Showing posts with label சொல்லாக்கியன். Show all posts
Showing posts with label சொல்லாக்கியன். Show all posts

Friday, February 4, 2022

ஐவகை மன்றம்

-- சொல்லாக்கியன் 





வேண்டும் வேண்டும் வேண்டும்
இலஞ்சி மன்றம் வேண்டும்
பசியும் பிணியும் வெறுப்பும் 
பொய்யும் புறணியும் புரட்டும்
இந்திய மண்ணில் அறுத்திட
இலஞ்சி மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
வெள்ளிடை மன்றம் வேண்டும்
மக்கள் பணத்தைச் சுருட்டியக்
கயவர் கழுத்தை ஒடித்திட
கனவிலும் களவை ஒழித்திட
வெள்ளிடை மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
நெடுங்கல் மன்றம் வேண்டும்
மதவாத வஞ்சம் உண்டோர்
சாதிபேத நஞ்சம் கொண்டோர்
நெஞ்சம் தெளிந்து அமைதியுற
நெடுங்கல் மன்றம் வேண்டும்.

வேண்டும் வேண்டும் வேண்டும்
பாவை மன்றம் வேண்டும்
எளியர்க்கும் வலியர்க்கும் சமநீதி
பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருநீதி
அதையும் விரைந்து அளித்திட
பாவை மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
சதுக்கப் பூதங்கள் வேண்டும்
பெண்கள் மோசம் செய்வோர்
மழலைகள் நாசம் செய்வார்
நையப் புடைத்து உண்ணும்
சதுக்கப் பூதங்கள் வேண்டும்.


(பூம்புகாரில் வெள்ளிடை மன்றம், பூதச்சதுக்கம், இலஞ்சிமன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவைமன்றம் ஆகியவை ஐவகை மன்றங்கள் இருந்ததாய் 'சிலம்பு' செப்பும்.)




-----

Thursday, February 3, 2022

அறம் என்றால் என்ன?


- சொல்லாக்கியன் 


மனித வாழ்வின் பயன் யாது? காம இன்பம் துய்ப்பதும், குழந்தை பெறுவதும், செல்வம் சேர்ப்பதும் என்றால், அதாவது இன்பமும் பொருளும் என்றால், மனிதரில் பலரும் வாழ்வின் பயனை அடைந்து விட்டனர் என்றே சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பெற்றப் பின்பும், மனம் எதையோ வேண்டி நிற்கின்றதே, அது எது? அறம். அது விளைவிக்கும் அமைதியும் ஆனந்தமும்தான் வாழ்வின் பண்பும் பயனுமாகின்றது.

திருவள்ளுவர் காலத்தில், களப்பிரர் காலத்தில், பௌத்தமும், சமணமும் மேலோங்கி இருந்திருக்க வேண்டும். துறவு வாழ்வும் மிகுந்திருக்க வேண்டும். பெரும்பாலான அத்துறவிகளும், தங்களின் மிக அடிப்படையான தேவைகளுக்கு, சமூக உழைப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்திருக்கும். துறவிகள் மிகுந்து, உழைப்பாளர் குறைந்ததால், சமூகத்தின் சமநிலை கெட்டிருக்கும். சமூக சமநிலையை மீட்க, எக்காலமும் நிலைக்க, ஒரு புதிய புரட்சிகரமான கருத்தொன்றை முன்வைக்கின்றார், திருவள்ளுவர். அதுதான், இல்லறம். 

சமூகத்தில், கணவன், மனைவி, பிள்ளை என குடும்பமாய் வாழ்ந்தும், உற்றார், உறவினர், நட்பு, விருந்தினர், சான்றோர் ஆகியோருடன் இனிமையாய் பழகியும் உதவியும், புலன்களை ஒழுங்குபடுத்தியும், மனத்தை தூய்மைப்படுத்தியும், உயிர்மையை உணரலாம், இறைமையை அடையலாம், பிறப்பும் அறுக்கலாம்.

அறவழியில் பொருள் ஈட்டி, பொருள் கொண்டு இன்பம் துய்த்து, இன்பத்தாலேயே வீடு எய்தும் நுணுக்கம்தான், திருக்குறள் காட்டும் இல்லறம். மேலும், இளவயதில், துறவு பூணுதல் கடினம். குடும்ப வாழ்க்கைக்கு ஏங்க நேரலாம். தவறான, அறமற்ற வழிகளில் போக நேரலாம். ஆனால், அறவழியில் வாழ்ந்து, அனுபவித்து, பின் முதுமையில் துறவு போதல் எளிது. எனவேதான், அறத்துப்பாலில், இல்லறத்தை அடுத்து, துறவறத்தை இயலாக்கினார். 




'அறம்' என்பதற்கான வரையறையும், இலக்கணமும், சான்றும் இறைமை என்பதால், அறத்துப்பாலில், 'கடவுள் வாழ்த்'தை முதல் அதிகாரமாய், திருவள்ளுவர் அமைத்துள்ளார். பிரபஞ்சக் கடலே, அருமை மற்றும் பொருண்மை என இறைமைக்குள் இரண்டாய் இருக்கும்போதும், அவன் அருமையான உயிர்மையாய் நிலைக்கின்றான். மனிதரின் உயிர்மை, இறைமையுடன் ஒன்றாமல், இல்லற வாழ்விலோ, துறவு வாழ்விலோ, பிறப்பறுக்க முடியாது.

'அன்பே' எளிமையாக இறைமையை அடையும் குணம். துறவு வாழ்வில், அன்புக்கு, இயல்பான இடமில்லை. குடும்ப வாழ்வில், அன்பு செலுத்துவது இயல்பானது, எளியது, இனியது. அன்பால் இறைமையுடன் ஒன்றலாம். எல்லா இடத்தும், எல்லாரிடத்தும், எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துவது, இறைமையாகும். துறவறத்தாலாவது, இல்லறத்தாலாவது, இறைமையுடன் ஒன்றியவர் பிறப்பறுப்பர். ஒன்றாதவர், ஊழ்வினைக்கேற்ப மீண்டும் பிறப்பெடுப்பர்.

அறத்துப்பாலில், கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக, வான் சிறப்பை அமைக்கிறார், திருக்குறளார். இறைமையின்றி எப்படி இவ்வுலகம் இல்லையோ, அதே போன்று, நீரின்றி உயிர் தோன்றுவதோ, மனித இனம் நிலைப்பதோ இல்லை என்பதால், இச்சிறப்பு. இறைமையை உணர்வதற்கு, மனித முயற்சியோடு, இறைவனின் அருள் தேவை என்பதுபோல், இயல்பாக, இயற்கையாக உணவு போதாதபோது, உணவை உற்பத்தி செய்யும் உழவு முயற்சிக்கும், மழையின் அருள் தேவை.

மழையின்றி, இறைவழிபாடும், உதவியும், ஓகமும், தியானமும், ஒழுக்கமும் சமூகத்தில் நிகழாது, நிலைக்காது. மழையின், நீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதன் மூலம், மழை பெய்ய வேண்டி மரங்களைக் காப்பதையும், வளர்ப்பதையும், பெய்த நீர் வீணாகாமல் சேமிக்க வேண்டியும், உழவுக்கும், குடிப்பதற்கும் பகிர்ந்தளிக்க வேண்டியும், பூமிப்பந்து மிகுந்த வெப்பமாகாமல் தடுக்க வேண்டியும், சமூக செயல்பாடுகளும், ஒழுங்கும் நிலைக்க வேண்டியும் நாம் செயலாற்ற அறிவுறுத்துகிறார், வள்ளுவப் பெருந்தகை.

குடும்ப வாழ்வு தன்னிலையை முன்னிலைப்படுத்துகின்றது. துறவு வாழ்வோ, சமூகநிலையை முன்வைக்கின்றது. ஆனாலும், குடும்ப வாழ்வில் கிடைக்கும் மனைவி, பிள்ளை, நட்பு, உறவால் ஏற்படும் சுகங்கள், துறவு வாழ்வில் கிடைப்பதில்லை. குடும்ப வாழ்வே, இயல்பான தெரிவு. எனவே தான், இல்லறவியல், துறவறவியலுக்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு, தன்சுகத்தை தியாகம் செய்யும் துறவறமும் தேவைப்படுகின்றது. இல்லறமா? துறவறமா?, இது ஒரு மனச்சிக்கல். முதலில் இல்லறம், பின்பு துறவறம் என, இச்சிக்கல் தீர்க்கப்படுகின்றது. இரண்டிற்கும் இலக்கு, உயிர்மையை உணர்ந்து, இறைமையில் ஒன்றி, பிறப்பறுத்தல் என்பதும், முடிவற்ற அமைதியிலும், நிபந்தனையற்ற ஆனந்தத்திலும் திளைப்பதும்தான். நடைமுறையில், குடும்ப வாழ்வும், சமூக வாழ்வும் பிணைந்த வாழ்க்கை முறைகளும் உள்ளன.

முதுமையில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் 'அறம்' என்பதை இன்றிலிருந்தே செய்க. அம்முயற்சியும் பயிற்சியும், இறைமையுடன் ஒன்றும்போது, ஐயம் நீக்கும் பொலிவான துணையாகும். இறைமையுடன் ஒன்றும் போது அகத்தில் இருந்து இன்பம் வருகின்றது, பிறப்பும் அழிகின்றது. மற்ற இன்பங்கள் அனைத்தும் புறத்தில் இருந்து வருபவை, அவை பிறப்பை அறுக்காது. ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம், புலன்களை அடக்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் அறம்தான். இயல்கின்ற இளமைக் காலத்தில் செய்யாமல், முதுமையில் செய்ய முடியாமல் போனால், அவர் மீதமுள்ள வாழ்நாள் எல்லாம், பழிதான் மிஞ்சும்.

குடும்ப வாழ்வின் மூலமே எவ்வாறு சிறிது சிறிதாக புலனடக்கி, மனத்தைத் திருத்தி, செயலைக் கட்டுப்படுத்தி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றலாம் என்று, ஒரு புரட்சிகரமான ஒருங்கிணைந்த மாற்று வாழ்வியலை வடிவமைத்துத் தந்திருக்கிறார், எம்மான். துறவறத்தால் கிடைக்கும் பலன்கள் எல்லாம், இல்லறத்தில் எவ்வப்பொழுதெல்லாம் இன்பநலன்களாய் கிட்டுகின்றது என்று, ஒப்பீட்டு ஆய்வினை இல்லறவியல் நெடுக நிகழ்த்துகிறார்.

