—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தமிழ் மரபு அறக்கட்டளை சென்னையில் நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக, பாண்டியர்களின் எழுத்து மொழியாக இருந்த வட்டெழுத்து பயிற்சியினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 24, 2019 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினருடன் சந்தித்ததிலிருந்து கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சிக்கான வேலைகள் ஆரம்பமானது. அதன்படி டிசம்பர் 28, 29, 2019 ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் விளம்பர அறிவிப்பு நவம்பர் 5, 2019 அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பயிற்சிக்கான பதிவுகளும் தொடங்கின.
இப்பயிற்சியில் மொத்தம் 135 நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அவர்களில் வெளியூரிலிருந்து 40 நபர்கள் என்ற அளவிலும் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலிருந்து 95 நபர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் அமெரிக்கா, ஜெர்மனி, மைசூரு, பெங்களூரு திருச்சி, கோவை, தேனி, சிவகாசி, ராஜபாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் கலந்து கொண்டார்கள். அதேபோல பல துறையைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக வரலாறு, தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தவிர்த்து, கட்டிடப் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், சித்த மருத்துவர்கள், பழங்குடியினர், ஆய்வக நுட்புநர், எழுத்தாளர்கள், தட்டச்சு எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு பிரிவினரும் வட்டெழுத்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
வட்டெழுத்து பயிற்சியின் முதல்நாளான 28.12.2019 அன்று காலை 10 மணியளவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் பயிற்சியைத் தொடங்கி வைத்ததுடன் சிறப்புரையாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் 'வட்டெழுத்து' எழுத்துகள் குறித்த பயிற்சியினை அளித்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 29.12.2019 அன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் முனைவர் ராஜேந்திரன், முனைவர் கோ. சசிகலா ஆகியோர் முதல் நாள் பயிற்சிக்கு வந்திருந்தவர்களின் பாட நோட்டினை வாங்கி அவர்கள் எழுதியிருந்த வட்டெழுத்து எழுத்துகளைச் சரிபார்த்துத் திருத்தி கொடுத்தார்கள். அன்றே தமிழி எழுத்தின் அறிமுகத்தையும் அவர்கள் நடத்தியதுடன் பயிற்சி நிறைவடைந்தது. பின்பு பங்கேற்பாளர்களின் ஐயங்களுக்குப் பயிற்றுநர்கள் பதிலளித்தார்கள். இறுதியாக மாலை 3 மணி அளவில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்து நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
பயிற்சியில் 48 மாணவர்களும், பொதுமக்கள் 87 பேர் என்ற அளவிலும் கலந்துகொண்டார்கள். இவர்களில் 5 மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டது. அன்று மாலை 4 மணி அளவில் களப்பயணமாக, வட்டெழுத்தின் பயிற்சிக்குப் பின் அவ்வெழுத்துக்களை நேரில் பார்த்து வாசிக்கும் விதமாக, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு எதிரில் இருந்த பெருமாள் மலைக்குப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு மதுரை பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களால் மரபு பயணம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. பின்னர் முனைவர் கோ. சசிகலா அவர்களால் அங்கிருந்த வட்டெழுத்து பற்றிய நேரடி விளக்கம் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
வட்டெழுத்து பயிற்சியினை தொடர்ந்து மூன்றாம் நாளான 30.12.2019 அன்று 45 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக மரபு பயணம் ஒன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களுக்கு முக்கியமாக வட்டெழுத்துக்கள் கொண்ட பழமையான இடங்களான யோக நரசிம்மர் கோயில், அரிட்டாபட்டி, லாடன் கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாறு அறியப்பட்டது. அன்று மதியம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்திருந்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் அரங்கத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு, கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவிற்குச் சென்றும் வரலாற்றுச் செய்திகள் அறியப்பட்டது. அனைத்து இடங்களிலும் முனைவர் கோ. சசிகலா அவர்கள் அந்த இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும் வரலாற்றினையும் விளக்கமளித்தார். மாலை மரபு பயணமும் இனிதாக நிறைவடைந்தது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment