முருங்கை
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தாவரவியல் பெயர் - மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera)
குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae)
இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத் தாவரம் ஆகும். இம்மரமானது சுமார் 12 மீட்டர் உயரம் வரை விரைவில் வளரக் கூடியதாகும்.
முருங்கை பெயர்க் காரணம்:
முறி என்பது ஒடிதல், உடைதல் முறிப்பது எளிதில் உடையக் கூடியதாக இம்மரம் இருப்பதால் முருங்கை எனப் பெயர் வந்ததாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.இம்மரமானது எளிதில் முறியக் காரணம் இம்மரத்தில் நார் திசுக்கள் காணப்படுவதில்லை. இம்மரத்தின் பூர்வீகம் இந்தியா, இமயமலை அடிவாரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முருங்கை மரமானது 2000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் கூட வளரக்கூடியது. இம்மரத்திற்குக் குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இவை விதை மற்றும் குச்சியை ஊன்றி வைப்பதன் மூலம் வளர்கிறது.
வேறு பெயர்கள்:
முருங்கை (தமிழ்) , நுக்கே (கன்னடம்), முனகா (தெலுங்கு), முரிங்கா (மலையாளம்).
முருங்கை மரத்தில் உள்ள வேதிப்பொருள்கள்:
பீனாலிக் அமிலங்கள், பிளேவனாய்டுகள், குளுக்கோசினோலேட், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A,B,C,D,E , கரோட்டினாய்டுகள், ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து கொண்டுள்ளது.
குறிப்பாக பென்சைல் குளுக்கோசினோலேட் அதிக அளவில் வேரிலும், குளுக்கோ மோரிஜினின் அதிக அளவு தண்டு, பூ மற்றும் விதையில் காணப்படுகிறது. டேனின் என்ற வேதிப்பொருள் அதிக அளவு முருங்கை மரத்தின் இலையில் காணப்படுகிறது. விந்தணு வளர்ச்சிக்கு உதவும் ஜிங்க் ஆனது 31 மில்லிகிராம் வரை இருக்கிறது. குளுக்கோசினோலேட், ஐசோ தாயோ சயனேட் , கிளைசிரால்_1-9- ஆக்டடிகனோஏட் போன்ற புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்களும் முருங்கையில் நிறைந்து காணப்படுகின்றன.
சத்துக்கள்:
ஆரஞ்சில் இருப்பதைவிட ஏழு மடங்கு அதிக அளவு விட்டமின் C யும், கேரட்டில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிக அளவு விட்டமின் A யும், பாலில் இருப்பதை விட 17 மடங்கு கால்சியமும், தயிரில் இருப்பதை விட 9 மடங்கு புரதமும், வாழைப்பழத்தில் இருப்பதை விட 15 மடங்கு பொட்டாசியமும், ஸ்பினாச்சில் இருப்பதை விட 25 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கையில் உள்ளது. மேலும்; ஒரு தேக்கரண்டி அளவுள்ள முருங்கை இலை பொடியில் 14 சதவீதம் புரதம், 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்பு மற்றும் சிறிதளவு விட்டமின் A உள்ளது.
முருங்கையைப் பற்றிய பழமொழிகள்:
1. வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி.
2. பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்
3. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
இலக்கியத்தில் முருங்கை:
அகநானூற்றில் முருங்கை பற்றிய குறிப்பு வருகிறது.
"சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப"
- மாமூலனார், அகநானூறு.
பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில், முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெள்ளைப் பூக்களைச் சுழற்றியடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது.
"நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை"
- சீத்தலைச்சாத்தனார்
முருங்கை பூக்கள் கடும் காற்றில் அடித்து கடலலையின் நீர்த்துளிகள் சிதறுவது போல உதிர்வதாக என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழைத்துளி போலப் பூக்கள் உதிரும் எனவும், நீரில்லா வறண்ட நிலத்தில் உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்கும் எனவும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்களில் முருங்கை மரம் குறிக்கப்படுவதால் பாலை நிலத்திற்குரிய மரம் என்பது தெரிய வருகிறது. மேலும், முருங்கை பாலை நிலத்து மரம் என்பதைக் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலின் மூலமும் அறிய முடிகிறது.
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நண்ணியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்கி வீயும் இடம்.
- திணைமாலை - 91
மருத்துவப் பயன்கள்:
இம்மரத்தின் பூ, விதை, வேர், இலை, பட்டை, தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்ட முருங்கையின் மருத்துவப் பயன்களில் சில:
1. இலையில் இருக்கும் பிளேவனாய்டுகள் டைப் 1 டைப் 2 சர்க்கரை நோயைச் சரி செய்வதற்கும் ஆஸ்துமா, மலேரியா, ரத்தக்கொதிப்பைச் சரி செய்யவும், ஐசோதயோ சயனேட் , குவார்செட்டின் என்ற வேதியியல் பொருள் புற்றுநோயை எதிர்த்தும்
2. வேர், பட்டையில் இருக்கும் ஆல்கலாய்டுகள் மற்றும் மோரிஜினைன் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதயத்தை வலு சேர்ப்பதாகவும்
3. பூவில் இருக்கும் அமினோ அமிலங்கள் கொழுப்பைக் குறைக்கவும் சிறுநீரக பிரச்சனையைச் சரி செய்யவும்
4. விதையில் இருக்கும் பென் எண்ணை ஹைப்பர் தைராய்டு மற்றும் கவுட் நோயைச் சரி செய்யவும்
5. விதை நெற்றில் இருக்கும் நார்ச்சத்து, ஒலியிக் அமிலம் லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை கல்லீரல் மற்றும் மண்ணீரலை வலுப்படுத்தவும்
6. முருங்கையில் தனித்துவமிக்க வேதியியல் மூலக்கூறாக குளுக்கோசினோலேட் உள்ளது. இது ஐசோ தயோசயனேட் ஆக மாறி நரம்பு சம்பந்தமான குறைபாட்டினை தீர்க்கவும்
7. விதை நெற்றில் உள்ள நியசிமிசின் மற்றும் குளுக்கோமொரிஜின் என்ற வேதிப் பொருள் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக மருந்தாக்கவியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
8. விதையில் உள்ள 7 ,12 டைமீத்தைல் பென்ஸ் ஆந்ரசீன் சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கும்
9. இலையில் உள்ள பைட்டோ ஸ்டீரால் எனப்படும் ஸ்டிக்மா ஸ்டீரால், சிட்டோ ஸ்டிரால், கேப்ஸ்டீரால் போன்றவை பிரசவத்திற்கு பின்னான பால் சுரப்பை அதிகப்படுத்துவதாகவும்
10. விதையில் இருக்கும் ஈபாக்சைடு ஹைட்ரோலேஸ் என்சைம் ஆனது பாலுணர்வைத் தூண்டவும், ஆண்மை குறைபாட்டைச் சரி செய்வதற்காகவும் பயன்படுவதாக மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முருங்கையின் வேறு பயன்கள்:
சத்துப் பயிராகவும், இலை மற்றும் விதை விலங்கு தீவனமாகவும், மரப்பட்டையானது நீல நிறச் சாயம் தயாரிக்கவும், வேலியாகவும், உரமாகவும், எரிவாயுவாகவும் பயன்படுகிறது. விதையானது நீரினை சுத்தம் செய்வதற்காகவும், விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது உணவு மற்றும் கேச தயாரிப்பு பொருள்களில் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment