காலதேவன் வழிபாடு
-- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
வரலாற்றுக்கு முந்திய காலத்தில், மனிதர்கள் நாகரிகமும் பண்பாடும் பெற்று வாழ்ந்த தென் பகுதியில் காலம் என்ற கோட்பாட்டை இரவு பகல் என்ற பொருளிலும், சூரிய சந்திரர் இணைந்த வடிவிலும் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும் யாருக்காகவும் நிற்காது என்ற கோட்பாட்டைச் சக்கரமாகவும் உருவகப்படுத்தி வழிபட்டனர். ஒவ்வொருவருக்கும் காலம் முடியும் போது அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும் அதனை வழங்குவோன் எமன் எனப்பட்டான். [எமன் என்றால் எம்முடையவன்; அவன் உனக்கு எனக்கு என்று பாரபட்சம் காட்டாதவன் எனப் பொருள் கொள்ளலாம். வட மொழியில் இவனை யமன் என்பர்] இவனே நீதிபதி என்றும் இறப்பினைக் கொடுத்து அவரவர் காலத்தை முடித்து வைப்பவன் என்றும் அறியப்பட்டான். காலத்தைக் கணக்கிடுவோன் காலன்; மரணத்துக்குத் தூதாக வருபவன் தூதன் என்றும் காலக்கடவுள் இன்னார் இனியார் எனாது தர்மத்தின் படி செயல்படுவான் என்பதால் அவனே தர்மன் என்றும் புரிந்துகொள்ளப்பட்டான்; அவனை எமதர்மன் என்றும் தர்மராஜா என்றும் அழைத்தனர்.
முழு நிலா:
மண்ணுக்குக் கீழே இருந்து வரும் பாம்பு இறந்து போன முன்னோராகக் கருதப்பட்டது. கருப்பு நிறமும் அமாவாசையும் இறந்தவர்களுக்கானது. மேலே இருந்து வரும் மழை தேவலோகத்தில் இருந்து வருகிறது அதனை வருவிக்கும் அல்லது அருளும் தெய்வம் மண்மகளைச் சூலுறச் செய்யும் இந்திரன் எனப்பட்டான். புதிய பிறப்புடன் தொடர்புடையவை மேலே இருந்து வருபவை வெண்மை நிறத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டன. ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடிப்பாடிக் களிக்கும் இரவு முழு நிலவின் ஒளி மிகுந்த இரவாக அமைந்தது. பங்குனி, சித்திரை, வைகாசி முழு நிலா இரவுகள் ஆண்டின் மிகுந்த ஒளி பெற்ற இரவைப் பகலாக்கும் முழு நிலா இரவுகளாகும். பங்குனி முழு நிலா காமனுக்குரிய நாளாகவும் திருமணத்துக்குரிய நாளாகவும் ஆயிற்று. கோயில்களில் நடக்கும் தெய்வத் திருமணங்கள் இதற்குச்சான்றாகும்.. சித்திரை முழு நிலா இந்திர விழாவுக்குரியதாயிற்று. ஆக வெண்மை என்பது மேலே மேலோகம், சுக்கிலம் சுரோணிதம், மகிழ்ச்சி, பிறப்பு ஆகியவற்றின் குறியீடுகள் ஆயின.
