திருக்குறள் - சிறப்பு திருமுறை ஆகமம்
"சொல்லாக்கியன் "
திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு. களப்பிரர் அதிகார உச்சத்திலிருந்த காலம். சில காலம், திருக்குறள் முறையாக அரங்கேற்றப் படாமல் தடுக்கப்பட்டதாய் கூறப்படுகின்றது. அது பௌத்தம் மற்றும் சமணத்தையும் எதிர்ப்பதாய் கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், அதன் பொருண்மையும் வெளிப்பாடும் குறிப்பிட்ட சமயங்களைக் குறிப்பதாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருப்பதால், செம்மையான வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கின்றமையால், முழுமையாகப் புறக்கணிக்க முடியவில்லை. மேலும், புலவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அது ஏற்கனவே புழக்கத்தில் வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. திருக்குறளைப் பற்றிய பற்பல சான்றோர்களின் கருத்துகளும், ஆய்வுக் குறிப்புகளும்தான் அதை அரங்கேற்ற நிர்ப்பந்தித்திருக்க வேண்டும். ஏனென்றால், தமிழ் இலக்கிய வரலாற்றில் வேறெந்த தனி நூலுக்கும், புலவருக்கும் இத்தகைய புகழ்மாலை பரவலாக அணியப்படவில்லை. அதுதான் இன்று பாயிரமாக, திருவள்ளுவ மாலையாக மணக்கின்றது.
திருவள்ளுவர் வாய்மொழி செய்தியாக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்றே சமீபகாலம் வரை கருதப்பட்டார், கூறப்பட்டார், கற்பிக்கப்பட்டார். ஆனால், இப்பொழுது, பல சமயங்களும் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடுவது போல், பல சமூகத்தினரும் திருவள்ளுவருக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதற்குக் காரணம், அது இன்றைய உலகளாவிய வாழ்வியல் சூழலுக்கும் பொருந்தும் தன்மை, எல்லா நாட்டவரும் வியந்து விரும்பி ஏற்கும் தன்மை. திருக்குறள் இன்று உன்னதமான உலக இலக்கியமாகக் கருதப்படத் துவங்கியுள்ளது. வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் காட்டும் கையேடாக மிளிர்கின்றது. திருவள்ளுவரோ உண்மையாகவே உலகக் குடிமகனாக நோக்கப்படும் காலம் வந்து கொண்டிருக்கின்றது. குறளின் அறம் காட்டும் வழியில் மக்கள் நடந்தால் பொருளாதார வளமும், அமைதியான ஆட்சியும், மட்டில்லாத இன்பமும் உலகமெலாம் நிலவும். பல்வேறு நாட்டு மாந்தர் ஒற்றுமையான உலகக்குடிகளாகவும் , இன்று நிலவும் இந்த பூமியே சுவர்க்கமாகவும் ஒளிரும்.
திருக்குறளை முதலில் அறநெறி நூல் என்றனர். அதன் ஞான மரபைக் கண்ணுற்று மறைநூல் என்றனர். அதன் தத்துவ அடிப்படையை உணர்ந்து தமிழ்வேதம் என்றனர். அதன் சரியைகளையும், கிரியைகளையும், ஓகத்தையும் (யோகத்தையும்), ஞானத்தையும் அறிந்துணர்ந்தால் அதைத் திருமுறை என்றும் ஆகமம் என்றும் கூறலாம்.
திருமுறை என்றால் என்ன? ஆகமம் என்றால் என்ன? அவற்றின் தோற்றம் எவ்வாறு?
திருமுறை = திரு + முறை.
இறை + வழி. இறைமையை அடையும் வழி.
சமணர்கள் ஆகமங்களைக் கொண்டிருந்தனர்.
பௌத்தர்கள் நிகாயங்களைக் கொண்டிருந்தனர்.
தத்தம் சமய தத்துவங்களில் கூறப்படும் மெய்மைகளை உணர்வதற்கான நடைமுறை செயல்பாடுகளை, குறிப்பாக விளக்குவதே ஆகமம் அல்லது நிகாயம் ஆகும்.
ஆகமம் = ஆக் + அம் + அம். ஆகின்ற தன்மை. மெய்யாகும் தன்மை. பரம்பொருளாகும் தன்மை. இறைமையாகும் தன்மை.
நிகாயம் = நி + காயம் = இன்மை + தேகம். தேகமற்ற உணர்வு. பிரபஞ்ச மனநிலை.
சமணம் மற்றும் பௌத்தம், இந்திய நிலப்பரப்பில் உலகக் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.
சமணம்:
உலகம் தெய்வத்தால் படைக்கப்படவில்லை, அது துவக்கமும் முடிவுமின்றி தொடர்ந்து நிலவுகின்றது. சீவன் , சீவனற்றது என இரண்டுமாய் ஆனது உலகம். சீவன் , மறுபிறப்பு எடுப்பதற்கான காரணம், அதன் ஆன்மாவைச் சேரும் கருமமாகும். மனித வாழ்க்கையின் இலட்சியம், கருமத்திலிருந்து விடுதலை பெற்று சித்தர் உலகை அடைவதும், பிறப்பறுத்தலுமாகும் .
அதற்கான நடைமுறை;
1. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் அகிம்சை; அல்லது ஊறுவிளைக்காமை ,
2. உண்மை,
3. களவாமை ,
4. துறவிகளின் காமமின்மை மற்றும் குடும்பங்களில் தம்பதியர்களுக்கிடையிலான நேர்மை,
5. பற்றின்மை
பௌத்தம்:
பௌத்த தத்துவமும், உண்மைகளும், நடைமுறைச் செயல்பாடுகளும் கீழ்வருவன;
மூன்று பிரபஞ்ச உண்மைகள்:
1. பிரபஞ்சத்தில் எதுவும் அழிவதில்லை.
2. எல்லாம் மாறிக்கொண்டே உள்ளது.
3. காரணமின்றி விளைவில்லை என்பது விதி.
நான்கு உன்னத உண்மைகள்:
1. வாழ்வு துன்பமயமானது .
2. பற்றால் துன்பம் ஏற்படுகின்றது.
3. துன்பம் மற்றும் ஆசையிலிருந்து விடுதலை பெற முடியும்.
4. அதற்கு, எட்டுவகை வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எட்டுவகை வழிகள்:
1. சரியான புரிதல். (நான்கு உன்னத உண்மைகள்)
2. சரியான சிந்தனை. (விருப்பு, வெறுப்பின்மை)
3. சரியான பேச்சு. (பொய், புறம் கூறாமை)
4. சரியான நடத்தை (கொல்லாமை, ஊறு செய்யாமை, களவாமை , காமமின்மை, மது அல்லது போதைப் பொருள் உட்கொள்ளாமை)
5. சரியான வாழ்வாதாரம். (இரத்தல், ஊறின்றி உழைத்தல்)
6. சரியான முயற்சி. (நல்ல சிந்தனையை வளர்த்தலும், தீய சிந்தனையை விலக்கலும்)
7. தியானம்.
8. சமாதி.
தியானமும் முடிவாய், சமாதியும்தான், புத்தமதத்தின் மிக உயர்ந்த இலக்குகள். பின்பு, 'யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' எனும் நோக்கில், புத்தமதக் கொள்கைகளைப் பரப்புவதே, வாழ்வியலாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புத்தர் ஞானம் பெற்ற பிறகு, முதலில், முன்னாளில் தன்னுடன் ஞானத்திற்காக முயன்ற நண்பர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்களும் ஏற்கனவே பக்குவம் பெற்றிருந்ததால் விரைவாக ஞானத்தை உணர்ந்தனர். அடுத்து, அவர் தன்னுடைய நீண்ட 45 வருடக்காலத்தில் சந்தித்த பல்லாயிரக் கணக்கான மக்களின் மனவளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆலோசனைகளைக் கதை, உபதேசம், விவாதம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் வழங்கினார் (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேற்கொண்ட உரையாடல் முறை, விவாதம் வகையைச் சார்ந்தது).
அவை பல்வேறு நிகாயங்களாய் உருப்பெற்றன. அவற்றில் மனம் எந்தெந்த வகைகளில் தன் இயக்கத்தை இழக்கின்றது, அப்பொழுது தோன்றும் உணர்வுநிலை என்ன, அதன் வெளிப்படு பண்புகள் என்ன என்று கூர்ந்து கவனமாகக் கவனிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறுதியாக, ஒற்றைச் சொல்லால், புன்முறுவலால், மௌனத்தால், பார்வையால், புத்தரால் ஞானத்தைப் போதிக்க முடிந்தது. அதாவது, மனத்தின் இயக்கத்தை நிறுத்தி, தோன்றும் உணர்வைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து நிலைக்க வைப்பது. இதை, ஒரு உளவியல் தந்திரமாக, மந்திரமாக வளர்த்தெடுத்தனர். ஜென் பௌத்தம் எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் அது ஆர்வத்துடன் பயிற்றுவிக்கப்படுகின்றது.
களப்பிரர் காலம்:
களப்பிரர் வரலாறு சமீபகாலம் வரை இருண்டே இருந்தது. பூலாங்குறிச்சி கல்வெட்டுதான் அக்காலம் பொற்காலமாய் இருந்திருப்பதற்கான அடிப்படைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. அக்காலத்தில், சமண மற்றும் பௌத்த சமயங்கள் அரசியல் செல்வாக்குடன் வலிமையாய் இருந்தன என்றும், வளமும், வாணிபமும், செல்வமும் செழித்தன என்றும், தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும், பிற படைப்பாக்கங்களும் தோன்றின என்றும் அறிகின்றோம். இந்தக் கால கட்டத்தில், பொருள் வாணிபத்துடன், கருத்து பரிமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. பௌத்தம் கடல் கடந்து, பர்மா (பர்மம் ), தாய்லாந்து (தாய்நிலம்), கொரியா(கொரியம் ), சீனம், சப்பான் முதலிய தெற்கு ஆசிய நாடுகளில் தழைத்தது.
அதே சமயம், வைதிக மதங்கள் (சைவம், வைணவம்), ஆதரவற்ற நிலையில், வலுவிழந்திருந்தன. பிரமதேய நிலங்களும், சதுர்வேதி மங்கலங்களும் பறிக்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்கு மறு பங்கீடு செய்யப்பட்டன. களப்பிரரின் இறுதிக் காலத்தில் அதிகாரம் குவிந்ததால், கேள்விகள் இன்றி ஆட்சி தொடர்ந்ததால், சமய, சமூக, அரசியல், பொருளாதார சீர்கேடுகளும், கலாச்சார பண்பாட்டு நெறிதவறுதல்களும் பெருகின. மாற்றம் அவசியமானது.
பக்திமார்க்கம்:
மாற்றம், பக்திமார்க்கமாய் வந்தது. புலம் பெயர்ந்த வைதிக சிந்தனையாளர்கள் தங்கள் தத்துவங்களை மீளாய்வு செய்தனர். சமண ஆகமங்களையும், பௌத்த நிகாயங்களையும் உள்வாங்கி புதிய வைதிக ஆகமங்களை உருவாக்கினர். ஆனால், அவற்றின் ஊற்றுக்கண்ணாய் வேதத்தையே குறித்தனர். வேதங்களில் உள்ள மிகப்பெரும் சிக்கல் என்னவென்றால், பிராமணர்கள் இறைவனின் உயர்ந்த தலையிலிருந்து தோன்றியதாயும், அரசப்பிரிவினர் மார்பிலிருந்து உதித்ததாயும், வணிகரும் வேளாளரும் தொடையிலிருந்து பிறந்ததாயும், அடியாட்களும் சேவகர்களும் இறைவனின் கால்களிலிருந்து தோன்றியதாகவும் கூறப்படுவதுதான். தகுதிகள் மாறினாலும், இதை நிலையான தன்மையுடையதாயும், பிறப்பின் அடிப்படையில் தொடரச்செய்வதாயும் இருத்துவதுதான் எல்லா சமூக, பொருளாதார, அரசியல், அதிகார சமமற்றத் தன்மைகளுக்கும், அடிமைத்தளைகளுக்கும், கொடுமைகளுக்கும் அடிப்படைகளாய் அமைகின்றன.
பிறக்கும்போது சூத்திரனாய்ப் பிறந்து, நல்ல ஒழுக்கத்தாலும் செயல்பாட்டாலும் இரண்டாம் பிறப்புள்ள பிராமணனாகின்றான் என்று கூறினாலும், நடைமுறையில் பிராமண சாதியில் பிறக்காத பிறருக்கு அத்தகைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதில்லை, வழங்கப்படுவதில்லை. இத்தகைய அடிப்படைகளின் மேல் கட்டுமானமாக எழுப்பப்பட்டதுதான் மனுநீதியும், ஆகமங்களும்.
பிராமணர்கள் வேள்விகளிலிருந்தும், மந்திரங்களிலிருந்தும் பிரிக்க முடியாத வண்ணம் வரலாற்றுமுறையில் இறுக்கமாகப் பிணிக்கப்பட்டுள்ளனர். வேள்விகளும், இறைமொழி என நம்பப்படுகின்ற சமஸ்கிருத மொழியிலான மந்திரங்களுமின்றி, தங்கள் வாழ்வுச் செயல்பாடுகளை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத வண்ணம், இளவயதிலிருந்தே, சிற்சில இன்றைய மதங்கள் போன்று, இக்கருத்துகள் ஆழ விதைத்து வளர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பதிவுகளை அவ்வளவு எளிதாக நீக்க முடிவதில்லை. விஞ்ஞானமும் தருக்கமும் இதன் எல்லைக்குள் நுழைய முடிவதில்லை. கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை எதுவும் தானாகவே மாறிவிடுவதால், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுபோல், எப்பாடு பட்டாயினும் அக்கொள்கையைக் காக்கின்றனர்.
பிராமணர்களின் மூதாதையர்களாகிய ஆரியர்களின் முதன்மையான வாழ்விடம் பனிகள் நிரம்பிய குளிர்பிரதேசமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் உயிர்வாழ்வதற்கே தீ அவசியமாய் இருந்திருக்க வேண்டும். அதை உருவாக்குவதும், தொடர்ந்து காப்பதும், அவர்களின் கலைகளாகவே தொடர்ந்திருக்கும். அதுவே, அவர்களது போர்களில் முக்கிய பங்காற்றி இருக்கும். எனவேதான், தீயின் மற்றொரு வடிவமான வேள்வியையும், அதனோடு இணைக்கப்பட்ட மந்திரங்களையும், அவர்கள் மரபுரீதியாகவே விலக்க முடியாமல் இருக்கின்றனர் போலும். அவர்கள் தங்கள் வாழ்வில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. பிறர்தம் வாழ்வின் ஒழுக்கங்களிலும், செயல்பாடுகளிலும் அவற்றைத் திணிக்கும்போதுதான், அவையின்றி வாழ்வு குலையும் எனும் மாய பிம்பத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தும் போதுதான், அவற்றை தங்களின் சொந்த வாழ்வாதாரமாக ஆக்கிக் கொள்ளும்போதுதான், அவற்றை அடுத்து உயர்ந்த சிந்தனைக்கு வரவிடாமல் செய்யும்போதுதான் கவலை உண்டாகின்றது.
ஆகமங்கள் யாவும், பொதுவாக, கீழ்க்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டனவாய் அமைக்கப்பட்டுள்ளன:
1. சரியை: ச் + அர் + இயை. இயக்கம் அறுத்து இணை. உடலின் செயலின்மை.
2. கிரியை: க் + இர் + இயை. மெய்யை நிலைத்து இணை. உடலின் அசையாமை.
3. யோகம்: ய் + ஓக் + அம். நிலையாய் முழுமையான மெய்யாய் இருக்கும் தன்மை. இறைமையுடன் இணைவது.
4. ஞானம்: ஞான் + அம். நானாகும் / தானாகும் / சித்தமாகும் தன்மை. இறைமையாய் நிலைப்பது.
சமணத்தின் துறவு இன்றியும், பௌத்தத்தின் முயற்சி இன்றியும், இறைமையைப் பக்தி வழிபாடுகள் மூலம் அடையலாம் என்று வேதாந்த வைதிக சமயத்தினர், புராணங்களையும், பண்ணமைந்த பாடல்களையும் இயற்றி நாடெங்கும் பரப்பினர். அதுவரை, சிவனையும் (பதி), சீவனையும் (பசு) பற்றி மட்டுமே தத்துவங்கள் விளக்கின. ஆனால், இக்காலத்தில், "பாசம்" எனும் புதிய காரணியை உள்நுழைத்தனர். அந்த பாசத்திற்கு தாங்கள் கருவியாய் உதவுவதாய் கூறிக்கொண்டனர். அதுவரை, யோகம் மற்றும் தியானம் மூலம் ஞானம் பெறும் வழிகள் கூறப்பட்டன. இப்பொழுதோ, "பக்தி" எனும் "பாசத்"தின் மூலம், இறைவனை அடையலாம் என கற்பிக்கப்பட்டது. அது எளிமையான பாதை என நிலைநிறுத்தப்பட்டது. திருமந்திரம், பெரிய புராணம் உள்படத் திருமறைகளும், பிரபந்தங்களும், ஆகமங்களும் உருவாக்கப்பட்டன.
