Monday, February 17, 2020

எனது ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள்

          தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்றப் பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

23.1.2020

          கடந்த சில தினங்களுக்கு முன் காலை 9 மணிக்குக் கடலூரில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சென்னையிலிருந்து ஒரு வாகன பயணம்; இடையில் தோழி ரேஷலும் இணைந்து கொள்வதாகத் திட்டம். அன்றைய நாள் முழுதும் கடலூரில் செலவிட்டு இரவு திரும்புவதாக எங்கள் பயணத் திட்டம் இருந்தது. கடலூருக்கு என நான் செல்வது இதுவே முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் சென்றிருந்த போது திரும்பிச் செல்லும் பாதையில் கடலூரைக் கடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது. பண்டைய தமிழக வரலாறு மற்றும் ஐரோப்பியர்கள் வருகையால் ஏற்பட்ட மாற்றம் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டிருக்கும் நகரங்களின் வரிசையில் கடலூரும் ஒன்று என்பதை நான் அறிவேன். ஆயினும் நேரில் சென்று பார்த்துவரச் சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் ஆவல் இருந்தாலும் அது சாத்திய படாமலேயே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அந்த குறையை போக்குவதாக இந்த பயணம் அமைந்தது.

          பண்டைய காலம் தொட்டே கடலூர் கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்கம் இப்பகுதியில் நிலைபெற்றது. ஜெர்மானிய பாதிரிமார்கள் தரங்கம்பாடியை அடுத்து இப்பகுதியில் தங்கள் சீர்திருத்தக் கிருத்துவ மையத்தையும் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.முதலில் கடலூருக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பின்னர் அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரியில் தங்களது வணிக மையத்தை ஏற்படுத்தி 1674 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினர். 1690ல் கடலூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். 1758ம் ஆண்டு வரை கடலூர் தென்னிந்திய மாவட்டங்களின் தலைநகரமாக பிரித்தானியக் காலனித்துவ அரசின் கீழ் அமைந்திருந்தது. இன்றும் இங்குக் காட்சி அளிக்கும் செயிண்ட் டேவிட் கோட்டையில் தான் அன்று அரசு நிர்வாகம் செய்யப்பட்டது. இது ராபர்ட் கிளைவ் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

          எனக்குக் காலை நேரப் பயணத்தில் சாலையோர கடைகளில் சூடான தேநீர் வாங்கி அருந்துவது மிகப் பிடிக்கும். வாகனம் ஓட்டி தேநீருக்காக நிறுத்தியபோது நாங்களும் இறங்கிக் கொண்டோம். நான் கசப்பாகக் காப்பியும் தேநீரும் அருந்துவதை அறிந்திருக்கும் தோழி ரேஷல் தேநீர் போடுபவரிடம் ஸ்ட்ராங் டிகாக்க்ஷன் போட்டுத் தாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இருவருக்குமே தேநீர் வந்தது. ஆனால் எதிர்பார்த்த சுவை இல்லை. சும்மாவே தேநீர் வாங்கியிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொண்டோம். சில நேரங்களில் இப்படித்தான் நாம் ஏதாவது ஒன்று சொல்லி இயல்பாகவே நன்றாக இருக்கும் ஒன்றை அப்படியே மாற்றி விடும் அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.

          ஏறக்குறைய மூன்று மணி நேர வாகன பயணம். செங்கல்பட்டு மதுராந்தகம் மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் என ஒவ்வொரு ஊராகப் பார்த்துக்கொண்டே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து எங்கள் பயணம் இருந்தது.

          விக்கிரவாண்டி தொடங்கி மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகள் பசுமையாக இருந்தன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளமான இயற்கைச் சூழலையும் விவசாய முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். நான் சென்றிருந்தபோது இப்பகுதியில் கரும்புத் தோட்டங்களில் ஆணும் பெண்ணுமாக மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகள் விவசாயம் சாலையின் இருபுறத்திலும் காணக்கூடியதாக இருந்தது.

          முதலில் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிற்பகல் 2 மணி வரை கலந்துகொண்டு, பின்னர் பெரியார் அரசுக் கல்லூரியிலும் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாலை நான்கு வாக்கில் நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டோம். உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் முனைவர் ஜானகி ராஜா ஐரோப்பியர் கால கட்டடங்கள் சிலவற்றைச் சுற்றிக்காட்டத் திட்டமிட்டிருந்தார்.

