Monday, July 15, 2019

லாடன் முருகன் கோயில்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்






             மதுரை நகரின் பசுமைநடை அமைப்பு நடத்தும் பசுமைநடை 101  இரண்டாவது சுற்றில் முதல் நடையாக ஜூலை 7 அன்று சென்ற இடங்களில் ஒன்று லாடன் கோயில். மதுரையில் உள்ள குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. பராந்தக மாறன் சடையன் காலத்தைச் சேர்ந்த லாடன்  முருகன் கோயில் எனப்படும் இக்கோயில்.  தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது    கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் யானைமலையின் ஒரு பகுதியில் குடைவரையாகத் திகழ்கிறது.  இக்கோயில் ஒத்தக்கடை அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயிலை ஒட்டியே உள்ளது.




             மேற்கு பார்த்த கருவறை மற்றும் முக மண்டபம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே தாய் பாறையில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த நிலையில் ஆண், பெண் சிற்பங்கள் உள்ளன. அவை முருகன் தெய்வானை என்ற பெயருடன் விளங்குகிறது.  அதிட்டான பகுதியுடன் கூடிய கருவறை மற்றும் தரங்கப் போதிகைகள் கொண்ட  குடைவரையாக உள்ளது இதன் தனிச் சிறப்பு. கருவறை வாயிலின் இடதுபுறச் சுவரில் மயிலும், வலது புறம் சேவல் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.  அதன் அருகில் பக்கத்திற்கு ஒன்றாக வாயிற்காவலர்கள் மற்றும் வேறு இரு சிற்பங்களும் உள்ளன.



             முகமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம் கொண்ட இரண்டு முழுத்தூண்களுடனும் இரண்டு அரைத் தூண்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களின் சதுர பகுதியில் தாமரைப்பூ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.


             குடைவரைக்குள் ஏறிச் செல்ல படிக்கட்டுகள் பாறையிலேயே வெட்டப்பட்டுள்ளது.  படிக்கட்டுகளின் கைப்பிடிச் சுவர் ஆனது சுருள்யாழி வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் பூத வடிவம் உருவம் காணப்படுகிறது. குடைவரைக்குள் மழை நீர் வடிந்து செல்லாமல் இருப்பதற்காக புருவவரிகள்  செதுக்கப்பட்டுள்ளன. குடைவரை உருவாக்கும்போது வெட்டப்பட்ட பாறைத் துண்டுகள் முன்புறம்  காணக்கிடைக்கிறது.





நன்றி: திரு. முத்து கிருஷ்ணன் மற்றும் திரு. சாந்தலிங்கம், திரு. சுந்தர் காளி, திரு.கண்ணன்




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm





1 comment:

  1. அருமையான பதிவு

    ReplyDelete