Showing posts with label ருத்ரா இ.பரமசிவன். Show all posts
Showing posts with label ருத்ரா இ.பரமசிவன். Show all posts

Saturday, June 4, 2022

இமிர் கருந்தும்பி


 




                    "இமிர் கருந்தும்பி"

          குமிழப்  பரந்த  வெள்ளிடைத்   தீஞ்சுரம் 
          குலாவ ப்பூஞ்சினை இமிர் கருந்தும்பி 
          ஆலாடு விழுதின் செம்புல   மன்றில் 
          புற்றம் ஆங்கொரு  குற்றம் செத்து 
          நிழற்குடை கவித்த எழிலின் ஆட் சி 
          இறையுண்ட சீர்மலி வேந்தின் அன்ன 
          தமியள் அப்பால் ஒருதனி யிருந்தாள் 
          தன்னை அங்கு தனியொளி  காட்டும் என்று. 


பொழிப்புரை :
குமிழ மரங்கள் உடைய அந்த வெட்ட வெளியிடையேயும்  அழகிய இனிமை செறிந்த காட்டுவழியொன்றில் வளைந்து  வளைந்து அந்த மரத்தின் பூங்கிளைகள் உரசும். அதன் மீது  கரிய சிறு வண்டுகள் ஒலியெழுப்பும்.

ஆல மர  விழுதுகள் ஆடும் ஒரு செம்புலத்து மேட்டில் குன்றம் போல் ஒரு புற்று  உயர்ந்து நிற்கிறது. அந்த அடர்ந்த காட்டின் நிழல்  ஒரு  குடைபோல்  கவிந்து ஒரு வெண்கொற்றக்குடையாய்  அந்த அழகின் ஆட்சியை நடத்துகிறது.

ஆனால் அந்த அழகு கோலோச்சும் திறனுக்கும் திரை  (கப்பம்) செலுத்தப்பட்டு பெறும் ஓர் அரசன் போல் அவள் (தலைவி) அங்கு வீற்றிருக்கிறாள். ஒரு தனி சிறப்புடன் அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள்.

தனது தலைவன்  (தன் + ஐ =தன்னை) அங்கு வந்துவிடுவான்.அவன் வந்தவுடன்  அவனது முகம் பூக்கும் பேரொளி அங்கு பரவி நிற்கும் என்று அவள்  மகிழ்கிறாள்.

  —  ருத்ரா இ. பரமசிவன் (சொற்கீரன்)

Thursday, April 7, 2022

இன்று...



-- ருத்ரா இ. பரமசிவன்




இன்று நாள் நல்ல நாள்.
நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி
ஜோஸ்யம் சொல்லிவிட்டது.
மனசுக்குள் இந்த இன்பச்சுமையை
திணித்து திணித்து சுமையாக்கி
சுமப்போம் வாருங்கள்.
எல்லா நிகழ்வுகளுக்கும்
நாம் "சந்தோஷம்" என்றே பெயர் சூட்டுவோம்.
பாருங்கள்
நம் பாரங்கள் இலேசாகி விட்டன.

இன்றுகளின் 
முகமூடிகள் தான்
நேற்றுகளும் நாளைகளும்!
இப்போது
அந்த சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகள் 
கூட‌
நம் முகத்தின் எதிரே படலம் காட்டும்
மனத்திரையில்
நிறப்பிரிகை செய்து காட்டுகிறது.
புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்புக்கிரணங்களும்
"சந்தோஷ"ப்பிசிறுகளை
மாலையாக்கி விட்டது.

அழுவதும் ஆனந்தம்.
ஆனந்தமும் அழுகை.
தீம் திரிகிட..தீம் திரிகிட..
அக்கினிக்குஞ்சுகளும்
அல்வா இனிப்புகள்.
சாம்பலாய் விழுவதிலும்
சண்பக‌ப்பூ பனித்துளியை 
சுமந்து நிற்கிறது.
விஞ்ஞானிகளின் "க்ராண்ட் யூனிஃபிகேஷன்"
இந்த எல்லா பிரபஞ்சங்களையும்
க்ரஷ் செய்து அதோ கோப்பையில் நீட்டுகிறது.
அந்த ஜனன மரண ரசம்
பஜகோவிந்த ரசமாய் மழைபெய்கிறது.
ஏமாந்து கொள்வதே பரம சுகம்.
அதுவே எல்லாவற்றையும் நனைக்கட்டும்.
அறியாமை அறிவை விழுங்கித்தீர்க்கட்டும்.
சுபம்..சுபம்..சுபம்!




Saturday, December 25, 2021

சிந்துபூந்துறை


-- ருத்ரா இ.பரமசிவன்


ஒரு திருநெல்வேலிக்காரனின்
நினைவுக்குள்
பளிங்குப்படித்துறையாய்
நீண்டுகிடப்பது
சிந்து பூந்துறை.
கரைத் திட்டில் அந்த‌
பனங்குட்டி நிழல்களில்
இன்னும் சொட்டு சொட்டாய்
உதிர்ந்து கொண்டிருப்பது
புதுமைப்பித்தனின்
"கயிற்றரவு"
சிந்தனைகளின்
எழுத்துச்சிதிலங்கள் தான்.
அந்த சிறுகதை
பிளந்த உதடுகளில் வழியும்
சொல் ஒலிப்புகளில்
நியாய வைசேஷிக தத்துவங்கள்
கடவுளை
பனைமரத்துச் சில்லாட்டைகளில்
வடிகட்டித்தரும்
அந்த அரைகுறைப் புளிப்பு இனிப்பு
பதனீரை உறிஞ்சுவது போல‌
எழுதிக்காட்டியிருக்கிறார்
புதுமைப்பித்தன்.
சிந்துபூந்துறைக்கும்
வண்ணாரப்பேட்டைக்கும்
நடுவே படுத்துக்கொண்டு
ஊர்ந்து கொண்டிருக்கும்
தாமிரபரணியைக்கூடத்‌
தன் எழுத்தின் தீக்குச்சி கொண்டு
உரசி உரசி
நெருப்பு பற்றவைத்து அதில் அவர்
சமுதாயத்தின்
இனிப்பையும் கசப்பையும்
பரிமாறியிருக்கும் நுட்பமே
சிந்துபூந்துறையின் கருப்பை கிழிந்த‌
பனிக்குட உடைப்புகள் தான்.
அவர் எழுத்துக்களின் பிரசவம்
ஓர் ஏழைக்குமாஸ்தா வீட்டு
கிழிந்த பாயில்
அரங்கேறும் வெப்பத்தில்
ஓர் உயர்வான இலக்கியம்
குவா குவா என்ற
ஒலிப்புகளோடு ஒரு
புதிய யுகத்தின் முகத்தைப்
பதிவு செய்யும்.
ஒவ்வொரு தடவையும் அந்த‌
சிந்துபூந்துறை ஆற்றில்
நான் முக்குளி போடும்போதெல்லாம்
ஏதோ ஒரு புதிய‌
முலாம் பூசி எழும் ஓர்மையை
தைத்துக்கொண்டு வருவதையும்
உணர்கின்றேன்.
அந்த ஆற்றுக்குள்ளும் ஒரு
ஆற்றுப்படை
ஊர்வலம் போவதை
நான் படித்துப் படித்து
அந்த பனங்காட்டுச் சலசலப்புகளின்
பனைச்சுவடிகளில்
பதிந்து கிடப்பதை பிய்த்துக்கொண்டு
வெளியேற முடியவில்லை.


------------




Sunday, December 19, 2021

மாதங்களில் நான் மார்கழி!

-- ருத்ரா இ.பரமசிவன்


மாதங்களில் நான் மார்கழி!
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ணப் பளிங்கு உயிர்த்துளி  எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்புள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
நின்றவண்ணமும்
கிடந்த வண்ணமுமாகவே
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
நான்கு மறைக்குள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.
இதை நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து நகர்ந்து
என்னைத் தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்குள் பாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.
பாடங்கள்
சந்தியாவந்தனத்துடன்
மனப்பாடம் செய்யப்படுவதற்கானவை அல்ல.
பாடங்கள்
படிக்கப்பட வேண்டியவை.
அறியப்பட வேண்டியவை..
"மறை"கப்பட வேண்டியவை அல்ல.
அறியப்படுவதற்காக
அப்புத்தகங்கள் திறக்கப்படுவதே
உங்கள் சொர்க்க வாசல்.

------------------

Sunday, September 5, 2021

ஒரு வகுப்பு நடக்கிறது

 -- ருத்ரா இ பரமசிவன்

(ஆசிரியர் தினக்கவிதை)


அந்த வகுப்புக்குள்
ஒன்றன் பின் ஒன்றாக‌
ஐந்து சிட்டுக்குருவிகள்
பறந்து வந்தன.
கிரீச் கிரீச் ஒலிகள்
வகுப்பு முழுதும்
எதிரொலித்தன.
குருவிகள் சிறகடிக்கும் போது
மாணவர்களின்
புத்தகங்களின் பக்கங்களும்
சிறகுகள் போல் படபடத்தன.
எல்லோருடைய கண்களின்
கருவிழிகளில் கூட
குருவிகளின் சிறிய பிம்பங்கள்
சிதறி ஓடின!
ஒரு குருவி அறை முழுதும்
வட்டம் அடித்துக்கொண்டே
இருந்தது.
இரண்டு குருவிகள்
ஒன்றின் சிறகை மற்றொன்று
கவ்விக்கொண்டே
பறந்து பறந்து
கிரீச் கிரீச் என்றன.
அது என்ன?
அது என்ன மொழி?
அது கலித்தொகையா?
குறுந்தொகையா?
ஒரு குருவி ஒற்றையாய்
அறையின்
உத்திரத்து விளிம்பில் இருந்து
ஒலித்துக் கொண்டே இருந்தது.
வால் பகுதி
எதுகை மோனைகள் போல‌
அசைந்து கொண்டே இருந்தது.
ஒரு குருவி எச்சமிட்டது
சரியாக‌
ஆசிரியரின் தலையில்.
கொல் என்ற சிரிப்பலை
வகுப்பு முழுவதும்.
அவரும் சிரித்துக்கொண்டே
துடைத்து விட்டுக்கொண்டார்.
வகுப்பு முடிந்ததாய்
மணி ஒலி கேட்டது.
எல்லா குருவிகளும் வெளியேறின.
ஆசிரியர் சொன்னார்.
நான் எடுக்க நினைத்த வகுப்பை
இந்த குருவிகளே எடுத்துவிட்டன.
என்றார்.
எதைப்பற்றி அந்த வகுப்பு?
அது இது தான்.
"சுதந்திரம்"