பிறப்பும் இறப்பும்:
வெண்மை - கருமை, இந்திரன் - எமன், பிறப்பு – இறப்பு என்ற இருமைகள் ஆதி மனிதனின் சமயத்திலும் தொன்மங்களிலும் இருந்து வந்தன. இவை தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடல்கோள்களால் வடக்கே நகர நகர அவர்கள் போய்த் தங்கிய இடங்களிலும் செழித்து வளர்ந்தன. பாகிஸ்தான் மாநிலங்களில் ஒன்றான சித்ரால் என்ற பகுதியில் கைபர் கனவாய் அருகே வாழும் கலஷா எனப்படும் பழைய இனம் இவ்விரு கடவுளரையும் வணங்கி வருகிறது. இவர்கள் ஐயாயிரம் பேர் மட்டுமே. 1989 இல் இங்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட ஜோசெல் எல்ஃபின்பின் என்பவர் இவர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இங்குப் படையெடுத்து வந்த திராவிட இனத்தவர் என்கிறார். சர்வன் மற்றும் ஜக்லவான் என்போர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் இங்கு வந்து குடியேறிய புலம் பெயர்ந்தோர் என்கின்றனர். திராவிடப் பூர்வ குடியினருடன் அலெக்சாண்டரின் வீரர்கள் தங்கிவிட்டதால் அவர்களின் கலப்பினமாக இப்போது மக்கள் இருக்கின்றனர் எனக் கருத இடமுண்டு. ஆனால் அலெக்சாண்டரின் படை வீரர்கள் இங்கு தங்கியதாக ரட்யார்டு கிப்ளிங் எழுதியது வெறும் கற்பனை என்றும் கருத்து நிலவுகிறது. [விக்கிப்பீடியா]
தெற்கிலிருந்து வடக்கே சென்ற இந்திரனும் எமனும்:
இந்திரனை முழு முதல் ஆரியக் கடவுள் என்று முத்திரை இடாமல் அவன் தென்பகுதியைச் சேர்ந்த திராவிடர்களின் மழைக் கடவுள் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். நெல் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த ஆண்டு முழுக்க தண்ணீர் தேவைப்பட்ட ஆற்றங்கரையில் வாழ்ந்த மருதநிலமக்கள் மழைக்காக உருவாக்கிய உருவகப்படுத்திய கடவுள் இந்திரன் ஆவான். திராவிடர்கள் இந்தியாவில் மலை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றாக அவ்விடங்களில் திராவிட மொழிகள் பேசுவதால் அறிய முடிகிறது. இவர்கள் பிறப்பு இறப்பு என்ற அடிப்படையில் மனித வாழ்க்கையைப் புரிந்துகொண்டு இந்திரனையும் காலனையும் அல்லது எமனையும் வணங்கி வந்தனர். இடையில் வந்து குடியேறிய வந்தேறிகள் இந்திரனையும் எமனையும் மற்றும் இங்கு வணங்கப்பட்டு வந்த தெய்வங்களைத் தமக்கேற்ப ஊர் பேர் மாற்றி கதைகள் புனைந்து புதிய வடிவம் அளித்தனர்.
கடல்கோள் ஏற்பட்ட போது இங்கிருந்து மக்கள் நீந்திச் சென்று கரை ஏறியதாகவும் அதனால் தமது முன்னோர் கடல் மாதாவின் பிள்ளைகள் என்றும் கில்காமேஷ் புராணம் சொல்கிறது. இதனால் அங்கு வழங்கும் எபிரேயம், அரமே, போன்ற செமிட்டிய மொழிகளிலும் திராவிட மொழிகளின் இயல்பைக் காணலாம். [எபிரேய மொழியில் தமிழில் இருப்பதைப் போன்ற வல்லொலி மெல்லொலி அமைப்பு, குற்றியலிகரம் குற்றியலுகரம், புள்ளி எழுத்துகள் போன்றவற்றைக் காண முடியும்]. அங்கும் பிறப்பு இறப்புக்கான கடவுள் உருவகங்கள் பிரிந்திருந்து பின்னர் அவை இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டதைக் காணலாம்.
