Showing posts with label முனைவர் க.சுபாஷிணி. Show all posts
Showing posts with label முனைவர் க.சுபாஷிணி. Show all posts

Sunday, June 5, 2022

உரோமை தமிழ்ச் சங்க தமிழ்க் கூடல் நிகழ்வு

 இத்தாலி நாட்டின் தலைநகரான வரலாற்றுச் சிறப்புமிக்க உர்பானோ கல்லூரியில்  பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க உரோமை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 5, 2022 அன்று மாலையில் மேதகு கர்தினால்  லூர்துசாமி நாளை முன்னிட்டு ஒரு தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. 


இந்நிகழ்வில் ஐரோப்பியத் தமிழியல், ஐரோப்பியரின் தமிழ் இலக்கிய இலக்கண செயல்பாடுகள், அதனடிப்படையில் உருவான ஆவணங்கள் என்பன பற்றி உரையாற்றினேன். உரோமை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ஜான் போஸ்கோ அவர்களுடன் திரு கௌதம சன்னா, அருட்தந்தை லார்ட் வின்னர் ஆகியோர் உரைகளும் இடம் பெற்றன.



அருட்பணியில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளும் இணைந்தன. சீரிய முறையில் பணியாற்றும் உரோமை தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


    முனைவர்.க.சுபாஷிணி

தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


Wednesday, June 1, 2022

திரு. ஹேமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி





தனது சுய முயற்சியின் காரணத்தினாலும் வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் ஒரு தனி மனிதர் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என சாதித்துக் காட்டியவர் சென்னை விருகம்பாக்கத்தில் கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய திரு. ஹேமச்சந்திரன் அவர்கள். அவர் இன்று காலமானார் என்ற அதிர்ச்சியான செய்தி கிட்டியது. அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அஞ்சலிகள்.

வரலாற்று அறிஞர் கடலோடி நரசையா தான் எனக்கு இவரை முதலில் அறிமுகப்படுத்தியவர்;  சென்னையில் விருகம்பாக்கத்தில் இருக்கின்ற கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கி  இந்த அருங்காட்சியகத்தைச்   செயல்படுத்தி வந்தார் திரு. ஹேமச்சந்திரன் அவர்கள்.    அவரது அருங்காட்சியகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரோடு நந்தனம் உட்பட  3 கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு வரலாற்றுச் சுற்றுலாவை முன்னர் ஏற்பாடு செய்திருந்தோம்.   இந்த நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக அருங்காட்சியகங்களின் ஆணையர் டாக்டர்.சண்முகம் இஆப (தற்போது முதலமைச்சரின் தனிச் செயலர்களில் ஒருவர்) நேரில் வந்திருந்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.


தான் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மிகத்தீவிரமாக கவனத்துடன் பக்கிங்ஹாம் கால்வாய், கலங்கரை விளக்கங்கள், தமிழக கடற்கரையோர எச்சங்கள், பல்வேறு வகை ஆவணங்கள் எனத் தனது சொந்த சேகரிப்பாக ஒரு அருங்காட்சியகத்தை தானே உருவாக்கியவர்.

அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள் வரலாற்று மாணவர்களுக்கும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் நிச்சயமாக பயன் அளிக்கக்கூடியவை.

இவரது பணிகளைப் பாராட்டி தமிழக அரசின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை அவரது சேகரிப்புக்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கின்றோம்

அருங்காட்சியக முகவரி:
THE MARITIME HERITAGE MUSEUM,  NO 8, ELANGO NAGAR ANNEXE, VIRUGAMBAKKAM, CHENNAI 600092.

-முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

அச்சுப் புரட்சியும் உலகளாவிய பதிப்பு முயற்சிகளும்



   —   முனைவர் க. சுபாஷிணி 


குட்டன்பெர்க் என்ற பெயர் பதிப்பகம் அல்லது ஆய்வுலகம் மட்டுமன்றி அச்சு நூல்களைக் கையில் எடுத்து அதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பெயர். யோகானஸ் குட்டன்பெர்க் (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg) என உலகளாவிய அளவில் அச்சுப் புரட்சியின் தந்தை என அறியப்படுகின்ற  குட்டன்பெர்க் அவர்களது பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகம் ஜெர்மனியின் மைன்ஸ் நகரில் அமைந்திருக்கின்றது.  



இவர் பிறந்த தேதி சரியாக அறியப்படவில்லை என்றாலும் 1400 ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தவர் என்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 3 பெப்ரவரி 1468 அன்று அதாவது, தனது அறுபத்து எட்டாவது வயதில் அவர் மறைந்தார். தனது வாழ்நாளில் ஒரு கண்டுபிடிப்பாளராக, ஒரு பொறியியலாளராக, அச்சுப் பணியாளராக, பதிப்பாளராக, தச்சராக எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் இவர். இவரது அச்சுயந்திரக் கண்டுபிடிப்பு  ஐரோப்பாவுக்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அது உலகம் முழுவதும் பரந்து விரிந்து உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக் காரணமாகியது.

இவரது அச்சு இயந்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இத்தாலியின் ரோம் நகரத்தில் மையம் கொண்டிருந்த வாட்டிகன் அரசை எட்டியது. ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பைபிள் அச்சாக்கம் செய்யப்பட்டு அவை உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கத்தோலிக்க அரசுக்கு தோன்றியது. இதன் காரணமாக அச்சு இயந்திரங்கள் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டு கப்பலில் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட வரலாற்று நிகழ்வும் நிகழ்ந்தது.




இதன் தொடர்ச்சியில் இந்தோனேசியாவிற்குச் செல்வதற்காக வந்த ஒரு கப்பல் கேரளாவின் கொச்சின் பகுதியில் நிறுத்தப்படவே அங்கிருந்த பாதிரிமார்கள் அந்த அச்சுயந்திரம் தங்களது தமிழ் நிலத்து சமயப் பணிகளுக்குத் தேவை என்ற காரணத்தினால் அதனைக் கேட்டுப் பெற்று தமிழின் முதல் அச்சு நூலை உருவாக்கினர். அதற்கு முன்பே 'கார்டிலா' என்ற ஒரு நூல் ரோமானிய தமிழ் உச்சரிப்புடன் என்ற வகையில் வாட்டிகனில் அச்சிடப்பட்டது.  'தம்பிரான் வணக்கம்' என்ற நூலே தமிழில் வெளியான முதல் அச்சு நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இது நடந்த காலம் கி.பி 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டமாகும்.

யோகானஸ் குட்டன்பெர்க்  தொழில் ரீதியாக அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்றபோதிலும் அவரது செயற்பாடு மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டது என்பதை மறுக்க இயலாது. ஆய்வுலகம் இதனை Gutenberg Revolution என்று சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது. இதற்குக் காரணம் நூல் வாசிப்பு என்பது ஐரோப்பாவைப் பொறுத்தவரை தேவாலயங்களிலும் அரசவை மற்றும் அரசு சார் அமைப்பிலும் மட்டுமே என்ற நிலை மாறி எல்லாத் தரப்பு மக்களும் தாள்களில் அச்சு நூல் வடிவில் கொண்டுவரப்பட்ட எழுத்துப் படிமங்களை வாசிக்கக்கூடிய வாய்ப்பை அது உருவாக்கியது எனலாம்.



இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், மிகக் குறைந்த அளவில், சமூகத்தில் உயர் சாதி என அறியப்பட்டோரும் அரசுகளில் மட்டுமே என்ற வகையில் ஓலைச்சுவடிகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதும், அதனை மறுபதிப்பு செய்வதும், அதனை எழுத்தாணியால் கீறி எழுதி தயாரிப்பதும் சுலபமான காரியமாக இல்லை. இதுவும் ஒருவகையில் சுவடிகள் எல்லோரையும் சென்றடைவதற்குத் தடையாக அமைந்தது எனலாம். இந்தச் சூழலில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் நூல்களை இயந்திரத்தின் வழியாக பல பிரதிகளை அச்சாக்கம் செய்யும் முயற்சி நடைமுறைக்கு வந்தபிறகு பொதுமக்களும் நூல்களை வாங்கி அல்லது நூலகங்களிலிருந்து பெற்று வாசிக்கக் கூடிய வாய்ப்பு என்பது பரவலாக்கம் கண்டது.


தனது அச்சு இயந்திரம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை உட்புகுத்தி இன்று நாம் காணும் பேரளவிலான  நிலையை அடைவதைக் காண  இன்று குட்டன்பெர்க் நம்மோடு இல்லை.  ஆனால் அவர் லத்தீன் மொழியில் அச்சாக்கம் செய்து உருவாக்கிய 200 பைபிள் நூல்கள் அவர் காலத்தில் அவர் சாதித்தது பெரிய  சாதனை எனலாம். அன்று 200 பைபிள் நூல்களை அவர் அச்சுப் பதிப்பாக்கம் செய்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின.