தன்னலமாக இல்லாமல், பசித்தவர்க்கும், வறியவர்க்கும், துறவிகளுக்கும், முதியவர்களுக்கும் உதவி, குடும்ப வாழ்வை மேற்கொள்பவரின் பிறப்பும் அறும் என்கிறார், வள்ளுவர். மனைவியிடமும், பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும், விருந்தினரிடமும், பிற உயிர்களிடமும் அன்பாய்ப் பழகினாலேயே, புலனடக்கத்தின் விளைவான, உயிர்மையை உணர்தலும், இறைமையுடன் ஒன்றுதலும் நிகழும். இயல்பாக, கட்டாயமின்றி, அன்பான குடும்ப வாழ்க்கை வாழ்பவன், துறவிகளைக் காட்டிலும் சிறந்தவன். குடும்ப வாழ்வே அறம் என்கிறார், குறளடியார். துறவிகள், தம் பிறப்பறுக்க வேண்டும் எனும் தன்னலத்தவர். ஆனால், குடும்பனோ, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர், பிற உயிர்கள் என அனைவருக்காகவும், தன்னலனை குறைத்து வாழ்கின்றான். பயனடைந்தவர்கள் யாவரும், அவனை தெய்வமாகவே மதித்து வணங்குவர்.

ஐம்பூதங்களை அடக்கி ஆட்டுவிக்கும் திறன், துறவிக்கு மட்டும் கிட்டுவதல்ல. அன்பான வாழ்க்கை நடத்தும் கணவனை மட்டும் வணங்கும் பெண்ணாலும் மழையை நினைத்த நேரத்தில் வரவழைக்கக் கூடிய திறனைப் பெற முடியும். முழுமையாக ஒன்றும் தன்மை, பலவற்றை ஆளும் திறனை அளிக்கின்றது. நல்ல மனைவியைப் பெறுவதே அறம். 

அறிவறிந்த பிள்ளைகளை, குடும்ப வாழ்வில் பெற்றால், அது, உலக வாழ்வில் பெறும் எல்லா சுகங்களிலும், பெருமைகளிலும் சிறந்ததாகும். அப்பெருமையே, மனதை, நன்றியுடன் இறையுடன் ஒன்ற வைத்து, பிறப்பறச் செய்யும். பண்புடைய பிள்ளைகளைப் பெற்றால், பிறப்பு எடுக்க வேண்டியதாயின், அப்பெற்றோர்களுக்கு தீங்கு நேராது. தம் குழந்தை சிறிய கைகொண்டு அடித்துக் கலக்கிக் குழப்பித் தெறிக்கும் கூழ், அமிழ்தத்தினும் இனிதாம். குழந்தையின் கூழ் ஒழுகும் கையை பெற்றோர் சுவைத்து எடுக்கையில் ஏற்படும் ஆனந்தம், இறைமையுடன் ஒன்றுவதற்கு ஈடானது. தம் பிள்ளைகளின் மேனியை மெல்ல தொடுதலும், அவர்களுடைய அன்பான சொற்களைக் கேட்டு இன்புறுதல், மெய்யுணர்வை அடைவது போன்றது, மந்திரத்தால் விளையும் தெளிவைப் போன்றது. கல்வியும், செல்வமும் ஊழின் விளைவுகள் என்பதால், தம்மைக் காட்டிலும் தம் மக்கள் அறிவு கொண்டு இருந்தால், மேலும் நன்மையுற, நல்வினையே புரிவர். உலக மக்களும் அவ்வாறே செய்ய முனைவர். தன் மகனைச் சான்றோன் என கேட்கும் போது, பிள்ளை பெற்ற போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் மிகுதியான ஆனந்தத்தை அடைவாளாம், தாய். நன்மக்களே அறம்.

மனைவியும், கணவன் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டும், குடும்ப வாழ்வில் இன்பம் அளிப்பதில்லை. குடும்ப நண்பர்களும் அன்பாலும், பழகும் ஆர்வத்தாலும் இன்பம் சேர்க்கின்றனர். இத்தகைய உலக இன்பம், ஓக தியானத்தில், இறைமையுடன் ஒன்றி விளையும் ஆனந்தத்திற்கு ஒப்பானது. அறமே முழுமைபெற அன்பைச் சார்ந்திருக்கின்றது. அறத்தை அறியாத மறவர்க்கும் அன்பே காரணமாகின்றது. அன்பில்லாமை, பிறப்பை மீண்டும் உண்டாக்கும். இல்லற வாழ்வு, அன்பில்லாமல், மிகுந்த வலிமையான உடல் உறவினால் கிட்டும் இன்பத்தால் மட்டும், நிறைவுறாது. அன்பு என்பது உயிரின் இயல்பு. அன்பு இல்லாதவர், வெறும் எலும்பும் சதையும் தோலால் போர்த்தப்பட்ட பிணமாவர். அன்பே அறம். முகமலர்ச்சியுடன் விருந்தோம்புபவன் இல்லத்தில், செல்வம் மனமுவந்து தங்கும். விருந்தினரின் தேவையறிந்து செய்யும் விருந்தோம்பல், வேள்விக்கும் ஓக தியானத்திற்கும் ஒப்பானது. விருந்தோம்பல் அறம்.

இல்லற வாழ்வில் இருந்து, அன்புடன் கூறிய இனிமையான சொல், துறவு வாழ்க்கையில், இறைமையுடன் ஒன்றியவரின் அருள் மிகுந்த சொல்லுக்கு, இணையானது. முகத்தில் அமைதி நிலவ, இனிமையாக பார்த்து, மனம் நிறைந்த இனிமையான சொல்லைக் கூறுதலே அறம். 

இங்கே, துறவறத்தில் உள்ள புலனடக்கம், மனவடக்கம், செயலடக்கம் ஆகிய யாவற்றையும் ஒருங்கே காணலாம். எல்லார் இடத்தும் இனிமையான சொல்லைக் கூறினால், பிறப்பறும். நல்லதையே நினைத்து, இனிமையாக கூறினால், ஏற்கனவே சேர்ந்துவிட்ட தேவையற்ற குணங்களும் குறையும், அறத்தின் பயனும் விளையும்.

அறம் எனும் சொல் ஒற்றைப் பொருளைக் குறிப்பது அல்ல. அது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். இம்மையில் இடையறா இன்பமும் மறுமையில் பிறப்பறுதலும் எய்த வைக்கும், இறைமையில் ஒன்றுதலும், உயிர்மையை உணர்தலும், மனம் அடங்கலும், புலன் அடங்கலும், செயல் இல்லாமையும், இவற்றை அடைய துணைபுரியும் நல்ல மனைவி, நன்மக்கள், அன்புடைமை, விருந்தோம்பல், இனியது கூறல், அடக்கம், ஒழுக்கம், பொறுமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, வாய்மை, தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகிய ஊழால் விளைந்த பண்புகள், செயல்பாடுகள், இலக்குகள், வீடு அடைதல் யாவுமே அறம்.

இறுதிச்சொல்லாக, எப்பண்பு, எச்செயல் எல்லாம், புலனடங்கி, மனமடங்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றி, இன்பம் எய்தி, பிறப்பறுக்கின்றதோ அவை யாவும் அறமே!!


நன்றி: குறள் நெறி - பிப்ரவரி இதழ்

-------------








Tuesday, February 23, 2021

நான் அனுப்புவது ... உள்ளம்

போதுமே போதையே! 

--- சொல்லாக்கியன்


சந்தனக் கட்டிலா பட்டின்  மெத்தையா?
நின்றொருக் கட்டில் பட்டாலே போதுமே!

கோரைப் பாயா இலவம் அணையா?
முன்னம் தானை முள்ளும் போதையே!

கம்பளிப் போர்வையா தோகைத் துகிலா?
சிலிர்மயிர்க் கால்கள் நீவ்விரல் தனலே!

வானின் இரவா நிலவின் பிறையா?
கூந்தல் கருமை நுதலே நிறையே!

சிமிட்டும் மீன்களா சீண்டிடும் தென்றலா?
சிரிக்கும் கண்களும் சுவாசமும் கன்னலே!

பவழச் சிப்பியா பவள முத்தமா?
குவளை இதழிடை மொத்த சொத்துமே!

பலவின் சுளையா குளவியின் அலைவா?
அமிழ்தின் சுவையே அதரமே நாவே!

கொய்யாக் கனியா கொஞ்சும் கிளியா?
நெய்யாய்ப் பொலியும் கெஞ்சும் கன்னமே!

குடவறைச் சிற்பமா கருவறைக் கற்பமா?
மௌனியாய்த் துடிக்கும் மோகனச் செவ்வியே!

மாவின் கனியா திராட்சைப் பழமா?
இரண்டும் இணைந்த அழகின் அணியே!

இனியும் சொல்லல் கவிதைக்கு அழகா?
தனியாய் அள்ளல் கொள்ளல் இனிதே!

---

அமைதிப்பெண் 

அடியும் முடியும் அறியா பயணமே
இடையில் நெஞ்சில் மூழ்கும் சலனமே.

நித்தியப் பிரணவமே சத்தியப் பிரமாணமே
நித்தில முகிழ்மனமே கத்தூரி புகழ்மணமே

சிந்தா மணியே நந்தா ஒளியே
தண்மைக் கதிரே தாரகைக் குதிரே

ஆன்மமே அண்டமாய் அகலும் அற்புதமே
அனைத்தும் தானாய் உணரும் கற்சிலையே

அன்பும் காதலும் அருளும் பொழிவதே
என்பும் ஆனந்த ஊற்றாய் வழிவதே

அசைவிலா இசையே நசையிலா பசையே
இமையிலா கண்ணே அமைதிப் பெண்ணே!

---

ஐந்திரம் 

நின்
விழி நோக்கு 
குறிஞ்சி இலக்கியம்

மென்
இமை சிமிழ்ப்பு
முல்லை இசைப்பண்

புல்
கண் நகைப்பு
மருத ஓவியம்

கொல்
கடைக் கூர்ப்பு
பாலைக் கூத்து

நில்
நேர்ப் பார்வை
நெய்தல் சிற்பம்

உன்
பெயர் என்ன தமிழியோ?
நிலை
உயிர் அன்ன தமிழமோ? 

---

மடல் 

தாழம் மடலதை விரித்து
நீவிடப் பன்னீர் தெளித்து
பீலியால் தடவி இறுத்து 

செஞ்சாதி மொக்கை எடுத்து
அகிற்கோல் பட்டுவளை தொடுத்து
சந்தனக் கத்தூரி தோய்த்து

தமிழக் காதல் வரையவா
அமிழ்தும் தேனும் உறையவா
இடமும் பொழுதும் மறையவா

உடலடங்க உயிர்துலங்க 
ஒளிவிளங்க களிசுரக்க 
வெளிமுயங்க தூங்கலாமே!

---




Tuesday, November 3, 2020

கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும்

கல்விக் கொள்கையும் மொழிக் கொள்கையும்


--- சொல்லாக்கியன் 
  

எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும், மருத்துவமும், கல்வியும் அரசின்  கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஏனெனில், எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதியைக் காப்பதை அடுத்து, குடிமக்களின்  உடல்நலனைக் காக்க வேண்டியதும், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை வழங்க  வேண்டியதும், அறிவார்ந்த அரசின்  தலையாயக்  கடமைகளாக உணரப்படுகின்றன. இந்தியா, வளர்ந்த நாட்டுக்குரிய இலக்கணமான, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். 

இந்தியாவின்  புதிய கல்விக் கொள்கை 2019, தமிழகத்தில் பெரும் பேசும் பொருளானது. ஒரு சாரார் நல்ல கொள்கை என்றும், மற்றொரு சாரார் மோசமான கொள்கை என்றும் கூறிவருகின்றனர். எப்படி இருப்பினும், பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக நிறைவேற்றாமல், மோடி அரசாங்கத்தின்  கொள்கை முடிவாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா அங்கம் வகிப்பதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, வளங்குன்றா வளர்ச்சிக்கு (Sustainable Development Goals) 17 இலக்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில், (SDG4) 4-வது இலக்குதான், “அனைவரையும் உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்புகளை வளர்ப்பது” மற்றும், “கற்பவரை மையமாகக் கொண்ட, கலந்துரையாடல் சார்ந்த, இணக்கமுள்ள அதே சமயம் மகிழ்ச்சிகரமான ஒன்றாக கல்வியை விரிவுபடுத்துவது”. 

பெருந்தரவு (BIG DATA), செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரவழிக் கற்றல் (MACHINE LEARNING) காரணமாகப் பல தொழில்கள், எதிர்காலங்களில், மனிதர்களின்  தேவையின்றி, இயந்திரங்களினாலேயே  நிகழ்த்தப்படும். எனவே, இயந்திரங்களால் முடியாத திறன்களை, மிகுதியான மனிதர்கள் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.  அறிவியல், மானுடவியல், சமூகவியல் ஆகிய துறைகளுடன் கணிதம், கணினி அறிவியல், தரவு அறிவியல் ஆகியவை ஒன்றிணைந்த, புதிய துறைகளை  உருவாக்க வேண்டும். பருவநிலை மாற்றம், தூய்மைக்கேடு, குறையும் இயற்கை வளங்கள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க, உயிரியல், இரசாயனம், இயற்பியல், விவசாயம், பருவநிலை அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றின் கூட்டு ஆய்வுகள் தேவைப்படும். இந்தியா, பெரும் மக்கள் தொகையுடன் வளரும் நாடென்பதால், மானுடவியல் மற்றும் கலை சார்ந்த துறைகளின் தேவைகளும் அதிகரிக்கும்.  

கல்விகற்றல் முறையானது, கூரிய சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், படைப்பாக்கத்திறன் ஆகியவற்றை வளர்ப்பதாய் இருக்க வேண்டும். கலை, திறன், இலக்கியம், பண்பாடு, நற்பண்புகள் ஆகியவற்றுடன் முழுமையான மனிதனை உருவாக்குவதாய் கல்வி இருக்க வேண்டும். 

இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையின் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாய், 2015-லேயே உறுதியளித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தியச் சூழலுக்கேற்ற  கல்விக் கொள்கையை, இந்தியா உருவாக்க முனைந்தது. முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு.டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்தின்  மனிதவள மேம்பாட்டுத்துறை சில உள்ளீடுகளை, 2016-ல் வழங்கியது. அவ்வுள்ளீடுகளைக் கொண்டு  தேசியக் கல்விக்  கொள்கை வரைவை உருவாக்க, பத்மவிபூஷன் முனைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை, 2017 ஜூன் மாதம், மத்திய அரசு உருவாக்கியது. 

அக்குழு, நம் நாடு மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்களுடனும், மாநில கல்வி அமைச்சர்களுடனும் உரையாடி, இப்புதிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால், அதே சமயம், கல்வித் துறையில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளான, பின்லாந்து, டென்மார்க், நார்வே, சுவீடன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கல்வி அமைப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வருந்துதற்குரியது. இக்கொள்கை குறித்து, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின்  உள்ளீட்டுப் பங்களிப்பு, பா.ஜ.க. வின்  குறுகிய அரசியல் அம்சங்களோடு, இருப்பது குறிப்பிடத்தக்கது (https://www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Inputs_Draft_NEP_2016.pdf). 
mobius .jpg
மோபியஸ் பட்டை (Mobius Strip) எனும் இந்த படக்குறி, புதிய தேசிய கல்விக் கொள்கையின்  சின்னமாக உள்ளது. இது, துவக்கமோ முடிவோ இல்லாமல், என்றென்றும் வளர்கின்ற, உயிர்ப்புள்ள அறிவின்  தன்மையைக்  குறிக்கின்றது. நல்ல குறிதான். 

ஐக்கிய நாடுகள் சபையின்  1948- ம் ஆண்டின்  மனித உரிமைகள் பிரகடனத்தின்  “அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது”, எனும் அடிப்படையில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்,  1996 -ம் வருடத்திய, 21-ம் நூற்றாண்டில் கல்வி பற்றிய சர்வதேச குழுவின் அறிக்கையான, “கற்றல் : உள்ளிருக்கும் புதையல்” (https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000109590/PDF/109590engo.pdf.multi) என்பது வரை, புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு கணக்கில் எடுத்திருப்பது, நன்று. 

1. அறிதலுக்கான  கற்றல், 2. உழைப்பதற்கான கற்றல், 3. சேர்ந்து வாழ்வதற்கான கற்றல், 4. தானாய் இருப்பதற்கான கற்றல் என்பன, கல்வியின் நான்கு தூண்கள் என்றும், கல்விப் படிப்புடன், ‘மென் திறன்களாக’ சமூகத்தில் இயங்கும் பல்வேறு  குழுக்களுடன்  இணக்கமாக வாழக் கற்பது மற்றும் மற்றவர் உணர்வு புண்படாமல் பழகக் கற்பது என்பதும் கல்வியின்பாற்படும் என்று அவ்வறிக்கை சுருக்கமாகக் கூறுகின்றது. 

இப்புதிய கல்விக் கொள்கை, இந்தியப் பாரம்பரியக் கல்விமுறையையும், அறிவு வளத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாய் கூறுகின்றது. பழம் இந்தியாவில், குறிப்பாக, பௌத்த, சமணர்கள் காலத்தில், கல்வியின் இலக்கு, தன்னை உணர்தலும் சுயவிடுதலையுமாகவே இருந்தது. அதனால், சமுதாயத்தின் பெரும்பகுதி பொருளாதார இயக்கமின்றிப் போனது. உழைத்த சிலரின் மீது பெரும்பாரம் அழுத்தியது. ஆனால், அவர்களுக்குப்  பின் வலிமையடைந்த சனாதனிகளோ, மொத்த சமுதாயத்தின்  பொருளாதார உபரியை, தங்களின்  உலகவாழ்க்கைக்காக மடை மாற்றிக் கொண்டனர். தனிநபர்களுக்கும் இறைமைக்கும் இடையில் தரகர்களாய் மாறினர். 

திருவள்ளுவர் போன்ற சமூக இலக்கியவாதிகளால்தான், கல்வி, அறவழியிலான, சமத்துவமான, படைப்பாற்றல் மிக்க சமூக இயக்கத்தின் ஒரு அங்கமானது. மனவிடுதலையும், தனி நபரின்  கைகளுக்கு, மீண்டும்   வந்தது. இல்லறவாழ்க்கையின்  ஊடேயே, விடுதலை அடையமுடியும் என  உறுதி செய்தது, திருக்குறள். பல நூற்றாண்டுச் சங்க  இலக்கியங்களின் சாரத்தைப் பிழிந்து, குறளுக்குள் நிறைத்தார், திருவள்ளுவர். அதனால்,  தமிழரின்  தொன்மை வாழ்வியல் தொடர்ச்சியாய் அமைந்தது, திருக்குறள். கல்வி பற்றிய திருக்குறளின் உயர்ந்த  எளிய கருத்துகளை, இக்கல்விக் கொள்கை எடுத்து ஆளாதது பெருங்குறை.  

ஆனால், அதே சமயம், இந்த புதிய கல்விக் கொள்கை, இன்றைய உலகின் அறிவியல்களை முதன்மையாகக் கணக்கில் கொள்ளாமல், பண்டைய சமற்கிருத அறிஞர்களின் படைப்புகளைக் கற்கவும், பரப்பவும் முயல்கின்றது. இதனால், உலக நீரோட்டத்திலிருந்து நாம் விலகிச் செல்லும் வாய்ப்புகள் மிகும்.

ஆனால், ஏழு வகையான நடனங்கள், இரண்டு வகையான இசைகள் இருப்பதையும், அவற்றை ஒன்றுச் சேர்ப்பதன் மூலம், புதிய கலைவடிவங்களை உருவாக்க முடியும் என்று, இந்த புதிய கல்விக் கொள்கை கூறுவது, நன்றே. “நாம் பொதுவில் உருவாக்கும் நிலையான பொருட்களின் மூலம்தான், நிலையில்லாத நாம், அழியா வாழ்வைப் பெறுகிறோம்”, என்று ஐன்ஸ்டீன் கூறியதைச் சரியாக நினைவுபடுத்துகிறது, புதிய கல்விக் கொள்கையின் வரைவுக் குழு..

இந்தியாவில், 1986 மற்றும் 1992-ல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், கல்வி பெறுதல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு  மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தது, கல்வியின் தரத்திற்கு அல்ல என்றும், அக்கொள்கைகள்  முழுமையாக நிறைவேற்றப்படவில்லை  என்றும் குற்றம்  சாட்டுகிறது, இக்கல்விக் கொள்கை. ஆனால், இணையதளத்தை உள்ளடக்கியதாய் அக்கொள்கைகள் இருந்திருக்கவில்லை என்பது உண்மைதான். இனிவரும் காலங்களில், கல்வியோ, வாழ்வோ, இணையம் இன்றி, கற்பனை செய்தும் பார்க்க முடியாது. குறிப்பாக, கல்வி, வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டியதாகிவிடும். இன்றைய இளைஞர்கள், இணையப்பயன்பாட்டைத் தவறவிட்டால், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியதாகிவிடும் என்பது ஏற்கக்கூடிய எச்சரிக்கையே!   

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு, மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேறவும் மீண்டும்  உள்நுழையவும் வசதிகள் செய்யப்படும் என்பது ஒரு நல்ல செய்தி. அவ்வகையில், மேற்கு நாடுகளைப் போன்று, சில காலம் உழைத்து, பணம் மற்றும் அனுபவம் ஈட்டிய பின் மீண்டும் கல்வியைத் தொடர்வது, தனக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற பாரத்தை நீக்கும், நடைமுறை வாழ்க்கையுடன் எளிதாக இணைத்துப் பார்க்க முடிவதால், கல்வியும் அதிக பயனுள்ளதாய் இருக்கும்.