-----


Sunday, August 15, 2021

மகுடம்

-- ருத்ரா இ பரமசிவன்


எழுபத்தைந்து ஆண்டுகளின்
கனமான சுதந்திரம்
இதோ
நம் ஒவ்வொருவரின் தலையிலும்
சுடர்கிறது
மணிமகுடமாய்!
வரலாற்றின் தியாகத் தருணங்கள்
நம் முன்னே நிழலாடுகின்றன.
தூக்குக்கயிறுகள்
துப்பாக்கி குண்டுகள்
அதிரடியான பீரங்கிகள்
இவற்றில்
மடிந்த இந்திய புத்திரர்கள்
வெறும் குப்பைகளா?
மியூசியங்களில் அவர்கள்
உறைந்து கிடந்த போதும்
அவர்களின் கனவுகள் இன்னும்
கொழுந்து விட்டு எரிகின்றன‌
ஆம்
இன்னும் நமக்கு வெளிச்சம்
தருவதற்குத்தான்!
ஆனால்
ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளே
இன்னுமா
நீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?
சாதி மத வர்ணங்கள்
எத்தனை தூரிகைகள் கொண்டு
தீட்ட வந்த போதும்
ஓவியத்தின் வரி வடிவம்
விடியல் கீற்றுகளையே
நம் கண்ணில் இன்னும் காட்டவில்லையே!
இப்போது அந்த மகுடத்தின்
கனம் தெரிகிறதா?
அவை மயிற்பீலிகள் அல்ல‌
அவற்றுள் மறைந்திருப்பது
புயற்பீலிகள்!
உங்கள் சுவாசமாகிப்போன‌
அந்தப் பெருமூச்சுகளில்
நம் மூவர்ணம் படபடத்துப்
பறப்பது
உங்களுக்குத் தெரிகிறதா?
"ஜெய்ஹிந்த்!"



-----

Friday, July 2, 2021

செம்பரல் முரம்பு

-- பாவலர் ருத்ரா இ பரமசிவன்



பாவலர் ருத்ரா இ பரமசிவன் எழுதிய சங்கநடைச்செய்யுள் 

          செம்பரல் முரம்பில் நீள்வழி வெங்கான்
          இலம் அசைஇ நெருப்பே பூத்தன்ன‌
          கடும்பொறை அடுக்கம் திரிசுரம் வாங்க‌
          மரல் தழீஇய மண்ணுழைப் பாம்பு
          கூர்வான் படுத்த எருவைச்சேவல் நீள்விரல்செத்து
          அகன்சிறை விரித்த அடுநிழல் ஆங்க
          கண்டே அஞ்சி அண்ணிய சிறுபூப்
          பைம்புதல் ஒளிக்கும் காட்சியும் மலியும்.
          காழ்த்த கடுமுள் நெடுமரம் மறிப்ப‌
          ஆளி எதிரிய அவிர்நிழல் அண்டும்
          சிறுமுயல் தவிப்ப வெள்ளிய பருதி
          கனல் பெய் ஆறு கடாத்த காலையும்
          இறைமுன் எல்வளை பற்றிச்செயிர்க்கும்
          நெஞ்சம் தோய்ந்து ஏய்க்கும் அவள்
          ஒள்வீ நகை அவிழ் கள்ளக்கூட்டம்
          கண்டிசின் அவனும் கல் இடறி வீழ
          இடர்ப்பட்ட ஞான்றும் இனியவே நகைக்கும்.


பொழிப்புரை:
செம்மண் தரைப் பருக்கைக்கற்கள் நிறைந்த கரடு முரடான நெடிய வழியில் வெப்பம் மிகுந்த காட்டில் தலைவன் பொருள்தேடிச் செல்கிறான். வழியில் இலவ மரத்துப்பூக்கள் நெருப்புப்பூக்கள் போன்று மலர்ந்திருக்கின்றன.  இறுகிய பாறைகள் மலைகள் போன்று எதிர்ப்பட அதைத்தொடர்ந்து வளைந்து வளைந்து (திருகி)செல்லும் செல்லும் காட்டுவழி (சுரம்)தொடர்ந்து வளைந்து செல்ல (வாங்க) அவனும் செல்கிறான். அப்போது மடல் எனும் காட்டுச்செடி (சிறிய வரிகள் நிறைந்து நீண்டு இருக்கும்) ஒரு மண்ணுழிப்பாம்பு போல் தெரிய அதை அருகே உள்ள மண்ணுழிப்பாம்பு சுற்றித்தழுவி இருக்கும். அதன் கூரிய பார்வையில் படும்படி வானத்தில் பறக்கும் ஆண்பருந்து நீண்ட விரல்களைப் போன்ற‌  (நீள்விரல் செத்து) சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்.  அதன் வெயில் கலந்த நிழல் கூட அதற்குத் தென்படும். அதனால் அஞ்சி அருகில் உள்ள (அண்ணிய)சிறு பூக்கள் பூத்த புதருக்குள் மறையும். இது போன்ற காட்சிகள் நிறைந்ததே அக்காட்டு வழி. அது மட்டுமின்றி முற்றிய உயரமான‌ முள் மரங்கள் எதிர்ப்படும். (சங்ககாலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும்) யாளி எனும் விலங்கின் உருவத்தைப்போன்ற (எதிரிய) வெம்மை மிகுந்த நிழலை அண்டிநிற்கும் சிறுமுயலும் அங்கே வழியில் தவித்து நிற்கும். அத்தகைய வெள்ளைச்சூரியன் (வெள்ளிய பருதி...இங்கே பருதி என்பது சூரியனின் வட்டத்தைக்குறிக்கும். பரிதி என்பது தான் சூரியனைக்குறிப்பது) நெருப்பு மழை பொழியும் காட்டாற்றைக் கடந்து கொண்டிருக்கும் பொழுதிலும் தலைவனின் நெஞ்சில் தலைவியின் அழகு மயக்கம் ஊட்டுகிறது. ஒளிபொருந்திய அழகிய வளைகள் (எல்வளை) அணிந்த அவள் முன்கையை (இறை முன்)ப் பற்றி உணர்ச்சியினால் உந்தப்படுகிறான். அவளின் சிறு சிறு முறுவல்கள் ஒளிரும் சின்னஞ்சிறிய பூக்களைப்போன்று இதழ் சிதறி கள்ளத்தனமான நகைப்புக் கூட்டங்களைக்கொண்டு அவன் நெஞ்சம் புகுந்து ஏமாற்றும். இந்த கற்பனைக்காட்சிகளில் திளைத்த அவனோ காலில் கல் இடறி விழுகின்றான்.அப்பொழுதும் கூட அவளைக்கண்டு இனிமை நெகிழச் சிரித்து மகிழ்கின்றான்.



Tuesday, June 1, 2021

இனிய நண்பனே!


-- ருத்ரா இ.பரமசிவன்




இனிய நண்பனே!
உனக்கு 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உலகத்தின் எந்த புள்ளியிலும்
கர்ப்பம் திறக்காத‌
தருணங்களே இல்லை.
அந்த ஒரு பொன்னான தருணத்தில்
உதித்தவனே!
நீ வாழ்க! நீடூழி வாழ்க!

வாழ்க்கை எனும் ஒரு 
மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும்.
அதை விரலில்
சுழட்டி சுழட்டிப்பார்.
அதன் வண்ணங்கள் உன்னைக்
கிறங்கடிக்கலாம்.
அந்த மயில் வேட்டையாடப்பட்டதா?
அந்த மயிலே உனக்கு
இறகு உதிர்த்துக்கொடுத்ததா?

வாழ்க்கையின் காரணங்களை
நீ
தேடிக்கொண்டிருக்கும்போது
அது உன்னை விட்டு விட்டு
பல காத தூரம் அல்லவா
சென்றிருக்கும்.
சரி!
பின்னோக்கியே செல்லலாம்
என்று 
நீ திரும்புவாயானால்
நீ வந்ததே தவறு.

பிறவி தான் 
பாவத்திலும் பெரிய பாவம்
என்கின்றவர்கள்
உன்னை அந்த குகையில் மூடி
அஞ்ஞானப்பெரும்பாறை கொண்டல்லவா
அடைத்து விடப்பார்க்கிறார்கள்.
பிரமத்தைப் பார்க்கவேண்டும் என்று
சொல்பவர்கள்
இப்படி 
நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு
அதன் அடிக்கிளையையா
வெட்டுவார்கள்.

அரிது அரிது 
மானிடராய் பிறத்தல் அரிது
என்ற ஞானமே
எல்லா பிரம்மஞானங்களையும்
பின்னுக்குத் தள்ளியது.
மனிதா!
முதலில் வாழ்க்கை உன்னை
தள்ளிக்கொண்டு போகும்
அந்த நடுக்கடல் வரை.
அப்புறம் அந்தப் படகின்
துடுப்புகளும் நீயே!
துடிப்புகளும் நீயே!

மண்டபங்களில் உபன்யாசங்கள் 
கேட்டுவிட்டு
உன் "கொள்ளிச்சட்டிக்குள்"
போய் விழுந்து கொள்ளாதே.
பிரம்மம் என்பது
உயிர் ஆற்றலின் நீண்ட சங்கிலி.
அதற்கு கோடரி தூக்கும்
வேதாந்தங்களைக் குப்பையில் போடு.

பிணங்களாய் நீ குவிந்த போதும்
இந்த வைரஸ்கள் சொல்லும் பாடத்தைப்
படித்துப்பார்.
ஆம்!
மனிதா!
நீ பெருகு!பல்கிப்பெருகு!
உன் வெள்ளமே பேரறிவு.
உன் பெருக்கமே பேரொளி!
ஆற்றலாய் பெருகு!
இந்தப் பிரபஞ்சங்களே நீ தான்.

நீ வற்றாத ஊற்று.
சுரந்து கொண்டே இரு.
பிறந்து கொண்டே இரு.
இறப்பு 
ஒரு நிறுத்தற்புள்ளி
முற்றுப்புள்ளி அல்ல.
நீ
பிறந்து கொண்டே இரு.
உனக்கு 
நிரந்தரமாய்
உன் பிறந்த தின வாழ்த்துக்கள்

இந்த 
சூரிய ஒளிப்பிழம்பில்
அச்சிட்டு அச்சிட்டு 
வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
என் இனிய நண்பனே!
இந்த பிறந்த தின வாழ்த்துக்களே
இன்னும் இன்னும் 
கோடிக்கணக்கான மைல்களுக்கு
உன்னை இட்டுச்செல்லும்.




Saturday, March 13, 2021

"மனிதன் நினைப்பதுண்டு..."

 
"மனிதன் நினைப்பதுண்டு..."

-- ருத்ரா இ பரமசிவன்


இந்தப்பாடலை
எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்.
சலிக்க வில்லை.
அலுக்க வில்லை.
நிறுத்த மனமே வருவதில்லை.
பாடலுக்கிடையே வரும்
அந்த இசை அமைப்பு..
அப்பப்ப!
உள்ளம் உருகி வழிந்தோடுகிறது.
இதயம் இன்னிசையில் நொறுங்குகிறது.
ஓ! எம் எஸ் வி அவர்களே
அந்த இசை நிரவல்களில்
கடல்கள் வாய் பொத்தி
அடங்கிப்போகின்றன.
செவி வழியே பிரபஞ்சங்கள் எல்லாம்
நுழைந்து சன்னமான ஒலியில்
சன்னல்களை சாத்திக்கொண்டு
குலுங்கி குலுங்கி அழுகின்றன.
அந்த அழுகையும்
இனிமையோ இனிமை
கொடும் இனிமை.
அந்த கருவிகளை இசைத்த‌
இசைஞர்களுக்கு
இதயங்கள் இருக்கும் இடத்தில்
இருப்பது
உருக்கம் உருக்கம் உருக்கம் மட்டுமே.
நிரந்தர தூக்கமாயினும் சரி
நிரந்தர மற்ற தூக்கமாயினும் சரி
ஓ! எம் எஸ் வி அவர்களே
எங்களுக்கு
அந்த உன் இசைத்துடிப்புகளே
இன்பத்தலையணைகள்!





Thursday, January 14, 2021

எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல

 
-- ருத்ரா இ.பரமசிவன்

            எல் உமிழ்  இரும்பொறை  அம்பொறி கனல
            கடுங்கண் காட்டும் முள்படர் இலவ‌ம்
            அவிழ் இலை செறிந்த அழற்பெருங்கானம்
            எரியூர் தோற்றியும் ஓவா நடையின்
            மீமிசை ஊக்கி செல்வம் நசைஇ
            ஆறு படுத்த நெடும்பணைத்தோள!
            இவண் ஓர் இறைநெகிழ்ந்த வளையள் ஆங்கு
            கொல் அலரி படுத்த கொடுநோய் வீழ்ந்த
            நிலைகண்டு அன்னை எவன் ஆங்கு
            "ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை"
            ஓரை ஆடி ஒள் மணல் தெள்ளினை
            எனவாங்கு
            பொய்ச்சொல் பெண்டிர் முருகு வெறியாடல்
            நின் நோய் ஆற்றும் கண்டிசின் தெளினே
            என்று ஊக்கிய அன்னைக்கு சொல்லும்:
            அவன் மின்னல் அகலம் யான் தோயும் காலை
            முருகன் என்னை அவன் அய்யன் என்னை
            நத்தம் இல்லா அத்தமும் ஏகுவன்
            அவனை ஓர்ந்து யான் சேரும் மாட்டே.

__

தலைவன் பொருள் தேடி கொடிய பாலையின் காட்டுவழியில் செல்ல தலைவியோ பிரிவுத்துயரில் மிகவும் வாடுகிறாள்.  இதைக்கண்ட அன்னை அவளுக்கு முருகன் வெறியாடல் என்னும் "சாமியாட்டம்" ஏற்பாடு செய்ய தலைவியோ முருகன் வந்தாலும் சரி அவன் அப்பனே வந்தாலும் சரி நான் என் தலைவன் வழி தான் ஏகுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை தோழி தலைவனுக்குச் சொல்வது போல் அமைந்துள்ளது இப்பாடல்.

அகநானூற்றுப் பாடல் (எண் 60) குடவாயிற்கீரத்தனார் எனும் புகழ்மிக்க புலவரால் பாடப்பட்டது.
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை" என்ற வரியை அப்பாடலில் எழுதியுள்ளார்.ஆழம் செறிந்த சொல்லழகு மிக்கது இவ்வரி. கடற்கரையை அடுத்த நீர்ப்பரப்பில் எழும் வாடைக்காற்று வேகமாக வீசி கரையில் மணல் மேடுகளை உருவாக்குகிறது என்று இங்கே பொருள்படும். இதில் ஓரை என்பது கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாய் பெண்கள் வண்டல் மண்ணில் பாவை செய்து விளையாடுவதைக்குறிக்கும். தலைவி இப்படியெல்லம் விளையாடியதால் தான் இந்த நோய் வந்ததோ என்று அந்த வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள் அன்னை .தலைவியோ காதலனின் முன் எந்தக்கடவுளும் பொருட்டு இல்லை என்பதாய் காதல் பற்றி உறுதியாக இருக்கிறாள்.

இந்த சங்கத்தமிழ்க்காட்சியையே நான் சங்கத்தமிழ் நடைச்செய்யுட் கவிதை ஆக்கி இங்கு எழுதியுள்ளேன்.

Friday, October 23, 2020

உன்னையே நீ எண்ணிப்பார்

உன்னையே நீ எண்ணிப்பார்

 -- ருத்ரா இ.பரமசிவன்


நம் மைல்கற்கள்
களைத்து விட்டனவோ?
இனி அந்த
குழியைத்தவிர வேறு
எதற்கும்
இனி நடப்பதற்கு மைல்கற்கள்
நடுவதற்கும் அவசியம் இல்லையோ?
மனித மலர்ச்சியின்
பயணம் இதற்குமேல்
நடைபோட இயலாமல்
மனிதம் தன்
சுவாசத்தையெல்லாம்
இழந்து விட்டதோ?
அதோ பாருங்கள்
முக கவசங்கள் மற்றும்
கவச உடைகளின்
உடைந்து போன
செயற்கை சுவாசக்கருவிகளின்
குப்பைமேடுகள் எல்லாம்
இமயமலைகளையும் விழுங்கி விடும்
உயரத்துக்குச்
சென்று விட்டனவே!
அஞ்சத்தேவையில்லை.
பயங்களை உதறி விடுங்கள்.
கொரோனாவுக்குள்
ஒரு ரகசிய சங்கீதத்தின்
சுருதி ஒன்று
மனிதனுக்கு
மெல்லிதாய் கேட்கத்தான்
செய்கிறது.
ஓ! மனிதா!
என்னை விடவும் கொடியதான‌
மூடத்தனத்தின் அரசியல்
உன்னை மூடிக்கிடக்கிறதே!
என்னால்
உன் கூட்டுக்குள்ளேயே
முடங்கிக்கிடந்தாவது
அந்த ஒளியை
அந்த ஒலியை
அந்த விஞ்ஞான நுட்பத்தை
நீ
புரிந்து கொள்ள முயலக்கூடாதா?
வானம் அளந்து
பிரபஞ்சங்களையெல்லாம்
உரித்துக்கொண்டு
கிளர்கின்ற அறிவின் ஒளி
உன் மீது
புதிய வெளிச்சத்தைப் படரவில்லையா?
பூஜை நைவேத்தியங்கள்
பக்தர்கள் இன்றி எளிமையாக‌
நடந்தன.
பிரம்மோற்சவங்கள் எல்லாம்
அப்படியே
பிரம்மங்கள் இன்றியே
இன்னும்
எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஆம்.
கடவுள்கள் இன்றி
அவற்றின் பேரால் பொய்மை போற்றும்
சாதி மதங்கள் இன்றி
காழ்ப்புகள் கழன்று
இந்த உலகம் எளிமையாகச்
சுழன்று கொண்டிருக்கிறது.
மனிதா!
உன் மூளையை எல்லாம்
கழற்றி
கொரோனாவாய் ஆகிய
இந்த அடகுக்காரனிடம்
கொடுத்துவைத்திருக்கிறாய்.
ஏதோ ஹெல்மெட்டைக் கழற்றி
கொடுத்து வைத்திருப்பது போல.
போதும்!
நீ பயந்து பயந்து செத்தது.
எப்போது
உன் உயிர்களை
சிந்தனையால் சாகடிக்கவே முடியாத‌
உன் அறிவின் செல்களை
இந்த "அடகிலிருந்து" மீட்டுக்கொள்ளப்போகிறாய்?
இதற்கு
அசலும் வேண்டாம் வட்டியும் வேண்டாம்.
"உன்னையே நீ எண்ணிப்பார்"
உன் சமுதாயத்தையே நீ எண்ணிப்பார்"
அது போதும்.