          முதலில் நாங்கள் வந்தடைந்த இடம் சில்வர் பீச் அல்லது வெள்ளி கடற்கரை. இப்படி ஒரு அருமையான கடற்கரை இங்கே இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விரிவான மணல் நிறைந்த கடற்கரை அழகாகக் காட்சியளித்தது. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து அங்குக் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அரசு கல்லூரி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வியைப் பெற மிக முக்கிய அடித்தளம் அமைக்கும் ஒரு கல்லூரி. ஆயினும் சில மாணவர்கள் பாட நேரத்தில்கூட கடற்கரையில் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

          சாலையில் மெதுவாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே கடற்கரையை ரசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான படகுகள் கண்களைக் கவர்ந்தன. இறங்கி நின்றவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதே சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

          ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற  கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே ​உள்ளூர் மக்கள் ​சில​ர் தங்கியிருக்கின்றனர் என்பதற்கு​ச்​ சான்றாகப் பாய் படுக்கை​கள்​ ஆங்காங்கே தென்பட்டன.  இந்த பெரிய ​பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள்​.​ ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்ப​தை ​அப்போதைய ​சூழல் வெளிப்படுத்தியது.

          வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் ​கடலிலிருந்து பிடித்து வந்திருந்த ​கடல் உணவு வகைகளை எடுத்து​ப்​ போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளை​க்​ கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.

          படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ராபர்ட் ​கிளைவ் தங்கியிருந்த அந்த​ப்​ பாழடைந்த மாளிகையை​ப்​ பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். ​"​அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க..​"​ என.. ​கரிசனம் நிறைந்த குரல்.

          கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ​"​இந்த​ப்​ படகுகளை​ப்​ பற்றிச் சொல்லுங்கள்​,​ எங்கே செல்கின்றன​"​ என விசாரிக்க​த்​ தொடங்கினேன். அவரது வேலையை ​ எனது பேச்​சு தடை செய்கின்ற​து என்ற எந்த கோபமும் ​இல்லாமல் ​​புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.

          ஒவ்வொரு படகும் அழகாக​த்​ தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல​.​ மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் ​6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும்​,​ மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற ​வேலையாக இருக்கின்றதே ​இந்த​ மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம்.​ என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர்.​ ​​மிகப்பெரிய பொருட்செலவும்​,​ அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்த​ப்​ புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
 ​
          கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது ​நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. ​ சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது​!​
















          படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோ​ழி ரேஷல்  ​​"படகு சவாரி செல்கிறீர்களா​"​ என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே​...​ எனக்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். ​"​இந்த​ப்​ படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே​" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்​.

          எந்த​த்​ தயக்கமும் இல்லை. ​"​வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்​",​ என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேஷல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்ப​ர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ​ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.

          ​படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. ​தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் ​என் ​மனதில் ஒலிக்கத் தொடங்கியது.

                    "ஓடும் மேகங்களே  ஒருசொல் கேளீரோ...."

          முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

                    "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்"

          பாடல் இனிமை தான்.. ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..

          பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

          படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

          தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களைக் கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயன்றோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக்கண்டு மகிழ்ந்தோம்.

          படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேஷலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

          எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்குக் காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேஷல் எங்களிருவரையும் பார்த்துக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம்.  அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

          எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்திலிருந்த எண்ணற்ற படகுகள் வர்ண ஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அண்மைக்கால ’புள்ளிங்கோ’ வரை எனப் படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.








          கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்குத் தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுகளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாகத் தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றிக் கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

          வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியிலிருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகிலிருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.

          எங்கள் படகை எதிர்த்துக் கொண்டு எழும்பிய பேரலை முன் பகுதியை முழுமையாக நினைத்துவிட, நாங்கள் அதற்குள் ஒருவழியாகச் சுதாரித்துக் கொண்டு படகில் நின்று கொண்டோம். நான் படகில் சுதாரித்துக் கொண்டு நின்றதைக் கவனித்த மீனவ நண்பர்,  ’நீங்கள் சமாளிக்கும் விதம் சரியான முறைதான்.. எப்படி இப்படித் தான் நிற்கவேண்டும் படகில் என்று தெரியும்’ என ஆச்சரியத்துடன் கேட்டார். நான் அவரைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். இளம் வயதில் உயர்கல்வி முடித்ததும்  நான் மலேசியாவிலிருந்தபோது ஒரு வாரக் காலம் மாணவர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது கடலில் பாதுகாப்பாகப் பயணம் செல்லும் சில வழிமுறைகளைக் கற்றிருந்தேன். அது இன்றுவரை மனதில் பதிந்திருப்பதும், ஆபத்தான வேளைகளில் அந்தப் பயிற்சிகள் உடனே நமக்கு கை கொடுப்பதும் இயல்புதானே.

          எங்கள் படகு மேலும் சென்று கொண்டே இருந்தது. அலைகளின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க, திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துத் திரும்பத் தொடங்கினோம். அந்த சமயத்தில் பரங்கிப்பேட்டை மீனவ துறைமுகப் பகுதியைத் தாண்டி மேலும் சற்று தூரம் வந்திருந்தோம். தூரத்தில் கலங்கரை விளக்கமும் கண்களில் தென்பட்டது.








          கடலூரில் கடற்கரையோரத்தில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்து மாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், பூரணி அம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், வெல்லாரி அம்மன் கோயில் என அங்கிருக்கும் ஒவ்வொரு மக்கள் வழிபடும் கோயில்களுக்கும் சென்று பார்த்து அவற்றின் சிறப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் போதாது என்பது தெள்ளத் தெளிவு.தூரத்திலிருந்து தெரிந்த சில கோயில்களின் கோபுரப் பகுதிகளை மட்டும் பார்த்துக்கொண்டேன்.

          படகுப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அலையாத்தி காடுகள் தான். குவியல் குவியலாகக் குட்டி தீவுகளாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்திருக்கின்றன. ’பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது’ என்று நான் சொன்னவுடன், படகை அலையாத்திக் காடுகளுக்கு அருகில் கொண்டு சென்று நான் மரங்களைத் தொட்டு ரசித்து மகிழ ஒரு வாய்ப்பினையும் வழங்கினார் அந்த மீனவ நண்பர். படகினை அப்படியே நிறுத்திவிட்டு அங்கேயே படகிலிருந்தபடியே அலையாத்திக் காடுகளை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்போல் மனதில் கொள்ளை ஆசை எனக்கு. ஆனாலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததாலும், அன்றே நாங்கள் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற திட்டம் இருந்ததாலும், படகுப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் எனக்கு இருந்தது.

          இத்தகைய இயற்கை வளமும் எழிலும் நிறைந்த கடலூர் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்காமல் வைத்திருக்கிறார்களே, என்று எனக்கு வியப்பு தான் தோன்றியது. கடலூர் போன்ற வளமிக்க ஒரு ஊரும் உழைக்கும் மக்களும் அழகிய இயற்கையும் ஐரோப்பாவிலும் அல்லது ஏனைய ஆசிய நாடுகளிலும் அமைந்திருந்தால் அதனை இந்நேரத்திற்கு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி இருப்பார்கள். அதனால் அவ்வூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார மேன்மை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நான் கண்டதோ எதிர்மாறான ஒரு நிலைதான். இது துரதிர்ஷ்டமே!

          எங்கள் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்ற மீனவர் நண்பருக்கு நன்றி கூறிக்கொண்டு, அவரது தொடர்பு எண்ணையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுத் திரும்பினோம். கடலூரில் மேலும் சில நண்பர்களைச் சந்தித்து நகர்ப் பகுதியிலும் பயணம் செய்துவிட்டு தம்பி ஜானகிராஜா அளித்த தேநீர் விருந்தையும் சுவைத்துவிட்டு இரவு அங்கிருந்து புறப்பட்டோம். ஒருநாள் பயணம் தான் என்றாலும் கூட கடலூரில் நான் சென்ற படகுப் பயணம், வித்தியாசமான அனுபவமாக, மகிழ்ச்சியளித்த பயணங்களில் ஒன்றாகவே அமைந்தது.

          கடலூரில் அறிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கின்றது. நிச்சயம் அடுத்த பயணத்தில் படகுப் பயணத்தோடு மக்களோடு மக்களாக அங்கேயே ஓரிரு நாள் தங்கி இருந்து அவர்கள் உணவையும் சுவைத்து, மக்களின் வழிபாட்டு வாழ்வியல் கூறுகளையும், மீனவ மக்களின் தொழில் வாழ்க்கையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு இருக்கின்றது.

          இந்த ஊர் சுற்றிப் புராணம் மீண்டும் தொடரும்.. மற்றுமொரு இடத்திலிருந்து..!


"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்







தொடர்பு: முனைவர் க. சுபாஷிணி (ksubashini@gmail.com)




No comments:

Post a Comment