இனி, இப்புதிய கல்விக் கொள்கையின்  அம்சங்களைச் சற்று விரிவாகக் காண்போம்.
1. கல்விக்கட்டமைப்பு: தற்போதுள்ள 10 + 2 = 12 வருடக்  கல்விக்  கட்டமைப்புக்குப் பதிலாக, 5 (3 வருடம் பாலவாடி, 1, 2 வகுப்புகள்) + 3 (3, 4, 5 வகுப்புகள்)  + 3 (6, 7, 8 வகுப்புகள்) + 4 (9, 10, 11, 12 வகுப்புகள்) = 15 வருடக் கல்விக்  கட்டமைப்பாக  மாற்ற முயல்கிறது, புதிய கல்விக் கொள்கை. இரண்டு வயது வரைதான், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள், மூன்று வயது முதல், கல்விமூலம் அரசின் குழந்தைகள். ஆறாவது வயதுக்குப் பதில், மூன்று வயதிலிருந்தே கல்வியைப் புகுத்த முனைகிறது இக்கொள்கை. உலகம் எங்கும், குழந்தைகள் தங்கள் பருவத்தைக் குழந்தைகளாகவே அனுபவம் கொள்ள வேண்டும் என்று முன்வைக்கையில், விளையாட்டுகள் மூலமாக, இயல்பாக மட்டுமே கற்க வேண்டும் எனும்போது, இக்கொள்கை, நடைமுறையில், குழந்தைகளை இளம் வயதிலேயே முறைசார்ந்த கல்வியைக் கற்க வைத்துவிடும். விளையாட்டுகள் மூலமாகக் கற்பிக்கும் கலாச்சாரமும், உள்கட்டமைப்பும், பயிற்சியும் பெரும்பாலும் இந்தியாவில் இல்லை. அந்த  வகையில், இக்கொள்கை, குழந்தைகளின் சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும் எதிராகக் கட்டவிழ்த்துப்படும்  வன்முறையாகி விடலாம். 

2. ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (3-5 வயது): ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில், 85% மேல், 6 வயதிற்குள்ளாகவே நிகழ்ந்து விடுகின்றது. எழுத்துகள், மொழிகள், எண்கள், எண்ணும் திறன், வண்ணங்கள், வடிவங்கள், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு, புதிர்கள் மற்றும் தர்க்கரீதியான சிந்தனை, சிக்கலைத் தீர்த்தல், வரைதல், ஓவியம் மற்றும் பிற காட்சிக்  கலை, கைவினை, நாடகம், பொம்மலாட்டம், இசை, அசைவு ஆகியவற்றைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் போவதாகவும், இக்கல்விக் கொள்கை கூறுகின்றது.     ஆனால், குழந்தையின்  அறிவு வளர்ச்சியை, வழக்கமான  கல்வி முறையில் ஏற்படுத்தக் கூடாது. வெறும் விவரங்களாய் வழங்குவதற்குப் பதில், ஏன் , எதற்கு, எப்படி எனும் கேள்விகளைக் கேட்கும் வண்ணமும், சிந்தனைத் திறனை  வளர்ப்பதாகவும் அமைதல் வேண்டும். இதுவரை, அதற்கான  முயற்சிகள், அரசின் ஆரம்பக்கால கல்வித் துறையில் தொடர்ந்து எடுக்கப்படவில்லை. தனியார்ப் பள்ளிகள் சிலவற்றில், இவற்றில் சில நிகழ்கின்றன. பெற்றோர்களின் மனநிலையிலும், கல்வி பற்றிய சிந்தனை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதுதான் கல்வி எனும் எண்ணத்தை முதலில் ஒழிக்க வேண்டும்.
I. ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி, உபகரணங்கள் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்தல் அவசியம்.
II. மனிதவள மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் ஆகிய துறைகள் இணைந்து, ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியைத் திட்டமிட்டுச் செயலாற்றும் என்பது நற்செய்தி.

3. தொடக்கக் கல்வி (1-3 வகுப்புகள், 6-8 வயது): படித்தல், எழுதுதல், எண்ணுதல் ஆகிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவது இக்காலக் கல்வியின் நோக்கமாகும். தற்சமயம், தொடக்க வகுப்புகளில் படிக்கும் ஐந்து கோடி மாணவர்களில் பெரும்பான்மையினர், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடையாதவர்களாக உள்ளனர், என்று கணக்கெடுப்புகள் எச்சரிக்கின்றன. 
I    ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்கப்படும்.
Ii.   ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும். 
Iii எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். 
Iiv. சகமாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு  எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பாடங்களைக் கற்பிக்கலாம் என்கிறது, புதிய கல்விக் கொள்கை. 

மீண்டும் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி, மேற்கூறிய நல்லெண்ணங்களை நிறைவேற்ற முடியாது. மேலும், தன்னார்வலர்கள், அரசியல் சாயம் இல்லாதவர்களாய் இருப்பின் நன்று. காவல்துறை நண்பர்கள் போலில்லாமல் இருப்பது அவசியம்.

4. பாடத்திட்டம்: மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து, உண்மையான புரிதலுக்காகப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று கூறுகின்றது, இப்புதிய கல்விக் கொள்கை. கூர்மையான சிந்தனை, படைப்பாற்றல், தருக்கவகையில் உய்த்தறிதல், கூட்டு முயற்சி, சமூகப் பொறுப்புணர்வு, பன்மொழித்துவம், அளவியல்வகையில்  காரணமறிதல், எண்ம அறிவு போன்றவற்றில், உயரிய திறன்களை அடையும் வகையில், பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்கிறது. 

A பாடத்திட்டத்தின் சுமை குறைக்கப்பட்டு, நுண்ணிய சிந்தனையை வளர்க்கும் விதமாய் மாற்றியமைக்கப்படும். 

B அனுபவம், கலந்தாலோசித்தல் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையிலான கற்றல் முறை உருவாக்கப்படும். 

C பலவகை பாடங்களை, தங்கள் விருப்பப்படி, மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

D கலைகள் மற்றும் அறிவியல்கள், பாடக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவை கறாராகப் பிரிக்கப்படாது. 

E குழந்தை வளர்ச்சி மற்றும் மொழி பயின்றல் பற்றி அறிவியல் என்ன  கூறுகிறதென்றால், குழந்தைகள் இளம் வயதில், மொழியைக் கற்பதுடன் பிற பாடங்களையும், தங்கள் தாய் மொழியில் மிகச் சிறப்பாக கற்கிறார்கள். மேலும், 2 முதல் 8 வயதுவரை, குழந்தைகள் பலமொழிகளை எளிமையாக கற்கிறார்கள். எனவே, குறைந்தது ஐந்தாவது வரையிலும், இயன்றால் எட்டாவது வரையிலும் தாய்மொழியில் அல்லது உள்ளூர் மொழியில் கற்பிக்கப்படும். கல்வி மொழி, தாய்மொழியிலிருந்து வேறுபட்டால், இரண்டு மொழிகளிலும் கற்றலுக்கான வசதிகள் உருவாக்கப்படும். முன்-ஆரம்பப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல், மூன்று மொழிகளில் பேசவும், எழுத்துகள் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். மூன்றாம் வகுப்புவரை, தாய்மொழியில் எழுதக் கற்பிக்கப்படும். பிறகு, மற்ற மொழிகளிலும் எழுதக் கற்பிக்கப்படும். மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது, எல்லா மாநிலங்களுக்கும் ஏற்புடையதாயில்லை. 

F அன்னிய மொழியான ஆங்கிலத்தை விடுத்து, நாம் இந்தியத் தேசிய மொழிகளை வளர்க்க வேண்டும். தேவையான துறைகளில், இந்திய மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகிய இரண்டிலும் கற்கலாம். பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீனம் மற்றும் ஜப்பானியம் ஆகிய அன்னிய மொழிகளையும் விருப்பப் பாடங்களாக கற்கலாம்.

G இந்திய மொழிகள் வளம் நிரம்பியவை, அறிவியல் பூர்வமானவை, அழகானவை. அவற்றினுக்கிடையிலான ஒற்றுமைகளைக்  கண்டறிதல் மிகவும் ஆர்வமூட்டுவதாகும்.

H சமற்கிருதம் மிகவும் செம்மையான மொழி. அதில் ஏராளமான துறைகளில், படைப்புகள் உள்ளன. மற்ற மொழிகளின்  வளர்ச்சியில், சமற்கிருதம் ஆற்றியுள்ள பங்கின்  காரணமாக, அம்மொழியும், அம்மொழியின்  படைப்பாக்கங்களும் பரவலாகக் கற்பிக்கப்படும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற பிற செம்மொழிகளையும், பாலி, பெர்ஷியன், பிராகிருதம் போன்ற மொழிகளையும் எதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாக்க வேண்டும். 

மீண்டும், மீண்டும் சமற்கிருத மொழியையும் அதன் படைப்புகளையும் முன்னிறுத்துவதாகவே, இந்த புதிய கல்விக் கொள்கை இருக்கின்றது. திரு. கஸ்தூரி ரங்கன், கன்னடராயினும், கன்னடமே திராவிடக் கிளை மொழி என்று அறிந்திருந்தும், சமற்கிருதம்தான், இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்பது போல் கூறியுள்ளது, அறிஞர்க்கு அழகல்ல.  

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழிகள். புதிய கல்விக் கொள்கையின் பல இடங்களில், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமாக்கப்பட்ட, உயர்தரமான கல்வி என்று கூறிக்கொண்டே, இந்திய அரசியல் அமைப்புச்  சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில்,  சமற்கிருத மொழிக்கு மட்டும் அபரிதமான முக்கியத்துவம் தந்திருப்பது, ஒருதலைப்பட்சமானதும், தான்தோன்றித்தனமானதும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும் ஆகும்.

I உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளும், அடிப்படைக்கல்வி முதலே பயிற்றுவிக்கப்படும்.

J அரசியல் அமைப்புச் சட்டத்தின் அருமைகள் கற்பிக்கப்படும். 

K நான்காவது தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2005 (NCF 2005) மீளாய்வு செய்யப்பட்டு, 2020-க்குள் திருத்தியமைத்து, எல்லா வட்டார மொழிகளிலும் வெளியிடப்படும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம், தேவையெனில், சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். 

L மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், கணக்கீட்டுக்கான தேர்வுகள் நிகழ்த்தப்படும். அவை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவிற்கு, பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தவும், கற்பித்தல்-கற்றல் முறைகளை  மாற்றியமைக்கவும் உதவும். இத்தேர்வுகள், அடிப்படையான கருத்துருவங்கள் மற்றும் அறிவை சோதிக்கும். 

குறிப்பாக, மூன்றாம் வகுப்பு கணக்கீட்டுக்கான தேர்வு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் பிற அடிப்படையான திறன்களைச் சோதனை செய்யும். சில தமிழ்க் கல்வி விமர்சன வாதிகள் குற்றம் சாட்டியது போல், இத்தேர்வுகள் மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, தொழிற்கல்வி அளிக்க அல்ல.  
  
