Sunday, May 15, 2022
800 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கீழடி அர்ச்சுன லிங்கேஸ்வரர் கோயில்
Wednesday, December 22, 2021
புதுக்கோட்டைக் குடைவரைகள்
வெள்ளாற்றை மையமாகக் கொண்டது புதுக்கோட்டை. வெள்ளாற்றின் கரையே சோழ பாண்டிய நாட்டு எல்லை ஆக இருந்தது என பழைய பாடல் ஒன்று கூறுகிறது.
“வெள்ளாறது வடக்காம் மேற்குப்பெருவழியாம்*
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்டகடல் கிழக்காம் ஐம்பத்தறுகாதம்
பாண்டிநாட்டெல்லைப்பதி.”
வெள்ளாறு வட எல்லையாகவும், மேற்கு எல்லையாகப் பெருவழியும், தெளிந்த நீர் கொண்ட கன்னி(குமரி) தென் எல்லையாகவும், (பல பாண்டிய மன்னர்களாலும் துறைமுகமாகக் கொண்டு) மனநிறைவுடன் ஆட்சி செய்யப்பட்ட கடல் கிழக்கு எல்லையாகவும், இந்த ஐம்பத்தாறு காதம் வரை விரிந்துள்ள நிலமே பாண்டிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும்.
(*பெருவழி என்பதற்குப் பதில் பெருவெளி என்ற பாட பேதமும் உண்டு).
சங்ககாலம் முதல் பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், அவர்களுக்குக் கீழே இருந்த குறுநிலத் தலைவர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர்கள், வழுதூர் பல்லவராயர்கள், சிற்றரசர்கள் ஆகியோர் புதுக்கோட்டையை கிபி 15 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு உள்ளார்கள். கிபி 17 ஆம் நூற்றாண்டு முதல் 1948 வரை புதுக்கோட்டையானது ஒரு தனியரசாக ஒன்பது மன்னர்களால் ஆட்சி செய்த பகுதியாக இருந்துள்ளது.

1. மலையடிப்பட்டி குடைவரை:


2. குன்றாண்டார் குடைவரை:

3. நார்த்தாமலை குடைவரை:
நகரத்து ஊர் மலை என்பது நார்த்தாமலை என மருவியது. பழியிலி ஈஸ்வரம் முத்தரையர் குடைவரை இது. சிறியநங்கை என்ற பெண் நந்தி வைக்க ரிஷபக் கூட்டை ஏற்படுத்திய செய்தி நிருபதுங்கன் கல்வெட்டு ஆக உள்ளது. அருகே சமணக் குடைவரை தெற்கு வடக்காக நீள் சதுர வடிவத்தில் கருவறை, முன் மண்டபம் என தாய்ப்பாறையிலேயே உள்ளது.
4. பதினெண் பூமி விண்ணகரம் குடைவரை:
பதினெண் பூமி என்ற வணிகக் குழு விஷ்ணுவின் 12 சிற்பங்களைத் தாய் பாறையிலேயே செதுக்கி உள்ளனர். பதினெண் பூமி விண்ணகரம் என்ற பெயர் கொண்டதாக கல்வெட்டு கூறுகிறது.
5. திருகோகர்ணம்:
சதுர ஆவுடையாராக லிங்கத் திருமேனி இருப்பதாலும் மாறன் சடையன் கல்வெட்டு இங்கு உள்ளதாலும் இக்குடைவரை பாண்டியர்களுக்கானது. மலையின் சிறு பகுதியில் கருவறை, முன் மண்டபம் தாய்ப்பாறையிலேயே உள்ளது. கங்காதரர், வலம்புரி விநாயகர் சிற்பங்களும் இங்கு உள்ளன.
6. சித்தன்னவாசல் குடைவரை:

7. குடுமியான்மலை மேல் தளி:
இக்குடைவரை குடுமிநாதர் கோயில் எனக் கல்வெட்டு கூறுகிறது. சதுர ஆவுடையாக லிங்கத் திருமேனி மற்றும் கோமாறன் சடையன் கல்வெட்டு இருப்பதால் இது பாண்டியர்களுக்கானது எனத் தெரிகிறது. இங்கு ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும் பல்லவகிரந்தத்தில் வெட்டப்பட்ட இசைக் கல்வெட்டு வீணை குறித்த குறிப்பைக் கொண்டுள்ள சங்கீதக் கல்வெட்டு உள்ளது. புடைப்புச் சிற்பமாக வலம்புரி விநாயகரும், துவாரபாலகர்கள் அருகிலேயே தெற்கு பார்த்து மனித வடிவமாக உள்ளனர்.
