10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அண்மையில் வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள சிக்காகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டு விழாவில் ஏறக்குறைய 82 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. உலக அளவில் தமிழ் மக்களையும் தமிழ் மொழி ஆய்வில் ஈடுபட்டுள்ள தமிழரல்லாத ஆனால் தமிழில் ஆர்வம் உள்ள பிற இன ஆய்வாளர்களின் கவனத்தையும் கவர்ந்த ஒரு நிகழ்வாக இது அமைந்தது. இந்த மாபெரும் நிகழ்வை நடத்தி முடித்த உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொறுப்பாளர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக பாராட்டுதல்களும் நல்வாழ்த்துக்களும். இந்த வரலாற்றுச் சூழலின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைப் பற்றிய வரலாற்றினை பின்னோக்கிப் பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தமிழ் மொழி வளர்ச்சியின் மீது தீவிர ஆர்வமும் பற்றும் கொண்ட தமிழ் ஆய்வாளர்களால் புதுடெல்லியில் 1964ம் ஆண்டு நடைபெற்ற 26வது உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர்கள் (International Congress of Orientalists) மாநாட்டில் உருவாக்கம் பெற்றது. இதனை அடுத்து முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968ம் ஆண்டு தமிழகத்தின் தலைநகரான மெட்ராஸில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் பெரும் வெற்றியை ஈட்டி அண்ணா அவர்கள் முதல்வர் ஆன தருணம் அது. தமிழின் பால் பெரும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசின் தாக்கம் 1968ம் ஆண்டு நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் எதிரொலித்தது.
இதனை அடுத்து மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970ம் ஆண்டு ஐரோப்பாவில் பிரான்சில் நடைபெற்றது. நான்காவது மாநாடு 1974ம் ஆண்டில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் நான்கு மாநாடுகளையும் முன்னின்று வழிநடத்திச் சென்றவர் தமிழ்த்தூது சேவியர் தனிநாயகம் அடிகளாவார்.
தனிநாயகம் அடிகளாரின் மறைவுக்குப் பிறகு ஐந்தாவது மாநாடு 1981ம் ஆண்டு மதுரையிலும், அதற்கு அடுத்து ஆறாவது மாநாடு 1987ம் ஆண்டு கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989ம் ஆண்டு மொரிசியசிலும் , எட்டாவது மாநாடு 1995ம் ஆண்டு தஞ்சாவூரிலும் நடைபெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2010ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 9வது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு அறிவிப்பும் வெளிவந்த நிலையில், போதிய கால அவகாசம் இல்லை என பேராசிரியர் நொபொரு கரோஷிமா தலைமையிலான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அறிவித்ததை அடுத்து, தமிழக அரசு ஏற்பாடு செய்த மாநாடு செம்மொழி மாநாடு என்ற பெயருடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்தச் சூழ்நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015ம் ஆண்டு கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இந்த ஆண்டு வட அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைத் தொடங்கிய தனிநாயகம் அடிகளாரும் அவரது குழுவினரும் உலகளாவிய தமிழாராய்ச்சி செயல்பாடுகள் தொடர்பாக உருவாக்கிய நோக்கம் மற்றும் செயல்திட்டங்களை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகிகளும் உலகத் தமிழர்களும் மீண்டும் மீளாய்வு செய்து தற்கால மற்றும் எதிர்கால ஆய்வுத்தளங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
தனிநாயகம் அடிகள் தொகுத்து 1968ம் ஆண்டு மலேசியாவில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூலான Tamil Studies Abroad - a Symposium எனும் தொகுப்பின் முன்னுரையில் அவர் கூறும் கருத்துக்கள் இன்றளவும் கவனத்திற் கொள்ளத்தக்கனவாகும் . இதில், இந்த மன்றத்தின் ஆய்வு நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழியல் ஆய்வுகள் தொடர்பான ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார். தமிழர் வாழ்வியலை ஆராயும் வகையிலான தமிழ் இனத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்கால உலகளாவிய தமிழ் மொழி வளர்ச்சிக்கான தேவை, பல்வேறு நாடுகளில் தமிழ் மொழியின் நிலை என்ற வகையில் ஆராயப்படும் வகையில் அமைந்திருக்க வேண்டியதை அவர் இந்நூலில் வலியுறுத்துகின்றார்.