5. இடைநிற்றல்: இடைநிற்றல், கல்வியின் எல்லா காலகட்டங்களிலும் ஏதோ ஒரு காரணத்தால் நிகழ்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக, 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பிறகு, இடைநிற்றல் மிகுதியாக நிகழ்கிறது. காரணம் ஒன்று, உயர்நிலைப் பள்ளிகள் இல்லாமை. இரண்டு, அப்படி இருப்பினும், வெகு தொலைவில் உள்ளது அல்லது  போய்வருவதற்குப்  பாதுகாப்பில்லாமல் இருக்கின்றது.

மாணவர்களின் போக்குவரத்தில் உதவி, அவர்களுக்குப் பாதுகாப்பு, விடுதி வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம், இடைநிற்றலை வெகுவாக குறைக்க முடியும் என இக்கல்விக் கொள்கை சரியாகவே பரிந்துரை செய்கின்றது. 

பல வகுப்பு நிலைகள் கொண்ட பள்ளி வளாகத்தை (School Complex) நிறுவும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றது, இக்கல்விக் கொள்கை. கல்வியின்   தொடர்ச்சிக்கும், இடைநிற்றல் பிரச்சனைக்கும், இதுவும்  ஒரு  நல்ல தீர்வாகலாம். ஆனால், பெரும்பாலான  இடங்களில், இதை உருவாக்குவதுதான்  கடினம்.

6. கலைகள் மற்றும் அறிவியல்: உலகின் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கணிதம் (Mathematics) ஆகியவை உள்ளடக்கிய STEM அமைப்பே முன்வைக்கப்படுகின்றது. கூடவே, கலைகளையும் (Arts) சேர்த்து, STEAM அமைப்பை, இக்கல்விக் கொள்கை முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏனெனில், இலக்கியம், இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள், மனதை மென்மையாக்கும், மேன்மையுமாக்கும். அன்பு, பரிவு, நட்பு, பாசம், காதல், பிறரை மதித்தல் போன்ற மென்திறன்களை, கலைகள்தாம் சிறப்பாக வளர்க்கும். 

7. தேசிய ஆராய்ச்சி நிறுவனம்: அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன், சமூக அறிவியல், கலைகள் மற்றும் மானுடவியல் பற்றியும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு, இத்தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வழிவகை செய்யும் என்று புதிய கல்விக் கொள்கை முன்வைப்பதும் வரவேற்புடையதே! ஆனால், மிகைப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட மைய அமைப்பு, நடைமுறையில், மாநிலங்களில் சுணக்கத்தை ஏற்படுத்தி விடலாம். பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்புகள் அவசியம். அதே சமயம், பொறுப்புகள் கொண்டதாயும், அவை இருக்க வேண்டும்.     

8. ஆசிரியர் பயிற்சி: புதிய கல்விக்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது அவசியம். பல துறைகளின் அறிவைப் பெற்றவராயும், கல்வி நிறுவன நிர்வாகம், மாணவர்நிலை போன்றவற்றை அறிபவராயும், ஆசிரியரை  உருவாக்குதல் நன்று. உயர்கல்வி பெறுவதற்கு ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் நன்றே. கற்பித்தல் அல்லாத நிர்வாகம் மற்றும் அரசாங்க வேலைகள், ஆசிரியர்களுக்குத் தரப்படாது என்பதும் நன்றே. கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது மிக நன்று. ஆசிரியர்கள் அடிக்கடி பணியிடம் மாற்றம் செய்வது தவிர்க்கப்படும். இதுவும் நன்றே. பல இந்திய மொழிகளில், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தகவல்கள் வழங்கப்படும். அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கான கல்வியும் பயிற்சியும் வழங்கப்படும். தகுதியில்லாத ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் மூடப்படும். 

9. தேசிய கல்வி நிறுவனம்: மாறி வரும் உலகச்  சூழல்களை முன்கூட்டி அறியவும், அவற்றிற்கு ஏற்ப கல்வித் திட்டங்களை வகுக்கவும், நடைமுறைப்படுத்தச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தவும், இவ்வமைப்பு பயன்படும் என்பது, எதிர்கால சிந்தனை  நோக்குள்ளது. . மேலும், தேசிய கல்வி நிறுவனம், இக்கல்விக் கொள்கையின் தொடர்ச்சியான வளரச்சிக்கும் உதவும்.

10. மத்திய கல்விப் புள்ளியியல் பிரிவு: ஒழுங்கான புள்ளி விவரங்கள் இல்லாமல், சரியான கல்வித் திட்டங்களை வகுக்க முடியாது. எனவே, மத்திய நிறுவனமான கல்வித்  திட்டம் மற்றும் நிர்வாகத்தின் ஒரு சுதந்திரமான பிரிவாக, மத்தியப் புள்ளியியல் பிரிவை உருவாக்க, இக்கல்விக் கொள்கை பரிந்துரை செய்கிறது. இம்முன்மொழிவும் நன்றே. 

11. தேசிய வளர்ச்சிக்கு வழிவகுத்தல்: அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து,  மூன்றாவது பெரிய பொருளாதாரமாக, இந்தியா வர நினைக்கின்றது. அப்பொழுது, நம்முடைய பொருளாதாரம், இயற்கை வளங்களை (மட்டும்) சார்ந்து இருக்காது, மாறாக அறிவைச் சார்ந்தே இருக்கும். சூழல் அமைப்பு நம்மை வேறுவகையில் சிந்திக்க நிர்ப்பந்திக்கிறது. 

இது, ஒரு தவறான எதிர்பார்ப்பாகும். அமெரிக்கா, சீனா இரண்டின் பொருளாதாரப் பாதைகளும் பின்பற்றத் தக்கவையல்ல. அமெரிக்கா, மற்ற நாடுகளை (ஆப்கானித்தானம், ஈராக், சூடான், இன்னபிற. )  அவ்வப்பொழுது ஆக்கிரமித்து, தனக்கு வேண்டிய பொம்மை ஆட்சிகளை நிறுவி, காலமெல்லாம் கப்பம் வசூலிக்கின்றது, ஆயுதங்களை உற்பத்தி செய்து, விற்பதற்காகவே, உள்நாட்டுக்  கலகங்களைத் தோற்றுவிக்கின்றது. சீனமோ, மிகவும் மோசமான உழைக்கும் சூழலில், மக்களைச் சுரண்டுகின்றது. இந்தியாவும் அத்தகைய பாதைகளைப் பின்பற்ற முயல்கின்றது. தனியார் ஆயுத உற்பத்தி, உழைப்பாளர்களுக்கு எதிரான சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சூழலைக் கெடுக்க உதவும் சட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அமெரிக்கா, சீனம் போல் வளர்தல் அவசியமா? இவற்றால், இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு உயரலாம். ஒருசில முதலாளிகள் பெருமுதலாளிகளாகலாம்.  ஆனால், மக்கள் மேலும் வறுமையடைவார்கள் என்பது மட்டும் உறுதி. சுற்றுச்சூழல் மேலும் மாசுபடும், உழைப்பில், மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழப்பார்கள், நவீன  கூலிகளாக்கப்படுவர். பிற நாடுகளில், இந்திய ஆயுதங்களால், அப்பாவி மக்களைக் கொன்றுதான், இந்தியா வளர வேண்டுமா? பொதுமக்களை வறுமையாக்கி, ஒரு சிலரை பெரும்பணக்காரர்களாக்கி, இந்தியா வளர்ந்துவிட்டது என மார் தட்டிக் கொள்ள வேண்டுமா?

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அப்பாவி மக்களும் நினைப்பது வேதனைக்குரியது. இது வரையில், வல்லரசு என்றால், மற்ற நாடுகளை நேரிடையாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தல் என்பதாகும். இந்தியா வல்லரசானால், பாவம்தான், சாபந்தான் இந்தியாவைச் சூழும். திரு. அப்துல் கலாமே கூறியிருப்பினும், வல்லரசு என்பது அருவருப்பானது. இந்தியா வளமான அரசாகலாம், நல்ல அரசாகலாம். வல்லரசாகக் கூடாது. வல்லரசு எனும் நினைப்பால், வலிமையைக் காட்ட போர் மூளும், படைகளுக்கான செலவுகள் நீளும். மக்கள் பயத்தால் சாவர். வரிகளால், வறுமை மிகும். எனவே வல்லரசு என்பது, பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, முடிவில், நம் இந்திய நாட்டு மக்களுக்கே பெருங்கேடாய் முடியும். 

12. உயர்கல்வி நிறுவனங்கள்: இவை சுதந்திரமாகச் செயல்படும். குறிப்பணி நாலந்தா மற்றும் குறிப்பணி தட்சசீலம் ஆகியவை தேசியக் கல்விக் கழகத்தின்கீழ் அமைக்கப்படும். குறிப்பணி நாலந்தா மற்றும் குறிப்பணி தட்சசீலம் ஆகியவற்றின் கீழ், பல மத்திய பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும். சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழகமும், அவ்வாறு கொண்டுவர முயலப்பட்டது. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் போய்விட்டால், சமூக நீதியை நிலைநிறுத்தும் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும். இதை அறிந்து கொடுத்த அரசியல் அழுத்தத்தால், அம்முயற்சி கைவிடப்பட்டது. பல்துறைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் புதிதாய் தோற்றுவிக்கப்படும் என்பது நன்று.

13. நிதி ஒதுக்கீடு: 2017-2018 ஆண்டில், கல்விக்கான  நிதி ஒதுக்கீடு, இந்தியாவின்  தேசிய உற்பத்தி மதிப்பில் வெறும் 2.7% தான். 1968, 1986, 1992-ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட 6% ஐ, இதுவரை எந்த அரசாங்கமும்  எட்டவில்லை. ஆனால், ஒவ்வொரு அரசாங்கமும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு, பல்லாயிரம் கோடிக்கணக்கில், கடன்களைத் தள்ளுபடி செய்கின்றன. 2017 – ல், பிற நாடுகளின்  கல்விக்கான செலவு கீழ் வருமாறு:
பூடான், சிம்பாவே, ஸ்வீடன் — 7.5%
கோஸ்டாரிகா, பின்லாந்து — 7%
கிரைகிஸ்தான், தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில் — 6%
இங்கிலாந்து, நெதர்லாந்து, பாலஸ்தீனம் — 5.5%
மலேசியா, கென்யா, மங்கோலியா, தென் கொரியா, அமெரிக்கா — 5%

கல்விக்கான  முதலீடே  மிகவும் சிறந்த முதலீடு. அறிவுப் பொருளாதாரத்திற்கு, தரமான கல்வி அவசியம். தரமான கல்வியை அடைய, போதுமான நிதி ஒதுக்கீடு அவசர அவசியம். நெடுங்காலமாகப் பரிந்துரைக்கப்பட்டு வரும் இந்தியாவின் தேசிய உற்பத்தி மதிப்பில் 6% ஐ, கல்விக்காக உடனடியாக ஒதுக்க வேண்டும். 

