Showing posts with label கவிஞர் அமீர். Show all posts
Showing posts with label கவிஞர் அமீர். Show all posts

Wednesday, April 13, 2022

தமிழகத்தின் நாயகி

படம்: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அமீர் 

தமிழகத்தின் நாயகி

⁠ — அமீர்


தமிழகத்தின் தாயாகி
அம்மக்களின் செல்லச் சேயாகி 
மொழி தாகத்தைத்
தீர்க்கும் வற்றா காவிரியே...
தமிழே.....
இன்று நீ
கோபம் கொண்டது ஏன்?

பணிவுக்கும்
அன்பிற்கும்  அடையாளமான நீ 
ஆவேசமாவது ஏன்?

ஆதிக்கக் கும்பலின் 
சத்ரிய  போதையின்
மொழிவெறியைக் கண்டா?

சுயமரியாதை சுடர்விடும் மண்ணில் 
உன்னை சூறையாட வந்த
சாஸ்திரத்தை கண்டா?

அல்லது

கட்டங்களில் கணக்கிட்டு
உன்னை வழிப்பறி செய்யவந்த 
கோத்திரத்தை கண்டா?

சூறையாடப்பட
நீ சொப்பன சுந்தரியல்ல 
கட்டடக்கரர்கள்
நினைப்பது போல்
நீ  பத்தாண்டு திட்டமும் அல்ல 

சான்றோருக்கு அழகு
சான்றாண்மை
அதை மறந்து 
மத வேற்றுமை போல்
மொழி வேற்றுமைக்கு
நடக்கிறது இன்று 
ஒரு ராஜசூய யாகம்

யாணர்களோ
வாணர்களோ 
அரசியலில் பிழை செய்தோருக்கு 
அறமே எமன் என்பது முதுமொழி

பூவின் மென்மையை
மேலுடுத்திய திருமகளே 
பாரதி சொன்னது போல்
தண்டச் சோறுண்ணும்
அவர்களுக்குத் தெரியாது
நீ
ஆபரணங்கள் விரும்பும் 
ஆரணங்கு அல்ல
கண்ணகி எனும் தீயை ஈன்ற
தமிழணங்கு என்று 

- அமீர் -






Friday, January 14, 2022

வாழ்க்கைக் கணக்கு

வாழ்க்கைக் கணக்கு

WhatsApp Image 2022-01-09 sivabalan.jpeg
படம்: சிவபாலன்
பாடல்: அமீர் 


வாழ்க்கைக் கணக்கு

-- அமீர்

ஒரு முற்றிய ரோஜா
மேனி கருத்து
கூனி நடந்து
அந்திவானின் ஒளியில்
லாபக்கணக்கு பார்க்கிறது

லாபமென்று எதைச் சொல்ல?
நட்டமென்று எதைச் சொல்ல?

பள்ளிக்குப் போகாமல்
பஞ்ச பிழைப்புக்கு ஓடிய
பிஞ்சு பருவத்தில்
உழைப்புக்கு
லாபமென்று தொடங்கிய
நட்ட  கணக்கு எண்ணிக்கை
செழித்து வளர்ந்தது

கட்டிக்கொண்ட கணவன்
வெட்டிக்கொண்டு போனதில்
கண்டபடி நட்டம்

கொட்டிவளர்த்த பிள்ளைகளும்
கைகழுவிக் கொண்டதில்
நட்டமோ நட்டம்

பிறந்தது முதல்
இடைவிடா பயணத்தில்
பருவமெல்லாம் நட்டம்

நிலவறை நோக்கிய
பயணத்தில்
நடக்காமல் போவது மட்டுமே
இவளுக்கு லாபம்....

"இப்படி
இயங்கியவளை யான் காணவே
என்ன தவம் செய்துவிட்டேன்" என்று
பழைய கவியின் பாடல்
நினைவுக்கு வந்ததால்...

அதிசயிக்கிறேன்
காதல் கொள்கிறேன்
உழைப்பைத் துணையாக்கிய
இந்த அறுபதைக் கடந்த
அழகியைப் பார்த்து !!!



ameer .jpgsivabalan.jpg
--------------------------------

Sunday, March 7, 2021

உலக மகளிர் நாளில் ....

 உலக மகளிர் நாளில் .... 



