Monday, September 14, 2020

இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்!

 இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்! 

 - முனைவர் க.சுபாஷிணி


நூரம்பெர்க் நகரம் - இன்றைய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் தலைநகரமான மூனிக் நகருக்கு அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒரு நகரம் இது. இன்று ஜெர்மனியின் மிக முக்கிய தொழில் நிறுவனங்களான BMW, SIEMENS, PUMA, ADIDAS, AUDI மட்டுமன்றி Intel, Amazon, Microsoft போன்ற அனைத்துலக நிறுவனங்களும் மையம் கொண்டிருக்கும் ஒரு தொழில் நகரமாக அமைந்திருக்கிறது நூரம்பெர்க் நகரம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செக், சுலோவாக்கியா, புல்காரியா போன்ற நாடுகள் மட்டுமன்றி பண்டைய ஜெர்மனியின் பகுதியாக சில காலங்கள் விளங்கிய ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கும் அருகில் அமைந்த ஒரு நகரம் என்பதும் இதன் சிறப்புகளில் அடங்கும்.

அடோல்ஃப் ஹிட்லர் 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற காலகட்டம். மார்ச் 30ஆம் தேதி அப்போதைய ஜெர்மனியின் அதிபராகப் பதவி ஏற்றிருந்த பவுல் ஃபோன் ஹிண்டன்பெர்க் ஹிட்லரை சான்சலராக நியமித்தார். ஏற்கனவே பவேரியா மாநிலத்தில் 1923 நவம்பர் 8-9, ஹிட்லர் நிகழ்த்திய ஆட்சி கவிழ்ப்பு (The Beer Hall Putsch) நடவடிக்கையினாலும் அவரது படைப்பான Mein Kampf நூலும் அவரை அக்காலகட்டத்தில் மிக உயர்ந்த அதிகாரத்தையும் அசைக்க முடியாத சக்தி என்ற அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தன. 1933 மார்ச் மாதத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி அரசின் ஆட்சி வலுவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தங்கள் கட்சியை நிலைப்படுத்தவும், மேலும் மாபெரும் சக்தியாக விரிவாக்கவும் பல திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் தொடங்கியது ஹிட்லர் தலைமையிலான நாசி அரசு.

ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் இந்த நூரம்பெர்க் நகரம் நாசிகளால் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகராகக் காணப்பட்டது. இதற்குக் காரணமும் இருந்தது. இனவாத அரசியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாசிகளால், ஜெர்மானிய நகரங்களிலேயே பண்டைய ஜெர்மானிய இனக்குழு மக்கள் பெருமளவில் வாழ்கின்ற ஒரு நகரமாக, அதாவது ஜெர்மன் நகரங்களிலேயே மிகவும் ‘ஜெர்மன்` தன்மையுடன் உள்ள நகரமாக இந்த நகர் அவர்களால் அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக ஹிட்லருக்கு இந்தக் கருத்தாக்கம் இருந்தது. இதன் அடிப்படையில் நாசிகளின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெரும் நகரமாக பெர்லின் இருந்தது போலவே இந்த நகரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உருவாக்க ஹிட்லர் எண்ணினார். இந்தக் கருதுகோள் நாசிகளுக்குப் பிடித்திருந்ததால் நாசிக் கட்சியின் பேரணிகளை நடத்துவதற்கு உகந்த ஒரு நகரமாக இந்த நகரையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். 1933 முதல் 1938 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும் NSDAP (Nationalsozialistische Deutsche Arbeiterpartei -ஜெர்மன்; National Socialist German Workers' Party -ஆங்கிலம்) கட்சி தனது வருடாந்திர பேரணிகளை நூரம்பெர்க் நகரத்தில் நடத்தியது. இந்த ஒவ்வொரு கூட்டங்களிலும் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராணுவத்தினரின் பல்வேறு வகை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் வீர அணி வகுப்புகளும் இந்தப் பேரணிகளில் முக்கிய அங்கம் வகித்தன.