8. தேவர்மலை:
திருமயம் தாலுகாவில் கோட்டூர் அருகே, பேரையூர் மேற்கே காட்டிற்குள் சிறுமலையில் உள்ளது. சதுர ஆவுடை கொண்ட லிங்கத் திருமேனி, மற்றும் துவாரபாலகர்கள் மனித உருவத்தில் உள்ளனர். இங்கே அரிட்டாபட்டியில் உள்ளது போல லகுலீசர் சிற்பம் உள்ளது. மற்ற இடங்களில் காணப்படும் லகுலீசர் சிற்பம் உதிரி சிற்பமாக உள்ளவை.
9. திருமயம்:
மலைமேல் திருமயம் கோட்டைக்குள் சதுர ஆவுடையார் லிங்கத்திருமேனியும், ‘பரிவாதிநிதா’ என்ற கல்வெட்டும் உள்ளது. இது ஏணிப்படிகளில் ஏறிப் பார்க்குமாறு இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் பாண்டியர் காலக் குடைவரையாகும்.
10. திருமயம் மலை மேற்குக் குடைவரை:
அடிவாரத்தில் மேற்கு குடைவரையில் கிழக்கு நோக்கி சிவன் லிங்கத் திருமேனியாக தாய்ப்பாறையிலேயே சதுர ஆவுடையார் கொண்டும், மனித உருவில் துவார பாலகர்களும் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும் கல்வெட்டும் சிறு குறிப்புடன் இங்கும் உள்ளது, மிகப் பெரிய லிங்கோத்பவர் உருவம் தாய்ப்பாறையில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.
11. திருமயம் மலை கிழக்குக் குடைவரை:
அடிவாரத்தில் கிழக்கே விஷ்ணு குடைவரைக் கோயிலும் பாம்பணையில் விஷ்ணு சயன கோலத்திலும், மேலே தேவர்கள் அகத்தியரும் உள்ளது போலவும், பூமாதேவியை தூக்குவதற்கு வரும் அரக்கர்களை விரட்ட பாம்பு விஷத்தைக் கக்கி தாக்குவது மாதிரியும், அவர்கள் பயந்து ஓடுவது மாதிரியாகவும் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருடம் ஒருமுறை இதற்கு தைலக்காப்பு நடைபெறும். சைவ வைணவ வழிபாட்டுச் சண்டையைக் கருத்தில் கொண்டு 13ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர் வீர சோமேஸ்வரனின் தண்டநாயகன் இருபகுதிக்கும் இடையே நடுவில் எழுப்பிய 'கையுருவிச் சுவாரால்' இப்பகுதி பிரிக்கப்பட்டு தனித்தனி வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12. நச்சாந்துபட்டி மலையக் கோவில்:
பொன்னமராவதிக்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் மலையக் கோவில் இருக்கிறது. இங்கு நச்சாந்துபட்டி அருகே, இம்மலையின் அடிவாரத்தில் வடபுறத்தில் சிவன் குடைவரை கோயில் உள்ளது. அதில் கருவறையில் எட்டுப் பட்டைகளுடன் உள்ள ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாக மூலவர் உள்ளார். இங்கு உள்ள அபிஷேகம் நீர் செல்லும் பாதையானது சிங்கம் முகமாக உள்ளது. இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும் கல்வெட்டு உள்ளது.
13. தெற்கு குடைவரை:
இதே பகுதியில், தெற்கு குடைவரையில், கருவறை முன், மண்டபம் எனவும் மூலவர் எட்டுப்பட்டை ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக, புடைப்புச் சிற்பமாக உள்ளார். தூணின் தொகையானது தரங்கப் போதிகைகள் கொண்டு உள்ளது. எதிரே வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாக தாய்ப்பாறையிலேயே உள்ளார்.