பவுத்தத்தில் தொல் தமிழர் கடவுளர் :
பவுத்த சமயம் மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகம் வந்துவிட்டது. இங்கு அசோகா மாமன்னர் நாகப்பட்டினத்தில் புத்த விகாரைகளை எழுப்பினார். ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பல்லவனேஸ்வரத்தில் பவுத்தர்களின் பாத வழிபாடு நடந்ததற்கான அடையாளம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரை செல்வாக்குடன் திகழ்ந்தது. கி.பி. 440இல் பிறந்த போதி தர்மர் சீனாவுக்குச் சென்று பவுத்த சமயத்தைப் பரப்பினார். அதன்பின்பு அங்கிருந்து பவுத்தம் ஜப்பான் கொரியா முதலிய நாடுகளுக்குச் சென்றது. பவுத்த துறவிகளைத் தர்க்கத்தில் வென்ற சங்கரர் இந்திரர் சரஸ்வதி என்ற வெற்றிப்பட்டத்தைப் பெற்றார். அதன் பிறகு அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர மடத்தில் பீடாதிபதிகள் இந்திர சரஸ்வதி பட்டத்தோடு புதுப் பெயர் பெற்றனர். சிவன் கோயிலில் இந்திரன் விலக்கப்பட்டான்.
பவுத்த சமயம் புதிதாகப் பரவிய இடத்தில் அது வரை அப்பகுதியில் வழிபட்டு வந்த தெய்வங்களைத் தமதாக்கிக் கொண்டது. இந்திரன் எமன் மற்றும் பெண் தெய்வங்கள் பவுத்த சாயலில் பெயர் மாற்றம் பெற்றன. இந்திரன் தேவராஜா எனப்பட்டான் அவனே புத்தருக்கு [ஞானஸ்நானம்] திருமுழுக்குச் செய்வித்தான். இந்திரனை சக்ரா, சக்கா, சாக்கா, என்று பவுத்தர்கள் அழைத்தனர். புத்தரின் ஒரு பக்கம் இந்திரனும் மறு பக்கம் பிரமனும் இருத்தப்பட்டனர். பிரம்மன், சரஸ்வதி, எமன், குபேரன், வருணன் ஆகியோர் புத்த சமயக் கடவுள்கள் ஆயினர். புத்த சமயம் பெண் தெய்வ வழிபாட்டையும் உடலை யோக சாதனமாகப் பயன்படுத்தும் முறையையும் கற்றுத்தந்தது. இறப்புக்குப் பிந்திய வாழ்வை வலியுறுத்தியது. அதனால் இன்றும் ஒருவர் இறந்து போனால் அவர் சொர்க்கத்துக்குப் போவதற்காகப் புத்த துறவிகளிடம் பணம் கொடுத்து சீட்டுப் பெறும் முறை இருக்கின்றது. குறுந்தொகைத் தலைவி [292] இரவுக் குறி வந்திருக்கும் தன் தலைவனைக் காணப் போக முடியாமல் தவித்தபடி, இன்னும் உறங்காமல் இருக்கும் தன் தாயை நினைத்து பெண் கொலை செய்த நன்னன் போன, மீண்டு வர முடியாத கீழான நரகுக்குச் செல்வாள் என்று சபிக்கிறாள். பாடல் எழுதப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நரகங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பிக்கை அதிகரித்திருந்த நிலையை இப்பாடல் உணர்த்துகிறது. ஜப்பானில் மீண்டு வரக் கூடிய நரகம், வர இயலாத நரகம் என்று இரு வகை நரகங்கள் பவுத்த சமய நம்பிக்கையில் உள்ளது.
எமதர்மன் வழிபாடு:
எமன் தர்மதேவன் எனப்பட்டதால் அவனது கோயில்கள் தர்மராஜா கோயில்கள் எனப்பட்டன. இந்திரனுக்கு உரிய கோயில்கள் தேவராஜா கோயில்கள் எனப்பட்டன. மயிலை. சீனி. வேங்கடசாமி தனது பவுத்தமும் தமிழும் என்ற நூலில் தர்மராஜா கோயில்கள் புத்தர் கோயில்கள் என்கிறார். தாரா தேவி கோயில் பிற்காலத்தில் திரௌபதி கோயில்கள் ஆயின என்கிறார். திரௌபதி சமேத தர்மராஜா கோயில்கள் இன்றும் தாராபுரம் முதலான பல ஊர்களில் இருக்கின்றன. மாமல்லபுரத்தில் உள்ள பாண்டவர் ரதம் தர்மராஜா கோயில் ஆகும். எமனுக்குக் கோயில் எழுப்பிய இடங்களில் அவனுடன் காலன், தூதன் ஆகியோரும் இடம் பெற்றனர். எமதர்ம வழிபாடு தமிழகத்தில் பக்தி இயக்கத்துக்குப் பிறகு எருமை மீதமர்ந்து வரும் கரிய கொடிய தோற்றமுடைய கடவுளாக உருமாறியது. அதற்கு முன்பு ஒரு தூண் மட்டுமே நட்டு வைத்து வணங்கினர்.