அடிப்படையில், இப்புதிய கல்விக் கொள்கை தொலை நோக்குடன், நல்ல எண்ணங்களுடன், புதிய திட்டங்களுடனும் நிறுவனங்களுடனும், இந்தியக் கல்வியை மேம்படுத்தக் கருதுவது நல்லது. ஆனால், இடையிடையில், சில தவறான  கருதுகோள்களைக் கொண்டு, தவறான  பரிந்துரைகளைச் செய்வது வேதனைக்குரியது. குறிப்பாக, சமற்கிருத மொழி பற்றிய முக்கியத்துவம் மற்றும் வளரச்சிக்காகச் சுற்றுச் சூழலைப் பலியாக்க முயல்வது ஆகியவை.

புதிய கல்விக் கொள்கை மட்டும் போதாது. நடைமுறைப்படுத்துகையில், கீழ் வருவனவற்றை உறுதி செய்தல் அவசியம்:
1. ஏற்கனவே தீட்டிய கல்விக்கொள்கையின் நடைமுறைப்படுத்தலை  நிறைவு செய்திட வேண்டும். குறிப்பாக, அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு.
2. பாடத்திட்டங்கள் நாடு முழுவதும் சமமாவதை உறுதி செய்தல் மிக மிக அவசியம், அவசரம்.
3. பின்லாந்து நாட்டுக்கல்விமுறை, உலகநாடுகளால் மிகவும் பாராட்டப்படுகின்றது. படைப்பாக்கத்தை (Creativity) இலக்காகக் கொண்டு,  நிகழ்வுகளை அடிப்படையாகக்  (Phenomenon based)   கொண்ட கற்றல் முறைகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய கற்றல் முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். 
4. பின்லாந்தில், கல்விக்காக போதிய நிதிகளும் ஒதுக்கப்படுகின்றன. கல்விக்கான நிதி என்பது செலவு அல்ல, அது பெரும் முதலீடு என்பதை அரசியலாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வியால் உடனடி பலன்களைத் தர முடியாது. ஆனால், எதிர்காலத்தில், அது பெரும் சமூக சொத்தினை உருவாக்கும் என்னும் ஆழ்ந்த கனவுகள் வேண்டும், நடைமுறைப்படுத்தும் உறுதி வேண்டும். நாட்டையும், மக்களையும், குழந்தைகளையும் நேசிப்பவர்களால் மட்டுமே அது சாத்தியம்.
5. ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை பரிந்துரைத்த இலக்குகளை நேர்மையாகப் பின்பற்றும் வகையில், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலின  மக்கள், விளிம்பு நிலையில் உள்ளோர், பெண்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான  கல்வியைத் தருதல் வேண்டும்.  தரமான  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அளவுக்கு, அனைவரையும் உள்ளடக்குவதையும், சமமாக்கப்படுவதையும் விவரிக்கவில்லை, இக்கொள்கை. 
6. இந்திய அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் வளர்க்கும் கல்விக்கொள்கையாக, இதைத் திருத்த வேண்டும். சமற்கிருதம் மட்டுமே இந்திய மொழி எனும் வகையில் அமைந்த, ஒருதலைபட்சமான கல்விக்கொள்கை அம்சங்களைக் கைவிட வேண்டும். 
7. கல்வி அமைப்பில், இப்புதிய கல்விக் கொள்கை விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்த தேசிய வருமானத்தில் குறைந்தது 6% ஐ, கல்விக்காக, ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். இல்லையெனில், இப்புதிய கல்விக் கொள்கை,  வெறும் காகிதங்களாகவே மிஞ்சும் அல்லது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகளை மட்டுமே சாதித்துக் கொள்ள வழிவகுக்கும். மற்ற கல்வி சீர்திருத்தங்களும், முன்மொழிவுகளும் மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருப்பினும், போதிய நிதியை ஒதுக்காவிட்டால், அவை எவற்றையும் சாதிக்க முடியாது. நிதி ஒதுக்குவதைப் பற்றிய உறுதியான நிலைப்பாடு இல்லாதவரை,  இவையெல்லாம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை கொடுப்பதற்காக எழுதப்பட்ட சுவாரசியமான ஆவணமாக மட்டுமே இருக்கும்.  
8. அனைவரையும் உள்ளடக்கிய, சமமாக்கப்பட்ட, தரமான  கல்வியை அளித்தப்பின்புதான் , தேசிய அளவிலான  நீட் (NEET) போன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை நடத்துவது நியாயமாய் இருக்கும்.
9. சமூகநீதி குலையா வண்ணம், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

இக்கல்விக் கொள்கைகளின்  குறைபாடுகளை இந்திய அரசாங்கத்திற்குச் சுட்டி தகுந்தவாறு திருத்த முயல்வதோடு, ஐ. நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் மற்றும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலும் முறையிட்டு, இந்திய அரசாங்கத்திற்கு  அழுத்தம் தரலாம். 

இறுதியாக, அம்பேத்கர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றிக் கூறிய அதே வாசகம் இப்புதிய கல்விக் கொள்கைக்கும் பொருந்தும். இப்புதிய கல்விக் கொள்கையின்  இயல்பு பெரிதல்ல. இது, கெட்டவர்கள் கைகளில் சேர்ந்தால், மக்களுக்குத் தீமையாகும். நல்லவர்கள் கையில் சேர்ந்தால், (இன்னும்) நல்லதாக மாறும். யார் கையில் இருக்கின்றது, இருக்க வேண்டும் என்பதை மக்கள்தாம்  உறுதிப்படுத்த வேண்டும்.






Friday, October 23, 2020

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் மக்களின் உரிமைகளும் கடமைகளும்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் மக்களின் உரிமைகளும் கடமைகளும்

--- சொல்லாக்கியன்    


உலகின் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனும், அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எல்லா சட்டங்களின் ஊற்றுக்கண்ணாகவும் அரசியல் அமைப்புச் சட்டமே திகழ்கின்றது. ஒரு நாடு நல்ல வழியில் செல்கின்றதா அல்லது தீய வழியில் செல்கின்றதா என்பதை உரசிப்பார்க்கும் கல்லாகவும் அரசியல் அமைப்புச் சட்டம் நிலவுகின்றது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தைச் சுருக்கமாகக் காண்பதற்குமுன், அதன் பின்புலத்தையும் சிறிது காண்போம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகில் உள்ள எல்லா நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களைக் காட்டிலும், மிகவும் அருமையான சட்ட ஆவணம் ஆகும். ஏனெனில், இதை உருவாக்கியவர்களில் பலரும் சட்ட மேதைகள், உலக வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், புதிய சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கத் துடித்தவர்கள். பி. என். ராவ், ராஜேந்திர பிரசாத், பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சரோஜினி  நாயுடு, அன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், அம்ரித் கவுர், விஜயலக்ஷ்மி பண்டிட் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். உலகத்திலேயே மிகவும் அற்புதமான நாடாக இந்தியாவைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் இன்பக்கனவைக் கண்டதனால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், அயர்லாந்து என, உலகில் உள்ள பல அரசியல் அமைப்புச் சட்டங்களின் நல்ல பண்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் இறுதி வடிவில் உலகச் சட்டவரலாற்றின் ஒளிமிக்க சிகரம் எனலாம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னோட்டம் (Preamble):  
சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளாகும். பொது நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  ஆகியவை, அதன் இலக்குகளாகும் என்று முன்னோட்டம் (Preamble) குறிப்பிடுகின்றது. 

இந்திய அரசின் கொள்கைக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy): 
முன்னோட்டத்தை மேலும் விளக்கும் வகையில், இந்நெறிமுறைகள் அமைந்துள்ளன. 
இவை, அயர்லாந்து அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டன. டாக்டர். அம்பேத்கர், இவற்றை, இந்திய அரசியலமைப்பின் “புதுவகையான முக்கியத்துவம்” என குறிப்பிடுகிறார்.

அரசாங்கமானது, மக்கள் நலனிற்காக கொள்கைகளை வகுக்கும் போதும், சட்டங்களைச் செயல்படுத்தும் போதும், நெறிமுறையின் இலட்சியங்களை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட வேண்டும் என்பது அரசியலமைப்பின் அறிவுறுத்தலாகும் மற்றும் நாட்டின் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய அங்கங்களுக்கும் பரிந்துரைப்பதாகும். 

1. இந்தியா, ஒரு நல அரசு (Welfare State): ஒரு மக்கள் நல அரசு, வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் செல்வத்தைச் சமச்சீரான முறையில் விநியோகிப்பது ஆகிய கொள்கைகளின் அடித்தளத்தில் அமைந்தது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்திய நாட்டின், வரலாற்றின்  அநீதி, அடிமைத்தனம், சமமின்மை, போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான, இந்தியா ஒரு மக்கள் நல அரசாக விளங்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

2.  சோசலிசம்: பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டி, நியாயமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டிய கடமையை, அரசுக்கு இது சுமத்துகிறது. மக்கள் அனைவருக்கும், சமூக பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க முயல வேண்டும் என்று, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் வாசகம் 38 கூறுகின்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்தல் (வாசகம் 39 d )
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் சமமான நீதி முறையை ஏற்படுத்துவது (வாசகம் 39 A) 
மனிதாபிமான வேலைச்சூழல் அமைய, பேறுகாலச் சலுகை கிடைக்கும் வகை. (வாசகம் 42)
ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தையும் பொது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அரசின் கடமை. (வாசகம் 47)

3. காந்தீயம்: கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்தல். (வாசகம் 40)
கிராமப் புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு முறையில் குடிசைத் தொழில்களை மேம்படுத்துதல். (வாசகம் 43)
உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு செய்யக்கூடிய மதுவகை மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் தடுத்தல். (வாசகம் 47)
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை, அறிவியல் வகைகளில், அரசு அமைத்தல்.  பசுவதையைத் தடுத்தல். கன்றுகள் மற்றும் பால் தரும் பசுக்கள் தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களைப் பேணுதல்.  (வாசகம் 48)

4. சமத்துவம்: நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல். (வாசகம் 44)
ஆறு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியளிப்பது. (வாசகம் 45)
நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிகள் ஆகியோரின், கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனம் கொண்டு அரசு வளர்க்க வேண்டும். (வாசகம் 46)
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையைப் பிரித்தல். (சரத்து 50)

வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின் தத்துவார்த்தமான பகுதிகள் மற்றும் ஆன்மா நிறைந்த பகுதிகளாகும். நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என கிரான்வில்லி ஆஸ்டின் (Granville Austin) குறிப்பிடுகிறார். 

