Saturday, January 11, 2020

தென்கொங்கு நாட்டின் தொல்லியல் எச்சங்களைக் காண ஒரு மரபு நடைப்பயணம்



இல. அருட்செல்வம், எம். ஏ. எம். ஃபில்;
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்

          கல்வெட்டு எழுத்துகளின் காலங்களையும், வட்டெழுத்துக்களின் காலங்களையும் வெறுமனே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஏதோ புரியாத குறியீடு போலவே தோன்றலாம். ஆனால் அதற்குள் சென்று ஒவ்வொரு எழுத்திற்கும், அந்த எழுத்திற்குள் இருக்கும் தொடக்கத்தையும் முடிவையும் இன்றைய எழுத்தோடு இணைத்துப் பார்த்தால் நம் தமிழர்கள், மூதாதையர், அல்லது முன்னோர் எவ்வளவு அறிவுள்ளவர்கள் என்பதைத் தெளிவாக   உணரமுடியும்.

          மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புக்கும்  எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். ஏனெனில் இந்த சமூக அமைப்பானது, ஒவ்வொரு நிலையிலும், சூழலுக்கேற்றவாறு தகவமைத்துக்கொண்டு  பாளையங்கோட்டை கல்லூரியிலும்,  சென்னையிலும், என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தமிழ் மரபு அறக்கட்டளை தம் தொல்லியல் பணிகளைச் செவ்வனே செய்து வருவது பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் அதில்  பங்கேற்று ஒத்துழைக்கும் வகையிலும், கல்வெட்டுகளையும், வட்டெழுத்துக்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  2019 ஆம் ஆண்டின்  இறுதி நாட்களில்  தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தொடக்கமான வட்டெழுத்து, கல்வெட்டுப் பயிற்சி மதுரைப் பயிற்சிப்பட்டறையில்  உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கலந்து கொண்டோம்.  பயிற்சி பெற்று களப்பயணமும் சென்றோம்.

          அதன் தொடர்ச்சியாக,  கோவை பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின்  பொறுப்பாளர் கெழுதகை நண்பர் திரு. மணிவண்ணன் அவர்களின் சீரிய முயற்சியில் தென்கொங்கு நாட்டில் தொல்லியல் எச்சங்கள் எனும் மரபு நடைப்பயணம் எதிர்காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் நடத்துவதற்கு முனைவர் சுபாவின் வழிகாட்டுதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக  கோயிற்கலை சமூக ஆய்வாளரின் உடுமலை சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.  வெறுமனே சுற்றுப்பயணமாக இல்லாமல் ஒரு கருத்தரங்குடன் மரபு நடைப் பயணம் திட்டமிடப்பட்டது. அதுவும் உடுமலையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஜி.வி.ஜி. கல்லூரியில் வரலாற்றுத்துறைக் கருத்தரங்கில் முனைவர் சசிகலா பேசினால் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால்,   உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையின் தலைவர் திரு.தி. குமாரராஜா அவர்களின் ஆதரவுடன்,  கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று கருத்தரங்கும் நடைபெற்றது. வரலாற்றுத்துறையின் தலைவர் முனைவர் வி.கே.சரஸ்வதி, மற்றும் முனைவர் செண்பகவள்ளி ஆகியோரையும் நேரில் சந்தித்தும்  கருத்தரங்கு குறித்துப் பேசி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

          இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை  கொங்குப் பகுதி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னின்று  அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கினார். திட்டமிட்டவாறே  ஜனவரி  3ஆம் நாள் ஜி.வி.ஜி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கலைச்செல்வி தலைமையில்  கருத்தரங்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு  துறைத்தலைவர் வி.கே.சரஸ்வதி வரவேற்புரை பேசி தொடங்கி வைத்தார். நிகழ்வில்  முனைவர் கோ.சசிகலா  பவர் பாயிண்ட் எனும் படக்காட்சிகளுடன்  சுமார் இரண்டு மணி நேரம் கொங்கு நாடு சார்ந்தும், கல்வெட்டு சார்ந்து வகுப்பு எடுத்தார்.  கல்லூரி மாணாக்கர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்டறிந்தனர். நிகழ்வின் விளைவாக மறுநாள்  4 ஆம் தேதி  உடுமலையில் மரபு நடைப்பயணம் செல்ல உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, நிகழ்வில் மணிவண்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டது. உடனடியாக வரலாற்றுத் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் இசைவு தெரிவித்து  முனைவர்  ராஜலட்சுமியுடன் ஆய்வு மாணவிகள் ஐவரையும் உடன் அனுப்பி வைக்க இசைவு தெரிவித்தனர். 