ஆகமங்கள் பலவாயினும், ஒன்பது முதன்மையான ஆகமங்களாகக் கூறப்படுபவை, கீழ்வருமாறு:
1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தம், 5. வாதுளம், 6. வியாமளம், 7. காலோத்தரம், 8. சுப்ரம், 9. மகுடம்.
ஞானம் அடையும் வழி மற்றும் தன்மையைக் கொண்டு, ஆகமங்களுக்குப் பெயர் சூட்டியது போல் தோன்றுகின்றது. ஆகமங்களில் பக்திவழியின் விரிவாக்கமாகச் சடங்குகளும், பூசைகளும், சரியையாகவும் கிரியையாகவும் முன்மொழியப்பட்டன. யாகங்களும், பூசைகளுமே, மோட்சத்திற்கான வழிகளாக முன்மொழியப்பட்டன. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அவையே முன்வைக்கப்பட்டன. யோகமும், ஞானமும் பெயரளவில் நின்றன. யோகம், ஞானம் கற்காத பழியை மக்கள் மீதே சாற்றினர். அவர்கள் பக்குவம் எய்தவில்லை, எனவே, உருவ வழிபாடுகளும் பூசைகளும் தேவை என்றனர். ஆட்சியும் அதிகாரமும் வைதிகருக்குச் சாதகமாக, பெரும்பான்மையான பௌத்தர்கள் இலங்கைநாடு அகன்றனர். சில சமணர்கள் கழுவேறி இருக்கலாம். பொது மக்கள் சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மாறினர். பௌத்தக் கோயில்களின் ஆனந்த புத்தர், அனந்தசயன பெருமாளானார். சமணக் கோயில்களின் அருகக்கடவுள் முருகக்கடவுளானார். புதிய சைவ, வைணவ கோயில்களும் கட்டப்பட்டன.
களப்பிரர் பிடுங்கி உழைப்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பிரமதேயங்களும், சதுர்வேதி மங்கலங்களும் மீட்கப்பட்டு, மீண்டும் பிராமணருக்கே வழங்கப்பட்டன. தங்கள் உற்பத்திக்கும், செயல்பாட்டிற்கும் வேண்டிய வகுப்பினரை சமூக படிநிலையில் இருத்தினர். நிலத்தை இழந்து எதிர்த்தவர்களோ, பள்ளர் பறையரென மொத்த சமுதாயத்திற்கும் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால்தான், பிராமணரின் நேரடியான ஈடுபாடு இன்றியேகூட இடைச் சாதியினரின் வன்முறையால், சாதியம் மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தப்படுகின்றது. பள்ளர், பறையரும் ஆதிக்கம் செலுத்த, சமுதாயத்தில் பொருளாதார வலிமையற்று, சமூக ஒழுங்கு பிறழ்ந்தவர்களை, அருந்ததியர் எனும் பெயரிட்டு உருவாக்கியது. இவ்வாறு, சாதிய அமைப்பு ஆதிக்க மற்றும் இடைநிலை சாதிகளின் படிநிலைச் சுரண்டலுக்கு எளிமையாக வழிவகுத்தது.
ஒருவேளை, காட்சி மாறிய காலத்தில் யோகமும், ஞானமும், வைதிக மதச்செயல்பாடுகளிலும் உயரிய இடத்தை வகித்திருந்திருக்கலாம். ஆனால், பின்னாளிலும், இந்நாளிலும், சரியை மற்றும் கிரியை மட்டுமே நடைமுறைகளாக உள்ளன. யோகமும், ஞானமும் கொள்கையளவில் மட்டுமே நிலவுகின்றன, நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. ஏனென்றால், அதைப் போதிப்பவருக்கு, பொருள்வகையான எந்தப் பயனும் கிடைப்பதில்லை.
சித்தாந்தம்:
பரஞ்சித்தம், இறைமை சித்தமாய் உள்ளது. சித்தம்பரம், தனிமனித சித்தம் இறைமையாய் உள்ளது. சித்தமாதியந்தம், சித்தமே துவக்கமும் முடிவுமாய் இருக்கின்றது. சித்தத்தில் சித்தமாய் உறைதலே யோகமாகும், ஞானமாகும். சித்தர்களுக்குச் சரியையோ, கிரியையோ, யோகமோகூட கிடையாது. அவர்களின் நேரடிப்பாதை ஞானமே. சித்தர்கள், அமைப்பற்று இயங்குபவர்கள், இயக்கமாய் இயங்குபவர்கள். தனித்தன்மை இழப்பவர்கள். சமுதாய நலனுக்கென தமை வழங்குபவர்கள், தெய்வமாய், இறைமையாய் நிலைப்பவர்கள் அவர்கள்.
திருக்குறள்:
இத்தகைய பன்மைப் பண்புகளைக் கொண்ட காலகட்டத்தில்தான், திருக்குறள் தோன்றியது.
சமணத்தாலும், பௌத்தத்தாலும் துறவு வாழ்க்கை முன்னிலைப்படுத்தப்பட்டது. சோம்பித்திரிந்தவர்கள் மிகுந்தனர், போலித்துறவிகளாக அவர்கள் மாறினர். உழைப்பவர்கள் குறைந்தனர், உழைப்போர் பெரிதும் சுரண்டப்பட்டனர். யாகம், பூசை என வேறு வகைகளில் வைதிக மரபினரும் மக்களைச் சுரண்டினர்.