இன்றும் தென்காசி வட்டத்தில் வல்லம் என்ற ஊரில் ஆதி கோயிலாக காலசாமி கோயில் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் டி. கல்லுப்பட்டி சுப்புலாபுரம் அருகில் நேரக் கோயில் என்ற பெயரில் காலக் கடவுள் கோயில் உண்டு. இவ்விரண்டு இடத்திலும் கீழே அகலமாகவும் மேலே குறுகலாகவும் செல்லும் ஐந்தடி உயரத் தூண் உண்டு. அதன் மேல் பகுதி கூம்பாக இல்லை; தட்டையாக இருக்கும். காலம் நகர்வதைக் குறிக்கும் வகையில் சூரிய சந்திரர் உருவம் பொறித்திருப்பதைக் காணலாம். இதுவே ஆதி வடிவம் ஆகும். பின்னர் உருவம் வரைந்தும் சிற்பம் செய்தும் வழிபட்டனர்.
எமதர்மரை வணங்குவோர் தம் பிள்ளைகளுக்குத் தர்மர், தர்மராஜா, ஏமராஜா, ராஜ- எனத் தொடங்கும் பிற பெயர்களைச் சூட்டுவது மரபு. ஸ்ரீவில்லிப்புத்தூரில் மூன்று இடங்களில் ஏமராஜா கோயில்கள் உண்டு. பெரிய கோயில், நாடார்களின் குலதெய்வமாக கம்மாபட்டி கருப்பட்டி ஊரணி அருகில் இருக்கும் கோயிலும், சென்னா குளம் புதுப்பட்டியில் கோனார்களின் குலதெய்வமாக ஒரு கோயிலும் உள்ளன. பெரிய கோயிலுக்குள் எமன் தனியாகக் கோயில் உண்டு. [இந்தக் கோயிலில் பணியாரம் வேகும் சூடான எண்ணெய்க்குள் வெறும் கையை விட்டு அரித்து எடுக்கும் அதிசயம் ஆண்டுதோறும் நடக்கும். ஒரு பாட்டி விரதமிருந்து இதைச் செய்வார்.] நாடார்கள் கோயிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளியன்று ஆண்டு பூஜை நடத்தப்படும். அப்போது பூப்பந்தல், கரும்பு பந்தல் போட்டு வணங்குவர். இவர்கள் உடன்குடியில் இருந்து வடக்கே இடம் பெயர்ந்தவர்கள். உடன்குடியில் இருந்து அழகிய பாண்டியபுரம் வந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தனர். அவ்வாறு வந்த ஏழு குடும்பங்கள் இன்று ஐந்நூறு தலைக்கட்டுகளாக வளர்ந்துவிட்டன. எனவே இங்கு குடும்பங்கள் பெருகச் செய்த பிச்சமுத்து ஐயாவுக்கும் உள்ளே சிலை உண்டு. எமன், காலன் தூதன், ஐயனார், வன்னியராஜா, வெண்ணாங்கிழவி என்ற ஆறு பேருக்கும் கோயில் உண்டு. வெண்ணாங்கிழவிக்கு மட்டும் முறம், காதோலை, கருகமணி, பிச்சி பூ வைத்து வழிபடுகின்றனர். மற்ற தெய்வங்களுக்கு எந்தப் பூவும் சாற்றலாம்.
பூப்பந்தல் என்பது பவுத்தர்கள் சித்தர்களாகக் காடு மலைகளுக்குள் போய் ஒளிந்து மறைந்து வாழத் தொடங்கிய பிறகு ஏற்பட்ட ஓர் நேர்ச்சை அல்லது வேண்டுதல் ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லாம் வல்ல சித்தருக்குப் பூப்பந்தல் நேர்ச்சை நடைபெறுவது உண்டு. சைவ வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில் அவர்கள் பவுத்தர்களையும் சமணர்களையும் கடுமையாகத் தண்டித்து அவமானப்படுத்தி உயிர்க்கொலையும் செய்தனர். இதனால் பலர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் போய் மறைந்து வாழத் தொடங்கினர். இவர்கள் மிகச் சிறந்த காலக் கணிதர்களாக விளங்கினர். விண்மீன்களையும் கோள்களையும் வெறும் கண்ணால் நோக்கி எதிர்கால நிகழ்வுகளைக் கணித்துக் கூறினர். அவர்களில் பலர் இரசவாதம், ஜோதிடம், மருத்துவம் போன்றவற்றில் சான்றோர்களாகி சித்தர்கள் எனப்பட்டனர். வேறு சிலர் களரி, சிலம்பம், வர்மம், குங்ஃபூ, கராத்தே [பெயர்கள் பிற்காலத்தவை] போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றுப் பெற்று ஆசான்களை உருவாக்கினர். இவர்களின் பாடல்களில் சிவன், முருகன் என்ற பெயர்கள் இடம்பெற்றாலும் அவை புராணக் கடவுளர்களாக இல்லாமல் தத்துவக் கோட்பாடுகளாக விளங்கின.
புத்தமும் சித்தமும்:
ஜப்பானுக்குப் பவுத்தம் பரவிய போது அங்கு எழுதப்பட்ட பவுத்த நூல்களின் எழுத்து வடிவம் சித்தம் எனப்பட்டது. சித் என்றால் அறிவு. அறிஞர்கள் எழுதியவை என்ற பொருளில் அந்த எழுத்து வடிவம் சித்தம் எனப்பட்டது. ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவிலும் சித்தம் என்ற எழுத்து முறை இருந்தது. கியோத்தொவில் இநோஜியில் உள்ள எமன் கோயிலை எம்ம கோயில் என்று அழைக்கின்றனர். ஜப்பானில் ன், ம் ஆகிய இரண்டு ஒலிகளின் கலவையாக ஒரு மெய்யெழுத்து உள்ளது. மொழியியலில் NASALAISED ENDING என்று சொல்வதற்கு நிகரானது இந்த ‘ன்ம்’ என்ற மூக்கொலி வடிவம். இது மகர ஒலி போல ஈரிதழ் ஒலியாக முற்றுப் பெறாது. எனவே ‘எம்ன்’ என்ற ஒலியுடன் எமன் அங்கு அழைக்கப்படுகிறான்.