ஏழ்மை காலத்தில் ஓவியம் வரைந்து விற்ற ஹிட்லர்:
அடிப்படையில் ஹிட்லர் கலையார்வம் மிக்கவர். தனது இளமைக் காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக அவர் பயிற்சி மேற்கொள்ள விரும்பினார் என்பதும் ஏழ்மையில் வாடியபோது சாலைகளில் ஓவியங்கள் தீட்டி விற்பனை செய்தார் என்பதும், இன்றைய ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அவர் ஓவியப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதும், அவர் ஓவியப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்ட ஓவியங்கள் இன்றும் அந்த தேவாலயத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் வியன்னா செல்லும் சுற்றுப்பயணிகள் பார்க்கவேண்டிய ஹிட்லர் தொடர்பான சின்னங்களின் பட்டியலில் அச்சாலைகளும் ஒரு தேவாலயமும் பட்டியலில் இடம் பெறுகின்றன. ஓவியம் தீட்டுவதைப் போலவே கட்டடக் கலையையும் விரும்புபவராக இயல்பாகவே ஹிட்லர் இருந்தார் என்பதை அவரது ஆட்சிக் காலத்தில் அவர் திட்டமிட்டு உருவாக்கிய கட்டடங்கள் உறுதி செய்கின்றன.

1933ஆம் ஆண்டு அடோஃல்ப் ஹிட்லர் நூரம்பெர்க் நகரை நாசி கட்சியின் பேரணிகளின் நகரமாகப் பிரகடனப்படுத்தினார். நூரம்பெர்க்கில் நாசி கட்சியினர் பேரணிகள் நடத்தத் திட்டமிட்ட இடத்தை உருவாக்கும் பொறுப்பை ஹிட்லர் அவருக்கு மிகவும் பிடித்த கட்டடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் (Albert Speer) என்பவரிடம் ஒப்படைத்தார். மிகப்பெரிய ஒரு மைதானத்தில் இந்தக் கட்டடத்தை அமைக்கத் திட்டமிட்டனர். ஆல்பர்ட் ஸ்பியர் வடிவமைத்து உருவாக்கிய கட்டடங்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கட்டடம் என்று இன்றும் இது அறியப்படுகிறது. 450,000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் அரங்கம் போன்ற பாணியில் அமைக்கப்பட்ட அரங்க வடிவில் இது உருவாக்கப்பட்டது. நூரம்பெர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் பதினொரு சதுர கிலோமீட்டர் (4.25 சதுர மைல்) அளவில் கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கான தேவையை முன்வைத்து நினைவுச்சின்னங்கள் என்ற சிறப்பைப் பெறும் வகையில் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் பணிகள் 1945இல் நாசி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் நிறைவாக்கி முடிக்கப்படவில்லை. ஆயினும் கட்டப்பட்ட பகுதியில் பெரும்பாலானவை இன்றளவும் நாம் காணக்கூடிய வகையில் உள்ளன. இன்று இந்த அரங்கத்தின் முன் பகுதியில் தான் நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹிட்லரும் நாசி சிந்தனையாளர்களும் எந்த நோக்கத்தை முன் வைத்து இந்த மாபெரும் கட்டடத்தை உருவாக்கினார்களோ அதற்கு நேர் எதிர்மாறாக, இனவாத சிந்தனை எத்தகைய மனித குல அழிவை உருவாக்கும் என்பதற்குச் சாட்சியாக இந்தக் கட்டடம் இன்று காட்சியளிக்கிறது.

நூரம்பெர்க் நகரைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்த அமெரிக்கப் படை:
அமெரிக்கப் படைகள் நூரம்பெர்க் நகரை 1945ஆம் ஆண்டு 17-20 ஏப்ரல் வாக்கில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. ஏப்ரல் 20ஆம் தேதி (ஹிட்லரின் பிறந்த நாள்) அமெரிக்கப் படையின் மூன்றாம் அணி நகரை முற்றிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு ஹிட்லரையும் நாசி ஆட்சியையும் துதிபாடும் பெயர்களையும் பெயர்ப்பலகைகளையும் அதிரடியாக மாற்றினர். Adolf-Hitler-Straße என்ற சாலையின் பெயரை மாற்றி President Roosevelt பெயரைச் சூட்டினர்.

நாசி ஆட்சிகளின்போது அதிகாரிகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில் நட்பு நாடுகளின் விசாரணை நவம்பர் மாதம் 20ஆம் தேதி 1945ஆம் ஆண்டு தொடங்கியது. ஆட்சியிலிருந்த நாசி அரசின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் 24 பேர் இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டு, குறிப்பாகக் கொடூரமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அமைதிக்கு எதிரான செயல்பாடுகள் என்ற அடிப்படையில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைகள் 1946ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்து குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் தண்டனைகள் அவர்கள் குற்றத்துக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டன. இது மட்டுமன்றி மேலும் கூடுதலாக 12 விசாரணைகள் 1946 முதல் 1949 என்ற காலகட்டத்தில் நிகழ்ந்தன. இந்த விசாரணைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, இவை இன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அடிப்படை வரையறையை வழங்கிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