14. பூவாலக்குடி குடைவரை:
15. குலாலகோட்டையூர் குடைவரை:
திருமயம் - இராயவரம் வழியில், ராயவரத்திற்கு மேற்கே குலாலகோட்டையூர் என்று அழைக்கப்படும் கோட்டையூர் இராயவரம் சிவன் குடைவரைக் கோயில் உள்ளது. இந்த இராயவரம் குலாலகோட்டையூர் குடைவரையில் சுற்றுப்பாதை இல்லாமலேயே அமைந்த அரை வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக மூலவர் அமைக்கப்பட்டுள்ளார். இது வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
16. ஆயிங்குடி குடைவரை:
இராயவரம் நேர் தென்புறத்தில் ஆயிங்குடியில் உள்ள மலைக்குடைவரையில் பாறையிலேயே லிங்கத் திருமேனியாய் மூலவர் உள்ளார். பின்பு நகரத்தார்களால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முத்தரையர்கள், பல்லவர்கள் பாண்டியர்கள் மேன்மையை ஏற்றுக் கொண்டு ஆட்சி செய்ததால் தங்களுக்குச் சாத்தான் மாறன் என்ற பெயர் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் முதலாம் மகேந்திரவர்மனின் வீணை பரிவாதினி என்ற கல்வெட்டு கிடைக்கின்றது.
நார்த்தாமலைக்குத் தெற்கே பல்லவராட்சி இருந்ததற்கான சான்றும் இல்லை. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் கல்வெட்டு, பெரும்பிடுகு முத்தரையர், மடைசெய்த கல் தூண் கல்வெட்டு, முத்தரையன் என்னும் கல்வெட்டு, நாமனூர் குளத்தில் வட்டெழுத்து அவனீஸ்வர கல்வெட்டு என கிட்டத்தட்ட ஆயிரம் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் சமீப காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் இணையவழி திசைக் கூடல் உரைத்தொடர் நிகழ்ச்சி வரிசையில், டிசம்பர் 11, 2021 அன்று, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவரும், கல்வெட்டு அறிஞருமான திரு. கரு. ராசேந்திரன் அவர்கள் "புதுக்கோட்டை மாவட்ட குடைவரைக் கோயில்கள்" என்ற தலைப்பில் வழங்கிய உரையிலிருந்து முனைவர். ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் தொகுத்த தரவுகள் கட்டுரை.
Saturday, December 4, 2021
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திருவள்ளுவர் திருவுருவம்













Thursday, October 7, 2021
வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு


Wednesday, July 14, 2021
வீரக்குடி கரைமேல் முருக அய்யனார் கோயில் கல்வெட்டுக்கள்
-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


Monday, February 8, 2021
சூலக்கல்
-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


Thursday, November 19, 2020
நாயக்கர் காலத்து கல்திட்டை மற்றும் நடுகற்கள்



or reload the browser
Monday, September 21, 2020
முருங்கை
முருங்கை
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தாவரவியல் பெயர் - மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera)
குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae)
இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத் தாவரம் ஆகும். இம்மரமானது சுமார் 12 மீட்டர் உயரம் வரை விரைவில் வளரக் கூடியதாகும்.
முருங்கை பெயர்க் காரணம்:
முறி என்பது ஒடிதல், உடைதல் முறிப்பது எளிதில் உடையக் கூடியதாக இம்மரம் இருப்பதால் முருங்கை எனப் பெயர் வந்ததாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.இம்மரமானது எளிதில் முறியக் காரணம் இம்மரத்தில் நார் திசுக்கள் காணப்படுவதில்லை. இம்மரத்தின் பூர்வீகம் இந்தியா, இமயமலை அடிவாரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முருங்கை மரமானது 2000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் கூட வளரக்கூடியது. இம்மரத்திற்குக் குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இவை விதை மற்றும் குச்சியை ஊன்றி வைப்பதன் மூலம் வளர்கிறது.
வேறு பெயர்கள்:
முருங்கை (தமிழ்) , நுக்கே (கன்னடம்), முனகா (தெலுங்கு), முரிங்கா (மலையாளம்).
முருங்கை மரத்தில் உள்ள வேதிப்பொருள்கள்:
பீனாலிக் அமிலங்கள், பிளேவனாய்டுகள், குளுக்கோசினோலேட், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A,B,C,D,E , கரோட்டினாய்டுகள், ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து கொண்டுள்ளது.
குறிப்பாக பென்சைல் குளுக்கோசினோலேட் அதிக அளவில் வேரிலும், குளுக்கோ மோரிஜினின் அதிக அளவு தண்டு, பூ மற்றும் விதையில் காணப்படுகிறது. டேனின் என்ற வேதிப்பொருள் அதிக அளவு முருங்கை மரத்தின் இலையில் காணப்படுகிறது. விந்தணு வளர்ச்சிக்கு உதவும் ஜிங்க் ஆனது 31 மில்லிகிராம் வரை இருக்கிறது. குளுக்கோசினோலேட், ஐசோ தாயோ சயனேட் , கிளைசிரால்_1-9- ஆக்டடிகனோஏட் போன்ற புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்களும் முருங்கையில் நிறைந்து காணப்படுகின்றன.
