Sunday, October 20, 2019

கூடல் மாநகரின் உண்மையான பெயரென்ன?

கூடல் மாநகரின் உண்மையான பெயரென்ன?

—   முனைவர். தேமொழி


          கூடல் மாநகரின் உண்மையான பெயரென்ன? மதிரை = மருதை = மதுராபுரி =மதுரை ??

          இன்றைய மதுரையின் உண்மையான பெயர் என்ன ?

          மருத மரங்கள் நிறைந்திருந்ததால் மருதை  என அழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில் மதுரை எனத் திரிபுற்றதா ?

          அல்லது மதில் சூழ்ந்த மதிரை என்பது  பிற்காலத்தில் மதுரை என மருவிவிட்டதா?

மதிரை   மதுரையானது:
          ஓலைச்சுவடிகள் மதிரை என்ற  பெயரிலிருந்தனவற்றைக்  காலப் போக்கில் பிழை  திருத்தம் செய்வதாக நினைத்து பிற்காலத்தவர் மதுரை என மனம் போனபடி  மாற்றிவிட்டனரா?

          எதுகை அடிப்படையில்   தொகுத்து  திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "எதுகை முரண்பட்டும் மாற்றம் செய்துள்ள வரிகள் இவை" என அளிக்கும் இலக்கியச் சான்றுகள் அவ்வாறுதான் காட்டுகின்றன (பார்க்க :  https://groups.google.com/d/msg/mintamil/PvVvl1yxMPo/8-ZoKrWqY6wJ).  அவர் கல்வெட்டுச் சான்றும்  கொடுத்துள்ளார்.

மருதை மதுரையானது?
          மருதை எனக்குறிப்பிடுவதும்  பொதுமக்கள் வழக்கில் சென்ற நூற்றாண்டுவரை பரவலாகவே இருந்துள்ளது. ஆனால் கற்றோர் வட்டத்தில் அவ்வழக்கு இருப்பது அரிது. கல்வி பரவலான இன்றைய காலத்தில் இளந்தலைமுறையினர்   இந்த வழக்காறு ஒன்றும்  இருந்ததை அறிந்துள்ளனரா எனத் தெரியவில்லை.

          மதுரை என்றே கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் இருப்பது பொதுச் சீர்மை நிலைக்குச் சென்றுவிட்டிருக்கலாமோ  என்ற ஐயம் தோன்றுவதால் மதுரையின் பெயர் குறித்து ஆராய்வது இயல்பே.

          ஓலைகளைத் திருத்தலாம். பழைய ஓலைச்சுவடிகளை புதியதாகப் படி எடுக்கும்பொழுது எளிதில் பாடல்களைத் திருத்திவிடலாம் அல்லது புதியனவற்றைப்  புகுத்திவிடலாம். இடைச்செருகல்களும் அவ்வாறுதான் இலக்கியங்களில் இடம்பெற்றன.

          ஆனால் கல்வெட்டுகளைத் திருத்த முடியாது என்பதால் அதில் யாரும் தமது கைவரிசையைக் காட்டியிருக்க வழியில்லை. முதலில் கல்வெட்டு எழுத்துக்களையே படித்தறியும் நிலையை இடைக்காலத்தில் மக்கள் மறந்துவிட்டதாகவும் தெரிகிறது. புரிந்தாலே மாற்றம்  செய்யவோ பிடிக்காதவற்றைக்  காணாமல் போக்கவோ செய்ய இயலும்.

          கல்வெட்டில் செதுக்கும் பொழுது பிழையும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் மறக்கலாகாது, அது போலக் கல்வெட்டுகளில்  மக்கள் வழக்கில் உள்ள சொற்களும் இடம் பெறக்கூடும் என்பதையும் மறக்க இயலாது.

கல்வெட்டு வழி ஆராயப் புகுந்தோம் எனில்:
1. தொடர்ச்சியாகக் கல்வெட்டின் காலவரிசையில் மதுரை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதை அறிவதும் முக்கியம். அவ்வாறு காலக் கோட்டில் வரிசைப்படுத்துகையில் எக்காலத்தில் மாற்றம் பெறுகிறது என்பதையும் காண வழியுண்டு.

2. மதுரை..  மருதை..  மதிரை..  என்ற வழக்காறுகள்  எக்காலத்தில்  அதிகப் புழக்கத்தில் வருகிறது அல்லது மறைகிறது என்பதை இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுகளில் காணப்படும்  மதுரை என்ற  சொல் குறித்த  விழுக்காட்டைக் கொண்டு கணக்கிடுவதும்  ஒரு புரிதலைத் தரும்.

          சில வழக்காறுகள் சமகாலத்திலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

          இது தொடர்பாக கீழ்க்காணும் நூலின் உதவியுடன் ஆராய முற்பட்டதில்  பெறப்படும் தகவல்கள் கீழே.
நன்னிலம் கல்வெட்டுக்கள்: முதல்  தொகுதி
http://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010783_நன்னிலம்_கல்வெட்டுக்கள்.pdf
http://www.tamildigitallibrary.com/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8k0M0#book1/
பதிப்பாளர்: சென்னை : தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை , 1979
தொகுப்பு. ஆ.பத்மாவதி பொறுப்பு. முனைவர் இரா. நாகசாமி

          இடைக்காலத் தமிழக வரலாற்றில்  கல்வெட்டுகளில் மதுரை என்ற சொல் அதிகம் இடம் பெறுவதாக இந்த நூலில் காணும் கல்வெட்டுகளின் அடிப்படையில் முடிவுக்கு வரலாம்.  மும்முடிச்சோழர்கள் என்ற முறையில் மதுரையை வென்ற பெருமிதத்தைப் பறை சாற்றுகையில் பலமுறை சோழர்  கல்வெட்டுகளில் மதுரை இடம் பெறுகின்றது. மதுரைக்கு அந்தகன் என்ற பொருள் தரும் வகையில் மதுராந்தகன் என்ற பெயர்களையும் விருதுப் பெயர்களையும் சூட்டிப் பெருமைப் பட்டுக்   கொண்டனர்.

          அத்துடன் மருதை என்பதும் சமகாலத்தில் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.  இது மக்கள் வழக்கின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது கல்வெட்டு எழுத்துப் பிழையா என்பதும் ஆராயத்தக்கது.

          ஆகவே மதிரை அல்லது மருதை என்பது மதுரையாகத் திருத்தப்பட்டது என்பதை எதுகை முரண்பட்டும் மாற்றம் செய்துள்ள வரிகள் கொண்ட பாடல்கள் மூலம்  கொள்வோமானால், அத்தகைய  மாற்றம்   சோழர் கல்வெட்டுகளின் மூலம் அவர்கள் காலத்திலோ அல்லது அதற்கும் முற்பட்டோ நிகழ்ந்திருக்கவோ வாய்ப்புண்டு. 

          மேலும் பல பண்டைய கல்வெட்டுகள் கிடைப்பின் இந்த மாறுபாடு குறித்துத் தெளிவு பிறக்கும். 



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)





No comments:

Post a Comment