நூல்களை அச்சாக்கம் செய்து முடித்த பின்னரும் கூட அவை மக்களை சென்றடைய சரியான திட்டமிடல் அல்லது முன்னெடுப்பு என்பது அன்று சரியாக இயங்கவில்லை.  அந்த சமயத்தில் கத்தோலிக்க சமய அமைப்பு அச்சு ஊடகத்தின் வழியே மக்களைச் சென்றடைய முடியும் என்ற எண்ணத்தை உறுதியாக நம்பியதால் பெருமளவில் பதிப்புகளைத்  தயாரித்து வினியோகிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு அடுத்த நூற்றாண்டு ஜெர்மனியில் தோன்றி பின்னர் படிப்படியாக விரிவாக்கம் கண்ட லூத்தரன் சீர்திருத்தக் கிறித்துவம் தனது கருத்துக்களை வெளியிடவும் அச்சு எந்திரத்தின் துணையை நாடி அதனைப் பயன்படுத்திக் கொண்டது.  கிபி 1500 ஆண்டு வாக்கில் ஏறக்குறைய எட்டு மில்லியன் நூல்கள் ஐரோப்பாவில் இயந்திரங்களால் பதிக்கப்பட்டிருந்தன.

மார்ட்டின் லூத்தர் வாட்டிகன்  கத்தோலிக்க அமைப்புக்கு எதிராக தனது 95 கருத்துகளை தாளில் அச்சுப் பதிவாக்கி தேவாலயத்தின் வாசலில் 1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஆணி அடித்து ஒட்டி வைத்தார். கத்தோலிக்க தேவாலயத்தில் பழமைவாத சிந்தனைகள் மற்றும் அங்கு நிலவும் பிரச்சினைகளை அறிவார்ந்த வகையில் எதிர்க்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்திருந்தன. இந்த அறிக்கை அக்காலகட்டத்தில் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய மூன்று லட்சம் அறிக்கைகள் 1517 முதல் 1520 வரையிலுமான காலகட்டத்தில் ஐரோப்பா முழுமையுமே விநியோகிக்கப்பட்டன.

சமய நிறுவனங்களின் கொள்கை பிரச்சாரத்திற்கு மட்டுமன்றி படிப்படியாக அச்சு இயந்திரங்களின் பயன்பாடு என்பது மருத்துவம், கல்வி அறிவியல் என்ற வகையில் விரிவாக பயன்படுத்தப்பட்டது. இதன் காரணத்தால் மொழிகளின் இலக்கணத்தில் சீர்திருத்தங்களும் சீரமைப்பு முயற்சிகளும் நிகழ்ந்தன.

இன்று நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பும் வகையில் நூல்களை வாங்கி வாசிப்பது எளிமையான ஒரு நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளது. தகவல்களும் செய்திகளும் எல்லோருக்கும் பொது என்ற வகையில் கருத்துப் புரட்சியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் அச்சு இயந்திரங்களே அடிப்படையாகின்றன.

தமிழக் கல்வி சூழலிலும் கல்லூரி பாடத் திட்டங்களிலும் அச்சுப் பதிப்பாக்கத்தின் வரலாறு மற்றும் அது படிப்படியாக கண்ட வளர்ச்சியும் முன்னேற்றங்களும்  பற்றிய செய்திகளும் யோகானஸ் குட்டன்பெர்க் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இணைக்கப்பட வேண்டும். இது கல்வித் தளத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரம்பக்கால அச்சு பதிப்பாக்க செயல்பாடுகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்க நிச்சயம் உதவும்.




Friday, May 27, 2022

பாக்கிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு



   —   முனைவர் க. சுபாஷிணி 


வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தொல்லியல் களப்பணியாளர்கள் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பௌத்தப்பள்ளிகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.  இந்த பௌத்தப் பள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பௌத்தப் பள்ளி வளாகங்களில் பழமையான  ஒன்றாகக் கருதப்படுகின்றது.


பாரிக்கோட் என்ற நகரில் ஏறக்குறைய கிமு 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த சமய அமைப்பாக இதனைக் கருதலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கட்டிட பகுதி இதன் அருகிலேயே கிமு 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் மட்டுமன்றி உலக அளவில் பழமையான பௌத்தப் பள்ளிகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. கிபி 2 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டாலும் கூட இதன் காலம் கி மு 3,  அதாவது மௌரியப் பேரரசர் காலம் எனக் கருதக்கூடிய வகையில் கரிம சோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது பண்டைய காந்தாரப் பகுதியில் பண்டைய பௌத்த சமய செயல்பாடுகள் பற்றிய சான்றுகளை வழங்குவதாகவும் அக்காலகட்டத்தில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்ற ஒரு நகரமாக விளங்கி இருக்கலாம் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிய அளவில் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபடுவது 1955 வாக்கில் தொடங்கியது. அச்சமயத்தில் தொல்லியல் கள ஆய்வுக்கு தலைமை ஏற்றவர் ஆய்வாளர் கீசோப் தூச்சி (Giuseppe Tucci) ஆவார். தற்சமயம் இத்தாலிய தொல்லியல் பணிக் குழுவின் தலைவராக Ca'Foscari University of Venice பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லூக்கா மரியா ஒலிவியர் (Luca Maria Oliviero) பணியாற்றுகின்றார். இவர் தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான்  ஸ்வாட் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றது.
இந்தக் கள ஆய்வு நடைபெறும் பாரிக்கோட் (Barikot) என்ற நகரம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழியில் Bazira or Vajrasthana என குறிப்பிடப்படுகின்றது. இது மாவீரன் அலெக்சாந்தர் காலத்தில் அவனது படைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இந்த நகரம் மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு வந்த காலமான ஏறக்குறைய கிமு 327 காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய காலகட்டத்தில் இந்த பாரிக்கோட் நகர  பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த விவசாய செயல்பாடுகளை முன்னிறுத்தி தானியங்கள் விற்பனை மற்றும் தானியங்கள் சேகரித்து வைக்கும் பகுதியாகவும் இருந்தது என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் வேளாண்மை சிறப்புற்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை நிகழ்ந்ததும் அதாவது வசந்த காலத்தில் ஒரு முறையும் கோடை காலத்தின் இறுதியில் ஒரு முறையும் அறுவடை நிகழ்வதையும் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் தனது படைகளைக் கொண்டு செல்வதற்கு முன் தங்கியிருந்த ஒரு பகுதியாகவும் இந்த நகரம் அமைகிறது.

ரோமானிய வரலாற்று அறிஞர் Quintus Curtius Rufus பாரிக்கோட்  நகரம் வளமான பொருளாதார உயர்வு பெற்ற ஒரு நகராக இருந்தது என்று தனது நூலான Histories of Alexander the Great என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

2020 ஒரு தொடக்கம் இங்கு நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தொல்லியல் கள ஆய்வுகளில் இங்கு பிரமிக்க வைக்கும் வகையிலான கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டு காலத்து பௌத்த சமய சின்னங்கள் பல கிடைத்துள்ளன. பௌத்த விகாரை அதனை ஒட்டிய வகையில் அமைந்த பௌத்த பள்ளி, வட்ட வடிவில் அமைந்த சிறிய ஸ்தூபி, மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் சின்னங்கள், ஆபரணங்கள் ஆகியவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

கிபி முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரோஷ்டி எழுத்து பொறிப்பு கொண்ட கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெறுவதற்கு முன்பே தொல்லியல் சான்றுகளைச் சட்டத்திற்கு விரோதமாக திருடி விற்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிகழ்கின்ற அரசியல், மற்றும் சமயப் போராட்டங்கள் காரணமாகவும் அங்கு நடைபெறுகின்ற வன்முறை செயல்பாடுகளின் காரணமாகவும் பல வரலாற்று சின்னங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதையும் கருத வேண்டியுள்ளது. அத்தகைய இடர்ப்பாடுகளுக்கு இடையே இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுப் பணிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன‌. காந்தார கலைப் பண்பாடு இப்பகுதியில் செழித்து வளர்ந்த ஒரு பண்பாடு என்பதும் இப்பகுதியின் சிறப்பாகும்.



Reference: 
2,000-Year-Old Buddhist Temple Unearthed in Pakistan    —   The structure is one of the oldest of its kind in the Gandhara region, David Kindy, Smithsonian    —   February 15, 2022




Wednesday, April 13, 2022

அம்பேத்கரின் மனிதர் - நூல் மதிப்புரை



-- முனைவர் க. சுபாஷிணி 




எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில்  சட்டமேதை  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு நூல் இது.  கேள்விகளுக்குப் பதில் விளக்கம் என்ற வகையில் இந்த நூல் அமைந்திருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய சமூக நிலை மாற்றத்திற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்படுத்திய சட்ட மாற்றங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக, அதேவேளை தெளிவாக இந்த நூல் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

நூலின் தலைப்பு வாசிக்கும் நம்மை யோசிக்க வைக்கின்றது. அம்பேத்கர் விவரிக்கும் மனிதர்,  அம்பேத்கரின் பார்வையில் மனிதர், இந்தியாவில் ஒரு மனிதர் எவ்வகையில் உணரப்படுகின்றார் போன்ற செய்திகளைத் தத்துவார்த்த அடிப்படையில், அதேவேளை சமூகவியல் பார்வையில், சமூக நீதி சிந்தனையை இணைத்து நூலாசிரியர் விளக்குகின்றார்.  நூலாசிரியர் கௌதம சன்னா நீண்டகாலமாக அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர் என்பது இந்த நூலில் அவர் வழங்கும் விளக்கங்களின் வழியாக வாசகர்களுக்கு வெளிப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே செயல்பட்டார் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர் என்றும் காணப்படும் குறுகிய பார்வை எவ்வளவுக்கு எவ்வளவு தவறானது என்பதை நூலை வாசிக்கும் வாசகர்களுக்குத் தெளிவு படுத்துகிறது.  நவீன இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்கள், இன்று இந்தியாவில் தொழிலாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சலுகைகள், இந்தியப் பொருளாதாரக் கட்டுமானம்.. அரசியல் அமைப்பு... என நூல் தரும் விளக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரின் சமூகநீதி செயல்பாடுகளை மட்டுமன்றி நவீன இந்தியாவின் கட்டமைப்பில் அவர் ஆற்றிய பணிகளை ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாக இந்த நூல் அமைகின்றது என தாராளமாகக் கூறலாம்.  அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளில் வெறுமனே இரண்டு வார்த்தைகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதோடு மட்டுமல்லாது, அம்பேத்கரின் சிந்தனையை, அம்பேத்கரின் செயல்பாட்டை விவரிக்கும் இந்த நூலை வாங்கி வாசித்து அவரது செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது நிச்சயம் பயனளிக்கும்.

சமத்துவ நாள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நூல் விவரம்:
அம்பேத்கரின் மனிதர் : எளிய தத்துவார்த்த உரையாடலுடன்
நூலாசிரியர்: கௌதம சன்னா
நூல் விலை: 100₹
பதிப்பகம்: எழிலினி
பதிப்பாண்டு - 2022 
நூலைப் பெற: Google pay - 9840696574





Tuesday, March 29, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்


-- முனைவர் க. சுபாஷிணி 
 

அறிமுகம்

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் பௌத்த சமயம் பரப்பும் பணியில் முக்கியப் பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானதாகும்.  சீனா, ஜப்பான் கொரியா, என நீண்ட தூரம் தமிழ் நிலத்திலிருந்து பயணித்திருக்கின்றார்கள்.  இத்தகைய பயணங்கள் கிழக்காசிய நாடுகளிலும் தூரக் கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தம் ஆழ வேரூன்றி வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தது.

ஸ்ரீவிஜயா போன்ற மிகப்பெரிய பேரரசு, மிகப்பெரிய பௌத்த அடிப்படை கொண்ட நாடாக இருந்த இந்தோனீசியா கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக இஸ்லாமிய மதத்தை உள்வாங்கிக்கொண்டு இஸ்லாமிய நாடாக மாறத் தொடங்கியது. மலாயா கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் இதே அரசியல் சமய மாற்றத்தை அடையத் தொடங்கி இவை இரண்டும் இன்று கிழக்காசிய நாடுகளில் இஸ்லாமிய மதத்தை அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. ஏனைய கிழக்காசிய,  தூரக்கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து பௌத்த சமயத்தைத் தங்கள் அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன.


மலேசியாவின் பல பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கெடா மாநிலத்தில் ஏராளமான பௌத்த விகாரைகள் இருக்கின்றன என்பதை எனது இந்தப் பயணத்தில் தான் நான் அறிந்து கொண்டேன். பண்டைய பௌத்த சமய ஆதிக்கத்தின் தொடர்ச்சி முழுமையாக அழிந்து விடாமல் பலபகுதிகளில் அதிலும் குறிப்பான கெடா மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

கெடா மாநிலத்தின் சிக், ஜெனியாங் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே உள்ள பௌத்த விகாரைகளுக்குச் சென்று வருவோம் என புறப்பட்டபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறக்குறைய 12 பௌத்த விகாரைகளை நான் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.  பெரும்பாலானவை தாய்லாந்து பௌத்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளாக அமைந்திருக்கின்றன. 


வாட் காலாய் பௌத்த விகாரை (Wat Kalai):


கெடா மாநிலத்தின் ஜெனியாங் பகுதியில் இருக்கின்றது வாட் காலாய் (Wat Kalai) என்ற பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை. செழிப்பான வளமான மலைப் பகுதியில் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வகையில் அமைந்த பகுதியில் இந்தப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. சாலையிலிருந்து மிக எளிதாக இந்த விகாரையை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் பௌத்த விகாரைக்குப் பின்புறம் காட்டாறு ஒன்று மிக வேகமான நீர் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் நம் மனதைக் கவர்கிறது. மிகப்பெரிய வளாகத்தில் பல்வேறு சிறு சிறு சன்னதிகளாக புத்தரின் வடிவங்கள், தாய்லாந்து பௌத்த சின்னங்கள், போதிசத்துவர் சிற்பம், தியான மண்டபம், பிக்குகள் தங்கும் வீடு என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


இக்கோயிலின் மிகச் சிறப்பான ஒரு சிற்பம் என்றால் அது 21 மீட்டர் உயரம் கொண்ட புத்தரின் சிலை எனலாம். புத்தரின் சிலைக்குக் கீழ் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அதனுள் சிறுசிறு பெட்டிகள் போல் அமைக்கப்பட்ட அலமாரிக்குள் இறந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் சாம்பல் குடுவைகளில் வைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.  இக்கோயில் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த பழைய கட்டுமானத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சில ஓரிரு இடங்களில் தென்படுகின்றன.

ஒரு பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரது சிலை வைக்கப்பட்டு அதன் பின் பாம்புப் புற்று ஒன்று வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. சீனர்களின் வழிபாட்டில் அமைந்திருக்கக் கூடிய 12 மாதங்களுக்கான 12 விலங்குகளின் சிறிய அளவிலான சிற்பங்கள் வைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்திருக்கின்றது. தாமரைக்குளம் மீன் குளம் ஆகியவையும் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

இப்போது இருக்கின்ற கட்டுமானம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பழமையானவை என்ற தகவல் கிடைக்கின்றது. தாய்லாந்து அதாவது சயாமிய பௌத்த அடிப்படையில் அமைந்த கோயில் இது. கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் வசிக்கின்ற மக்களும் குறிப்பாக சீன, தாய்லாந்து இன மக்களும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

இந்த பௌத்த விகாரை முகவரி:
Wat Kalai
Mk Jenari, Jeniang, Gurun, Kedah


வாட் சாரோக் பாடாங் - Wat Charok Padang (Glass bottle temple):


வாட் சாரோக் பாடாங் எனப் பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை கண்ணாடி பாட்டில் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பௌத்த விகாரை தாய்லாந்து பௌத்த கட்டுமானக் கலை அமைப்புடன் அமைந்தது. இது கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் அமைந்திருக்கின்றது.  அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் நேர்த்தியாக அமைந்திருக்கும் கிராமத்துச் சாலையிலிருந்து சற்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் வழியில் இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கின்றது.


இதன்   சிறப்பு வியக்கத்தக்க வகையில் ஒன்றுள்ளது. அதாவது, இங்குள்ள ஒரு விகாரையின் கூரைப் பகுதி ஒரு லட்சம் (100,000) பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கூரை அமைப்புடன் அமைந்துள்ளது. (இதனை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்) தாய்லாந்திலும் இதேபோல கண்ணாடி பாட்டில்களில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தச் சிறிய கண்ணாடி பாட்டில் கூரை அமைப்பு கொண்ட விகாரை மட்டுமன்றி விரிவான பெரிய 2 மாடிக் கட்டிடம் ஒன்றும் அதோடு சிறிய சிறிய வழிபாட்டுப் பகுதிகளும், போதிசத்துவர் சிலையும், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உருவச் சிலைகளும் இந்த பௌத்த விகாரை உள்ள வளாகத்திற்குள் அமைந்துள்ளன.  இந்த ஆலயத்திற்கு உள்ளே மிகப் பழமையான  உடைந்த படகு ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. அதன் சிறப்பு என்ன என்ற தகவல் தெரியவில்லை.