இவற்றையெல்லாம் கண்ட திருவள்ளுவர், சமநிலை கொண்டு நீடித்து இயங்கும் ஒரு சமுதாய அமைப்பிற்கான முழுமையான வாழ்வியல் தத்துவத்தை, கொள்கை வரையறையை, திட்ட அமைப்பை, நடைமுறை செயல்பாடுகளை, திருக்குறளாக வழங்கினார் போலும்.
தந்த அப் பொருளை வெற்று சட்டமாகவோ, சலிப்பூட்டும் அறிவுரையாகவோ இல்லாமல், உவமையணிகளுடனும், இசைமைப் பண்புடனும், தொல்காப்பியத்தின் இலக்கணங்களுக்கு இலக்கியச் சான்றாய் அமைவதுபோல், திருக்குறளைப் படைத்துள்ளார், மகான் திருவள்ளுவர்.
தத்துவம்:
இப்பிரபஞ்சம் எப்படி உருவானது? உயிர்கள் எவ்வாறு தோன்றின? மனிதர்களாகிய நாம் எப்படிச் சிறப்படைந்தோம்? நம்முடைய வாழ்வின் பயன் யாது? இத்தகைய அடிப்படையான கேள்விகளுக்கெல்லாம், முதல் குறள், பதில் இறுக்கின்றது. படைப்பிற்கு மகுடம் சூட்டினாற்போல், கடவுள் வாழ்த்தில் இருப்பின் மற்றும் வாழ்வின் தத்துவத்தையும் பயனையும் முன்வைக்கின்றார்.
அகர முதல எழுத்தெலா மாதி
பகவன் முதற்றே உலகு.
அகரம் எனப்படும் "அ" எனும் எழுத்தொலிதான் திரிந்து மற்ற எல்லா உயிர் எழுத்துகளாகவும், மெய்யுடன் கலந்த ஆய்த எழுத்தாகவும், ஆய்தம் ஒன்றிய எல்லா மெய்யெழுத்துகளாகவும், உயிர்மெய் எழுத்துகளாகவும், அசையாகவும், சொல்லாகவும், தொடர்மொழியாகவும், சொற்றொடராகவும், மொழியாயும் விளங்குகின்றது. அகரமே மொழியாகின்றது. அகரமின்றி மொழியில்லை. மொழியெல்லாம் அகரமே!
அகரத்தைப் போன்றே, பொருண்மையான விண்வெளியை அகமாய்க் கொண்ட இறைவன் (பகவன் = ப் + அகம் + அன்), நுண்துகள்களாகி, இணைந்து அணுவாகி, கலந்து பொருளாகி, பிணைந்து உயிராகி, நினைந்து மனிதராகி, இனிமையான உலகாகி இயங்குகின்றான். இறைமையே உலகாகின்றது. இறைமையின்றி உலகில்லை, இயற்கையில்லை. இருப்பன யாவும் இறைமையே! நாமெல்லாம் இறைமையே!
'நீரின்றி அமையாது உலகு' என்றதனால், உயிர் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும், வாழ்வதற்கும், தண்ணீர் இன்றியமையாதது எனும் அறிவியல் யதார்த்தத்தை, மிகவும் இயல்பாக, "கடவுள் வாழ்த்து"க்கு அடுத்த "வான் சிறப்பு" எனும் அதிகாரத்தில் கூறியுள்ளது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அரசன் அல்லது ஆட்சி அதிகாரம் என்பதன் முதன்மையான பணி நீர்மேலாண்மையை நிர்வகிப்பதுதான்.
நீத்தார்ப்பெருமையை முன்வைப்பதன் மூலம், அத்தகையோராய் முயல்வதற்கான தூண்டுதல் தரப்படுகின்றது. மனிதவாழ்வோட்டத்தின் அடிநாதமாய் விளங்க வேண்டியது அறம் ஒன்றுதான். அதுவே, அனைவரது வாழ்வின் இயங்குவிசையாய் இருக்க வேண்டும். அதுவே, சுயவழிகாட்டி. அறமற்ற எந்த ஒன்றையும் செய்ய முற்படும்போதே அறிவார்ந்த மனம் எச்சரிக்கை செய்கின்றது. அதன் குரலைச் செவிமடுத்தால், குற்றம் இழைக்காமல், மாற்று வழியில் முன்செல்லலாம். புறக்கணித்தால், பின்னாளில், வருந்த வேண்டி வரும்.
ஞானயோகம்:
கல்வியின் மூலம், இறைமையை அறிந்துணர்ந்து அதற்கு இணையாக நிலைப்பதே வாழ்வின் முடிவும், பயனுமாகும். அதற்கான மந்திரக்குறள்:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
தொல்காப்பியம், எழுத்து அதிகாரம், நூற்பா 367-ன் படி, லகார ஒற்றெழுத்தை இறுதியாகக் கொண்ட பெயர்ச்சொல், வேற்றுமைப் பொருளில், வல்லின எழுத்தை முதலாய்க் கொண்ட சொல்லுடன் புணரும்போது, அந்த "லகார" ஒற்றெழுத்து, "றகார" ஒற்றெழுத்தாய் திரியும். அல்வழியில், "தகரமும் றகாரமாய்" திரியும்.
எனவே,
"கற்க" என்பதன் திரியாத வடிவம், "கல் + க". கல்போன்று மெய்.
"கசடற" = கசடு + அற. தேங்கி நின்று, அடைப்பை உருவாக்குவது கசடு. எழுந்த எண்ணமே மீண்டும் மீண்டும் எழுவது. ஓய்வில்லாத எண்ணம்.