காலனும் காலபைரவனும்:
காலன் சைவ சமய எழுச்சிக் காலத்தில் தமிழகத்தில் பெருங்கோயில்கள் கட்டப்பட்ட சமயத்தில் காலபைரவர் என்ற பெயரில் தென் கிழக்கு மூலையில் தனிச் சன்னிதி பெற்றான். நாய் காலத்தைக் குறிக்கும் குறியீடாக. கால பைரவரின் வாகனமாக இடம் பெற்றது. [ஜெயமோகன் கதை ஒன்றில் அடிக்கடி நாய் வந்து போவதைப் பற்றி அவரிடம் கெட்ட போது அவர் நாய் காலத்தின் குறியீடு என்றார்]. காலனை வழிபடுவோர் தமது பிள்ளைகளுக்கு காலசாமி, காலம்மாள் என்று பெயர் சூட்டுவர். எமன் [தர்மன்], காலன் என்ற கருத்தாக்கங்கள் தர்மச்சக்கரமாக பவுத்தத்தில் இடம்பெற்றது. அறவாழி என்றும் அழைத்தனர். இந்து சமயத்தில் சிவ, விஷ்ணு புராணங்கள் எழுதப்பட்ட காலத்தில் சக்கரம் வைணவத்தில் சக்கரத்தாழ்வாராக சமஸ்கிருதத்தில் சுதர்சன் என்ற பெயரில் இடம்பெறலாயிற்று. காலம் இரவு பகல் என்று மாறி மாறி சுழன்று வருவது போலச் சக்கரமும் சுழன்றுகொண்டே இருக்கும். இதுவும் ஒரு உருவகம். திருமோகூரில் சக்கரத்தின் மீது இரண்டு கால்களையும் அகல வைத்து சர்க்கஸில் ஒற்றைச் சக்கரத்தைச் சுற்றிக்கொண்டு வருபவர் போல சக்கரத்தாழ்வாரின் ஒரு புடைப்புச் சிற்பம் பழுதுபட்ட நிலையில் இருப்பதைக் காணலாம். காலச் சுழற்சியைச் சுட்டிக் காட்டும் சிற்ப அமைதிகளில் இதுவும் ஒன்று. ஆதிமனிதனின் காலம் பற்றிய கருத்தாக்கம் சமயங்களின் வாயிலாக எமன் என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் வளர்ந்தது.
காலி, காளி மற்றும் காலன், காளன் ஆகியவற்றுக்குள் வேறுபாடு இல்லை. காளன் எனப்படுவான் இந்திரனின் உதவியாளன் அவன் இந்திராணியை மீட்க உதவினான் என்று புராணக் கதையும் உள்ளது. திபெத்தில் மகா காலன் பெருந்தெய்வமாக வணங்கப்படுகிறான் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு எமனின் பணியைச் சிவனும் கிருஷ்ணனும் புரிவதாகவும் புதிய கருத்தாக்கங்கள் தோன்றின. மும்மூர்த்திகளின் பணியில் சிவனின் பணி அழித்தல் ஆகும். அதுவே எமனின் பணியும் ஆகும் கிருஷ்ணன் எல்லா உயிர்களும் தன்னில் வந்து அடங்கும் என்றதனால் அதுவும் ஏறத்தாழ எமனின் பணியை எடுத்துக்கொண்டதாக உணரப்படும்.
இந்து சமயத்தில் எமதர்மன்
மச்ச, கருட, விஷ்ணு புராணங்களில் எமனை யமன் என்பர். அவனைப் பற்றிய கதைகள் உண்டு. எமனின் தந்தை சூரியன்; தாய் சந்தியா அல்லது சரண்யா [அந்திப்பொழுது]; இவள் விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். யமனுடன் பிறந்த இரட்டைச் சகோதரி யமி ஆவாள். எமனுக்கு நிறைய மனைவியர் உண்டு. ஐயோ என்பவள் நாட்டுப்புற நம்பிக்கையில் காணப்படுபவள். ஐயோ தவிர ஹேமமாலா, விஜயா, சுசீலா என்று மூன்று மனைவியர் உள்ளதாகப் புராணங்கள் சொல்கின்றன. யமனின் மனைவி பெயர் ஊர்மிளா என்று மகாபாரதம் சொல்கிறது. மேலும் தர்மர் யமனுக்குப் பிறந்தவர் என்று இறப்பையும் தர்மத்தையும் இணைத்துக் குடும்பமாக்கியது. தாகத்தால் தவித்து தண்ணீர் தேடி வந்த போது நீர்நிலையைக் காவல் காத்த பூதம் ஒன்று, தான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் மட்டுமே தண்ணீர் தருவேன் என்று சொல்லி நால்வரையும் சாகடித்துவிடும். அதன் பிறகு தர்மர் வந்து அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்வார். அப்போது பூதம் தான் எமன் என்ற உண்மையை அவருக்கு உணர்த்தும். அந்தக் கேள்வி பதில்கள் தத்துவ விசாரமாக இருக்கும். கடோபநிடதத்தில் எமன் நசிகேதனுக்கு மரணம் மற்றும் மரணத்துக்குப் பிந்தைய வாழ்வு பற்றி உபதேசிக்கிறான். இவ்வாறு மரணத்தின் மூலம் வாழ்வின் மாற்றவியலா உண்மைகளை எமன் பிறருக்கு உணர்த்தும் ஞானி ஆகிறான்.