இந்த வளாகத்திற்குள் சீன நாட்காட்டியில் இடம்பெறுகின்ற 12 விலங்குகளின் சிறிய உருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குளத்தில் ஆமைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கும் பகுதியின் முகவரி:
Kampung Charok Padang, 08200 Sik, Kedah


தம்ம ஸ்ரீ வரராம் பௌத்த விகாரை - Wat Thammasirivararam (Wat Kura/wat Ruesee Kura):


இது கெடா மாநிலத்தின் சிக் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மேலும் ஒரு பவுத்த விகாரையாகும்.  முதலில் பார்த்த இரண்டு பவுத்த விகாரைகளிலிருந்து மாறுபட்ட வகையில் இந்த பௌத்த விகாரை அமைந்துள்ளது. ஆமையின் வடிவம் கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறது. விகாரையின் உள்ளே செல்லும்போது வாசலில் இரண்டு பெரிய ஆமை உருவங்கள் நிற்கின்றன.  உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆமை உருவங்கள் பொன் வண்ணத்தால் வர்ணம் பூசப்பட்ட வகையில் காட்சி அளிக்கின்றன.

இந்த பௌத்த விகாரை கடந்த 200 ஆண்டு  காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஆயினும் இந்தப் பகுதியில் பழைய கட்டுமானங்களில் சிதிலமடைந்த பகுதிகள் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றன. பௌத்த விகாரையில் புத்தரின் சிலை என்பதைவிட ஓர் அவலோகிதரின் பொன் வண்ணச் சிலை பிரமாண்டமான வகையில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பௌத்த விகாரைகளில் தென்படும் சிறிய சிறிய பௌத்த விகாரைகள் இந்தக் கோவில் வளாகத்திலும் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அறைக்குள் இளம் வயது புத்தர் நடப்பது போன்ற அழகிய பளிங்கு நிறச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


ஆமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பௌத்த விகாரை தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது. இந்த விகாரை அமைந்திருக்கும் ஒரு பகுதியும் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது.  முற்காலத்தில் மலைகள் நிறைந்த இப்பகுதியில் தியானம் செய்வதற்காகவும் பௌத்த நெறிகளைக் கற்பதற்காகவும் பௌத்தர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக இது அமைந்திருக்கலாம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பெரிய கல்லூரி போன்ற ஒரு கட்டடம் ஒன்றும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kura
08210, Jeniang Kedah


வாட் புக்கிட் பேராக் பவுத்த விகாரை  ( Wat Bukit Perak / Samnak Ratchakhiri) :



இப்பகுதியில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்,  இது மலைப்பாங்கான ஒரு பகுதிதான். சாலையை ஒட்டியவாறு 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த பௌத்த விகாரை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.



தாய்லாந்து வகை பவுத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த பௌத்த விகாரை. இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் தாய்லாந்து மட்டுமன்றி குறிப்பாகக் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் வசிக்கின்ற சீன மக்கள் என்று அங்கு பேசிய போது அறிந்து கொண்டேன்.  வளாகம் அமைந்திருப்பது காட்டுப் பகுதி என்றாலும் சீர்படுத்தி தோட்டங்கள் உருவாக்கி அதற்குள் ஆங்காங்கே சிறிய சிறிய சன்னதி போல பௌத்த விகாரைகளை அமைத்திருக்கின்றார்கள்.


சாய்ந்து உறங்கும் நிலையில் அமைந்த புத்தரின் சிலை மற்றும் ஒரு சிறிய கோயிலில் தாரா தேவியின் சீன வடிவச் சிற்பம், ஆங்காங்கே புத்தரின் சிற்பம் மற்றும் நின்ற நிலையில் அமைந்திருக்கும் சிற்பங்கள் இங்கு அமைத்திருக்கின்றார்கள்.  உள்ளே பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் அமர்ந்து தியானம் செய்யும் வகையிலும் தியான மண்டபமும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

பௌத்த பிக்குகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஏனைய பௌத்த விகாரைகளில் இருப்பது போல யானை, புலி போன்ற வடிவங்களுடன் குரங்கின் சிற்பமும் இங்கே புத்தர் சிலைகளோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
K556, Kampung Gajah Putih, 08210 Sik, Kedah, Malaysia


வாட் விசுத்திப்ரதராம் (Wat Visuthipradittharam) பௌத்த விகாரை:



இந்த பௌத்த விகாரையின் வரலாற்றைப் பற்றி இணையத்திலும் கோவில் வளாகத்திலும் தேடிப்பார்த்தேன். ஆனால் தகவல்கள் கிட்டவில்லை. ஓர் ஆய்வுக் கட்டுரை மட்டும் கெடா மாநில பௌத்த விகாரைகளின் பட்டியலில் இந்த விகாரையின் பெயரையும் இணைத்து வழங்கியிருக்கிறது. மேலும் ஒரு கட்டுரை இந்த பௌத்த விகாரை கெடாவில் இருக்கும் அனைத்துப் பௌத்த விகாரைகளிலும் மிகப்பெரியது என்று குறிப்பிடுகிறது. விகாரையின் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ஆனால் இந்த விகாரை அமைந்திருக்கும் நிலப்பகுதியின் சுற்றளவு  நான் நேரில் சென்று பார்த்த ஏனைய விகாரைகளுடன் ஒப்பிடும்போது பள்ளி  அமைந்திருக்கும் நிலப்பகுதி அவ்வளவு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தோன்றியது.


கோயிலின் அமைப்பு தாய்லாந்து பவுத்த விகாரை கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. பௌத்த பள்ளியின் சன்னிதிகள், மைய விகாரையைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பௌத்த விகாரையில் தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதற்குச் சான்றாக ஆங்காங்கே பவுத்த பிக்குகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நான் சென்றிருந்த நேரம் நன்பகல் 12:00 மணி என்பதால் பௌத்த பிக்குகள் மதிய உணவிற்காக அவர்கள் இருப்பிடம் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பௌத்த பிக்கு நான் கோயில் பகுதிக்குச் செல்லும் பொழுது எனக்கு கோயிலின் கதவைத் திறந்து விட்டு மலாய் மொழியில் உள்ளே சென்று என்னை வழிபடச்  சொல்லிவிட்டு அவர் தங்குமிடம் சென்றுவிட்டார்.

இந்தப் பௌத்த விகாரையில் மிகப் பெரிய வடிவிலான நாக வடிவம் வாயில் பகுதியில் இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தலைகள் மற்றும் ஏழு தலைகள் கொண்ட நாகத்தின் வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளன. இதே வகை உருவ அமைப்பில் புத்தரின் தலைப் பகுதியைச் சுற்றி பாதுகாக்கும் வகையில் ஏழு தலை நாகம் இருக்கும் சிற்பங்களை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் நான் பல பௌத்த விகாரைகளில் பார்த்திருக்கின்றேன்.


புத்தர் தனது அரசைத் துறந்து ஞானம் பெற பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற போது அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் நாகர்கள் என்ற கருத்து உண்டு. நாகர்கள் இனம் பண்டைய இந்தியாவின் பூர்வ குடி இனம் என்பது மட்டுமன்றி இலங்கையின் பூர்வ குடி இனம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதில் குறிப்பாக ஏழு தலை நாகம் எனும் உருவ அமைப்பு நாகர்களில் ஏழு வகை குழுக்கள் புத்தருக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கிறது. நாகர்கள் இனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏழு தலை நாகம் என்ற உருவகம் நாளடைவில் புத்தர் சிலைகளில் இணைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த உருவ அமைப்பை மானுடவியல் பார்வையில் வரலாற்றுக் கோணத்தில் ஆய்வு செய்வது தேவையாகின்றது.

இந்தப் பௌத்த விகாரையின் நுழைவாயில், சன்னதிகள், மையக் கோயில் என அனைத்துமே பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கெடா மாநிலத்தின் இன்றும் வழிபாட்டில் இருக்கக்கூடிய முக்கிய பௌத்த விகாரையின் பட்டியலில் இந்தக் கோயிலும் இடம் பெறுகின்றது.


இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Wat Visuthipradittharam
Kg.Titi Akar Mk.Padang, Kerbau Jln Sg. Tiang Pendang, Kedah


வாட் சுக்தோர்ப்ரன்சாராம் பௌத்த விகாரை (Wat Sukthornprakcharam): 



பௌத்த விகாரை மற்றும் பள்ளி அமைந்திருக்கும் வளாகம். இது ஒரு கலைப் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் நேர்த்தியாகக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.  மலாய் மொழியில் Selamat Datang, அதாவது நல்வரவு என்று எழுதப்பட்டு அதன் கீழ் பௌத்த விகாரையின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்து வளாகத்தின் உள்ளே செல்லும்போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழு கிழமைகளுக்கும் ஏழுவகை புத்தரின் சிற்பங்கள். திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் ஓர் உருவத்தை அமைத்திருக்கின்றார்கள்.  ஒரு குன்றின் மேல் அமைந்தது போல இந்தக் கோவில் வளாகம் இருக்கின்றது. படிகளில் ஏறிச் சென்றால் வலது புறமும் இடது புறமும் எனச் சிறிய சிறிய சன்னிதிகள் உள்ளன.  ஒரு பகுதியில் 4 தலைகளுடன் பிரம்மாவின் உருவம் அமைக்கப்பட்ட சிற்பம் உள்ளது. மற்றும் ஒரு சன்னிதியில் போதிசத்துவருக்கான உருவச்சிலை அமைந்திருக்கின்றது. ஏனைய சன்னிதிகளில் புத்தரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கடந்து குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே சாய்ந்த நிலையில் சயன புத்தரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு உருவச்சிலை, ஆனால் மிகப் பிரம்மாண்டமான வகையில் பினாங்கு மாநிலத்தில் இருக்கின்றது.


இந்தப் பகுதியிலிருந்து இறங்கி இடது புறமாக மேலும் நடந்தால் அங்குப் பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  முதலில் வருவது மிக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இதில் புத்தர் தனது சீடர்களுக்கு ஞானம் வழங்குவது போலும், கீழே தரையில் சீடர்கள் அமர்ந்திருப்பது போலும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் அனைவரையும் இங்கே  அமர்ந்திருந்து தியானம் செய்யும் வகையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்து வரும்போது ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் தென்படுகின்றன. அதற்கடுத்து கீழே வரும்போது அழகான ஒரு குளத்தின் நடுவே தாராதேவி நின்ற நிலையில் அருள்பாலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே வரும்போது புத்தரின் அன்னை மற்றும் அவரது தோழியர் சூழ நிற்கும் சிற்ப வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வடிவங்கள் சேலை அணிந்த வகையில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக நாம் காண்பது ஒரு சிற்பம். இது குதிரை ஒன்று பின்புறத்தில் நிற்க புத்தர் தனது தலைமுடியை இழுத்து கத்தியால்  வெட்டுவது போல ஒரு காட்சி.


இவற்றையெல்லாம் கடந்து வந்தால் பவுத்த பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வரலாம். இப்பகுதி வழிபாடுகளும், தியான நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பௌத்த விகாரைக்கு வாசல் புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெயரைக் குறிப்பிட்டு நான் இணையத்தில் தகவல் தேடியபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த பௌத்த விகாரை மட்டுமல்ல... மேலும் சில பௌத்த விகாரைகளின் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் வகையில் இல்லை. நேரடியாகச் சென்று அவற்றைக் காணும் போதுதான் இத்தனை பௌத்த விகாரைகள்  இந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kg. Tong Prok, Mk, 06750 Pendang, Kedah, Malaysia.


முடிவுரை



வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்குக் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் வரலாறு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அடங்கவில்லை. உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக, கிழக்காசிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த, இருக்கின்ற தொடர்புகள் என்பவை மிக முக்கியமானவை.  மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பௌத்த விகாரைகளைப் பற்றி புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தேன். இணையத்தில் மேலும் தேடியபோது கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலும் சில செய்திகள் கிட்டின.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய 37 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று என்பதோடு பண்டைய ஸ்ரீவிஜயப் பேரரசு அதன் தலைநகராகக் கடாரத்தைக் கொண்டிருந்த ஒரு நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மிக முக்கியம் வாய்ந்த துறைமுகப் பகுதியாகவும் பண்டைய காலத்தில் இருந்தது.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடல் வழிப் பயணம் செய்து கிழக்காசிய நாடுகளுக்கு வந்த பௌத்த பிக்குகளும், பௌத்தத்தைத் தழுவிய வணிகர்களும் இப்பகுதிகளில் பௌத்தம் மிக ஆழமாக வேரூன்றி வளர அடிப்படையை உருவாக்கியிருந்தனர்.

காலப்போக்கில் அரசியல், சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களை விட சீனர்களும், தாய்லாந்து சயாமிய மக்களும் இப்பகுதியில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக அமைகின்றனர்.

இன்று கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைந்துள்ளது. ஆயினும் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும்போது தாய்லாந்து, அதாவது பண்டைய சயாம் நாட்டுடன் நீண்ட தொடர்பு கொண்ட நிலப்பகுதியாக அமைந்தது என்று கூற வேண்டும்.  இப்பகுதியில் ஆட்சி அமைத்திருந்த பண்டைய பேரரசனான பூஃனான், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் ஆகும். இவற்றின் காலம் கிபி 11 வரை எனக் கூறலாம். இதன் பின்னர் ராஜேந்திர சோழனின் படை எடுப்பு இப்பகுதியில் நிகழ்ந்த பின்னர் மலாய் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.

அரேபிய இஸ்லாமிய வணிகர்களின் வருகை இப்பகுதியில் படிப்படியாக இஸ்லாமிய மதம் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கி.பி. 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்பகுதி தொடக்கம், மலாக்கா, தீபகற்ப மலேசியா ஆகிய பகுதிகள் முழுமையாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய வகையில் இஸ்லாமிய நாடாக சமய அடிப்படையில் மாற்றம் பெற்றது.  இத்தகைய சமய பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த போதிலும் கூட கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள தொடர்பு என்பது இன்றும் தொடர்கின்றது. கெடா மாநிலத்தின் ஒரு பகுதி தாய்லாந்தில் எல்லையாகவும் அமைகிறது.

1909ஆம் ஆண்டு Anglo-Siam Treaty என்ற ஒப்பந்தத்தின்  அடிப்படையில் இன்று நாம் காண்கின்ற பிரித்தானிய மலாயாவிற்கும் தாய்லாந்து நாட்டிற்குமான எல்லை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. Satun பகுதி மலையாவிற்கும், Patani பகுதி சயாம் நாட்டிற்கும் எனப் பிரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் வாழ்ந்த சயாமிய மக்கள் தனித்துவத்துடன் கூடிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்களாகத் தொடர்கின்றனர்.

இன்றும் கூட தாய்மொழியை(தாய்லாந்து மொழி) இப்பகுதி மக்கள் ஓரளவிற்கு இயல்பாகப் பேசுகின்றனர். தாய் மொழியைப் பேசுகின்ற இம்மக்களை சாம்சாம்ஸ் (The Samsams) என்று அழைக்கின்றனர். இவர்களில் சிலர் இஸ்லாமியர்களாகவும் பெரும்பான்மையோர் பௌத்தத்தைத்  தொடர்ந்து சமயமாகக் கொண்டிருப்பவர்களாகவும், அதிலும் குறிப்பாக,  தேரவாத பௌத்தத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகின்றனர். இந்த சாம்சாம்ஸ் இனத்தவர்கள் பற்றிய எண்ணிக்கை தகவல்கள் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The Siamese in Kedah under nation state making (Keiko Kuruda, Kagoshima University) என்ற கட்டுரை 1892 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அன்றைய கெடா மாநில சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களது கடிதங்களின் வழி பென்டாங் பகுதியில் 13 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் அதில் வாட் லம்டின் விகாரையில் மட்டும் 22 பௌத்த பிக்குகள் பதிவு செய்திருந்தார்கள் என்ற தகவலையும் வழங்குகிறது.  இதே கட்டுரை 1974-ஆம் ஆண்டு அறிக்கையின்படி கெடா மாநிலத்தில் மட்டுமே 26 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் 27 கிராமங்கள் இருந்ததாகவும், அதில் ஏறக்குறைய 3500 குடும்பத்தினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

கெடா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பவுத்த விகாரைகள் இன்று புதிய கட்டிடங்களில் அழகுறத் திகழ்கின்றன. ஆனால் இவை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இவை. பண்டைய பேரரசுகளின் அரச சமயமாக பௌத்தம் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட விகாரைகளின் எச்சத்தின் தொடர்ச்சி. பழைய கட்டுமானப் பகுதி சிதிலம் அடையும்போது புதிய கட்டுமானங்களை உருவாக்கி வழிபாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

கெடா மாநிலத்து சயாம் பௌத்த பின்னணி கொண்ட மக்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்திலும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முக்கிய ஆண்டு விழாக்கள், பண்டிகைகள் நிகழும்போது பினாங்கிலிருந்து பெருவாரியாக மக்கள் வழிபாட்டிற்கு வருகிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

பௌத்தம் கி.பி. 1, 2 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்தும் கடல்வழி பயணித்த வணிகர்கள் மற்றும் பௌத்த பிக்குகளின் முயற்சிகளினால் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. புதிதாகப் பரவிய நிலத்தில் அவை மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு வழிபாடுகளில் மேலும் சில புதுமைகளைப் புகுத்திக் கொண்ட வகையில் மாற்றம் கண்டன. மாற்றங்கள் உட்புகுந்தன என்றாலும்கூட பழமையான  பௌத்தப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வழிவழியாக வழிபாடு செய்யப்பட்ட பகுதிகளில் வழிபாடுகள் தொடர்வதைக் கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் காணமுடிகிறது.