"கற்பவை" என்பதன் திரியாத வடிவம், "கல் + ப + வை". கல்போன்று மனம்.
"கற்ற" என்பதன் திரியாத வடிவம், "கல் + த". கல்லான தேகம்.
"நிற்க" என்பதன் திரியாத வடிவம், "நில் + க". நிலைக்கும் நுண்பொருண்மை.
அதற்கு = இறைமைக்கு.
தக = சமமாய்.
மெய்யெனும் உடலானது கல்போன்று அசையாமையில் நிலைக்கையில், நீள்கின்ற எண்ணவோட்டம் எனும் கசடு அறுகின்றது. எண்ணமற்ற மனம், அசையாமையில் நிலைக்கையில், தேகம் கல்லாய் சமையும். பின்பும், அசையாமையில் தொடர்ந்து நிலைக்க, இறைமையின் நுண்பொருண்மைத் தன்மையாகும். அதாவது, உடல்வினை அடங்க, ஐம்புலன் அடங்க, மனம் அடங்கும். மனமடங்க உயிர்மை விளங்கும். உயிர்மையுடன் எண்ணமற்ற மனம் ஒன்ற, இறைமை துலங்கும். இறைமையுடன் அழுந்த, இருத்தல், ஆலாய் கிளைத்து கல்லாய் நிலைக்கும்.
இவ்வாறு இறைமையுடன் இணங்கியவரே, தான், தனது, புறம் என்பனவற்றை நீத்தவர். அவர், இறைமையைப்போல் செயற்கரிய செய்வார். இந்த யோக, ஞான நிலையை இளமையிலேயே எய்துதல் பொதுவாக இயலாத காரியம். ஏனெனில், வாழ்வின் ஓட்டத்தில் பல ஆசைகளுக்கான தூண்டுதல்கள் நிகழும். அவற்றை இயல்பாக ஒதுக்கிவிட்டு முன்செல்லுதல் கடினமான செயல். இளமையில், அது தேவையும் இல்லை.
இல்லறம்:
எனவே, துறவறத்தைக் காட்டிலும், முதன்மையான அறமாக இல்லறத்தைத் திருவள்ளுவர் முன்மொழிந்ததுதான் மிகவும் புரட்சிகரமான கருத்தாகும். இது முதலில், மக்களைச் சமுதாய வெளிக்குள்ளேயே இருத்தியது. மனித உழைப்பையும் சமூக வளத்தையும் உறுதிசெய்தது. சமூக அங்கத்தினர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்களையும், அவர்கள் ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளையும், மிகவும் விஞ்ஞான முறையில், சுயமுரண்பாடற்ற வகையில் தந்துள்ளார், வள்ளுவப் பெருந்தகை.
துறவறத்தால் சமூகத்திற்கு விளையும் பயன் என்ன? தனிமனிதர்கள் ஞானம் அடைவதாலோ, முக்தியடைவதாலோ, பொது மக்களுக்கு என்ன இலாபம்? பிறரின் உழைப்பைப் பிச்சையாகவும் வாங்குவது சரியா? துறவு மேற்கொண்டோர், பற்று நீத்தாராகி சமுதாயத்திற்குக் கல்வி, உடல்நலம், மனநலம், ஒழுக்கம், படைப்பாக்கம், ஆலோசனை போன்றவற்றை வழங்கினால்தான் தாங்கள் சமுதாயத்திற்குப் பட்ட கடனை திருப்பி செலுத்துபவராவர். இல்லையெனில், சமுதாயத்திற்கு பாரமாக, சுமையாகவே இருப்பர். இதை அறிந்த ஜென் புத்த மதத்தினர், ஜப்பானில், இயன்றவரை தங்கள் உழைப்பைக் கொண்டே உயிர் வாழ்கின்றனர். ஒருசில சமணரும், பௌத்தர்களும் மக்களுக்கு வேண்டிய கல்வி, ஆலோசனை, படைப்பாக்கம் போன்றவற்றை அளித்துள்ளனர். குறிப்பாக, சித்தர்கள், மருத்துவத்தை தங்கள் கடமையாகவே கொண்டிருந்தனர் போலும்.
மேலும், ஒரு சிலர் மட்டும் ஞானம் பெறுவது என்பது பாரபட்சமாகும். எனவே, மக்கள் அனைவரும் பொதுவாக உழைத்தும், உழைக்க முடியாதவருக்கு (முதியவர், சிறுவர், நோயுண்டோர், விருந்தினர் போன்றோர்க்கு) உதவியும், தாம் உழைக்க முடியாதபோது பிறரிடம் இருந்து உதவி பெற்றும் வாழ்வது, வாழ்வின் ஓட்டத்தில் தவிர்க்க முடியாததாகும்.
இயக்கம் அறுதல் எனும் சரியையும், உடல் நிலைத்தல் எனும் கிரியையும், இல்லறவாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கின்றன. தான் உழைத்து, உழைக்க முடியாதவருக்கு உதவுவது என்பதே, தன்னை இறைமைக்கு உயர்த்திக் கொள்வதாகும். இனிமையாகப் பேசுவது பிறருக்கு மட்டுமல்லாது, தனக்கும் இன்பம் தரும், பெருமிதம் வரும். தனக்கு உதவியவர்களுக்குத் தேவையுள்ளபோது உதவுவது மனநிறைவை ஏற்படுத்தும். நடுவுநிலைமையுடன் இருத்தல், மனத்தை அமைதியாக்கும், உறுதியாக்கும். அம்மனம் அசையாது, மெய்யும் நிலைபெறும்.
