Thursday, February 20, 2020

தென்னாப்பிரிக்கத் தமிழர் முனைவர்.சின்னப்பன்


2014ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹாம் நகருக்குச் சென்றிருந்த போது எனக்கு அறிமுகமானவர் தென்னாப்பிரிக்காவின் திரு.சின்னப்பன், திருமதி கோகி சின்னப்பன் ஆகிய இருவரும். அதற்கு அடுத்த ஆண்டு 2015ல் நான் தென்னாப்பிரிக்காவில் நடந்த தமிழ் கல்வி மேம்பாடு மற்றும் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது இவர்கள் இருவருடனும் கூடுதல் நாட்களைச் செலவிட்டு தென்னாப்பிரிக்கத் தமிழர்களைப்பற்றி அறிந்து கொண்டேன். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்கள் வழிபடும் கோயில்களுக்குத் தனது வாகனத்தில் என்னையும் ஏனைய நண்பர்களையும் அழைத்துச் சென்று பல வரலாற்றுச் செய்திகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருவாரியாக தமிழ் மொழி பேசுவதை மறந்து விட்ட சூழலில் எழுச்சியுடன் தமது தாய் மொழி தமிழை எல்லோரும் கற்க வேண்டும் என முயற்சி எடுத்தவர்களில் திரு.சின்னப்பனுக்குப் பெரும் பங்குண்டு. நேற்று அவர் காலமானார் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி கிட்டியது. கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் என்னைத் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துக் கொண்டேயிருந்தனர் சின்னப்பந்கோகி தம்பதியினர். பற்பல வேலைகளின் காரணத்தால் எனது பயணம் தடைபட்டுக் கொண்டேயிருந்தது. அவ்வப்போது தொலைபேசியில் மட்டும் பேசுவது தொடர்ந்தது. இந்தச் சூழலில் திரு.சின்னப்பன் மறைந்தார் என்ற செய்தி நம் எல்லோருக்குமே பேரதிர்ச்சி.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நலன் விரும்பி என்பதோடு ஒவ்வொரு பெரிய திட்டங்கள் செயல்படுத்தும் போதும் திரு.சின்னப்பனும் கோகியும் எனக்கு வாழ்த்துச் சொல்லத் தவறுவதில்லை. அண்மையில் தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். அச்செய்தியை எனக்கும் தெரிவித்து மகிழ்ந்தார்.

2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஒரு முருகன் கோயிலுக்கு நாங்கள் சென்றிருந்த சமயம் நான் செய்த ஒரு சிறிய பதிவினை இங்கே பகிர்கிறேன். எளிய தமிழில் தென்னாப்பிரிக்கத் தமிழர் குறித்து டாக்டர்.சின்னப்பன் பேசும் சிறிய பதிவு.
https://youtu.be/YAzLbwrxE6c

திரு.சின்னப்பனின் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் தமிழ் வளர்ச்சிக்கான உழைப்பு காலத்தால் அழியாதது. அவர் காலத்தால் அழியாது நிலைத்திருப்பார்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு

No comments:

Post a Comment