நூரம்பெர்க் நகரில் ஹிட்லர் அமைத்த Reichsparteitagsgelände என்ற இப்பகுதி இன்று நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகமாக, அதிலும் குறிப்பாக நாசி ஆட்சிக்கால குற்றவியல் சம்பவங்களின் அறிக்கைகள், ஆவணப் புகைப்படங்கள், வீடியோ காணொளிப் பதிவுகளின் தொகுப்புகள் உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கட்டடமாக விளங்குகிறது. இதற்கு ஏறக்குறைய பதினொரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நூரம்பெர்க் நீதிமன்றக் கட்டடத்தில்தான் நாசி அரசியல் குற்றவாளிகளுக்கு எதிரான நட்பு நாடுகளின் விசாரணை நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நட்பு நாட்டுக் கூட்டமைப்பினால் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் யூனியன்) அனைத்துலக சட்டம் மற்றும் போர் சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ராணுவ நீதி விசாரணைகள் 'நூரம்பெர்க் நீதி விசாரணைகள்' (Nuremberg trials) என அழைக்கப்படுபவை. இந்த நீதி விசாரணைகள் நாசி ஜெர்மனி அரசின் அரசியல், ராணுவ, நீதித் துறை மற்றும் பொருளாதாரத் தலைமையின் முக்கிய உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தன. முக்கியமாக ஹோலோகாஸ்ட் மற்றும் பிற போர்க்குற்றங்களைத் திட்டமிட்டு நிகழ்த்தியோருக்கு எதிராக இந்த வழக்குகள் பதியப்பட்டன. இந்த நீதிமன்றக் கட்டடம் 1909இல் இருந்து 1916 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது. நாசி கால ஆட்சியில் அரசியல் முக்கியஸ்தர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான வழக்கு இங்குள்ள மேற்தளத்தில் உள்ள அறை எண் 600இல் தான் நிகழ்ந்தன.

நீதிமன்ற அறை எண் 600 அறையில் நிகழ்ந்த அனைத்து விசாரணைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இப்பகுதி அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியகம் 1945 முதல் 1946 வரை நிகழ்த்தப்பட்ட விசாரணைகளின்போது உருவாக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது. இங்கு அனைத்து ஆவணங்களும் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. விசாரணை நடந்த காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவுகளும் ஒலிப் பதிவுகளும் இங்கே பொதுமக்கள் பார்த்தும் கேட்டும் அவற்றை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளன.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அனைத்துலக ராணுவ நீதிமன்றத்தின் நான்கு தலைமை வழக்குரைஞர்கள் சார்ந்த குழு 24 பேரை நாசி ஆட்சிக் காலத்தில் கொடூரமான குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளப்படுத்தி குற்றம் சுமத்தியது. இவர்கள் அனைவரும் நாசி அரசாங்கத்தின் மிகமுக்கிய உயர் பதவிகளை வகித்தவர்கள். இவர்களுள் Hermann Göring (ஹிட்லரின் முக்கிய அதிகாரி), Rudolf Hess (நாசி கட்சியின் துணைத் தலைவர் ), Joachim von Ribbentrop (வெளியுறவு அமைச்சர்), Wilhelm Keitel (ஆயுதப்படைத் தலைவர்), Wilhelm Frick (உள்துறை அமைச்சர்), Ernst Kaltenbrunner (பாதுகாப்புப் படைகளின் தலைவர்), Hans Frank (ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் கவர்னர் ஜெனரல்), Konstantin von Neurath (போஹேமியா மற்றும் மொராவியாவின் ஆளுநர்), Erich Raeder (கடற்படைத் தலைவர்), Karl Doenitz (ரீடருக்குப் பின் கடற்படைத் தலைமை பொறுப்பேற்றவர்), Alfred Jodl (ஆயுதப்படைத் தலைவர்), Alfred Rosenberg (ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதிகளுக்கான அமைச்சர்), Baldur von Schirach (இளம் ஹிட்லர் அமைப்பின் தலைவர்), Julius Streicher (Radical Nazi பதிப்பாளர்), Fritz Sauckel (தொழிலாளர் அமைப்பின் தலைவர்), Albert Speer (ஆயுதப்பகுதி அமைச்சர்), and Arthur Seyss-Inquart (ஆக்கிரமிக்கப்பட்ட நெதர்லாந்துக்கான ஆளுநர்). Martin Bormann (ஹிட்லரின் துணை- இவர் நேரில் இல்லாமலேயே இவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்தது) ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாவர்.

ஏறக்குறைய ஒரு வருடம் நடந்த இந்த விசாரணையின் தீர்வாக 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களைக் கொண்ட இந்த அனைத்துலக ராணுவ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; மேலும் நான்கு பேர் 10இல் இருந்து 20 வருட கால சிறைத் தண்டனை பெற்றனர்; நீதிமன்றம் மூன்று பேரை விடுவித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேருக்கும் அடுத்த 15 நாளில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு முடிவானது. ஆனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சிறையிலேயே குற்றப் பட்டியலில் முதலிடம் வகித்த கோரிங் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மார்ட்டின் போர்மான் ஹிட்லரின் மறைவுக்குப் பின்னர் தப்பித்துவிட்டார் என்பதனால் அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலேயே அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. இவரையும் தற்கொலை செய்து கொண்ட கோரிங்கையும் தவிர்த்து ஏனையோருக்குக் குறிப்பிட்ட அதே நாளில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்ட குற்றவாளிகள் பெர்லின் நகரில் உள்ள ஸ்பாண்டாவ் சிறைச்சாலையில் தங்கள் தண்டனை காலத்தைக் கழித்தனர்.

தண்டனை பெறுவதற்கு முன்னரே தப்பித்துச் சென்ற மார்ட்டின் போர்மான் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றார் என்றும், மே மாதம் 2ஆம் தேதி சோவியத் படைகளினால் அவர் பிடிக்கப்பட்டார் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் கூட சில செய்திகள் கூறுகின்றன. சோவியத் படைகளினால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு மே மாதம் 8ஆம் தேதி அவர் புதைக்கப்பட்டார் என்றும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1973 வரை அவரது உடல் கிடைக்கவில்லை என்பதும், ஆனால் 1998ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் அவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையது தான் என்றும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் அவர் தப்பித்து விட்டார் என்றும் இன்றுவரை எவ்வாறு செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றனவோ அதேபோல மார்ட்டின் போர்மானும் தப்பித்திருக்கலாம் என்றும் உறுதிப்படாத செய்திகள் உலவத்தான் செய்கின்றன.

நூரன்பெர்க் விசாரணை (Nuremberg Trial) இந்த நகரத்தின் வரலாற்று நிகழ்வு. இது நிகழ்ந்த அறை எண் 600 (Room No. 600) நாசி கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தி நாசி ஆட்சிக் காலத்தைக் காட்டும் பெரும் காட்சிக்கூடமாகவும் அதன் பின்னர் நாசி ஆட்சி வீழ்த்தப்பட்டு நட்பு நாடுகள் ஜெர்மனியைக் கூறு போட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டு ‘நாட்டாமை’ செய்த காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், காகித ஆவணங்கள், அன்றைய வழக்கிலிருந்த ஒலி நாடாக்கள், சிறு காணொலிகள் என ஆவணப் பாதுகாப்பகம் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

ஹிட்லர் கட்டமைமைத்த நாசி ஆரியச் சிந்தனை ‘ஆரிய இனம் மனிதக் குலத்தில் உயர்ந்த இனம்’ என்ற இனத் தூய்மைவாத சிந்தனையின் அடிப்படையைக் கொண்டது. நாசி சித்தாந்தங்களின் அடிப்படையில் இனக்கலப்பற்ற தூய ஆரிய இனமாக நோர்டிக் ஜெர்மானியர்கள், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்கேண்டிநேவியா (நோர்வே, டென்மார்க், சுவீடன்) ஆகியோர் கருதப்பட்டனர். நாசிகள் எல்லா ஜெர்மானியர்களையும் ஆரியர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெர்மானியர்களில் நோர்டிக் வகையினர் (சராசரி 175 செமீ உயரம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, மெலிந்த உடல், வெளுத்த உடல், பருத்த கன்னங்கள் போன்ற அங்க அடையாளங்கள்) மட்டுமே இவர்களால் தூய ஆரிய இனமாக அடையாளம் காணப்பட்டனர். நாசிக்களின் இனத்தூய்மைவாத கருத்தாக்கங்களை விரிவு படுத்தும் வகையில் தீவிர பிரச்சாரங்களை நாசி அரசு கருவியாகப் பயன்படுத்தியது. வெறுப்பு இனவாத கருத்தாக்கங்களே இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. தூய ஆரிய இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம் என்ற வகையிலான தீவிரப் பிரச்சாரங்களை நாசி அரசு முன்னெடுத்தது. தூய ஆரிய இனத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இளம் ஹிட்லர் (Hitler Youth) என்ற அமைப்பினை நாசிக்கள் 1922ஆம் ஆண்டே தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது இனத்துக்காகப் போராடும் பலம் பொருந்திய இளைஞர்களை அதாவது 'ஆரிய சூப்பர்மேன்களை' (Aryan Superman) உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்குப் பயிற்சிகள் அளித்தனர்.

இத்தகைய இனத்தூய்மைவாத சிந்தனை அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் மனிதாபிமானமற்ற இயந்திரங்களாகச் செயல்பட்டதினால் ஏற்பட்ட இழப்பு மிகப் பெரிது. ஹோலோகோஸ்ட் பற்றியும் கொடூரமாகக் கொல்லப்பட்ட யூதர்கள், போலந்து மக்கள், லித்துவானிய மக்களைப் பற்றி அதிகம் பேசும் ஊடகங்கள் கூட உளவியல் ரீதியாக இனப்பிரிவினைவாத சிந்தனையை உள்வாங்கிய மக்கள் ஏனைய இனத்தின் மீது செய்த கொடுரங்களைப் போலவே தமது இனத்திற்குள்ளும் இழைத்த உளவியல் தாக்குதல்களைப் பற்றி அதிகம் பேசவில்லை. இது ஒருபுறமிருக்க, 1945க்குப் பிறகு நட்பு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜெர்மனியின் நிலை பற்றி உலக நாடுகள் அதிகம் பேசுவதில்லை. மாறாக நாசி ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளே வெளி உலகில் அதிகம் அறியப்பட்ட செய்தியாக அமைகின்றன.

கடந்த 40 ஆண்டுக் கால ஜெர்மனி என்பது ஜெர்மனி எடுத்துக் கொண்டு புதிய பரிணாமம். தொழில் காரணமாக அதிகமான அயலக மக்களின் வருகை, அகதிகளாக இலங்கை உட்படப் பல நாடுகளிலிருந்து போரினால் பாதிக்கப்பட்டோரை அனுமதிக்கும் போக்கு, மிகத்திறந்த மனதுடன் இனப்பாகுபாடின்றி மனித உரிமையைப் பேணும் போக்கு, உலக அரங்கில் மனித உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கும் போக்கு, மிக விரிவான கலப்புமணம் என இன்று உலக அரங்கில் பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உயர்ந்த நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்கும் சாத்தியத்தை ஜெர்மனிக்கு வழங்கியிருக்கிறது.

இனவாதம், இனத்தூய்மைவாதம் ஆகிய கோட்பாடுகள் மனிதகுல வரலாற்றில் இடம்பெற பொறுத்தமற்றவை ; மனிதகுல மாண்புக்கு எதிரானவை என்பதை உணர்ந்த சமூகமாக இன்று ஜெர்மனி திகழ்கிறது. அந்தத் திறந்த மனதின் வெளிப்பாடுகளாகத்தான் நாசி ஆட்சிக் காலத்தில் தங்கள் ஜெர்மானிய இன மக்கள் வேற்று இனத்தோருக்கு இழைத்த கொடுமைகளை வெளிப்படையாக, எந்த ஒளிவு மறைவும் இன்றி உலகுக்கு உண்மை வரலாற்றை வழங்கும் நோக்கத்துடன் டாஹாவ், அவ்ஷ்னிட்ஸ் வதைமுகாம்களையும் நூரம்பெர்க் நீதிமன்றம், நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகம், செக் போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், யூத அருங்காட்சியகம் என உண்மை தகவல்களைப் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தியுள்ளது.

பொதுவாக தங்கள் சுயபெருமைகளைத் தண்டோரா போட்டு அறிவிக்கும் சிந்தனைகளுக்கு இடையே, தங்கள் குற்றச்செயல்களை வெளிப்படையாகப் பேசி மனித உரிமைக்கும், மனித நேயத்துக்கும், இனப்பிரிவினைவாதக் கோட்பாடு ஏற்படுத்தக் கூடிய அழிவுகளை அறிந்துகொண்டு அத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட சித்தாந்தங்களிலிருந்து மீண்டு, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க எடுக்கும் முயற்சியாகவே இந்த வரலாற்றுக் கூடங்கள் திகழ்கின்றன. இன அடையாளப்படுத்துதல், இனப்பிரிவினைவாதச் சிந்தனை, இனத்தூய்மை வாதச்சிந்தனை ஆகியவை மனிதகுல மேன்மைக்கு எந்த நன்மையையும் இதுகாறும் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை. வரலாறு நமக்கு இதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


நன்றி: மின்னம்பலம்  

No comments:

Post a Comment