சத்துக்கள்:
ஆரஞ்சில் இருப்பதைவிட ஏழு மடங்கு அதிக அளவு விட்டமின் C யும், கேரட்டில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிக அளவு விட்டமின் A யும், பாலில் இருப்பதை விட 17 மடங்கு கால்சியமும், தயிரில் இருப்பதை விட 9 மடங்கு புரதமும், வாழைப்பழத்தில் இருப்பதை விட 15 மடங்கு பொட்டாசியமும், ஸ்பினாச்சில் இருப்பதை விட 25 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கையில் உள்ளது. மேலும்; ஒரு தேக்கரண்டி அளவுள்ள முருங்கை இலை பொடியில் 14 சதவீதம் புரதம், 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்பு மற்றும் சிறிதளவு விட்டமின் A உள்ளது.
முருங்கையைப் பற்றிய பழமொழிகள்:
1. வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி.
2. பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்
3. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
இலக்கியத்தில் முருங்கை:
அகநானூற்றில் முருங்கை பற்றிய குறிப்பு வருகிறது.
"சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப"
- மாமூலனார், அகநானூறு.
பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில், முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெள்ளைப் பூக்களைச் சுழற்றியடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது.
"நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை"
- சீத்தலைச்சாத்தனார்
முருங்கை பூக்கள் கடும் காற்றில் அடித்து கடலலையின் நீர்த்துளிகள் சிதறுவது போல உதிர்வதாக என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழைத்துளி போலப் பூக்கள் உதிரும் எனவும், நீரில்லா வறண்ட நிலத்தில் உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்கும் எனவும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்களில் முருங்கை மரம் குறிக்கப்படுவதால் பாலை நிலத்திற்குரிய மரம் என்பது தெரிய வருகிறது. மேலும், முருங்கை பாலை நிலத்து மரம் என்பதைக் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலின் மூலமும் அறிய முடிகிறது.
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நண்ணியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்கி வீயும் இடம்.
- திணைமாலை - 91
மருத்துவப் பயன்கள்:
இம்மரத்தின் பூ, விதை, வேர், இலை, பட்டை, தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்ட முருங்கையின் மருத்துவப் பயன்களில் சில:
1. இலையில் இருக்கும் பிளேவனாய்டுகள் டைப் 1 டைப் 2 சர்க்கரை நோயைச் சரி செய்வதற்கும் ஆஸ்துமா, மலேரியா, ரத்தக்கொதிப்பைச் சரி செய்யவும், ஐசோதயோ சயனேட் , குவார்செட்டின் என்ற வேதியியல் பொருள் புற்றுநோயை எதிர்த்தும்
2. வேர், பட்டையில் இருக்கும் ஆல்கலாய்டுகள் மற்றும் மோரிஜினைன் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதயத்தை வலு சேர்ப்பதாகவும்
3. பூவில் இருக்கும் அமினோ அமிலங்கள் கொழுப்பைக் குறைக்கவும் சிறுநீரக பிரச்சனையைச் சரி செய்யவும்
4. விதையில் இருக்கும் பென் எண்ணை ஹைப்பர் தைராய்டு மற்றும் கவுட் நோயைச் சரி செய்யவும்
5. விதை நெற்றில் இருக்கும் நார்ச்சத்து, ஒலியிக் அமிலம் லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை கல்லீரல் மற்றும் மண்ணீரலை வலுப்படுத்தவும்
6. முருங்கையில் தனித்துவமிக்க வேதியியல் மூலக்கூறாக குளுக்கோசினோலேட் உள்ளது. இது ஐசோ தயோசயனேட் ஆக மாறி நரம்பு சம்பந்தமான குறைபாட்டினை தீர்க்கவும்
7. விதை நெற்றில் உள்ள நியசிமிசின் மற்றும் குளுக்கோமொரிஜின் என்ற வேதிப் பொருள் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக மருந்தாக்கவியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
8. விதையில் உள்ள 7 ,12 டைமீத்தைல் பென்ஸ் ஆந்ரசீன் சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கும்
9. இலையில் உள்ள பைட்டோ ஸ்டீரால் எனப்படும் ஸ்டிக்மா ஸ்டீரால், சிட்டோ ஸ்டிரால், கேப்ஸ்டீரால் போன்றவை பிரசவத்திற்கு பின்னான பால் சுரப்பை அதிகப்படுத்துவதாகவும்