அடிப்படை உரிமைகள்: அடிப்படை உரிமைகளுக்கு, இந்திய அரசியலமைப்பின் பகுதி – III ல், வாசகம் 12 முதல் 35 வரை, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பகுதி – III, இந்தியாவின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுகிறது.  இங்கிலாந்தில், வரலாற்றின் முதன் முறையாக 1215 – ல், அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டதும், பிரபுக்கள் மற்றும் சாதாரண மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டதும், இந்த மகா சாசனம் மூலம்தான்.  

வாசகம் 12 – ன்படி, “அரசு” என்ற சொல்லில், பின்வருவன அடங்கும்:
(1) இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும்
(2) ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும்
(3) இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள் அல்லது பிற அதிகார அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள், நீதிபதிகள் ஆகிய யாவரும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே இயங்கவும், அதைக் காக்கவும்,  கடமைப்பட்டவர்கள். 

வாசகம் 13(2) –  குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாகச் சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக ஆக்கப்படும்.

சமத்துவ உரிமைகள் (வாசகம் 14 முதல் 18 வரை):
வாசகம் 14 –  சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சமத்துவ சட்டப் பாதுகாப்பு. 

வாசகம் 15 – மதம், இனம், சாதி, பால், இடம் அல்லது பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. 

வாசகம் 16 –  அரசின்  வேலைவாய்ப்புகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு,

வாசகம் 17 –  தீண்டாமை ஒழிக்கப்படுகின்றது. தீண்டாமையின் எல்லாவகையான  நடைமுறையும் தடைசெய்யப்படுகின்றது    . தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் எவராயினும், சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

சுதந்திர உரிமைகள் (வாசகம் 19 முதல் 22 வரை): 
வாசகம் 19:
1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம், 
2. ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம், 
3. கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம், 
4. இந்தியா முழுவதும் சென்று வர சுதந்திரம், 
5. இந்தியாவிற்குள் எப்பகுதியிலும் தங்கி வாழும் உரிமை, 
6. எந்த தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தைச் செய்யவும் சுதந்திரம்.

வாசகம் 20: 
எந்த ஒரு நபரும் தனக்கு எதிராகவே சாட்சியம், வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தக்கூடாது.

வாசகம் 21: 
எந்த நபரின் வாழ்க்கையையும் அல்லது தனி நபர் சுதந்திரத்தையும், சட்டத்தின்  நடைமுறைகளால் தவிர, பிற வழிகளில் பறிக்கக் கூடாது.
குழந்தைப்பருவத்தின் பாதுகாப்பிற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சுழலுக்கான உரிமை, மனித கௌரவத்திற்கான உரிமை போன்ற உரிமைகள் மீறப்படும் போது, பிரிவு 21-ன் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாக வேண்டுமென்று ஏராளமான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வாசகம் 22: 
கைது செய்வதற்குண்டான காரணங்களை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
தன் சார்பாக வாதாட, ஒரு வழக்கறிஞரை, தன் விருப்பப்படி கைது செய்யப்பட்டவர் அமர்த்திக் கொள்ளலாம்.
கைது செய்யப்பட்ட நபரை, அவர் கைதான நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள், குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன், முன்னிலைப்படுத்த வேண்டும்.

சுரண்டலுக்கு எதிரான உரிமை வாசகம் 23 முதல் 24 வரை:
வாசகம் 23: 
மனித இழிதொழில் வாணிகமும், ஊதியமற்ற கட்டாய உழைப்பு முறை மற்றும் இது போன்ற பிற வலுக்கட்டாய உழைப்பு முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இத்தடையை மீறி அவ்வாறு ஏதேனும் செய்யப்படுமானால், அது தண்டிக்கத்தக்கக் குற்றச் செயலாகும்.

வாசகம் 24:
14 வயதிற்குப்பட்ட குழந்தைகளை யாரும், தொழிற்சாலையிலோ அல்லது சுரங்கத்திலோ பணிக்கு அமர்த்தக் கூடாது. மேலும் பிற அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
 
சமய சுதந்திர உரிமை வாசகம் 25 முதல் 28 வரை:
வாசகம் 25:
பொது அமைதி, ஒழுங்கு, சுகாதாரம், அறநெறி ஆகியவற்றுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் உட்பட்டு எல்லோரும் தங்கள் உளநெறிக்கு உகந்ததாகப்படும் சமய நம்பிக்கையைக் கொள்ளவும், சுதந்திரமாக அதனைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு அதன் உண்மையை உணர்த்திப் பரப்பவும், அரசியல் சட்ட உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள்.

வாசகம் 26:
அரசியலமைப்புச் சட்டத்தின் பொது அமைதி, ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றின் நலனுக்குட்பட்டு,
1. ஒவ்வொரு சமயரும் அதற்குரிய அற நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
2. சமய சம்பந்தமான விஷயங்களில் தனது சொந்த விவகாரங்களைத் தானே மேலாண்மை செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
3. அசையும் சொத்துக்களையும், அசையாச் சொத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும், உரிமையாக்கிக் கொள்ளவும் உரிமை பெற்றுள்ளார்.
4. அவ்வாறு சேர்ந்து சமயக் கூடங்களுக்கு உரிமையாக்கிக் கொண்ட சொத்துக்களைச் சட்டங்கள் கூறும் முறையில் நிர்வகித்துக் கொள்ளவும், உரிமை பெற்றிருக்கின்றது என்று அரசியலமைப்புச் சட்டம் விளம்புகிறது.

வாசகம் 27:
எச்சமயத்திற்கும் அல்லது அதன் உட்பிரிவிற்கும் வரி விதித்து, அவ்வரியின் வருவாயைச் சமய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் செலவு செய்யும் நோக்கத்துடன் எந்த ஒரு குடிமகனும் வரிப்பணம் கட்ட வேண்டுமென்று வற்புறுத்தக் கூடாது என்று கூறுகின்றது.

வாசகம் 28:
அரசின் நிதி உதவிகளை முழுமையாகப் பெற்று, கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில், சமய போதனை செய்வது தடுக்கப்படுகிறது.
அரசின் நிதி உதவியைப் பெறாமல் கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்படவில்லை.
மேலும், பள்ளிக் குழந்தைகளைக் கட்டாய மத போதனைகளைக் கேட்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடாது.

கலாச்சார மற்றும் கல்வி வாசகம் 29 முதல் 30 வரை:
வாசகம் 29:
(i) இந்தியாவில் எப்பகுதியில் வாழ்பவராக இருப்பினும், தனி மொழி ஒன்றை அல்லது எழுத்து முறையை அல்லது தனிக் கலாச்சாரம் ஒன்றைப் பெற்றிருக்கும் சமூகத்தினர் அம்மொழி, எழுத்து வடிவம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியலமைப்பு சட்ட உரிமையைப் பெற்றுள்ளார்கள்.
(ii) அரசுக் கல்விக் கூடங்களிலும் அல்லது அரசின் உதவி பெற்று நடத்தப்படுகின்ற கல்வியியல் சாலைகளிலும், எந்தவொரு குடிமகனுக்கும், சமயம், இனம், சாதி, மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றினால், கல்வி பெறும் வாய்ப்பை மறுக்க முடியாது.

வாசகம் 30:
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுபான்மையினராக உள்ள எல்லாரும், தங்கள் விருப்பப்படி கல்விக் கூடங்களை ஏற்படுத்தி அவற்றை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய முதல் உரிமையை வழங்குகிறது.

உரிமைகளைக் காப்பதில், அரசியலமைப்பு வாயிலான தீர்வு:
வாசகம் 32 (வாசகம் 226 – உயர்நீதிமன்றம்):
அடிப்படை உரிமைகளால் பாதிக்கப்பட்ட நபர், அரசியலமைப்பு மூலம் தீர்வு பெறலாம். பாதிக்கப்பட்ட நபர் நேராக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்பதே, ஒரு அடிப்படை உரிமையாகும். ஏனெனில் அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், உரிமை மீறலைத் தவிர்க்கவும், உரிமையை நிலைநாட்டவும், இவ்வாசகம் வகை செய்கிறது.
எனவே, இந்த வாசகத்தை ஒரு போதும் செயலிழக்கச் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியாது. மேலும், “இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட வாசகத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால்,  இவ்வாசகம் இல்லாமல் இருப்பின், அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய இவ்வாசகத்தினைத் தவிர, வேறு எந்த வாசகத்தையும் நான் குறிப்பிடமாட்டேன். இது, அரசியலமைப்பின் இருதயம், ஆன்மா ஆகும்” என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படின், உச்ச நீதிமன்றம் எவ்வகையான நீதிப்பேராணை அல்லது உத்தரவுகளைப் பிறப்பிக்குமோ, அவற்றை, வாசகம்  226-ன்படி, உயர்நீதிமன்றமும் பிறப்பிக்கலாம்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை பிறப்பிக்கும் அதிகாரமானது, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விடப் பரந்தது, என வாசகம் 226 கூறுகிறது.
ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் தான், வாசகம் 32-ன்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறக்கும். ஆனால், அடிப்படை உரிமையின்றி சாதாரண உரிமைகள் மீறப்பட்டாலும், உயர்நீதிமன்றம் அவ்வாணையைப் பிறப்பிக்கும்.
1. ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை (Habeas Corpus): சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைபிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கும்.
2. செயலுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus): பொதுக் கடமையான ஒரு செயலை, ஓர் அதிகாரி அல்லது கூட்டமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத் தவறினால், அக்கடமையைச் செய்விக்கும். 
3. நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை (Certiorari): நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம் அதிகாரவரம்பை மீறிச் செயல்பட்டாலோ, அறமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ, அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடும். 
4. தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition): கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பை மீறி அல்லது சட்ட முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவை மேற்கொண்டு நடத்தாமல் தடைசெய்யும். 
5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo Warranto) : பொது அதிகாரப் பதவியில் உள்ளவர், எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவி, பதில் கூற ஆணையிடும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும், பிரெஞ்சுப் புரட்சி, உலக மக்களுக்கு அளித்த பெருங்கொடைகள்.  இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில், சமத்துவம் என்பதற்கு முதன்மை தரப்பட்டுள்ளது. காரணம், பல்லாண்டு காலமாய் இந்தியாவில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளே. 

எளியதை வலியது அடக்குவதும், எளியதிடமிருந்து வலியது பறிப்பதும் விலங்குலகில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின்  நெடிய வரலாற்றில், இன்றும் நிகழ்ந்து கொண்டேதான்  உள்ளது. இனிவரும் காலங்களிலும்,  வெவ்வேறு வடிவங்களில், அவற்றைத் தொடர முயன்று கொண்டேதான்  இருக்கும். மக்களின்  தொடர்ச்சியான  விழிப்புணர்வாலும், உரிமைகளுக்கான  போராட்டங்களாலும் மட்டுமே, அம்முயற்சிகளைத் தடுக்க முடியும்.