1966 காலகட்டத்தில் ஐரோப்பாவில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் பாடமாக மூன்றுக்கும் மேற்பட்ட ஜெர்மானிய பல்கலைக்கழகங்களிலும், அப்போதைய செக்கொஸ்லோவாக்கிய , அமெரிக்கா, ரஷியா , இங்கிலாந்து, மலேசியா, பிரான்சு ஆகிய நாடுகளிலும் இருந்துள்ளது. அத்துடன், டச்சு மற்றும் போர்த்துக்கீசிய தமிழ் ஆய்வுகள் நடந்தமை பற்றிய தகவல்களையும் காண்கின்றோம். தனிநாயகம் அடிகளாரின் தனிப்பெரும் முயற்சியாக ஒப்பந்தக் கூலிகளாக உலகின் பல காலனித்துவ தீவுகளுக்குப் பயணித்த தமிழ் மக்களின் சந்ததியினர் பற்றிய ஆய்வுச் செய்தியும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் வாழ்வியலில் மறைந்து வரும் தமிழ்ப் பண்பாட்டு மற்றும் மொழிக்கூறுகள் மீட்கப் பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் இந்த நூலில் காண்கின்றோம்.
ஆக, இந்த மன்றம் தொடங்கப்பட்ட 1964 முதல் இன்று வரை அதன் நோக்கத்தில் எந்த அளவிற்கு அதன் செயல்பாடுகளின் வழி பயணப்பட்டுள்ளது என்பது நம் முன்னே நிற்கின்ற கேள்வி.
இந்த அடிப்படையிலேயே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். இதைச் சீர்தூக்கிப் பார்க்காமல் எதிர்காலப் பணிகளை முன்னெடுப்பது தடுமாற்றங்களையும் இடைவெளிகளையும் உருவாக்கி விடுமோ என்ற ஐயம் மேலோங்குகின்றது.
இந்த கேள்விகளின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய ஆய்வுத் துறைகள் விடுபட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகின்றது. விடுபட்ட துறைகளில் ஆய்வுகள் செல்லும் வகையில் இந்த அமைப்பின் கவனம் செல்லவேண்டியது அவசியமாகின்றது. அவையாவன:
- தமிழரின் கடல் வணிகம் மற்றும் கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய
நாடுகளுடனான வணிகப் போக்கு, அவை ஏற்படுத்திய தாக்கங்கள் - கிழக்காசிய நாடுகளில் தமிழர் தடையங்கள்
- ஏனைய மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம்
- இக்காலத் தேவைக்கேற்ற கலைச்சொல் வளர்ச்சி
- புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் புலம்பெயர் வரலாறு
- அயலக பல்கலைக்கழகங்களில் தமிழ் நடவடிக்கைகள், தமிழ் இருக்கைகள்
- தமிழ் மக்கள் கலைகள்
- கூத்து, இசை, நாடகம்
- சமூகச் சீர்திருத்தம், சமூக நலன், சாதி அமைப்புக்கள் ஏற்படுத்தும் சமூகப் பின்னடைவுகள்
- குழந்தைகளுக்கான தமிழ் இலக்கியமும் அது தொடர்பான ஆய்வுகளும்
- அரசியல் தமிழ்
- அறிவியல் தமிழ்
- மருத்துவ தமிழ்
- விவசாயத் தமிழ்
- வணிகத் தமிழ்
மேற்குறிப்பிட்ட துறைகளில் உலகத் தமிழ் மக்களின் நிலையை ஆராயும் வகையிலும் தமிழ் மொழி வளர்ச்சியை விரிவான நோக்கிலும் கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெறும் போது உலகளாவிய ஆய்வுத் தேவைகளை இம்முயற்சி ஈடுகட்டக்கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆய்வு என்பது ஏற்கனவே எடுத்த முடிவினை நோக்கிய சான்றுகள் தேடும் முயற்சியாக இருக்கக்கூடாது. மாறாக உண்மைத் தன்மையைத் தேடுகின்ற, சமகால நிகழ்வுகளையும் துல்லியமான வரலாற்றுச் சான்றுகளைப் பாரபட்சமின்றி, காய்தல், உவத்தல் இன்றி சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையுடன் செய்யப்படுகின்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் ஆய்வுலகில் தற்கால தேவைக்கேற்ப ஆற்ற வேண்டிய ஆய்வுச்செயல்பாடுகள் மிக அதிகம் உள்ளன. அவற்றை முன்னெடுக்கும் பணியை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் அவா. நல்வாழ்த்துகள்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
முனைவர் க.சுபாஷினி அவர்களுக்கு வணக்கம் 🙏 நல்ல பதிவு.மிக்க நன்றி மா
ReplyDeleteமுதல்மாநாட்டு 1966 படத்தை எனது ( Tamil Culture ) முகநூலில் பதிவேற்றிக் கொள்கிறேன்.நன்றி