Saturday, July 6, 2019

புணர்ச்சி இலக்கணம்

——    பழமைபேசி


           புணர்ச்சி மாந்தனுக்கும் இன்றியமையாதது! மொழிக்கும் இன்றியமையாதது!!

           இலக்கணத்தில் புணர்ச்சி என்பது சொற்கள் சேர்ந்து வருவதாகும். சொற்கள் தனிச்சொற்களாயிருக்கும்போது அவற்றை தனிமொழிகளென்றும், அவை சேர்ந்திருக்கும்போது அவற்றை தொடர்மொழிகளென்றுஞ்சொல்கிறோம். தொடர்மொழிகளில் இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ இருந்தாலும், அவற்றை ஒரு தனிச்சொல்லைப் போல ஒன்றாகத்தான் கொள்ளவேண்டுமேயன்றி, புணர்ந்துள்ள சொற்களை தனிச்சொற்களாக பிரித்தெழுதுதல் கூடாது. அவ்வாறு பிரித்துவிட்டால், பிரிந்தசொற்கள் ஒவ்வொன்றும் தனிமொழிகளாகவே கொள்ளப்படுமேயன்றி, தொடர்மொழியென சொல்லப்படமாட்டா.

           தொடர்மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளவையே. நாம் பேசும்போது சிலசொற்களை தனித்தும் சிலவற்றை சேர்த்தும் பேசுவதை இயல்பாய்ச் செய்வோம். ஒருவருடைய பேச்சை கேட்டுப்பார்த்தாலோ அல்லது இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களது பேச்சை கேட்டுக்கொண்டிருந்தாலோ அவற்றில் சில தனியாகப் பேசப்படுவதையும் சில சேர்த்துப் பேசப்படுவதையும் அறிந்துகொள்ளலாம். அவ்வாறு சொற்களை சேர்த்துப்பேசுவது எதற்காகவென்பதை ஆய்ந்துபார்த்தால், அது ஒருவர் சொல்லவரும் பொருளை சரியாகச் சொல்வதற்காகவே அவ்வாறு சேர்த்துச்சொல்கிறாரென்பதை அறிந்துகொள்ளலாம். அதாவது, சேர்த்துச் சொல்லவேண்டிய சொற்களை சேர்த்துச் சொல்லாமல், அவற்றை தனிச்சொற்களாய்ச் சொல்லிவிட்டால், சொல்லவந்த பொருள் வேறாகிவிடும். வேறாய்ச் சொல்வதானால், சொற்களை சேர்த்துச்சொல்லும்போது என்னபொருள்வருமோ அந்தப் பொருளானது, அவற்றை பிரித்துச்சொல்லும்போது வராது! ஆகையால், சேர்த்துச் சொல்லவேண்டிய தருணத்தில் சேர்த்துச்சொல்வதும், பிரித்துச்சொல்லும்போது பிரித்துச்சொல்வதும் தேவையானதாகும்.

           நம்மைப் போலவே குழந்தைகளும் சிறுவர்களுங்கூட பேச்சில் இதை சரியாகச் செய்வரென்பதை அவர்களது பேச்சை கவனித்துப்பார்த்தால் எவரும் அறிந்து கொள்ளலாம். இது எதனால் இவ்வாறு நடக்கிறதென்றால், நம் மொழியை பேசத்தொடங்கும்போதே,  அது சொல்லும் பொருள் என்னவென்பதை நாம் அறிந்து கொள்வதனாலேதான். ஒரு குழந்தை 'அத்தைவீடு' எனச்சொல்கிறதென்றால், அந்த குழந்தைக்கு அது 'அத்தையினுடையவீடு' என்னும் பொருள் புரிந்திருக்கிறதென்பது பொருள். இதை சொல்லும்போது, 'அத்தை வீடு' என இரண்டு சொற்களாக அந்த குழந்தை பிரித்துச் சொல்லாதென்பதை எண்ணிப் பாருங்கள்.  அதேகுழந்தை, 'அத்தை வீடுவரைந்தார்' எனச்சொல்வதானால், 'அத்தை 'வீடு' ஆகியசொற்களுக்கிடையில் இடம் விட்டுப் பேசும். இங்கே 'அத்தை வீடுவரைந்தார்' என்று சேர்த்துச்சொல்வது பொருந்தாதென்பதை அந்தக் குழந்தை அறியும். அதேநேரத்தில், 'வீடுவரைந்தார்' என்பதில், 'வீடு' 'வரைந்தார்' ஆகிய இவையிரண்டும் சேர்த்துச்சொல்லப்படுவதைப்பாருங்கள்.

           'அத்தைவீடு' 'வீடுவரைந்தார்' ஆகியவற்றில் இரண்டுசொற்கள் சேர்த்துச் சொல்லப்பட்டதால், இவை தொடர்மொழிகள்.  'வீடு' என்றசொல்லானது, முதலில் 'அத்தை' என்றசொல்லுடன் சேர்ந்தும், பிறகு 'வரைந்தார்' என்றசொல்லுடன் சேர்ந்து தொடர்மொழியானது. 'அத்தைவீடு' என்பதில், இது 'அத்தை' என்னும் சொல்லுக்கு பின்னால் வந்து சேர்ந்தது.  'வீடுவரைந்தார்' என்பதிலோ முன்னாலேநின்று, 'வரைந்தார்' என்னுஞ்சொல்லை தன்னையடுத்து சேர்த்துக்கொண்டது. இப்படியாக, பேசப்படுவதை வரிவடிவத்தில் எழுதப்படும் போதும் துல்லியத்தைக் கட்டமைக்கவும், பொருட்சிதைவு நேர்வதைத் தடுக்கவும் புணர்ச்சி என்பது தமிழ்மொழியில் இன்றியமையாததாக இடம் பிடித்திருக்கின்றது.

           “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு”, “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு”, ஆகிய இரு தொடர்மொழிகளுக்கிடையேயும் வேறுபாடுகள் உண்டு. முதலாவதில் தமிழ் என்பது உலகோடு புணர்ந்திருக்கின்றது. நுண்ணியத்தோடு அணுகும் போது,  நாம் பேசுவதைத் துல்லியமாய் அது வரிவடிவத்தில் கட்டமைக்கவில்லை. ஒலிப்புச்சிதைவுக்கு ஆட்படுத்துகின்றது. மேலும், தமிழ் மொழியிலே உலகத்தமிழ் என்றோர் பகுப்பு இருந்து, அதற்கான ஆராய்ச்சி மாநாடு எனும் பொருளையும் கட்டமைக்கின்றது. ஆனால் இரண்டாம் தொடர்மொழியை நோக்குங்கால், ஒலிப்புச்சிதைவுக்கோ பொருட்சிதைவுக்கோ இடமில்லை. தமிழாராய்ச்சிக்கான மாநாடு, அது உலகளாவிய அளவிலே இடம்பெறுகின்றது என்பதை உறுதி செய்கின்றது.

           செம்மொழி, நுண்ணியமொழி(sensitive language) என்கின்ற பதங்களெல்லாம் ஏன் இடம் பிடிக்கின்றன? மனத்தில் எண்ணுவதை, சிதைவின்றி வெளிப்படுத்தவல்ல மொழிகளெல்லாம் நுண்ணிய மொழிகளாகக் கருதப்படுகின்றன. ”பாடல்களுக்கு, கீர்த்தனைகளுக்கு உருது, தெலுங்கு பாவிக்கின்றனர், ஏனென்றால் அவை நுண்ணிய மொழிகள்” எனச் சொல்வோர் உண்டு. அஃதாவது, வெளிப்படுத்த எண்ணியதைக் குறைவான சொற்களில்  ஐயம் திரிபுக்கு அப்பாற்பட்டு வெளிப்படுத்த ஏதுவான மொழி என்பது அதன் பொருளாகும். அத்தகைய வல்லமை ஒரு மொழிக்கு எப்படிக் கிடைக்கும்? இப்படியான பிழைகளை, சிதைவுகளைப் பாவனையில் கொள்ளாத போது கிடைக்கும். அறிவார்ந்தவர்களே, பொறுப்புக்கிடமானவர்களே இப்படியானவற்றைச் செய்யத் தலைப்படும் போது மொழி வலுவிழந்து சிதைந்தே தீரும்.



தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)





No comments:

Post a Comment