10. விதையில் இருக்கும் ஈபாக்சைடு ஹைட்ரோலேஸ் என்சைம் ஆனது பாலுணர்வைத் தூண்டவும், ஆண்மை குறைபாட்டைச் சரி செய்வதற்காகவும் பயன்படுவதாக மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முருங்கையின் வேறு பயன்கள்:
சத்துப் பயிராகவும், இலை மற்றும் விதை விலங்கு தீவனமாகவும், மரப்பட்டையானது நீல நிறச் சாயம் தயாரிக்கவும், வேலியாகவும், உரமாகவும், எரிவாயுவாகவும் பயன்படுகிறது. விதையானது நீரினை சுத்தம் செய்வதற்காகவும், விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது உணவு மற்றும் கேச தயாரிப்பு பொருள்களில் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
or reload the browser
Saturday, January 25, 2020
கற்குவேல் அய்யனார் கோயில்
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
திருச்செந்தூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது குதிரைமொழி கிராமம். இது ஒரு தேரி குடியிருப்பு. தேரி என்றால் செம்மண். குமரிமுனையிலிருந்து தொடங்கி நாங்குநேரி, சாயர்புரம் வரை தேரி விரிந்து கிடக்கிறது. ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவர் இங்கு கிடைத்த புதிய கற்கால கருவிகளை ஆராய்ந்து இவை 10,000 ஆண்டிற்கு முற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல் தேரி மண்ணை எடுத்து வியன்னா ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து இம்மண்ணை போன்று வேறு எங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார் மானாடு என்பது மானவீரவளநாடு என்றும் அழைக்கப்பெற்றது. இங்கு கி.பி. 1639 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. இப்பகுதியை ஆண்ட 10 நாடார் குறுநில மன்னர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் உள்ளது. இக்கல்வெட்டில் இந்த ஐயனார் கருக்கு வேலையன் என்று குறிக்கப்படுகிறார். கி.பி. 1703 இல் செம்பால் செய்த நகரா ஒன்று தானமாக அளிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
மூலவர்:
கற்குவேல் அய்யனார்; மகாமண்டபத்தில் விநாயகர், லாட சன்னியாசி போன்றோர் அமைக்கப்பட்டுள்ளனர்.
பரிவார தெய்வங்கள்:
பரிவார தெய்வங்களாக முன்னடியான், வன்னியராசர், பட்டவராயன், சுடலைமாடன், கருப்பசாமி, சின்னத்தம்பி, மாடசாமி, பொன் காத்த அய்யனார், பெரியாண்டவர், இருளப்பர், பிண மாலை சூடும் பெருமாள் செருக்கன், துப்பாக்கி மாடசாமி, எமதர்மர், புலமாடி அம்மன், புலமாடன் சாமி போன்றவர்கள் உள்ளனர் .
பெண் தெய்வங்கள்:
பேச்சி அம்மன், பிடிமண் அம்மன், பத்திரகாளி, பிரம்மசக்தி, இசக்கி அம்மன் மற்றும் சப்தகன்னியர்கள் பெண் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள்.
திருவிழா:
கள்ளர் வெட்டு திருவிழா; இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வில்லுப்பாட்டு இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியர், மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
Wednesday, January 15, 2020
மதுரை திரௌபதி அம்மன் கோயில்
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
கிபி 1884இல் வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் அவர்களால் மதுரை தெற்கு மார்ட் வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மதுரை சௌராஷ்டிர தருமராஜர் சபைக்குப் பாத்தியமான கோயில். இக்கோயிலின் கும்பாபிஷேகம் 24. 1. 2016 அன்று நடத்தப்பட்டது.
கோயில் அமைப்பு:
இரண்டு கருவறைகள், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
கருவறை:
இரட்டை கருவறைகளில் ஒன்றில் இரண்டு அடி உயரம் உடைய நின்றகோலத்தில் திரௌபதி அம்மனும் மற்றொரு கருவறையில் தர்மராஜனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
அர்த்தமண்டபம்:
அர்த்தமண்டபத்தில் பஞ்சலோகத்தால் ஆன பஞ்ச மூர்த்தியும், காளியம்மன்,கமல கன்னி, சந்தோஷிமாதா மற்றும் விநாயகர் இறை உருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.
மகாமண்டபம்:
மகாமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன் காணப்படுகிறது.