மலாயா மலேசியாவாக மாறிய பின்னரும் கூட அரச சமயமாக இஸ்லாமிய சமயம் முக்கியத்துவம் பெற்ற பின்னரும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிறைந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது. பௌத்த விகாரைகள் சீனர்களுக்கும் தாய்லாந்து மக்களுக்கும் உரிய வழிபாட்டுத்தலங்கள் தானே என ஒதுக்கி விடாமல் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி என்ற ரீதியில் இவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து அவற்றின் வரலாற்றுப் பின்னணிகளைத் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய தேடுதல்கள் நமக்கு மேலும் சில புதிய தரவுகளை வழங்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

முற்றும்

Monday, January 17, 2022

தலையங்கம்: தமிழால் இணைவோம்... தமிழ் வளம் காப்போம்...

தலையங்கம்: தமிழால் இணைவோம்... தமிழ் வளம் காப்போம்...     




வணக்கம்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.   (குறள்:  உழவு -1036) 

அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
புதிய ஆண்டில் காலெடுத்து வைக்கின்றோம்.  இந்த ஆண்டு நம் அனைவருக்குமே வாழ்வில் வளத்தையும் சிறப்பையும் வழங்க வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியான செய்தியை நமக்கு அளித்தது. 

ஆம். மைசூரில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்க்கல்வெட்டுகள் தமிழகம் வரவிருக்கின்றன என்ற செய்திதான் அது. இது செய்தியாக மட்டுமில்லாமல், உடனடியாகக் கல்வெட்டுக்களும் ஆரம்பக்கால நிலையில் எடுக்கப்பட்ட மைப்படிகளும் விரைவில் மின்னாக்கம் செய்யப்படவேண்டும். அவை இணையத்தில் வலையேற்றம் செய்யப்பட வேண்டும்; அச்சு நூல்களாக வெளி வரவேண்டும். ஆரம்பத்தில் 60,000 கல்வெட்டுகள் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்கள் சிலர் அடங்கிய குழு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வந்து கொடுத்த தகவலுக்குப் பின்னும், தொடர் ஆய்வுகளுக்குப் பின்னும்  இந்த எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைந்தது என்பதை நீதிபதி அவர்களின் அறிக்கை வெளிப்படுத்தியது. ஆக, இச்சூழலில்  உடனடியாகக் கல்வெட்டுகளை மின்னாக்கம் செய்யும் ஒரு தனிக்குழுவைத் தமிழக அரசின் தொல்லியல் துறை தனிப்பணிக்குழுவாக  நியமித்து இப்பணியை இவ்வாண்டே முழுமைப்படுத்தி அச்சு வடிவிலும் இணையத்திலும் இவற்றை முதலில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

இதனை அடுத்து ஜனவரி 12ஆம் தேதியை தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நாள் எனப்பிரகடனப்படுத்தியது. இந்த நாளில் அயலகத் தமிழர்களின் நலன்காக்க நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். நிகழ்ச்சியில் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 அக்டோபர் மாதம் தொடங்கி நமது செயல்பாடுகளில் சிலவற்றை நினைவு கூர்வோம்;
-சங்க கால நாகரீகம் பற்றிய சான்றுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற  பொற்பனைக்கோட்டை பகுதிக்குச் சென்று அப்பகுதியைப் பற்றிய தகவல்கள் சேகரித்ததோடு அதன் அருகாமை பகுதியில் தொல்பழங்கால ஈமச் சடங்குகள் தொடர்பான இடங்களையும் பார்த்துப் பதிவு செய்து வந்தது தமிழ் மரபு அறக்கட்டளை குழு.

-கீழடி அகழாய்வுக் களத்திற்கு நேரடியாக மாணவர்களையும் அழைத்துச் சென்று ஒருநாள் மரபுப்பயணத்தின் வழி தொல்லியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது நமது குழு.

-அக்டோபர் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை குழுவினர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினர் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றிய செய்திகளைப்  பகிர்ந்து கொண்டனர்.  அத்துடன், மதுரை ரயில் நிலையத்திலிருந்து கடந்த காலங்களில் நீக்கப்பட்ட மீன் சின்னத்தை மீண்டும் பொறிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். அதனை உடனடியாகச் செயல்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

-உலக  மரபு வார விழா வாரத்தை 2021, நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை என யுனெஸ்கோ நிறுவனம் பிரகடனப்படுத்தி இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு வரலாற்று ஆய்வுரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாள் நிகழ்வும் ஒரு சிறப்பு அம்சத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ந்ததன் வழி மிக முக்கிய ஆவணங்களாக இந்த ஆய்வுரைகள் உருவாக்கம் கண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் யூட்யூப் வலைப்பக்கத்திலும் அவை இணைக்கப்பட்டன.

-டிசம்பர் மாதத் தொடக்கம் ஐரோப்பியத் தமிழர் நாள் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 2 ஐம்பொன் சிலைகள் வைத்து திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் ஐரோப்பியத் தமிழர் நாள் விழா  தமிழ் மரபு அறக்கட்டளையினால் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் லிண்டன் அருங்காட்சியகத்திலிருந்து நேரலையாக அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

-இலங்கையின் மூதறிஞர் எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் நினைவாக  உலகளாவிய வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அக்கினிக்குஞ்சு வார இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்த வகையில் உலகப் பேரறிஞர்கள் பலரது உரைகளுடன்  இருநாள் கருத்தரங்கம் இம்மாதம் நடைபெற்றது. மூதறிஞர் எஸ்.பொ.  அவர்களைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களைத் தற்கால இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி பயனுள்ள வகையில் அமைந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் வெளியீடாக ` புதிய நூல், `வரலாற்றில் பொய்கள்`  வெளியீடு கண்டது.   நமது ஆய்வு நூல்கள் வெளியீட்டின் வரிசையில் இந்த நூலும் இணைகின்றது.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி    




Wednesday, January 5, 2022

நம் ஊர் நம் பெருமை!



  -- முனைவர்.க.சுபாஷிணி


குறிப்பு: இக்கட்டுரை, டிசம்பர் 11-12, 2021 இல் நடைபெற்ற 'அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆண்டு விழா' மலருக்காக நான் அனுப்பியது; முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

ஊர் பெருமை பேசுவது என்பது நம் எல்லோருக்குமே இயல்பாக நடப்பது தான். எங்க ஊரில் ஓடுகின்ற ஓடையில் உள்ள தண்ணீரைக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்.. என்று சொல்வோர் சிலர். எங்க ஊர் அக்கா கடை இட்லி மாதிரி வேறு எந்த ஊரிலாவது கிடைக்குமா.. என்று கூறுவர் சிலர். எங்கள் ஊர் கோயில் கோபுரம் போல வேறு எந்த ஊரில் இருக்கிறது, என்று கட்டிடக்கலையை ரசிப்போர் சிலர். எங்க ஊர் தறியில செய்த சேலை போல வருமா, என்று தங்கள் சேலையைச் சுட்டிக் காட்டி பெருமை பேசும் மங்கையர் பலர். இப்படி மிக இயல்பாகவே நாம் பிறந்து வளர்ந்த ஊர் சார்ந்த சிறப்புகளைப் பிறரிடம் கூறி விவரித்து பெருமை பேசி அதில் மகிழ்ச்சி காணும் இயல்பு நம் எல்லோருக்குமே உண்டு.




`நம்ம ஊர் ஏதாவது ஒரு பெருமையைத் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்கும்`, என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அந்தப் பெருமைகளை நமது நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் அயலாரிடமும் பேசி மகிழும் சுகம் அலாதியானது. 

முன்பெல்லாம் ஊர் பெரியவர்களும் வீட்டுப் பெண்களும் திண்ணையில் அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த தங்கள் ஊர் பெருமையைப் பேசி பெருமை கொள்வார்கள். இளைஞர்கள் ஊர் மத்தியில் அல்லது முச்சந்தியில் உள்ள அரச மரம், ஆல மரம்  அடியில் அமர்ந்து  தங்கள் ஊர் பெருமையைப் பேசிக்கொள்வார்கள். திருமணம், காதுகுத்தல் போன்ற குடும்ப சடங்குகள் நிகழும் விழாக்களுக்குச் செல்பவர்களும் அங்கு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அமர்ந்து தம் ஊர் பெருமைகளைப் பேசி மகிழ்வார்கள். 

