Monday, July 29, 2019

சந்திராயன் 2

—  ருத்ரா இ.பரமசிவன்



நிலவே நிலவே ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா...

நிலவே நிலவே அங்கே நில்
நீ ஓடி வரவேண்டாம்
நான் அங்கே வந்திடுவேன்.
உன்னைச்சுற்றி நான் வருவேன்.
என்னைச்சுற்றி நீ வருவாய்.

உன்னைச்சுற்றி நான் ஓடி
நாய்ச்சோறு  விளையாட்டை 
எத்தனை நாள் ஆடுவது?
எங்களைச்சுற்றி நீ ஓடும்
அன்பின் ஆட்டம் மறவோமே.
உன்னில் நீர் இருக்குமா?
உனக்கு நிலம் இருக்குமா?
அதற்கும் அங்கே பட்டா இருக்குமா?
இல்லை
இங்கே தான் நாங்கள்
பட்டா எல்லாம் வாங்கணுமா?
ஐயோ சாமி! 
நிலவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்
ஆளை விடு சாமி.விடு சாமி.
வெண்ணிலவே
வெண்ணிலவே
என்று 
மனம் குளிரப்பாடுவோம்.
"சந்திராயன்"என்று
இன்று பெயர் சூட்டி
சரித்திரம் எழுதப்போகின்றீர்.
வெள்ளை நிலாவுக்குள்ளும்
நான்கு வர்ணம் உண்டென்று
நாளை ஒரு புராணம்
வானில் எழுதிச் சட்டமிட்டு
உலா வரத்துவங்கி விட்டால்
என் செய்வோம்? என் செய்வோம்?
ஐயகோ நாங்கள் என் செய்வோம்?
ஏழை வீட்டு நிலா முற்றம் 
ரத்தம் கசியவா 
விஞ்ஞானத்தில் 
இத்தனை சத்தம்?





தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





No comments:

Post a Comment