மகாமண்டபத்தில் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர், உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி (குதிரை வாகனத்தில்), ஸ்ரீ நல்லமுடி அரவாண் (ஐந்தடி உயரத்தில் முகம் மட்டும் கொண்ட சுதைச் சிற்பமாக), ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர், சித்திரகுப்தர் (பஞ்சலோகத்தில்), குரு (யானை வாகனத்தில்), சனீஸ்வரர் என்று அனைத்து உருவங்களும் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோயிலின் வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் ஒன்றும் தனித்தனியாகச் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
Saturday, January 11, 2020
மதுரையில் நடைபெற்ற வட்டெழுத்துப் பயிலரங்கம்
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தமிழ் மரபு அறக்கட்டளை சென்னையில் நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக, பாண்டியர்களின் எழுத்து மொழியாக இருந்த வட்டெழுத்து பயிற்சியினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 24, 2019 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினருடன் சந்தித்ததிலிருந்து கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சிக்கான வேலைகள் ஆரம்பமானது. அதன்படி டிசம்பர் 28, 29, 2019 ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் விளம்பர அறிவிப்பு நவம்பர் 5, 2019 அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பயிற்சிக்கான பதிவுகளும் தொடங்கின.
இப்பயிற்சியில் மொத்தம் 135 நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அவர்களில் வெளியூரிலிருந்து 40 நபர்கள் என்ற அளவிலும் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலிருந்து 95 நபர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் அமெரிக்கா, ஜெர்மனி, மைசூரு, பெங்களூரு திருச்சி, கோவை, தேனி, சிவகாசி, ராஜபாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் கலந்து கொண்டார்கள். அதேபோல பல துறையைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக வரலாறு, தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தவிர்த்து, கட்டிடப் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், சித்த மருத்துவர்கள், பழங்குடியினர், ஆய்வக நுட்புநர், எழுத்தாளர்கள், தட்டச்சு எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு பிரிவினரும் வட்டெழுத்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
வட்டெழுத்து பயிற்சியின் முதல்நாளான 28.12.2019 அன்று காலை 10 மணியளவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் பயிற்சியைத் தொடங்கி வைத்ததுடன் சிறப்புரையாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் 'வட்டெழுத்து' எழுத்துகள் குறித்த பயிற்சியினை அளித்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 29.12.2019 அன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் முனைவர் ராஜேந்திரன், முனைவர் கோ. சசிகலா ஆகியோர் முதல் நாள் பயிற்சிக்கு வந்திருந்தவர்களின் பாட நோட்டினை வாங்கி அவர்கள் எழுதியிருந்த வட்டெழுத்து எழுத்துகளைச் சரிபார்த்துத் திருத்தி கொடுத்தார்கள். அன்றே தமிழி எழுத்தின் அறிமுகத்தையும் அவர்கள் நடத்தியதுடன் பயிற்சி நிறைவடைந்தது. பின்பு பங்கேற்பாளர்களின் ஐயங்களுக்குப் பயிற்றுநர்கள் பதிலளித்தார்கள். இறுதியாக மாலை 3 மணி அளவில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்து நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
பயிற்சியில் 48 மாணவர்களும், பொதுமக்கள் 87 பேர் என்ற அளவிலும் கலந்துகொண்டார்கள். இவர்களில் 5 மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டது. அன்று மாலை 4 மணி அளவில் களப்பயணமாக, வட்டெழுத்தின் பயிற்சிக்குப் பின் அவ்வெழுத்துக்களை நேரில் பார்த்து வாசிக்கும் விதமாக, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு எதிரில் இருந்த பெருமாள் மலைக்குப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு மதுரை பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களால் மரபு பயணம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. பின்னர் முனைவர் கோ. சசிகலா அவர்களால் அங்கிருந்த வட்டெழுத்து பற்றிய நேரடி விளக்கம் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
வட்டெழுத்து பயிற்சியினை தொடர்ந்து மூன்றாம் நாளான 30.12.2019 அன்று 45 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக மரபு பயணம் ஒன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களுக்கு முக்கியமாக வட்டெழுத்துக்கள் கொண்ட பழமையான இடங்களான யோக நரசிம்மர் கோயில், அரிட்டாபட்டி, லாடன் கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாறு அறியப்பட்டது. அன்று மதியம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்திருந்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் அரங்கத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு, கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவிற்குச் சென்றும் வரலாற்றுச் செய்திகள் அறியப்பட்டது. அனைத்து இடங்களிலும் முனைவர் கோ. சசிகலா அவர்கள் அந்த இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும் வரலாற்றினையும் விளக்கமளித்தார். மாலை மரபு பயணமும் இனிதாக நிறைவடைந்தது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm