—— துரை.சுந்தரம்
முன்னுரை:
கல்வெட்டுகள் தொடர்பாகப் பல நூல்களைப் படிக்கும்போது, கல்வெட்டுகளில் பேசப்படும் முதன்மைப் பொருள் நெல்லாகவே இருக்கக் கண்டிருக்கிறேன். இடையிடையே, உப்பு, உப்பளங்கள் பற்றிய செய்தி எங்கேனும் காணப்படுகின்றதா என்னும் எண்ணம் தோன்றும். அவ்வப்போது திருவாங்கூர் தொல்லியல் வரிசை (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூலினைப் படித்தல் வழக்கம். அண்மையில், மேற்படி நூலின் எட்டாம் தொகுதியினைப் படிக்கையில் – தொகுத்துப் பதிப்பித்தவர் தொல்லியல் அறிஞர் கோபிநாத ராவ் அவர்கள் (T.A. GOPINATHA RAO) - கன்னியாகுமரியில் சோழர் கல்வெட்டு ஒன்றில் உப்பளம் பற்றிய செய்தியைக் காணநேர்ந்தது. அக்கல்வெட்டுச் செய்தியினைப் பற்றிய பகிர்வு இங்கே.
உப்பும் உப்பளமும்:
உப்பு. ஓர் எளிய பொருள் என்று புறந்தள்ள இயலாது. உப்பின்றி உணவில்லை. உணவுண்டு உயிர்வாழ உப்பு இன்றியமையாதது. உண்மையில் அதன் மதிப்பு பெரிது. உப்பின் பயன்பாடு பற்றிப் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் கூறுவதைக் காண்க:
"உப்பு விற்பவர்களைச் சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்” (எனது இந்தியா- ஜூனியர் விகடன் 29-பிப்ரவரி-2012.)
மேலே உமணர்கள் பற்றிய குறிப்புள்ளது. சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தில், உப்புப் பண்டமேற்றிய மாட்டு வண்டிகளில் (நோன் பகட்டு ஒழுகை) உமணர் உப்பு விற்கச் சென்றதாகக் குறிப்பு வருகிறது. உமணர்களின் மனைவியர் உமட்டியர் என்றழைக்கப்பெற்றனர். உமட்டியரும் அவர் தம் புதல்வரும் உமணரோடு உடன் சென்றனர். உமட்டியர் ஈன்ற புதல்வரோடு மந்திகள் கிலுகிலுப்பை விளையாடும் காட்சியைச் சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது.
”நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த
மகாஅ ரன்ன மந்தி…….
....... உமட்டிய ரீன்ற
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும்”
- சிறுபாணாற்றூப்படை (55-61)
தொ.பரமசிவன் அவர்கள், பழந்தமிழ் நாட்டின் மிகப்பெரிய சந்தை உற்பத்திப்பொருளாக உப்பு விளங்கியதைக் குறிப்பிடுகிறார். உப்பு வணிகர்கள் வண்டிகளில் (CARAVAN) பயணம் செய்து வணிகம் செய்துள்ளனர். இவ்வணிகர்கள், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பதினெண்விஷயத்தார் என்னும் வணிகக் குழுவினரைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம்.
”தமிழக ஊரும் பேரும்” என்னும் நூலில் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள், உப்பு நிலத்தைக் களர் நிலம் என்று கூறுவர் என்றும், உப்பு விளையுமிடம் அளம் எனப்படும் என்றும், தஞ்சையில் நன்னிலத்துக்கருகில் பேரளம் என்னும் ஊருண்டு என்றும் கூறுகிறார்.
சம்பளம் என்னும் சொல் பற்றிய விளக்கத்தைப் பாவாணர் கூற்றால் அறியலாம். ”பழங்காலத்தில் சம்பளம் கூலமும் (கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.) உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் என்பது தானியம் . கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.
ஓங்கிவளர்ந்த சம்பாநெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவாக இருத்தல் காண்க.நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே.
எ-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் = திரளுதல்.”
கடலை ஒட்டிய கழிமுகப்பகுதி காயல் எனப்படும். இக்கழிமுகப்பகுதி உவரி நீர் நிரம்பிய பரப்பை உடையது. இவ் உவரி நீர்ப்பரப்பில் உப்பு விளைவிக்கப்படுவதால், காயல் அல்லது கழி என்னும் பெயர் உப்பளம் என்னும் பொருளிலும் வழங்கும். கடற்கரையை ஒட்டி அமைந்த இவ் உப்பளங்கள் தமிழ் நாட்டில் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் மிகுதியும் இருந்துள்ளன எனலாம். உப்பு விளைவிக்கும் இடங்களாகத் தற்காலத்தே எண்ணூர், மரக்காணம், கோவளம், வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய ஊர்கள் அறியப்படுகின்றன.