உயிர் கொடுத்து
முளைக்க வைத்து
உணர்வுகளாலேயே 
சிரிக்க வைக்கும்... தாய்

உடன் பிறப்பெடுத்துச்
செல்ல சிலம்பெடுத்து
நீள் பயணத்தில்
உற்ற துணையாகும்
உதிரமது... சகோதரி

இல்லத்திலும்
இல்லறத்திலும்
சேவைக்கு உருகொடுத்து
தேவைகள் தீர்க்கும்
ஓருயிர் ராணுவப்படை...மனைவி

ஒரு வார்த்தை கவிதையாம்
உயிர் பெற்ற கடவுளாம்
சர்வாதிகாரம் கொண்ட
குரும்பரசி ...மகள்

ராணியாகப் பிறந்து
ஞானியாக மறையும்
கலைவாணி எனும்
மகளிரே...
இன்றைய உங்களின் தினத்தில்
வேண்டுகிறேன்
உங்களின் ஆசீர்வாதம் 

- கவிஞர் அமீர்-



Friday, September 4, 2020

குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

 --  கவிஞர் அமீர்
___________________________________


ஆழிப்பேரலை போல்
அழிவுப்பேரலையில் இந்திய நாடு...
இதில்
தப்பிப்பிழைக்குமா
என்னுடைய வீடு...

பற்றிக்கொண்டு எரிகிறது
பாரதம் எனும் காடு...
என் பட்டாம் பூச்சிகளைப்
பாதுகாக்குமா என் சிறியகூடு...

யாரும் பார்க்க முடியா
சிம்மாசனத்தில் 
அழிச்சாட்டிய அரசனாய்
கொரோனா...
அதை எதிர்த்து
என் குடும்பத்தை நான் பத்திரமாய்
சேர்ப்பேனா?

தூண்கள் உடைந்து
துகள்களாகுவது போல்
இதயம்
தூள் தூளாகிறது
தினம் புதையும் உயிர்ப்பலி செய்தியால்...

அங்கொன்று
இங்கொன்று என்பதெல்லாம் போய்
எங்கெங்கும் என்றென்றும் 
என்றானது
இன்றைய நாட்கள்...

சுத்தம் சுகம் தரும்
ஊட்டம் எதிர்த்து நிற்கும்!
தொற்றை வெல்ல...
என் குடும்பத்தைக்  காக்க...
தோட்டத்துக்கோர் வேலியைப்போல்
அரணாக நான்!!!

-அமீர்-

Wednesday, April 29, 2020

எங்கும் தமிழ்

எங்கும் தமிழ்

 ——    கவிஞர் அமீர்

நிலா வந்தாள்
நில் என்றாள்!
ஏன்? என்றேன்
கவிதை என்றாள்!

இதோ...

சோகத்தைச்  சொல்வதற்கு
சொந்தமென்று இருப்பது நீதான்...
சந்தோஷத்தில் சேர்த்தணைத்து
சிரிக்க வைப்பதும் நீதான் ...

உண்டு களித்து
உறக்கத்திலும் நீதான்...
கண்டு ரசிக்கும்
விழிப்பிலும் நீதான்...

எங்கும் நிறைந்தவன்
எதிலும் இருப்பவன்
இறைவன் என்பது பொய்!

எனக்கு
எங்கும் நிறைந்து
எதிலும் இருப்பது
நீ தான்... என்றேன்!

தன்னைத்தான் சொல்வதாக நினைத்து நிலா சிரித்தது...

என் தாயாம்
தமிழைச் சொல்கிறேன்
என்பதைப் புரியாமல்!


தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




Sunday, April 12, 2020

தேவை அன்பெனும் மருந்து


 ——    கவிஞர் அமீர்


மனிதா
உனை ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்

"ஒரு துணையில்லா தூண் இங்கு
அளவில்லா சோகத்தில்
கருணையில்லா மனிதர்களால்
வறுமை எனும் ரோகத்தில்..."

ஏன் என்று சொல்?

"கொண்டு வந்ததென்ன
கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லை என்றானபின்
இன்னுமெதற்கு கொள்கைகள்"

என்றைக்கு இதற்கு
கொள்ளி வைப்பாய்?

"வற்றிப்போய் கிடக்கும் இந்த
முற்றிய மூதாதை
இந்த தொற்று நோய்க்கு மட்டுமிங்கு
வறுமை வந்ததில்லை"

ஏன் இதனை மட்டும் வளர்க்கிறாய்?

"ஈரமும் இறக்கமும்
கழன்று எங்கு போனது?
இந்த கொடூரம்
கொரோனாவைக்காட்டிலும் கொடியது"

இன்னும்  இதனை
நான் எப்படிச் சொல்ல?

"பசி
பட்டினி போக்க
உன்னிடம் இருந்தால்தானே
 நீ கொடுப்பாய்
பரவாயில்லை விடு"

நலமா சுகமா எனும்
வார்த்தை உனக்கு உச்சரிக்கத்  தெரியவில்லையா?

அன்பும்
அணைப்பும் மட்டுமே தேடுகிறது
இது போன்ற ஜனம்...
கிடைப்பதென்னவோ
உதாசீனம்!

தனித்தோர்க்குத் தேவையானது
அன்பெனும் மருந்து...
அதனை கிள்ளிக்கொடுத்தாவது
திருந்து!




தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




Monday, October 28, 2019

சுஜித் என்றொரு சிறுவன்


 ——    கவிஞர் அமீர்



இறைவா...
"மாபெரும் சபையினில் நீ நடந்தால் 
உனக்கு மாலைகள் விழவேண்டும்" 
என்ற கனவு சுஜித்தின் தாய்க்கும் உண்டு...

நடுக்காட்டுப்பட்டி மக்களின்
ரத்தத்தில் தோய்ந்து வருவதுதான்
உயிர்ப்பிச்சை கேட்கும் விண்ணப்பம்

இறைவா...
உன் பெயர் சொல்லி
உன்னைப்போல் என்று சொல்லி
ஊர் வளைப்பாரெல்லாம்
உற்ற துணையோடு
உறங்கச் சென்று விட்டார்கள்...
 
கோவணங்களின் கஷ்டங்களைத்
தீர்க்காதவர்கள் தான்
இங்கு ஆவணங்களை 
ஆள்வோராக இருக்கிறார்கள்...

காவலுக்குக் கட்டிவிட்ட வேலிகளே
வெள்ளாமையை விற்கிறார்கள்...
அந்த துரோகங்களால் 
இப்படி தினக்கூலிகளே மடிகிறார்கள்...

முதலைக்கண்ணீரைப் பார்த்த நமக்குத்
துக்கத்தில் சிந்தும்
கண்ணீரையே சில முதலைகள் 
முதலாக்குகிறார்கள்...
 
நிலவைத் தொட்டுக்காட்டி 
சாதனை என்கிறார்கள்...
நூறடி ஆழத்தில் ஊசலாடும் உயிரை
என்னவென்பார்கள்...
வாய் நாறுவதை மறந்து
வெறும் புகழ் பாடுகிறார்கள்...

இறைவா...
இங்கு
நடப்பதெல்லாம் கண்கெட்டபின்னே
நடக்கும் சூரிய நமஸ்காரங்கள்...

நடந்தகதை முடிந்தகதை  எனக்
கடந்த காலத்தைத் திருப்பினால்
ஆண்டுக்கு சில சுஜித்கள் 
அஞ்சலி கண்ணீரில்...



தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




Saturday, October 19, 2019

கர்வம் கொள்ளடி பெண்ணே

கர்வம் கொள்ளடி பெண்ணே


 ——    கவிஞர் அமீர்


அகரம் முதல் அனைத்தும் நீயடி 
குழந்தைக்கு...

உதிரம் முதல் உயிர் வரை நீயடி
பெற்றோர்க்கு...

சொர்கம் முதல் சர்வமும் நீயடி 
கணவனுக்கு...

உருவம் முதல் உவமை வரை நீயடி 
இறைவனுக்கு...

பருவமொரு பட்டம் பெற்ற துருவமடி நீ
இவ்வுலகுக்கு...

படைத்தவனுக்கும் பிறந்தவர்க்கும் 
படியளக்கும் பெண்ணே...
இது நீயின்றி இயங்கா உலகடி 
தவறில்லை நீ  கர்வம் கொள்!




தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)


Wednesday, September 25, 2019

தொல்லியலின் அழகடி ...கீழடி


 ——    கவிஞர் அமீர்


ஆதியிலே பிறந்த மொழி
தமிழ் மொழி!
அதை
அகழ்வாய்வில் சொல்லுதடி
கீழடி!

கலாச்சாரம்
நாகரீகம்
கொடிபிடித்து முன்னெடுத்த 
தமிழ்மொழி!
அதைச் சுவரினிலே காட்டுதடி
ஈரடி வாசகத்தில் 
அதே கீழடி!

பொதிகையிலே பிறந்தது
வைகையிலே வளர்ந்தது
தொல்லுலகில்
முதன்மையானது...
அது கீழடியில் வெளிச்சமானது...

தமிழுக்கு நிகரேது
தமிழருக்குக் குறையேது
எனும் வெண்பா கேளடி...
இன்னும்
மதம்
இனம்
வெறி
அடையாளக் குறியில்லா கீழடி!
இது
தொல்லியலின் அழகடி
தொன்மைக்கு பெருமையடி!

தமிழ்ச்சாமியின்
காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே 
பொட்டு வைக்க வாடி
அதற்கு ஏற்ற இடம் 
இந்த கீழடி!


---