Saturday, February 29, 2020

தொல்காப்பியத்தில் நவீன சிந்தனைகள்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


          ஆசிரியர் நூலுக்கு மாணவர் கருத்துரை கூறுவது மரபுவழிப்பட்ட பணி; எனினும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இப்பணியை மேற்கொள்கிறேன். புதிய சிந்தனை, புதுப் பார்வை, புதுக்கருத்து இவற்றிலெல்லாம் மிகுந்த நாட்டம் கொண்டவர் எம் ஆசிரியை திருமதி பொ.நா.கமலா அவர்கள். ஆராய்ச்சிக்கு வயதோ உடல்நலமோ வரம்பு கட்ட முடியாது. மனத்தின் ஆர்வம் ஒன்றே ஆய்வுப்பணியைத் தொடர வைக்கவும், நிறைத்து வைக்கவும் இயலும். அந்த மனத்திட்பத்தைச் சரிவர எடுத்துக் காட்டுவதாக இந்தக் கருத்துரை அமைய வேண்டுவது இன்றியமையாதது. எனவே பொறுப்பின் கனம் மிகுதியானது என்பதைப் புரிந்து கொண்டு நூலைப் பயின்றேன். 

          தொல்காப்பியம் ஒரு படைப்பு நூல் என்று சொல்வதைக் காட்டிலும்; 'பிரதி' என்று சொல்லக் கூடிய தகுதி உடையது என்னும் கருத்தை முதல் கட்டுரை சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது. பிரதிக்குரிய பல பண்புகளுள் இசை திரிந்திசைத்தல், ஆடையின் உற்பத்தியை ஒத்திருத்தல், தந்திக் கம்பியைப் போன்ற செயற்பாடு, உபபிரதிகள் உருவாக இடந்தருதல், பல குறிகளின் சேர்க்கையாக அமைதல், மனிதமன விடுதலைக்கு வித்திடுதல், சமூக இயக்கத்திற்கு ஆதாரமாதல் என ஏழு பண்புகளைத் தொகுத்துத் தருகிறார். குறியியல், தொடர்பியல், அமைப்பியல் என்ற மூன்று கொள்கைகளை அடியொட்டிய பிற ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. 

          இலக்கிய ஆய்வைப் பொருத்தவரை தொல்காப்பியர் உலக முன்னோடி என்பதை நிலைநாட்ட 'தொல்காப்பியமும் குறியியலும்' என்ற ஆய்வு துணை செய்கின்றது. மேனாட்டார் ஆய்வியல் வழி நம் தாய்மொழி இலக்கியத்தை நோக்க வேண்டிய தேவை என்ன என்ற சிலரது காரமான விவாதங்களுக்கு இத்தகைய ஆய்வுக்கட்டுரைகள் நல்ல சாரத்தைப் பதிலாகத் தருகின்றன. நூலாசிரியரின் நுட்பமான நோக்கும் ஆழ்ந்த சிந்தனையும் தனித்திறனும்; அவர் குறி பற்றிப் பதினைந்து கருத்துக்களைத் தொகுத்தளிப்பதிலிருந்து புலப்படுகின்றன.

          'தொல்காப்பியத்தில் அரங்கக் குறிகள்'- இக்கட்டுரையில் இடம் பெறும் புதுக் கலைச்சொற்கள் மட்டுமே தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் புறம்பானவை. ஆனால் மேலைநாட்டாரின் திறனாய்வுப் பார்வை 2000 ஆண்டுகட்கு முன்னர் நம் தொல்காப்பியர் கொண்டிருந்த பார்வை. அவரது பார்வையைத் தொடர்ந்து 2000 ஆண்டுகளாக நம் தமிழுலகம் வளர்த்துக் கொள்ளவில்லை என்ற உண்மை மனதிற்குள் கசக்கிறது. இன்று தமிழிலக்கியத்தில் மேலைநாட்டுத் திறனாய்வாளர் பின்பற்றிய பார்வைகளை மேற்கொள்வதால் இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள வளம் கலைச்சொல்வளம் என்று சொன்னால் அது மிகையாகாது. இக்கலைச் சொற்களைக் கட்டுரையின் போக்கில் ஆங்காங்கு; ஆங்கிலக் கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் இட்டு; நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். தொடக்க நிலையில் இது கட்டுரையைப் புரிந்து கொள்ளத் துணை செய்கிறது. கட்டுரைச் செய்தியை நன்கு புரிந்து கொண்ட பின்னரோ சீரான ஓட்டத்திற்குச் சிறுதடையாக உள்ளது. பரற்கற்கள் உறுத்தும் பாதசாரியின் நிலையில் தவிக்க வேண்டியுள்ளது. இந்நிலை தவிர்க்க முடியாதது. எனினும் நூலின் இறுதியில் நூலாசிரியர் தமிழ் ஆய்வியலின் புதுக்கலைச்சொற் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொடுத்தால் அது இனி வரும் ஆய்வாளர்க்கு மிக்க பயனைத் தரும். 

          'தொடர்பியல் - சில நோக்குகள்' என்ற கட்டுரை இருவகைப் போக்குகளைக் கொண்டுள்ளது. முற்பகுதி மேனாட்டார் ஆய்வுக் கொள்கைகளைத் தொல்காப்பியத்தில் தேடிப் பொருத்தும் முயற்சியாக அமைகிறது. அம்முயற்சியில் முழுமையாக வெற்றியடைந்தும் உள்ளார். பிற்பகுதியில் ஒரு புது முறை; ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மேம்படுத்தித் தனித்துவப்படுத்துகிறது. அகப்பாடலில் ஆண்பாற்கவிஞர் அம்மூவனார் பாடலில் இடம்பெறும் தொடர்பியல் உத்தியையும் பெண்பாற் கவிஞர்கள் ஔவையார், நக்கண்ணையார் ஆகியோர் பாடல்களில் இடம் பெறும் தொடர்பியல் உத்தியையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். இரத்தினச் சுருக்கமாக அமையும் இவ்வாய்வுக்கு மிக ஆழமான நுட்பமான அறிவும் பயிற்சியும் தேவை. தமிழ் ஆய்வுலகில் சங்க இலக்கிய அகப்பாடல் ஆய்வு புதுக்கோணத்தில் திருப்பம் பெற இப்பார்வை துணை செய்கிறது. 

          'முன்னம்- தொடர்பியல் பணி' என்ற கட்டுரை தொல்காப்பியம் சுட்டும் 'முன்னம்' என்ற உறுப்பு பற்றிய முழுமையான விளக்கக் கட்டுரையாக அமைகிறது. அதன் பல்வேறு பரிமாணங்களைத் தொகுத்துத் தருகிறார் ஆசிரியர். பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் முன்னம் தொடரியல் அமைப்பின் அலகாகவும்; பொருளியல் அமைப்பின் அலகாகவும் செயல்படுகிறது. அது மட்டுமின்றி இலக்கியத்தில் உடல்மொழித் தொடர்பியல் அலகாக; அதாவது மெய்ப்பாட்டியல் அலகாகப் பயின்று வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். 

          'இலக்கியக் கலையில் முன்னக்கோட்பாடு' பற்றி ஆராய்ந்து எழுதும் போது புறஇலக்கியத்தில் இடம் பெறும் குறிப்புப்பொருள், அக இலக்கியத்தில் இடம் பெறும் உள்ளுறை உவமமும் இறைச்சியும், குறிப்புமொழி எனும் இலக்கிய வகை, புதுக்கவிதையின் இருண்மை நீக்கம் ஆகியவற்றைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கிறார். 'முன்னம்' என்ற உறுப்பை ஒரு கருவியாக அளவுகோலாகக் கொண்டு உள்ளுறை உவமத்தையும் இறைச்சியையும் விளக்கி ஒப்பிடும் போது அவ்விரண்டும் கவர்மொழியில் கருத்தை விளக்கும் சிறந்த வாயில்கள் என்ற ஒற்றுமையை முதலில் எடுத்துக் காட்டுகின்றார். பின்னர் இரண்டிற்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளைத் தெளிவாக வரையறை செய்து இனம் பிரித்துக் காட்டியிருப்பது இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள ஒரு புதையல் என்றால் அது மிகையாகாது. வரிக்கு வரி இருண்மை நிறைந்த புதுக்கவிதை ஒன்றைத் தெரிவு செய்து முன்னத்தின் மூலம் பொருள் விளக்கம் கொடுக்கிறார். இனிச்செய்ய வேண்டியன இன்னின்ன என்று என்று தொகுத்தும் தந்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் பல வளமான புது ஆய்வுகளுக்கு வழி கிட்டுகிறது. அதனால் முன்னம் பற்றிய ஆய்வின் மதிப்பு உயர்கிறது. 

          'தொல்காப்பியத்தில் அமைப்பியல் சிந்தனைகள்' உள்ளன என்று பலவேறு கோணங்களில் நோக்கிக் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அமைப்பியல் கோட்பாடு மேனாட்டில் தோன்றி வளர்ந்து வரும் கொள்கையாகும். நம் சமூகத்தின் பரம்பரைச் சொத்தான தொல்காப்பியத்தில் அக்கோட்பாடுகளைப் பொருத்திக் காண்கிறார். அமைப்பியல் கோட்பாடுகளில் பல கருத்து வேறுபாடுகட்கு உட்படக்கூடியவை தாம். எனினும் அவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய நியதி ஏதுமில்லை. 

          மேலைநாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயிலவேண்டும் என்ற முனைப்பு ஏற்படுவதே குறிப்பிடத்தக்க அம்சம் தான். முனைப்பு ஏற்பட்டபின் அவற்றைப் பயின்று புரிந்துகொண்டு நம் இலக்கியத்தில் அத்தகைய ஆய்வுகளைச் செய்து பார்ப்பது பெரிய சாதனையே. ஆராய்ச்சி உலகைப் பொருத்தவரை மரபை மீறுவது என்பது எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள இயல்வது அன்று. இப்பிரதியில் உள்ள ஏழு கட்டுரைகளும் தத்தம் போக்கில் புதுக்கருத்துக்களைத் தருகின்றன. நம்முள் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. நம் முன்னோர் மறந்தவற்றை நினைவூட்டுகின்றன. தமிழ் ஆய்வுலகில் இந்நூல் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது உறுதி. 

(குறிப்பு: டிசம்பர் 1997ல் முனைவர் பொ.நா.கமலா எழுதி பெங்களூர் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பிற்கு 20.10.1997ல் நான் அளித்த கருத்துரை)




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி





No comments:

Post a Comment