Sunday, February 23, 2020

தாமிரபரணி



—  ருத்ரா இ.பரமசிவன்


பளிங்கு நீரை
எங்கள் உயிராக்கி பயிராக்கி
மண்ணின் பரிணாமத்தை
மலர்த்திக்காட்டி ஓடுகின்ற
பொன்னின் பொருநையே
வாழி நீ வாழி!

கல்லிடைக்குறிச்சி
கள்ளிக்காடாயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

அம்பாசமுத்திரம்
வம்பாய் வறண்டு தான் கிடக்கும்
நீ வரவில்லை என்றால்!

சேரன் மாதேவி
சோறு கண்டிருப்பாளா
நீ வரவில்லை என்றால்!

நெல்லைச்சீமை
இல்லை சீமை ஆயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

சிந்து பூந்துறையும்
சீரிழந்து நிற்கும்
நீ வரவில்லை என்றால்!

திருவைகுண்டம்
வெறும் வைகுண்டம் ஆகியிருக்கும்
நீ  வரவில்லை என்றால்!

ஆறுமுகன் ஏரி
மாறு முகம் கொண்டு பாழ் பட்டிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

காயல் பட்டினமும்
காய்ந்தே கிடந்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

வங்காள விரிகுடாவும்
அலை விரியாக்  கடலாகும்.
நீ வரவில்லை என்றால்!

"திருச்சீர் அலைவாய்" இல்லாத
திருமுருகாற்றுப்படைதான்
நமக்கும் கிடைத்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

செலவாய் செலவாய்  எங்களுக்கு
இழப்புகள் எத்தனை வந்தாலும்
வருவாய் வருவாய் எங்களுக்கு
வருவாய் அருள்வாய் பல கோடி!

எங்கள் உயிரினும் மேலான
பொருநையே
ஊழிகள் பலவாக ஓடிவிடினும்
வாழி நீ !வாழி நீ!!
எங்கள்
நீடு வளர் பொருநையே !
வாழி நீ !வாழி நீ!!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





No comments:

Post a Comment