கற்புடைய பெண்ணை மனைவியாகக் கொண்டாலே, கணவனின் மனம் சஞ்சலம் கொள்ளாது. மெய்யும் அமைதிப்படும். பிள்ளைப்பெறுதல் என்பதே என்பதே மனம் நிறைவாகும் நிகழ்வு. அதன் மெல்லிய உணர்வு அசையாமைக்கு வழிகோலும். தன்குழந்தை சிதறச்செய்யும் எளிய கூழை வாயால் வழித்து உண்ணுதலும், கண்களைக் கிறங்க வைக்கும், உலகையே மறக்கவைக்கும் அமிழ்தமாகும். பிள்ளைகளின் உடலைத் தீண்டுதலும், அவர்களின் பேச்சைக் கேட்டலும்கூட, மெல்ல உணர்ந்தால், இன்பம் தருவதாகும். தன்னை எவர் மிஞ்சினும், மனதில் ஆற்றாமை தோன்றும், ஆனால், தம்மக்கள் தம்மைவிட உயர்கின்றார்கள் என்றால் பெருமை உணர்வே தோன்றுகின்றது. இயல்பான நட்பும் அன்பும் உடைய கணவனும் மனைவியும், ஒருவருக்கு ஒருவர் அமைதிதரும் உயிர்நிலைபெறச் செய்யும் பெருமை உணர்வை அளிப்பர். சமூகத்தில் தொடர்ந்து இருந்து, உழைத்து, பகிர்ந்து, கலந்து வாழ்வதற்கான அவசியத்தை உருவாக்குவது, மனைவியும் பிள்ளைகளுமாவர்.
சமூக வாழ்வின் செயல்பாடுகளில், அடக்கத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் திருவள்ளுவர். சமூகத்தில், சொல், செயல்களில் காட்டும் அடக்கம், பின்னாளில், யோகம் செய்யும் நாளில், புலன்கள் ஐந்தையும் எளிமையாக அடக்க உதவும். ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாட்டால் விளைவது. அது உலகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு உதவுவதோடு அன்றி, பிற்கால யோகத்திற்கும், ஞானத்திற்கும் உதவும். பிறன் மனைவியை நோக்காமல் இருத்தலை, பேராண்மை என்கிறார் வள்ளுவர். பொறுமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம் போன்ற பிற மனக்கட்டுப்பாடுகளையும், ஒப்புரவு, ஈகை போன்ற குணங்களையும் உள்ளவர், ஐம்புலன்களை எளிதாக அடக்கி, மனத்தை இருத்தி, அசையாமையில் இறைமையுடன் ஒன்றுவர். வாழ்வு என்பது சிறுசிறு இன்ப நிகழ்வுகளைக் கொண்டது. அவை, மனதையும், உடலையும் அசையாமையில் நிறுத்தவல்லது. மென்மையான அவ்வுணர்வுகளில் தொடர்ந்து நிலைப்பதுகூட மனவிடுதலைக்கு வழிவகுக்கும். பேரின்பம் அளிக்கும்.
துறவறம்:
துறவற வாழ்விற்குப் பல வழிகாட்டி நூல்கள் ஏற்கனவே இருந்தும் துறவறவியலையும் திருக்குறளில் வைக்கின்றார் வள்ளுவர். அதில், சமூகத்துடன் வினையாற்றுகையில், துறவிகள் மேற்கொள்ள வேண்டிய பண்புகளையும் செயல்பாடுகளையும், ஒழுக்கங்களையும் நிரல்படுத்துகின்றார். அனைத்து உயிர்களுக்கும் காட்டும் அன்பாம் அருளுடைமை, கொல்லாமையுடன் புலால் மறுத்தல், இயல்பான ஆர்வத்துடனான தவம், பிறன் அறியாவிட்டாலும் ஒழுக்கம் தவறாமை, பிறர் பொருளைப் பறிக்கும் மனமின்மையெனும் கள்ளாமை, எவ்வுயிர்க்கும் தீமையில்லாத வாய்மை, எவரையும் வெகுளாமை, இனிமையற்றவை செய்யாமை, வாழ்வின் நிலையாமையை அறிதல், துறவின் இன்பம் அறிதல், மெய்யுணர்தலின் பயன், மெய்யுணர்ந்தப் பின்னும் தோன்றும் ஆசைகளை அறுத்தலே துறவு முழுமையாவதற்கான வழி ஆகியன, துறவு மேற்கொள்பவருக்கு உற்ற துணையாகும்.
ஜென் தத்துவ வாழ்வில், மேற்கூறிய மனநிலைகளில் ஒன்றுவதுகூட ஞானத்திற்கு வழிகாட்டிவிடும். உண்மையில், முழுமையாகப் பார்த்தால், அசையாமை எனும் நிலை, ஞானமாளிகையின் வாசலுக்கு அழைத்துச் சென்றுவிடும். உடல், புலன், மனம், சுவாசம் ஆகியவற்றின் அசையாமை, ஞானத்தின் கருவறைக்குள் நிலைக்கச் செய்துவிடும். பிறப்பின் பயனை, இவ்வுலகிலேயே தந்துவிடும்.
மனைவியும், மக்களும், கல்வியும், செல்வமும், தவமும், இன்பம் துய்த்தலும் ஊழின் பயனென்கிறார், வள்ளுவர். பிறப்பறுத்தல் என்பது தவத்தால், யோகத்தால், ஞானத்தால் ஊழ் அழிதல். இயலாவிட்டால், நல்வினைகள் ஆற்றி, வரும் பிறப்பில், நற்பயன்களைப் பெற அறிவுறுத்துகிறார், எம்பெருமான்.