அடிப்படைக் கடமைகள் (வாசகம் – 51 A)
• அரசியலமைப்புக்குக் கீழ்ப்படிந்து, அதன் நோக்கங்களையும், நிறுவனங்களையும் மதிப்பதுடன் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் மதித்து நடத்தல்;
• நமது சுதந்திரப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உன்னதமான நோக்கங்களைப் பேணிக்காத்துப் பின்பற்றி நடத்தல்;
• இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்தல்;
• நாட்டைக் காப்பதுடன், தேவையானபோது, நாட்டு நலப்பணிகளையும் செய்தல்;
• சமய, மொழி, வட்டார, பிரிவினை வேறுபாடுகளை எல்லாம் கடந்து, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதர உணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல்; பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கின்ற செயல்களை விட்டொழித்தல்;
• பல்வேறு கூறுகளுடைய நமது பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் போற்றிக் காத்தல்;
• காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாத்தல், உயிரினங்களிடையே பரிவுடன் இருத்தல்;
• அறிவியல் மனப்பாங்கு, மனிதாபிமானம், ஆராய்ச்சி உணர்வு, சீர்திருத்த மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்;
• பொதுச் சொத்தைப் பாதுகாத்தல்; வன்முறையை விட்டொழித்தல்;
• தொடர்ச்சியாக நம் நாடு தன்னுடைய முயற்சியில் பல முன்னேற்றங்களைக் காணவும், சாதனைகளைப் படைக்கவும் தனிமனித மற்றும் கூட்டு முயற்சிகள் அனைத்திலும் திறமையை வளர்க்கப் பாடுபடுதல்;
• 14 – வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர்களும், காப்பாளர்களும் வழங்கவேண்டும் என்கிறது. 
இந்த கடமைகள், 2002-ம் ஆண்டு 86-வது சட்டத்திருத்தம் வாயிலாகச் சேர்க்கப்பட்டது. இவையாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் (வாசகம் 368):
அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் திருத்துவதற்கான அதிகாரத்தை, பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது. பாராளுமன்றமானது அரசியலமைப்பினைத் திருத்தி புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால், இதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே செய்ய வேண்டும். எனினும், பாராளுமன்றமானது, அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை மீறி திருத்தம் செய்யக்கூடாது.

நெருக்கடி நிலை (வாசகம் 352):
இந்தியா முழுமைக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ, போர் அல்லது அன்னிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கலகத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவார்.

கூட்டாட்சி (Federation):
ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய ‘போடஸ் (Foedus)’ என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு, மாநில உரிமைகளையும் பாதுகாக்க அமைக்கப்படும் அரசாங்க முறையே, கூட்டாட்சி. ஒற்றையாட்சி முறையில், மத்திய அரசாங்கம் தீட்டும் சட்டங்களை, எல்லா மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அரசியல் சட்டம் என்பது எழுத்துப் பூர்வமான ஓர் ஆவணம்; மேலும் உலகிலேயே மிக அதிகபட்ச விரிவுடைய அரசியல் சட்டமும் இதுதான். அரசியல் சட்டத்தின் உச்சநிலையை இது நிறுவியுள்ளது. காரணம், மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டுமே, தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட களங்களில், சுதந்திரமாகச் செயல்படுவதற்குரிய அதிகாரங்களை, அரசியல் சட்டம் விளக்கமாக அளித்துள்ளது.

வாசகம் 343: 
இந்தியை அலுவல் மொழியாகக் குறிக்கின்றது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்தித்திணிப்பை எதிர்க்கின்றன. ஏற்கனவே, இந்தியால் பல மொழிகள் அழிந்துவிட்டன. பாகிஸ்தானில், உருது தேசிய மொழியாய் இருக்கும் போதிலும், உருதும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன. ஏனெனில், அங்கும், உருதுவைத் தவிர, பஞ்சாபி, சராய்கி, பாஷ்டோ, சிந்தி, பலுச்சி, குஜாரி, காஷ்மீரி, இந்த்கோ, பிராஉயி, ஷீனா, பால்டி, கோவார், தத்கி, அர்யான்வி, மார்வாரி, வாகி, புருஷாகி எனப் பல மொழிகள் பேசப்படுகின்றன. எனவே,  இந்த வாசகத்தை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்து, திருத்தம் கொண்டுவர வேண்டியது எதிர்கால அவசியமாகும்.  

அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று பட்டியல்கள் (வாசகம் 246): 
மத்திய, மாநில மற்றும் பொதுப்பட்டியல்கள். மத்திய அரசின் பட்டியலில், பாதுகாப்பு, இரயில்வேக்கள், தபால் மற்றும் தந்தி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 97 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 
மாநிலப் பட்டியலில், பொதுச் சுகாதாரம், காவல் போன்ற உள்ளூர் நலன் சார்ந்த 66 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 
மின்சாரம், தொழிற்சங்கம், பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல் போன்ற 47 அம்சங்கள், மத்திய மற்றும் மாநிலம் ஆகிய இருதரப்புக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வகையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இன்றைய சூழலில், மாநிலங்களின் நலன்களை விலையாகக் கொண்டு, மையத்திற்குச் சாதகமான விதத்தில், ஒரு சாய்வுப் போக்கு நிலவுகிறது.
மத்திய அரசுடன், மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் மாநிலங்கள் பணியாற்றியாக வேண்டும் எனும் கட்டாயம் நிலவுகின்றது. 
இந்திய அரசியல் சட்டம், தனது வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடனும், உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சித் தன்மையுடனுமே அமைந்திருக்கிறது.

வாசகம் 370:
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு நிலை வழங்கி இருந்தது. 
அதன்படி இந்திய அரசியலமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களும் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது.
இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு மட்டும் தான் தனியாக “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு” எனும் மாநில அரசியல் அமைப்பு இருந்தது.
இவ்வாசகம் அகற்றப்பட்டதால், இன்றைய நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பொருந்தும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தன்னாட்சி அமைப்புகள்:
வாசகம் 324: தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி அமைப்பாகும். eci.gov.in/
வாசகம் 280: நிதி ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். https://fincomindia.nic.in/ShowContentOne.aspx?id=3&Section=1
வாசகம் 315: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி அமைப்பாகும். https://www.upsc.gov.in/about-us/commission-
வாசகம் 148: இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரை, குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். https://cag.gov.in/
வாசகம் 338: தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்.
வாசகம் 338A: பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்.http://www.ncsc.nic.in/pages/display/12-whos-who
வாசகம் 76: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்றால், மக்களின்  சுதந்திரமும் பறிபோகும், எதேச்சதிகாரம் மட்டுமே மிஞ்சும் என்பது வரலாற்றுப்பாடம். 
அரசியலமைப்புச்சாரா அமைப்புகள்:
1. திட்டக்குழு
2. தேசிய வளர்ச்சிக் குழு
3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் https://hrcnet.nic.in/HRCNet/public/Home.aspx
4. மத்திய கண்காணிப்பு ஆணையம் http://portal.cvc.gov.in/cvproject/
5. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா http://lokpal.gov.in/ 
6. நிதி ஆயோக் https://niti.gov.in/

இறுதியாக, 2005 – ஆம் ஆண்டின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, மிகவும் முக்கியமான  சட்டமாகும். குடிமக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவது அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் - பொறுப்பேற்றுக் கொள்ளுதலையும் முன்னெடுத்துச் செல்வது,  ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் நமது ஜனநாயகத்தை, மக்களுக்காகப் பணி செய்வதை அதனுடைய உண்மையான அர்த்தத்தில் மேற்கொள்ளுமாறு செய்வது - ஆகியவையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.

பணியைச் சோதித்தறிவது, ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசோதிப்பது, அத்தகைய ஆவணங்களையும், பதிவேடுகளையும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளாகப் பெறுவது, அவற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பெறுவது, அவற்றிலிருந்து குறிப்புகள் எடுப்பது, மற்றும் பொது அதிகார அமைப்பு அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சான்றாதாரங்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுவது போன்ற இவையனைத்துமே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்குவனவாம். 

தகவல் அறியும் உரிமையை இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள உரிமைக்குச் சமமான விதத்தில் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.
ஒரு பொது அதிகார அமைப்பிடமிருந்து, ஏதேனும் ஒரு தகவல் கோருகிற ஒரு நபர், தனது விண்ணப்பத்துடன் ரூ.10 (ரூபாய் பத்து) மதிப்புள்ள இந்திய அஞ்சலக ஆணை அல்லது வங்கி காசோலை அல்லது வங்கி கேட்போலை – ஒன்றை, அப்போது அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கு வழங்கப்படும் வகையில், தகவல் கோருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகச் சேர்த்து அனுப்ப வேண்டும்.
சாதாரணமான நடைமுறைப்படி, பொது அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரருக்கு அவர் கோரும் தகவல் அளிக்கப்பட வேண்டும். அத்தகவல் ஒரு குறிப்பிட்ட நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில், 48 மணி நேர அவகாசத்திற்குள், அவ்வாறு கோரப்படும் தகவல் வழங்கப்பட்டுவிட வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் வடிவத்திலும், சாரத்திலும் மிகவும் உன்னதமான படைப்பாகும். கூடவே, தகவல் அறியும் உரிமைச் சட்டமும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மிகவும் உறுதுணையானதாகும்.
ஆனால், எந்த அழகிய வண்ணமாலையும், யார் கையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்தே, அது அணியப்படும் அல்லது குதறப்படும். 
ஊடகமும், நீதிமன்றங்களும் சுதந்திரம் இழந்து கையறுநிலையில் இருக்கும்போது, அரசியல் அமைப்புச் சட்டம் தவறான கைகளில் இருப்பின், அது, தொடர்ந்து அவ்வாறு இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது, மக்களின் கடமையாகும். 
மக்களே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறுதிக் காவலர்கள். 

மேலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரம், இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ஐ அடிப்படையாய் கொண்டதாகும். முதலில், அது ஆங்கிலேயரின் நலன்களையும், பின்பு, மேலாதிக்கத்தினரின் உள்நோக்கங்களையும் கொண்டதாக இருந்தது. என்னதான், அம்பேத்கரோ பிறரோ திருத்த முயன்றாலும், சில நுணுக்கமான எதிர்மறை அம்சங்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், கண்களுக்குப் புலனாகாமல் மறைந்துள்ளன. ஆழமாய் ஆய்ந்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியது, எதிர்கால சந்ததியின் கடமையாகும். அதற்கான ஆய்வுகளைத் தொடரவேண்டியது இளைய சமுதாயத்தின் உடனடி பணியாகும்.