Wednesday, September 16, 2020

உன் சிரிப்பு

உன் சிரிப்பு

—  ருத்ரா இ.பரமசிவன்

உன் சிரிப்பு
ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய்
அன்றொரு நாள்
என் மடியில் வந்து விழுந்தது.
அது முதல்
நான் இந்த வானம்.
அது முதல்
நான் கடலின் அலைகள்.
அது முதல்
எனக்குள்ளே
தமிழின் ஒலி.
உயிரெழுத்து
மெய்யெழுத்தைக்காட்டியது.
இலக்கணத்துள்
இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது
இனிமையாய் நெருடியது.
உன் சிரிப்பின் மகரந்த சேர்க்கைக்கு
எத்தனை கருவண்டுகள்
சிறகுகள் கொண்டு
நிழல் போர்த்தியது.
இதன் நுண்மாண் நுழைபுலம்
மெல்ல கிசுகிசுத்தது
காதல் என்று!
ஆர்வம் மிக‌
அந்த ரோஜாப்பூவின்
நிறம் தேடினேன்.
அவை சருகுகளாய் கிடந்தன‌
ஆனாலும்
அந்த சிரிப்பின் உயிர்ப்புடன்.
அத்தனை யுகங்களா கடந்து போயின?
இப்போதும்
அவை என் ரோஜாவின் "ஃபாசில்கள்"




Sunday, February 23, 2020

தாமிரபரணி



—  ருத்ரா இ.பரமசிவன்


பளிங்கு நீரை
எங்கள் உயிராக்கி பயிராக்கி
மண்ணின் பரிணாமத்தை
மலர்த்திக்காட்டி ஓடுகின்ற
பொன்னின் பொருநையே
வாழி நீ வாழி!

கல்லிடைக்குறிச்சி
கள்ளிக்காடாயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

அம்பாசமுத்திரம்
வம்பாய் வறண்டு தான் கிடக்கும்
நீ வரவில்லை என்றால்!

சேரன் மாதேவி
சோறு கண்டிருப்பாளா
நீ வரவில்லை என்றால்!

நெல்லைச்சீமை
இல்லை சீமை ஆயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

சிந்து பூந்துறையும்
சீரிழந்து நிற்கும்
நீ வரவில்லை என்றால்!

திருவைகுண்டம்
வெறும் வைகுண்டம் ஆகியிருக்கும்
நீ  வரவில்லை என்றால்!

ஆறுமுகன் ஏரி
மாறு முகம் கொண்டு பாழ் பட்டிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

காயல் பட்டினமும்
காய்ந்தே கிடந்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

வங்காள விரிகுடாவும்
அலை விரியாக்  கடலாகும்.
நீ வரவில்லை என்றால்!

"திருச்சீர் அலைவாய்" இல்லாத
திருமுருகாற்றுப்படைதான்
நமக்கும் கிடைத்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

செலவாய் செலவாய்  எங்களுக்கு
இழப்புகள் எத்தனை வந்தாலும்
வருவாய் வருவாய் எங்களுக்கு
வருவாய் அருள்வாய் பல கோடி!

எங்கள் உயிரினும் மேலான
பொருநையே
ஊழிகள் பலவாக ஓடிவிடினும்
வாழி நீ !வாழி நீ!!
எங்கள்
நீடு வளர் பொருநையே !
வாழி நீ !வாழி நீ!!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





Sunday, November 10, 2019

தீர்ப்பு

தீர்ப்பு

—  ருத்ரா இ.பரமசிவன்


மண்ணில் மனிதன் வந்ததும்
வரலாறு.
மண்ணுள் மனிதன் புழுவாய் மறைவதும் 
வரலாறு.
வரலாறுகள் எழுதப்படலாம்.
வரலாறுகள் புனையப்படலாம்.
மனிதன் தன் பிம்பத்தைப் பார்க்கும்போது
அழகாய் இருக்கிறான்.
அவன் 
மொத்த மனிதர்களின் பிம்பம்
எனும் சமுதாயத்தை 
உற்று நோக்கும் போது
கோடி ஆண்டுகளுக்கும் முன்
கேட்டிருந்த‌
டைனோசார்களின் உறுமல் ஒலிகள்
எதிரொலிக்கின்றன.
அந்த ராட்சத எலும்புக்கூடுகளில்
மிச்ச சொச்சமாய் கிடக்கும்
காலத்தின் சுவடுகள்
மனிதனின் தோள்களில்
கிடக்கின்றன.
மனிதம் எனும் அடி நிழல்
அந்த அடி நிழலை அச்சடித்துத் தந்த‌
ஒளியைத் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆம்
இன்னும் தேடல் தொடர்கிறது.
இந்த அடர்த்தி மிகுந்த இருட்டுக்குள்
தேடலின் காலடி ஒலிகள்
இன்னும் நமக்குக்
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



Monday, October 21, 2019

அந்தி

—  ருத்ரா இ.பரமசிவன்



அந்திச்சிவப்பை
இதழ் பிரித்துக் காட்டுகிறாள்
வானத்து மங்கை.
புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌
காமத்துப்பாலின்
முத்தம் சொட்டுகிறது.
வருடி வருடிச்செல்லும்
கடிகார முட்களிலும்
ரோஜாவின் லாவா.
உயிர்த்துளிகளில்
ஒரு விளிம்பின் ஓவியம்
மயிர் சிலிர்த்த தூரிகையால்
இன்னும் இன்னும் 
உயிர் அமுதம் ஊட்டுகிறது.
ஒரு வடிகட்டின மடையன்
இதற்கு 
பேனாவையும் பேப்பரையும் கொண்டு
சமாதி கட்டுகிறான்




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




Wednesday, September 25, 2019

கீழடி

—  ருத்ரா இ.பரமசிவன்


தமிழா!
உன் காலடி கீழடியில்
உன் இமயம்.
பனை ஏடுகள்
பாதி திறந்தன.
பானை ஓடுகள்
மீதி திறந்தன.
இவர் மீறல்கள்
உன் கீறல்களில்
உடைந்து போயின.
உன் தன்மையே
உன் தொன்மை தான்.
நீ தந்த சமக்கிருதமா
உனக்கு சமாதி ஆவது?

தமிழா!
இப்போதாவது விழி.
இது தான் உன் ஒளி.
இதுவே உன் வழி.
அர்ச்சனை மந்திரங்கள்
இப்போதாவது மற!
இல்லெனில்
உன் வீடு உனக்கில்லை.
உன் கூடும் உனக்கில்லை.
பிறகு
ஏது சிறகு?

ஈசன்கள் தேடி
ஈசல்கள் ஆனாய்.
நீ கட்டிய
பெரும் கோவில்களில்
வெறும்
படிக்கட்டுகளே நீ!
சிந்து வெளி
வெளிச்சம்
உனக்கு உண்டு.
சமக்கிருதம் எனும்
"சிந்துபாத்"கிழவனா
உன் தோளில் ?
அந்தக் கீறலில்
ஒரு "அந்துவன்"உண்டு.
நம் கலித்தொகைக்
கவிஞன்
"நல் அந்துவனும்"
அதில் உண்டு.

தமிழா
இதைக்கண்டு
அறி !
இந்த நாடு எனும்
பட்டா
உனக்கே உண்டு
அறி !




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



Sunday, August 11, 2019

அத்திவரதர்


—  ருத்ரா இ.பரமசிவன்


ஆகா!
மனம் குளிரக்கண்டேன்
அவன் தோற்றம்.
நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.
தொண்ணூறு டிகிரி கிடைக்கோடும்
தொண்ணூறு டிகிரி நெடுங்கோடும்
காட்டிய ஜியாமெட்ரியில்
கை வழியே நெய் வழியும் 
தேனமுதத் தோற்றமாய் கண்டேன்.
ஆழ்வார்கள் எனும்
மனத்தினுள் ஆழ்வார்கள்.
ஆழ்ந்து அகழ்ந்து முத்தெடுத்து
திருவாய் மொழியைக் கடல் ஆக்கினார்கள்.
அடியேன் வெறும் சிற்றெறும்பு
அத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ?
தோற்றம் என்றாலும் அழகன்.
தோற்றம் இல்லை என்றாலும் அழகன்.
கூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.
தனி முத்திரையோடும்செல்ல வழியில்லை.
கண்டவர்களைக் கண்டேன்.
விண்டவர்களை வியந்தேன்.
அத்திவரதா! ஆட்கொள் அய்யா!
என்று 
ஈனக்குரல் எழுப்பினேன்.
இடியொன்று முழங்கியது.
அத்திவரதன் பேசுகிறேன்.
என் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.
உன் தரிசனத்தில்
என் ஏக்கம் எப்போது தீரும்?
அந்தப்பல்லியும் 
அந்தப் பூச்சியும் 
அந்தப் பூவும் புல்லும்
அந்த நோயும் 
அந்த நோய் தருகின்ற 
நுண்ணுயிரியும்
எல்லாம் ஒன்று தான்.

கோடி மக்களின் உயிர்
ஒரே கோட்டில் தான்
எல்லாம் ஒன்று தான்
என்று சொன்ன மனிதனின்
"சொல்லின்" தரிசனம்
கன பரிமாணமாய்
என் முன் எப்போது வந்து நிற்கும்?
என் ஏக்கம் 
எப்போது தீர்ப்பாய்?
மனிதா! உரை!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

Monday, July 29, 2019

சந்திராயன் 2

—  ருத்ரா இ.பரமசிவன்



நிலவே நிலவே ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா...

நிலவே நிலவே அங்கே நில்
நீ ஓடி வரவேண்டாம்
நான் அங்கே வந்திடுவேன்.
உன்னைச்சுற்றி நான் வருவேன்.
என்னைச்சுற்றி நீ வருவாய்.

உன்னைச்சுற்றி நான் ஓடி
நாய்ச்சோறு  விளையாட்டை 
எத்தனை நாள் ஆடுவது?
எங்களைச்சுற்றி நீ ஓடும்
அன்பின் ஆட்டம் மறவோமே.
உன்னில் நீர் இருக்குமா?
உனக்கு நிலம் இருக்குமா?
அதற்கும் அங்கே பட்டா இருக்குமா?
இல்லை
இங்கே தான் நாங்கள்
பட்டா எல்லாம் வாங்கணுமா?
ஐயோ சாமி! 
நிலவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்
ஆளை விடு சாமி.விடு சாமி.
வெண்ணிலவே
வெண்ணிலவே
என்று 
மனம் குளிரப்பாடுவோம்.
"சந்திராயன்"என்று
இன்று பெயர் சூட்டி
சரித்திரம் எழுதப்போகின்றீர்.
வெள்ளை நிலாவுக்குள்ளும்
நான்கு வர்ணம் உண்டென்று
நாளை ஒரு புராணம்
வானில் எழுதிச் சட்டமிட்டு
உலா வரத்துவங்கி விட்டால்
என் செய்வோம்? என் செய்வோம்?
ஐயகோ நாங்கள் என் செய்வோம்?
ஏழை வீட்டு நிலா முற்றம் 
ரத்தம் கசியவா 
விஞ்ஞானத்தில் 
இத்தனை சத்தம்?





தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





Saturday, May 25, 2019

ஒரு யுத்த காண்டம்


—  ருத்ரா இ.பரமசிவன்



"இன்று போய் நாளை வா"
என்றான் அந்த ராமன்.
இந்த ராமர்களோ
சத்தமில்லாமல்
நியாயத்தோடு
ஒரு யுத்த காண்டம்
இரவோடு இரவாய்
நடத்தி முடித்து
எதிர்க்கட்சி எல்லாம் எதற்கு என்று
அந்த பெட்டிக்குள்ளேயே
நடத்தி முடித்த பட்டாபிஷேகத்தோடு
அல்லவா
வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்!
அதற்கும்
நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

கணிப்பொறிக்குள் விழுந்து
காரணமாகிப்போன
அந்த கள்ளமில்லா பூச்சிகள்
கோடிக்கால் பூதங்களாகும்
காலமும் வரத்தானே போகிறது.

"பிதாவே அவர்களை மன்னியும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று
தெரிய இயலாத நிலையில் தான்
இன்னும் இருக்கிறார்கள்."

ஜனநாயகம் என்ற
கிரேக்க நாட்டுச் சிந்தனை
இன்னும் இந்த மண்ணில்
காலூன்றவே இல்லையோ?
எழுபது ஆண்டுகளாய்
நான்கு வர்ணம் என்ற‌
குறுகிய தொட்டியில் தான்
நம் மூவர்ணம் எனும் பிரம்மாண்ட‌
ஆலமரத்தை
"போன்சாய்" மரமாய்
குறுக்கி வெட்டிச் சிதைத்து
அழகு பார்த்துக்கொண்டிருந்தோம்.
அது இன்னும் குறுகி
மதவாதிகள் எனும் மந்திரவாதிகளின்
கைவிரல் மோதிரமாய் அல்லவா
மாறிப்போனது.
ஜனநாயகம் எனும்
எங்கள் மூவர்ணத்தாயே!
எங்கள் கண்களின் பார்வையிலிருந்து
நீ
பிடுங்கியெறியப்பட்டாலும்
எங்கள்
சிந்தனை வானத்தின் விடியல் எல்லாம்
உன் வெளிச்சம் தான்.
ஐந்தாண்டு ஒன்றும்
ஏதோ கண்ணுக்கே தெரியாமல்
ஒளிந்து கொள்ளும் ஒளியாண்டு அல்ல.
மக்களின் உரிமைக்குரல் முழக்கம்
எல்லா மூட்டங்களையும்
தவிடு பொடியாக்கும்.
உனக்கு என்றுமே
வெற்றி வெற்றி வெற்றி தான்.
வெற்றி தவிர வேறில்லை!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




Saturday, May 18, 2019

பயம்


—  ருத்ரா இ.பரமசிவன்


ஒரு இந்து
ஒரு பயங்கரவாதி
ஒரு தீவிரவாதி
இதெல்லாம் சேர்த்து
யாரைக்கூப்பிடுவது.

"கடவுளே!"
ஆம்
அவனைத்தான்.
பின்னே என்ன?

ராம் ராம் என்று
பஜனை செய்யும்
ஒரு மனிதன் இருந்தான்.
அவனைச் சுட்டுத்தள்ள
ஒரு ராம் வந்தான்.

அவன் ஒரு கொலையாளி
அவன் ஒரு இந்து.
அவன் ஒரு பயங்கரவாதி.
அவன் ஒரு தீவிரவாதி.
ஆனாலும்
அவன் ஒரு கடவுள்
என   
சுடப்பட்டவன்
"ஹே ராம்"
என்று தான் விழுந்தான்.

கடவுளுக்கு
ஈவு இரக்கம் கருணை
எல்லாம் இல்லை.
ஏனெனில்
அவனிடம் "மானுடம்" இல்லை.
எல்லா வேதங்களையும்
வாந்தியெடுத்ததாகச்
சொல்லப்படும் அவனிடம்
அரிது அரிது
மானிடராகப் பிறத்தல் அரிது
என்ற வேதம் அதாவது
அறிவு மட்டும் இல்லை.
இருந்தால் எல்லோரிடமும்
"நான்" தான் இருக்கிறேன்
என்று கீதை சொல்லிவிட்டு
தன்னையே
தற்கொலை செய்வது போல்
இந்த கொலையைச் செய்திருப்பானா?
கேட்டால்
தர்மம் வென்றது என்பான்.
அதர்மமும் அவனுக்குத்
தர்மம் தான்.

கடவுளே
உன்னை "ஈஸ்வர அல்லா" என்று
கூப்பிட்டதற்கா
உன் சங்கு சக்கரங்களைத்
தூர எறிந்துவிட்டு
வெள்ளைக்காரன் கண்ட‌
துப்பாக்கியைத்தொட்டு
தீட்டுப்படுத்திக்கொண்டு
இந்த பயங்கரத்தைச் செய்திருப்பாய்?

கடவுளே
என்று உன்னைக் கூப்பிடக்கூட‌
இந்த தேசத்தில் "பயம்"தான்.
"கடவுளா"
இது என்ன மொழி?
சமஸ்கிருதம் இல்லையே
என்று இவர்களைச்
சுடுவதற்கு
ஒரு அரசாங்கத்தின் உருவில்
ஒரு அவதாரம் எடுத்தாலும்
எடுத்தாலும் எடுப்பாய் நீ.
இந்தக் கடவுள்கள்
எங்களுக்கு வேண்டாம் இனி.





தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)