அரசியல் மற்றும் அங்கவியல்:
பொருட்பாலின் அரசியல் மற்றும் அங்கவியலில் கூறும் பண்புகள், அரசனுக்கும் அமைச்சருக்கும் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிக்கும் தேவையானது. அரசனுக்கும் அமைச்சருக்குமோ அவை மிகவும் இன்றியமையாதன. தானாக அறியும் கல்வி, பிறர் மூலம் பெறும் கேள்வி, தன்னியல்பான அறிவுடைமை, சிறுமையின்மை, அறிஞர் மற்றும் ஞானியரின் நட்பு, சிந்தித்துச் செயல்படல், சுற்றத்தை அரவணைத்தல், கடமை மறவாமை, நீதி வழுவாமை, இன்றியமையாதது அறிந்த கண்ணோட்டம், பிறர்மூலம் அறியும் ஒற்று, சோர்விலா ஊக்கம், தயக்கமில்லா முயற்சி, சிக்கலுக்கான தீர்வைச் சிந்தித்தல் போன்றவை அரசனுக்கு இன்றியமையாதவை.
சிக்கலைப் பலவாறு சிந்தித்து தீர்வுகூறும் சொல்வன்மை, தன்னலமற்ற செயல்பாடு, செயல்பாட்டில் உறுதி, செயலை முடித்தல், செய்தி பரிமாற்றும் தூது, மன்னரின் மனமறிந்து செயல்படல், மன்னர் வெளிப்படையாய் கூறாததையும் குறிப்பால் அறிந்து செயல்படல், சூழ்ந்திருப்பவரைக் கணக்கில் கொண்டு பேசுதல், தவறு நேரவிருக்கும் சமயத்தில் துணிந்து பேசுதல், தேர்ந்த காக்கும் நட்பைப் பேணுதல், ஆழ்ந்து அறிதல், மனச்செயல்பாடின்மையை உணர்தல், பகைகளை அறிதல், பெரியாரைப் பகைக்காமை, மனைவியின் சொல்லுக்கு அடங்காமை, அடக்கமற்ற பெண்களுடன் உறவு கொள்ளாமை, போதைப் பொருட்கள் உண்ணாமை, சூதாடாமை போன்ற குணங்கள் அமைச்சரின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை.
அரசனும், அமைச்சனும் சிந்தித்துச் செயலாற்றுவதும்கூட, அவர்களுடைய மனவிடுதலைக்கு வழிவகுக்கும். மனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்குபடுத்துவதன் மூலம், வேண்டியபொழுது, வேண்டியவாறு அவற்றை வழிநடத்த முடியும். அது, யோக மற்றும் ஞான முயற்சிக்குப் பெரிதும் உதவும்.
ஒழிபியல்:
குடிப்பெருமை, குன்றாத மானம், தகாதன செய்யாத நாணம், சான்றாகும் ஆளுமை, குடும்ப முன்னேற்றத்திற்கான ஓய்வில்லா உழைப்பு, உழைப்பில் உயர்ந்த உழவு, இனிமையற்ற வறுமையிலும் இரவாமை, கயமையின்மை ஆகிய குணங்கள், குடிமக்கள் யாவர்க்கும், மனம் சஞ்சலப்படாமல் இருக்க உதவும்.
காமம்:
காமம் (க் + ஆம் + அம் = மெய்யாகும் தன்மை)
காமத்துப் பாலை, பெண்ணை தெய்வத்திற்கு இணையாக வைத்துத் துவக்குகிறார் திருவள்ளுவர். மிகவும் நுண்மையான மெல்லுணர்வுகளை, குறிப்பால் உள்ளுணரச் செய்கின்றார். ஐம்புலன்களும் மகிழும் புணர்ச்சியை உணரச்செய்து, அவற்றின் சுகத்திலேயே ஆழ்ந்து மனத்தை இழக்கும் வித்தையைக் காட்டுகின்றார். உவமைகளின் அழகியலில் மெய்மறக்கும் தந்திரம் உபதேசிக்கிறார். அசைவில்லாத கூடலில், ஆழ்ந்த மெய்யுணர்வில், இறைமையை உணரலாம் என்கிறார். நெற்றியில் இடும் முத்தம், இறைமையை ஈடுசெய்யும் என்பார்.
இவ்வாறு சமூக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெறும் பல்வேறு சுகங்களை, இயந்திரகதியில் அன்றி, உணர்வுப்பூர்வமாக அனுபவித்தும், யாரும் அளவுக்கு அதிகமாகப் பாதிக்காத வகையில், அறவழியில் பொருள் ஈட்டியும், பாரபட்சமின்றி நேர்மையான ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தியும், களவு மற்றும் கற்பியல் வாழ்வில், மென்மையான காம தந்திர நுணுக்கங்களை அறிந்துணர்ந்தும், கல்வியின் யோக, ஞான பாதையில் சென்றும், இறைமையுடன் ஒன்றி, நிலைபெற்று, பிறப்பறுத்து, இறவாமையை எய்தும் வழியைக் காட்டுகின்றார், வள்ளுவப் பெருந்தகை.
எனவே, திருக்குறளை, திருமுறை என்றும், ஆகமம் என்றும் அழைப்பது, மிகவும் பொருத்தமாய் இருப்பதைக் காணலாம். மேலும், அதன் சிறப்பு என்னவென்றால், இணக்கமான, அன்பான, இன்பமான தனிமனித, குடும்ப, சமூக, அரசியல், தேச வாழ்வியலின் ஊடே, ஞானயோகத்தை முயன்று, இறைமையுடன் ஒன்றி, இறைமையாய் நிலைப்பதுதான்.
உதவிய உரைகளும் நூல்களும்:
1. பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பற்றிய திருமதி அ. பத்மாவதியின் உரை
2. சொல்லாக்கியம்
3. திருக்குறள் - ஒரு மறுவாசிப்பு
No comments:
Post a Comment