இன்று நமக்கு இணையமும், கணினி தொழில்நுட்பமும் கதை பேச ஒரு புதிய வெளியை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த இணைய யுகத்தில் இணையம் வழியாக நமக்குத் தெரிந்த செய்திகளை நாம் ஒருவருக்கு மற்றொருவர் எனப் பகிர்ந்து கொள்ள வெவ்வேறு வகைச் சமூக ஊடகங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒருவகையில் சொல்லப்போனால் சமூக ஊடகங்கள் இல்லாமல் நாம் இல்லை எனும் அளவிற்கு இணையத் தொழில்நுட்பம் கைபேசி, கணினி போன்ற கருவிகளைத் துணையாகக் கொண்டு நாம் சலிக்காமல் அலுக்காமல் கதை பேசவும் நம் ஊர் பெருமையைக் கூறிக் கொள்ளவும் பெரியதொரு வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கின்றது. 

இந்த நல்வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா? 
நம் ஊர் பெருமையை நாமும் அறிந்து மற்றவரும் அறியும் வழி சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரவலாக்கம் செய்யும் முயற்சியை நாம் சரியாக மேற்கொள்கின்றோமா? 
நாம் பிறந்து வளர்ந்த மண்ணின் பெருமையைச் சரியாக உலகுக்கு எடுத்துக் கூறும் பணியை நாம் செய்கின்றோமா? 
இப்படி நாம் பெருமை பேசி மகிழும் நமது செயல்களினால் நமது ஊருக்கு நன்மைகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? 
இந்தக் கேள்விகளை நாம் நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது ஊர் பெருமை பேசும் பேச்சு வெட்டிப் பேச்சாக இல்லாமல் ஆக்ககரமான செயலுக்கு முன்மாதிரியாகவும் உந்துதலாக அமைந்திருக்க வேண்டும். இதனை எப்படிச் செய்வது?

ஓர் ஊர் இருக்கின்றது என்றால் அந்த ஊர் உருவாக்கம் பெற்ற கதை, செவிவழிச் செய்திகள், அதன் வரலாறு, அந்த ஊரில் இருக்கின்ற வழிபாட்டுத்தலங்கள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், மலைகள், குன்றுகள், குகைகள், கோட்டைகள், சாலைகள், தெருக்கள் மட்டுமன்றி என்றோ ஒரு நாள் நமது மூதாதையர்கள் உருவாக்கிச் சென்ற நடுகல் கல்வெட்டுகள், தொல்லியல் எச்சங்களாக இருக்கின்ற கற்படுக்கைகள், கல் வட்டங்கள், பாறையின் மேல் கீறப்பட்ட குறியீடுகள், பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், ஊரின் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி, ஊரில் மக்கள் இளைப்பாற நெடுநாள் வளர்ந்து நிற்கும் நிழல் கொடுக்கும் மரங்கள் என நம் ஊரின் சிறப்புக்குப் பங்களிக்கும் ஒவ்வொரு விசயத்தையும்  நாம் உலகுக்கு எடுத்துச் சொல்லி, அதைப் பற்றிய ஓர் ஆவணப்பதிவை உருவாக்கி வைக்க வேண்டியது அவசியமல்லவா? இதனை எத்தனை பேர் செய்கிறோம்? 

`வாய்ச்சொல்லில் வீரரடி` என்ற கூற்றிற்கு ஒப்ப வீண் பெருமை மட்டும் பேசுவதால் நம் ஊரின் பெருமையை நம்மால்  பாதுகாத்து விட முடியாது. இதற்கு முறையான திட்டமிடல் என்பது அடிப்படையான ஒரு தேவை அல்லவா?

முதலில் நாம் பிறந்து வளர்ந்த ஊர், அதன் வரலாறு என்ன எனத் தெரிந்து கொள்ள நாம் அனைவரும் முற்பட வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும் என்று நாம் யோசிக்கலாம்? நமது பெற்றோரும், அவர்களது பெற்றோர்களும், அதே கிராமத்தில் பிறந்து வளர்ந்து நீண்ட காலம் வாழ்கின்ற நமது உறவுகளும், சுற்றத்தாரும் தான் இதற்கு முதல் நிலை தரவுகளைத் தரக்கூடிய முக்கிய நபர்கள். நம்மைச் சுற்றியுள்ள வயதில் மூத்த நம் உறவுகளையும் சுற்றத்தாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது நமக்குப் பல புதிய விஷயங்கள் நம் ஊரைப் பற்றியே அறிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ முறை நாம்  ஒரு சாலையில் கடந்து சென்றிருப்போம். தினம் தினம் ஒரே சாலையில் சென்றிருப்போம் ஆனால் அந்தச் சாலையின் மூலையில் மண்ணில் புதையுண்டு தலை மட்டுமே தெரிகின்ற நடுகல்லை நமது கண்கள் கண்டிருக்குமா?

நம் ஊர் வயதான `பெருசுகள்` அவ்வப்போது சில பாடல்களை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பாடல்கள் ஒரு தலைவனைப் பற்றியோ, ஒரு நிகழ்வைப் பற்றியோ சொல்வதாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் பற்றி அமர்ந்து, நிதானித்து, யோசித்து அந்தப் பாடல் சொல்லும் செய்தி என்ன என்று அறிய நாம் முற்பட்டிருப்போமா?

நம் ஊரில் பாழடைந்த ஒரு கற்கோயில் இருக்கும். அதில் ஆங்காங்கே சில கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தச் சிதிலமடைந்த கோவிலின் தூண்களில் சிற்பங்கள் சில செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைய கட்டுமானங்களைக் கண்டும் காணாமல் நாம் எத்தனையோ முறை அதனைக் கடந்து சென்றிருப்போம். அந்தக் கோயில் சொல்லும் வரலாற்றையும் நாம் கடந்தே சென்றிருப்போம்!

உலகின் பண்பாட்டு வளம் மிக்க நிலப்பகுதி என எடுத்துக்கொண்டால் கிரேக்கம், இத்தாலி, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளின் வரிசையில் தென்னிந்திய நிலப்பகுதியும் முக்கியத்துவம் பெறும் ஒரு பகுதியாகும். மிக நீண்ட காலமாக மனிதக் குலம் வாழ்ந்து, பண்பாட்டில் வளம் பெற்று, கலைகளை வளர்த்து, விவசாயம் செய்து, வணிகம் செய்து பொருட்செல்வமும் கலைச்செல்வமும் வளர்த்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட பண்பாடு தமிழ்ப் பண்பாடு. அத்தகைய பண்பாட்டு எச்சங்கள் எப்போதும் பெருநகரங்களில் மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு சிறு கிராமமும், ஒவ்வொரு சிற்றூரும் தமிழர் வரலாற்றின் எச்சங்களைத் தாங்கிய வரலாற்றுத் தரவுகளைக் கொண்டிருக்கும் முக்கிய இடங்களாகத் தான் திகழ்கின்றன.

ஏன் செய்கின்றோம், எனத் தெரியாமல் ஊர் பெருமை பேசிக் கொள்ளும் நாம், நம் ஊரின் உண்மையான பெருமைகளை நேரில் சென்று கண்டறிந்து அவற்றைப் பற்றி சிறிது நேரத்தைச் செலவு செய்து, ஆய்வு செய்து, அவற்றின் வரலாற்றை ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி, சமூக ஊடகங்களின் வழியாக இணையத்தில் செய்திகளைப் பகிர்ந்து நம் ஊர் பெருமையை உலகுக்கு வெளிக் காட்டலாமே? ஒவ்வொரு நபரும் தங்கள் ஊர் பெருமையை  வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் முயற்சி செய்தால் தென்னிந்திய நிலப்பகுதியில் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளை நாம் வெளி உலகுக்குக் கொண்டு வரலாம். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு அதனை நாம் கொண்டு செல்லலாம். இதன்படி விடுபட்ட கோடுகளை இணைக்கும் புள்ளிகளைக்  கண்டுபிடித்து வரலாற்றில் விடுபட்ட செய்திகளை இணைத்து தமிழர் வரலாற்றிற்கு வளமும் பலமும் சேர்க்கலாம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு `நம் ஊர் நம் பெருமை` எனும் இயக்கத்தின் வழியாக இணையம் வழியாக வலைப்பக்கத்தில் நம் ஊர் பெருமைகளைப் பதிந்து வைக்க தகவல் களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இத்தகைய அமைப்புகளுடன் இணைந்த வகையிலும் உங்கள் ஊர் பெருமைகளை ஆவணப்படுத்தி நாம் நம் ஊருக்குப் பெருமை சேர்க்கலாம் நாமும் பெருமை அடையலாம்.

நம் ஊர் நம் பெருமை!

  

Thursday, October 14, 2021

தலையங்கம்: தமிழரின் தொல்லியல் தடயங்களை மீட்போம்


வணக்கம்.

அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

கடந்த 3 மாதங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. அவைபற்றிய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக வரலாற்றுக்குச் சிறப்பு சேர்க்கும் மைசூர் ஆவணப்பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை மீட்டுக் கொணரும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிகழ்வு 19.8.2021 அன்று நிகழ்ந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இந்த வழக்கினை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை 2017ம் ஆண்டு முதல் திட்டமிட்டு, 2018ம் ஆண்டு திரு. கௌதம சன்னா அவர்களது உதவியுடன், திரு.காந்தி அவர்களது ஆலோசனையின் படி மூத்த வழக்கறிஞர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களது   உதவியுடன் இந்த வழக்கைத் தொடங்கினோம்.  இவ்வழக்கிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதோடு உண்மையில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன, என்ற கேள்விக்கு விடையாகக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும்  இந்தத் தீர்ப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது இதுகாறும் நிலவி வந்த பல கேள்விகளுக்குச் சட்டப்பூர்வமான பதிலாகவும் அமைகிறது.    கடுமையான முயற்சியை மேற்கொண்டு இவ்வழக்கு வெற்றியடைய உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், சாதகமான தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கிருபாகரன், துரைசாமி ஆகியோருக்கும்  நன்றி கூற நாம் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்   22ம் தேதி மெட்ராஸ் தின விழாவினை நாம் கொண்டாடுகின்றோம்.  இவ்வாண்டும் ஆகஸ்டு மாதத்தில் வரலாற்று சொற்பொழிவுகள், கானா பாடல்கள், மெட்ராஸ் நகருக்குச் சிறப்பு சேர்க்கும் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் என்பனவற்றோடு மெட்ராஸ் பற்றிய ஆய்வு நூலான `மெட்ராஸ் 1726`  என்ற தலைப்பிலான ஓர் ஆய்வு நூல் வெளியீடும், மெட்ராஸ் வரலாற்றில் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி மற்றும் மெட்ராஸில் அரசியல் தலைவர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில், ஆகஸ்ட் மாதம் 21,22 ஆகிய இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையத்தில் நிகழ்த்தப்பட்டு அவை யூடியூப் பதிவுகளாக தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் சேனல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அன்றாட அலுவல்களுக்கு இடையே சென்னை பெருநகரில் ஒவ்வொரு நாளும் பயணித்தாலும் கூட, சென்னையில் இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் கண்டு அறிந்து கொள்ளாதவர்கள் ஏராளம் பேர். அத்தகையோருக்குச் சென்னையின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் 20 ஆண்டுக்காலப் பயணம் நிறைவடைந்து 21ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் நிகழ்வினை உலகம் முழுவதிலுமிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் ஆர்வலர்களும் இணைந்து சிறப்பித்தார்கள்.  21 ஆண்டுகாலப் பயணத்தில் நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள உலகளாவிய வரலாற்று விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை நினைவு கூறவும் இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்தது.

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு இவ்வாண்டு அறிவித்தது. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைகின்றது.    

உலகத் தமிழர்களைப் பொறுத்த வரையில் செப்டம்பர் மாதம் சமூகநீதிக்கான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்யும் மாதமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிய, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்கள் பிறந்த நாட்களும் நினைவு நாட்களும் இந்த மாதத்தை அலங்கரித்தன என்பதுதான்.

செப்டம்பர் 5ஆம் தேதி வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்; செப்டம்பர் 5ஆம் தேதி அன்னை தெரசா நினைவு நாள்; செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு நாள்; செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாள்; செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் ஈ.வே ராமசாமி அவர்களது பிறந்தநாள்; செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களது நினைவு நாள், செப்டம்பர் 18ஆம் தேதி மூதறிஞர் ரட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்  என முக்கிய தலைவர்களின் நினைவுகளை எழுப்பும் மாதமாக அமைந்தது.

தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக நீதி நாள் என இவ்வாண்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.  இவையனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் நெதர்லாந்தில் பாதுகாக்கப்படுகின்ற சோழர் காலச் செப்பேடுகளை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்கள் என்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.   இதற்குத் தொடர்புடைய வகையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்து லெய்டன் நூலகத்திற்கு நேரடியாகச் சென்றிருந்தபோது சேகரித்த தகவல்களை மையமாகக் கொண்டு நெதர்லாந்தில் உள்ள சோழர் காலச் செப்பேடுகள் என்ற தலைப்பிலான காணொளிப்  பதிவு ஒன்றினையும் இம்மாதம் வெளியிட்டது தமிழ் மரபு அறக்கட்டளை. 


மேலும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நெதர்லாந்து சோழர் காலச் செப்பேடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கலந்துரையாடலையும் கல்லூரி மாணவர்களுக்கும் அருங்காட்சியக ஆணையர்,  அதிகாரிகள், பொதுமக்களுக்கு வழங்கினேன்.  இதன் தொடர்ச்சியாக அச்செப்பேடுகளை முறையாக நெதர்லாந்து அரசை அணுகிப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிடவும் கலந்துரையாடப்பட்டது.

மலேசியத் தமிழர்கள் வரலாறு பற்றிய ஓர்  ஆவணப்பதிவாக்க முயற்சிக்கான கலந்துரையாடல் நிகழ்வும் இம்மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான புதிய வலைப்பக்கம் (https://malaysia.tamilheritage.org/) செப்டம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது வெளியிடப்பட்டது.

இம்மாத இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகளாக ஐந்து நூல்கள் வெளிவர உள்ளன.  இந்த ஆய்வு நூல்களை வாங்கி உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி




Monday, September 13, 2021

கோப்பன்ஹாகன் சுவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

-- முனைவர் க.சுபாஷிணி


தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் சுபாஷிணி அவர்களால் 2016ம் ஆண்டு டென்மார்க் கோப்பன்ஹாகன் நகரில் உள்ள அரச அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக்கொண்டு, அங்கு நேரில் சென்று 4 நாட்கள் அங்கு சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யப்பட்டது. 

ஏறக்குறைய 1800 ஓலைகள் (தனி ஓலைகள்) -  இவற்றுள்  4  சுவடி பனை ஓலை நூல் கட்டுகளின் மின்னாக்கப் படிமங்களை (டிஜிட்டல்) பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்கள் தங்கள் ஆய்விற்குக் கேட்டுக் கொண்டதற்கிணங்க  வழங்கினோம்.

தமிழ் பனை ஓலைச் சுவடிகளைக் கணினி எழுத்துணரி  மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ... 

எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர்,   சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர். 

"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,   "Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.  இது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் சிறப்பு பெறுகின்றது.

நாம் மின்னாக்கம் செய்த ஓலைகள்  உலகளாவிய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றது.  பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி  இதற்கு நல்லதொரு உதாரணமாகத் திகழ்கின்றது.



[பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய  பத்திரிக்கை செய்தி]

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சித்திக்,  இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஆய்வாளருக்கும், நம் தொடர்பாளர் முனைவர் சௌந்தர மகாதேவன்  அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பு  அனுப்பிய கோப்பன்ஹாகன் சுவடிகளைக் கொண்டு ஆய்வு செய்தவரின் கடிதம். 

letter.jpg
ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரைகள் கிடைக்கப் பெற்றதும் அவை தனிவரைவு நூலாக (மோனோக்ராஃப்பாக) வெளியிடப்படும். 

தமிழ் பனை ஓலைச் சுவடிகளை கணினி எழுத்துணரி  மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ... 
எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர், பாளையங்கோட்டை  சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர். 

"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,   
"Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method" என்ற தலைப்பில்,   
வெளியான அவர்களுடைய ஆய்வுக் கட்டுரை  இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 

---

Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf
Manuscripts using Horver Method

எம். முகமது சாதிக், முதன்மை மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளர் mmdsadiq[at]gmail.com  பிஜி மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை,
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா

ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ், ஆராய்ச்சி அறிஞர், ரெஜி. எண்: 12334
spurgen[at]gmail.com சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா.

Sadakathullah Appa College-article_page-0001.jpg
Sadakathullah Appa College-article_page-0002.jpg
Sadakathullah Appa College-article_page-0003.jpg
Sadakathullah Appa College-article_page-0004.jpgSadakathullah Appa College-article_page-0005.jpgSadakathullah Appa College-article_page-0006.jpg

---------------
இத்தகைய ஆய்வு முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை  வரவேற்கின்றோம்.  இது போன்ற ஆய்வுத் தேவைகளுக்கு முனைவர் க. சுபாஷிணி (நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு;  மற்றும் இயக்குநர், கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்)  அவர்களை மின்னஞ்சல் வழியாக (mythforg[at]gmail.com/ksubashini[at]gmail.com) தொடர்பு கொள்ளலாம். 

----