அமராவதி சிற்பம்
—— ஓவியர் திரு. சந்துரு
பூ - நாம் - பூ:
நமது உடல், மற்றும் முக பாவங்களால் நமது நிலையை வெளிப்படுத்துகிறோம். ஓவியர்கள் வரைந்த உருவத் தோற்றங்களால் தங்கள் நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.
படம்-1.
அடிப்படை உருவ அமைப்புகள்.
ஒரு பக்கம், முன் பாகம், பின்பாகம் மற்றும் திரிபு நிலை. இத் திரிபங்க அமைப்பு புதிரான தூண்டலை உள்ளடக்கியது.
நாம் பூவையும், பூ நம்மையும் கவனித்த பொழுது குறித்து ஓவியர்கள் டி இங்ரீஸ் மற்றும் மேனெட் ஆகியோர் தங்களது திரைச் சேலைகளில் பெண் உருவம் அதன் பின்புலம், மற்றும் செய் நேர்த்தி என அதிக வேலை பார்த்திருக்கிறார்கள். அப் பெண்களின் உடல் பகுதியில் குவியும் நமது கவனத்தை அவர்களின் முகக் குறி சிதற அடிப்பதை உணரலாம். இதில் உடலும், முகமும் எதிர், புதிரான தூண்டலை விளைவிப்பவை என அறியலாம்.
காட்சி அமைப்பு - கலா ரசனை:
பலாப்பழத் தோலை உரித்துச் சாப்பிடுவதும், உரிக்காமல் சாப்பிடுவதும் அவ் உயிரினங்களின் இயல்பு மற்றும் சூழல் சார்ந்தவை.
கலா ரசனை:
1. வெகு சனம் -
வடிவேல் பெண் வேடத்தில் (சிற்பம்)
"என்னக் காப்பாத்த யாருமேயில்லையா?"
அந்த சிற்பத்தைப் பார்த்த ரசிக மணி
"கலை அழகே உன்ன நான் காப்பாத்தறேன், நீ தான் ரெண்டு வயதில் காணாமல் போன என் தங்கச்சி".
2. எழுத்தாளி -
"கல்லில் சிற்பி வடித்த சிலையல்ல நீ, பிரம்மன் கண் இமை ஓரத்தில் உதித்த வானவில்லின் வண்ண ஜாலம், ஆ! ஓ!! ஈ!!!. உன்னை வர்ணிக்க என் தாய்த் தமிழில் வார்த்தையில்லை."
3. கலை விமர்சகர் -
இது வேற லெவல், மரபின் தொன்மம், ஒய்ச் சின் னின் ரசவாதம், லிம் பெலவா வின் மூர்க்கம் சந்தித்த புதுமை. இது உயரிய விருது மற்றும் விலைகளுக்கு உரியது.
4. நமது நிலை -
"இடம், பொருள், ஏவல் என்ற வகையில் வீட்டு முற்றத்தில், களிமண்ணைக் கால்களுக்கு இடையில் வைத்து சவட்டி எடுத்து பொம்மை செய்வது."
படம்-2.
அமராவதி சிற்பங்கள் - இடமிருந்து...
1. பெண் உருவம் தனது பின்புறம் காட்டி, உள் நோக்கி மண்டியிட்டு, முகம் வெளிப்புறமாகப் பார்வையாளரை நோக்கி அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பு பல சிற்பங்களில் காணக்கிடைக்கிறது.
2. பெண் உருவம் உடல் திரிபங்கமாக, கால்கள் முக்கோணத்தை சுட்டும்படி ஒன்றை குத்து இட்டு,மற்று ஒன்றை மடித்து, உடலும், முகமும் பார்வையாளரை நோக்கி அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பை இரு சிற்பங்களில் காணக்கிடைத்தது.
3. பெண் உருவம் முகம் வான் பார்க்க, தரையில் கிடந்து, தலைக்கு மேல் கை கூப்பி, கால்களை மடக்கி விரித்து, திரிபங்கமாக அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பு ஒரு சிற்பத்தில் மட்டும் அமைந்துள்ளது.
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்."
- பாரதி
இந்த வகையில் சிற்பம் 3ல் உள்ள பெண் உருவம் சற்று இடம் மாறுவேடத்தில்.
அமராவதி சிற்பங்கள் - உருவத் தோற்ற அமைப்பு:
படம்-3.
இடமிருந்து வலம் ...
பெண் உருவத் தோற்றங்களைக் குறியீட்டு வடிவம் (விசிரிப்பாறை - மௌனம்), கருத்தியல் உருவம் (யோனி தேவதை - ஆற்றல்), மற்றும் யதார்த்த உருவம் (தோரணப் பெண் - அழகு) என வகைப்படுத்தலாம்.
ஓவியங்களில் அமைந்த ஆண், பெண் நிர்வாணத் தோற்றங்களைப் பால் வேறுபாடு, வளமை, பெருமை மற்றும் பாலுணர்வைச் சுட்டுவன என்று பல வகைப்படுத்தலாம். அங்கு இல்லாத வானம், பூமி, மற்றும் கதாப்பாத்திரத்தை பலர்முன் அரங்கேற்றுவது சிறந்த நடிப்பும், யதார்த்த மருவலும், இதுவே கலை அழகும் என்போம். அவ்வகையில் சிற்பம்1ல்(மேல்) உள்ள பெண் உருவ அமைப்பைச் சுழற்றி சிற்பம் 2ல்(கீழ்) உள்ள பெண் உருவை அமைத்தது 'படைப்பு ஊக்கம்' என்பதற்கு நாம் அவ் உருவங்களை வரைந்து பார்த்தோம் என்பதே சாட்சி.
படங்கள் உருவான தருணம்:
நண்பா,
நீ ஓர் இரவு விளித்திருந்ததில்
அதைப் பார்த்துவிட்டதால்
இரவில் ஓடும் மவுன நதி
என்றாய்
நீ எப்போதும் விழித்திருந்தால்
எப்போதும் ஓடும் நதிதான் அது.
ஆசிரியர் குறிப்பு:
சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் ஓவியர் திரு. சந்துரு
தொடர்பு:
https://www.facebook.com/chandrasekaran.grusamy
No comments:
Post a Comment