தமிழகத்தில் எமதருமனுக்குக் கோயில்கள்
சைவ எழுச்சியின் போது சமண பவுத்த கோயில்களின் கடவுளர் நீக்கப்பட்டு அங்கு சிவனுக்கு இடமளிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த இந்திரன் எமன் பிரம்மன் போன்ற கடவுளர் சிவனால் பாவ விமோசனம் பெற்றதாகக் கதைகள் புனையப்பட்டுப் பரப்பப்பட்டன. திருச்சி தஞ்சை மாவட்டங்களில் பவுத்தம் பரவிச் செல்வாக்குப் பெற்றிருந்ததை அங்குள்ள கோயில்களின் இறைவன் பெயர்களின் வாயிலாகக் காணலாம். அங்கு இந்திரனுக்குக் கட்டப்பட்டிருந்த கோயில்கள் பின்னர் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டன. தல புராணங்கள் வாயிலாக இந்திரன் சாபம் தீர்த்த கதையைக் கற்பித்து அங்குள்ள சிவன் கண்ணாயிர நாதர் என்று பெயர் சூட்டப்பட்டார். இது போல திருக்கடையூர் சிவபெருமான், காலனை வதம் செய்த காலசம்ஹார மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். திருச்சிற்றம்பலம் என்ற தலத்தில் தனது தவத்தைக் குலைத்த மன்மதனை எரித்து சிவன் பஸ்பமாக்கினார். அங்கு எமனுக்குத் தனிச்சன்னிதி உண்டு. அவனுக்கே முதல் பூஜை நடைபெறும். அது பழைய எமன் கோயிலாக இருந்து பின்னர் சிவபெருமானுக்கு இடம் அளித்த கோயில் ஆகும். இங்குள்ள தீர்த்தம் எம தீர்த்தம் எனப்படும். அதில் பெண்கள் நீராடுவதில்லை. பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற தலத்தில் சிவபெருமான் அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். இங்கு எமனுக்குச் சிவன் அனுக்கிரகம் செய்ததாகத் தல புராணம் கூறுகிறது.. இங்குள்ள தீர்த்தத்துக்குப் பெயர் எம தீர்த்தம். இங்கும் நாய் இல்லாத பைரவரைத் தரிசிக்கலாம். இதுவும் எமனுக்குரிய பழைய கோயில் ஆகும்.
மார்க்கண்டேயனை உரிய நாளன்று பாசக் கயிற்றை வீசி எமன் பிடிக்க முனைந்த போது அவன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டதால் கயிறு லிங்கத்தின் மீதும் சுற்றியது. இதனால் எமனைச் சிவபெருமான் சபித்தார். இக்கதை எமனை விடப் பெரிய கடவுள் சிவன் என்ற கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. இது போன்ற கதைகள் எமனின் முக்கியத்துவத்தைக் குறைக்க உதவின. ஆயினும் நாட்டார் வழக்கில் எமதருமனைக் குலதெய்வமாக வழிபடும் நிலை தொடர்ந்தது.
தென்கிழக்கு நாடுகளில் எமன் வழிபாடு
திபெத் நாட்டில் வஜ்ராயன பவுத்தம் பின்பற்றப்படுகிறது. இங்கு எமனை GSINRJE என்ற பெயரால் அழைப்பர். அழிவைத் தருபவன் என்பதால் யமாந்தகன் அல்லது யமாந்தக வஜ்ர பைரவன் என்றும் அழைக்கப்படுகிறான். அசுர முகமும் காலுக்குக் கீழே ஒருவனைப் போட்டு மிதிக்கும் உருவத் தோற்றத்துடனும் இருப்பான். கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலிலும் இதே உருவ அமைப்புடன் எமனைக் காணலாம். சீனாவில் உள்ள ஏராளமான கோயில்களில் எமனுக்குரிய சன்னிதி அல்லது சிலை இருப்பதைக் காணமுடியும். ஜப்பானில் எமன் என்ற பெயரின் மெய் எழுத்துக்களை முன்பின் ஆக மாற்றி என்ம தென் என்று அழைக்கின்றனர். என்ம ஓ, என்ம தாயி ஓ என்றும் அழைப்பதுண்டு. தாயி என்றால் பெரிய என்பது பொருள். [தாயி புத்சு என்றால் பெரிய புத்தர்]. பெருங்கடவுள் எமன் என்பதையே இச்சொற்கள் குறிக்கின்றன. எமன் பற்றிய தகவல் அங்கு பழைய நூல்களில் காணக் கிடைக்கின்றன. எமன் அங்கும் பாவங்களுக்குத் தண்டனை தரும் நீதிபதியாகப் போற்றப்படுகிறான்.
பவுத்த சமயத்தில் நரகங்கள்
பவுத்த சமயம் மரணத்துக்கு பிந்தைய வாழ்வு குறித்து அதிகம் போதித்தது. இறந்த பின்பு உயிர்கள் நரகத்தில் அனுபவிக்கும் தண்டனைகள் குறித்தும் விளக்கின. அடுக்கடுக்கான நரகங்கள் இருப்பதாக அச்சுறுத்தின. நரகங்களின் பொறுப்பாளனாகக் காவலனாக எமதர்மன் இருந்தான். அவன் தர்மத்தின் வழியில் ஆத்மாக்களைத் தண்டிப்பான். ஜப்பானில் புண்ணியாத்மாக்கள் சொர்க்கம் புகும். பாவாத்மாக்கள் குறைவாகப் பாவம் செய்திருந்தால் மேய்தோ [meido] எனப்படும் நரகத்துக்குப் போகும் அங்கு சில காலம் தண்டனை அனுபவித்துவிட்டுப் பின்பு வெளியேறும். நிறையப் பாவம் செய்த ஆத்மாக்கள் ஜிகோ கு [jigoku] என்ற நரகத்துக்குப் போய் அங்கேயே கிடந்து உழலும்; அதற்கு விடுதலையே கிடையாது. கொரியாவில் நரகத்தை ஜியோக் [jiok] என்றும் வியட்நாமில் dia nguc என்றும் அழைக்கின்றனர். dia nguc என்றால் வியட்நாமிய மொழியில் பூமிச் சிறை என்று பொருள்.
நிறைவு
பிறப்பு [வழமை] மற்றும் இறப்பு [அழிவு] கடவுளரான இந்திரனும் எமனும் தொல் தமிழர் வாழ்வில் வழிபட்டு வந்த ஆதி கடவுளர் ஆவர். திராவிடர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இக்கடவுளர் வழிபாடு இருந்தது ஆரியர் வரவுக்குப் பின்னர் இவற்றிற்குப் புதிய வடிவமும் செயற்பாடும் கொண்ட கதைகள் உருவாயின. இந்திரனும் எமனும் கொடியவராகச் சித்திரிக்கப்பட்டனர். இருப்பினும் பழமை மாறாத, மறவாத நாட்டுப்புற மக்கள் தமது குல தெய்வமாக எமனை வாங்கி வருகின்றனர். தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற அச்சத்துடன் மட்டுமே தெய்வ வழிபாடு நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment