துக் கற்பனைகள், திருச்சபைக் கட்டளைகள், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், மரியே வாழ்க மந்திரம், ஒப்புரவு மந்திரம், விசுவாசக் கோட்பாடுகள், திருவருட்சாதனங்கள், தலையான பாவங்கள், தலையான புண்ணியங்கள், இரக்கச் செயல்கள், தேவ சம்பந்தமான புண்ணியங்கள், ஆன்மாவின் எதிரிகள், கடைசி முடிவுகள், எட்டுப் பேறுகள் ஆகியவை தம்பிரான் வணக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
முதல் பக்கத்தில் மூவொரு கடவுளைக் குருத்தோலை ஏந்திய புனிதர் கூட்டம் போற்றி வழிபடும் ஓவியம் அச்சாகியுள்ளது. அதன் மேல் பகுதியில் மலபார் தமிழ் மொழியில் கிறித்துவக் கோட்பாடு எனப் பொருள்படும் போர்துக்கேயச் சொற்களும் கீழ்ப்பகுதியில் 'கொமஞ்ஞிய தெ சேசூ வகையிலண்டிறீக்கி பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்' என்னும் தொடரும் அமைந்துள்ளன. நூலின் இரண்டாம் பக்கம் முதல் 15ஆம் பக்கம் வரையில் மேற்குறித்த மந்திரங்கள் அச்சிடப்பெற்றுள்ளன.
2. கிரீசித்தியானி வணக்கம்:
அண்டிறீக்கிப் பாதிரியாரின் இரண்டாவது படைப்பாகிய இந்நூல் 122 பக்கம் கொண்டது. 14.11.1579 அன்று கொச்சியில் அச்சிடப் பெற்றது. மேலட்டையின் மேல் பகுதியில் DOCTRINA CHRISTAM எனப் போர்த்துக்கேயத்திலும், கீழ்ப்பகுதியில் கிரீசித்தியானி வணக்கம் எனத் தமிழிலும் நூற்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூல நூலின் ஆசிரியர் மார்க்கொசு சொரிசி (Marcos Jorge) பாதிரியார் எனவும், நூல் அச்சிடப்பெற்ற இடம் நாள் பற்றிய விவரங்களும், மூன்றாம் பக்கத்தில் தமிழிலும் நான்காம் பக்கத்தில் போர்த்துக்கேயத்திலும் அச்சிடப்பெற்றுள்ளன. இந்நூலில் தமிழ் அல்லாத சொற்களைப் பயன்படுத்தும்போது அச்சொற்களின் முன்னும் பின்னும் T என்னும் குறி அச்சிடப்பட்டுள்ள குறிப்பும் தரப்பட்டுள்ளது.
5-6 பக்கங்களில் நூலின் முகவுரை தமிழில் அமைந்துள்ளது. இளமைப் பருவத்திலேயே மறையுண்மைகளைக் கற்பிப்பதன் தேவையையும் நன்மையையும் விளக்கும் இம்முகவுரை பல நூல்களை அச்சிடுவதற்காகத் தூத்துக்குடிப் பகுதிக் கத்தோலிக்கக் கிறித்துவர் தாராளமாக நிதியுதவி வழங்கினர் என்னும் செய்தியையும், இதனை மொழி பெயர்த்த அண்டிறீக்கி தமிழறிந்த சிலரிடம் நூலைக் காட்டித் திருத்தங்கள் பெற்ற செய்தியையும் நமக்குத் தருகிறது.
இன்று காணக் கிடைக்கும் ஒரே படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் போத்லெயன் நூலகத்தில் உள்ளது. 1979ஆம் ஆண்டு போத்லெயன் நூலகத்தில் கிரஹாம் ஷா என்னும் ஆய்வாளர் கொம்பெசியோனாயரு, கிரீசித்தியானி வணக்கம் ஆகிய இரு நூல்களும் ஒரே கட்டாகத் தைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆகவே இன்று கிடைத்துள்ள கிரீசித்தியானி வணக்கம் நூலின் ஒரே படி இதுவே.
உள்ளடக்கம்
12 அதிகாரங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ள இந்நூல் முதல் அதிகாரத்தில் கிரீசித்தியானி (கிறித்துவர்) என்பவர் யாரென விளக்கிய பின் இரண்டாம் அதிகாரத்திலிருந்து ஆறாம் அதிகாரம் வரை சிலுவை அடையாள மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், விசுவாச மந்திரம் போன்றவற்றுக்கு விளக்கம் அளிக்கின்றது. ஏழாம் அதிகாரம் விசுவாசத்தின் பிரிவுகள் பற்றியும் எட்டாம் ஒன்பதாம் அதிகாரங்கள் பத்துக் கற்பனைகள் திருச்சபைக் கட்டளைகள் பற்றியும், பத்தாம் பதினொன்றாம் அதிகாரங்கள் தலையான பாவங்கள் திருவருட்சாதனங்கள் பற்றியும் விரித்துரைக்கின்றன. பன்னிரண்டாம் அதிகாரத்தில் இரக்கச் செயல்பாடுகள், புண்ணியங்கள், எட்டுப்பேறுகள் பற்றி எடுத்துரைத்து ஒப்புரவு மந்திரத்தோடு நூல் நிறைவு பெறுகின்றது.
பதிப்பு முறை
நூலிலுள்ள எழுத்துக்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளன. ஒவ்வோர் அதிகாரத்தின் முதலெழுத்தும் பிற எழுத்துக்களை விடப் பன்மடங்கு பெரியதாகவும் கோலமிட்ட கட்டத்தினுள் இருக்குமாறும் அச்சிடப்பெற்றுள்ளது. நூலிலுள்ள மந்திரங்களைக் குழந்தைகள் மனப்பாடமாகக் கற்பதற்கு உதவியாக ஒவ்வொரு மந்திரமும் நிறுத்தக் குறியினால் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளது. ஆசிரியருக்குத் தேவையான விளக்கங்கள் கோலக் கரைக்குள் அமைந்துள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் விளக்கும் பொருள் எது எனத் தமிழிலும் போர்த்துக்கேயத்திலும் தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்தின் இறுதி வரியாக அடுத்த பக்கத்தின் இரு தொடக்க எழுத்துக்களும் அச்சிடப்பெற்றுள்ளன.
பிழை திருத்தப் பகுதியும் உள்ளடக்கப் பகுதியும் இந்நூலில் அமைந்துள்ளமை சிறப்பாகக் குறிப்பிடுதற்குரியது.
3. கொம்பெசியோனாயரு:
இந்நூல் நீண்ட காலம் அறியப்படாமலிருந்தது. தனிநாயக அடிகளாருக்கோ இராசமாணிக்கம் அடிகளாருக்கோ கூட இந்நூல் கிடைக்கவில்லை. 1979-இல் கிரஹாம் ஷா கண்டுபிடித்த பின்னரே இந்நூல்பற்றி நம்மால் அறிய முடிகிறது.
முதல் இரு நூல்களுக்கும் தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம் எனப் பெயரிட்ட அண்டிறீக்கிப் பாதிரியாரால் இந்நூலுக்குத் தக்க தமிழ்ப்பெயர் இட முடியவில்லை. போர்த்துக்கேயப் பெயரையே அவர் பயன் படுத்த வேண்டியதாயிற்று. அவ்வாறே வேறு பல கலைச் சொற்களுக்கும் தக்க தமிழ்ச் சொற்கள் அன்று கிடைக்கவில்லை.
கொம்பசியெனொயரு என்பதை ஒப்புரவு அருட்சாதன விளக்கம் எனத் தமிழில் வழங்கலாம். மேலட்டையின் மேற்பகுதியில் CONFESSIONARIO எனப் போர்த்துக்கேயத்திலும், கீழ்ப்பகுதியில் கொம்பெசியோனாயரு எனத் தமிழிலும் நூற்பெயர் அச்சிடப்பெற்றுள்ளது.
இது 31.05.1580 அன்று கொச்சியில் அச்சிடப்பெற்றது. 214 பக்கங்களைக் கொண்டது. ஒப்புரவு அருட்சாதனம் பெறும் கிறித்துவர்கள் தங்கள் பாவங்களை நன்றாக நினைத்துப் பார்த்து வெளிப்படுத்தவும், பாவங்களைத் தவிர்த்து இறைவன் திருவுளப்படி ஒழுகவும் தேவையான விளக்கங்களையும் நெறிமுறைகளையும் கொண்டது இந்நூல்.
நூல் அமைப்பு
ஒவ்வோர் அதிகாரத்தின் தலைப்பிலும் அவ்வதிகாரத்தில் விளக்கப்படும் பொருள் பற்றிய சுருக்கமான முன்னுரை தமிழில் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் முதலெழுத்து பன்மடங்கு பெரிதாக ஒரு கட்டத்துக்குள் அச்சிடப்பட்டுள்ளது.
தம்பிரான் வணக்கத்திலும் கிரீசித்தியானி வணக்கத்திலும் தலைப்புகள் போர்த்துக்கேய மொழியிலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. ஆனால் கொம்பெசியோனாயரு நூலில் முகப்பட்டையைத் தவிர வேறு எங்குமே போர்த்துக்கேய மொழியை நாம் காண இயலாது. ஆகவே, முழுமையாகத் தமிழ் எழுத்தில் அச்சிடப்பெற்ற நூல் இது என நாம் பெருமை கொள்ளலாம்.
4. அடியார் வரலாறு
அண்டிறீக்கிப் பாதிரியார் மொழிபெயர்த்து அச்சிட்ட இந்நூல் 668 பக்கங்களைக் கொண்டது. இந்நூலுக்கு ஆசிரியர் என்ன பெயரிட்டார் என அறிய இயலவில்லை. ஏனெனில் நூலின் பெயரும் அச்சிடப்பெற்ற இடம், நாள் பற்றிய விவரங்களும் அடங்கிய பக்கங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்விவரங்கள் இல்லாத - ஆனால் நூலின் உள்ளுறையைப் பொறுத்த அளவில் முழுமையான படிவத்திற்கான நூலொன்று நூலகத்தில் இருப்பதைத் தனிநாயக அடிகள் கண்டுபிடித்துத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்பானிஷ் மொழியில் கையெழுத்தில் ஆசிரியரின் பெயரால் அமைந்த ஒரு முன்னுரை இப்பிரதியில் உள்ளது. அது நூலாசிரியரின் கையெழுத்து அல்ல. இப்புனிதர்கள் வரலாறு 1586 ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்றதாக அம்முன்னுரையில் குறிக்கப்பட்டுள்ளது.
நூலின் மற்றொரு பிரதி கோபன்ஹேகன் நகரிலுள்ள மன்னர் நூலகத்தில் (The King's Library, Copenhagen / Det Kongelige Bibliotek - The Royal Library) உள்ளது. அதிலும் அச்சிடப்பட்ட இடம், நாள் பற்றிய விவரங்கள் இல்லை. வாத்திக்கான் (Vatican City) பிரதியிலுள்ள கையெழுத்து முன்னுரையும் இதில் இல்லை.
புனிதர்கள் வரலாறுகளைக் கூறும் நூல் ஐரோப்பியரால் FLOS SANTORUM எனப் பொதுவாக வழங்கப்பட்டது. இந்நூலை முழுமையாக ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் மறுபதிப்பாக வெளியிட்ட இராசமாணிக்கம் அடிகளார் இந்நூலுக்கு அடியார் வரலாறு எனப் பெயரிட்டு அச்சிட்டார். அப்பெயரே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.
மூன்று மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை மொழிபெயர்த்து, அத்துடன் கிறித்தவர்களுக்குப் பயன்படுமெனத் தாம் கருதும் சிலவற்றைச் சேர்த்து இந்நூலை இயற்றியதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட ஊர்
அடியார் வரலாறு நூலின் முன்னுரைப் பகுதி கிடைக்காததால் நூல் அச்சிடப்பட்ட ஊர் பற்றிய உறுதியான சான்று இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை. 1679-ஆம் ஆண்டில் அம்பலக்காட்டில் அச்சிடப்பெற்ற தமது தமிழ்-போர்த்துக்கேய அகரமுதலியின் முன்னுரையில் அடியார் வரலாறு தூத்துக்குடிப் பகுதியில் அச்சிடப்பெற்றதாக அந்த்தாம் தெ புரோயென்சா அடிகள் குறிப்பிடுகின்றார். இது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயல் என்னும் ஊரில் அச்சிடப்பெற்றிருக்க வேண்டும் எனப் போத்லெயன் நூலகப் பொறுப்பாளர் சி.ஆர்.பாக்சர் கூறுவார். புன்னைக்காயல் அல்லது தூத்துக்குடி என நூல் அச்சிடப்பெற்ற ஊரைக் குறிப்பிடுவார் தனிநாயக அடிகள். புன்னைக்காயலில் இந்நூல் அச்சிடப்பட்டதாக வரலாற்றறிஞர் யோசப் விக்கி எழுதுகின்றார்.
மரபுவழிச் செய்தியை நோக்கும் போது, தங்கள் ஊரில் தமிழ் அச்சகம் இருந்ததாக இன்றளவும் புன்னைக்காயல் மக்கள் பெருமை பாராட்டுகின்றனர்.
ஆகவே அடியார் வரலாறு அச்சிடப்பெற்ற ஊர் புன்னைக்காயலே என நாம் துணியலாம்.
அண்டிறீக்கியின் மொழிபெயர்ப்பு
ஐரோப்பியருள் முதன்முதலாகத் தமிழ்மொழியை நன்றாகப் பயின்று அதில் உரையாடவும் நூல் எழுதவும் திறமை பெற்றவர் அண்டிறீக்கிப் பாதிரியாரே. தாம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களைத் தமிழில் எழுதிட அவர் ஆற்றல் பெற்றிருந்தார் என்பதற்கு அவரின் நான்கு நூல்களுமே தக்க சான்று. ஆனால் கிறித்தவ சமயத்துக்கே உரியப் பல கலைச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்க அவரால் இயலவில்லை. அதைத் தம் நூல்களின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகின்றார்.
அவரால் மொழிபெயர்க்க இயலாத சில சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளை இங்கே காண்போம். இன்று திருவருட்சாதனம் என வழங்கப்படும் சொல் அண்டிறீக்கி அறியாதது. இப்பொருள் குறிக்கும் Sacramento என்னும் போர்த்துக்கேயச் சொல்லை அவர் 'சக்கிறமெந்து' என்று வழங்குகின்றார் அவ்வாறே பல சொற்களை மொழிபெயர்க்க இயலாமல் போர்த்துக்கேயச் சொற்களைத் தமிழ் ஒலிக்கு ஏற்ப மாற்றி 'வவுத்தீசுமு' (Baptismo - திருமுழுக்கு), 'சாந்து சக்கிறமேந்து' (Santo sacramento - தேவ நற்கருணை), 'மந்திரிமோனியு' (Matrimonio - திருமணம்), 'ஓடுதேன்' (Ordem - குருத்துவம்) என்பது போலப் பயன்படுத்துகின்றார். 'கிராசை' (Graca - அருள்), 'எகிரேசை' (Egreja - திருச்சபை), 'விடுத்தூதைகள்' (Virtudes - புண்ணியங்கள்), 'சசெடுதோத்தி' (Sacerdote - குரு), 'ஆஞ்சு' (Ange - வானவன்) போன்ற சொற்களையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
அதே வேளையில் உடுகூறை (ஆடை), மிடியர் (வறியோர்), தம்பிரான் (இறைவன்), தமையன் (அண்ணன்), காணாமல் படித்தல் (மனப்பாடம் செய்தல்), பிழை, கட்டவிழ்த்தல், வணக்கம், திருமகன், சுவை, திருவுள்ளம் போன்ற நல்ல தமிழ்ச்சொற்களும் இவரின் நூல்களில் பயின்று வரக் காணலாம்.
முடிவுரை
16 பக்க அளவில் அமைந்த தம்பிரான் வணக்கத்தில் தொடங்கி 668 பக்கங்கள் கொண்ட அடியார் வரலாறு வரையில் அண்டிறீக்கிப் பாதிரியாரின் எழுத்துப்பணி தொடர்ந்ததை நாம் மலைப்புடன் நோக்குகின்றோம். பல்வேறு சமயப் பணிகளுக்கிடையிலும் உடல் நலக்குறைவுக்கிடையிலும் வாழ்க்கைமுறை மாற்றத்துக்கிடையிலும் அவர் அயராது இப்பணியில் ஈடுபட்டமை வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். இந்திய மொழிகளுள் முதன்முதலாக அச்சேறிய பெருமையைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த அண்டிறீக்கிப் பாதிரியாரின் அளப்பரிய பணியை நன்றியோடு நினைந்து போற்றுவது நம் கடமை.
தொடர்பு:
அருள் முனைவர் அமுதன் அடிகள் (amudhantls1943@gmail.com)
No comments:
Post a Comment