          மறுநாள்  சனிக்கிழமை காலை  9 மணிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில்  தொடங்கிய மரபு நடைப்பயணம்,  முதலில்  நிலக்கொடை வழங்கிய  குடிமங்கலத்தில் தொடங்கியது.  குடிமங்கலக் கல்வெட்டு 67 வரிகள் கொண்டதையும் நிலம் அளந்து கொடுத்த வாமண அவதாரத்தோடு இருக்கும்  கல்வெட்டினைப் படித்துக்காட்டி விளக்கிப்பேசினார்.




          அடுத்து சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோயிலையும், அதன் அருகே உள்ள அமரபுயங்க புரத்து ஈசன் கோயிலையும், மேலும் அதனருகே கட்டப்படும் பெருமாள் கோயிலையும் இணைத்துப்பேசினார். இந்த சோமவாரப்பட்டி எனும் அமரபுயங்க புரம் சங்க காலத்தைச் சேர்ந்தது. எனவும், கொங்கு நாட்டுப் பெருவழிகளில் முகாமையானது  என்பதையும், மூவர் கண்டியம்மன் கோயிலின் அமைப்பையும், அதிலிருக்கும் தீபத்தூண் எனும் கம்பத்தையும் அதிலுள்ள முதலை, மீன், யானை புடைப்புச் சிற்பங்களையும் படமெடுத்துக்கொண்டு ஆய்வு செய்தார். அந்த இடத்தைப் பார்த்ததுமே இந்த கோயிலுக்கு அருகில்  பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் இருக்கும் என்றும் சொன்னார். மேலும் இந்த கோயில்களுக்குத் தெற்குப் பகுதியிலேயே ஊரின் வளர்ச்சியும் அமைந்திருக்கும் என்றும் சரியாகச் சொன்னார்.



          அடுத்து மசராயப்பெருமாள் கோயில்  பார்த்து, அந்த காலகட்டத்தையும் பார்த்து கன்னிமார் கோயில், ராயருடன் பொருந்தி வரும் நாயக்கர் கால வரலாற்று நிகழ்வுகளையும் பொருத்திப் பேசினார். இவருடன் முனைவர் ஜெயசிங் இந்தப் பகுதியின் சிறப்புகளையே எடுத்துரைத்தார். அடுத்து  பதினைந்து அடிக்கும் உயரமாக உள்ள  சங்ககாலம் அல்லது பெருங்கற்காலத்தில் இருப்பதாகச் சொல்லக்கூடிய நெடுங்கல்லைப் பார்வையிட்டோம். இந்த உடுமலைப்பேட்டை பகுதியில்  மிகப்பழைமையான நெடுங்கல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இது ஒன்று மட்டுமே. இது போல்  நெடுங்கற்கள் கோட்டமங்கலம் பகுதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு நேரமின்மையால்  செல்ல இயலவில்லை. இருப்பினும் கோட்டமங்கலத்தில் இருக்கும் வீரகம்பம்,  வல்லக்கொண்டம்மன் கோயிலையும் பார்வையிட உடன் வந்த ஆய்வாளர்களும், மாணவிகளும்   மயக்க நிலைக்குச் செல்லவே அங்கேயே மதிய உணவு முடிக்க, மணி 2:30 ஆகிவிட்டது.

          அடுத்து  ஓய்வு இல்லாமல் உடனடியாக மதகடிப்புதூர் கிளம்பினோம். உடுமலை ஜக்கம்பாளையம் வழியாக  எலையமுத்தூர், கல்லாபுரம் வழியாகச் செல்ல மணி 4.மணி ஆகிவிட்டது.  மலையேற்றம் செல்ல உடன் வந்த  பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் நின்று நின்று  பாறை ஓவியம் இருக்கும் பகுதிக்கு  மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வமாக வந்து சேர்ந்துவிட, அதே இடத்தில் முனைவர் சசிகலா வகுப்பு எடுத்தார். அவ்விடத்திலேயே உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வ நடுவத்தின் சார்பில்  வெளியிடப்பெற்ற பாறை ஓவியங்கள் குறித்த குறுநூலை ஆய்வு மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும்,  வழக்குரைஞர் பழ.முருகேசனுக்கும்.  உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  உடுமலை வி.கே.சிவகுமார், உடுமலை அருட்செல்வன், கண்டிமுத்து ஆகியோர் வழங்கினர்.

          அவ்விடத்திலிருந்து சற்று இறங்கி வந்து  மீண்டும் மேற்குத்தொடர்ச்சிமலைகளுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு நேரம் போதாமையால் அடுத்த மரபு நடையில்  மீண்டும் தொடரும்  பிரிய மனமில்லாமல்  வருத்தத்துடன் பிரிய நேரிட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும், உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையினருக்கும்  ஜி.வி.ஜி. கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்தனர்.





1 comment:

  1. அருமை அய்யா என்னை இணைத்து கொள்ள அனுமதி கிடைக்குமா? சிலம்பம் சிவ. பழனிசாமி பள்ளபாளையம்

    ReplyDelete