—— தேமொழி
சங்ககாலம் முதல் பெரும்பாலான இலக்கியங்கள் அவை கூறும் கருத்தின் அடிப்படையில் திரட்டப்பட்டவையே. இத் திரட்டு நூல்கள் தொகை நூல்கள் என அழைக்கப்பட்டன. அவ்வாறே, கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும், பாடல்கள் தொகுக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் தனிப் பாடல்கள் பல 'தனிப்பாடல் திரட்டு' எனத் தொகுக்கப்பட்டன. இராமநாதபுரம் புரவலர் பொன்னுசாமித் தேவர் (1837-1870, இவர் பாண்டித்துரைத் தேவரின் தந்தை) முன்னெடுக்க, தில்லையம்பூர் சந்திரசேகரக் கவிராயர் தேடித் தொகுத்தவை தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்கள். இந்த நூலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர் திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் என்பவராகவும் அச்சிட்டவர் பெரியதம்பி என்பவராகவும் அறியப்படுகிறார்கள். இதுவே முதல் தனிப்பாடல் திரட்டு நூலாகும். பின்னர் மேலும் சில தொகுப்புகளும் தொடர்ந்து பலரால் வெளியிடப்பட்டன. தனிப்பாடல் திரட்டுத் தொகுப்பு நூல்களின் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றிலும் வேறுபட்டே உள்ளன.
தனிப்பாடல்களை எழுதினாராகக் கம்பர் ஒளவை முதற்கொண்டு 97 புலவர்களின் தனிப்பாடல்கள் காணக்கிடைத்தாலும், தனிப்பாடல் எனில் இலக்கியச் சுவைக்காகத் தனிச்சிறப்புடன் கூறப்படுபவர் காளமேகப்புலவரே என்றால் அது மிகையன்று. தனிப்பாடல் திரட்டு என்றாலே காளமேகப் புலவரால் பாடப்பெற்ற பாடல்களே பலருக்கும் நினைவு வரும் அளவிற்குச் சிறப்புப் பெற்றவர் காளமேகம். இவர் நாகைக்கருகே உள்ள திருமலைராயன் பட்டினம் பகுதியை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன் (பொது ஆண்டு 1455-1468) என்பவரின் காலத்தில் வாழ்ந்தவர் என அவர் பாடல் குறிப்பின் மூலம் தெரிய வருகிறது. திருமலைராயன் ஆட்சிக்காலத்தின் அடிப்படையில் இவரும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவர் என்றே கணிக்கப்படுகிறது.
காளமேகத்தின் தனிப்பாடல்கள் என நூலாகத் தொகுக்கும் அளவிற்கு அவரது தனிப்பாடல்களும் எண்ணிக்கையில் அதிக அளவில் கிடைத்துள்ளன. காளமேகப் புலவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தொகுப்பிலும் மாறுபடுவதுண்டு. முதன்முதலில் தொகுக்கப்பட்ட 'தனிப்பாடல் திரட்டு மூலம்' என்ற நூல் 158 பாடல்களைப் பட்டியலிட்டது. பின்னர் 187 பாடல்கள் வரை கா.சு.பிள்ளையின் பதிப்பு பட்டியலிடுகிறது. ஆனால் புலியூர்க் கேசிகன் உரையெழுதிய 'காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்' என்று காளமேகத்தின் பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு பதிப்பு 220 பாடல்களைக் கொடுக்கிறது. சிலேடை என்னும் இரட்டுற மொழிதல் மட்டுமன்று வசைபாடுவதிலும் (அங்கதப் பாடல்கள்) காளமேகம் வல்லவர். வசைபாட ஒரு காளமேகம் என்ற பெயரே பெற்றவர். இகழ்ச்சி ஏளனம் எள்ளல் எல்லாம் அவர் பாடல்களில் துள்ளி விளையாடும். புலமைச்செருக்கோடு அறம் பாடுதலையும் (சாபம் விடுதல்) செய்துள்ளார்.
இவர் பாடல்கள் வேத சமயத்தின் தொன்மக் கதைகளின் களஞ்சியமாகக் காணப்படுபவை. வேத சமயத்தின் சூழலில் வாழ்ந்தவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய பாடல் கருத்துகள் அவை. தொன்மக் கதைகள் அறியாத மற்றவருக்குப் பாடல் வரிகள் சொல்லும் கதைகள் விளக்கப்பட வேண்டும். காளமேகம் தனது கற்பனைத்திறனை, மொழி ஆளுமையைக் காட்டும் வகையில், அதனால் அனைவரும் வியந்து மெச்சும் வகையில் பாடல்களை இயற்றியவர். தொன்மக் கதைகள் கொண்ட பாடல்களால் தனிமனித உயர்விற்கு, அன்றாட வாழ்வியலுக்கு என்ன பயன் என்று ஆய்வதில் பொருளில்லை. அதாவது, ஏன் ஆடுகின்றீர் ஐயா? (ஆடும் தியாகரே ஆட்டம் ஏன் தான் உமக்கு); ஏன் நஞ்சு தின்றீர் ஐயா? (உமையாள் அஞ்சல் அஞ்சலென்று தினம் அண்டையிலே தானிருக்க நஞ்சுதனை ஏன் அருந்தினார்?) என்றெல்லாம் 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?' என்பது போன்ற பாணியில் வியந்து தனது மொழிப் புலமையைக் காட்டும் வண்ணம் பாடிக்கொண்டிருப்பதால், அடிப்படையில் யாருக்கு என்ன பலன் என்று ஆராய்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஒரு ஒன்றரையடி குறள் வாழ்க்கைக்குக் காட்டும் வழிகாட்டுதலைக் காளமேகத்தின் பாடலில் காண இயலாது என்பதுதான் உண்மை. காளமேகத்தின் புகழ் பெற்ற பாடல்களும் அதற்காக நினைவு கூரப்படுபவையும் அல்ல. அப்பாடல்களில் காணப்பெறும் சொல்லாடல் சிறப்பும் கற்பனை நயம் மட்டுமே இலக்கியவாதிகளைக் கவர்ந்தன என்பதையும் நாம் அறிவோம்.
மேலும், அவர் தனது மொழியாற்றலைக் காட்டும் நோக்கில் இறைவனை நையாண்டி செய்யும் கருத்தில் வஞ்சப்புகழ்ச்சியாக எழுதிய பாடல்கள் என்ற காரணத்தால் அப்பாடல்களில் பல இறையடியார்கள் தமது கடவுள் வழிபாட்டிற்குத் தேர்வு செய்யும் பாடல்களாகவும் இல்லாமல் போயின.
எடுத்துக்காட்டாக திருப்பிரமபுரம் இறைவனார் மேல் சம்பந்தர் பாடிய பலரும் அறிந்த பாடலான,
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
என்ற பாடலில் சிவன் குறித்த தொன்மக்கதைக் குறிப்புகளைக் குறிப்பிட்ட பின்னர் பெம்மான் இவனன்றோ என்று புகழ்கிறார் சம்பந்தர்.
இதன் பொருள்; உமைக்குரிய இடது காதில் தோடு அணிந்து, காளையின் மேல் ஏறி, வெண்மையான மதியை முடியில் சூடிக்கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசியவனாகிய சிவபெருமான் என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன். தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமனும் முன்னர் அவனைப் பணிந்து வழிபட்ட பொழுது அவனுக்கு அருள் செய்தவன். சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருப்பவன் இத்தகைய சிறப்புப் பெற்றவன் சிவபெருமானே.
இறைவனைப் போற்றும் இப்பாடலைச் சீர்காழிக்குச் செல்லும் அடியவர்களும் சிவ வழிபாட்டிற்குரிய பாடலாக ஏற்று, தாமும் பாடி இறைவனை வழிபட இயலும்.
மாறாக, 'புள்ளிருக்கும் வேளூர்’ எனப் புகழ்பெற்று விளங்குகிற வைத்தீசுவரன் கோயிலுக்குச் செல்லும் அடியவர் ஒருவர் கீழ்க்காணும் காளமேகத்தின் பாடலை எங்ஙனம் வழிபாட்டிற்குரிய பாடலாகத் தெரிவு செய்து பாடி இறைவனைப் பரவிட முடியும்?
வாதக்கா லந்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
பேதப் பெருவயிறாம் பிள்ளைதனைக் - கோதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
என்ற பாடலில் வைத்தீசுவரன் கோயிலிலுள்ள சிவனால் தனது குடும்பத்தார் நோயையே தீர்க்க முடியவில்லை, இவரால் மற்றவர் துன்பத்தை எவ்வாறு தீர்க்க இயலும் என்று வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார் காளமேகம்.
இதன் பொருள்; புள்ளிருக்கும் வேளூர் சிவனுக்கே காலே வாதத்தால் பாதிக்கப்பட்ட கால் (காலைத் தூக்கி நடனமாடும் நிலையை வாதக் கால் என்கிறார்). அவர் மைத்துனரான திருமாலுக்கோ நீரிழிவு நோய் (கடல் நீரில் துயில்வதால் மாலவனை அவ்வாறு கூறுகிறார்). அவர் பிள்ளை பிள்ளையாருக்கோ பருத்த வயிறு (மகோதரம் என்னும் பெருவயிறு உள்ள நோயாளி போலத் தோற்றமளிக்கிறாராம் பிள்ளையார்). இவ்வாறு, தன்னுடைய நோயையும், தனது குடும்பத்தார் நோயையுமே தீர்க்க இயலாத சிவன் எங்கே பிறர் துயரைக் களையப்போகிறார்?
இவ்வாறு நிந்திப்பது போல உள்ள வஞ்சப்புகழ்ச்சிப் பாடலை எந்த அடியவரால் வழிபாட்டிற்குரிய பாடலாக வைத்தீசுவரன் கோவிலில் போய் பாட இயலும்?
இவ்வாறே இவர் பிறவாயாக்கைப் பெரியோனான சிவபெருமானை, தாய் தந்தை யற்றதால் துன்பப் படும் இரங்கத் தக்க நிலையில் உள்ளான் என்று பாடல் எழுதியுள்ளார். காளமேகத்தின் இரு பாடல்கள் இத்தகையக் கருத்துகள் கொண்டு அமைந்துள்ளன.
வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில்
அல்லார் பொழில் தில்லை அம்பலவாணர்க்கு ஓர் அன்னை பிதா
இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே!
இதன் பொருள்; சோலைகள் கொண்ட தில்லை அம்பலத்தில் ஆடும் ஆடவல்லானே! இந்த உலகில் உனக்கு ஆதரவு தந்து அரவணைக்கும் தாய் தந்தையற்றவனாய் இரங்கத்தக்க நிலையில் நீ இருந்ததால் அன்றோ (அதாவது, பிறப்பிலியாகிய சிவன்), ஒருவன் உன்னை வில்லால் அடிக்கவும் (வேடனாகி வந்தகாலத்தில் சிவனை அர்ச்சுனன் வில்லால் தாக்கியது); மற்றொருவன் செருப்பால் உதைக்கவும் (ஒரு கண்ணைச் சிவனுக்குத் தோண்டி பொருத்திய கண்ணப்பன், சிவனின் மறு கண்ணிலும் குருதி வழிவது கண்டு அதிர்ந்து தனது செருப்புக்காலை அடையாளத்திற்காகச் சிவன் மீது வைத்து கண்ணை எடுக்க முற்பட்ட நிலை); மற்றொருவன் கல்லெறிந்து தாக்கவும் (சாக்கிய நாயனார் கல்லையே மலராகக் கருதி சிவன் மீது எறிந்து வழிபட்டது); மற்றும் ஒருவன் சினந்து உன்னைப் பிரம்பால் அடிக்கத் துணிந்ததும் (பிட்டுக்கு மண்சுமந்த காலத்தே பாண்டியன் சிவனைப் பிரம்பால் அடித்த நிகழ்வு) நடந்தது. உனக்குப் பெற்றோர் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
இப்பாடல் சிறிய மாறுதலுடன் பட்டினத்தார் பாடல் எனவும் கொடுக்கப்படுகிறது (https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0083.html)
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. (42 - திருவேகம்பமாலை)
- பட்டினத்தார்
இப்பாடல் கருத்தையே சென்ற நூற்றாண்டில் பொன்னையாப்பிள்ளை அவர்கள் 'தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா' என்ற பாடலாக எழுதினார். பலரும் விரும்பும் புகழ் பெற்ற பாடலாகவும் அது அமைந்தது. அப்பாடலின் வரிகள் கீழே:
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற

தாழ்வெல்லாம் வருமோ அய்யா
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமையுடன் வளர்த்த

கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்
என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
[பாடல்: தந்தை தாய் இருந்தால் ; இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை; பாடியவர்: என். சி. வசந்தகோகிலம்; இராகம்: சண்முகப்ரியா; காணொளி: https://youtu.be/Y7mIOTG1WYE]
சற்றொப்ப இதே பொருள் தரும் வகையில் காளமேகத்தின் மற்றொரு பாடலும் உண்டு. அதில் சிவனைத் தாய் தந்தையற்றவன் எனக் கூறுவதற்குப் பதிலாக ஏழ்மை நிலையில் (அடியார்க்கு எளியவனாக இருப்பதை அவ்வாறு சுட்டுகிறார் புலவர்) உள்ளவனாக இருந்தால் உன்னை எல்லோரும் ஏய்க்க மாட்டார்களா என்று பாடுகிறார் காளமேகம். ஆனால் அதே செருப்பால் உதைப்பது, வில்லால் அடிப்பது போன்ற கருத்துக்கள் இப்பாடலிலும் இடம் பெறுகின்றன.
தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ- மீண்டொருவன்
வையானோ வின்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ யேழையானால்
இதன் பொருள்; தென்புலியூர் என அழைக்கப்படும் தில்லையில் ஆடும் பெருமானே! நீ ஏழையானால் அந்த எளிய நிலையை வாய்ப்பாகக் கொண்டு, குதித்து வந்து ஒருத்தி உன் தலைமீதும் ஏறிக்கொள்ள மாட்டாளா? (கங்கை சிவனின் தலையில் இருப்பதைக் குறிக்கிறார்). தன் காலிலே அணிந்துள்ள செருப்பினால் ஒருவன் உன்னை உதைக்கவும் மாட்டானோ? (கண்ணப்பன் செருப்புக்காலை சிவனின் மேல் வைத்தார்). மற்றுமொருவன் உன்னை வசை பாட மாட்டானா? வில் முறியும்படி அடித்துத் துன்புறுத்தவும் மாட்டானா? (பார்த்தன் சிவனை வில்லால் அடித்தது).
வஞ்சப்புகழ்ச்சியில் காளமேகம் வல்லவர் என்பதை இப்பாடல்கள் காட்டுகின்றன. அவர் கற்பனைத்திறனும் உண்மையில் வியக்க வைப்பதுவே.
காளமேகத்தின் தனிப்பாடல்கள் மூலம் அக்கால சைவ வைணவ சமயப் போர் குறித்த நிலையை நாம் அறிய இயலும். அதேபோன்று சாதி குறித்த செய்திகளும் அவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. ஆகவே, பெரும்பான்மையும் தொன்மக் கதைகளையும் கடவுளரையும் பற்றியே பாடிச்சென்ற காளமேகத்தின் பாடல்களின் வழியாகக் கூட 15 ஆம் நூற்றாண்டு தமிழ்மக்களையும் அவர்களது வாழ்வியலையும் நாம் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
உதவிய நூல்:
காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன்
https://ta.wikisource.org/s/1khz
நன்றி - சிறகு: http://siragu.com/கருத்து- நயத்திற்கு-ஓர்-க/

நன்றி - சிறகு: http://siragu.com/கருத்து-
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)
நல்ல தகவலுக்கு நன்றி
ReplyDeleteநன்றி கவிஞரே
ReplyDeleteஅருமை! எத்தனை செய்திகள்! தொன்மக் கதைகள்! நன்றி சகோ!
ReplyDeleteஇதில் கூசாமல் ஒருவன் கைக்கோடாலியால் வெட்ட என்ற வரிகளின் பின்னால் உள்ள கதை எனா?
ReplyDelete