கன்னியாகுமரி-குஹநாதசுவாமி கோயில் கல்வெட்டு:
கன்னியாகுமரி-குஹநாதசுவாமி கோயில்
குமரி என்றதும் நாம் அறிந்தது குமரிப் பகவதியம்மன் கோயிலே. குமரி நகரில் குஹநாதசுவாமி கோயில் என்றொரு கோயிலும் உள்ளது. இங்கே தமிழில் பொறிக்கப்பட்ட ஆறு கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு, முதலாம் இராசேந்திரனின் ஆட்சியாண்டான கி.பி. 1036-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதில், இராசேந்திரனுக்கு உணவு சமைக்கும் (அடும்) பணிப்பெண் (பெண்டாட்டி) சோழ குலவல்லி என்பவள் ஆவாள் என்ற செய்தி காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, உப்பளம் பற்றிப் பேசுகிறது. இக்கல்வெட்டு, மேற்படிக் கோயிலின் கருவறையின் மேற்கு அதிட்டானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்பெறும் அரசன் இராசகேசரிவர்மன் இராஜாதிராஜதேவர். ஆட்சியாண்டு முப்பது. இவன், வீரபாண்டியன் தலையும், இலங்கையும், சேரலன் சாலையும் கொண்டவனாகக் குறிக்கப்பெறுகிறான்.
கல்வெட்டுப்பாடம்:
மணற்குடி உப்பளம் குஹநாதசுவாமி கோயில் கல்வெட்டு
குமரி ஸ்ரீ வல்லபப் பெருஞ்சாலை:
கல்வெட்டில், குமரி நகரின் பழம்பெயராகக் கழிக்குடி என்னும் பெயர் குறிக்கப்படுகிறது. கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும் சொல்லாதலால், குமரியின் சுற்றுப்புறத்தில் உப்பளங்கள் மிகுந்திருந்தமையின் குமரி என்னும் இயற்பெயருடன் கழிக்குடி என்னும் சிறப்புப் பெயரும் அமைந்ததுபோலும். குமரி, பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது ஆனால், பாண்டிய நாடு சோழர் ஆட்சிக்குக் கீழ் இருந்தமையால், பாண்டியநாடு இராஜராஜனின் பெயரால் இராஜராஜப்பாண்டி நாடு என அழைக்கப்பெற்றது. சோழர் கால நாட்டுப்பிரிவுகளில், குமரி நகர் இருந்த பகுதி புறத்தாய நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அடங்கியிருந்தது. புறத்தாய நாடும், உத்தம சோழ வளநாடு என்னும் பிரிவின் கீழ் அமைந்திருந்தது.
குமரியில் ஒரு சாலை, ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்னும் பெயரில் இயங்கிவந்துள்ளது. பாண்டியர் காலத்தில், பாண்டிய அரசன் ஸ்ரீவல்லபன் பெயரால் அமைந்த இச்சாலை, முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலத்தில் பெயர் மாற்றம் பெற்றது. புதிதாக ஆட்சியைப் பிடித்த அரசர்கள், ஊர்களின் பெயர்கள் போன்றவற்றை மாற்றித் தம் பெயரிட்டு அழைத்தல் மரபு. இருப்பினும், மக்கள் வழக்கினின்று ஒரு பழம்பெயர் விரைவில் அழிந்துபோகாதென்னும் அடிப்படையில் சிறிது காலம் பழம்பெயரோடே அதன் புதுப்பெயரும் வழக்கில் இருக்கும். மிக அரிதாக, காலப்போக்கில் புதுப்பெயர் மறைந்து அதன் பழம்பெயரே நீடித்து நிலைத்துவிடுதலும் நேர்கிறது. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில், மைசூருக்கருகில் உள்ள தலைக்காடு, சோழர் ஆட்சியில் தழைக்காடான இராசராசபுரம் என்னும் பெயரில் வழங்கினாலும், பின்னர் அதன் பழம்பெயரே நிலைத்துவிட்டதைக் காண்கிறோம். இன்றும் தலைக்காடு என்னும் பெயரே உள்ளது.
