Saturday, January 25, 2020

கற்குவேல் அய்யனார் கோயில்

கற்குவேல் அய்யனார் கோயில்


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


திருச்செந்தூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது குதிரைமொழி கிராமம். இது ஒரு தேரி குடியிருப்பு.  தேரி என்றால் செம்மண்.  குமரிமுனையிலிருந்து தொடங்கி நாங்குநேரி, சாயர்புரம் வரை தேரி விரிந்து கிடக்கிறது. ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவர் இங்கு கிடைத்த புதிய கற்கால கருவிகளை ஆராய்ந்து இவை 10,000 ஆண்டிற்கு முற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல் தேரி மண்ணை எடுத்து வியன்னா ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து இம்மண்ணை போன்று வேறு எங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார் மானாடு என்பது  மானவீரவளநாடு  என்றும் அழைக்கப்பெற்றது. இங்கு கி.பி. 1639 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.  இப்பகுதியை ஆண்ட 10 நாடார் குறுநில மன்னர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் உள்ளது. இக்கல்வெட்டில் இந்த ஐயனார் கருக்கு வேலையன் என்று குறிக்கப்படுகிறார். கி.பி. 1703 இல் செம்பால் செய்த நகரா ஒன்று தானமாக அளிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

மூலவர்:
கற்குவேல் அய்யனார்; மகாமண்டபத்தில் விநாயகர், லாட சன்னியாசி போன்றோர் அமைக்கப்பட்டுள்ளனர்.



பரிவார தெய்வங்கள்:
பரிவார தெய்வங்களாக முன்னடியான், வன்னியராசர், பட்டவராயன், சுடலைமாடன், கருப்பசாமி, சின்னத்தம்பி, மாடசாமி, பொன் காத்த அய்யனார், பெரியாண்டவர், இருளப்பர், பிண மாலை சூடும் பெருமாள் செருக்கன், துப்பாக்கி மாடசாமி, எமதர்மர், புலமாடி அம்மன், புலமாடன் சாமி போன்றவர்கள் உள்ளனர் .



பெண் தெய்வங்கள்:
பேச்சி அம்மன், பிடிமண் அம்மன், பத்திரகாளி, பிரம்மசக்தி, இசக்கி அம்மன் மற்றும் சப்தகன்னியர்கள் பெண் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள்.



திருவிழா:
கள்ளர் வெட்டு திருவிழா; இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வில்லுப்பாட்டு இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியர், மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm



No comments:

Post a Comment