— முனைவர் ச. கண்மணி கணேசன்
முன்னுரை:
குறுந்தொகையில் ‘வெட்கம்’ என்று பொருள்படும் ‘நாண்’ பற்றிப் பதினாறு பாடல்கள் பேசுவதாக உ.வே.சாமிநாதையர் பதிப்பினின்றும் அறிகிறோம். இவற்றை நுணுகி நோக்கி நாண் தோன்றுமிடங்கள் , நாண் அழியுமிடங்கள் , நாண் கொள்ளும் பாத்திரங்கள் என ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நாண் இருபாலார்க்கும் பொதுவான பண்பா? பாத்திர அடிப்படையில் நாணுக்குரிய காரணத்திற்கு வேறுபாடுண்டா? என்னும் ஐயங்கட்கு விடைகாண முயல்கிறது. குறுந்தொகைச் செய்திகள் முதல்நிலைத் தரவுகளாகவும், தொல்காப்பியம், திருக்குறட் செய்திகள் இரண்டாம்நிலைத் தரவுகளாகவும் அமைகின்றன.
நாணம் கொள்ளும் பாத்திரங்களும் காரணங்களும்:
தலைவன், தலைவி ஆகிய இரு தலைமைப் பாத்திரங்களே நாணம் கொள்ளும் பாத்திரங்களாகக் காட்டப்படுகின்றன. தவறான ஒழுக்கம் காரணமாகவும், களவு நீட்டிப்பு காரணமாகவும், மடலேறி மணந்த சூழ்நிலையில் ஊரார் சுட்டிப் பேசும் போதும், சான்றோர் புகழும் போதும் தலைவனுக்கு நாணம் தோன்றும். தலைவனின் புறத்தொழுக்கத்தைப் பிறர்க்கு மறைத்துத் தலைவி நாணம் கொள்வாள்.
மடலேறித் தான் விரும்பிய தலைவியை மணக்க நினைக்கிறான் தலைவன். மறுகில் அவளுடன் செல்லும் போது ஊரார் அவனைச் சுட்டி இன்னாள் கணவன் இவன் என்று உரைப்பதாகக் கற்பனை செய்கிறான். அச்சூழ்நிலையில் தான் நாணம் கொள்ளக்கூடும் என்றும் எடுத்துரைக்கிறான்.
"நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகம் சிறிதே" (குறுந்தொகை- 14)
என்று தலைவன் கூற்றாகவே இப்பாடலடிகள் அமைந்துள்ளன.
சான்றோர்கள் தன்னைப் புகழும் போது தலைவன் நாணுவதுண்டு. பழி ஏற்பட்டால் தாங்கிக் கொள்ள மாட்டான் என்று தலைவன் இயல்பைத் தோழிக்கு எடுத்துக் கூறுகிறாள் தலைவி.
" …………………………………...சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
களவொழுக்கத்தின் விளைவாகத் தலைவன் தலைவியை உடன் வரைந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தோழி தலைவனிடம் சூழ்நிலையை எடுத்துக் கூறினாள். தலைவன் நாணம் கொண்டு வரைதற்பொருட்டுப் பிரிந்தான்.
"நின்நிலை யான்தனக்கு உரைத்தனன் ஆகத்
தான் நாணினன் " (மேற் .- 265) என்று தலைவியிடம் எடுத்துக் கூறுகிறாள் தோழி. தொல்காப்பியப் பொருளியல் 51ம் சூத்திரத்தில் நாண் என்ற சொல்லுக்கு உரையெழுதுங்கால் 'பெரியோர் ஒழுக்கத்து மாறாயின செய்யாமைக்கு நிகழ்வதோர் நிகழ்ச்சி' என்று இளம்பூரணர் கூறியிருக்கும் விளக்கத்திற்கு இத்தலைவன் ஏற்ற சான்றாகிறான்.
"தண்ணந் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரம்பா டும்மே " (மேற் .- 9)
என்று இச்சூழலைப் பற்றித் தோழி கூறுகிறாள். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் 12ம் சூத்திரத்திற்கு உரையெழுதும் இளம்பூரணர் ‘நாண்’ என்னும் சொல்லுக்கு 'தமக்குப் பழி வருவன செய்யாமை' என்று விளக்கம் கூறியுள்ளார். தலைவி இவ்விளக்கத்திற்கேற்ற சான்றாகிறாள்.
நாண் அழியுமிடங்கள் :
காமமும் நாணமும் முரண்பட்ட பண்புகளாம். ஒன்று விஞ்சும் போது மற்றொன்று அழிகிறது. களவுக்காலத்தில் காமம் மேலோங்கும் போது தலைவியின் நாணம் அழிகிறது. மடலேறத் துணியுங்கால் தலைவனின் நாணம் அழிகிறது. கற்புக்காலத்தில் தலைவன் பரத்தையை நாடும் போதும் அவனது நாணம் அழிகிறது.
இரவுக் குறியைத் தலைவன் விரும்புகிறான். எனவே அவன் இரவுக்குறியில் வருவான் என்பதைத் தோழி தலைவியிடம் கூறும் போது களவொழுக்கத்தால் ஏற்படும் பழிக்கு அஞ்சி நாணம் கொள்ளாத வகையில் காமம் மிகுதிப்படுவது புலப்படுகிறது.
"நடுநாள் வருதலும் வரூஉம்
பேசுவதாகக் கொள்ளவும் வழி உள்ளது.
காமம் விஞ்சும் போது நாணம் அழிவதால் அது இரக்கத்திற்குரியது.
"அளிதோ தானே நாணே நம்மொடு
……………………………………………
காம நெரிதரக் கைந்நில்லாதே " (மேற் .- 149) என்று தலைவி புலம்புவதாக அமையும் பாடல் இது.
தோழியிடம் குறையிரக்கும் தலைவன் தன் நாணத்தை அழித்து மடலேறத் துணிவதாகக் கூறுகிறான்.
"பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
தான் மேற்கொள்ளவிருக்கும் செயல்களை வரிசைப்படுத்துங்கால் நாணத்தைக் கைவிடப் போவதாகத் தன் வாயாலேயே கூறுகிறான்.
தன் நெஞ்சோடு பேசுங்கால் ,
"ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ " (மேற் .- 182)
எனத் தான் நாணத்தை விட்டுத் தெருவோடு அனைவரும் காணும்படியாக மடலேற இருப்பதைக் கூறுகிறான்.
புறத்தொழுக்கத்தில் ஈடுபடும் தலைவனைப் பற்றித் தோழியிடம் பேசும் தலைவி,
"நாணட்டு நல்லறிவிழந்த காமம்" கொண்ட தலைவன்
கொடுமையை விதந்தோதுகிறாள் . (மேற் .- 231)
திருக்குறளும் காமமிகுதியால் நாணத்தை விட்டு மடலூர நினைக்கும் தலைவன் பற்றி ‘நாணுத்துறவுரைத்தல் ’ என்னும் அதிகாரத்திலேயே பேசுகிறது.
"நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து" (குறள்- 1132) என்னும் திருக்குறள் நோக்குக.
தலைவன் நாணமும் தலைவி நாணமும்- ஓர் ஒப்பீடு:
நாணம் இருபாலார்க்கும் உரிய பொதுப்பண்பு ஆயினும்; ஒரே சூழலில் தலைவன் கொள்ளும் நாணத்திற்கும், தலைவி கொள்ளும் நாணத்திற்கும் காரணம் வேறுபடுகிறது.
தலைவன் பரத்தையிற் பிரிவதும், மீண்டும் தலைவியிடம் வருவதும், தலைவி வாயில் நேர்வதும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் நாம் காணக்கூடிய சூழ்நிலையே. குறுந்தொகையிலும் இத்தகு சூழல்கள் இடம் பெறுகின்றன. அவ்வமயம் தலைவன் நாணம் கொள்வதாகவும், தலைவி நாணம் கொள்வதாகவும் பாடல்கள் சித்தரிக்கின்றன. ஆயின் நாணத்தின் காரணம் நுட்பமான வேறுபாட்டுடன் அமைந்து பாத்திரப் படைப்பை விளக்கமுறச் செய்கிறது. தன் கணவனின் புறத்தொழுக்கத்தைப் பிறர்க்கு வெளிப்படுத்த நாணி அவனை வீட்டினுள்ளே அனுமதித்துக் கற்பில் சிறந்து நிற்கிறாள் தலைவி. அவ்வாறு நடந்து கொண்ட மனைவிக்கு முன்னர் தன் தவறுணர்ந்து நாணம் கொள்கிறான் தலைவன்.
"காஞ்சி ஊரன் கொடுமை
"அச்சமும் நாணமும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப." (தொல்காப்பியம்- களவியல்- சூத் .- 8) என்றும்,
"காமத் திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்" (தொல். கள.- சூத் .- 17)
என்றும் தொல்காப்பியர் சுட்டுவது குறுந்தொகைப் பாடல்களுடன் முரண்பட்ட கருத்தாக உள்ளது. ஏனெனில் அகத்திணையில் நாணம் தலைவனுக்கும் உரிய பண்பு என இதுவரை கண்டோம்.
முடிவுரை:
குறுந்தொகை காட்டும் புலனெறி வழக்கில் தலைவன், தலைவி ஆகிய இரு தலைமைப் பாத்திரங்களும் நாணம் கொள்ளும் பாத்திரங்கள் ஆவர். களவு நீட்டிப்பும், ஊரார் இன்னாள் கணவன் என்று சுட்டிப் பேசுவதும், சான்றோர் புகழ்ச்சியும், தவறான ஒழுக்கமும் தலைவன் நாணத்திற்குக் காரணங்களாய் அமைகின்றன. தலைவனின் புறத்தொழுக்கத்திற்காகத் தலைவி நாணுகிறாள். களவுக்காலத்தில் காமம் மேலோங்கும் போது இருவரின் நாணமும் அழிகிறது. பரத்தமை ஒழுக்கத்தின் போது தலைவன் நாணம் அழிகிறது. நாண் பெண்ணுக்கு உரியது என்று கூறும் தொல்காப்பியக் கருத்து குறுந்தொகையுடன் முரண்பட்டது.
துணை நூற் பட்டியல்:
தொல்காப்பியம்- இளம்பூரணர் (உ.ஆ.)
திருக்குறள்
குறுந்தொகை- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)
(குறிப்பு: மதுரை சங்க இலக்கிய ஆய்வுமையமும் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியும் இணைந்து 3திசம்பர் 2006 அன்று நடத்திய குறுந்தொகை பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக் கட்டுரை- மாநாட்டு மலரில் பதிப்பிக்கப்பட்டது.)
தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)
No comments:
Post a Comment