சாலை என்பது ஒரு பயிற்சி நிலையம் என்று கொள்ளலாம். கல்வி, அரசியல் சார்ந்த மேலாண்மை, போர்ப்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு சிறப்பு வாய்ந்த இப்பயிற்சிச் சாலைகளை இன்றுள்ள IAS ACADEMY என்னும் ஆட்சியாளர் பதவிக்குத் தேர்வானவர்கள் பெறுகின்ற உயர்தரப் பயிற்சிக் கூடங்களுடன் ஒப்பிடலாம். இச் சாலைகளில் பயின்றவர்கள், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களிடம் அமைச்சராகவோ, பெரும் படைத்தளபதிகளாகவோ, அல்லது இரண்டு பொறுப்பும் கொண்ட பெரும் பதவிகளிலோ பணியாற்றும் அரசியல் தலைவர் தகுதி பெறுகின்றனர். இவர்கள், மூவேந்த வேளார் என்றும், பிரம்மமாராயர் என்றும் பட்டப்பெயர் கொண்டவர்களாகச் சோழர் கல்வெட்டுகளில் சுட்டப்பெறுகிறார்கள். முதலாம் இராசராசன் மற்றும் அவன் மகன் முதலாம் இராசேந்திரன் ஆகிய இருவரிடமும் அமைச்சராகவும், பெரும் படைத்தளபதியாகவும் பணியாற்றிய சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரம மாராயன் என்பானை மேற்படி அரசர்களின் கல்வெட்டுகளும் பெரிய லெய்டன் செப்பேடும் குறிக்கின்றன. இவன், தஞ்சைப்பெருவுடையார் கோயிலின் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தவன் ஆவான்.
இனி, குமரியில் ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை இருந்துள்ளதாக நமது குமரிக் கல்வெட்டில் அறிகிறோம். காந்தளூர்ச் சாலையை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு பார்த்திவேந்திரபுரம் என்னுமிடத்தில் கருநந்தடக்கன் காலத்தில் ஒரு சாலை அமைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அது பாண்டிய நாட்டுப்பகுதியாகும். அது போலக் குமரியிலும் பாண்டிய அரசன் ஸ்ரீவல்லபன் பெயரால் சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். பின்னர், சோழர் ஆட்சியின்போது பெயர் மாற்றம் பெறினும் இரண்டு பெயர்களும் இக்கல்வெட்டில் சுட்டப்படுகின்றன.
மணற்குடி உப்பளமும் குமரி ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையும்:
குமரி ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலைக்குத் தேவையான உப்புப் பயன்பாட்டுக்காக, மணற்குடி உப்பளத்திலிருந்து உப்பு நிவந்தமாக வழங்கப்பட்டு வந்துள்ளது என்று குறிப்பிடும் கல்வெட்டு, இந்த உப்பு வழங்கலில் முட்டுப்பாடு (இடை நிறுத்தம்) ஏற்பட்டது என்பதையும் கூறுகிறது. மணற்குடி என்னும் ஊர் நாஞ்சி(ல்) நாட்டில் அமைந்திருந்தது. நாஞ்சில் நாடு இன்றைய நாகர்கோயில் பகுதி எனலாம். ஆனால், குமரி, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் அமையவில்லை. நாஞ்சில்நாட்டைத் தொட்டவாறு அணுகியுள்ள புறத்தாய நாட்டில் அமைந்திருந்தது. மணற்குடி என்பது அவ்வூரின் இயற்பெயர் எனினும், அவ்வூருக்கு “மஹிபால குலகாலப் பேரளம்” என்னும் சிறப்புப் பெயர் அமைந்திருந்தது. இச்சிறப்புப் பெயர் ஒரு காரணப்பெயர். முதலாம் இராசேந்திரன் வென்ற அரசர்களுள் ஒருவன் மஹிபாலன். அவனை வென்றதால் “மஹிபால குலகாலன்”. எனவே, மணற்குடிக்கு, இராசேந்திரன் பெயரால் “மஹிபால குலகாலப் பேரளம்” என்னும் பெயர் உண்டாயிற்று. குமரியைக் காட்டிலும் சிறியதொரு ஊரான மணற்குடியின் பெயரோடு சோழ அரசனின் பட்டப்பெயர் எவ்வாறு இணைந்தது? ஏனெனில், இவ்வூரில் பேரளம் இருந்துள்ளது. உப்பு வணிகத்துப் பெரு மையமாகத் திகழ்ந்த காரணத்தாலே, அதன் வணிக வருவாய்ச் சிறப்புகொண்டு இராசேந்திரன் காலத்தில் முதன்மை அளித்து இப்பெயர் அமைந்தது எனலாம். (மஹிபால என்பது கல்வெட்டில் மயில்வாள என எழுதப்பட்டுள்ளது).
ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையான ராஜராஜப்பெருஞ்சாலைக்கு வழங்கப்பட்டுவந்த உப்பு நிவந்தம் ’முட்டிக்கிடந்தமையில்’ நிவந்தத்தை மீண்டும் கிடைக்கச் செய்யப் பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன் என்பவன் அரசனிடம் விண்ணப்பம் செய்து வேண்டிக்கொண்டு அரசனின் ஆணையைப் (திருமுகம்) பெற்றான். பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன், அரசியார் உலகுடைய பிராட்டியரின் கீழ் பணியாற்றிய ஓர் அதிகாரி ஆவான். இவனது இயற்பெயர் அரிகுலகேசரி. பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன் என்பது சிறப்புப் பெயர். தஞ்சைக்கருகில் உள்ள திட்டை என்னும் ஊரைச் சேர்ந்தவன். கல்வெட்டு இவனை, ”உலகுடைய பிராட்டியார் திருப்பள்ளித்தொங்கலுடையான்” எனக் குறிக்கிறது. அரசியார் பெயரை அடைமொழியாகக் கொண்டு திருப்பள்ளித்தொங்கலுடையான் என்னும் பெயர் அமைவதால், பதிப்பாசிரியர் கோபிநாத ராவ் அவர்கள், திருப்பள்ளித்தொங்கல் என்னும் தொடர் ஒரு பதவியின் பெயர் எனக்குறிக்கிறார். அவர் கூற்று ஆங்கிலத்தில் :
"Tittai Arikulakeesari alias Pavithramanikka-ttonga-pperaraiyan, who was (or held the office of) the tiruppallittongal under Ulagudaiyapirattiyar, the queen of Rajadhirajadeva .."
இக்குறிப்புப்படி, திருப்பள்ளித்தொங்கல் என்பது ஒரு பதவியைக்குறிக்கும் பெயர் என்றும் திருப்பள்ளித்தொங்கலுடையான் என்பது அப்பதவியைக் கொண்டவன் என்பதும் பெறப்படும். சோழப்பேரரசில் பெருந்தன அதிகாரிகள் இருந்தனர். பெருந்தனம் என்பது பெருந்தரம் என்றும் மாறி வழங்கும். அது, சோழ அரசாங்க உயர் அலுவலர்களின் வகை என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது.
ஆனால், “திருப்பள்ளித்தொங்கல்” என்பதற்குக் கல்வெட்டுச் சொல்லகராதி, ”சுவாமியின் குடை” என்று பொருள் கூறுவதோடு அப்பொருளுக்குச் சான்றாக அல்லது எடுத்துக் காட்டாகக் கீழ்க்கண்ட கல்வெட்டு வரியைச் சுட்டுகிறது.
“திருப்பள்ளித்தொங்கல் பிடிக்கும் ஆளுக்கு உள்படுவான் ஒருவனுக்குப் பங்கு ஒன்றும்” - SII vol-II, 66
அதே அகராதியில், “திருப்பள்ளித்தொங்கல் உடையாந்” என்பதற்கு “(அரசன்) குடையைத் தாங்குபவன்” என்று குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாகக் கீழ்க்கண்ட கல்வெட்டு வரியைச் சுட்டுகிறது.
“எயினங்குடையான் ஆன மூத்த வகைத் திருப்பள்ளித்தொங்கலுடையாந் சிந்தாமணி சங்கரன்”
கல்வெட்டுச் சொல்லகராதியின் அடிப்படையில் திருப்பள்ளித்தொங்கலுடையான் என்னும் சொல்லின் பொருள் முரண்படுகிறது.
திருப்பள்ளித்தொங்கல் என்பது குடையைக் குறிக்கும் என்றால் - அது இறைவனுக்கானது எனினும் அரசனுக்கானது எனினும் - அது ஓர் உயர் நிலைக் குறியீடு. ஒரு பெருமைச் சின்னம். இறைவன், அரசன், சமயத்தலைவர், பெருந்துறவிகள் ஆகியோருக்குக் கையில் பிடித்துக்கொள்ளும் கோல் ஒரு சிறப்பு அல்லது பெருமைக்குரிய அடையாளமாய் அமைவது போலக் குடையும் சிறப்புக்குரியது. குடையைப் பயன்படுத்தும் சிறப்பு உரிமையை ஓர் அரசன் தன்னுடைய பெருந்தரத்து அதிகாரிக்கும் வழங்குதல் மிக இயல்பான ஒரு நடைமுறையாய்ப் பண்டு இருந்திருக்கக்கூடும். பல்லக்கு வைத்துக்கொள்ளும் உரிமை, யானை அல்லது குதிரை மேல் ஊர்வலமாகப் போதல், அனுமக் கொடி வைத்துக் கொள்ளும் உரிமை போன்ற சிறப்புரிமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. வலங்கை-இடங்கை முரண்பாடு காரணமாகப் போராடிய கண்மாளர்கள் தாங்கள் போகுமிடங்களுக்குச் செருப்பணியலாம் என்பதும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து பூசிக்கொள்ளலாம் என்பதும், நன்மை தின்மைக்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும் அரசன் வழங்கிய உரிமைகள் எனக் கல்வெட்டுகள் கூறுவதைக் காண்கிறோம். இந்த அடிப்படையில், கல்வெட்டில் குறிக்கப்பெறும் பெருந்தனத்து அதிகாரி அரசனால் குடை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றவன் என்று பொருள் கொள்ளலாம்.
சோழர் கைக்கொண்ட பாண்டி மண்டலம் முழுதும் இராஜராஜப் பாண்டி நாடு என்று வழங்கினாலும், பாண்டி நாட்டின் தென்கோடிப்பகுதி இராஜராஜத்தென்னாடு என்று வழங்கியதாகக் கல்வெட்டு குறிக்கிறது. குமரிப்பெருஞ்சாலைக்கு உப்பு வழங்குதல் மீண்டும் தொடரக் கொடுக்கப்பெற்ற அரசாணை, இராஜராஜத் தென்னாட்டில் இருந்த எல்லா உப்பளங்களுக்கும் பொறுப்பேற்று வரி விதித்த நிர்வாக அதிகாரிகளான “கூறு செய்வார்” மற்றும் உப்பளங்களை மேலாண்மை செய்த “கண்காணி செய்வார்” ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
உப்பு அளத்தல் - பண்டைய வழக்கம் - கையுறை:
நெல் போன்ற தானியங்களையும், உப்பு போன்ற பொருள்களையும் முகத்தல் அளவுக் கருவிகொண்டு அளக்கும்போது, ஒவ்வொரு முறையும் அளந்ததன் எண்ணிக்கையை வாயால் உரக்கச் சொல்லி அளத்தல் வழக்கமாய் இருந்தது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியதும், அளக்கப்படும் பொருளின் ஒரு கைப்பிடி அளவு தனியே அருகில் வைக்கப்படும். திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் இவ்வழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு என்பதாக, கோபிநாத ராவ் அவர்கள் குறிக்கிறார். எடுத்துக்காட்டாக, மரக்கால் கொண்டு நெல் அளக்கையில், ஒவ்வொரு மரக்கால் அளவுக்கும் ஒன்று, இரண்டு என எண்ணிக்கொள்வதும், குறிப்பாக அறுபது மரக்கால்கள் எண்ணி முடியும்போது ஒரு கைப்பிடி அளவு நெல்லைத் தனியே குவித்து வைத்து அடையாளப்படுத்துவது இன்றும் காணுகின்ற வழக்கம். இவ்வகையில், கைப்பிடி நெல்லின் எண்ணிக்கை, நெல்லின் பெருங்கொள்ளளவினை எளிதில் கணக்கிட உதவும். இந்த ஒரு கைப்பிடி அளவு, கை-உறை (கையுறை) என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. நெல் அளப்பவர், அறுபது மரக்கால்கள் அளந்ததும் “அறுபதுக்கு உறை” என்று உரக்கச் சொல்வார்.
குமரி உப்பளத்திலும் கையுறை:
குமரி உப்பளங்களிலும் மேற்படி அளக்கும் முறையும் கையுறை உப்புக் குவித்தலும் வழக்கத்தில் இருந்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. “கலத்துவாய் நாழி கைய்யுறை கொண்டு” எனக் கல்வெட்டில் வரும் தொடரைக் காண்க. இங்கே, கைப்பிடி அளவு உப்பு தனியே வைக்கப்படவில்லை. ஒரு கலத்துக்கு ஒரு நாழி அளவு உப்பு, கையுறையாகத் தனியே வைக்கப்படுகிறது. (நாழி என்பதைச் சென்ற நூற்றாண்டில் புழக்கத்திலிருந்த “படி” அளவாகக் கருதலாம்). எட்டு நாழி கொண்டது ஒரு மரக்கால்; பன்னிரண்டு மரக்கால் கொண்டது ஒரு கலம். எனவே, கையுறையாக வைத்த உப்பின் அளவு ஒரு விழுக்காடு எனலாம். ஒரு கலத்துக்கு ஒரு நாழி என்னும் பொருளைக் கல்வெட்டின் “கலத்துவாய் நாழி” என்னும் தொடர் சுட்டுகிறது.
ஒரு கலத்துக்கு ஒரு நாழி என்னும் கையுறை உப்பு முன்பு வழங்கப்பட்டதைப் போலவே இப்போதும் வழங்கப்படவேண்டும் என்று அரசாணை அறிவிப்பதன் மூலம் உப்பு விளைச்சலின் மிகுதியை அறியலாம்.
சென்ற நூற்றாண்டில் இக்கல்வெட்டை ஆய்வு செய்த கோபிநாத ராவ் அவர்கள், அக்காலகட்டத்திலேயே மணற்குடி, உப்பு விளைச்சலில் ஒரு பெரும் மையமாகத் திகழ்ந்தது என்று குறிப்பிடுகிறார். மணற்குடி, திருவாங்கூர் மாநிலத்தில் அகத்தீசுவரம் வட்டத்தில் அமைந்திருந்தது.
மதுராந்தகம் – செய்யூர் உப்பளம்:
மதுராந்தகம் வட்டத்தில் செய்யூர் என்னும் ஊரில் தொண்ணூறு உப்பளங்கள் இருந்ததாக இவ்வூர் வால்மீகநாதர் கோயில் கல்வெட்டு (A.R. 445/1902) குறிப்பிடுகிறது. கல்வெட்டின் காலம் இரண்டாம் குலோத்துங்கனின் நான்காம் ஆட்சியாண்டான கி.பி. 1137-ஆம் ஆண்டாகும். செய்யூரின் சிறப்புப்பெயர் ஜயங்கொண்ட சோழநல்லூர் என்பதாகக் கல்வெட்டு குறிக்கிறது. இவ்வூர்ச் சபையினர் மேற்படிக்கோயிலுக்கு நிவந்தமாக இவ்வூர் உப்பளங்களில் விளைந்த உப்பில் உப்புப்பிடியாக வைத்த உப்பினைக் கொடையளிக்கின்றனர். இக்கல்வெட்டில் வருகின்ற “உப்புப்பிடி” என்பது குமரிக் கோயில் கல்வெட்டில் உள்ள “கையுறை”யைக் குறிக்கும். தொண்ணூறு உப்பளங்கள் இருந்தமையால் மதுராந்தகப் பகுதி உப்பு உற்பத்தியில் பெரிய வணிக மையமாகத் திகழ்ந்தமை கண்கூடு. உப்பு விளைச்சலைக் கல்வெட்டு “உப்புப் படுத்தல்” என்பதாகக் குறிக்கிறது. விளைச்சலில் சிறிதளவு, பரதேசிகளுக்கு விலையில்லாமல் அளிக்கப்பட்டது. மற்றுள்ளது காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கல்வெட்டு இதனைக் ”காசுக்குக் கொண்டார்” என்று குறிப்பிடுகிறது. இவர்கள் உப்பு கொள்முதல் செய்த வணிகர் ஆகலாம். கல்வெட்டின் வரிகள் சில:
1 ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாலாவது செய்யூரான ஜயங்கொண்ட சோழநல்லூர் ஊரோம் இவ்வூர் தேவ
2 ர்களுக்குத் திருப்படி மாற்றுக்கு உடலாக இவ்வூர் உப்புப் படுக்கும் அளம் தொண்ணூற்றிலும் உப்புப்படுத்த அளங்களில்ப் பரதேசிகளுக்கும் மற்
3 றும் காசுக்குக் கொண்டார்க்கும் அளந்து முற்ப்பட்ட உப்பில் உப்புப்பிடி வைத்த பரிசாவது வேளூரளத்தில் ………
வடமுட்டைகால் அளம், தென்முட்டைகால் அளம், தெற்குத்தாங்குவான் அளம், கங்கைகொண்டான்கால் அளம், தெற்கிற்பெரிய அளம், கங்கைகொண்ட சோழப் பேரளம் ஆகிய பல உப்பளங்களின் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றன.
ஆந்திரம்-குண்டூர்-பாபட்லா தமிழ்க் கல்வெட்டில் உப்பளம்:
முதலாம் இராசராசன் காலத்தில் சோழரின் ஆட்சி கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தை ஒட்டியிருந்த பகுதிகள் வரை பரவியிருந்தது. அவ்வகையில், குண்டூர் மாவட்டமும் சோழர் ஆட்சியிலிருந்துள்ளது என்பதை அறிகிறோம். இம்மாவட்டத்தில் பாபட்லா என்னும் ஊரில் பாவநாராயணர் கோவில் என்னும் விண்ணகரம் அமைந்துள்ளது. அங்குள்ள சோழர் காலக் கல்வெட்டு உப்பளத்தைப் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு தமிழ் மொழியில் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் முதலாம் குலோத்துங்கனின் நாற்பத்திரண்டாம் ஆட்சியாண்டான கி.பி. 1112 ஆகும். இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் இருபத்தைந்து உள்ளன. (SII-Vol VI) அவை கீழ்வருமாறு:
தமிழ்க் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படும் செய்திகளாவன:
பாபட்லா (BHAPATLA) ——
குண்டூர் (GUNTUR) மாவட்டத்தில் உள்ள ஊர் பாபட்லா. பாபட்லா என்பது தற்போதைய பெயர். முதலாம் குலோத்துங்கனின் கி.பி. 1107-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் “படுவிறேவான பிரமபள்ளி” என்று குறிக்கப்படுகிறது. ஊரின் இயற்பெயர் படுவிறேவு என்றும் சிறப்புப்பெயர் பிரமபள்ளி என்றும் அறிகிறோம். தமிழகத்தில் சோழர் கைக்கொண்ட தொண்டை மண்டலம் ஜயங்கொண்ட சோழமண்டலம் என்றும், பாண்டிய நாடு இராஜராஜப் பாண்டி மண்டலம் என்றும், தமிழகம் அல்லாத கருநாடக மைசூர்ப் பகுதி முடிகொண்ட சோழ மண்டலம் என்றும் வழங்கியதுபோல் சோழர் கைக்கொண்ட ஆந்திரப் பகுதி “குலோத்துங்கசோழ மண்டலம்” என்று வழங்கியது. சோழநாட்டுப் பிரிவுகளைப்போல் ஆந்திரத்திலும் வளநாடு, நாடு ஆகிய நிருவாகப் பிரிவுகள் இருந்துள்ளன. குண்டூர்ப் பகுதி உத்தமசோழ வளநாட்டுப் பிரிவில் கம்பை நாட்டில் அமைந்திருந்தது. (தெலுங்குக் கல்வெட்டுகளில், நாட்டுப்பெயர் கம்ம நாடு என்றும், ஊர்ப்பெயர் பிரேம்பள்ளி என்றும் குறிக்கப்பெறுகின்றன; பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வூர் பாவபட்டு என்று வழங்கியுள்ளது).
தற்போது பாவநாராயணர் (BHAVA NARAYANA) என்னும் பெயருடைய இறைவர், மேற்படி கல்வெட்டுக் காலத்தில் பாவதேவாழ்வார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். கோயிலில் உணவளிக்கும் கொடைக்காக (சாலாபோகம் என்னும் நிவந்தம்) இராஜராஜன் மாடை என்னும் பெயருடைய காசு முப்பது அளிக்கப்பட்டது. கொடை அளித்தவர் சோழ அரசில் பெரும்பதவியில் இருந்த முடிகொண்டசோழப் பிரமமாராயர் என்பவர் ஆவார். முப்பது மாடைக்காசுகளைப் பெற்று நிவந்தத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கோயிலின் பொறுப்பதிகாரிகளான பதிபாதமூலத்தார், பட்டுடையார், பஞ்சாசாரியார், தானத்தார் ஆகிய தேவகன்மிகள் ஆவர். இவர்களில், கோயில் கருவூலத்தின் பொறுப்பேற்ற பண்டாரியும் ஸ்ரீவைஷ்ணவக் கண்காணியும் அடங்குவர். கோயிலின் கருவூலம் சோழர் காலத்தில் ஸ்ரீபண்டாரம் என்று வழங்கிற்று. அதன் நிருவாக அலுவலர் பண்டாரி (பண்டாரம் என்னும் மாற்றுச் சொல்லும் உண்டு) எனப்பட்டார். பதவிப்பெயரான பண்டாரி (பண்டாரம்) பின்னாளில் ஒரு குடிப்பெயராகவும், சாதிப்பெயராகவும் மாற்றம் பெற்றது.
இன்னொரு தமிழ்க்கல்வெட்டு, கோயில் இறைவரைப் பாவநாராயண ஆழ்வார் என்று குறிக்கிறது. இப்பகுதியில் திருவகம்படி என்னும் ஊர் இருந்துள்ளமை கருதத்தக்கது.
முதலாம் குலோத்துங்கனின் உப்பளம் பற்றிய கல்வெட்டின் செய்திகள்:
இக்கல்வெட்டு, பாபட்லா ஊரைப் படுவூறேவான இராஜமாணிக்கபுரம் என்று குறிப்பிடுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன் பெயரால் “அருமொழிதேவப் பேரளம்” என்ற பெரிய உப்பளம் இருந்துள்ளது. இங்கு உப்பு எடுத்தலை “அளம் செய்தல்” என்று கல்வெட்டு குறிக்கிறது. இந்த அளத்தின் நிலத்தில் சிறிது நிலம் கடல் கொண்டதால், உப்புப் படுத்தும் மாற்று இடமாகக் கோயிலின் தேவதான நிலத்தில் ஒரு பகுதியைத் தேர்வு செய்து அதற்கு ”சோழன் சக்கரப்பேரளம்” என்று பெயரிடுகிறார்கள். இப்பகுதியில், சிறிய அளவில் கடல் நீரால் நிலம் அழிந்தமை அறிகிறோம். உப்பள நிலம் கோயிலுக்குரியதாகையால், உப்பு விளைச்சலில் இருபதில் ஒரு பங்கு கோயில் ஸ்ரீபண்டாரத்துக்குச் செலுத்தவேண்டும். முன்பு அருமொழிதேவப் பேரளத்தில் உப்புச்செய்து வருகின்ற ஆள்கள் புது நிலத்திலும் வேலை செய்யலாம்.
பாபட்லா - உப்பளம் பற்றிய கல்வெட்டு-பகுதி-1
நிலம் கடல் கொண்டமை-கல்வெட்டில் குறிப்பு
கல்வெட்டு குறிப்பிடும் “விலைக்குக் கொள்ளும் சாத்தவர்” என்பவர், உப்பை விலைக்கு வாங்கி விற்பனைக்குக் கொண்டு செல்லும் வணிகர் என்பது தெளிவு. வணிகப்பண்டங்களைக் கொண்டுசெல்லும் வணிகர் குழு “சாத்து” என்னும் பெயரால் வழங்கிற்று. உமணர் (உப்பு வணிகர்) குழுவாகச் செல்வதைச் சங்க இலக்கியமான அகநானூறு “உமண் சாத்து” என்று குறிப்பிடுகிறது (அகம்-119). வணிகப்பண்டங்களைக் கழுதைகளின் மேல் ஏற்றிச் செல்வதைப் பெரும்பாணாற்றுப்படை “கழுதைச் சாத்து” என்று குறிப்பிடுகிறது. எனவே, கல்வெட்டு ”சாத்தவர்” என்று குறிப்பது உப்பு வணிகரையே.
பாபட்லா - உப்பளம் பற்றிய கல்வெட்டு-பகுதி-2
சாத்தவர் - உப்பு வணிகர் - கல்வெட்டில் குறிப்பு
கோயிலில் பிராமணர்க்கு உணவு அளிக்கும் சாலை இருந்துள்ளது. இது அக்ரசாலை எனப்படும். (அக்ரம்-agra- =உணவு). இக்கோயில் சாலையில் உணவளித்தலைக் கல்வெட்டு, “திருவக்ரம்” என்று குறிக்கிறது. இதற்கான பொன் முதலீட்டிலிருந்து பெறப்படும் பன்னிரண்டு கலம் (நெல்?) குலோத்துங்கசோழனின் பிறப்பு நாள் (நட்சத்திரம்) பூசத்தன்று “சாலை உண்கை”க்குப் பயன்பட்டது. கோயிலுக்குச் சேரவேண்டிய உப்பு கோயிலின் கருவூலமான ஸ்ரீபண்டாரத்தில் செலுத்தப்படவேண்டும். மேற்படி நிவந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் தானத்தார், தேவகன்மிகள், ஸ்ரீவைஷ்ணவக் கண்காணிகள் ஆகியோர் கண்காணித்து வருவார்கள்.
முடிவுரை:
பண்டைய நாளில் உப்பு, நெல்லுக்கு நேரான ஒரு பண்டமாகவும், மிகப்பெரிய வணிகப்பண்டமாகவும் விளங்கியது என்றும், உப்பளங்களுக்கு அரசர்களின் பெயரிட்டு வழங்கியமை அரசு வருவாய் அடிப்படையில் உப்பளங்களின் முதன்மையைக் காட்டுகிறது என்றும், கோயில் நிருவாகத்துக்கென கோயில் கூறு செய்வார் என்பவர் இருந்தது போலவே, உப்பளங்களுக்கு வரி விதித்து நிருவாகம் செய்யக் கூறு செய்வாரும், மேலாண்மை செய்யக் கண்காணி செய்வாரும் பணியிலிருந்தனர் என்றும், சமூக மரபில் உப்பு அளக்கின்ற “கையுறை” என்னும் வழக்கு இருந்துள்ளது என்றும், கடலை ஒட்டி அமைந்திருந்த உப்பள நிலங்கள் சில போது கடல் நீரால் அழிந்துபோதலும் நிகழ்ந்தது என்றும், பல நகரங்கள் உப்பு வணிகப் பெருமையங்களாகத் திகழ்ந்தன என்றும், கல்விப் பெருஞ்சாலைகளின் பயன்பாட்டுக்கு உப்பளங்களிலிருந்து உப்பு விலையின்றி வழங்கப்பட்டது என்றும் பல்வேறு செய்திகளைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம்.
தொடர்பு:
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment